ஞாயிறு, 11 ஜனவரி, 2026

அஷ்டமி சப்பரம்

 ”மதுரை ஸ்ரீ மீனாட்சியம்மன் சகல ஜீவகோடிகளுக்கும் படியளந்தருளிய லீலை”  இன்று மதுரையில் நடக்கிறது. இந்த திருவிழாவின் பெயர் ’அஷ்டமி சப்பரம்’ .



சுவாமி, அம்மன் வருவதைக் கட்டியம்கூற வரும் காளைமாட்டுடன் முரசுஅறைபவர்.


அடுத்து ஒட்டகம் (முகத்தைத் திருப்பிக் கொண்டது


முகம் திருப்பி பற்களைக் காட்டியது 





அடுத்து ”பார்வதி” யானை



பள பள என்று மின்னும் முகபடாம்

அடுத்து, முன்னால் பிள்ளையார், முருகன் வர, பின்னால் சுவாமி, அம்மன் சப்பரம்



சுந்தேரசன், பிரியாவிடை

மீனாட்சி அம்மன் கோவிலிருந்து புறப்பட்டு வரும் வழிஎல்லாம் அரிசி இறைத்து வருகிறாள் அன்னை.  அதைப் பெற்றுக் கொண்டு நம் அரிசிப் பானையில் போட்டு வைத்துக் கொண்டால் உணவுக்குப்பஞ்சம் இல்லையாம்.





சுவாமி, அம்மன் சப்பரம் முக்கு திரும்பும் காட்சி. 
வாழைப்பழம், அன்னாசிப்பழங்களைத் தோரணமாய்க் கட்டி இருந்தது. தெருமுனை திரும்புவதை பார்ப்பது நல்லதாம்.


சிவன் அடியார்கள் வாத்தியங்களை இசைத்துக் கொண்டு  வந்தார்கள்.



மீனாட்சி அம்மன் தேர், தெருமுனை திரும்பும் காட்சி


திருவிழா என்றால் குழந்தைகளுக்குப் பலூன் இல்லையென்றால் எப்படி?


சவ்மிட்டாய்க்காரர் வழியில் வைத்துவிட்டுப் பிரசாதம் வாங்கப் போய் விட்டார். 
வழியெல்லாம் புளியோதரை, பொங்கல் பிரசாதங்கள் வழங்கிக் கொண்டு இருந்தார்கள்



எல்லோர் வீட்டு வாசலிலும் தேர்க் கோலங்கள்






இன்று வீடுகளில் கத்திரிக்காய், நெல்லிக்காய், பச்சை மொச்சை சேர்த்துக் கொள்ளவேண்டுமாம் சமையலில்.

இவ்வளவுதான் எனக்கு விவரம் தெரியும். மேலும் விவரங்கள் தெரிந்தவர்கள் சொல்லலாம்.  என்று கேட்டதற்கு  கீதா சாம்பசிவம் சொன்ன பதில் கீழே வரும் பதிவில் இருக்கிறது.


அஷ்டமி சப்பரத்திருவிழா   2019 ல் போட்ட பதிவில் கத்திரிக்காய் சமைக்கும் காரணத்திற்கு உள்ள கதை திருமதி கீதா சாம்பசிவம் அவர்கள் சொல்லி இருப்பார்கள் பின்னூட்டத்தில் படித்துப்பாருங்கள். மேலும் பல படங்கள் இருக்கிறது. நேரம் கிடைக்கும் போது  பாருங்கள்.

படியளக்கும் பரமசிவத்திடம் அன்னை  பார்வதி ஒரு நாள்  மரசெப்புக்குள் ஒரு எறும்பை அடைத்து வைத்து விட்டு எல்லோருக்கும் படியளந்து விட்டீர்களா?

"நான் செப்புக்குள் வைத்து இருக்கும் எறும்புக்கு அளித்தீர்களா என்று கேட்கிறார் " 

"பரமசிவம் புன்னகையோடு  செப்பை திறந்து பார்" என்கிறார்  பார்வதி செப்பை திறந்து பார்க்கிறார்   எறும்பின் வாயில் சிறு அரிசி  இருக்கிறது.

அதைக்குறிக்கும் வகையில் தான் இந்த திருவிழாஎன்பார்கள். ஆனால் நம்மிடம் சில கேள்விகள் ஏற்படும் எல்லோருக்கும் உணவு கிடைத்து விடுகிறதா என்று. அதற்கு பதில்  எல்லோருக்கும் தெரியும் இருந்தாலும் நான் படித்த பகிர்வை படித்து பாருங்களேன்.


 நான் சிறு வயதில் சாப்பாடு வேண்டாம் என்று கோபித்து கொண்டால் சாமதானம் செய்து பார்ப்பார்கள் அம்மா அப்படி கெஞ்சியும் வேண்டாம் என்றால் "சரி உனக்கு இன்று படியளக்க வில்லை" என்று சொல்வார்கள்.





கேள்வி - கல்லுக்குள் தேரைக்கும், எறும்புக்கும் கூட இறைவன் படியளக்கிறார் என்கிறார்கள். உங்களுக்கு உணவாக வரும் தானியத்தில் உங்கள் பெயர் இருக்கிறதென்றும் சொல்கிறார்கள். பிறகு ஏன் உலகின் பல இடங்களில் நிறைய பேர் பட்டினியால் செத்து மடிகிறார்கள்? அவர்களுக்கெல்லாம் தானியத்தில் பெயர் எழுதாமல் இறைவன் தூங்கி விட்டாரா?

இராம் மனோகர் - ஒரு உயிரினம் தோன்றும் முன்பே அதற்குத் தேவையான அனைத்து வசதிகளும் பூமியில் தோன்றி விடுகின்றன. அப்படித்தான் பூமியின் வரலாறு சொல்கிறது. எந்த ஒரு உயிரினமாக இருந்தாலும் அதனதன் தேவைகளை தனக்குத் தானே பூர்த்தி செய்து கொள்ளக் கூடிய அறிவும், உடலமைப்பும், சூழலும் இயற்கையாகவே அமைந்திருக்கின்றது. அதுதான் இறைவனின் கொடை. இயற்கை வேறு இறைவன் வேறு அல்ல. மற்ற பிற உயிரினங்கள் எதுவும் இயற்கையோடு முரண்படுவதில்லை.

ஆனால், மனிதன் மட்டுமே இயற்கையின் விதிகளை மாற்றியமைக்கவும், அதை வெல்லவும் நினைக்கிறான். அதன் விளைவாகத்தான் இயற்கை சீற்றங்கள், கொடிய நோய்கள், பஞ்சம் போன்ற துன்பங்கள் ஏற்படுகின்றன. ''உனக்கு வரும் தானியத்தில் உன் பெயர் இருக்கிறது'' என்றால் என்ன அர்த்தம் ? ஏற்கனவே உனக்கு என்னென்ன தேவை என்று தீர்மானிக்கப்பட்டு விட்டது என்றுதானே அர்த்தமாகிறது ? அதுதான் உண்மை. மனதினால் நாம் விரும்புகிற அனைத்தையும் அடையும் விதமாகவே நம் பிறப்புகள் அமைகின்றன.
அதனால்தான் நல்லவற்றை விரும்பு அல்லது எதையும் விரும்பாமல்
பற்றற்றவனாக இரு என்கிறார்கள்.

பரிணாம வளர்ச்சி என்பதே உயிர் கொள்ளும் இச்சையின் வெளிப்பாடுதான். மனிதன் இயற்கையை வெல்ல நினைத்து, அதனோடு முரண்படும் பொழுதுதான் பிரச்சனை ஏற்படுகின்றது. உலகத்தில் எங்கோ ஒரு இடத்தில் அது கோரத்தாண்டவம் ஆடி விட்டுப் போய் விடுகிறது.

அவனவன் தன் செயல்களின் விளைவுகளை நுகர்வது என்பது தனிமனிதப் பிரச்சனை. அது வேறு, இது வேறு. இது இயற்கைக்கும், ஒட்டு மொத்த மனித சமுதாயத்திற்குமான பிரச்சனை. இந்த நிலையில் தவறு செய்தவர்கள் எங்கோ இருப்பார்கள். பாதிக்கப்படுபவர்கள் எங்கோ இருப்பார்கள். பலவீனமான இடத்தில் அது தன் வேலையை கச்சிதமாக முடித்து விட்டுப் போய்க் கொண்டேயிருக்கும். கேள்வியெல்லாம் கேட்க முடியாது. இதை இன்று உலக நாடுகள் அனைத்துத் உணர்ந்திருக்கின்றன. எனவேதான் அணு ஆயுதங்களை பயன்படுத்தாதே, சுற்றுச் சூழலை மாசுபடுத்தாதே என்றெல்லாம் ஒன்று சேர்ந்து கூக்குரலிடுகிறார்கள். ஆயினும் அறியாமையும், பேராசையும், பொறாமையும், குரோதமும் கொண்ட தலைமையை உடைய நாடுகள் இதற்கு செவி சாய்ப்பதில்லை. விளைவு ஆங்காங்கே கொடூரமாக அரங்கேறிக் கொண்டிருக்கிறது.

இனி கல்லுக்குள் தேரை என்பது வட்டார மொழி வழக்கு ஆகும். கல்லிடைத் தேரை என்பதுதான் சரியான சொற்றொடராகும். தேரை என்பது தவளை இனத்தைச் சேர்ந்த ஒரு குளிர் இரத்தப் பிராணி. இனப் பொருக்கம் செய்யும் மழைக் காலத்தில் வெளிப்படும். மற்ற காலங்களில் ஈரப்பதமுள்ள பூமிக்கடியில், பாறை இடுக்குகளில் போய் ஒடுங்கிக் கொள்ளும். அப்பொழுது அதற்குத் தேவையான குறைந்த அளவு சுவாசம் அதன் தோல் மூலம் நடைபெறும். ஆறு மாதம் எட்டு மாதம் கூட அவை இப்படி ஒடுங்கி ஒரு வித உறக்க நிலையில் வாழும் திறன் பெற்றது. அதன் தசைகள் மற்றும், கல்லீரலில் சேமித்து வைத்துள்ள ''க்ளைக்கோஜன்'' என்ற
உணவுப் பொருளே அந்நிலையில் அதற்குப் போதுமானதாக இருக்கிறது. பாறை இடுக்குகளில், பொந்துகளில் போய் தேரைகள் இப்படி இருக்கும் காலங்களில் இயற்கை செயல்களினால் சில பாறைகளில் அது நுழைந்த வழி மூடப்படு விடும். அந்த பாறையை நாம் உடைக்கும் பொழுது அது குதித்து ஓடும். அதனால்தான் சிலை செய்ய கல் எடுப்பவர்கள் பாறையை தட்டிப் பார்ப்பார்கள். அனுபவம் உள்ளவர்கள் அந்த பாறையுள் தேரை இருந்தால் அதைக் கண்டுபிடித்து விடுவார்கள்.
அப்படிப்பட்ட ஒரு உடலமைப்பை இயற்கையாகவே அதற்கு வடிவமைத்து வைத்தவன் இறைவன் என்பதே கோட்பாடு. இதே போன்ற ஒரு நிலையை மாம்பழ சீசனில் காணலாம். மாம்பழத்தின் கொட்டைக்குள் வண்டு இருக்கும். பழத்தில் துளையேதும் இல்லாத நிலையில் வண்டு எப்படி உள்ளே நுழைந்தது ? எப்பொழுது நுழைந்தது ? எத்தனை நாள் இருந்தது ? அதற்கு உணவு எப்படிக் கிடைத்தது ? அதாவது வண்டுகள் தேனை உண்பதற்காக பூக்களைத் தேடி செல்கின்றன. அப்பொழுது அவை மது மயக்கத்தால் பூக்களின் சூல் பைக்குள் முட்டைகளை இடுகின்றன. பொதுவாக இவை மலர்களிலும், இலைகளிலும், தாங்களே உருவாக்கிய கூடுகளில் முட்டையிடும். ஆனால், இது மது மயக்கத்தால் எப்பொழுதாவது நிகழ்ந்து விடும். நல்ல பருவத்தில் இருக்கும் பூக்களின் கருப்பையை துளைத்து வண்டு தன் நுண்ணிய முட்டையை இடும். கருப்பை மகரந்த சம்மந்தப்பட்டு பிஞ்சாகும் பொழுது துளை முற்றிலுமாக அடைபட்டு விடும்.
முட்டைகள் காயின் நடுப்பக்கத்தில் உள்ள கொட்டையில் இருந்து பக்குவமடைந்து வரும். பூ காயாகி, காய் கனியாகும் காலமும், முட்டை பக்குவமடைந்து பொரித்து வண்டாகி வெளி வரும் காலமும் ஒன்றாக இருப்பதால், நாம் பழுத்த பழத்தின் கொட்டைகளில் வண்டை பார்க்கிறோம். சில வண்டுகள் பழத்தை குடைந்து கொண்டு, வெளியேறி விடுவதும் உண்டு. அது சரி, வண்டு எப்படி உயிரோடு இருந்தது ? கல்லிடைத் தேரைக்கும், கருப்பை உயிர்க்கும் நல்லுணவே தந்து போற்றும் நம் நாதன்தான்
அற்புதமாய் அதையும் காக்கிறான். மாம்பழமாய் இருந்தாலும் சரி, வேறு
எந்த தசையாக இருந்தாலும் சரி, உருப் பெருக்கியின்
மூலம் பார்த்தால் அவற்றில் நுண்ணிய பல துளைகள் இருப்பதைக்
காணலாம். முட்டையின் ஓட்டிலும், உள்ளிருக்கும் சவ்விலும் கூட எண்ண முடியாத அளவுக்குத் துளைகள் உள்ளன. அப்படி ஒவ்வொரு உயிர்களும் வாழ்வதற்கு ஏற்ற அமைப்பு, அவ்வுயிர்கள் தங்கி வாழும் பொருள்களிலும், இடங்களிலும் இருக்கிறது. அதனால்தான் இறைவன் இயற்கையின் வாயிலாக எல்லா உயிர்களுக்கும் உணவளிக்கிறான் என்று சொன்னார்கள்.//

முக நூலில் படித்த பகுதி மெளனத்தின் குரலுக்கு நன்றி.


  உலக மக்கள் எல்லோரும், சகல ஜீவராசிகளும் இறைவனின்  அருளால் நலமோடு வாழ வேண்டும்.






வாழ்க வையகம்! வாழ்க வையகம்! வாழ்க வளமுடன்!

----------------------------------------------------------------------------------------------------------------------------------

20 கருத்துகள்:

  1. அஷ்டமி சப்பரம்!  இப்படி ஒரு திருவிழா நான் மதுரையில் பார்த்ததில்லை.  நகரத்தில் இல்லாமல் ஊர்க்கோடியில் வாழ்ந்தது ஒரு காரணமாயிருக்கலாம்.  நான் புதூரிலும், ரேஸ்கோர்ஸ் காலனியில் இருந்தேன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வணக்கம் ஸ்ரீராம், வாழ்க வளமுடன்

      //அஷ்டமி சப்பரம்! இப்படி ஒரு திருவிழா நான் மதுரையில் பார்த்ததில்லை. நகரத்தில் இல்லாமல் ஊர்க்கோடியில் வாழ்ந்தது ஒரு காரணமாயிருக்கலாம். நான் புதூரிலும், ரேஸ்கோர்ஸ் காலனியில் இருந்தேன்.//

      நானும் சிறு வயதில் பார்த்தது இல்லை. 2016 ல் தான் முதன் முதலில் பார்த்தேன். அப்புறம் 2019 ல் மறு முறை பார்த்தேன். இரண்டு தடவைதான் பார்த்து இருக்கிறேன். இன்று பழைய பதிவை பார்த்து வணங்கி கொண்டேன். மீள் பதிவாக போட்டு விட்டேன்.
      கொஞ்சம் புதிதாக மெளனத்தின் குரல் மட்டும் சேர்த்தேன்.

      நீக்கு
  2. தேர் வரும் தெருவில் இருக்கும் கட்டிடங்களை பார்க்கும்போது தேரின் உயரம் தெரிகிறது.  குறுகிய தெருக்களில் எப்படி திரும்பினவோ...

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. //தேர் வரும் தெருவில் இருக்கும் கட்டிடங்களை பார்க்கும்போது தேரின் உயரம் தெரிகிறது. குறுகிய தெருக்களில் எப்படி திரும்பினவோ...//

      எப்படி திரும்பும் என்று அதை பார்க்கிறதுதான் சிறப்பு என்று சொல்லி இருப்பார்கள் போலும்.

      நீக்கு
  3. பாவம் ஒட்டகமும்.  பாவமாய் கூட வருகிறது.  சிரிக்கும் அதன் படம் சிரிப்பு.  கவுண்ட்டமணி ஜோக் நினைவுக்கு வருகிறது.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. //பாவம் ஒட்டகமும். பாவமாய் கூட வருகிறது. சிரிக்கும் அதன் படம் சிரிப்பு. கவுண்ட்டமணி ஜோக் நினைவுக்கு வருகிறது.//

      பாவம் அந்த ஓட்டகம் 2019 ல் வரவில்லை பழைய பதிவை படித்தீர்களா?
      கவுண்டமணி சிரிப்பு என்ன தெரியவில்லையே!

      நீக்கு
  4. ஜவ்வு மிட்டாய்க்காரர் அதை இப்படி தெருவில் வைத்துவிட்டு பிரசாதம் வாங்கப் போனால் யாரும் அதில் கைவைக்கவில்லையா?  நல்லவர்களாகி விட்டார்களா மக்கள்?!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. //ஜவ்வு மிட்டாய்க்காரர் அதை இப்படி தெருவில் வைத்துவிட்டு பிரசாதம் வாங்கப் போனால் யாரும் அதில் கைவைக்கவில்லையா? நல்லவர்களாகி விட்டார்களா மக்கள்?!//

      மக்கள் மேல் நம்பிக்கை அவருக்கு இருக்கும் என்று நினைக்கிறேன். அதுவும் இல்லாமல் அவர் பிரசாதம் வாங்க போனாலும் அதன் மேலும் ஒரு கண் வைத்து இருப்பார் என்று நினைக்கிறேன்.

      நீக்கு
  5. கோலங்கள் கலர் கலராய் அழகழகாய் போட்டிருக்கிறார்கள். திருவிழாதான் மதுரை என்றும்!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. //கோலங்கள் கலர் கலராய் அழகழகாய் போட்டிருக்கிறார்கள். திருவிழாதான் மதுரை என்றும்!//

      ஆமாம், மதுரை மக்கள் திருவிழா என்றால் பயங்கரமாக கொண்டாடுகிறார்கள்.

      இன்று எங்கள் குடியிருப்பு வளகாத்தில் பொங்கல் விழா சிறப்பாக நடந்தது. மாறுவேட போட்டிகள் குழந்தைகளுக்கு, கோலபோட்டி பெண்களுக்கு, ஒவிய போட்டி , உறியடி என்று சிறப்பாக செய்து இருந்தார்கள்.

      நீக்கு
  6. ​சப்பரம் தேர் இரண்டும் வேறு வேறு என்று நினைத்திருந்தேன். சப்பரத்திற்கு பல சக்கரங்கள் இருக்கும். தேருக்கு 4 சக்கரங்கள் மட்டுமே. மேலும் தேர் கோபுர அமைப்பை கொண்டிருக்கும், சப்பரம் என்பது அமைப்புகளில் வேறு படும். சப்பரம் தாற்காலிக கட்டுமானம், தேர் நிரந்தர வேலைப்பாடுகள் உள்ள ஒன்று. இவை எனது புரிதல்.

    மாம்பழத்து வண்டும், கல்லுக்குள் தேரையும் இருப்பது பற்றிய விளக்கம் நன்று.

    Jayakumar

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வணக்கம் ஜெயக்குமார் சந்திரசேகரன் சார்

      //சப்பரம் தேர் இரண்டும் வேறு வேறு என்று நினைத்திருந்தேன். //
      இரண்டும் வேறு வேறு தான். சப்பரத்தை கொஞ்சம் அழகாய் தேர் போல செய்து இருக்கிறார்கள்.

      //சப்பரத்திற்கு பல சக்கரங்கள் இருக்கும். தேருக்கு 4 சக்கரங்கள் மட்டுமே. மேலும் தேர் கோபுர அமைப்பை கொண்டிருக்கும், சப்பரம் என்பது அமைப்புகளில் வேறு படும். சப்பரம் தாற்காலிக கட்டுமானம், தேர் நிரந்தர வேலைப்பாடுகள் உள்ள ஒன்று. இவை எனது புரிதல்.//

      நீங்கள் சொல்வது போல சப்பரம் தற்காலிக கட்டுமானம் தான் அதை பிரித்துவிடுவார்கள்.

      //மாம்பழத்து வண்டும், கல்லுக்குள் தேரையும் இருப்பது பற்றிய விளக்கம் நன்று.//

      விளக்கத்தை பிடித்து இருப்பது அறிந்து மகிழ்ச்சி.
      உங்கள் வரவுக்கும், கருத்துக்கும் நன்றி.

      நீக்கு
  7. அஷ்டமி சப்பரம்... புதிய விஷயத்தைத் தெரிந்துகொண்டேன்.

    எம்.கே தியாகராஜபாகவதர் பாடல்,

    கல்லினுள் தேரைக்கும்
    கருப்பை உயிர்க்கும்
    புல்லுணவே தந்து
    போற்றும் நம் நாதன்

    பாடல் வரிகள் நினைவுக்கு வருகின்றன

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வணக்கம் நெல்லைத் தமிழன், வாழ்க வளமுடன்

      //அஷ்டமி சப்பரம்... புதிய விஷயத்தைத் தெரிந்துகொண்டேன்.

      எம்.கே தியாகராஜபாகவதர் பாடல்,

      கல்லினுள் தேரைக்கும்
      கருப்பை உயிர்க்கும்
      புல்லுணவே தந்து
      போற்றும் நம் நாதன்

      பாடல் வரிகள் நினைவுக்கு வருகின்றன//

      மீனாட்சி அம்மன் கோயிலில் ஆண்டு முழுவதும் திருவிழா தான். ஒவ்வொரு மாதமும் ஒரு சிறப்பு திருவிழா நடக்கும்.
      நல்ல பாடல் பகிர்ந்தீர்கள். நல்ல பாடல் நினைவுக்கு வந்து இருக்கிறது உங்களுக்கு.



      நீக்கு
  8. இப்போதெல்லாம் நம் பாரம்பர்யத்துக்குச் சம்பந்தமில்லாத ஒட்டகமும் செண்டை மேளமும் திருவிழாக்களில் வந்துவிடுகிறது

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. //இப்போதெல்லாம் நம் பாரம்பர்யத்துக்குச் சம்பந்தமில்லாத ஒட்டகமும் செண்டை மேளமும் திருவிழாக்களில் வந்துவிடுகிறது//

      ஆமாம், செண்டை மேளம் இடம்பெறுகிறதுதான்.

      ஆனால் இது செண்டை வாத்தியம் இல்லை, கைலை வாத்தியம் என்று இசைக்கபபடுகிறது . சிவகணங்களால் வாசிக்கப்படுவது என்பார்கள். ஏ.பி நாகராஜன் படத்தில் கைலையில் சிவகணங்கள்(பூதகணங்கள்) வாசிப்பார்கள்.

      இதில் நெடுந்தாரை, தித்தேரி, பறை, கிணை, எக்காளம், திருசின்னம், கொப்பரை, தாளம், சங்கு என்று அதிர அதிர வாசிப்பார்கள். இப்போது இதை வாசிக்க நிறைய பேர் கற்றுக் கொண்டு எல்லா ஊர் திருவிழாக்களிலும் போய் வாசிக்கிறார்கள்.சிவனடியார்கள் ஒலி அதிர்வால் இறைவனை அடைய விரும்புபவர்கள் இவர்கள்.

      ஓட்டகம் இரண்டு பல ஆண்டுகளாக மீனாட்சி கோயிலில் இருந்தது திருவிழாக்களில் முன்னே வரும் இப்போது அவை இறந்து விட்டது. வேறு வாங்கவில்லை.

      நீக்கு
  9. பல சமயங்களில் இத்தகைய திருவிழாவில் வழங்கப்படும் உணவைப் பற்றிக் குறைத்து மதிப்பிடுவேன். மக்கள் அதன் மதிப்புத் தெரியாமல் கீழே இரைத்துவிடுகிறார்களே என்று.

    ஆனாலும் பசியோடிருப்பவர்களுக்குத்தான் உணவின் அருமை தெரியும். சவ்வு மிட்டாய் கடைக்காரர் அதனைப் புரியவைத்தார்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. //பல சமயங்களில் இத்தகைய திருவிழாவில் வழங்கப்படும் உணவைப் பற்றிக் குறைத்து மதிப்பிடுவேன். மக்கள் அதன் மதிப்புத் தெரியாமல் கீழே இரைத்துவிடுகிறார்களே என்று.//

      நிறைய வீடுகளில் பிரசாதங்கள் வழங்குவார்கள். சுவாமி வழியெல்லாம் அரிசியை இரைத்து போவதை எடுத்து வந்து அரிசி போடும் பாத்திரத்தில் வைத்து கொண்டால் உணவு தட்டுபாடே இருக்காது என்ற நம்பிக்கை.

      //ஆனாலும் பசியோடிருப்பவர்களுக்குத்தான் உணவின் அருமை தெரியும். சவ்வு மிட்டாய் கடைக்காரர் அதனைப் புரியவைத்தார்.//

      ஆமாம், பசியோடு இருப்பதால்தானே வியாபாரத்தை விட்டு விட்டு போய் உணவை வாங்கி போனார். அவரை நம்பி வீட்டில் இருக்கும் மனைவி, குழந்தைகளுக்கு கூட வாங்கி போவார் . திருவிழா சமயங்களில்
      உணவுக்கு பஞ்சமே இருக்காது எளியவர்கள் வீட்டில் அன்று மகிழ்ச்சி பொங்கும்.

      உங்கள் கருத்துக்களுக்கு நன்றி.

      நீக்கு
  10. அஷ்டமி சப்பரம் குறித்த தகவல்கள் சிறப்பு. இன்று தான் வேறொரு பக்கத்திலும் சப்பரம் குறித்த தகவல்கள் படித்தேன்.

    படங்கள் அனைத்தும் அழகு.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வணக்கம் வெங்கட் நாகராஜ் , வாழ்க வளமுடன்

      //அஷ்டமி சப்பரம் குறித்த தகவல்கள் சிறப்பு. இன்று தான் வேறொரு பக்கத்திலும் சப்பரம் குறித்த தகவல்கள் படித்தேன்.

      படங்கள் அனைத்தும் அழகு.//

      உங்கள் கருத்துக்கு நன்றி வெங்கட்.

      நீக்கு