ஆன்மிகப்பயணம் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
ஆன்மிகப்பயணம் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

புதன், 6 ஏப்ரல், 2016

ஆலம்பூர் நவப்பிரும்மா கோயில்கள்

ஸ்ரீசைலம் போய்விட்டுத் திரும்பி கர்நூல் வரும் முன்  ஆலம்பூர்  என்ற ஊரில் உள்ள நவப்பிரம்மா கோவில் பார்த்தோம். மிக அழகான  கோவில்.
தொல்லியல் துறையின் பொறுப்பில் இருக்கிறது. சேதம்  அடைந்து இருக்கிறது பல சிற்பங்கள்,  இருந்தாலும் மிச்சம் இருக்கும் சிற்பங்கள் பல அழகிய கலைவேலைப்பாடு நிறைந்தவை. பார்க்கப் பார்க்கப் பரவசம் தரும் அழகு.




 


இங்கு ஜோகுலாம்பாள் திருக்கோயில் உள்ளது. சக்தி பீடங்களில் இதுவும் ஒன்று

 2002 ல் புதுப்பிக்கப்பட்டு இருக்கிறது. ஜோகுலாம்பாள் அம்மன் மிக அழகாய் அலங்காரமாகக்  காட்சி தந்தார்கள். பார்த்துக் கொண்டே இருக்கலாம் போல அவ்வளவு அழகு. அப்போது அங்கு இருந்த தெலுங்கு பேசும் குடும்பத்தினர் குனிந்து மண்டியிட்டு அமர்ந்து  அம்மனைப் பார்த்துக் கொண்டு பேசிக் கொண்டு இருந்தார்கள் .அவர்கள் பேசியது கொஞ்சம் புரிந்தது , அம்மனின் மூக்குத்தி ஜொலிப்பது கீழே மண்டியிட்டு அமர்ந்து பார்த்தால்தான் தெரிகிறது  என்று எங்களைப் பார்த்து மீண்டும் தெலுங்கில் சொன்னார்கள்.  நாங்களும் பார்த்தோம் . மிக அழகாய் மூக்குத்தி ஜொலித்தது.

கோவிலைச் சுற்றி அகழி மாதிரி இருந்தது. குழாய்கள் இருந்தது. விழாக் காலங்களில் நீரூற்றுகள் இயங்கும் போலும்.  அம்மனுக்கு குங்குமார்ச்சனை நடக்கிறது தினமும்.  அழகிய நந்தவனம் இருக்கிறது.  முன்பக்கக் கோபுரம்  ஐந்து நிலைகளுடன் அழகாய் இருக்கிறது.  

கொடிமரமும் பின் புறம் அம்மன் கோபுரமும்

கோவிலைச்சுற்றி அகழி
                        
தூண்களில் அழகிய சிற்பங்கள்
அழகிய நந்தி மண்டபம்
                                              சிதிலமடைந்த நந்தி, கோபுரங்கள்.
அடியும், முடியும் காண ,பிரம்மாவும், விஷ்ணுவும் போகும் கதை சித்தரிக்கப்பட்டு இருக்கிறது..

                                                    நுணுக்கமான கலைவேலைப்பாடு
வாழைமரமும்  குரங்கும், இரு தோழிகள்.






                 
             

                      
                                                               திரிபுரசம்ஹாரம்

அகோர வடிவம்

தாருகாவனத்து முனிவர்களின் ஆணவத்தை  அழிக்க எடுத்த தோற்றம்.

இப்படி பல புராணக்கதைகளை கொண்ட அழகிய சிலைகள் அமைந்த கோவில். கோவில் நகரம் என்று அழைக்கப்படும் ஆலம்பூர் நவப்பிரம்மா கோவில்.

பறவைகள் தண்ணீர் குடிக்க, குளிக்க  வைத்து இருக்கும்  கல் தொட்டி போல் உள்ளது.

 இந்தக் கோவிலின் அழகிய வேலைப்பாடு அமைந்த ஜன்னல்கள், கோவிலுக்குள்  குடியிருக்கும் சிவலிங்கங்களின் காட்சி.  மற்றும் கோவில் வளாகத்தில் அமைந்து இருக்கும்  தர்க்கா ஆகியவை பற்றி  அடுத்த பதிவில்   பார்க்கலாம்.
                                                       வாழ்க வளமுடன்.
                                                          -----------------------

சனி, 18 ஆகஸ்ட், 2012

திருக்கேதாரத் தலப்பயணம்-பகுதி-5




                                    பகுதி-5

                                  கங்கோத்ரி
13.05.2012
இன்று காலை 4.20 மணிக்குப் புறப்பட்டோம். முக்கிய லக்கேஜ்களை உத்தரகாசி அறையிலே வைத்துவிட்டு குறைவான பொருட்களுடன் சென்றோம். பேருந்து செல்லும் வழியில் மலைக்காட்சிகள் அருமை. அச்சம் தருவதும் கூட . 
கங்கைப்பள்ளத்தாக்கு


இயற்கை அழகு
சூரியோதயம்
யமுனோத்திரிக்கு சொல்லப்பட்டது போலவே மே, ஜுன், செப்டம்பர். அக்டோபர் மாதங்கள் கங்கோத்ரி செல்ல உகந்ததாம். அக்ஷ்ய திரிதியை முதல் தீபாவளி வரை கோயில் திறந்திருக்கும்

பேருந்து கங்கோத்ரி வரை செல்லுகிறது. கோயில் வருவதற்கு   முன்பாக ஒரு கி. மீ தூரத்திலேயே பேருந்தை நிறுத்திவிடுகிறார்கள். அங்கிருந்து நடக்கவேண்டும். நடக்க  முடியாதவர்கள், மிக வயதானவர்கள் மட்டும்  டோலியில் செல்லலாம். பால்கியும் இருக்கிறது.(ஒருவரை கூடையில் முதுகில் தூக்குவது).  யமுனோத்திரியில் நிறைய டோலி. குதிரைகள் இருக்கும் இங்கு அப்படி  இல்லை.

கங்கோத்ரி நுழைவாயில்
கங்கோத்ரியில் நிறைய கடைகளும் ,உணவு விடுதிகளும் உள்ளன. தென்னிந்திய உணவுகள் கிடைக்கின்றன. தமிழில் நம்மை அழைக்கிறார்கள்.

கங்காதேவி கோயில்
கியூவரிசை


விமானம்
கோயிலில் நிறைய கூட்டம். பக்தர்கள் வரிசையில் நிற்க வேண்டும். ஒரு மணி நேரத்திற்குள் கோயிலுக்குள் சென்று விட்டோம். உள்ளே  ஒரு சில விநாடிகளே நின்று தரிசிக்க அனுமதிக்கிறார்கள். வெளியே இழுத்து விட்டுவிடுகிறார்கள்.  திருப்பதி தேவலாம் என்றாகிவிட்டது. கங்கையம்மன் உருவச்சிலை பெரியதாக அழகாக உள்ளது. இரண்டு நொடிகளில் தரிசித்துக்கொள்ள வேண்டும். நம் நெற்றியில் குங்கும பொட்டை வைத்து, போங்க  என்கிறார்கள்.  பிரகாரத்தின்  சுவர்களில் ஸ்டிக்கர் பொட்டுக்களை ஒட்டி வைத்து இருக்கிறார்கள்.

500 ரூபாய் கொடுத்து விசேஷபூசை டிக்கட் வாங்கினால் கியூவில் நிற்காமல் உள்ளே போகலாம் என்று சிலர் கூறினார்கள். அது பற்றி விசாரிக்கவில்லை. 

பாராமிலிட்டரிக்காரர்கள் மற்றும் வாலண்டியர்கள் நிறைய பேர் ஒழுங்கு படுத்தியவண்ணம் இருக்கிறார்கள்.

கோயிலுக்கு முன்னால் கங்கை பூலோகத்திற்கு இறங்கி வரும் புராணக்கதையைக் கூறும் பெரிய சிற்பங்கள் உள்ளன. சிவபெருமான் கங்கையைத் தலையில் தாங்கும் காட்சி தத்ரூபமாகக் காணப்படுகிறது.



யாகசாலை
கோயிலுக்கு வடக்கே கௌமுக் என்ற தலத்திற்குச் செல்லும் பாதை அமைந்துள்ளது. கெளமுக் செல்ல அரசாங்கத்திடம் முன் அனுமதி பெற வேண்டுமாம்.
ஸ்நானக் கட்டம் செல்லும் வழி


கங்கையாறு

கங்கையில் நிறைய பேர் நீராடுகின்றார்கள். கங்கை உற்பத்தி ஆகும் இடம் இன்னும் மேலே இருக்கவேண்டும்.


கங்கை உற்பத்தியாகும் மலைத்தொடர்கள்
ஹரித்துவாரில் இருப்பதைவிட இங்கு கங்கைநீர் ஜில் என்று இருககிறது. இன்னும் சிலநாட்கள் பயணம் செய்து எங்களின் சமயக்குறிக்கோளான திருக்கேதாரம், பத்ரிநாத் பயணம் நல்லபடியாக முடியவேண்டுமே. அதனால் நாங்கள் நீராடாமல் தண்ணீரைத் தலையில் தெளித்துக் கொண்டோம். கங்கா மாதாவிற்கு என்று  சட்டைதுணி, வளையல், மஞ்சள், குங்குமம் எல்லாம் தண்ணீரில் விடச்சொன்னார்கள்,
முதலில் போய் வந்தவர்கள்.  இதை எல்லாம் போட்டு  நீரை அசுத்தம் செய்யவேண்டுமா என்று நினைத்து அங்கு வைத்து வணங்கி விட்டு ஒரு அம்மா அங்கு குளித்துக் கொண்டு இருந்தவர்களிடம் கொடுத்தேன் அவர்கள் எனக்கு வேண்டாம் கங்கா மாதாவிற்கு கொடு என்று சொல்லி அதை கங்கை ஆற்றில் விட்டு விட்டார்கள்.

கோயிலின் உள்ளே சிவன் சந்நிதி உள்ளது. கங்கையிலிருந்து பக்தர்கள் சிறிய பாத்திரங்களில் கங்கை நீரை  எடுத்துவந்து இங்கு சுவாமிக்கு அவர்களே அபிஷேகம் செய்கிறார்கள். நாங்களும் செய்தோம்.


இந்த நீரை ராமேஸ்வரத்திற்கு எடுத்து சென்று அங்கு சிவபெருமானுக்கு அபிஷேகம் செய்வார்களாம்.
பனிமலை
இயற்கைக்காட்சி


நிலச்சரிவு

அங்கு கடைகளில் எல்லோருக்கும் கொடுக்க, படங்கள் வாங்கினோம்.
நாற்படைவீடு யாத்திரை என்று தமிழில் சிடி விற்கிறார்கள்.
உத்திரகண்ட் மாநிலத்தில் நான்கு புண்ய தாமங்கள் என்றும் சிடி விற்கிறார்கள்.
சாரோ தாம், யாத்ரீ மஹாத்மீயம் என்று சிறு புத்தகம் விற்கிறார்கள் 
நம் மக்கள் நிறையபேர் வாங்கினார்கள். தீர்த்தம் எடுத்துப் போக சிறிய கேனிலிருந்து பெரியகேன் வரை எல்லாம் கிடைக்கிறது.

பின்னர் பேருந்தில் ஏறி உத்தரகாசி திரும்பினோம். வழியில் சில இடங்களில் நிலச்சரிவுகள் ஏற்பட்டு அவை சரிசெய்யப்பட்டிருந்தன.
காசி விசுவநாத்ர் கோயிலுக்கு மீண்டும் சென்று தரிசித்தோம்.
மறுநாள் திருக்கேதாரம் சென்றோம். அது பற்றி அடுத்த பதிவில் காணலாம்.




புதன், 15 ஆகஸ்ட், 2012

திருக்கேதாரத் தலப்பயணம்-பகுதி --2



                    திருக்கேதாரத் தலப்பயணம்-பகுதி-2
                                    யமுனோத்ரி
                    (சார்தம் யாத்திரையில் முதல் தலம் )         

10.05.12 அன்று காலை 6 மணிக்கு ஹரித்துவாரிலிருந்து சிறு பேருந்தில் புறப்பட்டோம். முதலில் டேராடூனில் இருந்து 10.கி.மீ தொலைவில் உள்ள ஸ்ரீ ப்ரகாஷேஷ்வர் மஹாதேவ் மந்திர் என்ற கோயிலுக்குச் சென்றோம்.




இந்தக்கோயிலில் இரண்டு பெரிய ஸ்படிகம் மாதிரி லிங்கமும்,  கருங்கல் ஆவுடையாரும் வடிவமைக்கப்பட்டு இருந்தது. அழகாய் அலங்காரம் செய்து வைத்து இருந்தார்கள். பக்கத்தில் அரசமரத்தை சுற்றி சின்ன சிவலிங்கம், நந்தி இன்னும் சிலதெய்வங்கள் இருந்தன. அதற்கு நாம்  அங்கு வாளியில் சிறு செப்பு செம்புகள் இருக்கும் அதில் நீர் எடுத்து நாமே அபிஷேகம் செய்யலாம். 

அங்கு கோயிலுக்கு உள்ளேயே நிறைய கடைகளும் இருக்கின்றன.. எங்கள் வழிகாட்டி, கடைகளுக்கு போகவேண்டாம் சாமி தரிசனம் முடிந்தவுடன் பஸ்ஸுக்கு வந்துவிடுங்கள் நேரமாகிவிட்டது என்று சொன்னதால் யாரும் கடைக்குப் போகவில்லை. கடைக்காரர்கள் எங்களைக் கூவிக் கூவி அழைத்து ஏமாந்து போனார்கள்.
கோவிலை விட்டு வெளியே வரும் போது  பிரசாதம்  தருகிறார்கள். அதை எச்சரிக்கையாக சாப்பிடவேண்டும். இல்லையென்றால் அங்குள்ள குரங்குகள் அவற்றை பிடுங்கிச்சென்று விடும். 

முசோரியில் இருந்து 15 கி.மீ தொலைவில் கெம்ப்ட்டி நீர்வீழ்ச்சி உள்ளது.


கெம்ப்டி நீர்வீழ்ச்சி


கெம்பட்டி நீர்வீழ்ச்சிக்கு அருகில் கடைகள் உள்ளன. இந்நீர் வீழ்ச்சி சமீபத்தில் வந்த ஒரு தமிழ்த்திரைப்படத்தில் இடம் பெற்றுள்ளதாகச் சொன்னார்கள் . அங்கு நிறைய கடைகள் இருக்கின்றன. சாப்பாடு சாப்பிட நம்மை அழைக்கிறார்கள்

டேராடூன், முசோரி, கெம்ப்ட்டி நீர்வீழ்ச்சி, பார்கோட் முதலிய இடங்களைக் கடந்து ராணாசட்டி என்ற இடத்தை அடைந்தோம். இரவு 7 மணிக்கு அங்கு வந்து சேர்ந்தோம்.ஒரே நாளில் நீண்ட பயணம் இங்கு தான். குளிர் கொஞ்சம் இருந்தது. ஹரித்துவாரில் எல்லாம் நல்ல வெயில் இருந்தது
அன்றிரவு ராணா சட்டி என்ற இடத்தில் தங்கினோம்




               


தூரத்தில் யமுனோத்ரி மலைத்தொடர்கள்


11.05.12 வெள்ளிக்கிழமை காலை 5 மணிக்கு ராணாசட்டியிலிருநது புறப்பட்டோம். பெரும்பான்மையான உடைமைகளை ராணாசட்டி விடுதியிலேயே வைத்துவிட்டு குறைவான பொருட்களுடன், கம்பளி ஆடை முதலியவற்றுடன் புறப்பட்டோம்,







அனுமன் சட்டி அடைந்து அங்கிருந்து ஜான்கி சட்டி சென்றோம், பஸ்ஸில். முன்பெல்லாம் அனுமன்சட்டி வரை மட்டுமே பஸ் வரும். 



இப்போது ஜான்கிசட்டி வரை பஸ் வருகிறது.  அதன்பிறகு 6 கி.மீ நடந்து மலையேற வேண்டும். 

ஜான்கிசட்டியில் சின்ன பஸ்ஸ்டாண்டு உள்ளது. அங்கு சென்ற உடன் டோலிக்காரர்கள்,பால்கிக்காரர்கள், குதிரைக்காரர்கள் மொய்த்துவிடுகிறார்கள்.

நாங்கள் செல்ல டோலி ஏற்பாடு செய்தோம்.

கடினமான பாதை. குறுகலான பாதை. அதில் மூன்று குதிரையில் உள்ள ஆட்களை ஒரு குதிரைக்காரர் தான்  அழைத்துச்செல்கிறார். இவ்வாறு குதிரையில் செல்பவர்கள், ஒரு ஆள் தூக்கி போகும் பால்கியில் செல்பவர்கள், நான்கு பேர் ஒரு ஆளை தூக்கி செல்லும் டோலியில் செல்பவர்கள், இவர்கள் தவிர நடந்து போகிறவர்கள்( ஏறுகிறவர்கள், இறங்குபவர்கள்) என்று பயங்கர நெருக்கடி உண்டு.  அதனால் நாங்கள் நடக்கிற ஆசையை விட்டு விட்டோம்.. 





டோலியில் ஒரு நபருக்கு ரூ3000+வரி500, பின்னர் அவர்களுக்கு கானாபீனா செலவு(சாப்பாடு, டீ,குளிர்பானம்) இது தவிர டிப்ஸ் நூற்றுக்கணக்கில். மனிதனை மனிதன்  சுமந்து  போவது மனதுக்கு கஷ்டமாய் இருந்தது. ஆனால்  அவர்கள் இந்த சீஸனில் சம்பாதித்தால் தான் உண்டு.பனிக் காலத்தில் எந்த வேலையும் கிடையாதாம். அவர்களுக்கு பணம் கொடுக்கும் சிறு நிம்மதியுடன் டோலியில்  போனோம். 

சாப்பாடு சாப்பிடும் கடையில் நம்மை இறக்கி விட்டு அவர்கள் 
சாப்பிட்டு, சிகிரெட் குடித்து பாக்கு போட்டு சிரித்து பேசி கொஞ்சம் ஓய்வு எடுத்துக் கொண்டு மறுபடியும் நம்மை தூக்கிக் கொண்டு செல்கிறார்கள்.

டோலியில் நாங்கள் சென்ற அனுபவத்தை நீங்களும் காணுங்கள்

டோலிப்பயணம் கடினமாகவே இருந்தது. இருந்தாலும் குதிரைப்பயணத்தை விடச்சிரமம் குறைவு என்று கூறலாம். டோலியிலும் எச்சரிக்கையாகவே செல்ல வேண்டும். இல்லையென்றால் மேலேயும் பக்கத்திலேயும் உள்ள பாறைகள் தலையைப் பதம் பார்த்துவிடும். டோலியில் போகும் போது இயற்கை காட்சிகளை ரசிக்க முடிகிறது.
டோலி தூக்கி செல்பவர்கள் செல்போனில் பாட்டுக் கேட்டுக் கொண்டு 
காலை தூக்கித் தூக்கி வைத்து நடப்பது ஒரு தாள லயத்தோடு இருக்கிறது. டோலியின் மீது அமர்ந்தவர்களுக்கு ராஜகளை வந்துவிடுகிறது.
டோலி தூக்குபவர்கள் ஓய்வு எடுக்கிறார்கள்
மாதாஜி வசதியாக அமர்ந்து இருக்கிறீர்களா? பயப்படாமல் உட்கார்ந்து கொள்ளுங்கள் என்று சொல்கிறார்கள்.என் கணவர் பின்னால் சற்றுத் தொலைவில் வேறொரு டோலியில் வந்தார்கள்.அதனால் நான் ,’சார் வரும் வரை மெதுவாக போங்கள்’ என்று அவர்களிடம் சொல்வேன். பார்த்து பத்திரமாய் அழைத்துச் சென்றார்கள்.
காலை நேரத்தில் போக்குவரத்து குறைவு..   பின்னர் டிராபிக் ஜாம்.   குதிரைகள், டோலிகள், பால்கிகள்(கூடைகள்) ஒன்றுக்கொன்று இடித்துக்கொள்கின்றன,  



ஏழரை மணிக்குப் புறப்பட்ட டோலி 9 மணிக்கு யமுனோத்திரி சென்றடைந்தது. கோயிலுக்கு முன்னதாகவே கொஞ்ச தூரத்தில் டோலி நிறுத்தப்படுகிறது. அதற்குப்பிறகு கோயிலுக்கு நடந்து செல்ல வேண்டும்.
எங்களின் யமுனோத்ரி கோயில் வழிபாட்டை அடுத்த பதிவில் காணலாம்.
                                                   (தொடரும்)
                                ----