ஞாயிறு, 21 ஆகஸ்ட், 2022

கூடு கட்ட இடம் தேடும் குருவிகள்


புள்ளிச்சில்லை குருவி எங்கள் குடியிருப்புக்கு ஆகஸ்ட் 15ம் தேதி கூடு கட்ட இடம் தேடிய போது எடுத்த படங்கள்,  மற்றும் திணைக்குருவிகள் (19ம் தேதி ) கூடு கட்ட இடம் தேடிய காட்சிகளும்  இந்த பதிவில் இடம்பெறுகிறது.

இந்த வீட்டில் கட்டலாமா?

இந்த இடம் சரி வருமா?
எங்கள் வீட்டில் முன்பு கட்டிய இடத்தை வந்து எட்டிப்பார்த்து கொண்டு இருக்கிறது

ஜன்னல் வழியே என்ற பதிவில் இந்த பறவையை பதிவு போட்டு இருக்கிறேன்.

புள்ளிச்சில்லை (முனியா) நவம்பர் 2018   முன்பு எங்கள் வீட்டில்  கூடு கட்டிய இனிய நினைவுகளின் பகிர்வு

// முனியாக் குருவி கஷ்டப்பட்டு வைக்கும் புற்கள் உள் அறையில் விழுவதைப் பார்த்து "முட்டையிட்டால் கீழே விழுந்து விடுமே "  என் கணவரிடம்  வருத்தப்பட்டு சொன்னவுடன் அவர்கள் உள்பக்கம் இப்படி ஒட்டிக் கொடுத்தார்கள். இனி கவலை இல்லை என்று எனக்கு நிம்மதி ஆச்சு//

மீண்டும் இந்த பறவைகளை பார்த்ததும் என் கணவர் எனக்கு உதவிய நினைவுகள் மற்றும் இருவரும் அவற்றின் வரவை ரசித்து பார்த்த இனிய நினைவுகள் வந்தன.   

மைனாக்கள் சத்தம் கொடுத்து கொண்டு வந்து  கூட்டை எட்டிப்பார்க்கும்.   என் கணவர் மைனாக்கள் சத்தம் கேட்டால்  குச்சியை  எடுத்து போய்  விரட்டியது எல்லாம் நினைவுக்கு வந்தது.

இவைகள் வீட்டில் உள்ள ஓட்டைகளில் கூடு கட்டதான் விரும்புமாம்.


டிசம்பரில் பறந்து போன குருவியை பற்றிய பதிவு.

உங்கள் வீட்டின் குருவிகளுக்காக
இந்தப் பாட்டு...

//வாழும் வரை கூட்டில்
வகை கொண்டு வாழ்ந்து
வா என்றழைத்த வானேறிப்
பறந்தனவே இன்று...

அன்பு எனும் நெஞ்சத்தின்
ஆதரவை அறிந்தவையாய்
அடுத்தொரு நாள் சூல் கொண்டு
தலைவாசல் வந்திடுமே மீண்டு!..

தானளந்த அன்பு கண்டு
வானளக்கும் குருவிகளும்
வாழ்த்திடும் - நலம் வாழ்க
என்றே மனதாரப் போற்றிடும்!..//


சகோ துரை செல்வராஜூ அவர்கள் இந்த பதிவு பின்னூட்டத்தில் கொடுத்த கவிதை.


தினைக்குருவி என்ற பதிவில் இந்த புள்ளிச்சில்லை பறவையைப்பற்றி   பால பாரதி அவர்கள் சொன்னதை படித்து பாருங்கள்.


//முனியா.... ஏ... முனியா...
என்ன...யாரையோ கூப்பிடுவதாக நினைத்து விட்டீர்களா?
முனியா என்றழைக்கப்படும் தினைக்குருவிகள் சிட்டுக் குருவியை விடச் சிறியவை, தேன்சிட்டைவிட சற்றே பெரியவை. இவற்றின் அலகு மொத்தமாகவும் கூம்புவடிவிலும் இருக்கும். தானியங்களையும் மெல்லிய தோலுள்ள விதைகளையும் தோலை நீக்கிவிட்டு உண்ணும்.

 சிட்டுக் குருவிகளை மாதிரி இல்லாமல் இவற்றைக் கூண்டில் அடைத்து வீட்டில் வளர்க்க முடியும். ஆமாம், வீட்டில் கூண்டில் அடைத்து வளர்க்கிறோமே அதேதான்.

நம்நாட்டில் ஆறு வகையான முனியாக்கள் காணப்படுகின்றன. தினையன், கருப்புவரையன் சிட்டு ஆழ்வார் சிட்டு, நெல்லுக் குருவி என்றெல்லாம் நாட்டு மக்களால் அழைக்கப்படுகின்றன.
'நிரைபறைக் குரீ இ யினம்'
'கிளையமல் குரீ இ'
என இக் குருவிகளை சங்க இலக்கியங்கள் குறிப்பிடுகின்றன.

இவற்றுள் பொரிராட்டினம் என்றழைக்கப்படும் புள்ளி முனியா (Spotted Munia)வும் ஒன்று.
மனிதர்கள் தாங்கள் உயிர் வாழ இந்த முனியாக்களை பலியிட்டிருக்கிறார்கள். ஐம்பதுகளில் நிலக்கரி சுரங்கங்களில் வெடி வைத்துத் தகர்த்தப் பின் அந்த இடத்தில் ஆட்களுக்கு அபாயம் விளைவிக்கக் கூடிய விஷவாயு இருக்கிறதா என்று கண்டறிய ஒருவர் ஒரு கூண்டில் முனியாவை எடுத்துக் கொண்டு முன்னே செல்வாராம். முனியாவின் தலை சாய்ந்து உயிர் விட்டால் உடனே ஆட்கள் எல்லோரும் பின் வாங்கி விடுவார்களாம்.

'அறம்' படத்தில் குழந்தை சிக்கிக்கொள்ளும் போர்வெல் குழாயினுள் விஷவாயு இருக்கிறதா எனத் தெரிந்துகொள்ள கயிற்றில் கோழியைக் கட்டி இறக்கிப் பார்ப்பார்களே ... அதுபோலத்தான்.

பின்னர் குழாய்கள் மூலம் வெளிக் காற்றினை சுரங்கத்திற்குள் செலுத்தி விஷவாயுவை வெளி ஏற்றுவார்களாம்.
"மனிதன் உயிர் பிழைப்பதற்காக பாவம் இந்தப் பறவைகள் உயிர் விட்டிருக்கின்றன."//

பாலா பாரதி அவர்களுக்கு நன்றி.

இப்போதும் புள்ளிச்சில்லை அழிந்து வருகிறது  என்று
 படித்தேன். இப்போது இதை பிடிக்க கூடாது, கொல்லக் கூடாது,
 வீட்டில் வளர்க்க கூடாது என்று தடை விதிக்கப்பட்டு
 இருக்கிறது.மீறினால் தண்டனை உண்டு. இந்த செய்தியை
 படித்தவுடன் மகிழ்ச்சியாகஇருக்கிறது.


எங்கள் குடியிருப்புக்கு  19 ம் தேதி  குருவிகள் இரண்டு வந்தன.
கூடு கட்ட இடம் தேடுகிறது.  ஆண், பெண் குருவிகள் இரண்டும் ஒரே மாதிரிதான் இருக்குமாம். இனபெருக்கம் சமயம் மட்டும் ஆண் குருவி கழுத்து பகுதி மாறுபடுமாம். "வெண்தொண்டை தினைக்குருவி" என்று நினைக்கிறேன். வேறு யாராவது தெரிந்தவர்கள் சொன்னால் சரி.
சிட்டுக்குருவியை போல இல்லாமல்  உடல்  தோற்றத்தில்   வேறு  மாதிரி இருக்கிறது.

இவை பூக்களின் தேன் எடுக்குமாம். இளம் பச்சை கலரில் முதுகு தெரிகிறது.

குருவிகள் நிறைய வகை இருக்கிறது. சிறு பறவைகள் எல்லாம் குருவிகள் என்று வேவ்வேறு பெயரில் அழைக்கப்படுகிறது.


முன்பு புள்ளிச்சில்லை கட்டிய இடத்தை பார்வை இட்டது

அப்புறம் வேண்டாம்  வேறு யாரோ இருந்த இடம் வேண்டாம் புது இடம் பார்ப்போம் என்று முடிவு செய்து விட்டது.

எதிர் வீட்டைப்பார்ப்போம்.

                                                            பார்க்கிறது 
யோசிக்கிறது

வேறு இடம் பார்ப்போம் என்று ஓவ்வொரு வீட்டின் பால்கனியிலும் எட்டிப்பார்த்தது

இங்கு போய் பார்ப்போம்
"என்ன ஏதாவது முடிவு செய்தாயா? "என்று தன் துணையிடம் கேள்வி

ஊகும் ஒன்றும் சரிப்பட்டு வரலை !
"சரி சரி வா வா! நமக்கு  நல்ல இடத்தை அமைத்து கொடுப்பார்  நம்மை படைத்தவன்"  என்று சொல்லி பறந்து போயின.

நாமும் நம்புவோம்.  குருவிகளுக்கு கூடு கட்ட நல்ல இடம் கிடைத்து இருக்கும் என்று.

வாழ்க வையகம்! வாழ்க வையகம் ! வாழ்க வளமுடன்!.
 

30 கருத்துகள்:

  1. அழகான படங்களுடன் விவரமான பதிவு... இது தங்களுக்கே கை வந்த கலை..

    வாழ்க நலம்..

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வணக்கம் சகோ துரை செல்வராஜூ, வாழ்க வளமுடன்
      பதிவை ரசித்து கருத்து சொன்னதற்கு நன்றி.

      நீக்கு
  2. நானே மறந்து விட்ட எனது கவிதையை
    நினைவில் கொண்டு இங்கே பதிவு செய்தமைக்கு மகிழ்ச்சி.. நன்றி..

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. உங்கள் கவிதைகளை தொகுத்து வைத்துக் கொள்ளுங்கள்.
      உங்கள் பேரக்குழந்தைகளுக்கு காட்டலாம்.
      இறைவன் மேல் எழுதிய கவிதைகள். இப்படி தனி கவிதைகள் என்று சேமித்து வையுங்கள். நீங்கள் சொன்னது போல மீண்டும் வருகிறது கூடு நோக்கி.
      உங்கள் கருத்துக்களுக்கும் வாழ்த்துக்கும் நன்றி.

      நீக்கு
  3. வணக்கம் சகோதரி

    பதிவு அருமை. முதலில் பறவைகளின் பத்திரமான பாதுகாவலரான தாங்கள், மற்றும் தங்கள் கணவரின் நல்ல உள்ளங்களுக்கு என் வணக்கங்கள். தங்கள் வீட்டிற்கு வரும் அவைகளுக்கு வசதிகள் செய்து, அவை தங்கள் குஞ்சுகளை பெற்றெடுத்து பாதுகாத்து பறக்கச் செய்யும் வரை, தாங்களும் அவைகளை கவனமுடன் பாதுகாத்து செய்யும் செயல்கள் யாவும் சிறப்பு.

    முனியா குருவி, மற்றும் பல குருவிகள் பற்றிய விளக்கங்களை பதிவில் படித்து தெரிந்து கொண்டேன். எல்லாப்பறவைகளைப் பற்றியும் விபரமாக தெரிந்து வைத்திருக்கிறீர்கள். அதைப்பற்றி பதிவில் குறிப்பிடுவதோடு, அதை பொறுமையாக படங்கள் எடுத்து எங்களுடன் பகிர்ந்து கொள்வதற்கும் மிக்க மகிழ்ச்சியடைகிறேன்.

    /சரி சரி வா வா! நமக்கு நல்ல இடத்தை அமைத்து கொடுப்பார் நம்மை படைத்தவன்" என்று சொல்லி பறந்து போயின./

    என்ன ஒரு நம்பிக்கை..... ஆச்சரியமாக உள்ளது. தங்களிடமிருந்துதான் இவைகளும் இறை நம்பிக்கையை கற்றுக் கொள்கின்றனவோ என எனக்குத் தோன்றுகிறது.

    சகோதரர் துரை செல்வராஜ் அவர்களின் கவிதையும் அழகு. கவிதையும், படங்களும், பகிர்வும் மனதிற்கு பாசமெனும் சொல்லிற்கு விளக்கம் அளிப்பதான இதமுடன் இருக்கிறது.அதனால்தான் மனிதர்களைக்கூட "பாசப்பறவைகள்" என குறிப்பிடுகின்றனரோ...? நல்லதொரு. பகிர்வுக்கு மிக்க நன்றி சகோதரி.

    நன்றியுடன்
    கமலா ஹரிஹரன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வணக்கம் கமலா ஹரிஹரன், வாழ்க வளமுடன்
      பழைய நினைவுகளை ரசித்தமைக்கு நன்றி.

      பறவைகளை படித்து தெரிந்து கொண்டதுதான். முதலில் புள்ளி சில்லை பற்றி படிக்கும் போது நம் பெங்களூர் பதிவர் ராமலக்ஷ்மி அதன் விவரம் தினமலரில் கொடுத்து இருந்தார்.
      அப்புறம் பறவைகளை பற்றி மற்றவர்கள் எழுதி இருப்பதை விரும்பி படிக்க ஆரம்பித்தேன்.
      இரண்டாவது திணைக்குருவி வகை சார்ந்தது என்று மட்டும் தான் தெரிகிறது. மேலும் விவரங்கள் தெரியவில்லை. தெரிந்தவர்கள் சொல்வார்கள் என்று நம்பி கொண்டு இருக்கிறேன்.


      //என்ன ஒரு நம்பிக்கை..... ஆச்சரியமாக உள்ளது. தங்களிடமிருந்துதான் இவைகளும் இறை நம்பிக்கையை கற்றுக் கொள்கின்றனவோ என எனக்குத் தோன்றுகிறது.//

      அவைகள்தான் எனக்கு நம்பிக்கை அளிக்கிறது. வாழ்க்கையில் பிடிப்பை தருகிறது. அவைகள் படும் கஷ்டத்தில் நம் கஷ்டம் பெரிதே இல்லை என்று சொல்லி தருகிறது. அவைகளிடம் கற்றுக் கொள்ள நிறைய இருக்கிறது.

      //மனிதர்களைக்கூட "பாசப்பறவைகள்" என குறிப்பிடுகின்றனரோ...?

      சகோவின் கவிதையை ரசித்து நீங்கள் சொன்னது மிக அருமை.
      நன்றாக சொன்னீர்கள்.
      ஒரு கூட்டில் வாழும் பாசப்பறவைகள் என்று சொல்வது அடிக்கடி கேட்டது உண்டு.
      உங்கள் விரிவான கருத்துக்கு நன்றி.

      நீக்கு
  4. படங்கள் அழகு. நிச்சயம் நல்ல இடம் கிடைத்திருக்கும்

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வணக்கம் சகோ கரந்தை ஜெயக்குமார், வாழ்க வளமுடன்
      நீங்கள் சொல்வது போல நல்ல இடம் கிடைக்கட்டும்.
      உங்கள் கருத்துக்கு நன்றி.

      நீக்கு
  5. புள்ளிச் சில்லைகள் சுரங்கத்தில் பயன்படுத்தப்பட்டது எனக்குப் புதிய செய்தி. இங்கே நான் தினம் பார்க்கும் பறவைகளில் புள்ளைச் சில்லைகள் உண்டு. பெரும்பாலும் ஜோடியாகவே வரும்.

    சமீபத்தில் உங்கள் வீட்டுக்கு வந்தவை (Indian Silverbills) வெண் தொண்டைச் சில்லைகள்தாம். ஆண், பெண் ஒரே மாதிரியாக இருக்கும். இவை எப்போதேனும் பார்க்கக் கிடைக்கிறது இங்கே.

    உங்கள் அக்கறை மற்றும் பிரார்த்தனையினால் அவற்றுக்குக் கூடு கட்டத் தகுந்த இடம் நிச்சயம் கிடைத்திருக்கும்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வணக்கம் ராமலக்ஷ்மி, வாழ்க வளமுடன்
      புள்ளிச்சில்லைகள் சுரங்கத்தில் பயன்படுத்தப்பட்டது என்பது இன்று தெரிந்து கொண்ட புதிய செய்தி ராமலக்ஷ்மி.

      இங்கும் இரண்டும் ஜோடியாக த்தான் வருகிறது. ஆனால் கூடு தேடுவதால் ஆளுக்கு ஒரு பக்கம் பிரிந்து விட்டது. நான் இரண்டையும் எடுக்க முடியவில்லை.
      வெண் தொண்டைச் சில்லையும் ஜோடியாக வந்தது. அதை எடுத்து விட்டேன்.
      நீங்கள் இந்த பறவைகள் வெண் தொண்டைச் சில்லைகள் என்று சொன்னது மகிழ்ச்சி. நினைத்தேன் நீங்கள் வந்து சொல்லி விடுவீர்கள் என்று , நன்றி ராமல்க்ஷமி.
      உங்கள் தோட்டத்திற்கு வந்தால் குருவிகளின் அழகான படம் கிடைக்கும் .

      தகுந்த இடம் நிச்சயம் கிடைத்திருக்கும் என்று நீங்கள் சொன்னது மகிழ்ச்சி , அப்படியே நடக்கட்டும்.
      உங்கள் கருத்துக்கு நன்றி .

      நீக்கு
  6. அக்கா மாமாவும் உங்களுக்கு உதவியதை முன்பு வாசித்திருக்கிறேன். நீங்கள் இருவருமே பறவைகளை வரவேற்று அதற்கு உதவி அவை பத்திரமாக வெளியேற உதவியது எல்லாம் நினைவுக்கும் வருகிறது.

    //மனிதர்கள் தாங்கள் உயிர் வாழ இந்த முனியாக்களை பலியிட்டிருக்கிறார்கள். ஐம்பதுகளில் நிலக்கரி சுரங்கங்களில் வெடி வைத்துத் தகர்த்தப் பின் அந்த இடத்தில் ஆட்களுக்கு அபாயம் விளைவிக்கக் கூடிய விஷவாயு இருக்கிறதா என்று கண்டறிய ஒருவர் ஒரு கூண்டில் முனியாவை எடுத்துக் கொண்டு முன்னே செல்வாராம். முனியாவின் தலை சாய்ந்து உயிர் விட்டால் உடனே ஆட்கள் எல்லோரும் பின் வாங்கி விடுவார்களாம்.//

    அடப் பாவிங்களா, இப்படியுமா? புதுசா இருக்குக்கா இப்போதுதான் தெரிகிறது.

    பாவம் இல்லையா? மனுஷன் எவ்வளவு சுயநலக்காரன்.

    இப்போது பிடிக்கக் கூடாது, வளர்க்கக் கூடாதுன்னு சொன்னது நல்ல விஷயம் மகிழ்ச்சியான விஷயம் கோமதிக்கா.

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வணக்கம் கீதா, வாழ்க வளமுடன்
      இரண்டு மூன்று நாடகளுக்கு முன் இந்த பறவைகள் எங்கள் வீட்டு கொடி கம்பியில் வந்து அமர்ந்ததும் பழைய நினைவுகள் வந்து விட்டது.

      சமாளித்து கொண்டு பறவைகளை படம் எடுக்க காமிர எடுக்க உள்ளே வந்த போது ஜோடியாக இருந்த புள்ளிச்சில்லைகள் தனி தனியாக பிரிந்து கூடு அமைக்க வீடு தேட ஆரம்பித்து விட்டது.

      முனியாக்கள் பலி கொடுக்கும் விஷயம் படித்த போது மனதுக்கு கஷ்டமாக இருந்தது.

      இப்போது அதற்கு தடை எனும் போது மகிழ்ச்சி ஏற்பட்டது.
      உங்கள் கருத்துக்கு நன்றி கீதா.

      நீக்கு
  7. படங்கள் மிக அழகு. அக்கா, குருவிகளின் படங்களும் மிக அழகு. ஒவ்வொன்றிற்கும் நீங்க கொடுத்திருக்கும் அவற்றின் எண்ணங்கள் ரொம்பவே பொருத்தம். அது சரி அதுங்களுக்குத் தெரியாதா இங்க கோமதிம்மான்னு ஒருத்தங்க இருக்காங்க அவங்க வீட்டுக்குப் போனா நமக்கு தோதா இடம் கிடைக்கும், விரட்ட மாட்டாங்க ஒன்னும் செய்ய மாட்டாங்கனு? அதுக்கு இடம் அது நினைத்தது போல் இல்லையோ என்னவோ?

    எப்படினாலும் அதுங்களுக்கு இடம் கிடைத்தித்திருக்கும் என்று நம்புவோம். பாவம் பாருங்க அதுங்களுக்கு இடம் கிடைக்க முடியாதபடி மனுஷங்க நாம எவ்வளவு ஆக்ரமித்திருக்கிறோம்.

    நல்ல பதிவு. துரை அண்ணாவின் கவிதை செம

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. //படங்கள் மிக அழகு. அக்கா, குருவிகளின் படங்களும் மிக அழகு. ஒவ்வொன்றிற்கும் நீங்க கொடுத்திருக்கும் அவற்றின் எண்ணங்கள் ரொம்பவே பொருத்தம். //

      நன்றி கீதா.


      //அது சரி அதுங்களுக்குத் தெரியாதா இங்க கோமதிம்மான்னு ஒருத்தங்க இருக்காங்க அவங்க வீட்டுக்குப் போனா நமக்கு தோதா இடம் கிடைக்கும், விரட்ட மாட்டாங்க ஒன்னும் செய்ய மாட்டாங்கனு? அதுக்கு இடம் அது நினைத்தது போல் இல்லையோ என்னவோ?//


      முன்பு ஸ்பிளிட் ஏசிக்குப் போட்டு இருந்த ஓட்டையில் கூடு கட்டியது. இப்போது அதற்கு இன்னும் கொஞ்சம் ஓட்டை பெரிதாக(வீடு பெரிய வீடாய்) இருக்க ஆசை படுதோ என்னவோ! வசதியாக வாழ அதற்கும் இருக்கும் அல்லவா!

      ஆமாம், நல்ல கிடைத்து இருக்கும் என்றே நம்புவோம். சுவ்ற்றில் ஓட்டை வேண்டும் பொந்து போல இருக்க வேண்டுமாம் அதற்கு அப்படி இங்கு வீடுகளில் இல்லை.
      அதற்கு வசதியான இடம் கிடைக்கட்டும்.

      சகோவின் கவிதையை ரசித்தமைக்கு நன்றி.
      உங்கள் கருத்துக்கு நன்றி கீதா.

      நீக்கு
  8. குருவிகள் அழகு. அவை பற்றிய விவரங்களும் நிறைய கொடுத்துள்ளீர்கள். நன்று. 
    Jayakumar

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வணக்கம் ஜெயக்குமார், சார், வாழ்க வளமுடன்
      குருவிகளை ரசித்து கருத்து சொன்னதற்கு நன்றி சார்.

      நீக்கு
  9. முனியா குருவி பற்றிய விடயங்களை அருமையாக தந்தீர்கள்.

    படங்களும் அழகு.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வணக்கம் தேவக்கோட்டை ஜி, வாழ்க வளமுடன்
      பதிவை , படங்களை ரசித்து கருத்து சொன்னதற்கு நன்றி.

      நீக்கு
  10. குருவியின் மனம் தங்களுக்கு தெரியும் என்பது வியப்பில்லை...

    படங்களும் அருமை...

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வணக்கம் திண்டுக்கல் தனபாலன், வாழ்க வளமுடன்
      குருவிகள் இப்படித்தான் பேசி இருக்கும் என்ற உரையாடல் உங்களுக்கு பிடித்து இருப்பது மகிழ்ச்சி.
      படங்களை , உரையாடலை ரசித்து கருத்து சொன்னதற்கு நன்றி.

      நீக்கு
  11. குருவிகள் பற்றிய செய்திகளும்,படங்களும் அருமை

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வணக்கம் சென்னை பித்தன் சார், வாழ்க வளமுடன்
      நலமா?

      உங்கள் வரவுக்கும், கருத்துக்கும் நன்றி.

      நீக்கு
  12. அழகிய படங்கள். சுவாரஸ்யமான விவரங்கள். முட்டைகள் கீழே விழுந்து விடுமே என்கிற உங்கள் கவலை நெகிழ்ச்சி என்றால், ஸார் அதற்கு வழி செய்து கொடுத்தது அதைவிட... ஏன் குயில் வந்தால் விரட்டி விட்டார்?

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வணக்கம் ஸ்ரீராம், வாழ்க வளமுடன்
      குயில் ஓட்டையில் எட்டிப்பார்த்தால் குஞ்சுகள் கூக்குரல் இடும்.
      எட்டிப்பார்த்து கீழே விழுந்து விடும் என்ற பயம் தான்.
      படங்களை, விவரங்களை படித்து கருத்து சொன்னதற்கு நன்றி.

      நீக்கு
  13. துரை செல்வராஜு ஸாரின் கவிதை அருமை. இப்போது கூட எங்கள் வீட்டு மொட்டை மாடியிலும் இலகுவான சின்னஞ்சிறு சில குருவிகள் வந்து போகின்றன. சாம்பல் குருவி என்று நினைத்துக் கொள்வேன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. சாம்பல் கலரில் குருவிகள் வருகிறதா? குருவிகள் சின்னதாக நிறைய கலரில் இருக்கிறது. அதன் சத்தம் மனதுக்கு மகிழ்ச்சி அளிக்கும்.
      சகோவின் கவிதையை ரசித்து கருத்து சொன்னதற்கு நன்றி.

      நீக்கு
  14. இப்போ இங்கேயும் காலை வேளையில் பறவைகள் நிறைய வருகின்றன. எங்க பெண்ணோடு காலை வேளையில் பேசும்போது சப்தம் தாங்காது. அவள் கேட்டு ரசிப்பாள். இருக்கும் ஒரு தோப்பையாவது அழிக்காமல் இருக்கணுமேனு வேண்டிக்கொண்டு இருக்கோம். மயில்கள் நிறைய வருகின்றன. என்னால் மாடி ஏற முடியலை. கூடவே குரங்காரும் இருப்பதால் கொஞ்சம் பயம்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வணக்கம் கீதா சாம்பசிவம், வாழ்க வளமுடன்
      பக்கத்தில் தோப்பு இருக்கும் போது பறவைகளுக்கு என்ன பஞ்சம்!
      காலை வேலையில் குயில்கள் அதிக சத்தம் கொடுக்கும். அதற்கு போட்டியாக மற்ற பறவைகளும் ஒலி எழுப்பும் .
      நல்ல வேண்டுதல் தோப்பு நல்லபடியாக இருக்கட்டும் வேண்டிக் கொள்வோம்.
      இங்கு ஒரு மயில் மட்டும் வருகிறது. முன் பக்கம் இருக்கும் வீடுகளின் பால்கனிக்கு வருகிறது. எங்கள் வீடு நடுவில் இருப்பதால் இன்னும் வரவில்லை மயில். ஆனால் தினம் பார்க்கிறேன், அதன் ஒலியை கேட்கிறேன்.
      குரங்கார் வரவில்லை இங்கு.
      உங்கள் கருத்துகளுக்கு நன்றி.

      நீக்கு
  15. புள்ளிச் சில்லை அழகிய படங்கள். அவைகள் வந்து வாழ்வதும் மனதுக்கு மகிழ்ச்சி தரும். வாழட்டும் சிட்டுக்கள்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வணக்கம் மாதேவி, வாழ்க வளமுடன்
      ஆமாம், அவைகள் வந்து வாழ்வது மகிழ்ச்சிதரும் தான்.
      நீங்கள் சொல்வது போல வாழட்டும் சிட்டுக்கள்.
      உங்கள் கருத்துக்கு நன்றி மாதேவி.

      நீக்கு