சனி, 18 பிப்ரவரி, 2023

மயிலாடுதுறை துலா கட்டம்

முழுக்குத்துறை போகும் வழி. 

மயிலாடுதுறையில் ஐப்பசி மாதம் முழுவதும்  சுவாமி தீர்த்தம் கொடுக்கும் நிகழ்ச்சி நடைபெறும். பல ஊர்களிலிருந்தும் மக்கள் துலா ஸ்தானம் செய்ய வருவார்கள். 

ஐப்பசி மாதம் சூரியன் துலா ராசியில் பிரவேசம் செய்கிறார் அதனால் "துலாமாதம் " என்று ஐப்பசி மாதத்தை சொல்வார்கள். அந்த மாதம் முழுவதும் மயிலாடுதுறை ஜே! ஜே! என்று இருக்கும். வீடுகள் தோறும் உறவினர்கள் இருப்பார்கள். எங்கள் வீட்டுக்கும் அந்த சமயம் உறவுகள், நட்புகள் வருவது உண்டு துலாஸ்தானம் செய்ய. "கடை முழுக்கு" வர முடியவில்லை என்றால் கார்த்திகை ஒன்றில் நடக்கும் "முடவன் முழுக்கில் "கலந்து கொள்வார்கள்.


மயூரநாதர் கோவில் கும்பாபிஷேக திருப்பணிகள் நடப்பதால் இந்த மண்டபமும் பழுது பார்க்கப்படும் என்று நினைக்கிறேன்.

துலா உற்சவம் நடைபெறும் போது தீர்த்தவாரிக்கு வரும் திருவாடுதுறை ஆதினத்திற்கு சொந்தமான அபயாம்பிகை சமேத மயூரநாதர், அறம்வளர்த்த நாயகிசமேத ஐயாரப்பர், 
தருமபுர ஆதீனத்திற்கு சொந்தமான காசி விசாலாட்சி , விஸ்வநாதர் கோவில்களிலிருந்து சுவாமிகள் பஞ்சமூர்த்திகளுடன் இந்த மண்டபத்தில்  எழுந்தருளுவார்கள்.

இந்த முறை மயூரநாதர் கோவில் கும்பாபிஷேக திருப்பணி நடைபெறுவதால்  துலா உற்சவத்திற்கு  சுவாமி வரவில்லை.
காசி விஸ்வநாதர் கோவில், ஐயாறப்பர் கோவில் சுவாமிகள் மட்டும் தீர்த்தவாரிக்கு வந்தார்கள்.

தீர்த்தவாரி கொடுக்கும் படித்துறை மண்டபம்  (வெளிபக்கம்)

படித்துறை மண்டபம் (உள்பக்கம்)

பிள்ளையார் சன்னதி எதிர் பக்கம் முருகன் இருப்பார் என்று நினைக்கிறேன், எடுக்க மறந்து விட்டேன்.

காவிரி வரக் காரணமான பிள்ளையார் , அகத்தியர்  இருக்கிறார்கள்  காவிரி அம்மனும் இருக்கிறார்.
நீர் வரத்து இல்லை நீர் வற்றி உள்ளே உள்ள கிணறுகள் தெரிகிறது

தருமபுரம் ஆதீனத்திற்கு சொந்தமான ஞானாம்பிகை சமீத வதான்யேஸ்வரர் கோவில் (வள்ளலார் கோவில் என்று அழைக்கப்படும்) பஞ்சமூர்த்திகள் எழுந்தருளும் மண்டபம் எதிர்கரையில் இருக்கிறது. மண்டபத்தில் விழா சமயம் மட்டும்  உபயோகபடுத்த கதவு போட்டு இருக்கிறார்கள்.  எதிர் கரையிலும் மூன்று கோவில்கள் இருக்கிறது. விழாகாலங்களில் அங்கும்  சிறப்பாக கச்சேரிகள் நடக்கும்.  உற்சவர்கள் எழுந்தருளுவது எல்லாம் உண்டு.

தீர்த்தவாரி நடக்கும் போது  சுவாமி கிட்ட பக்தர்கள் வந்து விடாமல் இருக்க கம்பி தடுப்பு புதிதாக போட பட்டு இருக்கிறது. முன்பு கிடையாது . கொஞ்ச தூரம் சிமெண்ட் கலவை  நடைபாதை வேறு போட்டு இருக்கிறார்கள்.

இக்கரையிலிருந்து அக்கரை போக வலப்பக்கம்  பாலம் இருக்கிறது, தூரத்தில் தெரிகிறதா? காமிரா கொண்டு போகவில்லை அலைபேசியில் எடுத்த படங்கள்.

புண்ணிய நதிகளில் எல்லாம் மக்கள் பாவத்தை போக்க நீராடியதால்  மக்களின் பாவசுமையால் நதிகள் கருமைநிறம் அடைந்ததாகவும் அனைத்து ஜீவ நதிகளும் காவிரி துலாகட்டத்தில் ஐப்பசி முழுவதும்  புனித நீராடி சிவனை வழிபட்டு தங்கள் பழைய நிலையை அடைந்ததாக புராண வரலாறு சொல்கிறது.அப்படி பட்ட புனித நதியை மக்கள் குப்பைகளை கொட்டி மாசு செய்வதை பார்க்கும் போது மனது வேதனைப் படுகிறது.

                            தூரத்தில் பாலம் தெரிகிறது.


காவிரி அம்மன் குடத்தை கையில் வைத்து கொண்டு இருக்கிறார்ஆடிபெருக்கு சமயம்  காவிரி அம்மனை வணங்கி பெண்கள் அரசமரத்தில் மஞ்சள் நூல் கட்டுவார்கள். நூல் கண்டு கொண்டு வந்து மஞ்சளில் நனைத்து மரத்தை சுற்றிக் கட்டுவார்கள். நாக தோசம் நீங்க நாக சிலைகள் கொண்டு வந்து வைத்து அதற்கு பால் அபிஷேகம் செய்வார்கள்.

எதிர்கரையில் மூன்று கோவில்கள் தெரிகிறதா?


இன்னும் பழைய காலத்து வீடுகள் இங்கு இருக்கிறது
படியில்  குப்பைகள் கிடக்கிறது.   என்று மகன் தீர்த்தம் எடுத்து வந்தான், தலையில் தெளித்துக் கொண்டேன், காவிரி அம்மனை வணங்கி. தொடர் பயணத்தால் கால்வலி இருந்தது, அதனால் கீழே இறங்கவில்லை நான்.

 நெகிழி குப்பைகளில் கவனமில்லாமல் கால் வைத்தால் வழுக்கிவிடும். கவனமாக இறங்க வேண்டும்.
கரையை ஒட்டிய வீடுகளின் கழிவு நீர், மற்றும் குப்பைகள் கொட்டபடும் முன்பு, இப்போது தடுத்து இருக்கிறார்களா தெரியவில்லை.இந்த கடையில் மகன்  பூத முகம் சின்னது, பெரிது வாங்கினான் ஹாலோவின் சமயம் வீட்டில் தொங்கவிடலாம் என்று. இந்த கடையில் பூஜை பலகைகள், மற்றும் கோவிலில் நேர்ந்து கட்டும் தொட்டில்கள் , பிரம்பு, மூங்கில் கூடைகள் கிடைக்கும். பூஜைக்கு வேண்டிய அனைத்தும் வாங்கலாம்.

துலா கட்ட மண்டபத்தை சுற்றி உள்ள கடைகளில்  வீட்டுக்கு வேண்டிய அனைத்து சாமான்களும் கிடைக்கும். பழைய , புதிய சாமான்கள் கிடைக்கும்.


//பக்கத்தில் இருக்கும்  துலா கட்டம் போனோம், அங்கு இருக்கும் கடைகள் போனோம், அந்த பதிவுகளும் பின்னர் வரும்.//  என்று போன பதிவில் சொல்லி இருந்தேன். இங்கு பதிவு செய்து விட்டேன்.

அடுத்த பதிவு மயூரநாதர் கோவில்.

வாழ்க வையகம்! வாழ்க வையகம்! வாழ்க வளமுடன்!
---------------------------------------------------------------------------------------------------

43 கருத்துகள்:

 1. //அப்படிப் பட்ட புனித நதியை மக்கள் குப்பைகளை கொட்டி மாசு செய்வதை பார்க்கும் போது மனது வேதனைப் படுகிறது.//

  இதுதான் எல்லா ஊர்களிலும் நடக்கின்றது..

  இறைச்சிக் கழிவுகள் கூட கொட்டப் படுகின்றன..

  கடவுள் தான் மக்களுக்கு நல்ல புத்தியைக் கொடுக்க வேண்டும்..

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வணக்கம் சகோ துரை செல்வராஜூ, வாழ்க வளமுடன்

   //இதுதான் எல்லா ஊர்களிலும் நடக்கின்றது..

   இறைச்சிக் கழிவுகள் கூட கொட்டப் படுகின்றன..//

   அதுதான் கவலையாக இருக்கிறது, கழிவுகளை தோட்டத்திற்கு உரமாக மாற்றலாம். முன்பு தோட்டம் இருப்பவர்கள் குழி தோண்டி குப்பைகளை போட்டு மூடி வைப்பார்கள், அந்த உரக்குழி உரங்களை விவாசய மக்கள் வந்து உரத்திற்கு வாங்கி போவார்கள்.

   //கடவுள் தான் மக்களுக்கு நல்ல புத்தியைக் கொடுக்க வேண்டும்..//

   மக்கும் குப்பை, மக்கா குப்பை போட இரண்டு டப்பாக்கள் கொடுத்து பிரித்து போட சொன்னாலும் கேட்காத மக்கள்.

   நீக்கு
 2. மயிலாடு துறையை சுற்றிப் பார்த்த உணர்வு..

  வாழ்க வளமுடன்..

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. //மயிலாடு துறையை சுற்றிப் பார்த்த உணர்வு..

   வாழ்க வளமுடன்..//

   உங்கள் கருத்துக்களுக்கும் வாழ்த்துக்கும் நன்றி.

   நீக்கு
 3. மண்டபத்தின்மேல் செடிகள் முளைத்திருப்பது கண்களை உறுத்துகிறது.  எவ்வளவு நாட்களாக கவனிக்காமல் வைத்திருக்கிறார்களோ...

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வணக்கம் ஸ்ரீராம், வாழ்க வளமுடன்
   மாயவரத்தில் புதிதாக கட்டிய கட்டிங்கள் கூட இரண்டு வருடம் ஆனதும் வெள்ளை அடித்தது கருமை அடைந்து போய் பழசு மாதிரி ஆகிவிடும். இந்த கட்டிடம் மிக பழமையானது. உழவார பணி செய்வோர் செய்து கொண்டுதான் இருக்கிறார்கள்.
   மாயூரநாதர் கோவில் திருப்பணி நடக்கிறது, இங்கும் செய்வார்கள் என்று நினைக்கிறேன்.

   நீக்கு
 4. ஒவ்வொரு ஊரில் ஒவ்வொரு கொண்டாட்டம்..  துலா உற்சவம் அவ்வளவு சிறப்பாக நடைபெறுமா?  ஊர் முழுவதும் கொண்டாட்டமாக இருக்கும் என்றால் எனக்கு மதுரை சித்திரைத் திருவிழா நினைவுக்கு வருகிறது!

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. //ஒவ்வொரு ஊரில் ஒவ்வொரு கொண்டாட்டம்.. துலா உற்சவம் அவ்வளவு சிறப்பாக நடைபெறுமா?//

   ஆமாம், மிக சிறப்பாக நடக்கும் 10 நாள் கோடியேறி கோவில்களில் சாமி வீதி உலா வருவார். கடை முழுக்கு கடைகள் , பொருட்காட்சி எல்லாம் உண்டு.
   வெளியூரிலிருந்து வருபவர்கள் தடுப்பு ஊசி போட்டுக் கொண்டுதான் ஊருக்குள் நுழைய முடியும். முன்பு. இப்போது எப்படியோ தெரியவில்லை.
   உங்கள் கருத்துக்களுக்கு நன்றி.
   //ஊர் முழுவதும் கொண்டாட்டமாக இருக்கும் என்றால் எனக்கு மதுரை சித்திரைத் திருவிழா நினைவுக்கு வருகிறது!//
   மதுரை சித்திரைத் தேர் மாதிரி இருக்காது. அது போன்ற திருவிழா.
   உங்கள் கருத்துக்கு நன்றி.

   நீக்கு
  2. உங்கள் பின்னூட்டங்கள் இரண்டு தடவை வந்து இருக்கிறது (இரு பின்னூட்டங்களும்.)

   நீக்கு
 5. அவ்வளவு மழைபொழிவு இருந்தும் குளங்கள் வற்றிக் காணப்படுவது வருத்தமே.  நவீனம், சீர்செய்கிறேன் என்கிற பெயரில் கோவில் குளத்துக்கு நீர் வரும் வழிகளை அடைத்து மறித்து உடைத்து ஏதாவது பண்ணியிருப்பார்கள்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. //அவ்வளவு மழைபொழிவு இருந்தும் குளங்கள் வற்றிக் காணப்படுவது வருத்தமே. நவீனம், சீர்செய்கிறேன் என்கிற பெயரில் கோவில் குளத்துக்கு நீர் வரும் வழிகளை அடைத்து மறித்து உடைத்து ஏதாவது பண்ணியிருப்பார்கள்.//

   ஆடி மாதம் நிறைய நீர் இருந்தது ஸ்ரீராம். நாங்கள் போனது கார்த்திகை மாதம் நீர் வற்றி விட்டது. நீர் வரும் வழிகளை சீர் செய்து இருப்பார்கள்.

   நீக்கு
 6. பக்கத்து உயரங்கள் கண்ணுக்கு தெரிவதில்லை.  தூரத்துப் பச்சைதான் கண்ணுக்கு குளுமை!  கங்கையை புண்ணிய நதி என்போம்.  வடநாடு ஓடுவோம்.  அந்த கங்கையே வந்து பாவத்தைப் போக்கிக் கொள்ளும் காவிரியை மதிக்க மாட்டோம்!

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. //பக்கத்து உயரங்கள் கண்ணுக்கு தெரிவதில்லை. தூரத்துப் பச்சைதான் கண்ணுக்கு குளுமை! கங்கையை புண்ணிய நதி என்போம். வடநாடு ஓடுவோம். //

   ஆமாம், ஒரு காலத்தில் கூட்டம் அலை மோதும், தண்ணீர் இல்லா காலத்திலும் மோட்டார் போட்டு தண்ணீர் வரவழைத்து அதில் தீர்த்தவாரி கொடுத்தார்கள் சுவாமிகள்.

   //அந்த கங்கையே வந்து பாவத்தைப் போக்கிக் கொள்ளும் காவிரியை மதிக்க மாட்டோம்!//

   உள்ளூர் மக்கள் மதித்தால் எல்லோரும் மதிப்பார்கள்.

   நீக்கு
 7. அருகாமை வீட்டுக்காரர்கள் தங்கள் கழிவுகளை இதில் விடாமல் இருப்பார்களா?  கட்டாயம் விடுவார்கள்.  நம் மக்கள் அபப்டி!  அலைபேசியில் எடுத்திருந்தாலும் படங்கள் யாவும் அழகு.  கோவில், கோவில் குளம், சுற்றுப்புறம் எல்லாம் பார்க்க முடிந்ததே..

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. //அருகாமை வீட்டுக்காரர்கள் தங்கள் கழிவுகளை இதில் விடாமல் இருப்பார்களா? கட்டாயம் விடுவார்கள்.//

   ஆமாம், நமக்கு பார்க்கவே கஷ்டமாக இருக்கும். வீட்டுக்கு பக்கத்தில் காலி மனை இருந்தால் அதில் குப்பை கூளங்களை போடுவார்கள் நம் மக்கள்.
   //அலைபேசியில் எடுத்திருந்தாலும் படங்கள் யாவும் அழகு. கோவில், கோவில் குளம், சுற்றுப்புறம் எல்லாம் பார்க்க முடிந்ததே..//

   நன்றி ஸ்ரீராம்.

   நீக்கு
 8. இன்னும் இரண்டு கமெண்ட்ஸ் மிஸ்ஸிங் என்று நினைக்கிறேன்.  இரண்டோ மூன்றோ..  நினைவில்லை.  ஸ்பாமில் இருக்கிறதா என்று பார்க்கவும்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. இரண்டு பின்னூட்டம் திரும்ப வந்து இருக்கிறது. மற்றவைகள் ஸ்பாமில் இருந்தது விடுவித்து விட்டேன்.

   நீக்கு
 9. அருகாமை உயரங்கள் கண்ணுக்குத் தெரியாது என்று தொடங்கி ஒரு பின்னூட்டம் இட்டிருந்தேன்.  காணோமே..

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. அனைத்தும் வந்து விட்டது என்று நினைக்கிறேன். உங்கள் கருத்துக்களுக்கு நன்றி ஸ்ரீராம்.

   நீக்கு
 10. படங்கள் அழகு... சில தகவல்கள் மக்களின் மனதை காட்டுகிறது...

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வணக்கம் திண்டுக்கல் தனபாலன், வாழ்க வளமுடன்
   //படங்கள் அழகு... சில தகவல்கள் மக்களின் மனதை காட்டுகிறது...//

   உங்கள் கருத்துக்கு நன்றி தனபாலன்.

   நீக்கு
 11. கரையை ஒட்டிய வீடுகளின் கழிவு நீர், மற்றும் குப்பைகள் கொட்டபடும் முன்பு, இப்போது தடுத்து இருக்கிறார்களா தெரியவில்லை.//

  அடக்கடவுளே!! நான் இங்கு ஏரிகள் அப்படித்தான் இருக்கின்றன என்று புலம்புவதுண்டு பார்த்தா கோயில் குளங்களும் அப்படியா...இப்போது தடுத்து நிறுத்தப்பட்டிருப்பது நல்ல விஷயம் கோமதிக்கா

  கீதா

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வணக்கம் கீதா ரெங்கன், வாழ்க வளமுடன்

   //அடக்கடவுளே!! நான் இங்கு ஏரிகள் அப்படித்தான் இருக்கின்றன என்று புலம்புவதுண்டு பார்த்தா கோயில் குளங்களும் அப்படியா...இப்போது தடுத்து நிறுத்தப்பட்டிருப்பது நல்ல விஷயம் கோமதிக்கா//

   நாங்கள் அங்கு இருந்தபோது அப்படி கல்ந்து கொண்டு இருந்தது, இப்போது எப்படி என்று தெரியவில்லை என்றேன்.

   நீக்கு
 12. குளம் என்று சொல்லிவிட்டேன்...நதிக்கரை இல்லையா...நதியில் கொட்டுவதும் நடக்கிறதுதான்....படித்துறைகளில் ஒரே குப்பையாக இருக்கே

  கீதா

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. //குளம் என்று சொல்லிவிட்டேன்...நதிக்கரை இல்லையா...நதியில் கொட்டுவதும் நடக்கிறதுதான்....படித்துறைகளில் ஒரே குப்பையாக இருக்கே//

   காவேரி ஆறு என்று தான் சொல்வோம். காவேரி நதி என்றும் சொல்லலாம். வீட்டில், கோவில்களில் பூஜை செய்யும் நிர்மாலயங்களை ஓடும் நதியில் கொட்டலாம், ஓடி விடும். இது ஓடாமல் இருக்கும் ஆறு. மேட்டூர் டேம் திறந்துவிடும் போதும், மழை வெள்ள காலங்களில் மட்டுமே ஓடும் ஆறு. அதில் குப்பைகளை கொட்டினால் அங்குதான் கிடக்கும்.
   குளிக்க வருபவர்கள் சோப் கவர் நெகிழி பைகளை போட்டு போய் இருக்கிறார்கள் படியில்.

   நீக்கு
 13. கடை முழுக்கு - முடவன் முழுக்கு இவை புதியதாய் அறிகிறேன்.

  அக்கா நதியா குளமா? ஒரு படத்தில் கம்பி கட்டம் போட்டு குளம் போல இருக்குதே

  கீதா

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. கடை முழுக்கு - முடவன் முழுக்கு இவை புதியதாய் அறிகிறேன்.//

   ஐப்பசி மாதம் முழுவதும் காவேரி ஆற்றில் ஸ்தானம் செய்வது , கடைசி நாள் கடை முழுக்கு. ஆற்றில் முங்கி குளித்தல் முழுக்கு.
   முடவன் முழுக்கு என்பது மாற்று திறளானி கால் நடக்க முடியாதவர் தவழ்ந்து வந்து ஆற்றில் முழுக வந்தார், அவர் வந்து சேர ஐப்பசி மாத இரவு ஆகி விட்டது இறைவன் தீர்த்தம் கொடுத்து போய் விட்டார் அதனால் அவர் இறைவனிடம் வருந்திய போது இறைவன் அவ்ருக்கும் சிவபக்தர் நாத சர்மா, மற்றும் அவர் மனைவி , மூவருக்கும் மறுநாள் கார்த்திகை 1ம் தேதி மீண்டு காட்சி கொடுத்து தீர்த்தவாரி செய்தார்.
   நீண்டு போகும் ஆறு முழுகும் படித்துறையில் மட்டும் கம்பி கட்டம் போட்டு இருக்கிறார்கள்

   நீக்கு
 14. காவிரி நதியில் துலா முழுக்கிற்காக அப்படிக் கட்டம் போட்டு படித்துரை போல கட்டி வைச்சிருக்காங்களோ

  கீதா

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. //காவிரி நதியில் துலா முழுக்கிற்காக அப்படிக் கட்டம் போட்டு படித்துரை போல கட்டி வைச்சிருக்காங்களோ//

   சுவாமிகள் தீர்த்தவாரிக்கு வரும் இடம் மட்டும் இப்படி கட்டம் போட்டு வைத்து இருக்கிறார்கள்.

   நீக்கு
 15. நடுவில் குட்டியாய் மண்டபம் இருப்பது அழகு..

  துலாக்கட்டம் சுத்தமாக இல்லையே அக்கா

  பாலம் தெரிகிறது அக்கா வலப்பக்கம்...நன்றாகவே தெரிகிறது

  கீதா

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. //நடுவில் குட்டியாய் மண்டபம் இருப்பது அழகு..

   துலாக்கட்டம் சுத்தமாக இல்லையே அக்கா

   பாலம் தெரிகிறது அக்கா வலப்பக்கம்...நன்றாகவே தெரிகிறது//

   ஆறு குளத்தில் அந்த நீராழி மண்டபம் மேலும் அழகுதரும்.
   நம் மக்கள் சாமிக்கு சாற்றிய மாலைகள் காலில் மிதிபட கூடாது என்று ஆறு குளத்தில் போடுகிறார்கள், அது ஓடும் ஆறாக இருந்தால் ஓடி விடும். அவர்கள் வீட்டு தோட்டத்தில் போடலாம். தோட்டம் இல்லாதவர்கள் இப்படித்தான் போடுவார்கள். ஒன்றும் செய்ய முடியாது.
   பாலம் தெரிவது மகிழ்ச்சி.

   நீக்கு
 16. நதிகள் இப்படி மாசுபட்டு இருப்பது மனதிற்கு வேதனையாக இருக்கிறது..

  காவிரி அம்மன் கையில் குடம்...இப்படியான விஷயங்கள் இப்போதுதான் தெரிந்து கொள்கிறேன்

  எதிர்க்கரைகளில் மூன்று கோயில்கள் தெரிகின்றன

  பழையகாலத்து வீடுகள் அழகாக இருக்கின்றன ஆனால் எப்ப இடிந்துவிடுமோ என்றும் தோன்றுகிறது...

  நெகிழி குப்பைகளில் கவனமில்லாமல் கால் வைத்தால் வழுக்கிவிடும். கவனமாக இறங்க வேண்டும்.//

  ஆமாம் ஆமாம்...அப்படித்தானே இப்ப சமீபத்தில் நம் வீட்டில் தெருவில் விபத்து. ஏன் தான் மக்கள் இப்படி இருக்கிறார்களோ?

  //கரையை ஒட்டிய வீடுகளின் கழிவு நீர், மற்றும் குப்பைகள் கொட்டபடும் முன்பு, இப்போது தடுத்து இருக்கிறார்களா தெரியவில்லை.//

  ஓ இப்போது தடுத்து இருக்கிறார்களா தெரியவில்லைன்னுதான் சொல்லியிருக்கீங்க....ஆனா முதல்ல கண்ணுல இந்த வரி பட்டபோது தடுத்து இருப்பது நல்ல விஷயம்னு தெரியாம சொல்லிட்டேன்..

  அதானே பார்த்தேன் எங்கடா தடுத்திருக்காங்களே அடன்னு தோன்றியது. இதோ இங்கும் எல்லா ஏரிகளிலும் இப்படித்தான்...

  அக்கா நீங்க சொன்னப்டி கரெக்ட்டா போட்டுவிடுகிறீர்கள்...நல்ல விஷயம்,

  படங்கள் எல்லாம் அழகா இருக்கு கோமதிக்கா மொபைல் என்றாலும்...மற்ற கேமரா போலவே இருக்கின்றன...

  கீதா

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. நதிகள் இப்படி மாசுபட்டு இருப்பது மனதிற்கு வேதனையாக இருக்கிறது.//
   ஆமாம் வேதனைதான்.
   //காவிரி அம்மன் கையில் குடம்...இப்படியான விஷயங்கள் இப்போதுதான் தெரிந்து கொள்கிறேன்

   எதிர்க்கரைகளில் மூன்று கோயில்கள் தெரிகின்றன//

   நன்றி.

   //பழையகாலத்து வீடுகள் அழகாக இருக்கின்றன ஆனால் எப்ப இடிந்துவிடுமோ என்றும் தோன்றுகிறது...//

   முன்பு ஆற்றின் எதிர் கரையில் ஒரு வீட்டில் ஐந்து வகை மரங்கள் முளைத்து இடித்து கொண்டு இருந்த விட்டை படம் போட்டேன்.
   இந்த வீட்டில் யார் இருந்தார்களோ எத்தனை கதைகள் இருக்கோ இந்த வீட்டுக்கு என்று.

   அதற்கு அழகான கவிதை எழுதினார் கீதமஞ்சரி.

   //அக்கா நீங்க சொன்னப்டி கரெக்ட்டா போட்டுவிடுகிறீர்கள்...நல்ல விஷயம்,//

   முடிந்தவரை பகிர்கிறேன். இறைவன் சித்தம்.

   //படங்கள் எல்லாம் அழகா இருக்கு கோமதிக்கா மொபைல் என்றாலும்...மற்ற கேமரா போலவே இருக்கின்றன...//
   அனைத்தையும் ரசித்து பல கருத்துக்கள் சொன்ன உங்களுக்கு நன்றி கீதா.

   நீக்கு
 17. தகவல்களும் படங்களும் அருமை. கையில் குடத்துடன் காவேரி அம்மன் அழகு. மக்கள் நதியை மாசுப் படுத்தாமல் இருக்க வேண்டும்.

  இங்கிருந்து வாங்கி செல்லும் பூத முகங்கள் ஹாலோவின் சமயத்தில் வித்தியாசமானதாக இருக்கும்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வணக்கம் ராமலக்ஷ்மி, வாழ்க வளமுடன்
   //தகவல்களும் படங்களும் அருமை. கையில் குடத்துடன் காவேரி அம்மன் அழகு. மக்கள் நதியை மாசுப் படுத்தாமல் இருக்க வேண்டும்.//

   ஆமாம், அதுதான் எல்லோர் விருப்பமும்.

   //இங்கிருந்து வாங்கி செல்லும் பூத முகங்கள் ஹாலோவின் சமயத்தில் வித்தியாசமானதாக இருக்கும்.//
   ஆமாம், அங்குள்ள பூதங்கள் பரங்கிகாய் பூதம், நம் ஊரில் வெள்ளைபூசணி யில் பூதம் முகம் வரைந்து கண் திருஷ்டிக்கு வைப்போம்.(தடியங்காய்) அந்த படம் தேடொனோம் கிடைக்கவில்லை. பூதமுகங்கள் மட்டும் வாங்கினான்.

   உங்கள் கருத்துக்கு நன்றி.


   நீக்கு
 18. படங்கள் வழக்கம் போல அருமை சகோ

  கோயில் விவரங்கள் நன்று நல்லதொரு தரிசனம் கிடைத்தது நன்றி

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வணக்கம் தேவகோட்டை ஜி, வாழ்க வளமுடன்
   //படங்கள் வழக்கம் போல அருமை சகோ

   கோயில் விவரங்கள் நன்று நல்லதொரு தரிசனம் கிடைத்தது நன்றி//

   உங்கள் கருத்துக்கு நன்றி ஜி.

   நீக்கு
 19. துலா கட்டம் இவ்வளவு அழகான இடத்தில் இவ்வளவு குப்பையா? நெகிழி போன்றவை வந்தாலும் வந்தது, எங்கு பார்த்தாலும் குப்பை கூளங்கள்.

  முன்பு நீர் இருக்கும் இடங்களில் மக்கள் நீராடியதால் நன்றாக வைத்துக்கொண்டிருந்தார்கள். அங்கு அழுக்கு என்று பார்த்தால், விரலி மஞ்சளை படித்துறையில் தேய்த்திருப்பார்கள் (குளிக்க) மற்றபடி சுத்தமாக இருக்கும். இப்போ, எல்லோருமே துலா கட்டங்களை உபயோகப்படுத்தாததால் டூரிஸ்ட் என்ற பெயரில் குப்பை கூளங்களாக ஆகிவிடுகின்றன

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வணக்கம் நெல்லைத் தமிழன், வாழ்க வளமுடன்

   //துலா கட்டம் இவ்வளவு அழகான இடத்தில் இவ்வளவு குப்பையா? நெகிழி போன்றவை வந்தாலும் வந்தது, எங்கு பார்த்தாலும் குப்பை கூளங்கள்.//

   இப்போது கொஞ்சம் பரவாயில்லை. முன்பு ஐப்பசி மாதம் விழா முடிந்ததும் நிறைய குப்பைகள் இருக்கும்.

   //முன்பு நீர் இருக்கும் இடங்களில் மக்கள் நீராடியதால் நன்றாக வைத்துக்கொண்டிருந்தார்கள். அங்கு அழுக்கு என்று பார்த்தால், விரலி மஞ்சளை படித்துறையில் தேய்த்திருப்பார்கள் (குளிக்க) மற்றபடி சுத்தமாக இருக்கும். இப்போ, எல்லோருமே துலா கட்டங்களை உபயோகப்படுத்தாததால் டூரிஸ்ட் என்ற பெயரில் குப்பை கூளங்களாக ஆகிவிடுகின்றன//

   முன்பு வீட்டில் வயதானவர்கள் தினம் துலாகட்டத்தில் நீராடினார்கள், இன்று நீங்கள் சொல்வது போல நீராட ஆள் இல்லை. வெளியூரிலிருந்து வருபவர்கள் மட்டுமே வருகிறார்கள்.

   நீக்கு
 20. காவிரி அம்மன் சிலை மிக அழகு. இதுபோன்ற ஆனால் அமர்ந்த நிலையில், திருச்சேறை கோயிலின் முன்னுள்ள குளக்கரையில் ஒரு சன்னிதி இருக்கும்

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. //காவிரி அம்மன் சிலை மிக அழகு. இதுபோன்ற ஆனால் அமர்ந்த நிலையில், திருச்சேறை கோயிலின் முன்னுள்ள குளக்கரையில் ஒரு சன்னிதி இருக்கும்//

   திருச்சேறை பார்த்து இருக்கிறேன். குளக்கரை சன்னதி நினைவு இல்லை.

   இரண்டு நாட்கள் வெளியூர் பயணம் . பதிவுகளை பார்க்கவில்லை. இனிதான் பார்க்க வேண்டும்.


   உங்கள் கருத்துக்களுக்கு நன்றி.

   நீக்கு
 21. மயிலாடுதுறை துலாகட்டம் தரிசனம் கிடைத்தது படங்கள் அனைத்தும் அருமை .

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வணக்கம் மாதேவி, வாழ்க வளமுடன்
   //மயிலாடுதுறை துலாகட்டம் தரிசனம் கிடைத்தது படங்கள் அனைத்தும் அருமை .//

   உங்கள் கருத்துக்கு நன்றி மாதேவி.

   நீக்கு