வெள்ளி, 2 ஏப்ரல், 2021

தேன் சிட்டு




இந்த தேன் சிட்டு மகன் வீட்டு தோட்டத்தில் உள்ள  காய்ந்த மரத்தில் அமர்ந்து இருந்தது. எளிதில் படம் எடுக்க முடியாதபடி பறந்து கொண்டே இருக்கும்.  என்னமோ தெரியவில்லை ஓய்ந்து அமர்ந்து இருந்தது மரக்கிளையில். எனக்கு படம் எடுக்க வசதியாக இருந்தது. தோட்டத்திற்கு  வரும்  பறவைகளுக்கு பிடித்த  மரம்.

                     

பறவைகளின் அன்பால் மரம் துளிர்க்க ஆரம்பித்து விட்டது. கீழ் இருந்து துளிர்த்து கொண்டு இருக்கிறது., நிறைய கிளைகள் , துளிர் இலைகள் வந்து விட்டது.




பெண் தேன்சிட்டு முதுகு பகுதியில் இளம் பச்சை நிறத்தை கொண்டு இருக்கிறது.

தேன்  சிட்டு சிறகடித்து கொண்டேதான் மலர்களில் தேன் அருந்தும்  அதனால் படம் எடுப்பது கொஞ்சம் சிரமம்

மேல் நோக்கியப் பார்வை
வெயிலுக்கு ஓய்ந்து அமர்ந்து இருக்கிறது. இப்படி அமருவதை பார்ப்பதே அரிதாக இருக்கும் கீழே உள்ள இரண்டு தேன் சிட்டுப் படங்கள் மட்டும் பழைய படம்.
 
 வீட்டுக்கு முன் பக்கம் உள்ள மரத்தில் அமர்ந்து இருந்த தேன்சிட்டு (2017 ம் வருடம்  இங்கு வந்து இருந்த போது எடுத்த படம்)

மாலைச் சூரியஒளியால் இலைகளில் சிவப்பு தெரிகிறது. 

அந்தி நேரம்  இறை வழிபாடு  செய்கிறதோ!   
 

மகன் வீட்டில் இந்த ஜாடியில் நீர் நிரப்பி  தொங்க விட்டு இருக்கிறான் தேன் சிட்டு தண்ணீர் குடிக்க .  கோடை இன்னும் ஆரம்பிக்கவில்லை தண்ணீர் தேவை படும் போது பூ இதழில் உள்ள துளை வழியே  தன் அலகை செலுத்தி நீர் அருந்தும்.

இந்த தேன்சிட்டு  தன் கூட்டை சுத்தமாக வைத்து இருக்குமாம். தன் குஞ்சுகளின் கழிவுகளை உடனுக்கு உடன் அப்புறப்படுத்தி கூட்டை சுத்தமாக வைத்துக் கொள்ளுமாம். தன் நீண்ட அலகை பூக்களில் செலுத்தி தேன் அருத்துகிறது.பூக்களின் மகரந்த சேர்க்கைக்கு உதவுகிறதாம். குஞ்சுகளுக்கு உணவு கொடுக்கும் போது மட்டும் பூக்களில் உள்ள சின்ன பூச்சிகள் , செடிகளில் கூடு கட்டி இருக்கும் சிலந்தி  பூச்சிகளை உணவாக எடுத்துக் கொள்ளுமாம். சிலந்தி வலைகளை கொண்டு வந்து  கூட்டில் வைக்குமாம். கொசு வலையாக அதை பயன் படுத்தும் போலும்! இறைவன் சின்ன பறவைக்கு எவ்வளவு அறிவு கொடுத்து இருக்கிறான் .

இந்த தேன்சிட்டைப்பார்க்கும் போதெல்லாம்  திருவெண்காட்டில் எங்கள் வீட்டில் தேன்சிட்டு கூடு கட்டி இருந்தது நினைவுக்கு வரும்.
முன் பக்க வெராண்டாவில் கொடி கட்டி இருக்கும் அதில்   கூடு கட்டும்.  அது குஞ்சு பொரித்து போகும் வரை மொட்டைமாடியில் தான் துணி காயப்போடுவேன். நாம் வரையும் மாங்காய் படம் போல் இருக்கும் கூடு.
                                       

                                                                                             
நன்றி- கூகுள்
 இந்த மாதிரி வடிவில் தான் கூடு இருக்கும். நீங்கள் பார்த்து இருப்பீர்கள்.



நன்றி - கூகுள்

 எங்கள் வீட்டில் கொடியில்  இதை போல தான்  கட்டி இருந்தது. இதே கலர் தேன்சிட்டு தான். இரண்டு மூன்று வருடங்கள் பழைய கூட்டையே சரி செய்து  முட்டையிடும். .


முதல் வருடம் இரண்டு  குஞ்சுகள் இருந்தது ,அதில் ஒன்று அதிகமாய் எட்டிப் பார்த்து கீழே விழுந்து விட்டது. அதற்கு  இப்படி எங்கள் வீட்டில் இருந்த பிலிப்ஸ் டிரான்சிஸ்டரின் கவரை அந்த குஞ்சுக்கு கூடாக்கினார்கள் என் கணவர்.

உள்ளே தேங்காய் நார் அப்புறம் பஞ்சு எல்லாம் போட்டு  அதற்கு வசதிகள்செய்தோம்.  தேன் வாங்கி வந்து இங்க் பில்லரில் ஒரு சொட்டு எடுத்து கொடுத்து வந்தோம். இரண்டு நாள் கழித்து தாய், தகப்பன் பறவை வந்து   உணவு கொடுத்து போனது. அப்புறம் சில நாட்களில்  பறக்க ஆரம்பித்தது வெராண்டாவில்,நீண்ட வெராண்டாவில் மூன்று  ஜன்னல் உண்டு  கம்பி தடுப்பு போட்டு இருக்கும் .அந்த ஜன்னல்   வழியே விர் என்று வெளியே பறந்து போனது அதை தொடர்ந்து  தாய்சிட்டும் பின்னால் பறந்து  சென்றது . 

கல்லூரி விட்டு வந்ததும் "என்ன சொல்கிறது உன் சிட்டு" என்று கேட்டு அதன் பக்கத்தில் போய் அதை பார்த்தபின் தான் மற்ற வேலைகள் பார்ப்பர்கள்.  கல்யாணம் ஆன புதிது.  குழந்தை போல் தேன்சிட்டு இருந்தது. அது பறந்து போனது மகிழ்ச்சியும் வருத்தமும் ஒரு சேர வந்தது எங்களுக்கு.

 தென்னைமரத்திலிருந்து விழுந்த கிளி குஞ்சை வளர்த்து பறக்க விட்டு இருக்கிறோம் அந்த வீட்டில். அணில் பிள்ளை வளர்ந்து இருக்கிறார் அந்த வீட்டில்.


திருவெண்காடு  சுவேதாரண்யேசுவரர்  கோவிலில் இருந்து எங்கள் வீட்டை எடுத்த படம். 

 கோவிலில் உள்ள மூன்று குளங்களில் இரண்டு குளங்கள் வீட்டில் இருந்து பார்க்கலாம். தூரத்தில் தெரியும் அந்த மாடி வீட்டில் தான் இருந்தோம்.  முன் பக்க கதவு, மூன்று ஜன்னல் தெரிகிறதா?  வலது ஒரத்தில் நாங்கள் இருந்த வீட்டை ஒட்டி  இப்போது புதிதாக இன்னொரு மாடி வீடு கட்டி  இருக்கிறார்கள்.இந்த வீட்டில் இருந்த ஏழு வருடமும் கோவில் தரிசனம்  செய்ததை மறக்க முடியாது. வீட்டிலிருந்து பிரதோஷம் பார்க்கலாம், திருவிழா சமயம்  பஞ்சமூர்த்திகள் கோவில் பிரகாரத்தில் வலம் வருவதைப் பார்க்கலாம்.

 மழையும் மகிழ்ச்சியும்  என்ற  தொடர் அழைப்பு பதிவில் (வல்லி அக்கா அழைத்தார்கள்.)   இந்த வீட்டு ஜன்னல் வழியாக  மழையை  ரசிப்பதை குறிப்பிட்டு இருப்பேன்.

கோவில் கோபுரத்தில் மழை பெய்யும் போது காற்று மழையை  தள்ளி கொண்டு  செல்வதை பார்க்க அழகாய் இருக்கும். அப்போது காமிரா இல்லை என்னிடம் அதனால் படங்கள் இல்லை. குழந்தைகளை படம் எடுக்க  மாயவரம் போட்டோ ஸ்டியோவிலிருந்து படம் எடுப்பவரை அழைத்து வந்து போட்டோ எடுத்து இருக்கிறோம்.

எங்கள் வீட்டு வாசல் கதவு இந்த மாதிரிதான் இருக்கும். ( இது நாங்கள் இருந்த வீட்டு கதவு இல்லை .  அந்த ஊரில் இருந்த ஒரு பெரியவீட்டின் கதவு . 1954 ல்  மிகவும் அழகிய வேலைப்பாடுடன் கட்டிய  பெரிய வீடு .)

இந்த பழமையான வீட்டை பகிர ஆசை பட்டேன், இந்த பதிவில் அது சேர்ந்து விட்டது. 
  

வாழக வையகம் ! வாழ்க வளமுடன் !
-----------------------------------------------------------------------------------------------------------------------------

50 கருத்துகள்:

  1. பதிவின் கடைசியில் இருந்தாலும் அந்த பழைய வீடு மிகவும் கவர்கிறது.  அதை முதலில் சொல்லி விடுவோம் என்று...!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வணக்கம் ஸ்ரீராம், வாழ்க வளமுடன்
      என்னையும் கவர்ந்த வீடு அது.
      அந்த வீடு படம் எடுத்து பல வருடம் ஆச்சு, பதிவில் இணைய இன்று தான் அதற்கு வாய்ப்பு கிடைத்து இருக்கு.

      நீக்கு
  2. வீட்டருகில் குளம், கோவில்..   சொர்க்கமாய் இருந்திருக்கும் அந்த நாட்கள்!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. //வீட்டருகில் குளம், கோவில்.. சொர்க்கமாய் இருந்திருக்கும் அந்த நாட்கள்!//

      ஆமாம் ஸ்ரீராம் , அந்த நாட்கள் சொர்க்கம் தான்.
      ஒவ்வொரு ஞாயிறும் அகோரமூர்த்தி பூஜை இரவு 7.30 க்கு நடைபெறும் அதற்கு போய் விடுவோம்.

      நீக்கு
  3. தேன் சிட்டுக் கூடு, தேன்சிட்டு பற்றிய தகவல்கள் எல்லாமே சுவாரஸ்யம்.  பறந்துகொண்டே அது தென் குடிக்கும் அழகை நானும் பார்த்த ஞாபகம் இருக்கிறது.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஆமாம் ஸ்ரீராம், அது பறந்து கொண்டே தேன் குடிக்கும் காணொளி முன்பு எடுத்து இருந்தேன். தேடினேன் கிடைக்கவில்லை, கிடைத்தால் போட வேண்டும். அப்படி சிறகை அடித்துக் கொண்டே இருக்கும் ஒரு நொடிக்கு 80 தடவை சிறகை அடிக்குமாம். ஒரு நாள் 1000 பூவில் தேன் எடுத்தால் அதன் வயிறு நிறையுமாம்.
      ஹம் செய்து கொண்டே பறக்கும்.
      உங்கள் கருத்துக்களுக்கு நன்றி ஸ்ரீராம்.

      நீக்கு
  4. பறவைகளை நேசிக்கும் தங்களது எண்ணம் பாராட்டத்தக்கது.

    நண்பருக்காக நான் தற்போது கட்டிக்கொண்டு இருக்கும் கட்டிடத்துக்கு தினம் மூன்று மாடுகள் என்னைத் தேடி வருகிறது. அதன் தாகம் தீர்க்க வாளியில் தண்ணீர் வைக்கிறேன். வெயில் காலம் பாவம் அவைகள் எங்கு போகும் ?

    (இது பிறரது பார்வையில் என்னை வினோத மனிதனாக காட்டிக் கொண்டு இருக்கிறது)

    வீட்டுக்கு அருகிலேயே குளங்கள் அழகிய காட்சியே... வெயில் காலங்களில் சூடு தெரியாது.

    படங்கள் அருமை.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வணக்கம் தேவகோட்டை ஜி, வாழ்க வளமுடன்

      உங்கள் பாராட்டுக்கு நன்றி.

      //தினம் மூன்று மாடுகள் என்னைத் தேடி வருகிறது. அதன் தாகம் தீர்க்க வாளியில் தண்ணீர் வைக்கிறேன். வெயில் காலம் பாவம் அவைகள் எங்கு போகும் ?//

      நல்ல செயல்.

      //(இது பிறரது பார்வையில் என்னை வினோத மனிதனாக காட்டிக் கொண்டு இருக்கிறது)//

      ஏன் அப்படி நினைக்கிறீர்கள் உங்கள் நல்ல உள்ளத்தை நினைத்து பார்த்து இருப்பார்கள்.
      இப்போது மாடுகள் வீதிகளில் தான் திரிகிறது பாவம் அதற்கு நீங்கள் தண்ணீர் தருவது புண்ணியம். உங்களை வாழ்த்தும் அவைகள்.

      மதுரையில் ஒவ்வொரு வீட்டு முன்னாலும் காலை மாலை பாத்திரங்களில் சாதம் வடித்த கஞ்சி, அரிசி, உளுந்து கழுவிய தண்ணீர் காய்கறி கழிவுகள் உள்ள கழுநீர் பானை வைப்பார்கள் மாடுகள் குடித்து செல்லும். முன்பு மாடு வளர்ப்பவர்கள் வீட்டில் கட்டி வளர்ப்பார்கள். ஒவ்வொரு வீட்டிலும் கழுநீர் பானை வைத்து போவார்கள் , அப்புறம் வந்து எடுத்து செல்வார்கள்.

      மாயவரத்தில் ஒரு வீட்டில் மாடுகளுக்கு தண்ணீர் வைக்க பெரிய தொட்டி கட்டி விட்டு இருக்கிறார்கள். அதில் தண்ணீர் மற்றும் "பழாய் போவது பசு வயிற்றில்" என்று எதையும் வீணாக்காமல் மாட்டுக்கு கொடுப்பார்கள்.

      கோவிலுக்கு பக்கத்தில் உள்ள மடவிளாகத்தில் வீடு. கோவில் பெரிய மதிலுக்கு அந்த பக்கம் வீடு. நன்றாக இருக்கும். மழை பெய்து கொண்டே இருக்கும் வெயில் தெரியாதுதான்.

      உங்கள் விரிவான கருத்துக்கு நன்றி.

      நீக்கு
  5. அன்பு கோமதி மா
    . இனிய மாலை வணக்கம். எத்தனை அருமையான பதிவுமா.

    தேன் சிட்டு இங்கேயும் வரும். மீண்டும் வருகிறேன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வணக்கம் வல்லி அக்கா, வாழ்க் வளமுடன்

      தேன்சிட்டு அங்கும் வருவது மகிழ்ச்சி அக்கா.
      வாங்க அக்கா நன்றி.


      நீக்கு
  6. குளமும் குளக்கரையில் பழமையான வீடும் அபப்டியே கிராமீய வாசனை ஆளைத்தூக்குகிறது. அந்த அழகிய பழைய வீடும் வாசனையைக் கூட்டுகிறது.
    உங்கள் கணவரும் நீங்களுமாய் பறவைக்குஞ்சுகளை காப்பாற்றி போற்றி வளர்த்த கதைகளைப்படித்தபோது மனம் கனமானது.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வணக்கம் மனோ சாமிநாதன், வாழ்க வளமுடன்
      திருவெண்காடு கோவிலுக்கு போனால் அந்த வீட்டை இன்றும் பார்க்கலாம். கொடி மரத்தின் பக்கத்திலிருந்து பார்க்கலாம்.
      அழகிய பழைய வீடு பிடித்து இருக்கா மகிழ்ச்சி.
      நினைவுகளில் இனிமையும், சுமையும் சேர்ந்து இருக்கிறது.
      உங்கள் கருத்துக்கு நன்றி மனோ.

      நீக்கு
  7. அழகான படங்கள். தகவல்களும் நன்று.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வணக்கம் வெங்கட் நாகராஜ் வாழ்க வளமுடன்
      உங்கள் கருத்துக்கு நன்றி.

      நீக்கு
  8. பழைய வீடு மிகவும் அருமை...

    பிலிப்ஸ் டிரான்சிஸ்டரின் கவரை கூடாக்கினது சிறப்பு...

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வணக்கம் திண்டுக்கல் தனபாலன், வாழ்க வளமுடன்

      //பிலிப்ஸ் டிரான்சிஸ்டரின் கவரை கூடாக்கினது சிறப்பு...//

      அவர்கள் வேலைக்கு வந்த புதிதில் வாங்கிய டிரான்சிஸ்டர்தான் 71 வது வருடம். மூன்று வருடங்கள் ஆனதுதான் . அப்புறம் வேறு கவர் வாங்கினார்கள்.
      உங்கள் கருத்துக்கு நன்றி.

      நீக்கு
  9. தேன் சிட்டு குருவியின் படமும் பழக்கவழக்கம் எல்லாம் அறிந்து மிக்க சந்தோஷம் இப்படி எல்லாப் பறவைகளும் உங்களுக்கு ஒத்துழைப்பு கொடுத்து படமெடுக்க உதவியது எங்களுக்கும் பார்க்க சந்தோஷமாக அமைகிறது குளமும் கோவிலும் பழைய வீடும் பார்க்க உங்களின் மலரும் நினைவுகள் வெளிவருகிறது சந்தோஷம் அன்புடன்

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வணக்கம் காமாட்சி அம்மா, வாழ்க வளமுடன்
      குருவியின் பழக்கம் வழக்கம் எல்லாம் கொஞ்சம் பார்த்தும், படித்தும் தெரிந்து கொண்டது.
      படம் எடுக்க அனுமதி கொடுப்பதே மகிழ்ச்சியாக இருக்கும் .
      //குளமும் கோவிலும் பழைய வீடும் பார்க்க உங்களின் மலரும் நினைவுகள் வெளிவருகிறது சந்தோஷம் அன்புடன்//

      அந்த ஊரில் வாழ்ந்த காலங்களை மறக்க முடியாது. அந்த ஊர் மக்களும் , கீழ் வீட்டில் இருந்த அந்த வீட்டின் உரிமையாளர் குடும்பம் இன்னும் என்னை தங்கள் உடன்பிறந்தவர்களாக நினைத்து பேசி கொண்டு இருக்கிறார்கள்.அப்போது அக்கம் பக்கத்தில் இருந்தவர்களும் இன்னும் நட்புடன் பேசுகிறார்கள்.

      உங்கள் அன்பான கருத்துக்கு நன்றி.

      நீக்கு
  10. இம்முறையும் என்னோட கருத்துரை வரலை போல! ஆனால் பின் தொடரும் கருத்துரைகள் வருகின்றன. எங்கே போச்சு என்னோட கருத்துரை? தேன் சிட்டுக்களின் வண்ணங்களைப் பற்றிக் கூட எழுதி இருந்தேன். நீங்க படம் பிடித்திருப்பதைப் பாராட்டி இருந்தேன். சிட்டையும் சேர்த்து. 2,3 கருத்துரைகள்! எங்கே போச்சுனு தெரியலை. இத்தனைக்கும் ரோபோ வேறே வந்து மிரட்டிப் பார்த்தது. இதுவானும் வருதானு பார்க்கிறேன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வணக்கம் கீதா சாம்பசிவம், வாழ்க வளமுடன்
      இந்த கருத்து மட்டும் தான் வந்து இருக்கிறது . நீங்கள் சொல்லும் கருத்துக்கள் வரவில்லையே! என்ன காரணம் என்று எனக்கு தெரியவில்லை.
      தேன் சிட்டுக்களில் பலவண்ணம் இருக்கிறது. இங்கு பச்சையும், மஞ்சளும் உள்ளது வருகிறது.
      உங்கள் பாராட்டுக்கும் கருத்துக்கும் நன்றி.

      நீக்கு
  11. தேன்சிட்டு படங்கள் மிக அழகாக வந்திருக்கு.

    எப்போதும் வாழ்ந்த வீட்டை நினைவுக்குக் கொண்டுவருவதோ இல்லை மீண்டும் பார்ப்பதோ சுகமானதுதான். நல்ல நினைவுகள்

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வணக்கம் நெல்லைத் தமிழன், வாழ்க வளமுடன்

      //தேன்சிட்டு படங்கள் மிக அழகாக வந்திருக்கு.//

      நன்றி.

      //எப்போதும் வாழ்ந்த வீட்டை நினைவுக்குக் கொண்டுவருவதோ இல்லை மீண்டும் பார்ப்பதோ சுகமானதுதான். நல்ல நினைவுகள்//

      அப்போது தொலைகாட்சி, இந்த இணையம் எல்லாம் இல்லை. அதனால் பொழுதுகள் வேறு மாதிரி இனிமையாக போனது.

      உங்கள் கருத்துக்கு நன்றி.

      நீக்கு
  12. மிக அழகான தேசிட்டுப் படங்கள். அவை பறக்கும் வேகத்தில்
    நின்று உங்களுக்குப் போஸ் கொடுத்திருக்கிறது. தேன்சிட்டு வீடும்,
    அழகு. மாங்காய் வடிவில் தான் இருக்கு.
    இந்த இனிய பறவையின் விவரங்கள் அனைத்தும் அருமை.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வணக்கம் வல்லி அக்கா ,வாழ்க வளமுடன்
      பறக்கும் வேகத்தில் எடுத்த படங்கல் சரியாக இல்லை.
      அதை காணொளிதான் எடுக்கலாம்.
      என்னமோ யோசனையில் இருந்தது போலும் அதனால் எனக்கு வாய்ப்பு.
      மாங்கய் வடிவில் தலைபக்கம் கொஞ்சம் வளைந்த மாதிரி உள்ள மைப்பு சன் சேடு அமைப்பாம் தன் குஞ்சுகளுக்கு எவ்வளவு பாதுகாப்பு செய்கிறது!

      நீக்கு
  13. உங்கள் மழைப் பதிவைப் பார்த்து விட்டேன் ....என் மழைப் பதிவைத் தேடுகிறேன்:)
    திருவெண்காட்டு வீடும்,அங்கே நீங்கள் காப்பாற்றிய உயிர் இனகளும்,
    டிரான்ஸிஸ்டர் கூடு வைத்த உபகாரமும்,

    மறக்க முடியாதவை.
    அதனால் தான் பறவைகள் இன்னும் உங்களைத் தொடர்கின்றன.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. //உங்கள் மழைப் பதிவைப் பார்த்து விட்டேன் ....என் மழைப் பதிவைத் தேடுகிறேன்:)//
      அப்போது இணையத்திற்கு வந்த புதுசு. சுட்டி கொடுக்க கற்றுக் கொள்ளவில்லை. அதனால் உங்கள் இணையதளம் சுட்டி கொடுக்கவில்லை.

      திருவெண்காடு நினைவுகள் மறக்க முடியாது அக்கா.

      உங்கள் அன்பான கருத்துக்கு நன்றி.

      நீக்கு
  14. சாரின் நினைவுகளும் மழை நாட்களும் திருவெண்காட்டு வீடும் பொக்கிஷங்கள்.
    எத்தனை அழகான ஊர் அது.
    மூன்று குளங்களும் உங்கள் வீட்டிலிருந்து தெரிவதும்,
    அந்தப் பழைய வீட்டை நீங்கள் போட்டோ
    பிடித்து வைத்திருப்பதும் அருமையோ அருமை.
    இனிய நினைவுகள் நம்மை வாழ வைக்கும்.
    இங்கும் தானியக் கூடு வைத்தாகி விட்டது.
    குளிர் வாட்டுவதால் பறவைகள் அதிகம் வருவதில்லை.

    இன்னும் நிறைய எழுதுங்கள் அன்பு தங்கச்சி.
    வாழ்க வளமுடன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அக்கா பழைய நினைவுகளை பொக்கிஷ்மாக பாதுகாக்கும் தருணமாக போய் விட்டது.
      சார் இருக்கும் போதே அந்த ஊரின் நினைவுகளை அடிக்கடி பேசுவோம்.

      பழைய வீட்டை பல வருடங்கள் கழித்து எடுத்த படம் அந்த ஊரை விட்டு வந்தவுடன்
      அந்த வீட்டில் வாழ்ந்த என் தந்தை, தாய் போன்றவர்கள் இறந்தவுடன் அவர்கள் நினைவாக வீட்டை படம் எடுத்து வந்தோம்.
      திருவெண்காடு கோவில் பதிவில் மூன்று குளங்களும் இந்த வீடும் வரும்.
      எங்கள் வீட்டிலிருந்து இரண்டு குளங்கள் தெரியும்.அம்மன் குளம் தெரியாது.

      இனிய நினைவுகள் வாழ்வைக்கும் என்பது உண்மை.
      தானியங்களை சாப்பிட வெயில் அடிக்கும் போது வரும் இல்லையா அக்கா!

      நீங்கள் எப்போதும் என்னை எழுத சொல்லி கொண்டே இருப்பதால்தான் எழுதி கொண்டு இருக்கிறேன் அக்கா. உங்கள் அன்பான கருத்துக்கு நன்றி.

      நீக்கு
  15. வணக்கம் சகோதரி

    பதிவு அருமை. இன்று நான் கொஞ்சம் தாமதமாக வந்துள்ளேன். தேன் சிட்டுக்களை அழகாக படமெடுத்து இருக்கிறீர்கள். அவற்றிற்கு விளக்கம் தந்த வாசகங்களும் அருமை.

    நாம் காட்டும் அக்கறையை விட பறவைகளின் அன்பால் துளிர் விடும் மரம் பார்க்க மிகவும் அழகாக உள்ளது. அடர்த்தியாக வளர்ந்ததும் தன் நன்றியை செலுத்த நாளை பறவைகளுக்கு கூடுகள் அமைத்துக் கொள்ள புகலிடம் தரும். பறவைகளுக்கும். மரங்களுக்கும் உள்ள புரிந்துணர்வு பாசம், நன்றிகள் வியப்பைத் தருகிறது இல்லையா?

    தங்கள் மகன் மரத்தில் தொங்க விட்டிருக்கும் நீர் ஜாடி அழகாக உள்ளது. தேன் சிட்டு நன்றி சொல்லி நீர் அருந்திக் போகும். நீங்களும் உங்கள் கணவரும் பழைய வீடுகளில் கீழே விழுந்த பறவை குஞ்சுகளை காப்பாற்றி அது பறக்கும் வரையில் பாதுகாத்து வைத்து வளர்த்தது கண்டு மனம் நெகிழ்ந்து போனேன். உங்கள் குடும்பமே பறவைகளிடத்தில் பிரியமாக இருந்து அவைகளை போற்றி வரும் நல்ல மனதை உடைய குடும்பம். இத்தகைய அன்பானவர்களுடன் எனக்கு நட்பை ஏற்படுத்தி தந்தமைக்கு இறைவனுக்கு என் பணிவான நன்றிகளை தெரிவித்துக் கொள்கிறேன்.

    நீங்கள் பகிர்ந்த வீடுகளும் அழகாய் உள்ளன. சித்திர வேலைப்பாடுகளும், கட்டிட கலை நுணுக்கங்களும் பார்க்கும் போது, நல்ல கலை திறமையுள்ளவர்கள் அந்த வீட்டின் உரிமையாளராக இருந்திருப்பார்கள் என நினைக்கிறேன்.

    தாங்கள் குடியிருந்த வீடும் அருகில் சிவன் கோவிலோடு, அதன் மூன்று குளங்களோடு இயற்கை வனப்பு மிக்க இடமாக இருக்கிறது. மழைப் பதிவும் சென்று படித்து வந்தேன். மழையை ரசிக்காதவர்கள் யாராக இருக்க முடியும்... அதில் தங்கள் மகளின் பாட்டும், பாரதியார் பாட்டும் இனிமையாக இருந்தது. மழைப் பதிவும் அழகாக எழுதியுள்ளீர்கள். பாராட்டுக்கள். அனைத்து பகிர்விற்கும் மிக்க நன்றி சகோதரி.

    நன்றியுடன்
    கமலா ஹரிஹரன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வணக்கம் கமலா ஹரிஹரன், வாழ்க வளமுடன்
      இரவு வேலைகள் முடித்து பதிவை படித்து விரிவாக கருத்து சொன்னதற்கு நான் தான் நன்றி சொல்லவேண்டும்.

      //தேன் சிட்டுக்களை அழகாக படமெடுத்து இருக்கிறீர்கள். அவற்றிற்கு விளக்கம் தந்த வாசகங்களும் அருமை.//

      நன்றி.

      //பறவைகளின் அன்பால் துளிர் விடும் மரம் பார்க்க மிகவும் அழகாக உள்ளது.//
      இரண்டுக்கும் உள்ள பரஸ்பர புரிந்துணர்வு பாசம் சரியாக சொன்னீர்கள் சகோ.

      //அன்பானவர்களுடன் எனக்கு நட்பை ஏற்படுத்தி தந்தமைக்கு இறைவனுக்கு என் பணிவான நன்றிகளை தெரிவித்துக் கொள்கிறேன்.//

      நாம் இறைவனுக்கு நன்றி சொல்வோம் அன்பான நட்புகளை கொடுத்தமைக்கு.

      அந்த கோவிலுக்கு மாயவரம் வந்த பின்னும் மாதம் ஒரு தடவை போய் வந்தோம், அப்புறம் திருவிழா அழைப்பு வரும் அப்போது போய் வந்தோம். அந்த ஊர் மக்கள் அன்பானவர்கள். அங்கிருந்து பிரிய மனமில்லாமல் பிரிந்து வந்தோம் மாயவரம். அப்புறம் மாயவரம் நட்புகளை பிரிய முடியாமல் பிரிந்து மதுரை வந்தோம்.

      பழைய என் மழை பதிவையும் படித்து கருத்து சொன்னதற்கும் பாராட்டுக்களுக்கும் நன்றி நன்றி .
      உங்களின் ஊக்கம் தரும் பின்னூட்டங்கள் எழுத தூண்டுகோலாக இருக்கிறது சகோதரி.


      நீக்கு
  16. அழகிய படங்கள். சுறுசுறுவென ஓரிடத்தில் நில்லாது பறக்கும் தேன்சிட்டுகளைப் படமாக்குவதும் சுவாரஸ்யமான சவால்தான். கூடு அரை குறையாக இதே போலவே அவை கட்டிப் பார்த்திருக்கிறேன். தகவல்களுடன் பகிர்வு நன்று. பழைய கால வீட்டின் படம் அருமை.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வணக்கம் ராமலக்ஷ்மி, வாழ்க வளமுடன்

      //சுறுசுறுவென ஓரிடத்தில் நில்லாது பறக்கும் தேன்சிட்டுகளைப் படமாக்குவதும் சுவாரஸ்யமான சவால்தான்//
      ஆமாம் ராமலக்ஷ்மி. பறப்பதை திரு ஏடகத்தில் மஞ்சளும் காப்பி பொடி கலர் எடுத்தேன்.
      போன வருடம் இங்கு வந்த போது எடுத்தேன், அதை தேட வேண்டும். நேற்று கொஞ்ச தூரத்தில் எடுத்தேன் அதை பார்க்க வேண்டும் நல்லா இருக்கா என்று.
      பழைய கால வீடு பிடித்து இருக்கா? மகிழ்ச்சி.
      உங்கள் கருத்துக்கு நன்றி ராமலக்ஷ்மி.

      நீக்கு
  17. பதில்கள்
    1. வணக்கம் சகோ கரந்தை ஜெயக்குமார், வாழ்க வளமுடன்
      உங்கள் கருத்துக்கு நன்றி.

      நீக்கு
  18. தேன் சிட்டுக்களின் சுறுசுறுப்பு நம்மை அசர் வைக்கும்... இணையோடு இருக்கும் சமயங்களில் இவற்றைக் கவனிப்பதே ஆனந்தம்... அவரைப் பந்தல்களில் இவற்றின் துறுதுறுப்பு சொல்லி மாளாது..

    பூக்கள் பூக்களாய் ஆராய்வது துணையை அரவணைத்துக் கொள்வது அதே சமயம் கூட்டையும் நோட்டமிட்டுக் கொள்வது.. என,
    ஆகா.. அற்புதம்..

    இத்தனைச் சிறிய பறவைக்கும் எத்தனைப் பெரிய அறிவை வைத்தான் ஈசன்!...

    அழகான படங்களுட்ன் பதிவு..

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வணக்கம் சகோ துரை செல்வராஜூ, வாழ்க வளமுடன்

      //தேன் சிட்டுக்களின் சுறுசுறுப்பு நம்மை அசர் வைக்கும்...//

      ஆமாம்.

      கூடு கட்டும் போது துணைக்கு ஆதரவாய் இருக்குமாம். குஞ்சுபொரிக்க அடைகாக்கும் போது தன் இணைக்கு உணவு கொடுப்பது கூட்டை காவல் காப்பது என்று இருக்கும். நீங்கள் சொல்வது போல் சிறிய பறவைக்கு பெரிய அறிவை கொடுத்து இருக்கிறார் இறைவன் என்று நம்மை வியக்க வைக்கும்.

      உங்கள் கருத்துக்கு நன்றி.

      நீக்கு
  19. முதலில் மனதில் பட்ட விஷயத்தை சொல்லிடறேன்க்கா ..இந்த மாதிரி பறவைகள் ,மற்றும் உயிரினங்கள் எல்லாவற்றின் மீதும் அன்பு காட்டுவது ஒத்த சிந்தனையுள்ள தம்பதியர் அமைவது அபூர்வம் .உங்கள் இருவருக்கும் பறவைகள் மீதுள்ள அன்பு அழகான அன்புக்கா .

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வணக்கம் ஏஞ்சல், வாழ்க வளமுடன்
      உங்கள் மனதில் பட்ட விஷயத்தை பகிர்ந்து கொண்டது மகிழ்ச்சி ஏஞ்சல்.
      இருவருக்கும் இயற்கையை ரசிக்க பிடிக்கும், இசை பிடிக்கும் நிறைய ஒத்த விஷயங்கள் இருந்தது என்பது உண்மைதான் ஏஞ்சல்.

      தென்னைமரத்திலிருந்து கிளி விழுந்த போது எடுத்து வந்தேன் முதன் முதலில் நிறைய பதிவுகளில் சொல்லி இருக்கிறேன். அதற்கு வீட்டில் புதிதாக வாங்கி இருந்த வெங்காய கூடையை அழகாய் கிளி கூடுகாக செய்து தந்தார்கள். அதற்கு பழங்கள் பிடிக்கும் என்று வாங்கி வருவார்கள்.
      கிளிக்கு பேயன்பழம்(கற்பூரவல்லி) என்ற வாழைபழம் பிடிக்கும் அதை கொடுப்போம். அதற்கு இறகு முளைத்தவுடன் பறக்க சொல்லி கொடுத்தார்கள் ஒரு கம்பியை வளைத்து அதில் உட்கார வைத்து பறக்க விடுவார்கள். இரவு பத்திரமாக கூட்டில் வைத்து விடுவார்கள். ஒரு நாள் மாயவரத்திற்கு மருத்துவரிடம் சோதனை செய்து கொள்ள போய் இருந்தோம், வந்து பார்த்தால் கிளி இல்லை பறந்து விட்டது. அப்போதும் இப்படித்தான் குழந்தை உண்டாகி இருப்பதை மருத்துவர் சொன்ன மகிழ்ச்சி ஒரு புறம், கிளி பறந்து போன வருத்தம் ஒரு புறம் இருந்தது.

      நீக்கு
    2. அழகிய நினைவுகளை பகிர்ந்துகொண்டதற்கு நன்றிக்கா .

      நீக்கு
    3. மீண்டும் படித்து கருத்து சொன்னதற்கு நன்றி ஏஞ்சல்

      நீக்கு
  20. தேன்சிட்டு பற்றிய தகவல்கள் படங்கள் எல்லாம் சூப்பர்ப் .உண்மைதான் நாம் உயிரை காப்பாற்றி வளர்த்த பறவை பறந்து செல்லும்போது மனம் வலிக்கும் ஆனால் அவை அவற்றுக்கான உலகில் அவற்றின் சொந்தங்களுடன் இருப்பதே நல்லது எங்க வீட்டிலும் அணில்பிள்ளை குயில்குஞ்சு சிட்டுகுருகுஞ்சுகள் கிளிகள் எல்லாவற்றையும் வளர்த்து பறக்க விட்டிருக்கோம் 

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. //நாம் உயிரை காப்பாற்றி வளர்த்த பறவை பறந்து செல்லும்போது மனம் வலிக்கும் ஆனால் அவை அவற்றுக்கான உலகில் அவற்றின் சொந்தங்களுடன் இருப்பதே நல்லது எங்க வீட்டிலும் அணில்பிள்ளை குயில்குஞ்சு சிட்டுகுருகுஞ்சுகள் கிளிகள் எல்லாவற்றையும் வளர்த்து பறக்க விட்டிருக்கோம் //

      பறந்து செல்வது மகிழ்ச்சிதான் ஆனால் நம்முடன் இருந்த ஒன்று வீட்டை விட்டு போய் விட்டால் ஒரு வெறுமை, வருத்தம் சூழ்ந்து கொள்கிறது ஏஞ்சல்.

      மாயவரத்தில் ஒரு தவிட்டு குருவியின் குஞ்சு கூட்டிலிருந்து கீழே விழுந்த போதும் எடுத்து வந்து வீட்டில் வைத்து இருந்தேன், அந்த குஞ்சு இரண்டு மூன்று நாள்தான் இருந்தது இறந்து விட்டது. அதை மரத்தடியில் புதைத்த போது பக்கத்து வீட்டுகார மாமா மறு நாள் பால ஊற்று என்று கிண்டல் அடித்தார். வ்ர்கு நாட்கள் வருத்த பட்டு இருக்கிறோம்.

      வளர்ப்பு செல்லங்க்களை வளர்க்க விரும்பவே இல்லை . கீழே விழுந்தவைகளை மட்டுமே காப்பாற்றி இருக்கிறேன்.

      அணில் பிள்ளை வளர்ந்து குடு குடு என்று ஓடி போனது மகிழ்ச்சியை தந்து இருக்கிறது.

      நீக்கு
    2. //பக்கத்து வீட்டுகார மாமா மறு நாள் பால ஊற்று என்று கிண்டல் அடித்தார். வ்ர்கு நாட்கள் வருத்த பட்டு இருக்கிறோம்.//

      சிலர் அப்படிதான்க்கா உணர்வில்லா மனிதர்கள் .சுலபமாக அடுத்தவங்க மனதையும் hurt செய்வாங்க ..எத்தனை வலி தங்கள் சொல்லால் ஏற்படும்னு உணராமல் இன்னும் இருக்காங்க பலர் .

      நீக்கு
    3. அவர் எப்போதும் அப்படித்தான் கிண்டல் கேலி செய்வார் எல்லோரையும்.
      இரண்டு மூன்று நாள் குருவி இறந்தது வருத்தம் என்றாலும் அவர் சொன்னபடி மறு நாள் பால ஊற்றினேன் .

      நீக்கு
  21. அந்த பழைய வீட்டின் டிசைன் ஆச்சர்யப்படுத்துது .1954 இல் எத்தனை வேலைப்பாட்டுடன் வடிவமைச்சிருக்காங்க .இப்பவும் இருக்கா  அந்த வீடு ?

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. இந்த பழைய வீடு 10 வருடங்களுக்கு முன்பு எடுத்த படம். மாயவரத்திலிருந்து ஒரு கல்யாணத்திற்கு திருவெண்காடு போய் இருந்தோம், அப்போது எடுத்த படம்.
      அப்போது இருந்தது. இப்போது இருக்கா என்று திருவெண்காடு நட்புகளிடம் கேட்க வேண்டும்.
      நான் குடியிருந்த வீடு அப்படியே இருக்கிறது. அதை தன் தாய் தந்தை வாழ்ந்த வீட்டை அப்படியே வைத்து இருக்க வேண்டும் என்று வைத்து இருக்கிறார்கள்.

      உங்கள் கருத்துக்களுக்கு நன்றி ஏஞ்சல்.

      நீக்கு
  22. சில நாட்களாக வலைப்பக்கம் எட்டிப்பார்க்க முடியவில்லை கோமதி அக்கா, அதனால வராமல் விட்டுவிட்டேன்.

    தேன் சிட்டு எனக் கேள்விப்பட்டதுண்டு ஆனா இப்போதான் பார்க்கிறேன், அழகிய நீண்டுச் சொன்உ, கொத்திப்போடும் போல இருக்கே.. சிட்டுப்போல குட்டியோ?..

    மாமாவின் ரேடியோக் கவர்க் கூடு அழகு.. நல்ல ஐடியா வந்திருக்கிறதே..

    தேன் சிட்டுக் கூடு, தூக்கணாங்குருவிக்கூடுபோல இருக்குது பார்க்க.

    மகன் வீட்டு, தண்ணி தூக்கணம் அழகு.

    பழைய விலாஸ் சூப்பர்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வணக்கம் அதிரா, வாழ்க வளமுடன்

      //தேன் சிட்டு எனக் கேள்விப்பட்டதுண்டு ஆனா இப்போதான் பார்க்கிறேன், அழகிய நீண்டுச் சொன்உ, கொத்திப்போடும் போல இருக்கே.. சிட்டுப்போல குட்டியோ?..//

      அது பறந்து தேன் அருந்தும் காணொளி அடுத்து ஒரு பதிவில் போடுகிறேன் அதிரா. 5 வருடம் தான் அதன் வயதாம். வீட்டில் வைத்து வளர்த்தால் 10 வருடம் இருக்குமாம்.

      மிக அழகாய் இருக்கும் சிட்டுபோல் குட்டி (மிக மிக சின்னதாய் இருக்கும்)

      //மாமாவின் ரேடியோக் கவர்க் கூடு அழகு.. நல்ல ஐடியா வந்திருக்கிறதே..//

      ஆமாம், அப்போ செய்த கூட்டை படம் போட முடியவில்லை.

      தூக்காணாங்குருவி மிக அழகாய் இருக்கும் தேர்ந்த கட்டிட கலைஞ்சர் போல கட்டி இருக்கும் முன்பு அந்த கூடு பதிவு போட்டு இருக்கிறேன். இது கொஞ்சம் வெளியே ஒழுகற்று இருக்கும் ஆனால் உள்ளே குஞ்சுக்கு மிக அருமையான படுக்கை தயார் செய்து இருக்கும்.

      //மகன் வீட்டு, தண்ணி தூக்கணம் அழகு.//

      இந்த பறவைக்கு மட்டுமே வடிவமைத்த தூக்கு.

      பழைய விலாஸை ரசித்தமைக்கு நன்றி அதிரா.
      உங்கள் வேலைகளுக்கு இடையில் வந்து பதிவை படித்து கருத்து சொன்னதற்கு நன்றி அதிரா.


      நீக்கு
  23. //பறவைகளின் அன்பால் மரம் துளிர்க்க ஆரம்பித்து விட்டது.// அருமை! ரசித்தேன்.

    திருவெண்காடு கோவிலுக்கு ஒரு  சென்றிருக்கிறேன். வெகு அழகான கோவில். புதன் சன்னிதிக்கு எதிரே குளம் இருக்கும் அல்லவா?

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வணக்கம் பானுமதி வெங்கடேஷ்வரன், வாழ்க வளமுடன்
      திருவெண்காடு கோவிலில் அம்மன் சன்னதிக்கு எதிரே குளம் இருக்கிறது. குளத்திற்கு அருகில் புதன் சன்னதி உள்ளது. அந்த குளத்தின் பேர் சந்திர தீர்த்தம்.
      அழகான கோவில்.
      உங்கள் கருத்துக்கு நன்றி.

      நீக்கு