மலைக்கோவில் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
மலைக்கோவில் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

திங்கள், 10 ஜூலை, 2017

திடியன் மலை

திடியன் மலை
திடியன் மலை மதுரையிலிருந்து  தேனீ பாதையில் 31 கி,மீ தொலைவில் உள்ளது.

                  
                
                           விழாவிற்கு சமைத்துக் கொண்டு இருப்பவர்கள் 

போன ஞாயிறு (02/07/2017) திடியன்  என்ற ஊருக்குப் போனோம்.
 (காலை 6 மணிக்கு கிளம்பினோம்).  அங்குள்ள  ஸ்ரீ கைலாசநாதர் கோவிலில்  உள்ள  தட்சிணாமூர்த்தியைப்பற்றி இணையத்தில் படித்து அவரைப் பார்க்கப் போனோம். தட்சிணாமூர்த்தி 14 சித்தர்களுடன் நந்தியின் மேல் அமர்ந்து இருப்பார், மிகவும் சிறப்பு வாய்ந்த கோவில் என்று படித்தோம். நாங்கள் போன போது கோவில் நடை திறக்கவில்லை. பக்கத்தில்  இருந்த சமுதாயக்கூடத்தில்  ஏதோ விழாவிற்குச்  சமைத்துக் கொண்டு இருந்தவர்கள் குருக்கள் 7மணிக்கு வந்து விடுவார், 10 மணி வரை இருப்பார், அதற்குள் மேலே போய் வந்து விடுங்கள் என்றார், மேலே உள்ள மலைக் கோவிலைக் குறிப்பிடுகிறார் போக முடியுமா? என்ற கேள்வியை அங்கிருந்த பெரியவரிடம் கேட்டோம்.  அவர் போகலாம், படிகள் இருக்கு , பிடித்துக் கொண்டு ஏறக் கம்பி இருக்கு போய் வாங்க பயமில்லை மேலே போலீஸ் இருக்கிறார் என்றார்.

பெரியவர் சொன்னால் பெருமாள் சொன்னது போல என்பார்கள். மேலேயும் பெருமாள் தான் இருக்கிறார், போய் வந்து விடுவோம் என்று கிளம்பினோம். அன்று நவமி வேறு . மலையின் பேரும் ராமர் மலை என்கிறார்கள். ராமருக்கு நவமி விஷேசம் இல்லையா?
அவர் அழைக்கிறார் போய் வருவோம் என்று  கிளம்பினோம்.

 அவன் இன்றி அணுவும் அசையாது, எல்லாம் அவன் விருப்பம்,  நடப்பது எல்லாம் நாராயணன் செயல் என்பதை உணர்ந்த கணம். கைலாசநாதரைப் பார்க்க வந்தோம், அவர் முதலில் பெருமாளைப் பார்த்து வா என்கிறார்.

"மலைகள் என்னை அழைக்கின்றன நான் போயே ஆக வேண்டும்"    ஜான்முய்ர் சொன்னது போல் நான் மலைக்கோவில் போக வேண்டும் என்று நினைக்கவில்லை   ஆனால் மலையில்  உள்ள மலையப்பர்   அழைத்து விட்டாரே ! 

//மலைகளின் அழைப்பு
"மலைகள் என்னை அழைக்கின்றன. நான் போயே ஆக வேண்டும்." என்பது ஜான் முய்ரின் மிக பிரபலமான வாசகம். மலையேற்ற ரசிகர்களின் காயத்ரி மந்திரமாக விட்டவை இவ்வரிகள்.
மலைகள் தன் உச்சிகளிலும் மடியிலும் பல ரகசியங்களை ஒளித்து வைத்திருக்கின்றன. மலைகள் மேல் கொள்ளப்படுவது பெருங்காதல். தீராக் காதல். குறிஞ்சி நிலமே எண்ணற்ற கவிஞர்களை உருவாக்கியது. சங்க காலம் தொட்டு, மலைகள் படைப்பூக்கத்தை விருத்தி செய்யும் ஒரு லாகிரியாக இருப்பது.
நமது பண்பாட்டில் மலைகளுக்கு பெரிய ஆன்மிக முகம் உண்டு. இமயத்தில் சிவன், மலையாஜல புத்ரி பர்வதராஜகுமாரியான பார்வதி, ஏழுமலைவாசி பெருமாள், குன்று தோறாடும் குமரன், உச்சிப் பிள்ளையார், சபரிமலை ஐயப்பன் என்று இறையில்லங்களாய் மலைகளே இருக்கின்றன.
மலையேற்றம் நம்மை உடைக்கின்றது. இயற்கையின் முன்னர் நாம் எத்தனை சிறியவர்கள் என்று உணர்த்துகிறது. மலையுச்சியைத் தொட்டு, சாதித்து விட்டதாய் நாம் நிமிரும் போது, தோள் மேல் பிள்ளையை ஏற்றி மகிழும் தகப்பனைப் போல் இறுமார்ந்து நிற்கிறது.//

மோகன்ஜி அவர்கள் முகநூலில் அவர் போன ஆஸ்திரியப் பயணக் கட்டுரையில் மலைகளின் அழைப்பை குறிப்பிட்டு இருந்தார். 
பதிவுக்கு பொருத்தமாய் உள்ளதால்  இங்கு பகிர்ந்து இருக்கிறேன்..

மலைக்கு  சீக்கீரம் போய் திரும்ப வேண்டும் என்று கிளம்பிய வேகம் சுற்றுப்புறம் கவனத்தில் இல்லை, மலை மேலேயே கவனம்  முழுவதும்.  கைலாசநாதரைத்  தாண்டி வந்தால் வல்லப கணபதி, அதற்கு அடுத்து  தாமரை குளம் - காய்ந்து கிடக்கிறது, வேண்டுதலுக்குக் கலர் மீன்களை இந்த தாமரைக் குளத்தில் விடலாம், நேர்த்திகடனாய் என்று  அறிவிப்புப் பலகை இருக்கிறது அதை வந்து  போட்டோ எடுத்துக் கொள்ளலாம், என்று அதை எல்லாம் நின்று கவனிக்காமல்  எங்கள்  பயணம் தொடர்கிறது.

இந்த  அலங்கார தோரண வாயிலைக் கடந்து போனால் ஆலமரத்தடியில் விநாயகர்  இருக்கிறார். அவரையும் கடந்து போகிறோம்.

அடுத்து, பிள்ளையார் ,மூஞ்சூரு,  கல் விளக்குத் தூண் இருக்கிறது அவரையும் ஒரு நிமிடம் நின்று கும்பிடவில்லை  மலைப் பாதை கண்ணில் தெரிகிறதா? என்று மட்டும் கவனம்

. மலையடிவாரத்தில் ஸ்ரீதேவி, பூதேவியுடன்  பெருமாள் இருக்கிறார்

மடப்பள்ளி
கோவிலுக்கு போகப் படிகள்
கோவில் உள் வாசல்
மூலஸ்தானம்

குழலூதும் கண்ணன் இரு பக்கமும் நாகர்கள்.

விஷ்ணு அமர்ந்த நிலையில்,ராமானுஜர், நம்மாழ்வார் என்று நினைக்கிறேன். சொல்ல பட்டர் இல்லை.கதவு திறந்து இருந்தது. எல்லா தெய்வ விக்கிரங்களுக்கும் தைலக்காப்பு செய்து இருந்தார், தண்ணீர் எடுக்கச் சென்று இருந்தார் போலும்.
கருடாழ்வார்

 மலையில் உள்ள பெருமாளைத் தரிசனம் செய்து வந்தபின் தான் பார்த்தோம். இவர்களை, விநாயகரை பார்க்காமல் மேலே போய் வந்ததற்கு அவர் விளையாடிய விளையாட்டை அடுத்த பதிவில் சொல்கிறேன்.

நீங்கள் மலைக் கோவில் போகும் முன் விநாயகரை வணங்கி, மலையடிவாரத்தில் உள்ள பெருமாளை வணங்கி பின் மேலே போய் வாருங்கள் அதற்குதான் முதலில் அவர்கள் படத்தையும், செய்தியையும் பகிர்ந்து இருக்கிறேன்.

                        
பெருமாளே !  என்று  வணங்கி மலை மேல் சிமெண்ட்டால் கட்டப்பட்டு இருந்த படிகளில்  ஏற ஆரம்பித்தோம். படி நன்றாக இருக்கிறது இல்ல என்று பேசிக் கொண்டே .
  
ஒரு பையன் மலையேறும் பயிற்சியில் இருப்பவர் போலும் கீழ்ப் படியில் அலைபேசியை வைத்து விட்டுப் படிகளில் ஓடி ஏறிக்  கொண்டும்  இறங்கிக் கொண்டும் இருந்தார் 

ஓ! எளிதாக இருக்கும் போல இருக்கே ! என்று எண்ணிய எண்ணம்  சரியா?
அடுத்த பதிவில்.

என் கணவர் வரைந்த அனிமேஷன்  கார்ட்டூன் படம்.



வாழ்க வளமுடன்.