வியாழன், 8 அக்டோபர், 2020

முருடேஸ்வர் கோயில்



மங்களூர் -தர்மஸ்தலம்- சுப்பிரமணியா- தங்க அன்னபூரணி- கடில் கனகதுர்க்கா.- சிருங்கேரி- மூகாம்பிகை - கோகர்ணம்- முருடேஸ்வர் - உடுப்பி என 6 நாட்கள் திருப்பயணம் செய்தோம்.  அதைப் பதிவாக்கி வருகிறேன். இன்று  முருடேஸ்வர் கோவில்.

கர்நாடகத்தில் உத்திர கன்னட  மாவட்டத்தில் அமைந்து இருக்கிறது 
இந்த கோவில். மூன்று பக்கம் கடலால் சூழந்து இயற்கை அழகுடன்  இருக்கிறது. இந்த கோவில் கண்டூகம் என்ற சிறிய மலையின் மேல் அமைந்து இருக்கிறது.



இந்த இராஜகோபுரத்தின் உயரம் 238 அடி

கோவிலின் நுழைவாயிலில் இரண்டு பக்கமும் இரண்டு பெரிய அலங்கார யானைகள் இருக்கிறது. கோவிலின் நுழைவாயிலைக் கடந்து  உள்ளே போனால் கோபுரத்தின் மேல் பகுதி செல்ல இரண்டு பெரிய லிப்டுகள்  இருக்கிறது. கட்டணம்  உண்டு. ஒருவருக்கு 10 ரூபாய். இராஜகோபுரம் 2008ம் ஆண்டு  ஆர்.என் ஷெட்டி டிரஸ்ட் கட்டி இருக்கிறார்கள். உலகின் இரண்டாவது பெரிய கோபுரம் என்று சொல்கிறார்கள்.

கோபுரத்தின் மேல் தளத்தில் இருந்து பெரிய ஜன்னல் வழியாகத் தெரியும் காட்சிகள் நம்மை மகிழ்ச்சிப் படுத்தும்

1977 -ம் ஆண்டு இந்த சிவன் சிலையை அமைத்து இருக்கிறார்கள். 123 அடிகள் உயரம் கொண்ட  பெரிய சிவன் சிலையை அமைக்க 5 கோடி ரூபாய்  செலவு ஆனதாம். தமிழகச் சிற்பிகள் இந்தச் சிலையை இரண்டு ஆண்டுகளில் உருவாக்கினார்களாம். உலகிலேயே இந்த சிவன் சிலை இரண்டாவதாம். முதலில் கட்டிய பெரிய சிவன் சிலை  நேபாள நாட்டில் இருக்கிறதாம்.

சூரிய ஒளி நேரடியாக சிலை மீது படும்போதும் தங்கம் மாதிரி ஜொலிக்க முதலில் இதன் மீது தங்க முலாம் பூசி இருந்தார்களாம், அப்போது சூரிய ஓளி படும் நேரம் தங்கம் மாதிரி ஜொலித்ததாம். நெடு நாள் ஆனதும் தங்கமுலாம் போய் நன்றாக இல்லையாம். அதனால் இப்போது வெள்ளி  நிறம் பூசி இருக்கிறார்கள். நாகம் மற்றும் நகைகள் தங்கநிற வண்ணத்தில் இருக்கிறது. இது தொடர்மழை, கடல் உப்புக்காற்று பட்டும் அழியாமல் அழகாய் இருக்கிறது.

கோபுரத்தின் மேல் இருந்து பார்க்கும் போது  படகுகள், கார்கள்  எல்லாம் மிகச் சிறிதாகத் தெரிகிறது. மனிதர்களும் சிறிய பொம்மை போலத் தெரிகிறார்கள்.
கண்ணுக்கு எட்டிய தூரம்  தென்னைமரங்கள் மிக அழகாய்க் காட்சி அளிக்கிறது

மேலே இருந்து பார்த்த ஓட்டல்கள், தங்கும் விடுதிகள்.
மூன்று பக்கமும் அரபிக் கடல் சூழ்ந்து இருப்பது பார்க்க அழகு. சின்ன சின்ன அலைகள் அழகு மக்கள் பயமில்லாமல் குளித்துக் கொண்டு இருந்தார்கள்
சூரிய ஒளி ஜன்னல் கம்பியில்  (அலைபேசியில் எடுத்த படம்)- ஜன்னல் வழியாக காற்று பலமாக அடிக்கும்


சூரிய ஒளியில் தகதகக்கும் கடல் (அலைபேசியில் எடுத்த படம்)

சுற்றுலா செல்லும் மக்கள் பயணிக்கும் விசைப் படகுகள். வாட்டர் ஸ்போர்ட்ஸ் படகுகள், ஸ்குபா டைவிங் என்று நிறைய   இருக்கிறது. காலச் சூழ்நிலை, கடலுக்குள் போகும் நிலை இருந்தால் மட்டுமே அனுமதி உண்டாம். நாங்கள் போனபோது நிறைய சிறுவர்கள் பயணம் செய்துகொண்டு இருந்தார்கள்.
எங்கள் குழுவில் யாரும் போகவில்லை.


மீன் பிடிப்பு உண்டு, மீன் மார்க்கெட் கோவில் அருகில் இருக்கிறது. ஆனால் மீன்  வாடை இல்லை


மேலே இருந்து நிறைய படங்கள் அலைபேசியிலும் காமிராவிலும் மாறி மாறி எடுத்தேன். இறங்கி வர மனமே இல்லை அவ்வளவு  இயற்கை அழகு  நம் மனதைக் கவரும்.  அதன் பின் மனசு இல்லாமல்  கீழே இறங்கி வந்து உள்ளே இருக்கும் கோவிலுக்குப் போனோம். 
இந்தக் கோவிலை 1977 ஆம் ஆண்டு புதுப்பித்து இருக்கிறார்கள்.

அனுமன்- வெள்ளிக் கவசத்தில்

கோயில் உட்புறத்திலிருந்து எடுத்த படம்.

முருகன், வள்ளி தெய்வானையோடு காட்சி கொடுத்தார். அவசரமாய் எடுத்துவிட்டு நகர்ந்தது.  வெளியே வந்து பார்த்தால் வள்ளி இல்லை.
 


கோயில் உட்பக்கம்  இருந்து எடுத்த படங்கள்.

தங்கத்தேர் பணம் கட்டினால் எப்போது வேண்டுமென்றாலும்  கோயிலுக்குள் இழுக்கலாம்.

திருமால், சிவன், துர்க்கை, விநாயகர் 


அடுத்த பகுதியில் இன்னும் இருக்கிறது இந்தக் கோவில்  பற்றிய விவரங்கள், படங்கள். 


மீண்டும் அடுத்த பதிவில் பார்க்கலாம்.  முருடேஸ்வரர் கோவில் பதிவு தொடரும்.

                       வாழ்க வையகம் ! வாழ்க வையகம்!  வாழ்க வளமுடன்

=========================================================================

32 கருத்துகள்:

  1. அழகிய கோவில்.  அந்த மிகப்பெரிய சிவன் மிகவும் கவர்கிறார்.  கோவிலுக்குள்ளிருந்தும் அவர் பிரம்மாண்டமாய் தெரிவது அழகு.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வணக்கம் ஸ்ரீராம், வாழ்க வளமுடன்

      சுற்றுலா தகவலில் இந்த பெரிய சிவன் அனைவர் மனங்களையும் கவர்வார் என்று போட்டு இருக்கிறது.(பெரியவர், சிறியவர்)

      கோவிலுக்குள்ளிருந்து அவரை படம் எடுப்பதில் நேரம் செலவழித்து கீழே நிறைய படம் எடுக்க முடியாமல் போய் விட்டது.

      நீக்கு
  2. மேலிருந்து எடுக்கப்பட்ட புகைப்படங்கள் அழகு.  தனவூர் பெரிய கோவில் கோபுரம் மேல் ஏறலாம் என்று சொல்வார்கள்.  அத்தனை வருடங்கள் தஞ்சையில் இருந்தும் நான் பார்த்ததில்லை.  இப்போது மூடி விட்டார்களோ என்னவோ...

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. மேலிருந்து எடுக்கப்பட்ட படங்களை ரசித்து கருத்து சொன்னதற்கு நன்றி.

      நான் கங்கைகொண்டசோழாபுரம் கோவில் மேல் தளம் போய் இருக்கிறேன்.
      தஞ்சை கோவிலில் உட்புறம் கோபுர அழகை பார்த்து இருக்கிறேன்.இப்போது இரண்டும் தடை.

      நீக்கு
  3. தஞ்சாவூர் தனவூர் என்று டைப் செய்திருக்கிறேன்.  மன்னிக்கவும்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அப்படியே படித்தேன். ஸ்ரீராம்.
      உங்கள் கருத்துக்களுக்கு நன்றி.

      நீக்கு
  4. விடியற்காலையில் இனிய தரிசனம்...
    ஓம் நம சிவாய சிவாய நம ஓம்..

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வணக்கம் சகோ துரைசெல்வராஜூ, வாழ்க வளமுடன்
      உங்கள் கருத்துக்கு நான்றி.

      நீக்கு
  5. முருடேஷ்வரும், கோகர்ணமும் தவிர்த்து எல்லா இடங்களும் போனோம். முருடேஷ்வர் பற்றி அப்போது தெரியவில்லை. அழகான படங்கள். எல்லாமே நன்றாக வந்திருக்கின்றன. வித்தியாசமான கோபுர அமைப்பு. தமிழகச் சிற்பிகளின் அபார வேலை. முருகனை அவசரமாய் எடுத்ததால் வள்ளியையும் சேர்த்து எடுக்க முடியாமல் போய்விட்டது. அல்லது தெய்வானை போதும்னு முருகன் முடிவு பண்ணிவிட்டானோ?

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வணக்கம் கீதா சாம்பசிவம், வாழ்க வளமுடன்
      படங்களை ரசித்து கருத்து சொன்னதற்கு நன்றி.
      வள்ளி மணாளன் அப்படி நினைக்க மாட்டார்.
      கொஞ்சமாக வள்ளி தெரிகிறார் பாருங்கள்.

      நீக்கு
  6. கோயில் உட்பக்கம் எடுத்த படங்களும், தங்கத்தேரும் மிக அழகு. அரபிக்கடல் எப்போதுமே அமைதியாக இருக்குமோ? மீன் வாடை இல்லாத மீன் மார்க்கெட் அதிசயம் தான். அதுவும் கோயிலுக்கு அருகேயே! நீர் விளையாட்டுக்கும் வசதி இருப்பதையும் தெரிந்து கொண்டேன். ஜன்னல் வழியே எடுத்த படங்கள் அதி அற்புதம்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. உடபக்கம் எடுத்த படங்களை ரசித்து கருத்து சொன்னதற்கு நன்றி.
      அரபிகடல் எப்போதும் அமைதியாக இருக்காதாம். அமைதியாக இருக்கும் நேரத்தில் மட்டுமே படகுகள் விளையாட்டு உண்டு என்று போட்டு இருக்கிறது அறிவிப்பு பலகையில். பெரிய அலையாக இருக்காதாம் மற்ற நேரங்களில். மழை காலம் கவனம் தேவை என்றால் அப்போது ஆர்பரிப்பு உண்டு என்று தெரிகிறது.
      உங்கள் கருத்துக்களுக்கு நன்றி.

      நீக்கு
  7. வணக்கம் சகோதரி

    அழகான படங்களுடன் முருடேஷ்வரர் தரிசனம் கண்டு மகிழ்ந்தேன். இந்தக் கோவிலுக்கு சென்றுள்ளோம். நினைவுகள் சற்றே கலங்கலாக இருந்தாலும், கோவிலின் அழகு மனதிற்குள் அம்சமாக அமர்ந்திருக்கிறது. அந்த உயரமான கோபுரமும், பெரிய சிவன் சிலையும், மிகவும் கவர்கின்றன. கடல் கோவிலின் மேலிருந்து எவ்வளவு நேரமானாலும் பார்த்துக் கொண்டேயிருக்கலாம். சலிக்கவே சலிக்காது. அவ்வளவு அழகு. நீங்கள் படங்கள் எடுத்தக் கோணங்களும் மிகவும் அழகாய் உள்ளன. மனம் நிறைந்த பாராட்டுக்கள். கோவிலைப் பற்றி தந்திருக்கும் விபரங்களும் சிறப்பாக உள்ளன. அடுத்த பகிர்வையும் காண ஆவலாக காத்திருக்கிறேன் . பகிர்வுக்கு மிக்க நன்றி.

    நன்றியுடன்
    கமலா ஹரிஹரன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வணக்கம் கமலா ஹரிஹரன், வாழ்க வளமுடன்
      கோவிலின் அழகு மனதிற்குள் அமசமாக அமர்ந்து இருப்பதை கேட்டு மகிழ்ச்சி, நினைவுகள் வந்து விட்டத்தே!

      கடலையும் மற்றும் சுற்றி உள்ள இடங்களையும் மேலே இருந்து பார்த்தால் வெகு அழகுதான். என் சின்ன காமிராவிலும் அலைபேசியில் எடுக்க முடிவது இவ்வளவுதான்.
      னான் எடுத்த படங்களை உங்கள் மனம் நிறைய பாராட்டியது மகிழ்ச்சி. இந்த கோவில் படங்கள் கோகர்ண பதிவில் கொஞ்ச வந்து விட்டது. உங்கள் ஆவலான காத்து இருப்புக்கு நன்றி.
      உங்கள் கருத்துக்கு நன்றி.

      நீக்கு
  8. முருடேஸ்வர் கோவில் படங்களும் விளக்கமும் மிக நன்றாக இருக்கின்றன. முருடேஸ்வர் கோவில் பற்றி இத்தனை விரிவாக இப்போதுதான் படிக்கிறேன். நான் கண்டிப்பாக செல்ல விரும்பும் கோவில்களில் இதுவும் ஒன்று. எப்போது வாய்க்குமோ?  மீண்டுமொரு முறை சொல்கிறேன் படங்கள் மிக மிக அழகு. பாராட்டுகள். 

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வணக்கம் பானுமதி வெங்கடேஸ்வரன், வாழ்க வளமுடன்
      படங்கள் நிறைய எடுத்தேன், மெமரி கார்ட் அதிகப்படியாக கொண்டு போகவில்லை அதனால் நிறைய படம் டெலிட் செய்யும் படியாக ஆகி விட்டது. இப்போது எல்லாம் லேப்டாப் கொண்டு போய் இரவு கணினியில் ஏற்றி விட்டு மெமரி கார்டில் அழித்து விட்டு மறு நாள் எடுக்க தயாராக காமிரவில் செட் செய்த பின் தான் தூக்கம்.

      தனிபட்ட முறையில் போனால் விவரங்கள் நிறைய சேகரித்தபின் தான் போவோம். அப்படி தயார் செய்து வைத்து இருந்தோம். பின் குழு சுற்றுலா போனோம் எங்களுக்கு தெரிந்தவற்றை மற்றவர்களுக்கு சொன்னோம் எல்லோரும் மகிழ்ந்தார்கள்.

      நீங்கள் விரும்பிய இடங்களை இயல்பு வாழ்க்கை திரும்பியவுடன் சென்று பார்த்து வாருங்கள் இறைவன் அருளால் அது விரைவில் வர வேண்டும்.
      உங்கள் பாராட்டுக்கும் கருத்துக்கும் நன்றி பானு.

      நீக்கு
  9. அழகான படங்கள் சகோ
    அந்த சிவன்சிலை 1977-ல் கட்டியதா ? சமீபத்தில் கட்டியதாக விளம்பரப்படுத்தினார்களே....

    பொதுவாக கடற்கரை ஊர்களில் மீன்வாடை அடிக்காது.

    கடல் இல்லாத நகரங்களில் கெட்டுப்போய் ஐஸ் பெட்டியில் வைப்பதால் வாடை வருகிறது.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வணக்கம் தேவகோட்டை ஜி, வாழ்க வளமுடன்
      உள்ளே இருக்கும் கோவில் 500 வருட பழமை என்றும் அதை 1977ல் புதுபித்த போது இந்த சிவன் சிலையை அமைத்தார்கள் என்று தான் தலவரலாறு சொல்கிறது.
      இராஜ கோபுரம் 2008ல் கட்டியாதாக சொல்லபடுகிறது.

      பூம்புகார் கடற்கரை, தரங்கம்பாடி கடற்கரை எல்லாம் மீன் வாடை அடிக்கும். இங்கு மீன்வாடை இல்லை என்பதை ஒரு சிறப்பாக சொல்கிறார்கள். மீன் வியாபாரம் வேறு இங்கு நடைபெறுகிறது.

      உங்கள் கருத்துக்கு நன்றி ஜி.

      நீக்கு
  10. இக்கோயிலைப் பற்றி படித்துள்ளேன்.இதுவரை சென்றதில்லை. படங்கள் அங்கு செல்லும் ஆசையைத் தூண்டியுள்ளன.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வணக்கம் முனைவர் ஐயா , வாழ்க வளமுடன்

      அடுத்த பதிவில் வேறு ஒருவர் எடுத்த காணொளி சுட்டிக் கொடுக்கிறேன்.இந்த கோவிலைப்பற்றிய அனைத்து விவரங்களும் இருக்கிறது. அதைப் பார்த்தால் இந்த கோவிலைப் பார்க்க ஆசை இன்னும் அதிகமாகும்.

      உங்கள் வரவுக்கும், கருத்துக்கும் நன்றி.

      நீக்கு
    2. காலை 4:30..
      வேலைக்குச் செல்லும் நேரம். ஆதலால் ஓரிரு வார்த்தைகள்...

      என் ம்னதில் உள்ளதைச் சொல்கிறேன்..
      இந்தக் கோயிலின் ராஜ கோபுரமும் சரி.. ஈசனின் சுதை வடிவும் சரி..
      என் மனதைக் கவரவில்லை..

      தமிழகத்துக் கலைஞர்கள் என்றாலும் அங்குள்ளவர்களின் மனோபாவத்துக்கு ஏற்றார்போல கட்டியிருப்பதாகத் தான் தெரிகின்றது...

      தமிழகத்துத் திருக்கோயில்களில் லிங்கத் திருவடிவே பிரதானம்...முக லிங்க வடிவம் திருவக்கரையில் மட்டுமே.. தமிழகத்தைக் கடந்தால் முகலிங்க வடிவுகள் ஏராளம்..

      ராஜ கோபுர சுதை வடிவில் பிட்சாடனர், வைரவர் தவிர்த்து ஈசனின் திருக் கோலங்கள் சுந்தர வடிவானவை.. கல்யாணத் திருக்கோலங்கள்..

      காபாலிகத் தோற்றம் தேவாரத்தில் சொல்லப்பட்டாலும் ராஜ கோபுர சிற்பங்களில் காண முடியாது...

      ஆனால் வட நாட்டு ஓவியங்களும் சுதை வடிவங்களும் மிகவும் மாறுபட்டவை..

      பீம புஷ்டி பயில்வான் மாதிரியும் பாம்புப் பிடாரன் மாதிரியும்...

      இணையத்தில் தேடிப் பாருங்கள்.. உங்களுக்கே புரியும்...

      ஆனாலும்
      ஈசன் தனது திருக்கரங்களில் பொதுவாகத் தாங்கியுள்ள அடையாளங்கள் எவை என்பது நம்மவர்கள் 90% பேருக்குத் தெரியாது..

      நீக்கு
    3. இன்றைய பதிவும் படங்களும் சிறப்பு..

      நீக்கு
    4. வணக்கம் சகோ துரை செல்வாரஜூ, வாழ்க வளமுடன்

      //தமிழகத்துக் கலைஞர்கள் என்றாலும் அங்குள்ளவர்களின் மனோபாவத்துக்கு ஏற்றார்போல கட்டியிருப்பதாகத் தான் தெரிகின்றது..//

      நீங்களே சொல்லி விட்டீர்கள் .

      இறைவனை எப்படி எந்த மாதிரி கும்பிட்டாலும் நம்பிக்கை தான் முக்கியம்.
      இந்த கோவிலில் கோபுரத்திலிருந்து இயற்கை வழிபாடுதான் எனக்கு தெரிகிறது.
      இயற்கையை தரிசிப்பதும் இறை வழிபாடே! அதற்கு அந்த பெரிய கோபுரம் வசதி செய்கிறது. பெரிய சிவனுக்கு அடியில் உள்ள குகையில் கோகர்ணம் கோவில் உருவாக காரண வரலாறு அழகாய் சித்தரிக்கப்பட்டு இருக்கிறது.

      நீக்கு
    5. பதிவுக்கு மீண்டும் வந்து படங்களை, பதிவை பாராட்டியதற்கு நன்றி சகோ.

      நீக்கு
  11. உயரத்தில் இருந்து எடுக்கப்பெற்ற படங்கள் அழகோ அழகு
    நன்றி சகோதரி

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வணக்கம் சகோ கரந்தை ஜெயக்குமார், வாழ்க வளமுடன்
      உங்கள் உற்சாகமான கருத்துக்கு நன்றி.

      நீக்கு
  12. இங்கு செல்ல வேண்டும் எனும் ஆவல் எழுகிறது அம்மா...

    ஒவ்வொரு படமும் மிகவும் கவர்கிறது... எடுத்த விதம் சிறப்பு...

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வணக்கம் திண்டுக்கல் தனபாலன், வாழ்க வளமுடன்
      ஒரு முறை சென்று வாருங்கள்.
      படங்களை ரசித்து கருத்து சொன்னதற்கு நன்றி.

      நீக்கு
  13. அழகான கோவிலாக தெரிகிறது. நீங்கள் எடுத்த படங்கள் வழி நாங்களும் தரிசித்தோம். காட்சிகள் இங்கே செல்லும் ஆசையை உருவாக்கி இருக்கிறது.

    தொடரட்டும் பயணங்கள்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வணக்கம் வெங்கட் நாகராஜ், வாழ்க வளமுடன்
      உங்கள் காமிராவிற்கு நல்ல வேலை இருக்கும்,அத்தனையும் அழகாய் எடுப்பீர்கள்.
      உங்களுக்கு பிடிக்கும் வாய்ப்பு கிடைக்கும் போது போய் வாருங்கள்.
      உங்கள் கருத்துக்கும், வாழ்த்துக்கும் நன்றி.

      நீக்கு
  14. பகுதி 2 இல் படங்கள் பார்த்து, ஆவல் தூண்ட, இந்தப் பகுதியையும் பார்க்க ஓடி வந்தேன், என்னா ஒரு அழகிய கோயில்... போக வேண்டும் ஒரு நாளைக்குப் பார்ப்போம்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வணக்கம் அதிரா, வாழ்க வளமுடன்

      நீங்கள் முதல் பதிவை படித்தது மகிழ்ச்சி.
      வாங்க வந்து பாருங்கள்.
      உங்கள் வரவுக்கும், கருத்துக்கும் நன்றி.

      நீக்கு