அம்மா என்றால் அன்பு. அன்பு என்றால் அம்மா. சொல்லச் சொல்ல இனிக்கும், அம்மா என்னும் அழைப்பு. அவரவர்களின் அம்மா அவரவர்களுக்கு என்றுமே சிறப்புதான்.(உயர்த்திதான்)
மே 8 ஆம் தேதி அன்னையர் தினம் கொண்டாடப்படுகிறது.
முன்பு எல்லாம் அன்னையர் தினம் என்று கொண்டாடி அம்மாவுக்கு வாழ்த்து சொன்னது இல்லை. என் அம்மாவுக்கு இப்போது வாழ்த்து சொல்கிறேன்:-
”அம்மா! அன்னையர் தின வாழ்த்துக்கள் அம்மா!. உங்கள் அன்புக் குழந்தைகளுக்கும், ஆசைப் பேரக்குழந்தைகளுக்கும் வாழ்த்துச் சொல்லுங்க அம்மா! அவர்களை எப்போதும் ஆசீர்வாதம் செய்துகொண்டுதான் இருப்பீர்கள் என்றாலும் இப்போது உள்ள குழந்தைகள் அந்த அந்த நாள் வாழ்த்துக்களை விரும்புகிறார்களே! ”
சிறு குழந்தையாக இருக்கும்போது குழந்தையிடம் கேட்டுப்பாருங்கள். உனக்கு இதை யார் சொல்லிக் கொடுத்தா? என்றால் - அம்மா. இவ்வளவு அழகாய் யார் தலைவாரி விட்டா? என்று கேட்டால் முகத்தில் மகிழ்ச்சியும் பெருமிதமும் பொங்க ’அம்மா’ எனும் குழந்தை. யார் இந்த டிரஸ் வாங்கித் தந்தா? அழகாய் இருக்கே! என்றால் ,’அம்மா’ என்று எதைக் கேட்டாலும் ’அம்மா’ என்று குழந்தை சொல்லும். திருமணத்திற்குப் பின்னும், ’எங்க அம்மாவீட்டில்’ என்று சொல்வதை விட முடியாது. இப்படி அம்மா பெருமை பாடுவது காலம் முழுவதும் தொடரும்!
இப்போது விளம்பரங்கள் எல்லாம் அம்மாவுக்குத் தான் தெரியும் குழந்தைகளைப் பற்றி என்று சொல்கிறது.
”எந்தக் குழந்தையும் நல்ல குழந்தைதான்
மண்ணில் பிறக்கையிலே
அவன் நல்லவன் ஆவதும் தீயவன் ஆவதும்
அன்னை வளர்ப்பதிலே”
என்று அதிலும் அன்னைக்குத்தான் பெருமையும், சிறுமையும். குழந்தைகள் குற்றம் செய்தாலும் பெற்றோர்களை - குறிப்பாய் அம்மா வளர்ப்பைத் தான் குற்றம் சொல்லும் உலகம். ”மக்கள் குற்றம் பெற்றோர் தலைமேல் ”என்று. எவ்வளவு பெரிய விஷயத்தை ஒருசின்ன கருத்துப்படத்தின் மூலம் விளக்கி விட்டார்கள் விகடன் பத்திரிக்கையில்.
அந்த கருத்துப்படத்தைப் பாருங்கள் கீழே . கருத்தின் மூலம் பாடமும் சொல்லித் தருகிறது அன்றைய விகடன் :--
(கீழே பகிர்ந்த படங்கள் எல்லாம் விகடன் பவழ விழா மலரில் இருந்து எடுத்த படங்கள். 1926 - 2002)
தாய் எந்த எதிர்பார்ப்புகளுமின்றி குழந்தைகளுக்கு தரும் அன்பு என்பது பொக்கிஷத்தில் சேமித்தவை போல வாழ்நாள் முழுமைக்கும் கிடைக்கும். அள்ள அள்ளக் குறையாதபொக்கிஷம் அது!
என் தாயின் நினைவுகள் சில:--
அதிகாலையில் எழவேண்டும், கடவுளை வணங்க வேண்டும்
அந்த அந்த நேரத்தில் அந்த அந்த வேலையை முடிக்க வேண்டும். அதில் முக்கியமானது நேரத்திற்கு சாப்பிடுவது. நேரத்திற்குச் சாப்பிட்டாலே உடலுக்கு ஆரோக்கியம். வீட்டுவேலைகளும் நேரத்திற்கு நடக்கும் என்பது அவர்களின் கருத்து. நேரம் தவறி உண்பவர்களைப் பார்த்தால் இந்த வயிற்றுக்கு தானே சம்பாதிக்கிறீர்கள் வயிற்றை காயப்போடலாமா இவ்வளவு நேரம் என்று கடிந்து கொள்வார்கள்.
துணி காயப்போட்டால் காய்ந்தவுடன் மடித்து விட வேண்டும். கொடியிலிருந்து எடுத்தவுடன் மடித்தால் ஒரு அழகு, அதை அங்கே போட்டு இங்கே போட்டு மடித்தால் நன்றாக இருக்காது என்பார்கள்.
பீரோவில் அழகாய் துணிமணிகள் மடித்து இருக்க வேண்டும். இல்லையென்றால் பானையில் சுருட்டி வைத்த மாதிரி இருக்கு என்பார்கள்.
மதியம் தூங்கக் கூடாது. பொழுதை வீணாய்க் கழிக்காமல் ஏதாவது கைவேலை செய்தல், நல்ல புத்தகம் படித்தல், சுவாமி புத்தகங்கள் படித்தல் என்று செய்து கொண்டே இருக்க வேண்டும். அவர்கள் படிக்கும் தோத்திர புத்தகங்களுக்கு அட்டை போட்டு சுத்தமாக வைத்து இருப்பார்கள் கொஞ்சம் கிழிந்து விட்டால் கனமான அட்டை வைத்து தைத்து அட்டை போட்டு விடுவார்கள். எனக்கு பள்ளி நோட்டுக்கள், புத்தகங்கள் எல்லாவற்றுக்கும் அம்மா தான் அட்டை போட்டுத் தருவார்கள், நான் செய்ததே இல்லை. (என் குழந்தைகளுக்கு என் கணவர் போட்டு கொடுப்பார்,அப்புறம் அவர்களே போட்டுக் கொண்டார்கள்.)
அம்மா வித விதமாய் ஜடை பின்னுவார்கள். என் மகள் , மற்றும் அண்ணன், தங்கை தம்பி மகள்கள் எல்லாம் ஆச்சியிடம் ஆசையாக பின்னிக் கொள்வார்கள்.
கண்கண்டால் கை செய்ய வேண்டும் என்பார்கள். பின்னல் கைவேலை எல்லாம் அந்த அந்த சீஸனுக்கு எது புதுசோ அதை செய்து விடுவார்கள் அவை ஒவ்வொரு கொலுவுக்கு வந்து விடும் எனக்கு.
கொலுவில்அம்மாவின் கைவேலைப்பாடுகள் இடம்பெற்று அம்மாவின் நினைவுகளை தந்து கொண்டே இருக்கிறது.
புத்தகங்களில் தனக்குப் பிடித்தவற்றை பைண்ட் செய்தோ அல்லது கைப்பட எழுதியோ வைத்துக் கொள்வார்கள். அவற்றை அம்மாவின் பொக்கிஷ பகிர்வுகள் என்று முன்பு பகிர்ந்து இருக்கிறேன்.
ஆண்களுக்கு வேலையிலிருந்து ஓய்வு கிடைக்கும். பெண்களுக்கு ஓய்வே கிடைப்பது இல்லை (அவர்களே விருப்ப ஓய்வு பெற்றால்தான் உண்டு). அவர்கள் தன் குழந்தைகளுக்கு, தன் குழந்தைகளின் குழந்தைகளுக்கு, , மற்றும் அவர்களின் குழந்தைகளுக்கும் உழைக்கத் தயாராக இருக்கிறார்கள், அன்பு தரும் பலத்தால். அதை விகடனில் பகிர்ந்து இருப்பார்கள்.
அவற்றைக் கீழே பார்த்து மகிழுங்கள்.:---

இப்படிப் பட்ட நினைப்பும் அன்பும் அரவணைப்பும் தான் அவர்களை நீண்ட நாள் வாழ வைக்கிறது. ”அணைத்து வளர்ப்பவளும் தாய் அல்லவா! அணைப்பில் அடங்குபவளும் அவள் அல்லவா!
அன்புக்கு ஏங்கும் பெற்றோர் நிறைய இருப்பார்கள். அவர்களுக்கு உங்கள் அன்பைத் தாருங்கள், அன்பாக அணைத்து அம்மா சாப்பிட்டாயா என கேட்டுப்பாருங்கள் மகிழ்ந்து போவார்கள் வேறு ஒன்றும் அவர்கள் உங்களிடம் எதிர்பார்ப்பது இல்லை.
முன்பு நாலு நாளுக்கு ஒருமுறை நாலுவரி கடிதம் எழுது என்று கேட்டார்கள் பெற்றோர்கள். -அப்புறம் தொலைபேசி வந்தபின் - அடிக்கடி போன் செய் என்றார்கள். இன்னும் தகவல் நுட்பம் வளர்ந்தபின் இணையத்தில் இன்று என்ன சாப்பிட்டாய்?என்று நேரில் பார்த்துக் கொண்டே பேசும் வளர்ச்சி பெற்றபின் எதிர்பார்ப்புகள் அதிகம் ஆகிவிட்டது.
இப்போது அடிக்கடி ஸ்கைப்பில் வா உங்களைப் பார்க்க வேண்டும் என்று தூரத்தில் இருக்கும் பிள்ளைகளிடம் பெற்றோர் கேட்கும் காலம் ஆகிவிட்டது.
ஸ்ரீமத் சுவாமி சித்பவானந்தர் அவர்கள் எழுதிய தினசரி தியானத்திலிருந்து ஒரு சிறு பகிர்வு:-
தாயின் உள்ளம்:-
தன் குழந்தையிடத்துக் குற்றம் ஒன்றும் காணாது குணமே காணும் பாங்குடையவள் தாய். என் தாயே, உனதருளாலன்றி உய்யும் ஆறு நான் அறிகிலேன்.
கடவுளை நோக்கி நாம் ஒரு அடி சென்றால் அவர் நம்மை நோக்கிப் பத்து அடி வருகிறார்.. பெற்ற தாய் படைத்துள்ள உள்ளக் கசிவு கடவுளின்கருணையேயாம். தாயின் உள்ளத்தை அறிபவன் கடவுளின்கருணையை அறிபவன் ஆகிறான்.
எத்தன்மைக் குற்றம்
இயற்றிடினுந் தாய்பொறுக்கும்
அத்தனமை நின்னருளும்
அன்றோ பராபரமே.
===================தாயுமானவர்
அனைத்து அன்னையர்களுக்கும் அன்னையர் தின வாழ்த்துக்கள்! தாய்மை உணர்வு உடைய அனைத்து தாயுமானவர்களுக்கும் வாழ்த்துக்கள்!
அன்னையர்தினம் , அன்பின் வழி , அம்மாவின் பொக்கிஷங்கள்,
-இவை நான் முன்பு எழுதிய பதிவுகள்.
வாழ்க வளமுடன்!
-------------
