சனி, 21 ஜூன், 2025

உடல் நலத்திற்கு யோகா



 இன்று சர்வதேச யோகா தினம் 

யோகா தின வாழ்த்துக்கள்!

2025 ஆம் ஆண்டு சர்வதேச  யோகா தினத்திற்கான கருப்பொருள்

"ஒரு பூமி மற்றும் ஒரு ஆரோக்கியத்திற்கு யோகா "என்று சொல்லி இருக்கிறார்கள்.

 ஆரோக்கியமாக வாழ எல்லோரும் நினைக்கிறார்கள். நினைத்தால் மட்டும் போதாது, கொஞ்சம் நமக்கு என்று நேரம் ஒதுக்கி உடல் நலத்திற்கு சில உடற்பயிற்சிகள், மன பயிற்சிகள், மூச்சு  பயிற்சிகள் செய்ய வேண்டும்.

முன்பு உடல் நலம் குறித்தும், உடற்பயிற்சிகள் பற்றியும் பதிவு போட்டது நினைவுக்கு வந்தது. பின்னூட்டங்கள் குறைவு,   நிறைய பேர் படித்த பதிவு என்று புள்ளிவிவர கணக்கு சொல்கிறது.

படிக்கவில்லை என்றலும், படித்து இருந்தாலும் மீண்டும் படிக்க இந்த மீள் பதிவு.


உடல் நலம்

-----------
“வரும் முன் காப்பதே அறிவுடைமை!”
-----------------------------------

இப்போது சமுதாய மக்களிடையே உடல் நலத்தைப் பற்றி நல்ல விழிப்புணர்வு உள்ளது.

உடல் நலத்தைப் பற்றி திருவள்ளுவர்,திருமூலர், எண்ணிறந்த சித்தர்கள் வள்ளலார் மற்றும் பல மெய்ஞ்ஞானிகள் சொல்லி உள்ளார்கள்.அரவிந்தர்,அன்னை,ராம்கிருஷ்ணர், வேதாத்திரி
மகரிஷி ஆகியோர் சொல்லியிருக்கிறார்கள்.

இந்த பதிவில் யோகிராஜ் வேதாத்திரி மகரிஷி அவர்கள்   "யோகமும் மனித மாண்பும் " என்று சொன்னவைகள் இடம் பெறுகிறது


வேதாத்திரி மகரிஷி
----------------
மனிதன் துன்பங்கலவாத இன்பத்தை தான் பெரிதும் விரும்புகிறான். இன்பத்தை உடலால் தான் அனுபவிக்கிறோம். உடலானது முழுநலத்துடனும்,ஆரோக்கியத்துடனும் திகழ்ந்தால் தான் இன்பம் நிலவும்,மேலும் தொடரும். உடல் நலம் குன்றின் நாம் அனுபவித்து வரும் இன்பம் கெட்டு துன்பம் வந்து விடுகிற்து. துன்பத்தின் உக்கரம் சில நேரங்களில் பொறுக்க முடியாத நிலையிலும் நோயால் ஏற்படும் பாதிப்புச் சில நேரங்களில் எதிர்கால இன்பத்தையும், வாழ்வையும் கூட கொள்ளை கொண்டு விடுகிறது. ஆகவே நோயற்ற வாழ்வான குறைவற்ற செல்வதைத்தான் எல்லோரும் விரும்புகிறார்கள்.

உடலில் ஏற்கனவே இருக்ககூடிய நோய்களைப் போக்கிக் கொள்வது என்பது ஒரு முறை அதை சிகிட்சை என்று சொல்வார்கள்.நோயைத் தீர்த்துக் கொள்வதற்கும் மேலான சிறந்த ஒரு முறை என்ன வென்றால் நோய் வராமலே தடுத்துக் கொள்வது என்பதாகும். அவ்வாறு தடுத்துக் கொள்ளக் கூடிய ஒரு விழிப்பு, அதற்குரிய செயல் ஒழுங்கு முறைகள் இவற்றைக் கைக் கொண்டால் நோய் வந்த பிறகு தீர்த்துக் கொள்வதை விடத தடுத்து கொள்வது சுலபமானது, தெரியவரும்.

“கருவமைப்பு,ஆகாரம்,எண்ணம்,செய்கை
ககனத்தில் கோள்கள் நிலை சந்தர்ப்பத்தால்
வரும் இயற்கை நிகழ்ச்சிகளின் மோதல் எல்லாம்
வாழும் உயிர்கட்குப் பல ரசாயனங்கள்
தரும் மாற்றம் தரமொக்க இன்ப துன்பம்
தகுந்த அளவாம் இதிலோர் சக்தி மீறிப்
பெருகி ரத்தச் சுழல் தடுக்க நோயாய் மாறிப்
பின்னும் அதிகரித்து விட மரணம் ஆகும்”

உணவு, எண்ணம்,செய்கை ஆகிய வற்றால் ஏற்படும் மாற்றங்களைத் தக்கவாறு கணித்து என்னென்ன உணவு அல்லது எண்ணம் அல்லது செய்கை என்ன விதமான மாற்றத்தைத் தருகிறது. என்வே எந்த உணவை அல்லது எண்ணத்தை அல்லது செயலைத் தொடர்வது அல்லது விடுவது என்பது போன்று ஆராய்ந்து தக்க நடவடிக்கை மூலம் உடல் நலத்தைப் பேணிக் கொள்ள வேண்டும்.

சந்தர்ப்ப மோதுதலால் வரும் மாற்றங்களைப் பொதுவாக ஏற்றுக் கொள்ள வேண்டியதைத் தவிர வேறு வழியில்லை. ஆனால் கருவமைப்பாலும் கோள் நிலையாலும் ஏற்படும் மாற்றங்களை நமது மனவளக்கலை மூலம் பெரும்பாலும் மாற்றி நற்பயன் துய்க்கலாம். கூடவே முறையான ஒழுக்கப் பழக்கங்களும் நல்லெண்ணம்,நற்செய்கைகளும் வேண்டும்.உடற்பயிற்சி கூட அதில் அடக்கமே.

நோயற்ற உடலில் தான் அறிவும் திறம்பட இயங்கும். இன்பங்களைத் துய்க்க இயலும் .

எனவே ஒவ்வொருவரும் நோயற்ற வாழ வழி கண்டாக வேண்டும். மனத்தூய்மை, ஒழுங்கான உணவு,அளவான உழைப்பு, இவற்றுடன் கூடிய வாழ்க்கை உடல் இருக்க உதவும். பொறாமை,சினம்,வஞ்சம்,கவலை,காம எண்ணங்கள் இவை உடல் காந்த சகதியினைஅழித்து விடும்.

 தவத்தாலும்,ஆராய்ச்சியாலும் இந்த உணர்ச்சி நிலைகளை மாற்றிவிடலாம். வெற்றி நிச்சியம் என்கிறார். உடற்பயிற்சி,உளப்பயிற்சி செய்து நாளுக்கு நாள் மகிழ்ச்சியும்,இனிமையும் பெற்று வாழலாம்.

தினந்தோறும் நாம் காலையிலிருந்து மாலை வரை குடும்பத்தில் பலவகைப் பொருட்களையும், பண்டங்களையும் கையாளுகின்றோம். சமையல் பாத்திரங்களையே எடுத்துக் கொள்ளுங்களேன் ;சுத்தப்படுத்தி வைத்தால் தானே அவை மறுநாளைக்கு உதவும்? அதே போல தினந்தோறும் மனத்தையும் உடலையும் உபயோகிக்கிறோம்; அவற்றில் அவ்வப்போது ஏற்படக்கூடிய களங்களைப் போக்கி, மீண்டும் புதிதாக நாளைய உபயோகத்திற்கு தயாராக வைத்துக் கொண்டால் தானே நன்றாக இருக்கும்?


உடலுக்குக் கொடுக்கக்கூடிய ‘உடற்பயிற்சி’ மனதிற்குக் கொடுக்கக் கூடிய ‘தியானப்பயிற்சி’ உயிருக்குறுதி அளிக்கும் ‘காயகல்பப் பயிற்சி’ இம் மூன்றும் உடலையும்,உள்ளத்தையும்,உயிரையும் மேன்மைப் படுத்தி,தூய்மைப் படுத்தி மனிதன் வாழ்வாங்கு வாழ்வதற்கு வழி வகுப்பவையாகும். என்கிறார்.


ஆறுகுணங்களை சீர் செய்ய வேண்டும் என்கிறார்.

பேராசையை- - -------- நிறைமனமாகவும்
சினத்தை - - ---------- சகிப்புத்தன்மையாகவும்
கடும்பற்றினை ----------- ஈகையாகவும்
முறையற்றபால்கவர்ச்சியை---------------- கற்பாகவும்
உயர்வு தாழ்வு மனப்பான்மையை---------- சமநோக்காகவும்
வஞ்சத்தை ---------- மன்னிப்பு ஆகவும்

மாற்றி அமைத்தாலன்றி மனிதன் மனிதாக இருக்க முடியாது.

அடுத்து தற்சோதனை செய்ய சொல்கிறார்.

1.எண்ணம் ஆராய்தல்
2.ஆசைசீரமைத்தல்
3.சினம் தவிர்த்தல்
4.கவலை ஒழித்தல்
5.தன்னிலை விளக்கம்-நான் யார்?

1.எண்ணம் என்பது என்ன? அதன் ஆற்றல் எவ்வளவு? அது எப்படி தோன்றுகிறது?ஏன் அந்த
எண்ணம் வந்தது? அதற்குக் காரணம் என்ன?என்று கண்டு “அந்த எண்ணத்தைச் செயல் படுத்தினால் என்ன விளைவுஏற்படும்?அந்த விளைவு நமக்கும்,பிறர்க்கும் நன்மை தருமா?” என்பதைத் தெரிந்து கொண்டு அந்த விளைவு துன்பம் தரத்தக்கதாக இருந்தால் அப்போதே
பல தடவைகள் சங்கற்பம் செய்து அந்த எண்ணத்தை நல்ல எண்ணமாக மாற்றிக் கொள்ள ஏற்ற பயிற்சியே எண்ணம் ஆராய்தல்.

2.ஆசைசீரமைத்தல்: -

(ஆசை ஆசை இப்போழுது பேராசை . ஆசை கூடும் காலம் எப்பொழுது)  என்ர பாடல் நினைவுக்கு வருகிறது.

நமது மனதின் வேகம்,விரைவு மிக அதிகம். மனது ஒரு மணி நேரத்தில் பத்து நூறு ஆசைகளைக் கூட உண்டு பண்ணிவிடும்.ஆனால் அந்த ஆசைகளை உடலின் ஆற்றலுக்குத் தக்கவாறுதானே நிறைவு செய்ய முடியும்?அப்படி உண்டு பண்ணிய ஆசை நிறைவேறாமல் தேங்கி நிற்குமேயானால் மனம் சோர்வடையும். வாழ்க்கை நன்றாக இருக்காது.ஆகையால் நாம் ஆசைப்பட்டாலும் அது நம்மால் முடிக்க கூடியதாக இருக்க வேண்டும் .நலம் தரும் ஆசையை மட்டும் வைத்துக் கொண்டு திட்ட்மிட்டுச் செயலாற்றுவதே ஆசை சீரமைத்தல் .

3.சினம் தவிர்த்தல்: -

சினம் எழாமலேயே தடுப்பதற்கு, மனதை விழிப்பு நிலையிலேயே வைத்துப் பயிற்சி செய்வது. அதிகமாக யாருடைய நன்மைக்காக நீங்கள் பாடுபடுகிறீர்களோ அதிகமாக அவர்கள் மீதுதான் சினம் வருவது இயல்பாக இருக்கிறது.

அந்த மாதிரி ரொம்ப நெருங்கியவர்கள் மீது சினம் வந்து  அவர்கள் மனம் புண்படும்படி நடந்து கொண்டால் வாழ்க்கையில் நிறைவு பெறமுடியாது. அவர்களுடைய புண்பட்ட மன அலை உங்களுக்குச் சாபமாகி,பின் அவர்களுக்குக் சாபமாகி இரண்டு பேருமே நோய்வாய்ப்படும் நிலை உருவாகும்.அடுத்தவர்கள் செய்வது தவறாக இருந்தாலும்,பொறுத்துக்கொண்டு அன்பு காட்டி, வாழ்த்தி வாழ்த்தி அதனை சரிப்படுத்தி விடலாம்.


4.கவலை ஒழித்தல்: -

அதாவது,நாம் தவறாகப் புரிந்து கொண்டு எடுக்கும் தவறான முடிவுகளே கவலைகளுக்குக் காரணம்.அதாவது உங்கள் தேவைக்கும் இருப்புக்கும் இடையில் துண்டு விழுகிறபோது,நீங்கள் எதிர்பார்க்கிறதுக்கும்,நடப்பதற்கும் இடையில் வித்தியாசம் காணுகிறபோது,உங்கள் கற்பனைக்கும் இயற்கையாக நடப்பதற்கும் இடையில் வித்தியாசம் காணுகிறபோது தன்னுடைய எண்ணத்துக்கும் இன்னொருவர் எண்ணத்திற்கும் முரண்பாடு காணுகிறபோது கவலைப்படுகிறோம்.நாம் என்ன செய்ய வேண்டும் என்பதை திட்டமிட வேண்டும்.சிந்தனை செய்ய வேண்டும் .அறிவில் தெளிவு உண்டாகிறது.கவலை ஒழிகிறது.

5.நான் யார்? :- 

எனற வினாவை எழுப்பி,அந்த வினாவில் இந்த உடல் உயிர்,மனம்,அறிவு,மெய்ப்பொருள்,அதாவது பிரபஞ்சம் முழுமையும் இயங்குவதற்குக் காரணமாகவும், ஒவ்வொரு பொருளிலும் இயக்க நியதியாகவும் உள்ள ஒரு பொருளைப் பற்றி விளங்ககூறி,அந்தப் பொருளுக்கும் தனக்கும் உள்ள உறவு,இணைப்பு இதையும் எடுத்துக்காட்டி விளங்க வைப்பது.

நாம் தவம்  செய்கின்ற போது  மன் அலைச்சுழல் குரைந்து மன அமைதியை பெறுகிறோம். தத்துவ ஞானி வேதாத்திரி மகரிஷி அவர்கள் ஒன்பது தவங்களை வடிவமைத்து  கொடுத்துள்ளார்கள்.

அவை;-
1. ஆக்கினை, 2.  சாந்தி, 3. துரியம்,  4. துரியாதீதம், 5. பஞ்சேந்திரியம்,  6. பஞ்சபூத நவக்கிரக தவம், 7.  ஒன்பது மையம்,  8. நித்தியானந்தம்,  9. இறைநிலை தவம்.


ஒன்பது மையங்களில் எப்படி உயிர்ச் சக்தியை இயக்குவது ஒவ்வொரு சுரப்பிக்கும் மூளையில் ஒரு நேர் பகுதி தொடர்பு உள்ளது.அதனால் ஒவ்வொரு மையத்திலும் தவம் செய்யும் போது மூளையில் அதற்கு தொடர்புள்ள பகுதியின் இயக்கம் தூண்டி விடப்படும். இதனால் நோய் தடுப்பு சக்தி உடலுக்கும் ,மனதுக்கும் கூடுகிறது. அதனால் வாழ்வில் உடலுக்கோ மனதுக்கோ ஏற்படக் கூடிய அதிர்ச்சிகளை தாங்கி கொள்ளக் கூடிய சக்தியைஒன்பது மைய தவம் தருகிறது.

ஆழ்ந்த அமைதியைப் பாதிக்காதவாறு இருக்க நாம் என்ன செய்ய வேண்டும் என்று முடிவு காணக்கூடிய சக்தியும் இந்த ஒன்பது மைய தவத்தால் ஏற்படுகினறன.

இன்னும் பஞ்ச இந்திரிய தவம்.பஞ்சபூத தவம், நித்தியானந்த தவம் முதலிய சிறப்பு தவங்கள் உடலுக்கும் மனதுக்கும் அமைதி ஆனந்தம் தரும்.

இது தவிர ஜீவகாந்த பெருக்க பயிற்சி ! இது ஜீவகாந்த சகதியை பெருக்கி நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரித்து வாழ்வில் வெற்றியும், மகிழ்ச்சியும் பெற செய்யும்.

வாழ்க வளமுடன் என்று வாழ்த்தும் போது உடல் நன்றாக இருக்கும். மனம் நன்றாக இருக்கும். நம்மிடம் தொடர்பு கொள்பவர்களும் நல்லவர்களாய் இருப்பார்கள். நம்மை சுற்றிலும் நல்ல அலை இயக்கம் இருக்கும். தனி மனிதன் நலமாக, அமைதியுடன் வாழ வேண்டுமானால், இந்த உலகம் முழுவதும் வளமாக இருந்ததால் தான் முடியும்.
காலை எழுந்தவுடன் “வாழ்க வையகம்!வாழ்க வளமுடன்!”என்று கூறி வையகத்தை வாழ்த்த வேண்டும். வையகம் வாழ்ந்தால் நாமும் வாழ்வோம்.

கீழே வரும் இரண்டு காணொளிகளும்  முன்பு போட்ட பதிவில் கிடையாது. புதிதாக இந்த பதிவில் சேர்த்து இருக்கிறேன்.

பழைய பதிவு 2010 ஆம் ஆண்டு "உடல் நலம்" என்ற தலைப்பில் பதிவு போட்டேன். உங்கள் பின்னூட்டங்கள் வந்து இருக்கா என்று பார்க்கலாம்.



உடற்பயிற்சி செய்முறை இருக்கிறது.  அதை இந்த காணொளி பார்த்து கூட செய்யலாம். எளிய முறை உடற்பயிற்சி.

காயகல்பம் மற்றும்  தியானங்கள்  மனவளகலை பயிற்சி மையத்தில் கற்றுக் கொண்டு செய்யலாம். 

 இன்று சர்வதேச யோகா தினத்தில் ஆனந்த வாழக்கை திரைப்படம்  திரையிடல் நடந்து இருக்கிறது.
இதையும்  நேரம் இருந்தால் பாருங்கள்.
நடிகர்களை வைத்து மனவளகலையைப்பற்றி( உலக சமுதாயத்தை பற்றி ) சொல்ல வைத்து படம் எடுத்து இருக்கிறார்கள். அதை இன்று வெளியிட்டு இருக்கிறார்கள்.

விளம்பர காலமாக இருப்பதால்  நடிகர்களை வைத்து சொல்ல வைத்து இருக்கிறார்கள்.

நிறைய அனுபவ உரைகள் இருக்கிறது.

இந்த படத்தை படமாக மட்டும் பார்க்காமல் வாழ்வியல் பாடமாக உணர்ந்து மனவளகலையை கற்று ஆனந்த வாழ்க்கை வாழுங்கள் என்று நிறைவு செய்து இருக்கிறார்கள்.


 வாழ்க வையகம் ! வாழ்க வையகம்! வாழ்க வளமுடன்!
----------------------------------------------------------------------------------------------------

27 கருத்துகள்:

  1. உடலானது முழுநலத்துடனும்,ஆரோக்கியத்துடனும் திகழ்ந்தால் தான் இன்பம் நிலவும்,மேலும் தொடரும். உடல் நலம் குன்றின் நாம் அனுபவித்து வரும் இன்பம் கெட்டு துன்பம் வந்து விடுகிற்து. //

    இது முற்றிலும் உண்மை அக்கா.

    இருப்பினும் ஒரு சிலர் அதாவது விரல் விட்டு எண்ணிவிடலாம் அவர்கள் எத்தனை உடல் நலம் குன்றியிருந்தாலும் அதனிடையிலு ம் மகிழ்ச்சியுடன் இருந்து பல ஊர்களுக்கும் சென்று வருவார்கள். குறிப்பாக இதை வெளிநாட்டினரிடம் பார்த்திருக்கிறேன்.

    இது ஒரு மிகப் பெரிய மனவளக் கலை

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வணக்கம் கீதாரெங்கன், வாழ்க வளமுடன்

      //இருப்பினும் ஒரு சிலர் அதாவது விரல் விட்டு எண்ணிவிடலாம் அவர்கள் எத்தனை உடல் நலம் குன்றியிருந்தாலும் அதனிடையிலு ம் மகிழ்ச்சியுடன் இருந்து பல ஊர்களுக்கும் சென்று வருவார்கள். குறிப்பாக இதை வெளிநாட்டினரிடம் பார்த்திருக்கிறேன்//

      ஆமாம், உடல் நலம் குன்றி இருந்தாலும் அதை பொருட்படுத்தாமல் மகிழ்ச்சியாக பல ஊர்களுக்கு சென்று வருவார்கள் தான். தங்கள் குழந்தைகள் சக்கர நாற்காலியில் அழைத்து வர மகிழ்ச்சியாக சுற்றிப்பார்ப்பார்கள். அவர்களே இயக்கும் வண்டிகளை வைத்து கொண்டு வருவார்கள் தான்.

      நம்மில் பலர் உடல் நலம் குன்றி விட்டால் வீட்டில் முடங்கி விடுவார்கள் கீதா. வந்த துன்பத்தை தாங்கி கொள்ளும் மன பலத்தை பெறுக்கி கொள்ளவும் துன்பத்திலிருந்து விடுபடவும் கற்றுக் கொடுக்கிறார்கள்.
      மனவளக்கலையில்.

      நீக்கு
  2. உடலில் ஏற்கனவே இருக்ககூடிய நோய்களைப் போக்கிக் கொள்வது என்பது ஒரு முறை அதை சிகிட்சை என்று சொல்வார்கள்.நோயைத் தீர்த்துக் கொள்வதற்கும் மேலான சிறந்த ஒரு முறை என்ன வென்றால் நோய் வராமலே தடுத்துக் கொள்வது என்பதாகும். அவ்வாறு தடுத்துக் கொள்ளக் கூடிய ஒரு விழிப்பு, அதற்குரிய செயல் ஒழுங்கு முறைகள் இவற்றைக் கைக் கொண்டால் நோய் வந்த பிறகு தீர்த்துக் கொள்வதை விடத தடுத்து கொள்வது சுலபமானது, தெரியவரும்.//

    ஆமாம் ஆனால் இதற்கும் மிகப் பெரிய மனவளக் கலை வேண்டுமே! நம்ம நாக்கு இருக்கு பாருங்க!!!!!!!! ஹாஹாஹா....அதை அடக்க முடியலையே உணவு பற்றிச் சொல்கிறேன்.

    என்னதான் உடல்நலத்திற்கான உணவு என்று சொன்னாலும், நம்ம மனசு இடையில் கொஞ்சம் சஞ்சலப்படுகிறதுதான்!

    நோயற்ற வாழ்வே குறைவற்ற செல்வம் என்பது இப்போதைய காலகட்டத்திற்கு மிக மிகப் பொருந்தும்.

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. //ஆமாம் ஆனால் இதற்கும் மிகப் பெரிய மனவளக் கலை வேண்டுமே! நம்ம நாக்கு இருக்கு பாருங்க!!!!!!!! ஹாஹாஹா....அதை அடக்க முடியலையே உணவு பற்றிச் சொல்கிறேன்.

      என்னதான் உடல்நலத்திற்கான உணவு என்று சொன்னாலும், நம்ம மனசு இடையில் கொஞ்சம் சஞ்சலப்படுகிறதுதான்!

      நோயற்ற வாழ்வே குறைவற்ற செல்வம் என்பது இப்போதைய காலகட்டத்திற்கு மிக மிகப் பொருந்தும்.//

      நாம் ஏற்கனவே நம் உடலுக்கு ஒத்துக் கொள்ளும் உணவைதான் சாப்பிடுகிறோம் கீதா, மேலும் உடல் நலத்திற்கு தீங்கு என்றால் உறுதியாக இருக்கிறோம் தானே ! முடியதவர்களுக்கு பயிற்சி உதவும்.
      நோயற்ற வாழ்வே குறைவற்ற செல்வம் தான் இப்போது மருத்துவ செலவுகள் மலைப்பை தருகிறது.

      நீக்கு
  3. எப்படி உடலழுக்கைப் போக்குகிறோமோ அப்படி மன அழுக்கையும் போக்கிக் கொள்ள வேண்டும்தான்.

    உண்மையிலேயே யோகக் கலை மூச்சுப் பயிற்சி இதற்கு உதவும் என்றாலும் மன அழுக்கைப் போக்க மன ஆரோக்கியம் நாம் தான் முயற்சி எடுக்க வேண்டும் அதற்கான பயிற்சி மிக மிகக் கடினமானது.

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. //எப்படி உடலழுக்கைப் போக்குகிறோமோ அப்படி மன அழுக்கையும் போக்கிக் கொள்ள வேண்டும்தான்.

      உண்மையிலேயே யோகக் கலை மூச்சுப் பயிற்சி இதற்கு உதவும் என்றாலும் மன அழுக்கைப் போக்க மன ஆரோக்கியம் நாம் தான் முயற்சி எடுக்க வேண்டும் அதற்கான பயிற்சி மிக மிகக் கடினமானது.//

      ஆமாம், எல்லோரும் முயற்சி தான் செய்து கொண்டு இருக்கிறோம்.

      நீக்கு
  4. உடற்பயிற்சி,உளப்பயிற்சி செய்து நாளுக்கு நாள் மகிழ்ச்சியும்,இனிமையும் பெற்று வாழலாம்.//

    ஆமாம் இதுவும் இதற்குக் கீழான வரிகளும் மிக நல்ல உன்னதமான கருத்துகள்.

    கூடியவரை 'நா' கட்டுப்பாடு உணவிலும் வார்த்தைகளிலும், உடற் பயிற்சியும் செய்து வந்தாலும்...மனப் பயிற்ச்சி...

    //1.எண்ணம் என்பது என்ன? அதன் ஆற்றல் எவ்வளவு? அது எப்படி தோன்றுகிறது?ஏன் அந்த
    எண்ணம் வந்தது? அதற்குக் காரணம் என்ன?//

    இதுதான் உளவியலிலும் சொல்லப்படுகின்றது. காரணத்தை உள்ளார்ந்து ஆராய்ந்து, அதன் வேரைப் பிடித்தால் பயிற்சி கொடுத்து களையலாம் என்று.

    2 வதை வாசித்த போது என்னை நினைத்தே சிரித்துக் கொண்டேன். ஆசைகளுக்கு அளவே இல்லை. அது ஆசைகளாக இருப்பது மட்டுமா....அலை பாய்கிறதே! அதனால்தான் எதிலும் கான்சென்ட்ரேஷன் இல்லாமல் இருக்கிறேன் இப்ப. ஏதேதோ எண்ணங்கள்!!!!

    சினம் தவிர்த்தல், கவலை அழித்தல், நான் யார் என்பவை உளவியலிலும் இப்படியே தான் அவர்களின் சொல்லாடலில் சொல்கிறார்கள்.

    காணொளி கண்டேன் அக்கா.

    அதில் சொல்லப்பட்டிருக்கும் உடற்பயிற்சிகளைச் செய்கிறென், அக்கா தினமுமே!

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. //கூடியவரை 'நா' கட்டுப்பாடு உணவிலும் வார்த்தைகளிலும், உடற் பயிற்சியும் செய்து வந்தாலும்...மனப் பயிற்ச்சி...//

      எல்லாவ்ற்றிலும் கவனம் தேவைதான்.

      //உளவியலிலும் சொல்லப்படுகின்றது. காரணத்தை உள்ளார்ந்து ஆராய்ந்து, அதன் வேரைப் பிடித்தால் பயிற்சி கொடுத்து களையலாம் என்று.//

      ஆமாம்.


      //2 வதை வாசித்த போது என்னை நினைத்தே சிரித்துக் கொண்டேன். ஆசைகளுக்கு அளவே இல்லை. அது ஆசைகளாக இருப்பது மட்டுமா....அலை பாய்கிறதே! அதனால்தான் எதிலும் கான்சென்ட்ரேஷன் இல்லாமல் இருக்கிறேன் இப்ப. ஏதேதோ எண்ணங்கள்!!!!//

      ஆசைக்கு அளவேது? ஒரு ஆசை நிறைவேறினால் இன்னொரு ஆசை முளைத்து விடுமே! அதை முறை படுத்த சொல்கிறார்.
      ஆசையை ஒழிக்க முடியாது, ஆனால் ஆசையை சீர் அமைக்கலாம்.

      //சினம் தவிர்த்தல், கவலை அழித்தல், நான் யார் என்பவை உளவியலிலும் இப்படியே தான் அவர்களின் சொல்லாடலில் சொல்கிறார்கள்.//

      மருத்துவர்கள் எல்லோரும் சொல்வது சினத்தால் இரத்த கொதிப்பு ஏற்படுகிறது, கவலை அழித்தல் அல்ல கவலை ஒழித்தல் கவலை தான் பெரும் கேடு என்கிறார். நோய்கள் அதிகமாகிறது. அதனால் அறவே ஒழிக்க சொல்கிறார்.

      ஆனால் நமக்கு கவலை பட நிறைய விஷயங்கள் வந்து விடுகிறது. சில கவலைகளை ஏற்றுக் கொள்ள வேண்டும், சிலவற்றை அனுபவித்தே ஆக வேண்டும். சில கவலைகளை அலட்சியம் செய்ய வேண்டும், சில கவலைகளை உடனே தீர்த்துவிட வேண்டும் . என்று சொல்வார்.

      //காணொளி கண்டேன் அக்கா.

      அதில் சொல்லப்பட்டிருக்கும் உடற்பயிற்சிகளைச் செய்கிறென், அக்கா தினமுமே!//

      உடற்பயிற்சி செய்வது மகிழ்ச்சி கீதா.

      உங்கள் கருத்துக்களுக்கு நன்றி கீதா.


      நீக்கு
  5. மனதின் காமக்ரோத எண்ணங்கள் உடல் நலத்தை பாதிக்கும் என்பது உண்மை.  ஆத்திரம் கொண்டோருக்கு முகத்தில் கூட இனிமையே இருக்காது.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வணக்கம் ஸ்ரீராம், வாழ்க வளமுடன்

      //மனதின் காமக்ரோத எண்ணங்கள் உடல் நலத்தை பாதிக்கும் என்பது உண்மை. ஆத்திரம் கொண்டோருக்கு முகத்தில் கூட இனிமையே இருக்காது.//

      நீங்கள் சொல்வது போல் கோபம் வந்தால் முகத்தில் இனிமை எப்படி வரும் ? வராது தான்.

      நீக்கு
    2. வணக்கம் ஸ்ரீராம், வாழ்க வளமுடன்

      //மனதின் காமக்ரோத எண்ணங்கள் உடல் நலத்தை பாதிக்கும் என்பது உண்மை. ஆத்திரம் கொண்டோருக்கு முகத்தில் கூட இனிமையே இருக்காது.//

      நீங்கள் சொல்வது போல் கோபம் வந்தால் முகத்தில் இனிமை எப்படி வரும் ? வராது தான்.

      நீக்கு
  6. நான் ஆரம்பத்தில் யோகா பயின்றேன். அமைதியான எனக்கு அந்த நேரத்தில் பயங்கர அடக்க முடியாத கோபங்கள் ஏற்பட்டது. ஏனென்று தெரியாமல் இதுதான் காரணம் என்று நிறுத்தி விட்டேன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. //நான் ஆரம்பத்தில் யோகா பயின்றேன். அமைதியான எனக்கு அந்த நேரத்தில் பயங்கர அடக்க முடியாத கோபங்கள் ஏற்பட்டது. ஏனென்று தெரியாமல் இதுதான் காரணம் என்று நிறுத்தி விட்டேன்.//

      நான் மெளனம் கடைபிடிக்கும் போது அப்படித்தான் கோபம் வரும் .
      நாள் ஆக ஆக குறைந்து விட்டது.
      நீங்கள் தொடர்ந்து இருக்கலாம் , நாள்பட சரியாகி இருக்கும்.

      நீக்கு
  7. சோம்பேறித்தனம் என்னை இதுபோன்ற உள்டசார்ந்த பயிற்சிகளை செய்ய விடாமல் அடிக்கிறது.  நாவையும் (உண்ணும் விஷயத்தில்) ஓரளவுக்குத்தான் கட்டுப்படுத்துவேன்!  -  ஒப்புதல் வாக்குமூலம்!!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. //சோம்பேறித்தனம் என்னை இதுபோன்ற உள்டசார்ந்த பயிற்சிகளை செய்ய விடாமல் அடிக்கிறது. நாவையும் (உண்ணும் விஷயத்தில்) ஓரளவுக்குத்தான் கட்டுப்படுத்துவேன்! - ஒப்புதல் வாக்குமூலம்!!//

      எல்லாம் மகரிஷி சொல்வது போல பழக்கம் தான். வழக்கமாக செய்வது எல்லாம் பழக்கமாக மாறி விடுகிறது.
      ஒரளவு என்பது பழக்கமாகி விட்டால் வழக்கமாகி விடும் ஸ்ரீராம்.

      நீக்கு
    2. /எல்லாம் மகரிஷி சொல்வது போல பழக்கம் தான். வழக்கமாக செய்வது எல்லாம் பழக்கமாக மாறி விடுகிறது.
      ஒரளவு என்பது பழக்கமாகி விட்டால் வழக்கமாகி விடும் /

      உண்மைதான். நல்ல கருத்து. நல்ல வழக்கங்கள் நாளடைவில் பழக்கமாகி விடும் நன்றி சகோதரி.

      நீக்கு
    3. ஆமாம், பழக்கமாகி விடும். மகரிஷி அப்படித்தான் சொல்வார். நாள்தோறும் குறிப்பிட்ட நேரத்தில் எழுந்து கொள்ள வேண்டும் காலை எழுந்து இதை செய்ய வேண்டும் என்று நினைத்து கொண்டு படுத்தால் நம்மை உடல் எழுப்பி விட்டு விடும்.
      நன்றி.

      நீக்கு
  8. எனக்கு நல்ல இருமல் உண்டு.  உண்மையில் அது கெட்ட இருமல்!!  அதை சரி செய்ய பிராணாயாமம் போன்ற யோகா, மூச்சுப் பயிற்சிகள் உதவும்தான்.  ஆனால் செய்வதில்லை.  இதில் ஒரு பெருமையா என்று மனதுக்குள் திட்டாதீர்கள்!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. //எனக்கு நல்ல இருமல் உண்டு. உண்மையில் அது கெட்ட இருமல்!! அதை சரி செய்ய பிராணாயாமம் போன்ற யோகா, மூச்சுப் பயிற்சிகள் உதவும்தான். ஆனால் செய்வதில்லை. இதில் ஒரு பெருமையா என்று மனதுக்குள் திட்டாதீர்கள்!//

      எனக்கு நல்ல மணம், கெட்டமணம், எல்லாவற்றுக்கும் தும்மல் வரும்.
      காலை எழுந்தவுடன் அடுக்கு தும்மல் வரும், தூசி , புகை ஒத்துக் கொள்ளாது அப்போதுதான் உறவினர் ஒருவர் இந்த மனவளகலை பயிற்சி மையம் பற்றி சொன்னார்.
      பிராணாயாமம் மூச்சு பயிற்சி கபாலபதி பற்றி சொன்னார் பின் அதை எல்லாம் கற்றுக் கொண்டு செய்தபின் ஒற்றை தலைவலி, தும்மலில் இருந்து விடுபட்டேன்.

      மூச்சுக் குழலில் , மற்றும் நுரையீரல்களில் படிந்து இருக்கும் தூசி முதலிய வேற்றுப் பொருட்கள் வெளியேறி இந்த இருமல், ஜலதோஷம், நீங்கும் எளிய முறைதான். கொஞ்சம் சோம்பறி தனத்தை உதறி செய்தால் நலமாகி நீங்கள் நாலு பேருக்கு சொல்வீர்கள்.

      உங்கள் கருத்துக்களுக்கு நன்றி ஸ்ரீராம்.

      நீக்கு
  9. வணக்கம் சகோதரி

    பதிவு அருமை. யோகா, உடற்பயிற்சி குறித்த விஷயங்களுடன் பதிவு நன்றாக உள்ளது. நான் முன்பு இந்த உடற்பயிற்சிகளை செய்து கொண்டுருந்தேன். அதாவது எங்கள் அண்ணா ஆழியார் சென்று விட்டு வந்த பின், மகரிஷி அவர்கள் சொன்னபடிக்கு, அவர் கற்றுக் கொண்ட சில பயிற்சிகளை எனக்கும் சொல்லித் தந்து அதன்படி செய்து கொண்டிருந்தேன். இப்போது விட்டுப் போய் விட்டது.

    எங்கள் சின்ன மகனும், மருமகளும் யோகா பயிற்சிக்கு தவறாமல் சென்று வருகிறார்கள்.

    /ஆரோக்கியமாக வாழ எல்லோரும் நினைக்கிறார்கள். நினைத்தால் மட்டும் போதாது, கொஞ்சம் நமக்கு என்று நேரம் ஒதுக்கி உடல் நலத்திற்கு சில உடற்பயிற்சிகள், மன பயிற்சிகள், மூச்சு பயிற்சிகள் செய்ய வேண்டும்./

    உண்மைதான். செய்ய நாட்தோறும் பழகிக் கொள்ள வேண்டும். நமக்கு என்று நேரம் கிடைக்காமல் போகவில்லை. ஆனால் அந்த நேரத்தில் வேறு பல வேலைகளை (இணையம் வருவது, கணினி பார்ப்பது) நமக்காக செய்து கொள்கிறோம். அத்துடன் சில பயிற்சிகளையும் எடுத்துக் கொள்ள வேண்டுமென உங்கள் பதிவின் மூலம் உணர்கிறேன். அந்த நல்ல வேளை இறைவன் அருளால் திருப்பி வர வேண்டும்.

    காணொளி கண்டேன். ஒரு மாதமாக வீட்டிலேயே கீழே விழுந்ததில், வலது தோள் பட்டை வலி இருந்து கொண்டே உள்ளது. வெளிப்பூச்சு மருந்துடன் (அயோடக்ஸ) இந்தப்பயிற்சியும் மெல்ல முயற்சித்தால் வலி குணமாகும் என நினைக்கிறேன். மெள்ள செய்யவும் பார்க்கிறேன் பகிர்வுக்கு மிக்க நன்றி சகோதரி.

    நன்றியுடன்
    கமலா ஹரிஹரன்

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வணக்கம் கமலா ஹரிஹரன், வாழ்க வளமுடன்

      //பதிவு அருமை. யோகா, உடற்பயிற்சி குறித்த விஷயங்களுடன் பதிவு நன்றாக உள்ளது//

      நன்றி.

      //நான் முன்பு இந்த உடற்பயிற்சிகளை செய்து கொண்டுருந்தேன். அதாவது எங்கள் அண்ணா ஆழியார் சென்று விட்டு வந்த பின், மகரிஷி அவர்கள் சொன்னபடிக்கு, அவர் கற்றுக் கொண்ட சில பயிற்சிகளை எனக்கும் சொல்லித் தந்து அதன்படி செய்து கொண்டிருந்தேன். இப்போது விட்டுப் போய் விட்டது.//

      முன்பு ஒரு பதிவில் சொல்லி இருந்தீர்கள். முடிந்த போது செய்யுங்கள்.

      //எங்கள் சின்ன மகனும், மருமகளும் யோகா பயிற்சிக்கு தவறாமல் சென்று வருகிறார்கள்.//
      என் மகனும், மருமகளும், பேரனும் செய்து வருகிறார்கள். மகள் விட்டு விட்டு செய்வாள். (நேரம் கிடைக்கும் போது)


      //உண்மைதான். செய்ய நாட்தோறும் பழகிக் கொள்ள வேண்டும். நமக்கு என்று நேரம் கிடைக்காமல் போகவில்லை. ஆனால் அந்த நேரத்தில் வேறு பல வேலைகளை (இணையம் வருவது, கணினி பார்ப்பது) நமக்காக செய்து கொள்கிறோம். அத்துடன் சில பயிற்சிகளையும் எடுத்துக் கொள்ள வேண்டுமென உங்கள் பதிவின் மூலம் உணர்கிறேன். அந்த நல்ல வேளை இறைவன் அருளால் திருப்பி வர வேண்டும்.//

      செய்தால் மேலும் குடும்பத்தினருக்கு மகிழ்ச்சியாக செய்ய உடல் ஒத்துழைக்கும். இறைவன் அருள்புரிவார்.

      //காணொளி கண்டேன். ஒரு மாதமாக வீட்டிலேயே கீழே விழுந்ததில், வலது தோள் பட்டை வலி இருந்து கொண்டே உள்ளது. வெளிப்பூச்சு மருந்துடன் (அயோடக்ஸ) இந்தப்பயிற்சியும் மெல்ல முயற்சித்தால் வலி குணமாகும் என நினைக்கிறேன். மெள்ள செய்யவும் பார்க்கிறேன் பகிர்வுக்கு மிக்க நன்றி சகோதரி.//

      நானும் கீழே விழுந்து விழுந்து எழுந்துதான் இப்போது இடுப்பு, கால் வ்லியில் இருக்கிறேன். மருத்துவரிடம் சென்று கவனி கொள்ளுங்கள் பிசியோதெரபி எடுத்து கொள்ளுங்கள். ஜஸ் ஒத்தடம், வெந்நீர் பை ஒத்தடம் கொடுங்கள் விரைவில் சரியாகும்.
      வலி இல்லாதபோது உடற்பயிற்சி செய்யலாம்.

      உங்கள் விரிவான கருத்துக்கு நன்றி.


      நீக்கு
  10. முன்னர் பகிர்ந்த போதும் வாசித்திருக்கிறேன். நீங்கள் சொன்னது போல் மீண்டும் மீண்டும் வாசித்து மனதில் இருத்த வேண்டிய கருத்துகள். மூச்சுப் பயிற்சி மற்றும் சில உடற்பயிற்சிகள் தவறாமல் செய்து வருகிறேன். மீள் பகிர்வுக்கு நன்றி.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வணக்கம் ராமலக்ஷ்மி, வாழ்க வளமுடன்

      //முன்னர் பகிர்ந்த போதும் வாசித்திருக்கிறேன். நீங்கள் சொன்னது போல் மீண்டும் மீண்டும் வாசித்து மனதில் இருத்த வேண்டிய கருத்துகள். மூச்சுப் பயிற்சி மற்றும் சில உடற்பயிற்சிகள் தவறாமல் செய்து வருகிறேன். மீள் பகிர்வுக்கு நன்றி.//

      மூச்சுப் பயிற்சி மற்றும் சில உடற்பயிற்சிகள் செய்து வருவது நல்லது.
      உங்கள் கருத்துக்கு நன்றி ராமலக்ஷ்மி.

      நீக்கு
  11. முன்பும் படித்திருக்கிறேன். நல்ல பகிர்வை மீண்டும் நினைவில் கொள்ள தந்துள்ளீர்கள். நன்றி.

    காணொளிகளும் அருமை.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வணக்கம் மாதேவி, வாழ்க வளமுடன்

      //முன்பும் படித்திருக்கிறேன். நல்ல பகிர்வை மீண்டும் நினைவில் கொள்ள தந்துள்ளீர்கள். நன்றி.

      காணொளிகளும் அருமை.//

      ஆமாம், மாதேவி முன்பும் படித்து கருத்து தந்து இருக்கிறீர்கள்.
      மீண்டும் படித்து கருத்து சொன்னதற்கு நன்றி மாதேவி.

      நீக்கு
  12. மிகவும் நல்ல பதிவு!
    //பேராசையை- - -------- நிறைமனமாகவும்
    சினத்தை - - ---------- சகிப்புத்தன்மையாகவும்
    கடும்பற்றினை ----------- ஈகையாகவும்
    முறையற்றபால்கவர்ச்சியை---------------- கற்பாகவும்
    உயர்வு தாழ்வு மனப்பான்மையை---------- சமநோக்காகவும்
    வஞ்சத்தை ---------- மன்னிப்பு ஆகவும்

    மாற்றி அமைத்தாலன்றி மனிதன் மனிதாக இருக்க முடியாது.// இவைகளை கடைபிடித்தாலே நாம் உயர்வோம்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வணக்கம் பானுமதி வெங்கடேஷ்வரன், வாழ்க வளமுடன்
      உங்கள் கருத்துக்கு நன்றி.
      சில நாட்களாக இணையம் பக்கம் வரவில்லை இன்று தான் தான் பார்த்தேன், மன்னிக்கவும்.

      நீக்கு