வியாழன், 29 அக்டோபர், 2020

எங்கள் வீட்டுக்கொலு அன்றும், இன்றும்

எங்கள் வீட்டுக் கொலு

சரஸ்வதி பூஜை அன்று  என் கணவர் செய்த சரஸ்வதி அம்மன்

எல்லோரும் நலம்தானே? கொலுவுக்கு அழைக்காமல் கொலு முடிந்த பின்பு படம் காட்டுகிறாள் என்று நினைக்காதீர்கள்.  கொலு சமயத்தில் வலைத்தளம் வரவே முடியவில்லை.

 மகன் வீட்டில் கொலு வைத்து இருக்கிறான் . காலையில் பேரன்  தங்கள் வீட்டில் பூஜை செய்யும்போது பாடும் பாடலை நேரடிக் காட்சியாகக் காட்டுவான் மகன். அப்புறம் பேரன் விளையாடுவான் எங்களுடன். 


மாலை கூட்டுவழிபாடு- மாலை 5 மணியிலிருந்து 6 மணி வரை. (அலைபேசியில்). மீதி நேரங்கள், வீட்டில் பூஜை , கோலம் போடுவது பிராசதங்கள் செய்வது  வீட்டு வேலைகள் என்று பொழுது போய் விட்டது.

பாடும் குழுவினர் ஒரு நாள் வீடியோ காலில் கொலுவைப் பார்த்துப் பாடினார்கள்.

எங்கள் வீட்டுக்கு எதிர்வீட்டில் உள்ளவர்கள் மூன்று பேர், உறவினர்கள்  ஆறு குடும்பத்தினர்  வந்து  சென்றார்கள். வீட்டில் வேலைசெய்பவர் தன் பெண்ணை அழைத்துக் கொண்டு வந்தார்.

மாயவரம் போல் கூட்டம் கிடையாது  இங்கு அவ்வளவு பழக்கம் இல்லை, பழக்கம் இருந்தாலும் இந்தக்காலத்தில் கூட்டம் சேர்க்கக்கூடாது என்பதால் தனித்தனியாக வந்து சென்றார்கள் குடும்பத்தினர்.

கொலு வைக்க ஏற்பாடுகளை ஒரு வாரம் முன்பே நானும் என் கணவரும் சேர்ந்து கொஞ்சம் கொஞ்சமாக ஆரம்பித்தோம். புத்தக அலமாரியை கொலுப் படியாக மாற்ற அதில் உள்ள புத்தகங்களை எடுத்து இடம் மாற்றி அதைப் படியாக செட் செய்வது என்று அவர்களுக்கு வேலை.

போன வருடம்  கொலு வைக்கப் பரணிலிருந்து  இறக்கிய பொம்மைகளை மீண்டும் மேலே ஏற்றவில்லை. அப்படியே கீழே வைத்துக் கொண்டோம் கொஞ்ச  பொம்மைகளை. சில பொம்மைகளைக் கண்ணாடி அலமாரியில் வைத்துவிட்டோம்.  
                                  
                                     பல வருடங்களுக்கு முன்னால் செய்த அம்மன் படம்  முன்பு வைத்த பழக்கத்தை விட முடியாமல் ஆசைக்கு கொஞ்சம் வைத்துப் பார்த்துக் கொண்டோம்.

                                                        (  பழைய கொலு) இப்படி ஒரு வருடம் வீட்டு அலமாரியில் வைத்தோம் கொலு.

இந்தப் படத்தில்  இருக்கும் நிறைய பொம்மைகள் இப்போது வைத்து இருக்கும் கொலுவில் இடம்பெறவில்லை. அவை நித்திய கொலுவாகக் கண்ணாடி அலமாரியில் இடம் பெற்று விட்டது. ராமர் செட், கயிலை செட்,( பிள்ளையார் மாம்பழம் பெறும் காட்சி) கீழ்ப்படியில் இருக்கும்  திருமுருகன் அவதாரக் காட்சி, கார்த்திகைப்பெண்கள், சிவன், பார்வதி செட், கண்ணன் ருக்மணி  ஊஞ்சல் காட்சி, நாதஸ்வர செட் எல்லாம் இந்த கொலுப் படியில் இல்லை.

இரண்டு மூன்று வருடமாய்ப் படி அமைக்கவில்லை. இந்த முறை படி வைக்கலாம் சின்னதாக மூன்று படி என்றார்கள் என் கணவர். இந்த முறை நவராத்திரியை நன்றாக அமைத்துக் கொண்டார்கள் அன்னையர்கள்.

பண்டிகைகளை எப்படி நல்லபடியாகக் கொண்டாடுவது என்ற  மலைப்பு சில வருடங்களாக இருந்து வருகிறது. 

நவராத்திரி சமயம்  ரொம்பவே இருக்கிறது அந்த நினைப்பு. ஒவ்வொரு முறையும் எடுத்து வைக்க பலமும், உற்சாகமும் தந்து  அருள வேண்டும் என்று வேண்டிக் கொள்வேன்.

பெட்டியில் எடுத்து வைத்தபோது  இவ்வளவு நாள் உற்சாகத்தை மனமகிழ்ச்சியை தந்த பொம்மைகளுக்கு நன்றி சொன்னேன்.

ஒவ்வொரு பொம்மைகளுக்கும் ஒரு நினைவு இருக்கிறது - வந்து சென்றது  நினைவுகள். மாயவரத்தில் இருக்கும் நண்பர்கள் கொடுத்த பொம்மைகள், உறவினர்கள் கொடுத்த பொம்மைகள், நாங்கள் மற்றும் பிள்ளைகள் கொலுவிற்கு  சேகரித்தவை . 

மகன் வரைந்த ஓவியங்கள் கொலு படிகளில்   மாட்டி வைத்து இருக்கிறேன். இது  இந்த வருடம் வைத்த கொலு
பழைய கொலு

முன்பு அழகாய் கேழ்வரகு தானியத்தில்  புல் வளர்த்து ஊர் அமைப்பு பிள்ளைகள் செய்தார்கள். மாயவரம் மணிக் கூண்டு,   சினிமா தியேட்டர், ஆஸ்பத்திரி, அங்கு உள்ள சீமாட்டி துணிக் கடை , மூன்று மதக் கோவில்கள் 
எல்லாம் செய்தார்கள். மகன் சாக்பீஸ் பொம்மைகள் செய்து கீரைக்காரம்மா, டிராபிக் போலீஸ், கோவிலுக்குப் போகும் பக்தர்கள் என்று ஆங்காங்கே நிற்க வைத்து இருப்பான்.


இது ஒரு வருடத்தில் செய்தது

மகன் செய்த சாக்பீஸில் செய்த சிவன் கோவில், கோவில் மண்டபம்  சாக்பீஸில் செய்த படிக்கட்டுக்கள்  அதில் ஏறிப் போகும் சாக்பீஸ் மனிதர்கள் இருக்கிறார்கள். துணிக்கடையில் கவுன், சேலை எல்லாம் என் மகள் செய்தாள். மேம்பாலம், ரயில் கீழே போகிற மாதிரி  எல்லாம் இருக்கும்,  மருத்துவமனை, பெரிய ஓட்டல், மூன்று மதக் கோவில்கள்  தெப்பக்குளம், நீராழி மண்டபம் , பார்க் எல்லாம் இருக்கிறது.


(பழைய கொலு)


 இப்போது  பாரதி ஆசைப்பட்டது போல்( பத்துப் பன்னிரெண்டு தென்னைமரம்) தென்னைமரங்கள் சூழ வீடு  வைத்து திருப்திப்பட்டுக் கொண்டேன்.

கொலுவிற்கு வந்த குழந்தைகள் பல்லாங்குழி விளையாடுகிறார்கள்

                                                         

 மூளைக்கு ஆற்றல் கொடுக்கும் விளையாட்டு விளையாடுகிறார்கள் . இந்த விளையாட்டில்  நடுவில் ஒரு குண்டு இருக்காது. நான் வீட்டில் இருந்த ஒரு கோலிக் குண்டை வைத்து இருக்கிறேன்.


                          விளையாடிக் களைத்துப் பழரசம் அருந்தும் குழந்தைகள்

பால் அருந்தும் குழந்தைகள்

வாட்ஸப்பில்  எங்கள் வீட்டுக் கொலுவைப்பார்த்துப்  பாட்டுப் பாடுகிறான் பேரன்
பேத்தி பாட, பேரன் மிருதங்கம் வாசித்தான், எங்கள் கொலுவிற்கு
இரவு விளக்கை அணைத்த போது இரவு விடிவிளக்கு ஓளியில் மின்னிய அன்னை எனக்குப் பிடித்து  இருந்தது அதை எடுத்தேன் , நன்றாக இருக்கா?


போன வருடம் வீட்டுக்குப் பக்கத்தில் இருக்கும் கோவில்களுக்கு எல்லாம் போய் நவராத்திரி கொலு படங்கள் போட்டேன் பதிவாக. இந்த முறை ஒரே ஒரு நாள் சரஸ்வதி பூஜை காலை போய் வந்தோம் பக்கத்தில் இருக்கும் ஐயனார் கோவில்  கொலு , சுவாமி அலங்காரம் எல்லாம் அடுத்த பதிவில் பார்க்கலாம்.

                                  வாழ்க வையகம் ! வாழ்க வையகம்! வாழ்க வளமுடன் !

===========================================

55 கருத்துகள்:

 1. வணக்கம் சகோதரி

  நலமா? உங்கள் அன்பான பதிலுக்கு நன்றியென செய்தி அனுப்பியிருந்தனர்.

  உங்கள் வீட்டு கொலு மிகவும் நன்றாக உள்ளது. வீட்டில் கொலு வைத்து விட்டால், நேரம் எப்படி சரியாக இருக்குமென்பதை நானறிவேன். நானும் வருடம் தப்பாமல் கொலு வைத்து கொண்டாடியவள். தற்சமயம் ஏழெட்டு வருடங்களாக தட்டிப் போய் விட்டது. இந்த வருடமும் சிறு குழந்தைகள் இருப்பதால்,வைக்க முடியவில்லை.மற்றபடி நவராத்திரி தினசரி பூஜை சரஸ்வதி பூஜை என அனைத்தையும் கொண்டாடினோம்.

  தங்கள் மகன் வரைந்த ஓவியங்களுடன் இந்த தடவை படிகள் அமைத்து ஏற்பாடு செய்து வைத்த உங்கள் வீட்டு கொலு நன்றாக உள்ளது. மஞ்சளில் செய்த சரஸ்வதி தேவி அம்சமாக இருக்கிறார். இரவின் ஒளி விளக்கிலும் தாங்கள் எண்ணியபடி அம்மன் களையாக ஜொலிக்கிறார். அழகுடன் சிரமம் பாராது நீங்களும்,உங்கள் கணவரும் சிரத்தையாக கொலு வைத்து கொண்டாடியதற்கு என் மனமார்ந்த பாராட்டுக்கள்.

  சென்ற வருட கொலு படங்கள், பல வருடங்களாக வைத்த கொலுவை பற்றி விபரமாக சொன்னவைகள் என பதிவு அமர்க்களமாக உள்ளது.. இந்த வருடம் நீங்கள் கொலுவிற்காக செய்தவைகள் (இயற்கை வளமுடன் கட்டிய வீடு ) நன்றாக இருக்கின்றன.

  தங்கள் பேரன் தினமும் உங்களுக்கு பாட்டு பாடி காட்டுவதை நீங்கள் மிகவும் ரசித்திருப்பீர்கள். அவரும் தினசரி உங்கள் வீட்டு கொலுவை ரசித்து மகிழ்ந்திருப்பார். உங்கள் பேரனுக்கும் என் மனமார்ந்த வாழ்த்துகள். உங்கள் பதிவை படிக்கும் போதே சந்தோஷமாக உள்ளது. பகிர்வுக்கு மிக்க நன்றி.

  நன்றியுடன்
  கமலா ஹரிஹரன்.

  பதிலளிநீக்கு
 2. ஸார் செய்த சரஸ்வதி அம்மன் அழகு.  கொலுவை விடாமல் ஏதோ ரூ வகையில் கொண்டாடி விட்டது பாராட்டுக்குரியது.  இப்படி ஒரு நிலை அதாவது எல்லோரையும் நேரில் அழைத்து வெற்றிலை பாக்கு சுண்டல் கொடுத்து கொண்டாடிய நாட்கள் போக, இப்போது காணொளியில் கொலு, நாம் முற்றிலும் எதிர் பாராத நிலை!

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வணக்கம் ஸ்ரீராம், வாழ்க வளமுடன்
   கொலுவை எப்படியோ கொண்டாடி விட்டோம். உங்கள் பாராட்டுக்கு நன்றி.
   நேரிலும் , காணொளியிலும் கொலுவுக்கு வந்தார்கள்.
   வெற்றிலை, பாக்கு, சுண்டலும் கொடுத்தேன், காணொளியிலும் எல்லாம் பெற்றுக் கொண்டார்கள்.

   மகன் வீட்டில்தான் யாரையையும் அழைக்கமுடியவில்லை. 9 நாளும் இவர்கள் வீட்டுக்கு விருந்தினர் வருகையும் இவர்கள் மற்றவர்கள் வீடுகளுக்கு போய் வருவதும் மகிழ்ச்சியான தருணமாக இருக்கும்.

   நீக்கு
 3. நித்திய கொலுவுக்கு நிவேதனங்கள் உண்டா?  கொலுவில் நமது கற்பனை வளத்துக்கு ஏகப்பட்ட சான்ஸ் கிடைக்கும் என்பதற்கு சாக்பீஸ் மனிதர்கள், வண்ண உடைகள் எடுத்துருக்காட்டு.  அது ஒரு சுவாரஸ்யம்.  இரவு விளக்கு ஒளியில் எடுக்கப்பட்ட படம் அழகு.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. நித்திய கொலுவுக்கும் நிவேதனங்கள் பூஜை செய்தேன். கொலுவில் கற்பனை வளத்திற்கு சான்ஸ் உண்டு ஒவ்வொருவரும் தங்கள் கை திறமைகளை காட்டுவார்கள்.

   மகன் செய்த சாகபீஸ் கோவிலை நீங்கள் பார்த்தீர்கள் உங்களுக்கு நினைவு இருக்கும்.

   இரவு விளக்கு ஓளியில் எடுத்த படம் உங்களுக்கு பிடித்து இருப்பது அறிந்து மகிழ்ச்சி.

   நீக்கு
 4. கொலுவுக்கு வீட்டில் இந்தமுறை என்னென்ன சுண்டல்கள் செய்தீர்கள் என்று எழுதவில்லை நீங்கள்!!  

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. கொலுவிற்கு சர்க்கைரை பொங்கல், கல்கண்டு பொங்கல், பால் பாயாசம், கடலை உருண்டை, எள் உருண்டை, பச்சை பயிறு சுண்டல், தட்டை பயிறு சுண்டல், பட்டாணி சுண்டல், பூம்பருப்பு(கடலைப்பருப்பு) சுண்டல் எல்லாம் செய்தேன், மதியம் சாதவகைகள் செய்து கும்பிட்டேன். கதம்பசாதம், புளியோதரை, எலுமிச்சைசாதம், தயிர் சாதம் எல்லாம் செய்தேன்.

   மருமகள் வித விதமாக செய்து காட்டினாள்.
   உங்கள் கருத்துக்களுக்கு நன்றி.

   நீக்கு
 5. வணக்கம் கமலா ஹரிஹரன், வாழ்க வளமுடன்

  //நானும் வருடம் தப்பாமல் கொலு வைத்து கொண்டாடியவள்.//

  மீண்டும் கொண்டாடி மகிழுங்கள். அடுத்த வருடம் இறைவன் அருளால் கொலு வைத்து மகிழுங்கள்.

  கொலு மனதுக்கு உற்சாகத்தையும் உடலுக்கு சுறு சுறுப்பையும் தரும். அதுவும் எங்கும் வெளியே போகாமல் வீட்டில் இருக்கும் எங்கள் மனச்சோர்வை போக்கியது என்றே சொல்லவேண்டும்.

  //நவராத்திரி தினசரி பூஜை சரஸ்வதி பூஜை என அனைத்தையும் கொண்டாடினோம்.//

  மகிழ்ச்சி.


  //மஞ்சளில் செய்த சரஸ்வதி தேவி அம்சமாக இருக்கிறார். இரவின் ஒளி விளக்கிலும் தாங்கள் எண்ணியபடி அம்மன் களையாக ஜொலிக்கிறார். //

  நன்றி கமலா.

  எங்கள் குடும்பத்தில் (சார் குடும்பத்தினர்) எல்லோரும் மஞ்சளில்தான் செய்வார்கள். இவர்கள் மட்டும் சந்தனத்தில் செய்வார்கள். பல வருடங்களாக.

  பேரன் வீட்டு கொலுவிற்கு நாங்களும், மருமகளின் அம்மாவும் தினம் போய்(ஸ்கைப்பில்) பேரன் அவன் வீட்டு கொலு முன்பு அமர்ந்து பாடும் பாட்டை கேட்டு ரசித்தும் மருமகள் செய்யும் பூஜையை பார்த்தும் மகிழ்ந்தோம். இந்த வருடம் மகன் வீட்டு கொலுவை நண்பர்கள் எல்லோரும் வீடியோவில் கண்டு ரசித்தனர். அவர்களும் மற்றவர்கள் வீட்டுக் கொலுவை அப்படித்தான் பார்த்தனர்.அடுத்த வருடம் கொலுவை நல்லபடியாக நேரில் கண்டு ரசிக்க இறைவன் அருள்புரிய வேண்டும்.

  பதிவை ரசித்து படித்து உங்கள் மகிழ்வை தெரிவித்து வாழ்த்துக்கள் சொன்னதற்கு நன்றி கமலா.


  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வணக்கம் சகோதரி

   அப்படியா? சரஸ்வதி தேவி முகம் சந்தனத்தில் வடிவமைத்ததா ? பார்க்க மஞ்சளாக இருக்கவே நான் மஞ்சளில் செய்தது என நினைத்து விட்டேன். மிகவும் நன்றாக வந்துள்ளது. அன்னையின் காலடியில் இருக்கும் தாமரை மலர் அட்டையில் செய்தது எனத் தெரிகிறது. அன்னை கரங்களில் வைத்திருக்கும் வீணை எப்படிச் செய்தீர்கள்? மிகவும் தத்ரூபமாக அமைந்திருக்கிறது. இதையெல்லாம் வருடாவருடம் பத்திரமாக பாதுகாத்து வைத்திருக்கிறீர்களா? நல்ல பொறுமை உங்களுக்கு..அம்மனின் சாந்தமான முக அழகும். புடவையை பாங்காக உடுத்தி யிருக்கும் அழகும் நன்றாக உள்ளது. வீணையை கையிலேந்தி கானம் பாடும் அழகுடனான, உங்கள் வீட்டில் கொலுவிருந்த சரஸ்வதி தேவியை, பக்தியுடன் மீண்டும் தரிசித்துக் கொண்டேன். நிஜமான அன்னை சரஸ்வதியை கண்ணாற கண்டு வழிபட்ட உணர்வை தந்தது. பகிர்வுக்கு மிக்க நன்றி.

   நன்றியுடன்
   கமலா ஹரிஹரன்.

   நீக்கு
  2. சந்தனம் மஞ்சள் கலரில் இருக்கிறது.
   10 நிமிடத்தில் தர்மகோலில் செய்த தாமரை சின்னதாக தர்மகோல் துண்டு இருந்தது அதில் வரைந்து கட் செய்ததது. ஒரத்தில் வரைய பேனாவால் வரைவோம், இந்த முறை லேஸ் வைத்தது அவ்வளவு நன்றாக் இல்லை. தாமரை எப்போதும் போல் அழகு இல்லை.
   மகன் 9 வது படிக்கும் போது அட்டையில் செய்து தந்த வீணை அதை பத்திரமாக வைத்து இருக்கிறோம். புடவை அலங்காரம் எல்லாம் என் கணவர்.
   அம்மனை மீண்டும் தரிசனம் செய்து கொண்டது மகிழ்ச்சி கமலா.
   அம்மன் தானே ஒவ்வொரு முறை ஒவ்வொரு மாதிரி வருவாள் இந்த முறை சாந்தமான முக அழகுடன் வந்து இருக்கிறாள்.

   மீண்டும் வந்து கருத்து சொன்னதற்கு நன்றி கமலா.

   நீக்கு
 6. கொலு படங்கள் மிக அழகாக இருக்கின்றன.

  இந்த வருடம் சாதாரணமான கொலு என்று எழுதியிருக்கிறீர்கள், கொலு படங்களில் விஸ்தாரமாக இருக்கு.

  கொலுவிற்கு உங்கள் பேரன் பேத்திகளின் இசை மனதை மகிழ்ச்சியுறச் செய்தது.

  சார் அமைத்த படம் மிக அழகு. இரவில் அன்னை ஜொலிக்கிறாள். அவள் அருள் எங்கும் நிறைந்திருக்கட்டும்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வணக்கம் நெல்லைத்தமிழன், வாழ்க வளமுடன்

   //கொலு படங்கள் மிக அழகாக இருக்கின்றன.

   நன்றி.

   //இந்த வருடம் சாதாரணமான கொலு என்று எழுதியிருக்கிறீர்கள், கொலு படங்களில் விஸ்தாரமாக இருக்கு.//

   சின்ன கொலுவை இப்படி பெரிதாக காட்டி இருக்கிறேன். முதல் நாள் படத்தில் மிக எளிமையாக இருந்தது கொலு தினம் தினம் மாற்றம் பெற்று விஸ்தாரமாக ஆகி விட்டது.

   //சார் அமைத்த படம் மிக அழகு. இரவில் அன்னை ஜொலிக்கிறாள். அவள் அருள் எங்கும் நிறைந்திருக்கட்டும்.//

   ஆமாம் நெல்லை இந்த முறை சார் செய்த அம்மன் மன நிறைவை தந்தது,நீங்கள் சொல்வது போல் அவள் அருள் எங்கும் நிறைந்திருக்கட்டும்.

   நீக்கு
 7. அவர்கள் எல்லோரும் ஏதேனும் விடுமுறையில் நவராத்திரி சமயம் இங்கே இருந்திருந்தால் உங்கள் வீட்டில் கொலு படு அமர்க்களமாக அமைந்துவிடும்.

  பச்சையில் இலைகள் போன்று டிசைன் போட்ட தட்டு மிக அழகு.

  பல்லாங்குழியைவிட அதை ஆடும் சிறுவர்கள் ரொம்ப சின்னது.

  அழகிய படங்கள். பகிர்வுக்கு பாராட்டுகள். வாழ்க வளமுடன்

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. //அவர்கள் எல்லோரும் ஏதேனும் விடுமுறையில் நவராத்திரி சமயம் இங்கே இருந்திருந்தால் உங்கள் வீட்டில் கொலு படு அமர்க்களமாக அமைந்துவிடும்.//

   ஒருமுறை மகன் குடும்பத்தினர் (2012) கொலுவிற்கு இருந்தனர் மாயவரத்தில். அப்போது நன்றாக எல்லாம் செய்தார்கள். எங்க வீட்டு நவராத்திரி என்று ஆல்பம் செய்து கொடுத்தாள் மருமகள்.
   //பச்சையில் இலைகள் போன்று டிசைன் போட்ட தட்டு மிக அழகு.//

   ஒரு கொலுவிற்கு மருமகளின் அம்மா வாங்கி தந்த கோல இலைகள். அதை தட்டில் வைத்து இருக்கிறேன் தரையில் வைக்கலாம்.

   //பல்லாங்குழியைவிட அதை ஆடும் சிறுவர்கள் ரொம்ப சின்னது.//

   அந்த சிறுமிகள் பொம்மைதான் வீட்டில் இருக்கிறது.

   //அழகிய படங்கள். பகிர்வுக்கு பாராட்டுகள். வாழ்க வளமுடன்//

   உங்கள் கருத்துக்கும், பாராட்டுகளுக்கும், வாழ்த்துக்களுக்கும் நன்றி நெல்லை.


   நீக்கு
 8. ரசித்தேன், மிகவும் அருமை.
  கும்பகோணத்தில் நாங்கள் வைத்த கொலுவை நினைவூட்டியது. தற்போது அனைத்தும் எங்களின் நினைவுகளில் மட்டுமே. நான் அடிக்கடி சொல்வதுண்டு, கும்பகோணத்தைவிட்டு நான் வந்ததால் இழந்ததில் முக்கியமான ஒன்று நவராத்திரி கொலு.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வணக்கம் முனைவர் ஐயா, வாழ்க வளமுடன்
   கும்பகோணம் கொலு மறக்க முடியுமா வீடுகளில், கோவில்களில் கொலு மிக அருமையாக இருக்கும், ஒரு முறை பார்த்து இருக்கிறேன்.

   கொலுவை ரசித்து கருத்து சொன்னதற்கும், உங்கள் நினைவுகளை பகிர்ந்து கொண்டதற்கும் நன்றி.

   நீக்கு
 9. வெகு நாட்களுக்குப் பிறகு இந்தப் பதிவு வந்திருக்கின்றது..

  கலைக் குடும்பம் தங்களுடையது..
  பாட்டும் இசையும் அலங்காரமும் சொல்லவா வேண்டும்!..

  கண்கவரும் படங்கள் .. கொலு அமைப்பு அழகு.. மகிழ்ச்சி.. நன்றி..

  வாழ்க நலம்..

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வணக்கம் சகோ துரை செல்வராஜூ, வாழ்க வளமுடன்
   ஊரில் உங்கள் வீட்டில் எல்லோரும் நலம் தானே!


   ஆமாம், பதிவு போட்டு நாள் ஆகி விட்டது.
   பாட்டும் இசையும் பேரன்கள், பேத்தி இந்த முறை சிறப்பாக்கினார்கள் கொலுவை.

   உங்கள் வாழ்த்துக்கும் கருத்துக்கும் நன்றி.

   நீக்கு
 10. நின்று வளர் புகழ் என்று
  நித்தியமாய் நிறைகின்றாள்..
  கன்று வளர் கலை கண்டு
  கலை மகளும் ரசிக்கின்றாள்..
  அன்று முதல் இன்று வரை
  அழகு தமிழ் பதிவு தரும்
  அன்புள்ளம் தான் வாழ்க..
  அலை மகளும் மலை மகளும்
  அருள் புரிவர் முகம் பார்த்து
  மதுரை வளர் மலை யரசி
  மனை வருவள் மனம் பார்த்து!...

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. உங்கள் கவிதை படித்து கண்ணில் நீர் துளிர்த்து விட்டது.
   மீனாட்சியைப்பார்த்து மாதங்கள் பல ஆகி விட்டது.
   மனை வருவாள் மலையரசி என்றதும் மகிழ்ச்சியால் ஆனந்த கண்ணீர் பெருகி விட்டது.
   தினம் பொதிகையில் காலை ஆலய தரிசனம் செய்கிறேன். மாலை புதுயுகத்தில் ஆலய தரிசனம்.

   உங்கள் கவிதைகளை சேமித்து வைத்துக் கொள்ள வேண்டும்.
   எங்கள் ப்ளாகிலும் உங்கள் கவிதைகளைப் படித்தேன்.
   நன்றாக இருந்தது.
   உங்கள் அழகு கவிதைக்கு நன்றி.
   உங்கள் அன்பு உள்ளத்திற்கு நன்றி நன்றி.

   நீக்கு
 11. மிகவும் ரசித்தேன்...

  // ஒவ்வொரு பொம்மைகளுக்கும் ஒரு நினைவு இருக்கிறது - வந்து சென்றது // இதுவே மிகவும் சிறப்பு...

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வணக்கம் திண்டுக்கல் தனபாலன், வாழ்க வளமுடன்
   ரசித்தற்கு நன்றி.
   ஒவ்வொரு பொம்மைகளும் அவை வாங்கிய நாட்கள், பரிசாக வந்த பொம்மைகளைப்பார்க்கும் போது அவர்கள் முகம் வந்து போகும். முதன் முதலில் பொம்மை வாங்கியது ஒரு வயதானவரிடம் பன்ருட்டியிலிருந்து அந்த தாத்தா திருவெண்காடு வந்து விற்றார், தாத்தா இன்னும் நினைவுகளில்.
   உங்கள் கருத்துக்கு நன்றி.

   நீக்கு
 12. அழகான கொலு படங்கள்.
  விளக்கம் அருமை சகோ
  பெயரன், பெயர்த்திக்கு வாழ்த்துகள்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வணக்கம் தேவகோட்டை ஜி, வாழ்க வளமுடன்
   உங்கள் கருத்துக்கும் பேரங்கள், பேத்திக்கு வாழ்த்துக்கள் சொன்னது மகிழ்ச்சி.
   நன்றிகள் பல.

   நீக்கு
 13. அருமையான கொலு அலங்காரங்களுடன் கூடிய கொலுவைக் கண்டு அணு அணுவாக ரசித்தேன். இந்த வருடம் செய்திருக்கும் சரஸ்வதியின் முகத்தில் கருணையும், அருளும் வழிகிறது. மிக அழகாக வந்திருக்கிறது. ஒரு முறை உங்கள் மகன் செய்த சரஸ்வதியைப் பகிர்ந்திருந்த நினைவு. பேத்தி பாட்டுக் கேட்கவில்லை. பேரன் மிருதங்கம், சின்னப் பேரன் பாடல் எதுவும் வீடியோவில் போடலை போல! இங்கேயும் குழந்தைகள் இருவேளையும் பேசுவதால் காலை, மாலை நேரம் கிடைப்பது கஷ்டமாய்த் தான் இருக்கிறது.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வணக்கம் கீதா சாம்பசிவம், வாழ்க வளமுடன்
   //கொலுவைக் கண்டு அணு அணுவாக ரசித்தேன்.//

   நன்றி.
   //சரஸ்வதியின் முகத்தில் கருணையும், அருளும் வழிகிறது. மிக அழகாக வந்திருக்கிறது.//

   உங்கள் கருத்தை சாரிடம் சொன்னேன்.

   //ஒரு முறை உங்கள் மகன் செய்த சரஸ்வதியைப் பகிர்ந்திருந்த நினைவு.//

   மகன் ஊரில் சார் செய்த அம்மனை பகிர்ந்து இருந்தேன். அவன் சரஸ்வதி செய்தது இல்லை. முகம் வைத்து அலங்காரம் செய்து விடுவாள் அழகாய் மருமகள்.

   பேத்தி, பேரன்கள் பாட்டு காணொளி போடவில்லை படம் மட்டுமே அனுப்பி இருக்கிறேன்.

   காலை பேரன் 8, அல்லது 9 மணிக்கு வந்தால் நம் நேரம் 12 மணி வரை பேசுவான், இரவு மகள் பேசுவாள், இடையில் வீட்டு வேலை, பாட்டு, பூஜை , போன்கால்கள் என்று நேரம் ஓடுகிறது.
   உங்கள் நவராத்திரி பதிவுகள் இன்னும் சிலவற்றை படிக்கவில்லை படிக்க வேண்டும்.

   நீக்கு
 14. சாக்பீஸால் செய்யப்பட்ட அலங்காரங்கள், மலைக்கோயில் எல்லாமும் அழகு. பல்லாங்குழியில் விளையாடும் குழந்தைகளை முகநூலிலும் பார்த்த நினைவு. நாங்களும் கொலுவில் அலங்காரங்கள் எல்லாம் செய்திருக்கோம். ஆனால் பின்னாட்களில் எல்லாம் கொஞ்சம் கொஞ்சமாக மறைந்து போய்ப் பின்னர் பொம்மைகளும் வீணாகிக் கொலுவும் சாஸ்திரத்துக்கு வைக்கிறாப்போல் ஆகி விட்டது. சென்ற வருடம் ஹூஸ்டனில் இருந்தோம். மருமகள் சின்ன அளவில் கொலு வைத்தாள். அதிகம் யாரையும் கூப்பிடவில்லை. உங்கள் மகன், மருமகள் இருவருக்குமே கைவேலைகளில் ஆர்வம் அதிகமாக இருப்பது மிகச் சிறப்பான விஷயம். தொடர்ந்து இப்படியே கொண்டாடி வரவும் வாழ்த்துகள், பிரார்த்தனைகள்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. //பல்லாங்குழியில் விளையாடும் குழந்தைகளை முகநூலிலும் பார்த்த நினைவு//
   ஆமாம், நீங்கள் அழகான பின்னூட்டம் கொடுத்தீர்கள். உங்கள் நினைவுகளை பகிர்ந்து கொண்டீர்கள்.

   //ஹையோ, பல்லாங்குழி, விளையாடியே பல வருடங்கள் ஆகிவிட்டன. தனியா இருந்தால் கூட சீதாப்பாண்டி ஆடிக் கொண்டிருப்பேன் முன்னெல்லாம். இப்போப் பல்லாங்குழி கொலுவில் வைப்பது தான் பார்க்க முடிகிறது.//


   இணையம் வர நேரமில்லாமல் அலை பேசியில் எடுத்த படங்களை முக நூலில் போட்டு இருந்தேன்.

   //உங்கள் மகன், மருமகள் இருவருக்குமே கைவேலைகளில் ஆர்வம் அதிகமாக இருப்பது மிகச் சிறப்பான விஷயம். தொடர்ந்து இப்படியே கொண்டாடி வரவும் வாழ்த்துகள், பிரார்த்தனைகள்//

   ஆமாம், அவர்களுக்கு கைவேலைகளில் ஆர்வம் உண்டு.
   உங்கள் வாழ்த்துக்கள், பிரார்த்தனைகளுக்கு நன்றி நன்றி.
   அன்பான கருத்துக்களுக்கு நன்றி.


   நீக்கு
  2. அன்பு கோமதிமா.,
   அனைவரும் வந்து அழகாகக் கருத்துகள்
   பரிமாறிக் கொண்ட பிறகு வருகிறேன்.

   மிக அமைப்பான கொலு. கலைகளில் லயித்திருக்கும் குடும்பம்.

   மகனின் சாக்பீஸ் நகரம், மலைக் கோட்டை,
   பக்கவாட்டில் தொங்கும் சித்திரங்கள் எல்லாமே கொலு நாட்களின் உற்சாகத்தைப்
   பறை சாற்றுகின்றன.
   சார் செய்த சரஸ்வதி அம்மா, இரவில் மிக அழகாக ஒளிர்கிறார்.
   தங்கள் கைவண்ணத்தில் காணி நிலம் பளிச்சிடுகிறது.
   விளையாடும், ஓய்வெடுக்கும், பாலருந்தும் குழந்தைகள் '
   மிக அழகு மா.
   இங்கேயும் நாயகியர் விடை பெற்று மீண்டும் வருவதாகச் சொல்லிச் சென்றிருக்கிறார்கள்.
   மீண்டும் வரும் போது தொற்று ஓய்ந்திருக்கட்டும்.

   நீக்கு
  3. வணக்கம் வல்லி அக்கா, வாழ்க வளமுடன்

   முன்பு சிறு வயதில் மகன் வரைந்த ஓவியங்கள். சார் செய்த சரஸ்வதி இரவில் ஒளிர்வது பிடித்து இருக்கா? இரவு லைட்டை அணைத்த போது தற்செயலாக அன்னை கொடுத்த காட்சி.
   சிறுபிள்ளைத்தனமாக காணி நிலம் வைத்தேன் பிடித்து இருக்கா! மகிழ்ச்சி.
   மகன் புதுவகையான பூத்தொட்டிகள் மண் அனுப்பினான் அமேசான் மூலம் அந்த மண் மிச்சம் இருந்தது அதில் அமைத்து விட்டேன் தென்னைமரங்களுடன் வீட்டை.

   விளையாடும் குழந்தைகளை ரசித்தமைக்கு நன்றி அக்கா.
   மீண்டும் நாயகியர் வரும் போது தொற்று இருக்காது என்று நம்புவோம்.
   உங்கள் கொலு மிக அழகாய் இருந்தது .
   உங்கள் அன்பான கருத்துக்கு நன்றி அக்கா.

   நீக்கு
 15. மிகவும் அழகான கொலு. அலங்காரங்கள் பிரமாதம். பேரக்குழந்தைகளுக்கு என் வாழ்த்துக்கள்!

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வணக்கம் மனோ சாமிநாதன், வாழ்க வளமுடன்
   உங்கள் கருத்துக்கும் வாழ்த்துக்களுக்கும் நன்றி.

   நீக்கு
 16. அழகிய கொலு. கூட்டம் சேர்க்காமல் அதே வேளை எந்தக் குறையுமில்லாமல் வீடியோ மூலமாகவும் விருந்தினரைத் தனித்தனியாக அழைத்தும் சிறப்பாகக் கொண்டாடியுள்ளீர்கள். வாழ்த்துகள்! கொலுவை ஒட்டிய எண்ணங்களின் பகிர்வு மனதைத் தொட்டது.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வணக்கம் ராமலக்ஷ்மி வாழ்க வளமுடன்
   ஆமாம் ராமலக்ஷ்மி, இந்த முறை நல்லபடியாக கொண்டாட அருள்புரிந்து விட்டார்கள் அன்னையர்கள். அடுத்த ஆண்டில் பயமில்லாமல் எல்லோரும் இருக்க வேண்டும் நவராத்திரி பண்டிகை காலத்தில், அதற்கு அன்னை அருள்புரிய வேண்டும்.
   உங்கள் கருத்துக்கும், வாழ்த்துக்களுக்கும் நன்றி ராமலக்ஷ்மி.

   நீக்கு
 17. மாயவரம் காட்சிகள் மிக நன்றாக இருக்கின்றன. இந்த வருட கொலு சிறியதாக இருந்தாலும் அழகாக இருக்கிறது. மின் விளக்கில் ஜொலிக்கிறாள் சரஸ்வதி. வெளிநாட்டில் வசித்தாலும் உங்கள் வீட்டு கொலுவிற்காக தினமும் பேரனால் பாட முடிந்திருக்கிறதே! டெக்நாலாஜிக்கு நன்றி கூற வேண்டும்.          

  பதிலளிநீக்கு
 18. வணக்கம் பானுமதி வெங்கடேஷ்வரன், வாழ்க வளமுடன்

  //மாயவரம் காட்சிகள் மிக நன்றாக இருக்கின்றன. இந்த வருட கொலு சிறியதாக இருந்தாலும் அழகாக இருக்கிறது.//

  நன்றி.

  //மின் விளக்கில் ஜொலிக்கிறாள் சரஸ்வதி.//
  மகிழ்ச்சி.

  //வெளிநாட்டில் வசித்தாலும் உங்கள் வீட்டு கொலுவிற்காக தினமும் பேரனால் பாட முடிந்திருக்கிறதே! டெக்நாலாஜிக்கு நன்றி கூற வேண்டும்.//

  நீங்கள் சொல்வது உண்மைதான் , தினம் தினம் நன்றி சொல்லி கொண்டு இருக்கிறேன்.

  உங்கள் கருத்துக்கு நன்றி.


  பதிலளிநீக்கு
 19. கோமதி அக்கா, நானும் நவராத்திரியைத் தொடர்ந்து தொடராக கெளரி விரதம் என்பதனால் சற்று களைப்பும்.. நேரக் குறைவாகவும் இருந்தது, இன்றுதான் எட்டிப் பார்த்தேன், உங்கள் இப்புதுப் போஸ்ட் கண்ணில் படவில்லை, அதனால போஸ்ட் ஏதும் இல்லை என விட்டு விட்டேன்.

  எனக்கும் இரு வாரமாக கொரொனாபோல அறிகுறிகள் ஆனா ரெஸ்ட் செய்யப் போகவில்லை:).. ஒருவேளை பொஸிடிவ் எனச் சொல்லிட்டால்ல்.. எனும் பயம் ஹா ஹா ஹா.. ஆனா இப்போ ஓகே இருப்பினும் விரத்தத்தோடு என்பதனால் பயங்கரக் களைப்பாக இருக்கிறது.... சரி இது போகட்டும்.. கொலுவிற்கு வருகிறேன்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வணக்கம் அதிரா, வாழ்க வளமுடன்
   கெளரி விரதம் இருப்பது மகிழ்ச்சி.

   //எனக்கும் இரு வாரமாக கொரொனாபோல அறிகுறிகள் ஆனா ரெஸ்ட் செய்யப் போகவில்லை:).//

   வேண்டாம் வேண்டாம் கொரோனா , கெளரி காப்பாள். நலமாக இருங்கள் இறைவன் அருளால். விரத களைப்பகாக இருக்கட்டும்.வேறு ஏதும் வேண்டாம்.
   உடம்பைப் பார்த்துக் கொள்ளுங்கள்.

   நீக்கு
 20. கொலு வழமைபோல மிக அழகு... அருமையாகச் செய்திருக்கிறீங்கள்.. இப்போ திருமணம், டொக்ரேர்ஸ் அப்பொயிண்ட்மெண்ட் உட்பட அனைத்தும் வீடியோக் கோல் மயமாகி விட்டது.. அதுபோல பூஜையும் வீடியோ மயம்.. இனிமேல் கால வாழ்க்கை இப்படியே மாறியும் விடலாம், செலவும் மிச்சம்.. ஷூம் வீடியோவில் அனைத்து சொந்த பந்தங்களையும் கூப்பிட்டு கேக் வெட்டுகிறார்கள் வீட்டுக்குள் தனியே இருந்து....

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. கொலு வழமைபோல மிக அழகு... //

   நன்றி அதிரா.

   வீடியோ மயம் நல்லது தான் ஆனால் உறவுகளை அதில் தான் பார்க்க வேண்டும் என்பது கொடுமை. நேரில் சந்தித்து மகிழும் நாள் வர வேண்டும்.

   தனிமை கொடுமையை போக்க உதவுகிறது என்பது உண்மைதான். காலத்துக்கு ஏற்ற வாழ்க்கையை வாழ்ந்துதானே ஆக வேண்டும் என்ன செய்வது!

   நீக்கு
 21. மாமா செய்த அம்மன் மிக அழகாக இருக்கிறா, மேலே குட்டிக் குடை வைத்திருக்கிறீங்களே.. அது குடையாக விற்கிறார்களோ.. சூப்பராக இருக்கு.

  இங்கு எங்களுக்கு மீண்டும் லொக்டவுன்போல போட்டிருக்கினம்... இங்கிலாந்து முழுமையான லொக்டவுனுக்குள் போயிருக்கு ஆனா நம் ஸ்கொட்லாந்து பறவாயில்லை, கூட்டம் சேரக்கூடாது, ஒருவர் வீட்டுக்குள் அடுத்த வீட்டுக்காரர் போகக்கூடாது.. இப்படிச் சில றூல்ஸ் போடப்பட்டிருக்கிறது, உங்களுக்குப் பறவாயில்லை, ஒருசிலராவது வந்து கலந்திருக்கின்றனர்.

  அம்மன் உருவச் சிலைகள் மிக அழகு.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. //மாமா செய்த அம்மன் மிக அழகாக இருக்கிறா,//
   நன்றி மாமாவிடம் சொல்லிவிட்டேன் உங்கள் கருத்தை.

   //மேலே குட்டிக் குடை வைத்திருக்கிறீங்களே.. அது குடையாக விற்கிறார்களோ.. சூப்பராக இருக்கு.//

   இது போல் கிடைக்கிறது மதுரை புது மண்டபத்தில். இது பல வருடமாய் இருக்கிறது, பிள்ளையார் சதுர்த்தி, கொலு சரஸ்வதி அம்மன் அலங்காரத்திற்கு வைப்பார்கள்.

   //ஒருவர் வீட்டுக்குள் அடுத்த வீட்டுக்காரர் போகக்கூடாது.. இப்படிச் சில றூல்ஸ் போடப்பட்டிருக்கிறது,//

   இப்படி இங்கு சட்டம் போட்டால்தான் அதிரா நல்லது.எல்லோரும் எப்போதும் போல் எல்லா இடங்களுக்கும் போய் வருகிறார்கள். நம்மை போல் போகாமல் இருப்பவர்களை கேலி செய்கிறார்கள். அவர்கள் வீட்டுக்கு போகவில்லை என்றால் கோபம் கொள்கிறார்கள்.

   ஒரு சிலர் கொலுவிற்கு வந்தது மனதுக்கு மகிழ்ச்சிதான்.

   அம்மன் உருவச் சிலைகள் மிக அழகு.

   நன்றி.   நீக்கு
 22. இப்பொழுதெல்லாம் திரும்பிப் பார்க்க முன்பு அடுத்த வருடம் வந்துவிட்டது.. போன வருடம் டிசம்பரில்தான் கொரொனா ஷைனாவில் ஆரம்பமாகியது.. இதோ ஒரு வருடத்தை எட்டி விட்டது....

  நாங்கள் சின்னவர்களாக இருந்தபோது, நவதானியம் போட்டு அதில் கும்பம் வைத்தே நவராத்திரியை ஆரம்பிப்போம், விஜயதசமி அன்று நவதானியம் எல்லாம் வளர்ந்து பெரிதாக வந்துவிடும்... வெளிநாடு வந்து அதை எல்லாம் விட்டாச்சு, ஆனால் தினமும் விதம் விதமாகச் செய்து படைத்துப் பாடுவதை விடாமல் பிள்ளைகளுக்கும் பழக்கி வருகிறோம்.. இம்முறை பிள்ளைகள் இருவரும் தாமாகவே கந்தசஷ்டியும் முடிச்சு, நாம் சாப்பிடும்போதே தாமும் அசைவம் சாப்பிடுவோம் என, நவராத்திரி தொடங்கி.. சைவமாக இருக்கிறார்கள்...

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. //இப்பொழுதெல்லாம் திரும்பிப் பார்க்க முன்பு அடுத்த வருடம் வந்துவிட்டது.. போன வருடம் டிசம்பரில்தான் கொரொனா ஷைனாவில் ஆரம்பமாகியது.. இதோ ஒரு வருடத்தை எட்டி விட்டது....//

   ஆமாம், அதிரா. காலம் ஓடவில்லை என்றால் மேலும் கொடுமையாக இருந்து இருக்கும். நல்லவேளை ஒடியதே அதற்கு மகிழ்ச்சி இறைவனுக்கு.

   //நாங்கள் சின்னவர்களாக இருந்தபோது, நவதானியம் போட்டு அதில் கும்பம் வைத்தே நவராத்திரியை ஆரம்பிப்போம், விஜயதசமி அன்று நவதானியம் எல்லாம் வளர்ந்து பெரிதாக வந்துவிடும்.//

   இங்கும் எங்கள் வீடுகளில் நவதானியங்கள் தனியாக ஒரு பாத்திரத்தில் வள்ர்ப்பார்கள், கலசத்தில் அரிசி போட்டு அதில் மாவிலை தேங்காய் வைத்து தேங்காயில் தான் அம்மன் முகம் செய்வார்கள். மாமா எல்லாம் மாற்றி விட்டார்கள்.

   //தினமும் விதம் விதமாகச் செய்து படைத்துப் பாடுவதை விடாமல் பிள்ளைகளுக்கும் பழக்கி வருகிறோம்.. இம்முறை பிள்ளைகள் இருவரும் தாமாகவே கந்தசஷ்டியும் முடிச்சு, நாம் சாப்பிடும்போதே தாமும் அசைவம் சாப்பிடுவோம் என, நவராத்திரி தொடங்கி.. சைவமாக இருக்கிறார்கள்...//

   குழந்தைகள் பாடி விரதம் இருப்பது அறிந்து மிகுந்த மகிழ்ச்சி.
   வாழ்த்துக்கள்.   நீக்கு
 23. குழந்தைகள் கொலுக்கள் மிக அழகு.. பேரன் பேத்தியோடு கொலுக் கொண்டாடியிருப்பது அழகு. புதுப்போஸ்ட் போடுங்கோ கோமதி அக்கா, உடனே வருவதுதான் எனக்குப் பலசமயம் கஸ்டம் ஸ்கூல் நாட்களில்.. ஆனால் பார்க்கும்போது புதுப் போஸ்ட் எனில் வருவேன்...

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. பதிவில் அனைத்தையும் படித்து உங்கள் கருத்துக்களை பகிர்ந்து கொண்டது மிக மகிழ்ச்சி.
   விடுமுறை நாளில் நேரம் கிடைக்கும் போது வாருங்கள்.

   உங்கள் அன்பான அனைத்து கருத்துக்களுக்கும் நன்றி நன்றி.

   நீக்கு
 24. காலையில் பேரன் தங்கள் வீட்டில் பூஜை செய்யும்போது பாடும் பாடலை நேரடிக் காட்சியாகக் காட்டுவான் மகன். அப்புறம் பேரன் விளையாடுவான் எங்களுடன். //

  ஆஹா!சூப்பர் கோமதிக்கா. பேரனைப் பார்த்து பேரனோடு விளையாடுவது எல்லாம் மிக மிகப் பொக்கிஷமான தருணங்கள்

  மாமா செய்திருக்கும் சரஸ்வதி மிக மிக அழகு!!! மிகவும் ரசித்தேன் அக்கா

  இப்போது பலரும் கொலு ஜூமில் தான் கொண்டாடிருக்காங்க. எப்போது இந்தக் கொரோனா போய் நல்ல நிலை திரும்புமோ. விரைவில் சீராகும் என்று நம்புவோம்.

  கொலு ரொம்ப அழகாக இருக்கிறது கோமதிக்கா.

  அதிகம் கருத்துகள் போட முடியவில்லை கோமதிக்கா. வீட்டு வேலை, நான் இப்போது செய்யும் வேலை, ப்ளாக் வருவது என்றால் எல்லாம் மேனேஜ் செய்ய முடியவில்லை. கதைகளும் எங்கள் தளத்தில் பதிவுகளும் கூட எழுத முடியவில்லை. கதைகள் பாதியாகவே இருக்கு பல கதைகள். அதில் எழுத லயித்துவிட்டால் மற்ற வேலைகள் பெண்டிங்க் ஆகி விடுகிறது. எனவே அவ்வப்போது வருகிறேன் கோமதிக்கா..சில சமயம் தாமதமாகிடும் இப்போது வந்தது போல...

  கீதா


  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வணக்கம் கீதா ரெங்கன், வாழ்க வளமுடன்

   //ஆஹா!சூப்பர் கோமதிக்கா. பேரனைப் பார்த்து பேரனோடு விளையாடுவது எல்லாம் மிக மிகப் பொக்கிஷமான தருணங்கள்//

   ஆமாம் கீதா, பொக்கிஷமான தருணங்கள் தான்.

   //மாமா செய்திருக்கும் சரஸ்வதி மிக மிக அழகு!!! மிகவும் ரசித்தேன் அக்கா//
   ரசித்து கருத்து சொன்னதற்கு நன்றி.


   //பலரும் கொலு ஜூமில் தான் கொண்டாடிருக்காங்க. எப்போது இந்தக் கொரோனா போய் நல்ல நிலை திரும்புமோ. விரைவில் சீராகும் என்று நம்புவோம்.//

   மகன் வீட்டுக் கொலுவிற்கு யாரையும் அழைக்க முடியவில்லை. எல்லோரும் காணொளியில் தான் பார்த்து இருக்கிறார்கள்.இறைவன் அருளால் விரைவில்
   நிலமை சீராக வேண்டும். ஆகிவிடும் என்று நம்புவோம்.

   //கொலு ரொம்ப அழகாக இருக்கிறது கோமதிக்கா.//

   நன்றி நன்றி.


   //அவ்வப்போது வருகிறேன் கோமதிக்கா..சில சமயம் தாமதமாகிடும் இப்போது வந்தது போல...//

   முடிந்த போது வாருங்கள் கீதா .

   நீக்கு
 25. கொலு சிறப்பாக இருக்கிறது. உங்கள் கணவர் செய்த சரஸ்வதி அம்மன் உங்கள் குழந்தைகள் முன்பு செய்த கொலு அலங்காரம் எல்லாமே சிறப்பாக இருக்கின்றன. கைவினையில் எல்லோருமே வல்லுநர்கள் என்று தெரிகிறது. வாழ்த்துகள்!

  துளசிதரன்

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வணக்கம் சகோ துளசிதரன், வாழ்க வளமுடன்
   பதிவில் அனைத்தையும் பார்த்து, படித்து கருத்து சொன்னதற்கும் வாழ்த்துக்களுக்கும் நன்றி.

   நீக்கு
 26. கோமதிக்கா சாக்பீஸ் கோயில் பொம்மை படிக்கட்டு எல்லாம் செம செம....என்ன திறமை.
  பெண் செய்திருப்பது எல்லாமே அசத்தல். திறமை மிக்கவர்கள் அதான் இப்போது உங்கள் பேரனும் திறமை மிக்கவராக இருக்கிறார். பழைய கொலு ரொம்பவே அசத்தல். பார்க் எல்லாம் ரொம்ப நீட்டாக இருக்கு. எல்லோருக்கும் பாராட்டுகள்.

  நம் வீட்டிலும் தானியம் போட்டு பார்க் செய்வது வயல் செய்வது என்று கிராமத்து லுக் கொண்டு வருவது என்று அதெல்லாம் ஒரு காலம். ஹா ஹா ஹா

  சாக்பீஸில் நான் முன்பு பொம்மைகள் செய்திருகிறேன் கோமதிக்கா. இப்போது எல்லாம் போய்விட்டது. அப்படிச் செய்த பொம்மைகளுக்கு பென்சில் சீவும் போது வரும் சுருளினால் பாவாடை அஸ்ஸாம் பெண்கள் அணிவது போல உடை எல்லாம் செய்து பென்சில் சுருளினால் குடை போன்று எல்லாம் செய்து முன்பு எல்லாம் இப்போது சொன்னாலும் நம்ப முடியாது ஹா ஹா ஹா

  குழந்தைகள் இருந்தாலே கொலு தனிதான் அக்கா..

  சூப்பர் எல்லாமே

  கீதா

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. பழைய கொலு பார்க் பார்த்து பாராட்டியதற்கு நன்றி.

   //நம் வீட்டிலும் தானியம் போட்டு பார்க் செய்வது வயல் செய்வது என்று கிராமத்து லுக் கொண்டு வருவது என்று அதெல்லாம் ஒரு காலம். ஹா ஹா ஹா//

   காலங்கள் மீண்டும் வந்தால் மகிழ்ச்சிதான். இளமை காலம் வசந்த காலம் தான்.

   நீங்கள் செய்த கைவேலைகளை பகிர்ந்து கொண்டது மகிழ்ச்சி. பென்சில் சீவி அதை மரம் ஆக்கி அதில் ஊஞ்சல் எல்லாம் தொங்கவிட்டு என்று அண்ணன் பேத்தி செய்வாள்.
   குழந்தைகளுக்கு தான் பார்க் அவர்கள் படியில் இருப்பதை அவ்வளவாக பார்க்க மாட்டார்கள் பார்க் அமைத்தால் அதில் இருப்பதை ஆர்வத்துடன்ப் பார்ப்பார்கள்.

   உங்கள் வருகைக்கும், கருத்துக்களுக்கும் நன்றி கீதா.

   நீக்கு
 27. மிகவும் அழகாக இருக்கிறது. சரஸ்வதி அம்மன் அருமை.

  பதிலளிநீக்கு
 28. அழகான கொலு, அருமையான நினைவலைகள். மகனின் ஓவியங்களும் சிற்பங்களும் அற்புதம் கோமதி மேம்

  பதிலளிநீக்கு
 29. வணக்கம் தேனம்மை, வாழ்க வளமுடன்
  உங்கள் வரவுக்கும் உங்கள் கருத்துக்கும் நன்றி.
  நலம்தானே?

  பதிலளிநீக்கு