ஞாயிறு, 11 அக்டோபர், 2020

முருடேஸ்வர் கோயில் பகுதி-2


மங்களூர் -தர்மஸ்தலம்- சுப்பிரமணியா- தங்க அன்னபூரணி- கடில் கனகதுர்க்கா.- சிருங்கேரி- மூகாம்பிகை - கோகர்ணம்- முருடேஸ்வர் - உடுப்பி என 6 நாட்கள் திருப்பயணம் செய்தோம்.

முருடேஸ்வர் முதல் பகுதி போன வியாழன் போட்டேன் இப்போது அதன் நிறைவுப் பகுதி. முதல் பகுதி படிக்காதவர்கள் படிக்கலாம்.

கோபுரவாசலில்  உள்ள அழகிய யானைகள்   துதிக்கையில் கலசம் வைத்து இருக்கிறது

யானைமேல் உள்ள அலங்காரத் துணியில் லிங்கம்  படம் இருக்கிறது 
  பெரிய சிவன் சிலை இருக்கும் இடத்திற்குப் போகும் படிக்கட்டுக்கள் -எங்கள் குழுவினர்  ஏறிக்கொண்டு இருக்கிறார்கள். போட்டோ உடனே எடுத்துத் தருவதாக ஒருவர் கேட்டுக் கொண்டு இருக்கிறார்.



                                     கோபுரத்தின் மேல் இருந்து  எடுத்த படம்.

சிவன் இருக்கும் இடத்திற்குப்  படிகளில் ஏறிப்  போகும் முன் கீழே சில இடங்கள் மிக அழகாய் இருக்கிறது. சனிஸ்வரன் கோவில் இருக்கிறது.
                                                         போகும் வழியில்  கீதைக் காட்சி.


                                                                         சூரியத் தேர்
அலைபேசியில் கோபுரத்தின் மேல் இருந்து எடுத்த சூரியத்தேர், கீதைக் காட்சி அமைப்பு பரந்து விரிந்து இருக்கிறது கோவில் இடங்கள் . மிகச் சுத்தமாகப் பராமரிக்கிறார்கள். இணையத்தில் பார்த்தால் இந்தப் படம் பச்சைப்பசேல் என்று பச்சைப் புல்வெளி அழகாய் இருக்கிறது. நாங்கள் போனபோது பசுமை அவ்வளவாக இல்லை.
                                                                      
படியிலிருந்து எடுத்த படம்: கீழ் உள்ள கோவில், கோபுரம் ,  மாடுகள் மேயும் காட்சி

                                        கங்கையைத்  தலையில் தாங்கும் கோலம்
                    வியாசரும் , விநாயகரும் பாரதம் எழுதும்  கதை சொல்கிறது.
மேலே இருக்கும் சிவனுக்கு நந்தி

கோபுரத்தின் மேலிருந்து எடுத்தபடம்

சிவனுக்குக் கீழ்  இருக்கும் குகை போன்ற அமைப்பில் தான் கீழே வருபவை கண்காட்சியாக  இருக்கிறது. கட்டணம்  10 ரூபாய்
                              
                                            இராவணன்    தாய் சிவபூஜை செய்கிறார் 

தாயிடம் கைலை சென்று சிவபெருமானிடம் ஆத்மலிங்கம் பெற்று வருவேன் நீங்கள் பூஜை செய்ய என்று சொல்கிறார்

                                        கைலையைத் தன் புஜபலத்தால் தூக்குகிறார்


                                                            கடுந்தவம் இருக்கிறார்.( இந்தப் படங்களில் சில கோகர்ண கோவில் பகுதியில் இடம்பெற்றது. மீண்டும் இடம் பெறுகிறது .)
தன் தலையை அறுத்துக் கொள்கிறார், சிவன் தடுத்துத் தவத்தை மெச்சி ஆத்ம லிங்கத்தைத் தருகிறார். தரும் போது கீழே வைக்கக் கூடாது இலங்கை செல்லும் வரை என்கிறார்

மாலை நேரம் சந்தியாவந்தனம் செய்ய வேண்டும் என்பதால் மாடு மேய்க்கும் சிறுவனாக இருக்கும் பிள்ளையாரிடம்  லிங்கத்தைச் சிறிது நேரம் வைத்துக் கொள்ளச் சொல்கிறார் . மூன்று முறை கூப்பிடுவேன், வரவில்லை என்றால் கீழே வைத்துவிடுவேன் என்கிறார் பிள்ளையார். அவர் இராவணன் ஆத்ம லிங்கத்தை இலங்கை கொண்டு போகவிடாமல் தடுக்கவே இப்படிச் செய்கிறார்.

மூன்று முறை உடனே கூப்பிட்டு வரவில்லை எனக் கீழே வைத்து விடுகிறார், கோபமாய்த் தலையில் குட்டுகிறான் ராவணன் 
அந்தப் பையன் பிள்ளையாராகக் காட்சி தருகிறார்  ,  இராவணன் அந்த லிங்கத்தை எடுக்க முடியாமல்  குழைந்து நெகிழ்ந்து மாட்டின் காது போல் ஆகி விடுகிறது ஆத்மலிங்கம்.  இங்கேயே தங்கி விடுகிறார் .

                     இராவணன்  அம்மை அப்பனை வணங்கி விடை பெறுகிறார்.
இப்போது உள்ள கோவில் தோற்றம் - மலை மேல் பெரிய சிவன்.
 கீழ்  உள்ள சிவன் கோவில்  கோகர்ணம்  அழைக்கப்படுகிறது

பிள்ளையார் அணிவகுப்பு, பூக்கூடைகள்

தேங்காய் நாரில் செய்யப்பட்ட பிள்ளையார்கள், பெரிய தூக்கணாங்குருவி கூடு, அழகிய கப்பல், தொப்பி , சூரியன், கதகளி முகங்கள் , கைபைகள்.


                                         
உடன் வந்தவர்கள்  கடைத்தெருவில் பொருட்கள் வாங்கி வரும் வரை  தங்கும் விடுதி வாசல்படியில் நிழ்ல் இருந்ததால்  அமர்ந்து விட்டார்கள் கடைக்கு போகதவர்கள். 
                                             
நான் அந்த விடுதி அருகில் இருந்த மரத்தையும் அதில் கூவி கொண்டு இருந்த குயிலையும் பார்க்க வந்து விட்டேன். மரம் மிக ஆச்சிரியப்படுத்தியது  ஐந்து வகை மரங்கள் பின்னி பிணைந்து இருக்கிறது. வேண்டுமென்று அப்படி வைத்து வளர்த்தார்களா அதுவாக இயற்கையாக அப்படி வளர்ந்து இருக்கா என்று தெரியவில்லை.  ஆல், அரசு, வேம்பு , புன்னை, புளிய மர இலைகள் போல் பொடியாக இருக்கிறது வன்னியா என்று தெரியவில்லை.

கூவிய குயில் அங்கிருந்து கிளம்பும் வரை முகம் காட்ட மறுத்து விட்டது  இலைகள் அடர்த்தியாக இருப்பதால் அதன் கூவல் மட்டுமே கேட்டேன்.

கர்நாடகா சுற்றுலாவில் இன்னும் ஒறு சின்ன கோவில் மட்டுமே இருக்கிறது. இரவு போனோம் மங்களூரில்  . 


                               வாழ்க வையகம் ! வாழ்க வையகம்!  வாழ்க வளமுடன் !
==========================================================================

36 கருத்துகள்:

  1. படங்கள் வெகு அழகு.  விளக்கங்கள் கோவில் பற்றி அறிய உதவின.  பெரியசிவனுக்குக் கீழே குஜி போன்ற அமைப்பும் சுவாரஸ்யம்.  பெரிய தூக்கணாங்குருவிக்கூடு அழகு.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வணக்கம் ஸ்ரீராம், வாழ்க வளமுடன்
      பெரியசிவனுக்கு கீழே குகை அமைப்பு பார்க்க சுவாரஸ்யம் தான்.
      எனக்கும் இந்த கூடு பிடித்து இருந்தது.

      நீக்கு
  2. ஐந்துவகை மரங்கள் இணைந்து ஒரு மரமானது ஆச்சர்யம்.  ஆத்மலிங்கம் இலங்கைக்கு எடுத்துச் செல்லப் படக்கூடாது என்பதில் பிள்ளையார் ஏன் குறியாய் இருந்தார்?

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. மரம் ஆச்சர்யம் கொடுத்தது உண்மை.
      கும்பகோணம் அருகில் உள்ள அய்யாவாடி கோவிலில் உள்ள தலவிருட்சம் ஆலமரம் அதில் ஐந்து வகையான இலையாக காட்சி அளிக்கும் என்பார்கள் பார்த்து இருக்கிறேன் மறந்து விட்டது.
      பஞ்ச பாண்டவர்கள் பிரத்யங்காரா தேவியை பூஜை செய்ய பூக்கள் கிடைக்காத காரணத்தால் ஆலமர இலைகளை ஐந்து வகை பூக்களாக நினைத்து அர்ச்சனை செய்தாக கூறுவார்கள்.

      ஆத்மலிங்கத்தை இலங்கை எடுத்து போய் வணங்கி விட்டால் இரவாணன் அழியா வரம் பெற்று விடுவார் , இலங்கை வேந்தனை அழிக்க முடியாது என்பதால் இந்திரன் பிள்ளையாரை வணங்கி தனக்கு உதவ கூறுகிறார் என்று வரலாறு சொல்கிறது.

      உங்கள் கருத்துக்களுக்கு நன்றி.

      நீக்கு
    2. ஆத்ம லிங்கத்தைப் பெற்று அதனை இழந்தாலும் அகங்காரம் அடங்கவில்லை இராவணனுக்கு.. அதனால் தான் திருக் கயிலாயத்தைப் பெயர்க்க முயன்று மலையடியில் சிக்கி சின்னாபின்னம் ஆனான்.. அவ்வேளையில் சாம கானம் பாடி இறைவனைத் துதிக்க - அவன் மீது இரக்கம் கொண்ட ஈசன் யாராலும் வெல்ல முடியாதபடிக்கு சந்திரகாந்தம் எனும் வாளையும் கூடுதல் வாழ்நாளையும் இராவணனனுக்கு வழங்கினார்.. ஆனாலும்

      சீதாதேவியைக் கவர்ந்த வேளையில் எதிர்த்துப் போரிட்ட ஜடாயுவின் மீது சந்திரகாந்த வாளை வீச - அறவழி மீறிய சண்டை அது ஆதலால் அந்த வாள் அத்தோடு போயிற்று..

      அவன் பெற்ற கூடுதல் வாழ்நாளும் அழிந்தது...

      குபேரனை அடித்து விரட்டி விட்டு அவனிடமிருந்த தேரை அபகரித்ததும்
      இராவணன் செய்த பெரும்பிழைகளுள் ஒன்று..

      இப்படியெல்லாம் நடக்க வேண்டும் என்று ஸ்ரீ ஹரி பரந்தாமனால் ஏற்கனவே தீர்மானிக்கப்பட்டு விட்டது...

      ஓம் ஹரி ஓம்..

      நீக்கு
    3. நீங்கள் சொன்ன வரலாறுகள் அருமை.
      படித்தவைகளை தகுந்த நேரத்தில் பகிர்வது நல்லது.
      இப்படியெல்லாம் நடக்க வேண்டியது என்பது ஏற்கனவே தீர்மானிக்கப்பட்டது என்பதும் உண்மைதான். காரணம் இல்லாமல் காரியம் இல்லைதானே!

      நீக்கு
  3. அற்புதமான கோயில். அழகாகவும் நிதானமாகவும் எடுத்த படங்கள். நல்ல விளக்கங்கள். எப்படி இந்தக் கோயிலைத் தவற விட்டோம் என இப்போவும் மனம் அடிச்சுக்கறது. அழைப்பு வரலை! அவ்வளவு தான்! கோபுர அமைப்பே வித்தியாசமாக இருக்கும் இந்த கோபுரத்தைப் பல முறை படங்களில் பார்த்திருந்தாலும் என்ன கோயில் என இப்போது தான் தெரிந்தது. அழகிய காட்சி அமைப்புகள், மாடு மேயும் காட்சி சிறப்பாக உள்ளது. கைவேலைப் பொருட்களும் அருமை! பிள்ளையார்கள் வரிசையைப் பார்த்தால் வாங்கத் தூண்டுகிறது மனம்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வணக்கம் கீதாசாம்பசிவம், வாழ்க வளமுடன்
      படங்களை ரசித்து கருத்து சொன்னதற்கு நன்றி.
      நீங்கள் போன சமயம் நிறைய விளம்பரங்கள் இருந்து இருக்காது.எங்களை அழைத்து சென்ற சுற்றுலா அமைப்பு தகவல் சொன்னதால் பார்த்தோம். கோகர்ணம் பார்க்க போய் இந்த கோவில்கள் கிடைத்தது. கோபுரம் மேல் இருந்து இயற்கையை ரசிக்கலாம், சிவன் இருக்கும் இடத்திலிருந்தும் இயற்கையை ரசிக்கலாம் . இடை இடையே இது போனற சிலைகள் மனதை கவர்கிறது. கைவேலைப் பொருட்கள் வாங்க மனதை தூண்டியது அதை அடக்கி ஒன்றும் வாங்காமல் வந்தேன்.
      உங்கள் கருத்துக்கு நன்றி.

      நீக்கு
  4. அழகான படங்கள், காட்சிகளின் விவரணம் அருமை சகோ.

    முதல் படத்தின் கோபுர தரிசனம் அற்புதமாக இருக்கிறது.

    வாழ்க வளமுடன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வணக்கம் தேவகோட்டை ஜி, வாழ்க வளமுடன்
      படங்களையும், பதிவையும் ரசித்து கருத்து சொன்னதற்கு நன்றி.
      முதல் படம் உங்களை கவர்ந்தது மகிழ்ச்சி.

      நீக்கு
  5. மாலை நேரம் சந்தியாவந்தனம் செய்ய வேண்டும் என்பதால் மாடு மேய்க்கும் சிறுவனாக இருக்கும் பிள்ளையாரிடம் லிங்கத்தைச் சிறிது நேரம் வைத்துக் கொள்ளச் சொல்கிறார் . மூன்று முறை கூப்பிடுவேன், வரவில்லை என்றால் கீழே வைத்துவிடுவேன் என்கிறார் பிள்ளையார். அவர் இராவணன் ஆத்ம லிங்கத்தை இலங்கை கொண்டு போகவிடாமல் தடுக்கவே இப்படிச் செய்கிறார்.இந்தக்கதை பல இடங்களில் சொல்லப்படுகிறதுவலை உலகுக்கு வரும் முன் சென்றது

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வணக்கம் பாலசுப்பிரமணியம் சார், வாழ்க வளமுடன்.
      ஆமாம், கதை நிறைய இடத்தில் சொல்லப்படும். ஸ்ரீரங்கம் கோவிலுக்கும் சொல்லபடியகூடிய கதைதான். இதில் இராவணன், அதில் விபீஷணன்.
      நீங்கள் கட்டிய புதிதில் பார்த்து விட்டீர்கள் போலும்! (நீங்கள் 2010ல் வலை உலகுக்கு வந்தீர்கள் இல்லையா?)
      உங்கள் வரவுக்கும், கருத்துக்கும் நன்றி.

      நீக்கு
  6. சென்றே ஆக வேண்டும் என்று முடிவே செய்து விட்டோம்... அப்படி உள்ளது படங்கள்... பாராட்டுகளும் வாழ்த்துகளும்... மிக்க நன்றி அம்மா...

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வணக்கம் திண்டுக்கல் தனபாலன், வாழ்க வளமுடன்
      ஆஹா! சென்று வாருங்கள் முடிந்த போது, எல்லோருக்கும் பிடித்த சுற்றுலாத்தலம்.

      உங்கள் பாராட்டுக்களுக்கும், வாழ்த்துக்களுக்கும், கருத்துக்கும் நன்றி.

      நீக்கு
  7. காலையில் இனிய தரிசனம்...
    அழகான படங்கள்.. செய்திகள்..

    வாழ்க வையகம்...

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வணக்கம் சகோ துரை செல்வராஜூ, வாழ்க வளமுடன்
      உங்கள் கருத்துக்களுக்கு நன்றி.
      வாழ்க வையகம்.

      நீக்கு
  8. அழகான கோவில். இந்த இரண்டாம் பாகத்தில் தந்திருக்கும் மேலதிகத் தகவல்கள் சிறப்பு. எப்போது எனக்கு வாய்ப்பு வரும் என்ற சிந்தனை உருவாகி இருக்கிறது. பார்க்கலாம் - விரைவில் வாய்ப்பு வர வேண்டும்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வணக்கம் வெங்கட் நாகராஜ், வாழ்க வளமுடன்
      கோவில் உங்களுக்கு பிடித்து இருப்பது மகிழ்ச்சி.
      வாய்ப்பு விரைவில் வரட்டும். கர்நாடகாவில் பார்க்க வேண்டிய இடங்கள் நிறைய இருக்கிறது நாங்கள் பார்த்தது கொஞ்சமே.
      உங்கள் கருத்துக்கு நன்றி .

      நீக்கு
  9. அன்பு கோமதிமா.,
    எத்தனை அழகான படங்கள். கோபுரத்திலிருந்து எடுத்த காட்சிகள்
    எத்தனை அழகு. தொடர்ந்து வந்த விளக்கங்கள்.
    அதி அற்புதம் .ராவணனின் தபஸ்,
    மற்றக் காட்சிகள் தத்ரூபம். மனதை அள்ளிக் கொண்டு போகின்றன.

    அன்பு கோமதி,
    இதனை விளக்கிய கதைதுரையின் பின்னூட்டம்
    எல்லாமே மிக அழகு.

    அந்தக் கோபுரம் அடிவாரம் விசாலமாக இருக்குமா.
    ஒரே உயரம் தான் தெரிகிறது!!!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வணக்கம் அக்கா, வாழ்க வளமுடன்
      நீங்கள் முதல் பாகம் படிக்கவில்லை அதனை பார்த்தால் தெரியும். கோபுரத்தை கடந்து உள்ளே போனால் நல்ல விசலாமாக இருப்பது தெரியும். ஒவ்வொரு சன்னதிக்கும் தனி விமானங்கள் உள் இருக்கும் கோயிலுக்கு தனியாக சின்ன கோபுரம் எல்லாம் இருக்கும்.

      இதற்கு முந்திய பதிவில் கோபுரத்தின் மேல் பகுதியிலிருந்து ஜன்னல் வழியாக எடுத்த படங்கள் நிறைய இருக்கிறது. உங்களுக்கு பிடிக்கும் முடிந்த போது பாருங்கள்.

      //அன்பு கோமதி,
      இதனை விளக்கிய கதைதுரையின் பின்னூட்டம்
      எல்லாமே மிக அழகு.//

      நன்றி அக்கா.

      உங்கள் கருத்துக்கு நன்றி.

      நீக்கு
  10. வணக்கம் சகோதரி

    அருமையான பதிவு. படங்கள் அனைத்தும் அழகாக இருக்கிறது. நல்ல தொகுப்பாக எல்லாவற்றையும் தொகுத்து எழுதியுள்ளீர்கள். படங்களோடு தாங்கள் அருமையான முறையில் தொகுத்து தந்துள்ள பதிவையும் படிக்கையில் எனக்கும் அங்கு சென்று தரிசித்த நினைவுகள் மீண்டு வந்த உணர்வைப் பெற்றேன்.

    பிள்ளையார் சிலைகள், கைவினைப் பொருட்கள் எல்லாமே நன்றாக உள்ளது. எனக்கும் இதையெல்லாம் பார்க்கும் போது வாங்க வேண்டும் போல் இருக்கும். ஆனால் அங்கிருந்து திரும்பும் பிராயணங்களில் அதை பத்திரமாக வீடு வரை கொண்டு வர வேண்டுமே என்ற எண்ணத்தில் பார்த்து ரசிப்பதோடு நிறுத்திக் கொள்வேன். ஏதாவது அங்கிருக்கும் ஸ்வாமி போட்டோ(கண்ணாடியில்லாமல்) மட்டும் வாங்கிக் கொள்வேன்.(நினைவுக்காக) இந்த முருடேஷ்வரர் கோவிலில் எதுவும் வாங்கவில்லை. மீண்டும் ஒருமுறை அங்கு சென்று தரிசிக்கும் வாய்ப்பை இறைவன் அளித்தால் சந்தோஷம் அடைவேன். ஆனால் உண்மையில் உங்கள் பதிவே அந்த சந்தோஷத்தை தந்தது. உங்கள கோவில் பகிர்வுக்கு மிக்க நன்றி.

    நன்றியுடன்
    கமலா ஹரிஹரன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வணக்கம் கமலா ஹரிஹரன், வாழ்க வளமுடன்
      படங்களையும், பதிவையும் ரசித்து கருத்து சொன்னதற்கு நன்றி.

      கைவினைப்பொருட்கள் வாங்க தூண்டும் அழகுதான். நானும் ஆசையை அடக்கை கொண்டேன். முன்பு கொலுவிற்கு என்று எங்கு போனாலும் வாங்கி கொண்டு இருந்தேன். இப்போது அதை பராமரிக்க முடியவில்லை கஷ்டமாக இருக்கிறது.
      அப்படியே வாங்கினாலும் குழந்தைகளுக்கு, உறவினர், நண்பர்களுக்கு கொடுத்து விடுவேன். இப்போது அதுவும் வாங்குவது இல்லை. சின்ன ஸ்வாமி படங்கள் போனதின் நினைவாக வாங்கி கொள்கிறேன் நானும். நீங்கள் மீண்டும் அங்கு போக வாய்ப்பு வரட்டும்.
      உங்கள் மகிழ்ச்சி எனக்கும் மகிழ்ச்சி தந்தது. நன்றி.

      நீக்கு
  11. முதல் பகுதியைப் படித்தேன். தற்போது இதனைப் படிக்கும்போது, நேரில் சென்றால்கூட இந்த அளவிற்குப் பொறுமையாகப் பார்த்திருப்போமா என்று எண்ணத் தோன்றுகிறது. பதிவு வழியாக அருமையான கோயிலுக்கு அழைத்துச் சென்றமைக்கு நன்றி.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வணக்கம் முனைவர் ஐயா, வாழ்க வளமுடன்
      முதல் பகுதியை படித்தது அறிந்து மகிழ்ச்சி.
      உங்கள் உற்சாகமான பின்னூட்டத்திற்கு நன்றி.

      நீக்கு
  12. கோபுரம் வித்தியாசமாக இருக்கிறது.

    இந்தக் கோவிலுக்கு எப்போது தரிசனத்துக்குப் போகப்போகிறேனோ என்ற எண்ணம் வருகிறது.

    அழகிய படங்கள். முதல் பதிவைப் படிக்கணும்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வணக்கம் நெல்லைத் தமிழன் வாழ்க வளமுடன்

      ஆமாம், கோபுரம் வித்தியாசமான முறையில் தான் இருக்கிறது.

      முதல் பதிவை படித்து கருத்து சொல்லுங்கள், கோவிலின் மேல் தளத்திலிருந்து எடுத்த படங்கள் பகிர்ந்து இருக்கிறேன்.

      உங்கள் வரவுக்கும், கருத்துக்கும் நன்றி.

      நீக்கு
  13. கோமதி அக்கா நலம்தானே? வரவேண்டும் என எப்பவும் நினைத்தாலும், புளொக் பக்கம் வர மனம் ஏவவில்லை.. ஏதோ நேரமில்லாததுபோல ஒரு உணர்வு... அதனால எங்கும் எட்டிப் பார்க்காமலேயே விட்டு விட்டேன், அஞ்சு என்னை விடுவதாக இல்லை, அதனால எப்படியும் எல்லோரையும் பார்த்திட வேண்டும் எனக் களம் இறங்கி விட்டேன்... இந்த வாரம் முழுக்க இங்கு ஸ்கூல் ஹொலிடேதான், ஆனால் பாருங்கோ தொண்டை நோ, காச்சல் குணம்.. நடமாட முடியவில்லை.. நன்கு ஓய்வெடுத்தேன்.. எடுக்கிறேன்.. இன்று நவராத்திரி ஆரம்பம் மற்றும் ஐப்பசி மாதப்பிறப்பும் என்பதால் எப்பவும் எட்டிப்பார்த்திட வேண்டும் என வந்தேன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வணக்கம் அல்லிராணி அதிரா, வாழ்க வளமுடன்
      நான் நீங்கள் நலமாக இருக்கிறீர்களா என்று அம்முவிடம் விசாரித்தேன். ஏஞ்சலிடம் விசாரித்தேன்.
      உடல் நலமில்லாமல் இருந்தீர்களா? இப்போது எப்படி இருக்கிறீர்கள்? ஒய்வு எடுங்கள் பதிவு எப்போது வேண்டுமென்றாலும் படிக்கலாம்.
      நான் குழந்தைகள் வீட்டிலிருந்து படிப்பதால் வேலை சரியாக இருக்கும் என்று நினைத்தேன்.

      நவராத்திரி இன்று ஆரம்பம் அதனால்தான் வலை பக்கமே வர முடியவில்லை. ஐப்பசி முதல் வேறு மாயவரத்தில் மிக விசேஷமாக இருக்கும்.

      நீக்கு
  14. ஆஹா என்ன ஒரு அழகிய கோயில், கோபுரத்தின் அழகோ சொல்லி வேலையில்லை, படங்களிலிருந்து கண்ணை எடுக்க முடியவில்லை... மலேசியாவோ என ஒரு கணம் நினைத்திட்டேன்... தங்கத்தேர், என்னுடைய பேவரிட் சிவன்.. எல்லாமே அழகோ அழகு..

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. இந்த கோவிலின் முதல் பாகம் பாருங்கள் அதிரா, அதில் நிறைய படங்கள் போட்டு இருக்கிறேன். அவை உங்களுக்கு பிடிக்கும்.

      அதை நேரம் கிடைக்கும் போது பார்த்து கருத்துச் சொல்லுங்கள்.

      நீக்கு
    2. இப்பகுதி பார்த்து ஆவல் அதிகமாகி, நேற்றே இதன் முதல் பாகத்துக்கும் கொமெண்ட் ஒன்று போட்டுவிட்டேன், நீங்களும் பப்ளிஸ் பண்ணிட்டீங்க கோமதி அக்கா... கவனிக்கவில்லை என நினைக்கிறேன் பாருங்கோ.
      இங்கு ஸ்கூல் எல்லாம் நோர்மலாவே நடக்கிறது... வீட்டில் பிள்ளைகளை வைத்திருந்து படிப்பிக்க முடியாதென பெற்றோர் சண்டைக்கு வருவார்கள்.... வேலைக்குப் போகும் பெற்றோருக்கு கஸ்டமெல்லோ...

      நீக்கு
  15. அந்த 5 ஆவது படத்தைக் களவாடிச் செல்கிறேன்.. கடற்கரையுடன் சேர்ந்த கோபுரம்.. கோயில் படம்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. முதல் பதிவில் சிவன் படம் பெரிது பெரிதாக இருக்கும். கடற்கரை படங்கள் நிறைய இருக்கிறது.
      உங்களை காணாமல் மிகவும் கஷ்டமாய் இருந்தது. நீங்கள் மீண்டும் வந்தது மிகவும் மகிழ்ச்சி. நலமுடன் வாழ வாழ்த்துக்கள் அதிரா.
      உங்கள் கருத்துக்களுக்கு நன்றி.

      நீக்கு
  16. கோமதிக்கா இன்று ஆஜர். ஆனால் அவ்வப்போது வர முடியும் நேரம் வருகிறேன் கோமதிக்கா. பணிகள் வேறு வந்திருக்கிறது.

    இந்தக் கோயில் செல்ல வேண்டும் என்று எனக்கு மிகவும் ஆசை உண்டு. குறிப்பாகக் கடல் ஒட்டி இருப்பதால். படங்கள் அத்தனையும் அழகோ அழகு!

    விவரங்களும் தெரிந்து கொண்டேன் கோமதிக்கா. வித்தியாசமான கோபுரம். பெரிய சிவன்! முந்தைய பதிவில் கடற்கரைப் படங்களும் பார்த்தேன். என்ன அழகு!

    ரசித்தேன் கோமதிக்கா

    கீதா

    பதிலளிநீக்கு
  17. வணக்கம் கீதா ரெங்கன், வாழ்க வளமுடன்
    நேரம் கிடைக்கும் போது வாருங்கள்.

    கோவிலை வாய்ப்பு கிடைக்கும் போது பார்த்து வாருங்கள்.
    படங்களை ரசித்து பதிவை படித்து கருத்து சொன்னதற்கு நன்றி கீதா.

    பதிலளிநீக்கு