ஞாயிறு, 18 மார்ச், 2018

புட்டுத் தோப்பு



"புட்டுத்தோப்பு" பெயர் போட்ட வாயிலைத் தாண்டி உள்ளே வந்தால்  அழகான மண்டபம்.

சென்ற இராமாயணச்சாவடி பதிவில் புட்டுத்தோப்பில்  பார்க்கலாம் என்றேன்.
வந்து விட்டீர்கள் தானே ! புட்டுத்தோப்பு. புட்டுத்தோப்பு மண்டபம் மதுரை ஆரப்பாளையம் பகுதியில் உள்ளது.

அங்கு சென்றவுடன் பசுமைநடையின் கையேடு கொடுக்கப்பட்டது அனைவருக்கும். முன்பு பார்த்த இராமாயணசாவடி பற்றியும், புட்டுத்தோப்பு பற்றியும் குறிப்புகள் அடங்கிய கையேடு.


படிக்கமுடிகிறது தானே படித்துப் பாருங்கள் இந்த மண்டபத்தின் வரலாறை


இப்போது புதிதாக  பசுமை நடை அலுவலகத்தில் வாரம் தோறும்  புதன்கிழமை புத்தகங்கள் சார்ந்த உரையாடல் நிகழ்கிறது என்று சொன்னார்கள்.

மண்டபத்தின் நடுவில் பேசுவதைக் கேட்க அமர்ந்து விட்டோம். நடுவில் பிள்ளையார் கோவில்

முத்துக்கிருஷ்ணன் அவர்கள்  தலமைஉரையாற்றி  பேச்சாளர்களைப் பேச அழைத்தார்.
பக்கத்து விழாநடக்கும் வீட்டில் ஒலி பெருக்கியைச் சற்று நேரம் பேச்சாளர்கள் பேசி நிறைவு செய்யும் வரை  நிறுத்தி வைக்க சம்மதம் பெற்று வந்தார்.


இந்த நிகழ்ச்சிக்கு உறுதுணையாக இருந்த திரு. வரதராஜன் அவர்களுக்குப் பசுமைநடை இயக்க வெளியீடு புத்தகம்  எழுத்தாளர் எஸ்.ரா அவர்களால் பரிசளிக்கப்பட்டது.

                           திரு. சுந்தர் காளி அவர்கள் கட்டிடக்கலையைப் பற்றிப் பேசினார்

ஆறு நன்றாக ஓடிக் கொண்டு இருந்த காலத்தில் நடைபெற்றது புட்டுக்கு மண் சுமந்த கதை. அது எல்லோருக்கும் தெரியும்.

 "வைகை  ஆற்றின் பெருமை சிலப்பதிகாரத்தில், திருவிளையாடல் புராணத்தில், பரிபாடலிலும் சொல்லப்பட்டதைப்படித்தபின் இப்போது இப்படி வறண்டு கிடப்பதைப்பார்த்தால் மனது சங்கடப் படுகிறது" என்றார்.


"முதல் முதலில் வந்த  தலபுராணம் பெரும்பற்றப்புலியூர் நம்பி எழுதிய திருஆலவாய் உடையார் திருவிளையாடல் புராணம் .

 அடுத்து பரஞ்சோதி முனிவர் எழுதிய திருவிளையாடல் புராணம்.

நாம் நிற்கும் கட்டிடத்தைத் தள்ளி நின்று பாருங்கள்  இஸ்லாமிய
கட்டிடக் கலையும் நம் திராவிடக் கலையும் சேர்ந்தது என்றும் , இஸ்லாமிய கலை என்று  திராவிடக் கலை என்று பிரித்துப் பார்ப்பதை விட  அப்போது அந்தக் காலகட்டத்தில் எது உயிர்ப்போடு இருந்ததோ அந்த கட்டிடக் கலையை உள் வாங்கிக் கொண்டு அது படி கட்டி இருக்கிறார்கள் என்று தான் சொல்லவேண்டும்" என்றார்.

சேர ,சோழ  பாண்டியர்களும் அவ்வாறே கலை அம்சமுள்ள கட்டிடங்கள், கோயில்களை க்கட்டினார்கள் என்றார்.சோழ, பல்லவர்கள் சாளுக்கிய தேசத்திலிருந்து எல்லாம் சிற்பிகளை அழைத்து  கலையம்சம் உள்ள கோயில்களைக் கட்டியதாகச்  சொன்னார்.
சித்திரைத் திருவிழாவில் திருவிளையாடல் புராணக்கதைகள் அந்த அந்த இடத்தில் நடித்துக் காட்டப்படும் .

இந்த புட்டுத் தோப்பில்   புட்டுக்கு மண் சுமந்த கதை நடித்துக் காட்டப்படும். இங்கு முன் கோயிலைச்சுற்றி புட்டு விற்பார்கள்.

மண் வெட்டி  ஆற்று வெள்ளத்தைத் தடுக்கும் காட்சிக்குக்   குளம் போல் வெட்டி அதற்கு  வேலி போடுபவர்கள் இஸ்லாமியர்கள், பரம்பரை பரம்பரையாகச் செய்து வருகிறார்கள். இன்றும் மத ஓற்றுமைக்குச் சான்று என்றார்.



இவர் பெயர் உதயகுமார். இவர் புட்டுக்கு மண் சுமந்த கதை, மதுரையில் வெள்ளம் வரக் காரணம் எல்லாம்  சொன்னார். இவர் சிறு வயதாக இருக்கும்போது அவர் ஐயா சொன்ன கதையை அழகாய்ச் சொன்னார். கதை சொல்லிகள் குறைந்து விட்டார்கள்.
கதை சொல்லிகளை இழந்து வருகிறோம் என்று சொன்னார்.

மாடு கட்டிப் போர் அடித்து மாளாது என்று  யானை கட்டிப் போர் அடித்த காரணத்தை சொன்னார். அப்படி இருந்த நாட்டில் மழை இல்லாமல் செல்வ செழிப்பாய் இருந்த ஊர்  வரண்டு போனதால் வருணபகவானிடம்  சேர சோழ, பாண்டிய மன்னர்கள் போகிறார்கள்,அவரை வணங்கிப் பணிவுடன் கேட்கிறார்கள், சேர, சோழராஜாக்கள், ஆனால் பாண்டியர் பணிவு இல்லாமல் அகந்தையால் கேட்கவில்லை. அதனால் வருணபகவான் மேகங்களைச்சேர சோழ நாட்டுக்கு அனுப்பி விட்டதாகவும்   அப்படிப் போகும்  குட்டி மேகம் மட்டும் மனம் இறங்கி மழை பொழிந்தது என்றும்
இறைவன் பாடம் கற்பிக்க வைகையில் வெள்ளப் பெருக்கை உண்டாக்கி விட்டார் என்றும் கூறினார்.

திருவிளையாடல் புராணத்தில் உள்ள கதையை  அவர் ஐயா  மாற்றி,கதையில் கடைசியில்  பணிவு வேண்டும் பணிவு இல்லாமல் அகந்தையால்  நாட்டில் மழை இல்லாமல் போனதாகச் சொன்னார்.

அரசனின் ஆணை வீட்டுக்கு ஒருவர் வெள்ளத்தைத் தடுக்க மண் கொட்ட வேண்டும். புட்டு விற்கும் வந்திப் பாட்டிக்கு  முடியாது. மண் அள்ளிப் போட முடியாத காரணத்தால்
 இறைவன் வந்து புட்டுக்கு மண் சுமந்து பிரம்படி பட்ட கதையை அழகாய்ச் சொன்னார்.


அடுத்து எழுத்தாளர் எஸ் . ராமகிருஷ்ணன் அவர்கள் பேசினார்கள்.

"மதுரையின் சிறப்பை ஆயிரம் பகுதிகளாக எழுதலாம்.

'1001 அரேபிய இரவுகள்' கதையை எத்தனை பேர் படித்திருப்பீர்கள் என்று தெரியவில்லை, பாக்தாத் என்ற ஊரை மையமாகக் கொண்டு நடக்கும் கதை.
 கதை நாயகன் அலிபாபா.  உலகத்தில் தொன்மையான புத்தகம் -அதிகமாய் வாசிக்கப்பட்ட புத்தகம்.
அதில் உள்ள கதைதான் 'அலிபாபாவும் 40 திருடர்களும்'  எம்.ஜி.ஆர் நடித்தபடம். அப்போது 1001 அரேபிய இரவு கதை என்பது எல்லாம் தெரியாது.


 மதுரை பக்கத்தில் மல்லாகிணறு என்ற  சிறு கிராமத்தில் வாழ்ந்த நான் மல்லிகைப்பூவை மதுரைக்கு விற்கும் நண்பர்களுடன் 10 வயதில்
 மாட்டு வண்டியில் பயணம் செய்து  வந்து மாட்டி வண்டியை வண்டிபேட்டையில் விட்டு விட்டு  மதுரை ஊர் முழுவதும் போய் இருக்கிறேன், இங்குதான் படித்தேன். இந்த நகரம் என் வாழ்வில்மிக முக்கியமான அங்கம். தமிழ் இலக்கியத்தில் அதிகம் பேசபட்ட ஊர்.

இந்த நகரத்தை சேர, சோழர்கள் , பாண்டியர்கள் ஆண்டு இருந்தாலும்  பாண்டியர்கள் மட்டும தான் தமிழ்ச் சங்கம் அமைத்துத் தமிழை வளர்த்தார்கள்.கவிஞர்களை ஆதரித்து அருகில் வைத்துக் கொண்டார்கள்.

தமிழ்ப் படைப்பிலக்கியங்களைப்  படைக்கப் பெரும் உதவி செய்தார்கள்.. தென் மாவட்டம்  தமிழ் இலக்கியத்திற்குக் கொடுத்த கொடை  என்று சொல்லலாம்.  பாரதி உட்படப் பல்வேறு இலக்கியவாதிகள் தென்பகுதிதான்.

 இறைவனே தான் கவிஞன் என்று தன்னை அறிமுகப்படுத்திக் கொண்டார். கடவுளே தன்னை அங்கீரிக்க வந்த  ஊர்.

பாக்தாத் ஆயிரம் இரவுகளிய எழுதியது போல மதுரையின் ஆயிரம் பகுதிகளை எழுத விரும்புகிறேன். அவ்வளவு சிறப்பு வாய்ந்தது. இங்கு உள்ள மக்களின் மனிதநேயம், அவர்கள்பேசும் தமிழின் இனிமை,மதுரை மக்களின் வரவேற்பு, உபசரிப்பு, மதுரையின் சிறப்பு. அரசியல், கலை, சினிமா, வரலாறு படைத்தது மதுரை என்றார்.
தற்போது அரசியல் தலைவர் யார் என்று தீர்மானிக்கும் ஊராகவும் இருக்கிறது

இது தூங்காநகரம். ஒரு பாதி தூங்கினாலும் இன்னொரு பகுதி விழித்துக் கொண்டு இருக்கும். பகலும், இரவும் இயங்கிக் கொண்டே இருக்கிறது இந்த நகரம்.

இப்படித் தொன்மை வாய்ந்த ஊர் தன் பெருமையைத் தூக்கிப் பிடிக்காமல் தன் ஊரின் பெருமையைச்  சிறப்பு வாய்ந்த வரலாறை தெரிந்து கொள்ளாமல் இருப்பது வருத்தம் தருகிறது"என்றார்.

வெளிநாட்டவர், வெளியூரை சேர்ந்தவர்களை அழைத்து வந்து

"இந்த இராமாயணச்சாவடியைக் காட்டினால் சரி , இங்குள்ளவர்களையே அழைத்து காட்டுவது என்பது நகைப்புக்குரியது.

வெளி நாட்டவருக்குத் தெரியவில்லை என்றால் பரவாயில்லை, நம் ஊரிலுள்ளவர்களுக்குத் தெரியவில்லை என்று இருக்கக் கூடாது. நகரத்தின் தொன்மை தெரிந்து கொள்வது  நம் கடமை என்றார். தொலைக்காட்சியில் இந்த இராமாயண சாவடி பார்த்து விட்டால் இங்கு வரமாட்டார்கள். தொலைக்காட்சியை விட்டு வெளியே வாருங்கள்"என்றார்.
 இந்த நகரத்தை தெரிந்து கொள்ள வேண்டும். நம் ஊரைப் பற்றி 1000 தகவல்கள் தெரிய வேண்டும்.

"மதுரையைப்பற்றித் தவறான முறையில் சித்தரிக்கப்படுகிறது சினிமாவில்.

பரிசோதனை மய்யமாய் இருந்து இருக்கிறது. உதாரணம்  சினிமாவில் படம் எடுத்து விட்டால் படம் ஓடுமா ஓடாதா என்பதை  மதுரையில் ஓடுவதை வைத்துக் கணிப்பார்கள்.
மதுரையில் ஓடி விட்டால் எல்லா இடங்களிலும் ஒடும் என்ற நம்பிக்கை. இப்போதும் அப்படித்தான்.

தனி மனிதனின் இந்த ஊர் மக்கள் வைத்து இருக்கும் அன்பு அதை அவர்கள் வெளிகாட்டும் மாண்பு எல்லாம் வியக்க வைக்கும்.

நடிகர்களுக்கு மன்றங்கள் இங்குதான் முதன் முதலில் ஆரம்பிக்கபட்டது.
நான் படிக்கும் காலத்தில் புரூஸ்லிக்கு கூட இங்கு மன்றம் இருந்தது.
ஜாக்கி சானுக்கு, பப்பிலகரிக்கு எல்லாம் மன்றம் இருந்தது."


"அந்தக் காலத்தில் ஆறில் பூவாய் ஓடுமாம்.  ஆற்றில் படகில் போகும் மக்கள், கரையில் நிற்கும் மக்கள், ஆண், பெண்களின் உடைகள், அவர்களின் உற்சாகம், கொண்டாட்டத்தின் ஊராகப்  பொலிவுடன் காட்சி அளித்தது என்று மதுரை காஞ்சி கூறுகிறது"  என்றார்.

"இந்த நகரத்தின் இரவு, பகலை எழுத வேண்டும்  . டீக்கடையில் பகலில் குடிக்கும் டீக்கும், இரவு குடிக்கும் டீக்கும் வித்தியாசம் இருக்கும்" என்றார்.

"இந்த நகரம் இந்து, இஸ்லாமியர், கிறித்தவர்கள் நிறைந்த பண்பாட்டு மையமாக இருக்கிறது.

கிறித்துவ தேவாலயங்கள், கிறித்துவ பள்ளிகள் ,மிஷனரி ஆஸ்பத்திரிகள் எல்லாம்  சிறப்பு வாய்ந்தவை. அதையும் போய்ப் பாருங்கள் . இடைக்காட்டூர் தேவாலயம் நன்றாக இருக்கும் என்றார்.

நகரத்தின் தொன்மையைத் தெரிந்து கொள்ளுங்கள் பதிவு செய்யுங்கள்

வீதிகளை நினைவு கொள்ளுங்கள் ' தாத்தா பேரனைப் பார்த்து நீயாவது என்னை நினைவு வைத்துக் கொள்' என்று கேட்பது போல் இந்த நகரம் நான் எப்படி இருந்தேன்  முன்பு சீரும், சிறப்புமாய்  என்று கேட்பது போல்  தோன்றுகிறது.

ஒவ்வொரு தெருவின்  பெயர்க்கும்  பெயர் காரணம் உண்டு.

ஒரு மனிதன் இறக்கும் போது அவன் நினைவுகளும் அவனுடன் இறந்து போவது எவ்வளவு கொடுமை ?  இந்த ஊர் பற்றிய நினைவுகளை உங்கள் குழந்தைகளிடம், உங்கள் நண்பர்களிடம் பதிவு செய்யுங்கள்.

என் நினைவுகள் என் வருத்தங்க்கள், என் மகிழ்ச்சிகளை உங்களுக்கு சொன்னால் பகிர்ந்து கொண்டால்தான் தெரியும் என் நினைவுகள் அப்படியே கடத்துவது என்பது முடியாது.

இந்த ஊரில் பெற்ற அனுபவங்களை பகிர்ந்து கொள்ளுங்கள் என்றார்.

இந்த ஊரின் தொன்மையை இப்போது உள்ள நிலையை நாவலாக எழுத ஆசை. கண்டிப்பாய் செய்வேன் என்றார்.

மிக நன்றாக பேசினார்.  என்னால் முடிந்தவரை அவர் பேச்சை பதிவு செய்து இருக்கிறேன்.

 நான் குறிப்புகள் எடுத்து இருந்தேன் என்றாலும் திரு. சுந்தர்காளி அவர்கள் பேசிய பேச்சையும்,  எழுத்தாளர் திரு . ராமகிருஷ்ணன் அவர்கள் பேசிய உரையை எம்,பி.3 ஒலிவடிவாய் அன்பர் ரகுநாத் அவர்கள் கொடுத்தார்  . அதில் கேட்டு கொஞ்சம் குறிப்பு எடுத்துக் கொண்டேன். ரகுநாத் அவர்களுக்கு நன்றி.

பேச்சு முடிந்து உணவு இடைவேளையில் ராமகிருஷ்ணர் அவர்களிடம் பேசினேன் மகன் வீட்டுக்குப் போய் இருந்தபோது அவரின் சிறுகதைத் தொகுப்பை "100 சிறந்த சிறுகதைகள்" இரண்டு பாகம் (பழைய எழுத்தாளர்கள் 200 பேர் கதைகள்)  படித்ததைச் சொன்னேன். விகடனில் தேசாந்திரி என்று அவர் எழுதியதை படித்ததையும் சொன்னேன். மகிழ்வுடன் கேட்டுக்  கொண்டார்.

செவிக்கு உணவு அளித்தபின் வயிற்றுக்கும் உணவு அளித்தார்கள். வழக்கமாய் உள்ளூர் என்றால் உணவு கிடையாது, ஆனால் காரியாபட்டியிலிருந்து 'இன்பம்' உணவகத்தின் சார்பாகப் பழையகஞ்சி 150 பேருக்குத் தயார் செய்யப்பட்டு அதன் பாரம்பரியம் மாறாமல் தரப்பட்டது.

முகநூலில் அன்பர் விஜயகுமார் அவர்கள் பகிர்ந்தவை கீழே:-

//காரியாபட்டியிலிருந்து இன்பம் உணவகத்தின் சார்பாக பழையகஞ்சி 150 பேருக்கு தயார் செய்யப்பட்டு அதன் பாராம்பரியம் மாறாமல் தரப்பட்டது,
பசுமைநடையை நடத்திவரும் தோழர் முத்துகிருஷ்ணனுக்கும் எனக்கும் சிறு ஐயம் இருந்தாலும் அவர் எங்களுக்கு அனுமதி அளித்தது பெருமகிழ்ச்சி,,,,
நேற்று இரவே பழைய பொன்னி அரிசி நம்மஊர்ல அவித்ததை வாங்கிப் பக்குவமா ஆக்கிப் பதமா தண்ணிஊத்தி தொட்டுக்கிற கத்தரிக்காய்,முருங்கைக்காய் புளிக்கூட்டு.மோர் வத்தல்.மிதுக்கவத்தல்.சுண்ட வத்தல் தயார் செய்து அதிகாலை எழுந்து பழையகஞ்சி காரியாபட்டியிலிருந்து மதுரைக்கு பறந்தது,,,
நிகழ்ச்சியின் முடிவில் சஸ்பென்ஸாக இன்று வித்தியாசமாக பழைய கஞ்சி வழங்கப்படும் என்று அறிவித்தவுடன் கைதட்டல்,,,அகைவருக்கும் பாக்குமட்டை தட்டில் கஞ்சியும்.தொன்னையில் கத்தரிக்காய் கூட்டும்,,ஓரத்தில்வத்தலும் - வைகைக்கரையில் புட்டுத்தோப்பில்,,,
ஏறக்குறைய 150 பேர் கலாச்சாரம் காக்க மதுரையில் ஒரே இடத்தில் பழையகஞ்சி குடித்த சரித்திர சாதனை நிகழ்வு,,குறிப்பாக எஸ்,ரா,,கஞ்சி குடித்துவிட்டு பாராட்டியது மகிழ்ச்சி அளித்தது,அனைவரும் வந்து வந்து பாராட்டியது,,ஒரு நண்பர் இன்று தான் வாழ்க்கையிலேயே பழைய கஞ்சி குடிக்கிறேன் என்றதும்,,,,,,அருமையான
நிகழ்ச்சியாக அமைந்தது,,
கடைசியில் நிகழ்ச்சி ஒருங்கிணைப்பாளர்களுக்கு கஞ்சியும் காயும் காலியாகிவிட்டது,,,,
அனைவர் முகத்திலும் ஒரு திருப்தி,,
,,,,,எங்களுக்கு இந்த வாய்ப்பினையும் சந்தோஷத்தையும் அளித்த தோழர் முத்துகிருஷ்ணன் அவர்களுக்கு எங்களது நன்றிகள்,,
கலாச்சாரம் காக்க கைகோர்ப்போம்,,
நன்றியுடன்
பசித்தோருக்கு உணவளிக்கும் இன்பம் உணவகம்
காரியாபட்டி
9443467379 //

போன பதிவில் உணவு கொடுக்கப்பட்டது நாம் மறந்து விட்ட பழைய உணவு என்று குறிப்பிட்டு இருந்தேன்.

  //புட்டுத் தோப்பில் 'புட்டு ' என்று நினைப்பீர்கள் ஆனல் அது இல்லை , வேறு பழைய உணவு நாம் மறந்த உணவு கொடுக்கப்பட்டது .
அடுத்த பதிவில் பார்ப்போம்.//

நம் அதிரா :- //புட்டுத்தோப்பில் பழையசாதம்:).. வரகுக்கஞ்சி:).. குழைசாதம்:)..... சும்மா எதுக்கும் சொல்லி வைப்போம்:))//

என்று முதலில் பழைய சாதம் என்று சரியான பதிலைச் சொல்லிவிட்டார். அவருக்குப் பாராட்டுக்கள்.

நம் ஏஞ்சல் :- //அநேகமா கைக்குத்தரிசி கவுனி அரிசி நீர் மோர் சாதம் கம்பங்களி ராகி இவற்றில் உணவு அளித்திருப்பாங்க//

நானும் என் கணவரும் ஞாபிறு விரதம் என்பதால் இந்த  கஞ்சி குடிக்கும் வாய்ப்பை இழந்தோம்.

Image may contain: one or more people and food

மண்டபத்தைச் சுற்றி இருந்த கஷ்டபடும் மக்களும் மன மகிழ்ச்சியுடன் கஞ்சியை வாங்கி வாழ்த்திச் சென்றார்கள்.
வேப்பமரமும் நாகரும்.

புட்டுத்தோப்பில் உள்ள இந்த  வேப்பமரத்தில்  மாடு போன்ற தோற்றம் ஒரு பகுதியில் இருந்தது.  மாடு முகம் கண் எல்லாம் இருந்ததால் கொம்புக்கு மேல் இரண்டு கிளைகளை வெட்டி இருப்பார்கள் என்று நினைக்கிறேன்.

Image may contain: tree and outdoor

Image may contain: 1 person, standing and outdoor
நேரு ஆலாலசுந்தரர் கோவிலில் கொடுத்த அறுகம்புல்லை மாட்டுக்குக் கொடுப்பது போல் கணவரைக் கொடுக்கச் சொல்லிப் படம் எடுத்தேன்.
இந்த இடத்தில் தான் சிவன் ஆற்றின் கரைக்கு மண் வெட்டிப் போடும் லீலை நடித்துக் காட்டப்படும்.

நடு மண்டபத்தில் நடு மையத்தில்
 பிள்ளையாருக்குச் சின்ன கோவில் உள்ளே இருக்கிறது.
நடு மண்டபத்தில் உள்ள தூணில் உள்ள சிற்பங்கள்.

அழகர் திருவிழாவில் நிறைய பேர் இந்த மாதிரி உடை அணிந்து கொண்டை வைத்து விழாவில் வருவார்கள்.

மதுரைக் காஞ்சியில் சொன்ன வைகை ஆறு இல்லை இப்போது.  ஆனால் அதில் சொன்னது போல் பூக்கள் மிதந்து கொண்டு இருந்தது, கரைகளில் பூத்துக் குலுங்கி கொட்டிய பூக்கள் இல்லை, யாரோ மனிதர் இறைவனிடம் போன போது அவர் இறுதி அஞ்சலி பூக்கள் .  காசு போடுவார்கள் போல இருவர் ஆற்றுக்குள் காசை தேடிக் கொண்டு இருக்கிறார்கள். (புதிதாகக் கட்டப்பட்ட பாலம்)

கொஞ்சம் தண்ணீரில் துணியை நல்ல வெண்மையாக துவைத்துக் கொண்டு இருக்கும் சலவைத் தொழிலாளி


மேல்தளம் பார்க்கும் வாய்ப்புக் கிடைக்கவில்லை இந்த முறை.
Image may contain: 7 people, people standing
நிறைவுப் பகுதியில் எல்லோரும் மண்டபப் படிகளில் படம் எடுத்துக் கொண்டோம்.

கார்த்திகேயன் பிச்சுமணி அவர்களுக்கு நன்றி ( இந்த படங்கள் உதவி)
Image may contain: one or more people and outdoor
புட்டுதோப்பு முன்புறம் உள்ள  புட்டு சொக்கநாதர் கோவிலைத் தரிசனம் செய்து  பயணத்தை நிறைவு செய்தோம். அனைவரிடமும் விடைபெற்று வீடு வந்து சேர்ந்தோம்.


                                                                   வாழ்க வளமுடன்.














திங்கள், 12 மார்ச், 2018

இராமாயணச்சாவடி



பசுமை நடை இயக்கத்துடன்   ஞாயிறு காலை ( 11.3. 1018)
  இராமாயணச்சாவடி, புட்டுத்தோப்பு சென்றோம். பசுமை நடையின் 84 வது பயணம். இவர்களுடன் இரண்டு இடங்களுக்குச் சென்று

 பகிர்ந்து இருக்கிறேன். வண்டியூர்த் தெப்பகுளம்



அனைவரும் மதுரை வடக்கு மாசி வீதி மையத்தில்   சந்திப்பு என்று செய்தி அனுப்பி இருந்தார்கள்.

காலை ஆறு மணிக்கு வந்து காத்து இருந்தோம். ஒருவர்  மட்டும் தான் வந்து இருந்தார். தெருவின் சந்திப்பில் உள்ள  நேரு ஆலாலசுந்தரர் கோவிலில் உள்ள விநாயகரை வணங்கி விட்டுக் காத்து இருந்தோம். 

பெயர்க் காரணம் அரசமரத்தடியில்  எல்லா இடத்திலும் இருப்பார் இங்கு ஆலமரத்தடியில் இருக்கிறார். அழகாய் இருக்கிறார், அதனால் ஆலால சுந்தர விநாயகர் என்று பெயர். மதுரைக்கு வந்த நேரு அவர்கள் வாகனத்தைவிட்டு இறங்கி  வழிபட்டார் விநாயகர்  நேரு ஆலால சுந்தர விநாயகர் ஆகி விட்டார்.

நம் கீதாசாம்பசிவம் அவர்கள்  மதுரையில் இருக்கும்போது தினமும் வழி பட்ட விநாயகர்.

காலையில் பூ விற்கப் போகும் வயதான அம்மா விநாயகருக்கு முதலில் பூவைக் கொடுத்து வணங்கிவிட்டு குருக்கள் கொடுத்த விபூதியை நெற்றி நிறையப் பூசிக் கொண்டு கிளம்புவதைப் பார்த்தேன்.
பிள்ளையார் அப்பா! பூக்கள் விற்கப் பலத்தைக் கொடு என்று வேண்டிக் கொண்டு இருப்பார்.
காலைச் சூரியன் வெளிக்கிளம்ப ஆயத்தம் ஆகி விட்டார்.

வந்து விட்டார்.
சூரியன் மேலே எழும்பிய நேரத்தில் ஒவ்வொருவராக வர ஆரம்பித்து விட்டார்கள்.

Image may contain: one or more people, tree, crowd, sky and outdoor
வந்தவர்கள் இனி வரும் அன்பர்களுக்கு காத்து இருக்கும் போது அப்படியே பக்கத்தில் உள்ள கடையில் காப்பி அருந்தி விட்டு ஒருவரோடு ஒருவர் நலம் விசாரித்துக் கொண்டு இருந்தார்கள். நான் மரத்தில் பறவைகளைத் தேடுகிறேன்.
Image may contain: 3 people, people standing, tree, crowd and outdoor

மதுரைக்கு வந்து இருந்த எழுத்தாளார் எஸ். ராமகிருஷ்ணன் அவர்களும் கலந்து கொண்டார்கள். பசுமைநடை அமைப்பாளர் முத்துக்கிருஷ்ணன் அவர்களுடன் எஸ். ரா  அவர்கள் முன்னால் நடந்து வருகிறார்கள். (இந்த படமும் மேல் உள்ள படமும் பசுமை நடைக்கு வந்த ஒருவர் முகநூலில் பகிர்ந்த படம். அவருக்கு நன்றி.)

7மணிக்கு இராமாயணச்சாவடி வந்து விட்டோம். 
திரு . சுந்தர் காளி அவர்கள் பேசுகிறார்கள்

சாவடிகள் எப்படி உருவானது, எதற்கு உருவானது என்றெல்லாம் மூவர் பேசினார்கள். சுந்தர் காளி அவர்கள் பக்கத்தில்  போய்க்கொண்டு இருக்கும் அந்த வயதானவர், அவர் அருகில்  இருப்பவர் எல்லாம் பேசினார்கள். கால்நடையாக நடந்து போகும் மக்கள் தங்கி ஓய்வு எடுத்து சாவடியில் கொடுக்கும் உணவுகளை உண்டு செல்வார்கள் என்றார்கள்.

ஆயிரம் வீட்டு யாதவர்களுக்கு  சொந்தமானது என்றார்கள். ஆயிரம் வீட்டு யாதவர்கள் இந்த சாவடியில் விளக்கு இல்லாத காலத்தில் தீபந்தங்க்களை வைத்துக் கொண்டு இராமாயணம் படிப்பார்களாம். அழகர் பற்றிய பாடல்களை  இராகத்தோடு இசைப்பார்களாம்.

சொற்பொழிவுகள் நடைபெறுமாம் இங்கு.

400 வருஷம் முன் கட்டபட்டது , 1948ல் புதுபித்த போது  கட்டிடத்தின் மேல் உள்ள கோபுரங்களில் தேச தலைவர்கள், ஆன்மீக பெரியவர்கள் சிலைகள் 
புதிதாக அமைக்கப்பட்டு இருக்கிறது.

அதன் மேல் கோபுரத்தில் உள்ள சிலைகளின் சிறப்பையும் பேசினார்கள்.
திருகூடல் மலை கட்டிக்குளம்ஸ்ரீநவநீத கிருஷ்ணன் சுவாமி ஆடிமாத  சித்திரை திருவிழாவில்  குதிரை வாகனத்தில் காட்சி தருவாராம் இந்த சாவடியில்.
சித்திரை திருவிழாவில் தங்ககுதிரை வாகனத்தில் மீனாட்சி, சுந்தரேஸ்வரர் இங்கு எழுந்தருளுகின்றனர்.

திருவிழா சமயம் சாமி வந்து இறங்கி மக்களுக்குக் காட்சி கொடுக்கும் போது இரவு நாடகம்  நடக்குமாம்.  வடக்கு வாசல் செல்லத்தம்மன் கோயில் தைமாதம் 9ம் திருவிழா திருத்தேர் உற்வசத்தன்று இரவு இந்த சாவடியில் தங்கி நாடகம் பார்த்து மறுநாள் மஞ்சள் நீராட்டு நடை பெறுவது சிறப்பாகும்  என்று பலகையில் உள்ள செய்திசொல்கிறது.

இவ்வளவு கூட்டம் பக்கத்தில் இருந்து பேசுவதைக் கண்டும் அமைதியாக   அப்படியே ஆடாமல் அசையாமல் இருக்கிறது மாடு.

பக்கத்தில் கருப்பண்ணசாமி இருக்கிறார். ஆடி அமாவாசை, ஆடி வெள்ளிக்கு சந்தன சாற்றுப்படி நடக்கும் என்றும் ,கருப்பின் சிறப்பு என்று சொல்வது வாயுக்குத்து  வந்து கஷ்டப்படுபவர்கள் "நாச்சிமுத்துக்  கருப்பா மூச்சுக்குத்தை வாங்குப்பா" 
என்று மூன்று தடவை கூறி வழிபட்டால்  உடனே நிவர்த்தி ஆகும் என்றும் சொல்கிறது அறிவிப்புப்பலகை.

ஒருபக்கத்தில் சூட்டுக்கோல் சாமியும், ராமகிருஷ்ணபரமஹம்சரும் இருக்கிறார்கள்.
விவேகானந்தரும் , இராமலிங்க அடிகளும் இருக்கிறார்கள்.
Image may contain: 3 people, people smiling, sky and outdoor
நேரு, காந்தி, சுபாஷ் சந்திர போஸ்



குழந்தை முருகன் வேலுடன் மயிலுடன்., யசோதையும் குட்டிக் கண்ணனும்
மீனாட்சி திருமணத்தில் அரசன் முதல் ஆண்டி வரை கலந்து கொண்ட காட்சி சித்தரிக்கப் பட்டு உள்ளது.

ஸ்ரீதேவி, பூதேவியுடன் திருமால்
 உள்ளே பார்க்க முடியவில்லை - பூட்டி இருந்தது.




Image may contain: one or more people, crowd and outdoor
கருப்பண்ணசாமி கோவிலும், இராமாயணச்சாவடியும்.
 கடைசியில் நான் போட்டோ எடுத்துக் கொண்டு இருப்பதும் இந்த படத்தில் இடம் பெற்று இருக்கிறது. எங்களுடன் வந்த அன்பர் எடுத்த படம்.

Image may contain: one or more people, people walking, crowd and outdoor
அடுத்து புட்டுத்தோப்புக்குச் செல்ல நடை.  வண்டிகளை நிறுத்தி வைத்த இடத்திற்கு வந்து  எடுத்துக்கொண்டு  ஆரப்பாளையம் பகுதியில் இருக்கும் புட்டுத்தோப்பு  நோக்கிப் பயணம். புட்டுத்தோப்புக்குப் புராணப்பின்னணி
 எல்லோருக்கும் தெரிந்து இருக்கும். மண்ணைப் படைத்தவ்ன் மண் சுமந்தான்  என்ற பதிவில் பிட்டுக்கு மண் சுமந்து பிரம்படி பட்ட லீலை காட்சியாகக் காட்டப்படும் சித்திரைத் திருவிழா பார்த்ததைப்பகிர்ந்து இருப்பேன்.

அங்கு இப்போது போனபோது, என்ன உணவு போனவர்களுக்குக்கொடுக்கப் பட்டது என்பது அடுத்த பதிவில். புட்டுத் தோப்பில் 'புட்டு ' என்று நினைப்பீர்கள் ஆனல் அது இல்லை , வேறு பழைய உணவு நாம் மறந்த உணவு கொடுக்கப்பட்டது .
அடுத்த பதிவில் பார்ப்போம்.

தேசீயமும் தெய்வீகமும்  பதிவில்  இந்த இராமாயணச்சாவடி வரலாறு அருமையாக சொல்லி இருக்கிறார். நேரம் கிடைத்தால் , விருப்பம் இருந்தால் படிக்கலாம்.
                                                                வாழ்க வளமுடன்.

வியாழன், 8 மார்ச், 2018

மகளிர் தின வாழ்த்துக்கள்.!


//பிரான்ஸில் பிரஷ்யனில்  இரண்டாவது குடியரசை நிறுவிய லூயிஸ் பிளாங் பெண்களை அரசவை ஆலோசனை குழுக்களில் சேர்க்கவும் பெண்களுக்கு வாக்குரிமை அளிக்கவும்  ஒப்புக்கொண்ட அந்த நாள் 1848 மார்ச் 8. அந்தநாளைத்தான் உலகம் முழுக்க பெண்கள் உரிமை தினமாக கொண்டாடுகின்றனர்.

சுமார் 226  ஆண்டுகளுக்கும் மேலாக பெண்கள் போராடிப்போராடி தங்கள் உரிமைகளை பெற்றுவருகின்றனர்.
அரசன் லூயிஸ் பிளாங்க் பெண்களுக்கு வாக்குரிமை அளிக்க ஒப்புதல் அளித்த நாளான மார்ச் 8ம் தேதியை நினைவு கூரும்  வகையில், ஒவ்வொரு ஆண்டும் மார்ச் 8ம் தேதியை சர்வதேச மகளிர் தினமாகக் கொண்டாட முடிவு செய்து தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.பின்வந்த நாட்களில் ஐ.நா. பெண்கள் அமைப்பு சார்பில் அனைத்துலக பெண்கள் நாள் கடைப்பிடிப்பது என முடிவெடுக்கப்பட்டதன் அடிப்படையிலேயே  ஆண்டுதோறும் மார்ச் 8ம் தேதி கொண்டாடப்படுகிறது.//



நன்றி- தினகரன்.

மகளிர்தினத்தைச் சிறப்புச் செய்யும் விதமாய் நான் சந்தித்த, படித்த சில பகிர்வுகள் இங்கு:-

சமுதாயத்திற்கு சேவை செய்த  சிறந்த பெண்மணி அவர்களை சந்தித்த வேளை ஏற்பட்ட மகிழ்ச்சி.
இவரைப் பாராட்டி 2013 ல்  மகளிர் தினத்தில் போட்ட பதிவு.
//நாடி நரம்பு தளர்ந்து கயிற்றுக்கட்டிலில் எழுந்து உட்காரக்கூட ஆள் துணை தேடும் 82வயதில்தான் இவர்,விளைநிலங்களை உப்பளங்களாக மாற்றும் இறால் பண்ணையை எதிர்த்து நாடு தழுவிய போராட்டம் மேற்கொண்டார். இதற்காக இவர் குடியிருந்த வீடு தீவைத்து எரிக்கப்பட்டது, கூட இருந்தவர்கள் பொய்வழக்கில் கைது செய்யப்பட்டார்கள். இப்படி சொல்லமுடியாத சிரமங்களை பற்றி கொஞ்சமும் கவலைப்படாமல் சுப்ரீம் கோர்ட்வரை சென்று போராடியவர்.//

மதுரையில்  ஒரு   பள்ளி அருகில்  கடைவிரித்திருந்த அம்மாவைப் பார்த்தவுடன் என் இளமைக்கால நினைவுகள் வந்தன. அவர்களுடன் பேசியபோது  கிடைத்த சில செய்திகள் :-



பள்ளிப் பருவத்தில் குழந்தைகளுக்கு வீட்டில் எவ்வளவு தின்பண்டங்கள் வாங்கிக் கொடுத்தாலும் பள்ளி அருகில் விற்பதை வாங்கித் தின்றால் தான் மகிழ்ச்சி , திருப்தி ஏற்படும்.

பள்ளி அருகில் தான் முன்பு எவ்வளவு விற்பனைக்குக் காத்திருக்கும் ! ஐஸ்கட்டியைத் தேங்காய்ப்பூப் போல் துருவி குச்சியில் வைத்து (கலர் கலராக பாட்டில்களில் இருக்கும் கலர்களை)நாம் கேட்கும் கலர்களை அதன்மேல் ஸ்பிரே செய்து தருவார்கள். கமர்கட், தேங்காய்பர்பி, கடலைமிட்டாய், மாங்காய், நெல்லிக்காய், தேன்மிட்டாய், இலந்தவடை, குச்சிமிட்டாய், பென்சில் மிட்டாய் , சேமியா ஐஸ், பால் ஐஸ், இன்னும் எத்தனை எத்தனை வகை ஐஸ்கள்.

இப்போது சுத்தம் சுகாதாரம் என்று பள்ளி அருகில் எதுவும் விற்கக் கூடாது என்று  சொன்னதால் குழந்தைகளை இடைவேளையின் போதும் வெளியில் விடுவது இல்லை.

பள்ளியின் வாசலில் சுத்தமாக பாட்டில்களில் மிட்டாய், பொரிஉருண்டை, மற்றும் பாக்கெட்களில் உள்ள தின்பண்டங்களை வைத்துக் கடைவிரித்து இருந்த அம்மாவிடம் பள்ளிப் பிள்ளைகள் வாங்கத் தடை உள்ளதே ! நீங்கள் இங்கு கடை போட்டு இருக்கிறீர்களே விற்குமா? என்று கேட்டால் பள்ளிக்கு கொண்டுவந்து விடும் பெற்றோர்களுடன் வரும் பிள்ளைகள் கேட்கும் , அவர்களுக்கு வாங்கிக் கொடுப்பார்கள்.


 என் பேரப் பிள்ளைகள் இந்தப் பள்ளியில் படிக்கிறார்கள். அவர்களுக்குக் காவலாக இங்கு இருக்கிறேன். தினம் 10 ரூபாய் விற்றால் போதும் அம்மா இங்கு, அப்புறம் பள்ளிவிட்ட பின் குழந்தைகளை அழைத்துக் கொண்டு போய் வீட்டில் விட்டுவிட்டு பார்க் போய் விற்பேன் என்றார்கள்.

வயதான காலத்தில் தன் மகளுக்குப் பாரமாய் இருக்கக் கூடாது . அவளுக்கு உதவியாய் ஏதாவது சம்பாதித்துக் கொடுக்கவேண்டும் என்ற லட்சியத்துடன் இருக்கிறார்.

லட்சிய பெண்மணியைப் போற்றுவோம்.


இப்படி மகிழ்ச்சியுடன் குடும்பத்திற்கு உழைக்கும் பெண்மணியைப் போற்றுவோம்,

 வயது முதிர்ந்தாலும் வீட்டில் முடங்கிக் கிடக்கமல் தன்னால் முடிந்த உதவிகளை வீட்டுக்கு  செய்ய பனங்கிழங்கு விற்கும்  வயதான தாயை வணங்குவோம். 
கட்டிடத்தை பார்த்துக் கொள்ளும் ஒரு அம்மா - (என் போட்டோ வேண்டாம் தாயி என்று சொல்லி விட்டார்கள். )கொஞ்சம் சாமான்களை வைத்துக் கொண்டு நளபாகம் செய்து கொள்ளும் அம்மா வியக்க வைத்தார்.கட்டிடம் முடிவடைந்து விட்டது அதனால் வெளியில் சமைத்துக் கொள்ளச் சொல்லிவிட்டார்களாம். கட்டிடத்தைப் பார்த்துக் கொண்டு  காவலுக்குப் படுத்துக் கொள்ளும் அம்மாவின்  கஷ்டங்கள் விலகி நன்றாக இருக்க வேண்டும்.
இந்தப் படம்  ’அமுதசுரபி’ இதழ் பொன்விழா ஆண்டில் நடத்திய குறுநாவல் போட்டியில் வென்ற  ’விதைநெல்’- நாவலின் அட்டைப்படம். வயதானலும்  சுறு சுறுப்பாய் வேலை செய்யும் மூதாட்டி என்னை கவர்ந்தார்.
வயதான காலத்தில் குப்பைகளை அள்ளி  சுத்தம் செய்யும் துப்புரவு பணியாளர் அம்மாவுக்கு வாழ்த்துக்கள். 

மூவர் கோவில் போய் இருந்த போது   அந்த கோவில் புற்களை சுத்தம் செய்தும் , வேப்பம் முத்துக்களை சேகரித்து வித்தும் பிழைப்பவர் .. முதுமையிலும் 
ஏழ்மையிலும் யாரிடமும் கையேந்தாமல் உழைத்து வாழ்கிறார். அவரையும் வாழ்த்தி வணங்க வேண்டும்.

இப்படி வயதான காலத்தில் பூ விற்று பிழைப்பவர். பெங்களூர் போய் இருந்த போது இவர்களைப் பார்த்தேன் இரவு குளிரில்  ஒடுங்கி அமர்ந்து பூ விற்றுக் கொண்டு இருந்தார்கள். இந்த வயதிலும்  இப்படி உழைத்து  வாழ்பவரை வாழ்த்தி வணங்குவோம்.

நம்பிக்கைக்குரிய சாதனை :_

//அடுத்தவருக்கு உதவும் மனம் கொண்டவர்கள் அரிதாகி வரும் காலம் இது. அவரவர் வாழ்க்கையைப் பார்க்கவே நேரம் போதவில்லை என அலுத்துக்கொள்பவர்களும் அதிகம். இவர்களுக்கு மத்தியில் சேவை மனப்பான்மையும் அர்ப்பணிப்பு உணர்வும் கொண்டவர்களுக்கு மரியாதை செய்யும் முயற்சியில் இறங்கியிருக்கிறது திரிபுரா ஃபவுண்டேஷன். ஆபத்தான சூழ்நிலையில் துணிச்சலாக இறங்கி பிறரைக் காப்பாற்றிய குழந்தைகளுக்கு ஆண்டுதோறும் வழங்கப்படும் ‘ஹோப் ஹீரோ’ விருதுதான் அது. இந்த ஆண்டு விருது பெற்றவர்களில் குக்கிராமத்தைச் சேர்ந்த இரு சிறுமிகளும் உண்டு! சாகச சந்தானலட்சுமி!

திருச்சி மாவட்டம், ஆதவத்தூர் கிராமத்தைச் சேர்ந்த சந்தானலட்சுமி எட்டாம் வகுப்பு படிக்கிறார். ஆற்றில் மூழ்கப் போன இரண்டு தோழிகளைத் துணிச்சலாக ஆற்றில் குதித்துக் காப்பாற்றி இருக்கிறார்! 

‘‘அன்னிக்கு ஆத்துல அதிக தண்ணி போயிட்டு இருந்துச்சு. ரெண்டு புள்ளைகள் திடீர்னு ‘காப்பாத்துங்க’ன்னு கத்துனாங்க. ஒரு புள்ள காலு சேத்துக்குள்ள சிக்கிருச்சு... இன்னொரு புள்ள அதோட தோள் மேல உட்கார்ந்துருக்கு. அங்க நல்லா நீச்சல் தெரிஞ்சவ நான்தான். யோசிக்காம குதிச்சேன். எவ்வளவு இழுத்தும் ரெண்டு புள்ளைகளாலயும் வெளிய வர முடியல... வேற வழியில்லாம, ஆழமா நீந்திப் போய் சேத்து மண்ணை விலக்கிவிட்டேன். அஞ்சு நிமிசம் அப்படி செஞ்ச பிறகுதான் கால் ரெண்டும் வெளிய வந்துச்சு. அப்படியே தூக்கிவிட்டேன்’’ என துணிச்சல் சம்பவம் குறித்து விவரிக்கும் சந்தானலட்சுமியின் ஆசை - ஐபிஎஸ் படித்து போலீஸ் அதிகாரி ஆகி சேவை செய்வது!

‘‘இன்னிக்கு நாட்டுல நிறைய வன்முறை நடக்குது. கொலை, கொள்ளை அதிகமாகிடுச்சு. இதையெல்லாம் தட்டிக் கேட்கணும்னா நான் போலீசாகணும்’’ என உறுதிபட பேசும் சந்தானலட்சுமியின் பெற்றோர் விவசாயக் கூலிகள். நீச்சல், மரம் ஏறுதல், யோகா உள்பட பன்முகத் திறமைகள் கொண்ட சிறுமியாக இவர் இருப்பதில் அம்மா பெரியநாச்சிக்குப் பெருமை... ‘‘சின்ன வயசுல இருந்தே பொறுப்பா வளர்ந்துட்டா. அடுத்தவங்களுக்கு ஏதாவது உதவின்னா முத ஆளா நிப்பா... இந்த விருது அவளுக்கு கிடைச்சதுல ரொம்ப சந்தோஷம்’’ என்கிறார் அம்மா.

பொறுப்புள்ள புவனேஸ்வரி! :=

திருவள்ளூர் மாவட்டம், முருக்கம்பட்டு கிராமத்தைச் சேர்ந்த புவனேஸ்வரி, அரசுப் பள்ளியில் 9ம் வகுப்பு படிக்கிறார். இவரது அத்தை மகள் சுஜாதா மனவளர்ச்சி குன்றியவர். தனியாக எந்த ஒரு அன்றாடச் செயலையும் செய்ய இயலாது. ஐந்தாம் வகுப்பு முடித்தவுடன் அவளது பெற்றோர் புவனேஸ்வரியின் வீட்டில் படிப்பதற்கு விட்டுச் சென்றுள்ளார்கள். அந்த நாள் முதல் சுஜாதாவின் பெறாத தாயாகவே மாறி கவனித்து வருகிறார் புவனேஸ்வரி. பேச்சு, விளையாட்டு, உணவு என எல்லாச் செயல்பாடுகளுக்கும் புவனேஸ்வரி கூடவே இருந்து கவனித்து வருகிறாள். சுஜாதாவை குளிக்க வைத்து, சாப்பாடு ஊட்டி விட்டு, சீருடை அணிவித்து பள்ளிக்குக் கூட்டிச் செல்கிறார். எந்தக் கட்டாயமும் இன்றி, மனம் விரும்பியே இத்தனை  உதவிகளையும் சுஜாதாவுக்குச் செய்கிறார். 

பள்ளியிலும் கழிப்பறைக்கு கூட்டிச் செல்வது தொடங்கி அனைத்து உதவிகளையும் செய்கிறார். ‘‘அப்பா, அம்மா ரெண்டு பேரும் வயல் வேலைக்கு கூலியா போறாங்க. சின்ன வயசுல இருந்து சுஜாதாவை பக்கத்துல இருந்து பார்த்துக்கிறேன். எனக்கு ஒண்ணும் கஷ்டமா தெரியலை. அடுத்தவங்களுக்கு உதவி பண்றத என்னிக்கும் என் லட்சியமா வைச்சுருக்கேன். அவளுக்கு இன்னும் தனியா சாப்பிடத் தெரியாது. வார்த்தைகளை உச்சரிக்கத் தெரியாது. நான் தினமும் சொல்லிக் கொடுப்பேன். இப்ப ‘அப்பா, அம்மா’ன்னு சொல்றா! நாம பேசறது அவளுக்கு புரியுது. 

பள்ளிக்கூடத்துக்கு லீவு விட்டாங்கன்னா, இவளையும் கூட்டிக்கிட்டு பக்கத்து கிராமமான தாழ்வீடுக்கு மல்லிகைப்பூ பறிக்க போவேன். அதுக்குக் கிடைக்கிற கூலி எங்களுக்கு உதவியா இருக்கும். இந்த விருது கிடைச்சதுக்கு எங்க ஊர்ல எல்லாம் பாராட்டினாங்க...’’ என்று மகிழ்ச்சி பொங்கப் பேசும் புவனேஸ்வரியின் லட்சியம், ‘டாக்டராகி எல்லோருக்கும் இலவச மருத்துவம் பார்க்க வேண்டும். சாதி, மத வேறுபாடில்லாத சமூகத்தை உருவாக்க உழைக்க  வேண்டும்’ என்பதே! //

நன்றி - தின்கரன் நாளிதழ்

உலக அமைதி ஏற்படவும், பசுமைபுரட்சியை வலியுறுத்தியும்  இவர் வரைந்த ஓவியத்திற்கு  கல்வி அமைச்சரிடம் பரிசும் பாராட்டும் பெற்றார்.

--நன்றி தினமலர்.

இப்படி நம்பிக்கைகளுடன் வாழும் குழந்தைகளையும் முதியவர்களையும் நல்ல பெண்மணிகளையும் வாழ்த்தி மகிழ்வோம். மகளிர் தினத்தில். 

இந்த பதிவு  2015ல் எழுதிய பெண்மையைப் போற்றுவோம் பதிவு தான் இப்போது புதிதாக சில படங்கள் சேர்த்து இருக்கிறேன்.

மகளிர்தின வாழ்த்துக்கள்.
வாழ்க வளமுடன்.