வியாழன், 19 நவம்பர், 2020

ஸ்ரீ பாலதண்டாயுதபாணி- குமரன் மலை

குமரன் மலை

சில வருடங்களுக்கு முன் என் தங்கையின் மகள் இருக்கும் புதுக்கோட்டை ஊருக்குப் போய் இருந்தோம். அப்போது கார்த்திகை சோமவார நாள்.   என் தங்கை மகளிடம்  " முருகன் கோவில் பக்கத்தில் இருக்கா" என்று கேட்டேன். அவள் இந்தக்  கோயிலுக்கு அழைத்துச் சென்றாள்.

அவள் சொன்னதால் இந்த அழகிய கோவிலையும், மிக அழகான பாலதண்டாயுத குமரனையும்  தரிசனம் செய்யக் கிடைத்தது.

புதுக்கோட்டையிலிருந்து காரையூர் செல்லும் வழியில் குமரன் விலக்கு என்ற இடத்தில் இருக்கிறது இந்த குமரன் மலை. புதுக்கோட்டையிலிருந்து 12 மைல் தூரத்தில் இருக்கிறது.

தோரண வாயிலின் ஒரு பக்கத்தில் கோயிலின் வரலாறு
ஒரு பக்கம் பாடல்

படிகள் அகல அகலமாக உள்ளன.கொஞ்சம்படிகள்தான். சிறு குன்றின் மீது  குமரன் இருக்கிறான்.


படிகளில் ஏறும் முன் அழகிய தாமரைக் குளத்தில் இறங்கி, கை கால்களைச் சுத்தம் செய்து விட்டுக் கோவிலுக்குப்  போனோம். திருக்குளத்திற்குப் பெயர் "சங்கு தீர்த்தம்". இங்கு குளித்து இறைவனை வழிபட்டால் வாதநோய் சரியாகும் என்று சொல்கிறார்கள்.
என் தங்கையின் பேத்திதான் வழிநடத்திச் சென்றாள்
படி ஏறும் முன் குளத்துக்குப் பக்கத்தில் பிள்ளையார், சிவனை வணங்கிக் கொள்கிறோம்

(மேலே குழந்தை முருகன்), கீழே வள்ளி தெய்வானையுடன்
சங்குதீர்த்தக்கரையிலிருந்து எடுத்த படம்


 படி ஏறி மேலே போனால் கார்த்திகை சஷ்டி விழாவிற்குக் கொடிஏறி உள்ளது
சேவற்கொடியோன் 'வேலுண்டு பயமில்லை' என்கிறார் 


400 வ்ருட பழைமையான கோயிலுக்கு கதை இருக்கிறது, கொடி மரம் முன்பு வேல் இருக்கிறது
'தாத்தா! இங்க  பாருங்க! இந்தக் கோயில் உருவாகக் காரணக்  கதை இருக்கிறது'' என்று தங்கை பேரன் அழைக்கிறான். சுவரில்  வரையப் பட்டு இருக்கும் ஓவியத்தைப் பார்க்க அழைக்கிறான்.

சேதுபதி தேவர் எனும் முருகபக்தர், ஆண்டு தோறும் காவடி எடுத்துக் கொண்டு கால்நடையாகப் பழனி சென்று முருகனைத் தரிசனம் செய்து வருவாராம். வயது நிறைய ஆனதால் அவரால் நடக்க சிரமம் ஏற்பட்டதால் குடும்பத்தினர் இனி பாதயாத்திரையாகக் காவடி எடுத்துச் செல்லவேண்டாம். வீட்டிலிருந்து வணங்கலாம் என்று சொன்னார்களாம். அவர் கவலையுடன்  படுத்து இருந்த போது  முருகன் கனவில், 'இனி நீ அங்கு வர வேண்டாம். நான் இங்கு வருகிறேன். என்னை வணங்கிக் கொள்' என்றாராம். நான் இருக்கும் இடத்தில் மலையின் மேல் சங்குச் செடிக்கு அடியில் விபூதிப் பையும், ருத்திராட்சமாலையும் இருக்கும் என்று சொல்லி மறைகிறார்.

பெரியவர்  அந்த இடத்திற்குப் போய்  வேலை  வைத்து வழிபாடு செய்கிறார். அவருக்குப் பின் அந்த ஊர் மக்கள் அங்கு கோயில் கட்டி வழிபாடு செய்து இருக்கிறார்கள்.

குடி காத்த குமரமலையான் என்று எழுதி இருக்கிறது அவர் இருக்கும் வாயிலின் மேல். உள்ளே ஸ்ரீ பாலதண்டாயுதபாணி சின்ன குழந்தை வடிவில் அழகாய்த் தண்டத்தைக் கையில் ஏந்தி, தலையை லேசாகச் சாய்த்து இடது கரத்தைத் தொங்கவிட்டு நிற்கிறார். பார்த்துக் கொண்டே இருக்கலாம். அவ்வளவு அழகு!
அவரிடம் எதுவும் கேட்க தோன்றவில்லை, அப்பொழுது.


அருமையான குமரன் மலை குமரனைப்பற்றிய  பாடல்

நவக்கிரக சன்னதி, வாங்க ஆச்சி, இப்படித்தான் வலம் வரவேண்டும்.
யாகசாலையில்  கடங்கள் தயார் செய்து கொண்டு இருந்தார்கள். பூஜைக்கு வேல் இருக்கிறது, அன்னையிடம் கொடுக்க. அன்னை குமரனிடம் கொடுக்க என்று விழா மாலை நடக்கப் போகிறது.
              ஐயப்பன் சன்னதியைச் சுற்றி வந்து   இயற்கை எழில் காணலாம்.

ஐயப்பன்  சன்னதி

ஐயப்பனைக் கார்த்திகை மாதம் விரதம் இருந்து மாலை போட்ட பக்தர்கள் தரிசித்துக்   கொண்டு இருந்தார்கள்
                                 பிரகாரம் வலம் வரலாம். சுத்தமாக இருக்கிறது, கோயில்
வேப்பமரம் தலவிருட்சம்- அதைச் சுற்றிலும்  நாகர்கள்

வேண்டுதல்கள் முடிச்சுக்கள் -குமரன் அனைவரின் வேண்டுதல்களை நிறைவேற்றி இருப்பார்.

துர்க்கை சன்னதி


இடும்பன் சன்னதிஅலங்கார தோரண வாயிலில் அழகான மயில்கள் 

 மலையை சுற்றிலும் பசுமை, தண்ணீர் எல்லாம் ஒரு காலத்தில் இருந்து இருக்கிறது.  நாங்கள் போனபோது வறண்டு கிடந்தது.

ஆடுகள் மேய்ந்து கொண்டு இருந்தனமலை மேலிருந்து சங்கு தீர்த்தம்
முருகனைக் கும்பிட்டு மனநிறைவுடன் இறங்கி வந்தோம். 

மூலவரின் அழகைப் பார்க்க இந்தக் காணொளி பார்க்கலாம் நேரம் இருந்தால் பாருங்கள்.


வாழ்க வையகம் !  வாழ்க வையகம் ! வாழ்க வளமுடன்

=====================================41 கருத்துகள்:

 1. மிகவும் சிறப்பான கோவில்... படங்கள் அருமை அம்மா...

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வணக்கம் திண்டுக்கல் தனபாலன், வாழ்க வளமுடன்
   உங்கள் கருத்துக்கு நன்றி.

   நீக்கு
 2. பதில்கள்
  1. முகநூல் வழியாக வந்தால் காணொளி எனக்கும் காட்டவில்லை.
   டேஸ்போர்ட் வழியாக என் வலைத்தளம் வந்தால் காட்டுகிறது தனபாலன்.

   நீக்கு
  2. தரிசித்தேன்... நன்றி அம்மா... இன்றைய நாளும் இனிதே துவக்கம்...

   நீக்கு
  3. வணக்கம் திண்டுக்கல் தனபாலன், வாழ்க வளமுடன்
   மீண்டும் வந்து முருகனை தரிசித்து கருத்து சொன்னதற்கு நன்றி நன்றி.

   நீக்கு
 3. குன்றிருக்கும் இடங்களில் குமரன் இருப்பான் என்கிறார்கள்.  இங்கும் அதே போல...

  தனிமையான இடம்.  அழகான கோவில்.  சங்கு தீர்த்தத்தில் நீராடினால் புதிய நோய்கள் வராமல் இருந்தால் சரி...   பொறுப்பானவர்கள் கொஞ்சம் ஆதிச்ச சீர்திருத்தி சுத்தமாக வைத்திருக்கலாம்.

  பேத்தி வழிகாட்டி அழைத்துப்போவது அழகு.  கிட்டத்தட்ட எல்லா சன்னதிகளும் உள்ளே இருக்கின்றன போலும்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வணக்கம் ஸ்ரீராம், வாழ்க வளமுடன்

   //தனிமையான இடம். அழகான கோவில்.//

   அமைதியான இடத்தில் குடி கொண்டு இருக்கிறார் குமரன்.

   //சங்கு தீர்த்தத்தில் நீராடினால் புதிய நோய்கள் வராமல் இருந்தால் சரி... //

   குப்பைகள் இல்லை ஸ்ரீராம், மலர்கள் இருந்தன. வெள்ளை தாமரைகொடிகள்தான் படர்ந்து இருக்கிறது. தீர்த்த குளத்தில் தண்ணீர் நிறைய இருக்கும் போது குளிப்பார்கள் போலும்.

   மலைக்கு கீழே சில சன்னதிகள், மேலே கொஞ்சம் சன்னதிகள் இருக்கிறது.

   நீக்கு
 4. காணொளி எனக்கு வேலை செய்ததால் தரிசனம் செய்ய முடிந்தது.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. உங்களுக்கு காணொளி வேலை செய்து இருப்பது மகிழ்ச்சி.
   அழகான முருகன் இல்லையா?
   உங்கள் கருத்துக்களுக்கு நன்றி.

   நீக்கு
 5. நான் பார்க்க ஆசைப்பட்ட, இதுவரை பார்த்திராத கோயிலுக்கு உங்கள் பதிவு மூலம் செல்லும் வாய்ப்பு கிடைத்தது. இறையருளால் அங்கு செல்லும் நாளுக்காகக் காத்திருக்கிறேன்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வணக்கம் முனைவர் ஐயா, வாழ்க வளமுடன்
   நீங்கள் பார்க்க ஆசைப்பட்ட கோயிலை பகிர்ந்தது எனக்கு மகிழ்ச்சி.
   நீங்கள் இறையருளால் அங்கு செல்லும் வாய்ப்பு கிடைக்கும்.
   உங்கள் கருத்துக்கு நன்றி.

   நீக்கு
 6. கோயில் படங்கள் அழகாக இருக்கின்றன கோமதிக்கா. கோயில் விவரமும் தெரிந்து கொள்ள முடிந்தது.

  சங்கு தீர்த்தம் மேலிருந்து தெரியும் அக்கோணத்தில் எடுத்த படம் செம செம...
  அது போல ஆடுகள் மேயும் படத்துக்கும் முந்தைய படம் நீர்னிலை வறண்டு இருக்குன்னு சொன்ன படம் அதுவும் செமையா இருக்கு...

  சங்கு தீர்த்தம் படம் மற்றும் படி ஏறும் படம், பாறை போன்று தெரியும் படம் எல்லாம் நீங்கள் முன்பு சென்றிருந்த சமண மலை? பசுமை நடை குழுவினருடன் (மதுரை பக்கம்) அதை நினைவூட்டியது.

  கீதா

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வணக்கம் கீதா ரெங்கன், வாழ்க வளமுடன்

   படங்கள் உங்களுக்கு பிடுத்து இருப்பது மகிழ்ச்சி கீதா.

   //சங்கு தீர்த்தம் படம் மற்றும் படி ஏறும் படம், பாறை போன்று தெரியும் படம் எல்லாம் நீங்கள் முன்பு சென்றிருந்த சமண மலை? பசுமை நடை குழுவினருடன் (மதுரை பக்கம்) அதை நினைவூட்டியது.//

   எனக்கும் பதிவு செய்யும் போது அந்த நினைப்பு வந்தது.
   சமணமலை கோயில் பின்னால் போனது , இந்த கோயில் முன்பே பார்த்து விட்டேன். சமணமலை போன போது தாமரை குளத்தைப் பார்த்ததும் குமரன் மலை நினைவு வந்தது எனக்கு.

   உங்கள் நினைவாற்றல் மகிழ்ச்சியை தருகிறது.
   உங்கள் கருத்துக்கு நன்றி கீதா.

   நீக்கு
 7. காணொளி எனக்கு வேலை செய்தது. சங்குதீர்த்தம் அழகு மேலிருந்து இன்னமும் அழகு. நானும் இந்தக் கோயிலைப் பார்த்தப்போ நீங்க பசுமை நடைக்குழுவினருடன் சென்ற இடங்கள் நினைவில் வந்தது. படங்கள் எல்லாம் அருமை. இந்தக் கோயிலைப் பற்றிக் கேள்விப்பட்டதே இல்லை. சின்னக் குன்று கிடைத்தால் கூடப் போதும். குமரன் குடி கொண்டு விடுவான்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வணக்கம் கீதா சாம்பசிவம், வாழ்க வளமுடன்
   ஆமாம் கீதா, சங்கு தீர்த்தம் அழகாய் இருக்கிறது மேலே இருந்துப் பார்க்க.
   இந்த கோயில் காணொளிகள் நிறைய இருக்கிறது ஒவ்வொன்றும் ஒவ்வொரு மாதிரி அழகு.
   சுற்றிலும் தண்ணீர் நடுவில் இந்த மலைக்கோயில் இருக்கிறது அது மிகவும் அழகு.

   புதுக்கோட்டையில் நிறைய கோவில்கள் எங்களுக்கு தெரிந்துப் பார்த்தோம் , இந்தக் கோயில் தங்கை பெண் சொல்லித்தான் தெரியும்.

   //சின்னக் குன்று கிடைத்தால் கூடப் போதும். குமரன் குடி கொண்டு விடுவான்.//

   ஆமாம் கீதா, திருச்சி போகும் வழியில் 'புழுதிபட்டி' என்ற ஊரில் ஒரு சின்ன குன்று அதில் குமரன் குடி கொண்டு இருக்கிறான்.

   நீக்கு
 8. பேத்தியும், பேரனும் கூடக் கோயிலைப்பற்றித் தெரிந்து வைத்திருப்பது மனதுக்கு மகிழ்ச்சியாக உள்ளது. ஆசிகள் அவர்களுக்கு. சொல்லிடுங்க உங்க தங்கை, தங்கை பெண்ணிடம்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. பேத்தியும், பேரனும் அவர்கள் வீட்டுக்கு வருபவர்களை இந்த கோயிலுக்கு அடிக்கடி அழைத்து செல்வதால் அவர்களுக்கு தெரிந்து இருக்கிறது எல்லாம்.

   அவர்களுக்கு உங்கள் ஆசிகள் கிடைத்தது மகிழ்ச்சி, தங்கையிடம், தங்கை பெண்ணிடம் சொல்லி விடுகிறேன்.

   உங்கள் கருத்துக்களுக்கு நன்றி.

   நீக்கு
 9. இன்று காணக் கிடைத்தது அதிசயம்.அருமை ஆன தரிசனம். கமெண்ட் போகுமா தெரியாது.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வணக்கம் காமாட்சி அம்மா, வாழ்க வளமுடன்
   பலவருடங்களுக்கு முன் போனது அதை இன்று போட சந்தர்ப்பம் கிடைத்தது முருகன் அருள்.

   உங்கள் கருத்து வந்து சேர்ந்து விட்டது. உங்கள் வரவு மனதுக்கு மகிழ்ச்சியை அளித்தது.

   உங்கள் கருத்துக்கு நன்றி நன்றி.

   நீக்கு
 10. அழகான படங்கள் வழக்கம்போல் தங்களது அற்புதமாக எடுத்த கோணங்கள் மேலும் அழகூட்டுகிறது.

  விளக்கமும் நன்று வாழ்க வையகம்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வணக்கம் தேவகோட்டை ஜி, வாழ்க வளமுடன்

   படங்களை ரசித்து கருத்து சொன்னதற்கு நன்றி.

   உங்கள் கருத்துக்கும், வாழ்த்துக்கும் நன்றி ஜி.

   நீக்கு
 11. அழகிய புதிய கோவில் அழகிய படங்களுடன்.

  கோவிலை மனக்கண்ணின்மீது கொண்டுவந்துவிட்டீர்கள்.

  அவனிடம் ஒன்றும் கேட்கத் தோன்றவில்லை அப்போது - ரசித்த வரி. கேட்காமலேயே கொடுப்பேனே என அவன் நினைத்திருக்கலாம்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வணக்கம் நெல்லைத் தமிழன், வாழ்க வளமுடன்
   போய் வந்த தினத்திலிருந்து கோயிலை பதிவு போட வேண்டும் என்று நினைத்து போட சந்தர்ப்பம் இப்போது தான் முருகன் அருளினார்.

   //அவனிடம் ஒன்றும் கேட்கத் தோன்றவில்லை அப்போது - ரசித்த வரி.//
   மகிழ்ச்சியாக இருக்கும் போதும் அவரின் அழகை பார்த்துக் கொண்டே இருக்கும் போதும் கேட்க தோன்றவில்லை .

   வரியை ரசித்தமைக்கு நன்றி.

   //கேட்காமலேயே கொடுப்பேனே என அவன் நினைத்திருக்கலாம்.//

   தாய் போன்றவன் இல்லையா இறைவன் எப்போது எது தேவை என்பது தாயுக்கு தானே தெரியும். நாம் கேட்கவேண்டாம் தான்.

   உங்கள் வரவுக்கும் கருத்துக்கும் நன்றி நன்றி.

   நீக்கு
 12. படங்களும் பகிர்வும் அழகு அருமை
  நன்றி சகோதரி

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வணக்கம் சகோ கரந்தை ஜெயக்குமார், வாழ்க வளமுடன்
   உங்கள் கருத்துக்கு நன்றி.

   நீக்கு
 13. வணக்கம் சகோதரி

  பதிவு அருமை. குமரன் மலை பாலதண்டாயுதபாணி கோவில் மிகவும் அழகாக உள்ளது. எல்லாப் புகைப்படங்களும் மிக அழகாக எடுத்துள்ளீர்கள். தங்களுக்கு கைடாக இருந்து வழிகாட்டி அழைத்துச் சென்ற தங்கள் தங்கையின் பேரனுக்கும், பேத்திக்கும் வாழ்த்துக்கள். இவ்வளவு சின்ன வயதில் கோவிலைப்பற்றி எல்லாமும் தெரிந்து வைத்திருக்கிறார்கள்.

  கோவில் உருவான வரலாறு நன்றாக உள்ளது. முருகனே வந்து தான் குடியிருந்து மக்களுக்கு அருள, இந்த கோவில் உருவாக வழி செய்து தந்துள்ளார் என்றால்,அந்த முருக பக்தரின் பக்தி போற்றப்பட வேண்டியதுதான். அவரையும் பக்தியுடன் வணங்குவோம். என்றுமே அடியார்களை தொழுவது இறைவனுக்கும் சந்தோஷந்தானே..!

  கோவில் நீங்கள் கூறியபடி சுத்தமாக உள்ளது. மலை மேலிருந்து எடுத்த படங்கள் அழகாக இருக்கின்றன. சங்கு தீர்த்தம் ஆடுகள் மேய்வது, இயற்கை வனப்புகள், கோவிலுக்குச் செல்ல படிகளில் ஏறுவது. இறங்குவது போன்ற எல்லா படங்களும் நாங்களும் உங்களுடன் வந்த உணர்வை தந்தன. மூலவர் கந்தனின் தரிசனத்தைப் பற்றி நீங்கள் வர்ணித்ததும் அருமை. அவனை கண்குளிர கண்ட உணர்வையடைந்தேன். பதிவு நன்றாக உள்ளது நான்தான் சற்று தாமதம். நேற்று என்னால் வர இயலாமல் ஏதோ வேலைகள். பகிர்வுக்கு மிக்க நன்றி சகோதரி.

  நன்றியுடன்
  கமலா ஹரிஹரன்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வணக்கம் கமலா ஹரிஹரன், வாழ்க வளமுடன்

   பேரன் , பேத்திகளுக்கு வாழ்த்து சொன்னதற்கு நன்றி .

   //முருக பக்தரின் பக்தி போற்றப்பட வேண்டியதுதான். அவரையும் பக்தியுடன் வணங்குவோம். என்றுமே அடியார்களை தொழுவது இறைவனுக்கும் சந்தோஷந்தானே..//

   அடியார்களை தொழுவது இறைவனுக்கு மகிழ்ச்சிதான். கோயில் கட்டக் காரணமாக இருந்தவரை வணங்க வேண்டும்தான்.

   பதிவையும், படங்களையும் ரசித்து விரிவாக கருத்து சொன்னதற்கு நன்றி நன்றி.

   வேலைகள் எல்லாம் முடித்து ஓய்வு நேரம்தான் வரமுடியும் தாமதம் எல்லாம் இல்லை, எப்போது முடியுமோ அப்போது வாங்க கமலா.

   நீக்கு
 14. அன்பு கோமதி மா.
  புதுக்கோட்டை செல்லும் வழியில் பார்த்த நினைவு வருகிறது.
  குன்று தோறாடி வரும் குமர வடிவேலன் பாடலே
  மனதில் தோன்றியது.
  படங்களும், பொய்கையும்,
  அழகான படிகளும், அதில் இட்ட கோலங்களும் மிக மிக அழகு.

  பாவாடையை ஒதுக்கியபடி பேத்தி செல்லும் அழகு
  மகிழ்ச்சி . பேரன் தாத்தாவுக்குக் காண்பித்துக்
  கொடுக்கும் நேர்த்தியும் தான் சந்தோஷம்..

  காணொளி மிகவும் சிறப்பு.
  பால தண்டாயுத பாணி, எல்லோருக்கும் மன நிம்மதியையும்

  ஆரோக்கியத்தையும் கொடுப்பான்.
  வாழ்க வளமுடன் மா.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வணக்கம் வல்லி அக்கா, வாழ்க வளமுடன்
   நீங்கள் பார்த்து இருக்கலாம்.

   //குன்று தோறாடி வரும் குமர வடிவேலன் பாடலே
   மனதில் தோன்றியது//

   அந்த பாடல் நன்றாக இருக்கும்.

   //பாவாடையை ஒதுக்கியபடி பேத்தி செல்லும் அழகு
   மகிழ்ச்சி . பேரன் தாத்தாவுக்குக் காண்பித்துக்
   கொடுக்கும் நேர்த்தியும் தான் சந்தோஷம்..//

   பேத்தி நன்றாக ஸ்வாமி பாடல்கள் பாடுவாள். அவர்கள் நம்மை வழிநட்டஹ்தி செல்வது நமக்கு சந்தோஷம் தான்.

   //பால தண்டாயுத பாணி, எல்லோருக்கும் மன நிம்மதியையும்

   ஆரோக்கியத்தையும் கொடுப்பான்.//

   அதுதான் இப்போது எல்லோருக்கும் வேண்டியது அக்கா.
   உங்கள் வாழ்த்துக்களுக்கும் கருத்துக்கும் நன்றி.


   நீக்கு
 15. குருக்கள் பேச்சும், சீர்காழியின் குரலும் தெய்வீகம். நன்றி கோமதி மா.
  முருகனிடம் என் மன நிம்மதிக்கு வேண்டிக்கொள்ளுங்கள்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வல்லி அக்கா அன்று ஒன்று வேண்ட தோன்றவில்லை. இப்போது உங்களுக்கும் மற்றும் எல்லோருக்கும் மனநிம்மதி உடல் ஆரோக்கியம் அருள வேண்டிக் கொள்கிறேன்.

   குருக்கள் நன்றாக விவரங்கள் சொன்னார். சீர்காழியின் பாடல் மிக அற்புதம் மனதை, காதை நிறைக்கும் பாடல்.
   உங்கள் கருத்துக்கு நன்றி அக்கா.

   நீக்கு
 16. இந்தப் பதிவு எப்படி கண்னில் படாமல் இருந்தது?...

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வணக்கம் சகோ துரைசெல்வராஜூ, வாழ்க வளமுடன்

   //இந்தப் பதிவு எப்படி கண்னில் படாமல் இருந்தது?...//

   அதுதான் நானும் நினைத்தேன்.

   நீக்கு
 17. இன்று சோமவாரம்தானே கோமதி அக்கா.. நான் சோமவாரம் பிடிப்பதில்லை, அம்மா பார்ப்பா.

  தங்கையின் பேத்தியும் தாமரைக் குளமும் அழகோ அழகு...

  படங்கள் வழமைபோல அழகோ அழகு... ஒவ்வொன்றாக வர்ணிக்க ஆசை... ஆனால் முடியவில்லை.. வேர்க்கால வந்தால் என்னால கொம்பியூட்டர் முன் இருக்கவே முடியாதாக்கும்:)..

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வணக்கம் அதிரா, வாழ்க வளமுடன்
   சோமவாரம்தான் நேற்று விரதம் இருந்து மாவிளக்கு செய்து மாலை இறைவனை வணங்கிய பின் விரதம் முடித்தேன்.

   //தங்கையின் பேத்தியும் தாமரைக் குளமும் அழகோ அழகு...//

   மகிழ்ச்சி.

   வெயிலின் கொடுமை அதிகமோ!
   படங்களை ரசித்து கருத்து சொன்னதற்கு நன்றி   நீக்கு
 18. கோயில் அமைந்திருக்கும் மலைக்குன்றும் கோயிலும், கொடித்தம்பம், சேவல்.. வேப்பமரமும் நாகதம்பிரான்களும் அழகோ அழகு.. நல்ல கிராமப்புறச் சூழல்போல தெரியுது, அங்கு கொஞ்ச நேரம் அமர்ந்திருந்தாலே போதுமே.. மனப்பாரமெல்லாம் பஞ்சாகி, புத்துணர்வு கிடைச்சிடும், படம் பார்த்தே எனக்கு புத்துணர்வாகிறது.. உங்கட புண்ணியத்தில் பல கோயில்களின் தரிசனம் கிடைக்கிறது எங்களுக்கும் கோமதி அக்கா.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. அனைத்து படங்களையும் ரசித்து சொன்னதற்கு நன்றி அதிரா.

   மிக அருமையான சூழல்தான் கோயில் அமைத்து இருக்கும் இடம்.
   நீங்கள் சொல்வது போல் மனபாரம் பஞ்சாகி விடும், புத்துணர்வு கிடைக்கும்

   இன்னும் நிறைய பகிர ஆசைதான் எல்லோறுக்கும் கோயிலாக காட்டினால் போர் அடிக்குமோ என்பதால் அந்த அந்த சமயத்தில் போடுகிறேன்.

   இப்போது இந்தக்காலத்தில் எங்கும் போகமுடியவில்லை முன்பு போனவைகளை பார்த்து தரிசனம் செய்து கொண்டு இருக்கிறோம், அப்படியே உங்களுக்கும்.

   முடிந்த போது வாருங்கள் அதிரா. எப்போது படித்து கருத்து சொன்னாலும் மகிழ்வேன்.

   உங்கள் கருத்துக்களுக்கு நன்றி நன்றி அதிரா.

   நீக்கு
 19. அழகான தலத்தை அறியச் செய்தமைக்கு மகிழ்ச்சி...
  தஞ்சைக்கு அருகிலுள்ள புதுக்கோட்டை தானே... எளிதாக சென்று வரலாம்...

  குமரன் பாடல் ஒன்றைக் கொடுத்திருக்கின்றான்... கார்த்திகையோடு அதைத் தருகின்றேன்...

  முருகன் திருவருள் முன்னின்று காக்க...

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வணக்கம் சகோ துரைசெல்வராஜூ, வாழ்க வளமுடன்

   //தஞ்சைக்கு அருகிலுள்ள புதுக்கோட்டை தானே... எளிதாக சென்று வரலாம்...//

   ஆமாம். அடுத்த முறை ஊருக்கு வரும் போது போய் வாருங்கள்.
   அதற்குள் குமரன் உங்களுக்கு பாடல் தந்து விட்டார், கார்த்திகை மாதம் பாடி வணங்குவோம்.முருகன் திருவருள் அனைவருக்கும் கிடைக்கும்

   நன்றி நன்றி.

   நீக்கு
 20. தங்களின் கணவரின் இறப்பு செய்தி கேட்டு மனம் மிகவும் வருந்துகிறது கோமதிம்மா உங்களின் இழப்பிற்கு ஆருதல் சொல்ல வார்த்தைகள் என்னிடம் இல்லை... காலம்தான் இந்த துயரத்தில் இறந்து மீள வழி செய்யும் அதுதான் மனவலிமை தரும் ... சில இழப்புகளை மீண்டும் சரி செய்துவிடலாம். ஆனால் இப்படிப்பட்ட இழப்பை மீட்க வழியே இல்லை என்பதுதான் க்சக்கும் உண்மை.


  உங்கள் கணவரின் ஆத்மா சாந்தியடைய பிரார்த்திக்கிறேன்.

  பதிலளிநீக்கு