கயிலை மலையானே போற்றி போற்றி!
----------------------------------------
03.09.2011 அன்று காலை உணவுக்குப் பின் எங்களில் சிலர் எவரெஸ்ட் சிகரம் முதலிய காட்சிகளை விமானம் மூலம் காணச் சென்றார்கள். நாங்கள் சிலர் செல்லவில்லை. போய் வந்தவர்கள் இயற்கைக் காட்சி மிகவும் நன்றாக இருந்ததாய்ச் சொன்னார்கள்.
காலை 10 மணிக்கு மேல் ஒரு தனிப்பேருந்தில் ஏறி, காத்மாண்டுவில் உள்ள பசுபதிநாத் கோயில், புத்தநீல்கந்த் கோயில், குஹேஸ்வரி அம்மன் கோயில், உத்திராட்சம், சாளக்கிரமம் விற்கும் கடைகள் ஆகிய இடங்களுக்குப் போனோம்.
பசுபதிநாத் கோயில் போனபோது முதலில் உத்திராட்ச கடையில் நம் உடமைகளை கொடுத்து விட்டு பின் கோயிலுக்கு போகலாம் என்று எங்களை அழைத்து சென்ற ’மது’ சொன்னார். (பெல்ட் அணிந்து கோவிலுக்கு போகக்கூடாது என்று அதையும் வாங்கி வைத்துக் கொண்டார்கள்.தோல் பொருட்களுக்கு அனுமதி இல்லை கோயிலில்) கடையில் நம்மை பிரமாதமாய் வரவேற்று டீ கொடுத்து உபசரித்து கடையில் உள்ள பொருட்களை வாங்க நிறைய பேசினார்கள். ஆனால் நாங்கள் முதலில் பசுபதி நாதரை பார்த்தபின் தான் எல்லாம் என்றவுடன் அவர்கள் கடையிலிருந்து அழகான சிறு வயது உள்ள பெண்ணைக் கூடவே கோயிலுக்கு எங்களுடன் அனுப்பினார்கள், தரிசனம் முடிந்தவுடன் கையோடு கூட்டிவர. நல்ல சுறு சுறுப்பான பெண். கோயிலின் உள்ளே போட்டோ எடுக்கக் கூடாது, அதனால் வெளிப் புறம் தான் எடுத்தோம்.
பசுபதி நாதரை உள்ளே பார்க்கப் போவதற்கு முன்பு அங்கு உள்ள குருஜிகள் நம்மை பிடித்துக் கொள்கிறார்கள். உத்திராட்சம் ஹோமத்தில் வைத்து பூஜை செய்தது, ரூபாய் 100 க்கு வாங்க சொல்கிறார்கள். இதை அணிந்து கொண்டு சாமியைப் பார்த்தால் நல்லது என்கிறார்கள். ஒரு சிலர் வாங்கினார்கள். வரிசையாக நின்று 15 நிமிடங்களுக்கு பின் பசுபதி நாதரைப் பார்த்தோம். அங்கு காசு கொடுத்தால் தான் பிரசாதம்.இல்லையென்றால் நம் நெற்றியில் ஒரு குங்குமத்தை வைத்து ’போங்க போங்க’ என்கிறார்கள். நிறைய பணம் கொடுப்பவர்களுக்கு சாமிக்கு அணிவித்த உத்திராட்சம் கிடைக்கும்.(பெரிய உத்திராட்ச மணிகள் கொண்டது வெளியே அது 20 ரூபாய்)பசுபதிநாதருக்குப் போட்ட ருத்ராட்ச மாலையை 100 ரூபாய் கொடுத்தும் வாங்கிக் கொள்ளலாம். பெண் காவலர்கள், கோயில் பணியாளர்கள் நம்மை நகர்ந்து கொண்டே இருங்கள் என வழி நடத்துகிறார்கள்.
கருவறை பெரிய அளவில் சதுரமாய் இருக்கிறது. கருவறையில் உள்ள நான்கு முகம் உடைய சிவலிங்கப்பெருமானை நான்கு வாசல்களின் வழியாகவும் பார்க்கலாம். கருவறையை நிமிர்ந்து பார்த்துக் கொண்டு தங்க கவசம் அணிந்த நந்தி மிகப் பெரிதாய் உள்ளது. நான்கு வாயில்களின் கதவுகளிலும் சுவர்களிலும் வெள்ளி தகடுகள் பதிக்கப் பட்டுள்ளன. அழகிய உலோகச் சிற்பங்கள் உள்ளன.
பசுபதி கோயில் அருகில் பாகுமதி ஆறு ஓடிக் கொண்டு இருக்கிறது. நிறைய படிக்கட்டுகள் அமைந்துள்ளன. அந்த இடத்திற்கு ’ஆரியா காட்’ என்று பெயர். இங்கு இறந்தவர்களை எரிப்பார்களாம்.
கோயிலில் புறாக்கள் நிறைய உள்ளன. குரங்குகளும் நிறைய உள்ளன. வெளி வாயிலில் பெண் தபசிகள் இருக்கும் மடம் இருக்கிறது.
கோயில் தரிசனம் முடிந்தவுடன் உத்திராட்சக்கடைப் பெண்ணுடன் கடைக்குப் போய் எங்கள் பொருட்களை பெற்றுக் கொண்டோம். அந்த கடையில் ஒருமுக உத்திராட்சத்திலிருந்து 14 முக உத்திராட்சம் வரை இருக்கிறது. இரண்டு முகம் இணைந்த உத்திராட்சத்தை ’கெளரி சங்கர்’ ,’சிவ பார்வதி உத்திராட்சம்’ என்கிறார்கள். நீண்ட மூக்கு உள்ள உத்திராட்சத்தை ’கணேஷ் உத்திராட்சம்’ என்கிறார்கள். எங்களுடன் வந்தவர்கள் சிலர் சாளக்கிரமங்கள், ஒருமுக, சிவகெளரி உத்திராட்சங்கள் வாங்கினார்கள். லட்சுமி நாராயண, சங்கு சக்கர, சந்தானகோபால், சுதர்ஸன , வாசுதேவ், நரசிம்ம என்ற பெயர்களுடன் சாளக்கிரமங்கள் உள்ளன.
பின் குஹேஸ்வரி கோயில் போனோம். 64 சக்தி பீடங்களில் இதுவும் ஒன்று.(பார்வதி தேவியின் உடல் பாகம் விழுந்த இடம்) பிரதாப் மல்லா என்ற ராஜா 17ம் நூற்றாண்டில் கட்டிய கோயில். இங்கும் குரங்குகள் நிறைய உள்ளன. அங்கு பழங்கள் குங்குமம் எல்லாம் வைத்து அபிஷேகம் செய்து கொண்டு இருந்தார்கள்.
இந்த கோயிலின் அருகிலும் ஆறு ஓடுகிறது. கோயில் வாசலின் இருபுறமும் கண்கள் ஒவியமாக வரைந்து இருக்கிறார்கள். கோயில் உள்ளே ஜன்னல்கள் அழகாய் உள்ளன. புகைப் படம் எடுக்கக் கூடாது என்கிறார்கள்.
கோயிலில் நேபாள கல்யாணம் ஒன்று நடந்து கொண்டு இருந்தது. சிறிது நேரம் பார்த்தோம்.
அங்கு கோயிலுக்கு வெளியே நிறைய கலைப் பொருட்கள் விற்றார்கள். பேரம் பேசத் தெரிய வேண்டும்.விலை இரண்டு மடங்காய் சொல்கிறார்கள். பாதி விலைக்குக் கேட்டு வாங்கி தந்தார்கள், உடன் வந்தவர்கள்.
அடுத்து புத்தநீல்கந்த் என்ற கோவிலுக்கு போய் இருந்தோம்.அங்கே போக காத்மாண்டுவிலிருந்து ஒருமணி நேரம் ஆகிறது. 9 கிலோ மீட்டர் தூரம் தான்.சிவபுரி மலை அடிவாரத்தில் இக்கோயில் உள்ளது. அங்கு 11 தலை உடைய பாம்புப் படுக்கையில் சங்கு, சக்கரம், கதை, தாமரை மலர் தாங்கிய நான்கு கரங்களுடன் அழகாய் நீரில் படுத்து இருக்கிறார் புத்தநீல்கந்த். ஜலசயனநாராயணன் என்றும் இவரைக்கூறுகிறார்கள் பெரிய மலைப்பாம்பு பின்னிப் பின்னி வளைந்தது போல் உள்ளது. கருவறை கிடையாது.ஒரு குளத்தின் நடுவில் திருவுருவம் மட்டும் உள்ளது. வெயில் படாமல் இருக்க அலங்காரப் பந்தல் போட்டு இருக்கிறார்கள்.நேரே போட்டோ எடுக்க அனுமதி இல்லை. வெளிப் பக்க மதில் ஓரத்திலிருந்து எடுத்தோம்.
அங்கு உருத்திராட்ச மரம் இருக்கிறது. அதன் பக்கத்தில் இரண்டு சிறிய கோயில்கள் உள்ளன. அங்கு வித விதமாய் தனி உத்திராட்சங்கள் விற்கிறார்கள்; ஒரு முகம், சிவகெளரி என்றெல்லாம் கூறி அதன் நன்மைகளையும் கூறி நிறைய பேர் விற்பதற்காக நம்மை சுற்றிக் கொள்வார்கள். நம் இந்தியப்பணம் கொடுத்தாலும் வாங்கிக் கொள்வார்கள். அங்கு வெளியே கோயில் சம்பந்தமான பொருட்களை விற்கும் கடைகளும் இருக்கின்றன.
அன்று மாலை காத்மாண்டு கடைவீதிக்குச் சென்று கயிலை பயணத்திற்குத் தேவையான சில விட்டுப் போன சாமான்களை வாங்கிக் கொண்டோம். வேள்விக்கு வேண்டிய நெய் பாட்டில் வாங்கி கொண்டோம். இரவு உணவு அருந்தி கயிலை நாதரை நினைத்து கூட்டுப் பிரார்த்தனை முடித்து உறங்கினோம்.
மறுநாள் கோத்தாரி என்ற இடத்தை அடைந்து ,நட்பு பாலத்தை கடந்து சீனப் பகுதிக்குச் சென்று கயிலை நோக்கிப் பயணமானோம்.அதைப்பற்றி அடுத்த பதிவில் கூறுகிறேன்.


