சனி, 17 டிசம்பர், 2011

மார்கழியின் சிறப்புமார்கழி வந்து விட்டது. திருப்பாவையும், திருவெம்பாவையும் பாடி இறைவனை பூமாலையுடன், பாமாலையும் சேர்த்து சாற்றி வேண்டினால் வாழ்வில் எல்லா நலங்களும் பெறலாம். மனங்குளிர் மார்கழி என்று சொல்வது போல் உடம்பும் மனமும் குளிரக் குளிர குளிர்ந்த நீரில் குளிக்க வேண்டும் என்பார்கள். குளிர்ந்த நீரில் குளித்தால் குளிர் போய் விடும் ஆனால் வெந்நீரில் குளித்தால் குளிர் தெரியும். என் அம்மா குளிர்ந்த நீரில் தான் குளிப்பார்கள். எங்களுக்கு எல்லாம் வெந்நீர் போட்டு கொடுப்பார்கள். குளித்து, கோலம் போட்டு, காலை கோவிலுக்குப் போய் இறைவனைக் கும்பிட்டு அங்கு தரும் வெண்பொங்கல் பிரசாதம் வாங்கிச் சாப்பிட்டு அப்பாவுக்குக் கொஞ்சம் எடுத்து வருவேன்.அடியார்கள் பஜனை பாடிக்கொண்டு தெருவில் வருவார்கள். வீடுகள் தோறும் விளக்கேற்றி அவர்களை வரவேற்பார்கள். பாடத் தெரியாதவர்களையும் பாட வைக்கும் பஜனைப் பாடல்.இப்படி இளமைக் கால மார்கழி மாதம் அருமையானது. இப்போதும் காலையில் அருகில் இருக்கும் கோவிலுக்குப் போகிறேன். அம்மாவுடன் போன மாதிரி இல்லை.

மார்கழி என்றால் இசைப்பிரியர்களுக்கு நல்ல விருந்து கிடைக்கும். இசையால் பாடகர்கள் வேள்வி செய்வார்கள்.மனித வாழ்வில் இசை நிறைய அற்புதங்களை செய்கிறது.
இசை வெறும் பொழுதுபோக்காக மட்டும் இல்லாமல் மனிதனின் உடலில் காணும் வலிகளை நீக்குவதற்கும், உடலுக்கும் உள்ளத்துக்கும் உற்சாகம் அளிப்பதற்கும் உதவியாக இருக்கும்.இசை,செவிக்கு விருந்து -உடலுக்கு மருந்து. மனோவியாதிக்கும் மருந்து. மனோவியாதி உள்ளவர்களை இசையால் குணப்படுத்தலாம். இப்படி இசையின் பெருமையை சொல்லிக் கொண்டு போகலாம்.

மார்கழி மாதம் பஜனை பாடல்களை கையைத் தட்டி பாடும் போது குளிர் நம்மை விட்டு போய் விடும். இரத்த ஓட்டம் நன்கு நடை பெறும்.உடலுக்கும் மனதிற்கும் உற்சாகம் ஏற்படும். அண்மையில் காலமான சிவானந்த விஜயலட்சுமி அவர்கள் தன் சொற்பொழிவைத் தொடங்கும் முன் ஒரு பாட்டு பாடுவார்கள். ’கோவிந்த கோவிந்த ராதா முகுந்தா ’எனப் பாட்டு பாடுவார்கள் அதில் ”பாடக்கிடைத்த வாய் ஒன்று,தாளம் போடக்கிடைத்த கை ரெண்டு,”இரு கையாலே தாளங்கள் போடு;” ஐந்து புலன்கள் செய்யும் வேலைகளை சொல்லி, இந்த பிறவியில் பாட வாய் கிடைத்திருக்கும்போது, பாடாமல் இருக்கலாமா என அர்த்தம் தோன்றும் பாடலைப் பாடுவார்கள். அந்த பாட்டு முழுமையாய் தெரிந்தவர்கள் சொல்லுங்கள் நான் சிறுமியாய் இருக்கும் போது கேட்டது. அந்த பாடல் வலைத்தளத்தில் தேடியும் கிடைக்க வில்லை.

பால் தினகரன் அவர்கள் ’ காலையில் நீ எழுந்து கடவுளைத் துதி நன்று, காலதாமதம் நன்றன்று, என் மனமே!’ என்று பாடுவார்.

எல்லா மதமும் காலையில் இறைவனைத் துதிப்பது நன்று என்று சொல்கிறது. பள்ளி வாசலில் 4.30க்கு பாங்கின் ஒலி இறைவனைத் தொழ வாருங்கள் என அழைக்கிறது. ஐயப்ப பகதர்கள் காலையில் இந்த மார்கழிக் குளிரிலும் பச்சைதண்ணீரில் குளித்து ஐயப்பனை வேண்டிப் பாடுவார்கள். எல்லாக் கோவில்களிலும் காலை வழிபாடு மிகவும் சிறப்பாய் நடைபெறும்.

மார்கழியில் இசை விழா சிறப்பாய் நடைபெறும். தொலைக்காட்சிகள் போட்டி போட்டுக் கொண்டு மார்கழி மகா உற்சவம் நடத்துகிறார்கள். வானொலியும் இசை விருந்து அளிக்கிறது.
இசை, நிறைய நன்மைகள் செய்யும் அதில் சில : வயலின் இசை,தந்தி வாத்தியங்கள் தலை முடியை நன்கு வளர செய்யும். வயிற்று நோய் போக்கும். வயிற்று நோய் உள்ளவர்கள் அவர்களுக்கு பிடித்த ஒரு குறிப்பிட்ட இசையை மூன்று வேளை சாப்பாட்டுக்கு பின் கேட்க வேண்டும். அப்போது வயிற்று வலி போய் விடும் என்பார்கள்.

வீணை இசை கேட்டால் நல்ல தூக்கம் வரும்.வீணை இசை உடல் வளர்ச்சிக்கு உதவுகிறது. மென்மையான பாட்டுக்கள் மனதை மயக்கும்.

நீலாம்பரிராகம்- நல்ல தூக்கம் வரும். ஸ்ரீ ராகம், நல்ல ஜீரணசக்தி தரும். துவிஜாவந்தி-நரம்பு தளர்ச்சி குணமாகும். சாமாராகம்- மன உளைச்சல் போகும். பைரவி, காம்போதி, கல்யாணி, வாசந்தி, சிவரஞ்சினி, கோசலம், அனுமத்தோடி, புராணிசாராகம், எல்லாம் பிணிதீர்க்கும் ராகங்கள்.

மார்கழிமாதம், கோலங்களுக்குச் சிறப்பு. வீடுகள் தோறும் வண்ணக் கோலங்கள் போட்டு, பசுஞ்சாணத்தில் பிள்ளையார் பிடித்துவைத்து, ஒற்றைப் படையில் பூ வைத்து(1,3,5,7,9,11) பின் காலை 11.30க்கு அதை எடுத்துத் தட்டி வைத்து விடுவார்கள் அதில் தான் சிறுவீட்டுப் பொங்கல் வைப்பார்கள். சிறுமிகள் எல்லோரும் சேர்ந்து அம்மா கட்டிக் கொடுத்த அல்லது வரைந்து கொடுத்த சிறுவீட்டில் சிறு வெண்கலப் பானை வைத்து, அதில் பால் காய்ச்சுவார்கள் அல்லது பொங்கல் வைப்பார்கள் எங்கள் ஊர் பக்கம். ( திருநெல்வேலியில்)

மார்கழி சிறப்பைப் பற்றி போன வருடம் இரண்டு பதிவு எழுதி இருக்கிறேன். பாவை நோன்பு, மார்கழி கோலங்கள் என்று.

கோலங்களைப் பற்றிக் கூறும் இன்னும் சில பாடல்கள்:


நாலாயிரதிவ்ய பிரபந்தத்தில் ஆண்டாள், கோலத்தை அழிக்கும் கண்ணனைப் பற்றி இப்படிக் கூறுகிறார்:

//வெள்ளைநுண்மணல் கொண்டுசிற்றில்
விசித்திரப்பட, வீதிவாய்த்
தெள்ளிநாங்களி ழைத்தகோல
மழித்தியாகிலும், உன்றன்மேல்
உள்ளமோடி யுருகலல்லால்
உரோடமொன்று மிலோங்கண்டாய்,
கள்ளமாதவா. கேசவா.உன்
முகத்தனகண்க ளல்லவே.//


’குடும்ப விளக்கில்’ கோலமிடும் பெண்ணைப் பற்றி பாரதிதாசன் இப்படிக் கூறுகிறார்:

//சின்ன மூக்குத் திருகொடு தொங்கும்
பொன்னாற் செய்த பொடிமுத் தைப்போல்
துளிஒளி விளக்கின் தூண்டு கோலைச்
செங்காந் தள்நிகர் மங்கை விரலால்
பெரிது செய்து விரிமலர்க் கையில்
ஏந்தி, அன்னம் வாய்ந்த நடையடு,
முல்லை அரும்பு முத்தாய்ப் பிறக்கும்,
கொல்லை யடைந்து குளிர்புதுப் புனலை
மொண்டாள்; மொண்டு, முகத்தைத் துலக்கி
உண்டநீர் முத்தாய் உதிர்த்துப் பின்னும்
சேந்துநீர் செங்கை ஏந்தித் தெருக்கதவு
சார்ந்ததாழ் திறந்து, தகடுபோற் குறடு
கூட்டி, மெருகு தீட்டிக் கழுவி,
அரிசிமாக் கோலம் அமைத்தனள்; அவளுக்குப்
பரிசில் நீட்டினான் பகலவன் பொன்னொளி!//
அவள் கோலம் போட்டு முடித்தபின் சூரியன் தன் பொன்னொளியால்  பரிசு தந்தான் என்கிறது.

கண்ணதாசன், ‘நீ’ என்ற திரைப்படப்பாடலில்,

//வெள்ளிக்கிழமை விடியும் வேளை வாசலில் கோலமிட்டேன்
வாசலில் கோலமிட்டேன்
வள்ளி கணவன் பேரை சொல்லி கூந்தலில் பூ முடித்தேன்
ஆ.. கூந்தலில் பூ முடித்தேன்
வெள்ளிக்கிழமை விடியும் வேளை வாசலில் கோலமிட்டேன்
வாசலில் கோலமிட்டேன்
வள்ளி கணவன் பேரை சொல்லி கூந்தலில் பூ முடித்தேன்

மஞ்சள் கொஞ்சிடும் மங்கள முகத்தில்
குங்குமம் விளங்கட்டுமே -கோவில்
குங்குமம் விளங்கட்டுமே
கைவளையாடலும் காலடி ஓசையும்
வருகையை முழங்கட்டுமே -பாவை
வருகையை முழங்கட்டுமே
வெள்ளிக்கிழமை விடியும் வேளை வாசலில் கோலமிட்டேன்
வாசலில் கோலமிட்டேன்

வள்ளி கணவன் பேரை சொல்லி கூந்தலில் பூ முடித்தேன்

மார்கழி திங்களை மூடிய பனித்திரை
காற்றினில் விலகட்டுமே -காலை
காற்றினில் விலகட்டுமே
வாடையில் வாடிய மேனியை மூடிய
மன்னவன் விழிக்கட்டுமே – காதல்
மன்னவன் விழிக்கட்டுமே

வெள்ளிக்கிழமை விடியும் வேளை வாசலில் கோலமிட்டேன்
வாசலில் கோலமிட்டேன்//

என்று கோலமிடும் பெண்ணின் உணர்வுகளை அழகாக வெளிப்படுத்துகிறார்.


ஆனால் இப்போது பாதிவீட்டில் காலை குளிருக்கு பயந்து இரவு போட்டு விடுகிறார்கள். தெருபக்கம்  வாசல் இருப்பவர்கள் திருடனுக்கு பயந்து சூரியன் வந்தபின் கோலம் போடுகிறார்கள்.

இந்த மார்கழி மாதத்தில், பக்தியோடு இறைவனை வணங்கியும்,இசையைக் கேட்டு மகிழ்ந்தும்,கோலங்கள் இட்டுக் கொண்டாடியும் மகிழ்வோம்.

24 கருத்துகள்:

 1. இந்த மார்கழி மாதத்தில், பக்தியோடு இறைவனை வணங்கியும்,இசையைக் கேட்டு மகிழ்ந்தும்,கோலங்கள் இட்டுக் கொண்டாடியும் மகிழ்வோம்.
  பகிர்வுக்குப் பாராட்டுக்கள்..

  பதிலளிநீக்கு
 2. மார்கழியின் சிறப்பை அழகாகச் சொல்லியிருக்கிறீர்கள். பகிர்ந்து கொண்டிருக்கும் பாடல்களும் அருமை.

  பதிலளிநீக்கு
 3. மார்கழியின் சிறப்பினை அழகாய் சொல்லிட்டீங்கம்மா...

  நல்லா இருக்கும்மா இந்தப் பகிர்வு.....

  பதிலளிநீக்கு
 4. மார்கழியின் பெருமைகளை.. சொல்லி இருக்கீங்க..

  நல்ல பதிவு. பகிர்விற்கு நன்றி.

  பதிலளிநீக்கு
 5. மார்கழி மாதத்திற்கேற்ற மகத்தான பதிவு. கோலமிட்டு, இறைவனை வணங்கி, இசையைக்கேட்டு மகிழ வேண்டிய அருமையான மாதம்.

  பகிர்வ்க்கு நன்றி. vgk

  பதிலளிநீக்கு
 6. அருமை . அருமை !!

  சுப்பு ரத்தினம்.

  பதிலளிநீக்கு
 7. காமாட்சி கோயிலில் மார்கழி பூஜை காலையில் பார்த்தது நினைவு வருகிறது..
  அந்த ஊரு குளிருக்கே நடுங்கியவள் இன்று தில்லி குளிரில் கோலமாவது ..:)
  ஜெயா டீவி மார்கழி மகோஸ்தவத்தோடு இசை வழிபாடாகிறது..:)

  பதிலளிநீக்கு
 8. //குளிர்ந்த நீரில் குளித்தால் குளிர் போய் விடும் ஆனால் வெந்நீரில் குளித்தால் குளிர் தெரியும். //

  ஆமாம்க்கா. தாமிரவருணியில் குளிக்குங்காலத்தில், விடியற்காலை குளிருக்குப் பயந்து நடுங்கிக் கொண்டே ஓரமாய் நின்றது நினைவுக்கு வருகிறது. பின் யாராவது (விளையாட்டாய்) தண்ணீரில் தள்ளிவிட, பிறகு வெளியே வர மனமின்றி ஆட்டம் போட்டதும்...

  வீட்டிலும் தரையில் படுக்கும்போது குளிரும் என்பதால், பாய்க்குக் கீழே அரிசிச்சாக்குகள் விரித்துப் படுப்போம்.

  இப்போது, ரூம் ஹீட்டரென்ன, பாத்ரூம் ஹீட்டரென்ன, கம்பளிப் போர்வையென்ன..

  பதிலளிநீக்கு
 9. வாங்க இராஜராஜேஸ்வரி, முதலில் வந்து பாராட்டு தெரிவித்தற்கு.

  பதிலளிநீக்கு
 10. வாங்க ராமலக்ஷ்மி, பாடல்களை ரசித்ததற்கு நன்றி.

  பதிலளிநீக்கு
 11. வாங்க மாதவன், மார்கழி பதிவு உங்களை அழைத்து வந்து விட்டது.
  நன்றி.

  பதிலளிநீக்கு
 12. வாங்க கோபாலகிருஷ்ணன் சார்,
  நீங்கள் சொன்னமாதிரி அருமையான மாதம் தான் மார்கழி மாதம்.

  பதிலளிநீக்கு
 13. வாங்க சூரி சார்,
  உங்கள் வரவுக்கும், கருத்துக்கும் நன்றி.

  பதிலளிநீக்கு
 14. முத்துலட்சுமி, இசை வழிபாடு செய்வது மகிழ்ச்சி.

  பதிலளிநீக்கு
 15. ஆமாம்க்கா. தாமிரவருணியில் குளிக்குங்காலத்தில், விடியற்காலை குளிருக்குப் பயந்து நடுங்கிக் கொண்டே ஓரமாய் நின்றது நினைவுக்கு வருகிறது. பின் யாராவது (விளையாட்டாய்) தண்ணீரில் தள்ளிவிட, பிறகு வெளியே வர மனமின்றி ஆட்டம் போட்டதும்... //

  ஆம் ஹீஸைனம்மா,தண்ணீரில் இறங்கும் வரைதான் பயம், இறங்கிவிட்டால் மனம் வராது கரை ஏற.

  கயிலை சென்ற போது மானசரோவரிலில் குளிக்கும் போது அப்படித்தான் இருந்தது. மூன்று தடவை மூழ்கி எழுந்தவுடன் குளிர் இருந்த இடம் தெரியாமல் போய் விட்டது.

  பதிலளிநீக்கு
 16. மார்கழியின் சிறப்பைச் சொல்லும் அழகான பதிவும்மா.

  காலையில் தொலைக்காட்சியில் வரும் ஆன்மீக நிகழ்ச்சிகளோடு தான் அன்றைய நாளை துவக்குகிறோம்.

  பதிலளிநீக்கு
 17. ஆதி, காலை நல்ல நிகழ்ச்சிகளை பார்ப்பது மகிழ்ச்சி.

  பதிலளிநீக்கு
 18. தலைவாசல் கோலமாய் பதிவின் தொடக்கத்திலேயே பளபளக்கும் கோலம் மேலும் படிக்க மங்களகரமாய் உள்ளிழுத்தது. இசை நோய்க்கான மருந்தாகவும் செயல்படுகிறது என்பதைப் படித்த பொழுது சமீப காலங்களில் அது பற்றி நான் படித்துக் கொண்டிருக்கும் பல செய்திகள் நினைவுக்கு வந்தன.

  சிவானந்த விஜயலெஷ்மி அம்மை யாரின் பக்திச் சொற்பொழிவு களைக் கேட்டிருக்கிறேன். நீங்கள் குறிப்பிட்டிருக்கும் வரிக்களுக்கான அவர்கள் பாடும் பாடல் சட்டென்று நினைவுக்கு வரவில்லை. நண்பர்களிடம் கேட்டோ, வேறு வகைகளில் முயற்சித்தோ தங்களுக்குத் தெரியப்படுத்துகிறேன்.

  அழகாக, அற்புதமாக எழுதியிருக்கிறீர்கள். ஈடுபாட்டோடு எதையும் செய்யும் உங்கள் பதிவுகளைப் படிப்பது மனத்திற்கு உற்சாகத்தைக் கொடுக்கிறது. மிக்க நன்றி, கோமதிம்மா.

  பதிலளிநீக்கு
 19. வாங்க ஜீவி சார், விரிவான பின்னூட்டம் மனதுக்கு உற்சாகத்தைக் கொடுக்கிறது.

  //சிவானந்த விஜயலெஷ்மி அம்மை யாரின் பக்திச் சொற்பொழிவு களைக் கேட்டிருக்கிறேன். நீங்கள் குறிப்பிட்டிருக்கும் வரிக்களுக்கான அவர்கள் பாடும் பாடல் சட்டென்று நினைவுக்கு வரவில்லை. நண்பர்களிடம் கேட்டோ, வேறு வகைகளில் முயற்சித்தோ தங்களுக்குத் தெரியப்படுத்துகிறேன்.//

  நீங்கள் சொன்ன விதமே எனக்கு பாட்டு கிடைத்து விட்ட நிறைவை தருகிறது.

  உங்கள் வாழ்த்து எனக்கு நன்றாக எழுத வேண்டும் என்ற எண்ணத்தை கொடுக்கிறதுசார்.

  பதிலளிநீக்கு
 20. மார்கழியின் சிறப்பு, கோலங்கள், இறைவழிபாடு என மனதுக்கு இனிய மாதம் பற்றி சிறப்பாக கூறிவிட்டீர்கள்.

  பதிலளிநீக்கு
 21. அருமையான பதிவு கோலங்களால் மனதில் கொலமிடுகிரீர்கள் பதிவு அருமை

  பதிலளிநீக்கு
 22. மார்கழி மாதம் பஜனையில் நான் செல்வதால் மார்கழி மாத பஜனை பாடல் ஒன்று.மார்கழி திங்கள் மதிநிறைந்த நன்னாளில் நீராட போதுவீர்.....என்ற பாடல் இணையத்தில் உள்ளது. அது இனிமையானது

  பதிலளிநீக்கு
 23. வணக்கம்
  அம்மா
  மார்கழி மாதத்தின் சிறப்பும். பாடல்களும் பதிவுக்கு ஒரு மகுடம்...வாழ்த்துக்கள் அம்மா.

  -நன்றி-
  -அன்புடன்-
  -ரூபன்-

  பதிலளிநீக்கு