திங்கள், 13 ஏப்ரல், 2020

மலரட்டும் மகிழ்ச்சி!

சித்திரை மாதம் முதல் தேதி அன்று விஷுகனி காணும் பழக்கம் உண்டு. மா, பலா, வாழை என்ற முக்கனியுடன், மற்ற பழவகைகள் வைத்து, தங்கம், வெள்ளி, புது உடைகள் வைத்து விளக்கு ஏற்றி வைத்து இரவே கண்ணாடி முன் அலங்கரித்து வைத்து விடுவார்கள். காலை கண்விழித்தவுடன் இநத மங்கலப் பொருட்களைப் பார்த்தால் ஆண்டு முழுவதும் வளமாய் இருக்கலாம் என்று நம் முன்னோர்கள் வழக்கப்படுத்தி உள்ளார்கள். எங்கள் வீட்டில் பெரியவர்கள் சிறியவர்களுக்கு ஆசிர்வாதம் செய்து கைநீட்டம்(பணம்) வழங்குவார்கள்.














வாழ்வில் இன்பமும், துன்பமும் கலந்துதான் இருக்கும் என்பதை எடுத்துக்காட்டுவதுபோல் நம் முன்னோர்கள் தமிழ்ப்புத்தாண்டில் இனிப்பு, கசப்பும் என்று எல்லா சுவைகளும் கலந்து உண்ணும் பழக்கத்தை வைத்து இருக்கிறார்கள். நம் உணவில் ஆறுசுவைகளும் இருக்க வேண்டும் என்பார்கள். அதை ஒழுங்காய் கடைபிடிப்பது தமிழ்ப்புத்தாண்டில் தான். இனிப்புக்கு வெல்லம் போட்ட அவல், புளிப்புக்கு மாங்காய் பச்சடி, கசப்புக்கு வேப்பம்பூ ரசம் என்று உணவில் சேர்த்துக் கொள்வார்கள்.


வெயில் காலத்தில் வேப்பமரத்தின் காற்று எல்லோருக்கும் மிக தேவையாக இருக்கிறது. கிராமப்புறத்தில் கோடைக்காலத்தில் வேப்பமரத்தில் ஊஞ்சல் கட்டி விளையாடுவது, கயிற்றுக் கட்டிலை மரத்தடியில் போட்டு தூங்குவது என்று இயற்கையை ரசித்து அனுபவித்து வாழ்ந்து இருக்கிறார்கள்.



சித்திரை மாதத்தில், புளி, மாங்காய், மாம்பழம், பலா, வாழை மஞ்சள், இஞ்சி என்று எல்லாம் நிறைய கிடைக்கும். மக்கள் வருடத்திற்கு வேண்டியவைகளைப் பதப்படுத்தி சேமித்து வைத்துக் கொள்வார்கள். வேப்பம்பூ இப்போதுதான் கிடைக்கும். அதைக் காயவைத்து, மோரில் உப்புடன் போட்டு வெயிலில் காயவைத்து எடுத்து வைத்துக்கொள்வார்கள், அதன் மருத்துவப்பயன் அறிந்தமையால்.

 வேப்பம்பூவை வெந்நீர் விட்டு டீ டிகாக்ஷன் போல் இறக்கி, தேன் அல்லது சர்க்கரை சேர்த்துக் குடித்தால், வாதம், பித்தம், அகலும். வாய்க்கு ருசி, வயிற்றுக்குப் பசி ஏற்படும், சரும நோய்கள் விலகும் என்பார்கள்.

சித்திரை மாதம் வசந்தகாலம் என்பார்கள். இந்தச் சமயத்தில் பூக்கள், பழங்கள் , காய்கறிகள் என்று இயற்கை அள்ளி கொடுக்கும். அதையே நாம் இறைவனுக்கு நிவேதனம் செய்து வழிபட்டு எல்லோரும் நலமாக இருக்க வேண்டிக்கொள்ளலாம்

பழங்கள்:
சமைக்காத உணவுகளாகப் பழங்கள் பச்சைக் காய்கறிகள், சாப்பிடலாம். அந்தந்த சீஸனில் கிடைக்கும் பழங்களை உண்பது நல்லது. சமைக்காத உணவாகப் பழங்களை, பச்சைக்காய்கறிகளை உண்ணலாம். இந்த சீஸனில் மா, பலா, வாழைப் பழங்கள், மற்றும் எல்லாப் பழங்களும் நிறைய கிடைக்கும். “கனிகள் தின்னப் பிணிகள் போகும் என்பார்கள்.”

நாம் தமிழ்ப்புத்தாண்டில் இறைவனுக்கு என்று வழங்கும் பிரசாதங்கள் எல்லாம் என்ன பயன்களைத் தருகின்றன, உணவில் கசப்புச் சுவையை ஏன் கலந்து உண்ணச் சொல்கிறார்கள்? அதன் காரணம் என்ன?
நம் வீட்டை அலங்கரிக்கும் மாவிலை, வாழை மரத்தின் பயன்கள் என்ன என்பதையும் ஏன் அதை நம் முன்னோர்கள் பயன் படுத்தினார்கள் என்பதை எல்லாம் எளிய முறையில் பிணி அகற்றும் தெய்வீக மூலிகைகள் என்ற புத்தகம் மூலம் சொல்கிறார் Dr.திரு C.K.. மாணிக்கவாசகம். அவர்கள் எழுதியதைப் படித்தேன் அதில் சில பண்டிகைக்குப் பயன்படுத்தப்படும் சிலவற்றைப் பகிர்ந்து கொள்கிறேன்:-

பஞ்சபூதத்திற்கும் உரிய மூலிகைகள் :
நிலம் - அருகம்புல்
நீர் - மாவிலை,
நெருப்பு  வாழைஇலை
காற்று  வேப்பிலை.
ஆகாயம்  வெற்றிலை
அருகம்புல்:
அருகம்புல் பிள்ளையாருக்கு சமர்ப்பிக்கிறோம். அது நோய்களை நீக்கும் “ஆகாதது அருகம்புல்லில் ஆகும்என்பது பழமொழி.வாரம் ஒரு முறை கஷாயம் வைத்து குடித்தால் வலியும், வியாதியும் இன்றி
வாழலாம். இரத்த அழுத்தம், சர்க்கரைவியாதி, தோல் நோய்கள், புற்று நோய், இதய நோய் போன்ற நோய்களையும் போக்கும் குணம் அருகம்புல்லுக்கு உண்டு.

மாவிலை:
மாவிலை கஷாயம் நீரின் மூலமாகப் பரவும் நோய்களைப் போக்குகிறது.கங்கைநீர் என்று கலசங்களில் நீரை எடுத்து
மாவிலை வைத்து கும்பாபிஷேகங்களிலும், புதுமனை புகுவிழாவிலும், மற்றும் விழாக்களிலும் வைத்து வணங்கி, அந்த நீரை மாவிலைகளால் தெளித்துத் தூய்மைப்படுத்தி, பின் மக்கள் மீதும் வீடுகள் மீதும் மற்றும் எல்லா இடங்களிலும், தெளிப்போம். தூய்மையான நீரைத் தெளித்து சுற்றுப்புறத்தைத் தூய்மை ஆக்குகிறோம். வீட்டில் மாவிலை கட்டுவதும் காற்றில் உள்ள நீரைச் சுத்தப்படுத்துகிறது. மற்றும் சுற்றுப் புறத்தில் உள்ள நீர்நிலைகளையும் சுத்தம் ஆக்கும்.

வாழைமரம் கட்டும் காரணம் :
விஷமுறிவுக்கு வாழை என்பார்கள். திருமணம், கோயில் விழாக்கள் வாயில்களில் வாழை கட்டுவதற்கு காரணம், விழாக்களின் போது தீங்கு இழைக்க கூடிய ஜந்துக்களை விரட்டவும், தவறி விஷஜந்துக்கள்
தீண்டிவிட்டால் அவர்களுக்கு முதல் உதவி செய்ய வேறு எங்கும் தேடிக்கொண்டு இருக்காமல் உடனே அருகில் கட்டி இருக்கும் வாழை மரத்திலிருந்து வாழைப்பட்டையை எடுத்து தீமூட்டி அனலில் வாட்டி,வதக்கி சாறு எடுத்து அரை டம்ளர் உள்ளே கொடுத்து, பின் சாறு எடுத்து உடல் முழுக்கப் பூசிவிட்டால் விஷக்கடியிலிருந்து பிழைத்துக் கொள்வார்கள். இப்படி நல்லது கெட்டது என்று மக்கள் கூடும் இடங்களில் வாழைமரம் கட்டும் காரணம் இது தான் என்பார்கள். ஆதிகாலத்தில் வீடுகள் கோயில்கள் எல்லாம் காட்டுப் பகுதி சூழ்ந்த இடங்களில் தானே இருந்தன!

வேப்பிலை:

வேப்பிலை சக்தி கடவுளுக்கு மட்டுமல்ல, நம் உடலுக்கு வேண்டிய சக்திக்கும் தான். வேப்பிலை கஷாயம் அருந்தி வந்தால், உடலிலுள்ள நோய்க் கிருமிகள் அழிவதுடன் கிருமிகள் உற்பத்தி ஆகாமல் அன்றாட உடல்உறுப்புத்தேய்மானத்தைத்தடுத்து உடலைப்புதுப்பிக்கிறது.பிணியின்றி வாழ வைக்கிறது.

 கசப்புச் சுவை பிடிக்காது என்பதால் அதைச் சாப்பிடாதவர்களுக்கு உடலில் இருக்கும், எலும்பு மூட்டுக்கள், பாதங்களின் தசைகள், பற்கள், என்று பல உறுப்புக்கள் தேய்மானம் ஆகிறது. கசப்பு உண்டு வந்தால், தேய்மானம் தடுக்கப் படுகிறது. பாவைக்காய், சுண்டைக்
காய், போன்றவைகளை உணவில் சேர்த்துக் கொள்ளலாம்.

வெற்றிலை:
கடவுளுக்குப் படைப்பதற்கு மட்டும் அல்ல வெற்றிலை ,அறுசுவை உணவை அளவோடு உண்டபின் வெற்றிலை போட்டுக் கொள்வதால் உண்ட உணவு நல்ல முறையில் செரித்து உடலுக்கு சக்தி கிடைக்கும். அதனால்.இப்படி பண்டிகையில் சேர்த்துக் கொள்ளும் பொருட்கள் எல்லாம் காரண காரியமாய் சேர்க்கப்பட்டு இருக்கிறது.


பின் குறிப்பு:- இந்த பதிவு  மீள் பதிவு, முந்திய ஆண்டுகளின் வருடப்பிறப்பு படங்கள்.

இந்த வருடம் கடைகளுக்குப் போக முடியவில்லை. வீட்டுக்குவரும் காய் கனி வண்டியால்   பலாவைத்தவிர எல்லா பழங்களும் தேங்காயும், மாங்காயும் கூட  கிடைத்து விட்டது. வெற்றிலையும் பூவும் மட்டும் தான் கொண்டு வரவில்லை.எங்கள் சின்ன பூத்தோட்டத்தில் நந்தியாவட்டை கிடைத்தது , இறைவன் அருளால் இந்த புத்தாண்டுக்கு.

,அச்சம், கவலை, நோய், நொடி முதலியவற்றைப் போக்கி மனநிறைவாய், மகிழ்ச்சியாக வாழ எல்லாம் வல்ல இறைவன் அருள்புரிய வேண்டும்.

எல்லோரும் எல்லா நலங்களும் பெற்று வாழ இந்தப்
 புத்தாண்டில் அனைவரும்  சேர்ந்து  வாழ்த்துவோம்.
ஸ்ரீசார்வரி வருடம் அனைவருக்கும் நலம் சேர்க்கட்டும்.


வாழ்க வளமுடன்!
வாழ்க நலமுடன்.
வாழ்க வையகம் வாழ்க வளமுடன்.


58 கருத்துகள்:

  1. இனிய தமிழ் புத்தாண்டு வாழ்த்துக்கள் கோமதி அக்கா .உணவில் ஆறுசுவையின் முக்கியத்துவம் அறிந்தேன் ..

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வணக்கம் ஏஞ்சல், வாழ்க வளமுடன்
      உங்கள் வாழ்த்துக்களுக்கு நன்றி.
      ஆறுசுவையும் உணவில் முன்பு கண்டிப்பாய் இடம்பெறும். இப்போது பிடித்த உணவை மட்டும் செய்து சாப்பிடுகிறோம். அதனால் பண்டிகைகளில் கண்டிப்பாய் சேர்க்க வேண்டும் என்றால் சேர்ப்பார்கள் தானே! அதுதான் அப்படி சொல்லி வைத்து இருக்கிறார்கள்.
      உங்கள் கருத்துக்கு நன்றி.

      நீக்கு
  2. தமிழ்ப் புத்தாண்டு வாழ்த்துகள். கசப்பும் புளிப்பும் உனிப்பும் கலந்த அந்த பச்சடியை கையில் மூன்றுமுறை ஊற்றிக் குடிக்கச் சொல்வார் அம்மா... ஙொவ்வொருமுறை ஊற்றும்போதும் "யமனுக்குக் கசப்பாக... மனிதனுக்கு இனிப்பாக.." என்பார்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வணக்கம் ஸ்ரீராம், வாழ்க வளமுடன்
      கசப்பும், புளிப்பும், இனிப்பும் கலந்த பச்சடியை கொடுத்து விட்டு அம்மா சொல்வது நன்றாக இருக்கிறது. அம்மாவின் நினைவுகளை பகிர்ந்து கொண்டதற்கு நன்றி.
      பயம் ஏற்படாமல் இருக்க வேப்பம்கொழுந்தை அரைத்து கொடுத்து இது போல் சொல்வார்கள் எங்கள் வீடுகளில்.

      நீக்கு
  3. கைநீட்டம் வழக்கம் எங்கள் வீட்டில் நான் கண்டதில்லை.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. எல்லா பண்டிகைகளுக்கும் பெரியவர்கள் காலில் விழுந்து கும்பிடும் போது காசு கொடுப்பது வழக்கம், அதுவும் வருடபிறப்புக்கு கண்டிப்பாய் உண்டு.
      கேரளத்தில் "கை நீட்டம்" என்பார்கள். எங்கள் வீடுகளிலும் அப்படியே சொல்வோம்.

      உங்கள் கருத்துக்களுக்கு நன்றி ஸ்ரீராம்.

      நீக்கு
  4. நிறைய தகவல்களோடு பதிவு சிறப்பு. இனிய புத்தாண்டு வாழ்த்துகள். என் கணவருக்கு மிகவும் பிடித்த பண்டிகை.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வணக்கம் பானுமதி வெங்கடேஷ்வரன், வாழ்க வளமுடன்
      உங்கள் புத்தாண்டு வாழ்த்துக்களுக்கு நன்றி.
      உங்கள் கணவருக்கு பிடித்த பண்டிகையா? மகிழ்ச்சி. குழந்தை மனம் என்று நினைக்கிறேன்.
      அம்மா சின்ன குழந்தையாக இருக்கும் போது கண்களை மூடி அழைத்து சென்று கனிகளை காணவைப்பார். குழந்தைகளுக்கு பிடித்த பண்டிகை. கையில் காசு கிடைக்கும்நினைத்தை வாங்க சேர்த்து வைப்போம்.

      உங்கள் கருத்துக்கு நன்றி .

      நீக்கு
  5. பஞ்சபூதங்களுக்கான மூலிகைகளைச் சொல்லி அவற்றின் தாத்பரியங்களையும் விளக்கியுள்ளது வெகு சிறப்பு...

    ஒவ்வொன்றிலும் மகத்துவத்தைக் கண்டு அதை சிறப்பு செய்தனர் நம் முன்னோர்கள்...

    பாரம்பரியமாக வந்த அதெல்லாம் நமது கண் முன்னே அலட்சியம் செய்யப்பட்டன....

    நாம் அதிர்ஷ்டசாலிகள்...

    நம் கண் முன்னேயே அவற்றைத் தேடிக் கொண்டு ஓடுகின்றது இன்றைய சமுதாயம்...

    இனிமேலாவது கலாச்சாரத்துடன் வாழட்டும் மக்கள்....

    வாழ்க வையகம்.. வாழ்க வளமுடன்..

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வணக்கம் சகோ துரைசெல்வராஜூ, வாழ்க வளமுடன்

      //ஒவ்வொன்றிலும் மகத்துவத்தைக் கண்டு அதை சிறப்பு செய்தனர் நம் முன்னோர்கள்...//

      ஆமாம்.

      //நம் கண் முன்னேயே அவற்றைத் தேடிக் கொண்டு ஓடுகின்றது இன்றைய சமுதாயம்...//

      அவற்றின் முக்கியத்தை இப்போது உணர்ந்து கொண்டார்கள்.

      அதுவும் இந்த தொற்று படுத்தும் பாட்டில் மக்கள் நாட்டு மருத்துவ குறிப்புகளை கொடுத்துக் கொண்டே இருக்கிறார்கள். முக்கியமாக வேப்பிலை வைத்தியம் அதிகமாக பேசபடுகிறது. வேப்பிலை, மஞ்சள் , உப்பு கிருமி நாசினியாக இருப்பதை உணர்ந்து கொண்டார்கள்.
      முன்பு அம்மா வாரா வாரம் வேப்பிலை உப்பு, பச்சை மஞ்சள் அரைத்த உருண்டை காலை கொடுப்பார்கள். அதை விழுங்க அத்தனை அடம் செய்வோம். "கண்ணைமூடி கொண்டு விழுங்கு" என்ற அதட்டல் அம்மாவிடமிருந்து வந்தவுடன் சத்தம் காட்டாமல் விழுங்கி விடுவோம்.

      அதை தான் இப்போது சாப்பிட சொல்கிறார்கள்.

      நல்லது நடக்கட்டும். நடத்தால் எல்லோருக்கும் நல்லதுதானே!
      உங்கள் கருத்துக்கு நன்றி.

      வாழ்க வையகம், வாழ்க வளமுடன்.

      நீக்கு
  6. மிக சிறப்பான நிறைய தகவல்கள் மா ...


    தங்களுக்கும் இனிய தமிழ் புத்தாண்டு வாழ்த்துக்கள் ...


    எங்கும் நலம் பெருகட்டும் ...

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வணக்கம் அனு பிரேம், வாழ்க வளமுடன்
      உங்கள் கருத்துக்கும் வாழ்த்துக்களுக்கும் நன்றி அனு.

      நீக்கு
  7. இந்த ஆண்டு பத்தாண்டு மிக எளிமையாக முடிந்துவிட்டது. கொரோனாவாலோ என்னவோ இரவில் வேறு பிறந்திருக்கிறது. என்றாலும் தங்களுக்கு இனிய சித்திரைத் திருநாள் நல் வாழ்த்துகள்!

    குறிச் சொற்களை வழங்கும் போது எமது வலைத் திரட்டியின் மெனுவில் வழங்கப்பட்டுள்ள பிரிவுகளில் பொருத்தமானதை தங்கள் பதிவகளில் இணைத்துக் கொள்ளுங்கள். அப்போது பதிவை உரிய பிரிவுகளில் தன்னியக்கமாக இணைத்துவிடலாம்.

    தமிழ்மணத்துக்கு மாற்றாக வலைத்திரட்டியை உருவாக்கும் புதிய முயற்சி. உருவாகியது புதிய இணையத்தளம்: வலை ஓலை . இதேநேரம் நமது, வலை ஓலை இணையத்தளத்தில் பரீட்சார்த்தமாக 27 வலைத்தளங்கள் இணைக்கப்பட்டுள்ளன. அத்துடன், அனைத்து வலைத்தளங்களையும் இணைக்கவும் நடவடிக்கை எடுத்துள்ளோம். உங்கள் மேலான ஆதரவை வழங்க கேட்டுக் கொள்கிறேன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வணக்கம் சிகரம் பாரதி, வாழ்க வளமுடன்
      எளிமைதான் அதிலும் இறைவனின் கருணைபுரிவான, கருணை புரிந்து இருக்கிறார் என்று நினைத்து நிறைவு பெறவேண்டி இருக்கிறது.
      உங்கள் கருத்துக்கும் வாழ்த்துக்களுக்கும் நன்றி.

      நீக்கு
  8. தமிழ்புதுவருட வாழ்த்துக்கள் அக்கா.
    எத்தனை அறியாத விடயங்கள்.வாசித்து அறிந்துகொண்டேன். எனக்கு ஊரில் வருஷபிறப்பு கொண்டாடியது எப்பவும் வரும். மருத்து நீர் என சொல்லப்படும் பல மூலிகை கொண்டு தயாரிக்கப்படும் நீரால் தலைக்கு ஊற்றி,பின் தலை முழுகி,புத்தாடை அணிந்து கோவில் சென்று எல்லாரினதும் வாழ்த்தினை பெறுவோம். இங்கு கஷ்டம். இளைய சமுதாயத்துக்கு தெரியுமோ தெரியாது
    அதுவும் இவ்வருடம் எல்லருக்குமே மனதில் குறையும்,கவலையும்.
    இனியாவது துன்பங்கள் நீங்கி கஷ்டங்கள் மறைந்து நல்ல காலம் பிறக்கட்டும். எனது இன்றைய பிரார்த்தனையே இதுதான்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வணக்கம் பிரியசகி, வாழ்க வளமுடன்
      //மருத்து நீர் என சொல்லப்படும் பல மூலிகை கொண்டு தயாரிக்கப்படும் நீரால் தலைக்கு ஊற்றி,பின் தலை முழுகி,புத்தாடை அணிந்து கோவில் சென்று எல்லாரினதும் வாழ்த்தினை பெறுவோம். //

      மிக அருமையான தகவல். நீங்கள் சொல்லி தரனும் அவர்களுக்கு ஏற்பதும் ஏற்காமல் இருப்பதும் அப்புறம்.

      நீங்கள் சொல்வது போல் மக்கள் நிறைய கஷ்டங்களுக்கு ஆளாகி இருக்கிறார்கள். அவர்கள் கஷ்டங்கள் நீங்க்கி கவலை மறைந்து மகிழ்ச்சி பொங்க வேண்டும்.
      இறைவன் அருள்வான் என்று நம்புவோம், பிரார்த்தனை செய்வோம் அம்மு.
      உங்கள் கருத்துக்கு நன்றி.

      நீக்கு
  9. ஆஹா புத்தாண்டுப் படங்களைப் பார்க்கையில், ஆருக்கோ சீர் வரிசை கொடுப்பதைப்போல அழகாக இருக்குது கோமதி அக்கா.. இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள்.. நாங்களும் ஊரில் எப்பவும் புது உடுப்புப் போடுவோம், பின்பு இங்கு பிள்ளைகளுக்குப் போட்டுக்கொண்டு வந்தோம், இப்போ புது உடுப்பென்றில்லை, ஆனா மற்றும்படி அனைத்தும் செய்து கும்பிட்டு கை விஷேடம் குடுப்போம்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வணக்கம் அதிரா, வாழ்க வளமுடன்

      //படங்களைப் பார்க்கையில், ஆருக்கோ சீர் வரிசை கொடுப்பதைப்போல அழகாக இருக்குது கோமதி அக்கா.//

      இறைவனும், இயற்கையும் அள்ளிக் கொடுத்தவை. அவர்களுக்கு நீங்கள் சொல்வது போல் அதை காணிக்கையாக்கி(சீர் வைத்து) நம் நன்றியை தெரிவிக்கிறோம்.
      எப்போதாவது எடுத்த புது துணியை வைத்து இருப்பேன் வருட பிறப்புக்கு என்று.
      கை விஷேடம் அருமை.

      நீக்கு
  10. அவை பிளாஸ்ரிக்கில் விதம் விதமான கோல வடிவங்கள்தானே? அழகாக இருக்கு. மா, பலா மரங்கள் பார்க்க ஆசையாக இருக்குது. பாருங்கோ.. இந்த கோடையில்தான் எங்களுக்கும் தமிழ்க் கடைக்கு நல்ல நல்ல கீரை, பலா எல்லாம் வரும்.. ஆனா இப்போ ஒன்றுமில்லை என்றாகிவிட்டதே.. இனி நம் நாட்டு காய் கனிகளை எப்போது காண்போமோ தெரியவில்லையே.....:(

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. //அவை பிளாஸ்ரிக்கில் விதம் விதமான கோல வடிவங்கள்தானே? //

      ஆமாம் அதிரா, மருமகளின் அம்மா நவராத்திரி கொலுவுக்கு வாங்கி தந்தது.


      //இந்த கோடையில்தான் எங்களுக்கும் தமிழ்க் கடைக்கு நல்ல நல்ல கீரை, பலா எல்லாம் வரும்.. ஆனா இப்போ ஒன்றுமில்லை என்றாகிவிட்டதே.. இனி நம் நாட்டு காய் கனிகளை எப்போது காண்போமோ தெரியவில்லையே.....:(//
      நிலை மாறும் நம் நாட்டு காய்கனிகள் கிடைக்க வாழ்த்துக்கள்.



      நீக்கு
  11. வேப்பம்பூ ஆஹா, நான் ஊரில் வேப்பம் பழம் பிடுங்கிச் சாப்பிடுவேன், நன்கு பழுத்த மஞ்சள்ப்பழம் இனிக்கும்.. எனக்கு இப்படியான சுவை எல்லாம் பிடிக்குமாக்கும்.. அதிரா எப்பவும் ஒரு வித்தியாசமாகவே இருப்பேன் ஹா ஹா ஹா.

    வேப்பம் பூவைக் காயவைத்து, நிறைய வடகமும், மற்றும் வெறும் பூக் கேட்டிருந்தேன், மாமி மாமா அனுப்பியிருந்தார்கள். நான் வேப்பம்பூவை, ரசம் செய்யும்போது ஒரு தேக்கரண்டி சேர்ப்பேன், கைப்பு தெரியாது, எங்கள் வீட்டில் ரசம் எனில் நன்கு குடிப்பார்கள்.

    ஆனால் வடகம் பொரித்தால், மல்லுக்கட்டித்தான் சாப்பிட வைக்க வேண்டி இருக்கும். நான் வடகம் எனில் சும்மாவே சாப்பிடுவேன்[வேப்பம்பூவடகம்]

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. //வேப்பம்பூ ஆஹா, நான் ஊரில் வேப்பம் பழம் பிடுங்கிச் சாப்பிடுவேன், நன்கு பழுத்த மஞ்சள்ப்பழம் இனிக்கும்.. எனக்கு இப்படியான சுவை எல்லாம் பிடிக்குமாக்கும்.. அதிரா எப்பவும் ஒரு வித்தியாசமாகவே இருப்பேன் ஹா ஹா ஹா//

      கிள்ளை மொழி பேசும் பசுங்கிளி நீங்கள்.

      வேப்பம் பழம் பிடிக்காமல் இருக்குமா. கிளிக்கு மிகவும் பிடித்த பழம்.

      வேப்பம் பூ காயவைத்து எடுத்து வைத்து இருக்கிறேன் நானும்.

      வேப்பம்பூவடகம் செய்ய வேண்டும்.

      நீக்கு
  12. பஞ்சபூத மூலிகை விளக்கம் மிக அருமை.. என்னிடம் ஊரில் இருந்து வந்த காய்ந்த மாவிலை, வேப்பம் இலை, வேப்பம் விதைகள் என இருக்குது.. சாம்பிராணியில் சேர்த்து சிலசமயம் போடுவேன்..

    மீண்டும் புத்தாண்டு வாழ்த்துக்கள் கோமதி அக்கா... புது வருடத்தில் அனைத்தும் நன்றே நடந்தேறட்டும்.. வாழ்க வளமுடன்.._()_

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. //பஞ்சபூத மூலிகை விளக்கம் மிக அருமை.. என்னிடம் ஊரில் இருந்து வந்த காய்ந்த மாவிலை, வேப்பம் இலை, வேப்பம் விதைகள் என இருக்குது.. சாம்பிராணியில் சேர்த்து சிலசமயம் போடுவேன்..//

      அருமை.
      வேப்பிலை போடுவேன். இப்போது மாவிலை காய வைத்து எடுத்து வைத்து இருக்கிறேன். போட வேண்டும்.

      பதிவு பிடித்து இருப்பது மகிழ்ச்சி.
      கருத்துக்களுக்கும், வாழ்த்துக்களுக்கும் நன்றி அதிரா.

      நீக்கு
  13. அருமையீன தகவல்களுடன் கூடிய தமிழ் புத்தாண்டு இடுகை. பாராட்டுகள்.

    உங்களுக்கும் சாருக்கும் மற்றும் அனைவருக்கும் தமிழ் புத்தாண்டு வாழ்த்துகள்.

    இந்த முறை, மாவடு, பலா போன்றவற்றை மிஸ் செய்கிறேன். ஜூன் வந்துவிட்டால் பலாவின் சுவை குன்றிப்போகும். படங்களில் கண்டது மிக்க மகிழ்ச்சியாக உள்ளது. ஏப்ரல் மே மாதங்களில் மாம்பழ வரத்து இங்கு அதிகமாக இருக்கும். பதாமி/அல்போன்ஸா மாம்பழம் பெரிய அளவில் கிலோ 50 ரூபாய்க்குக் கிடைக்கும். இந்த முறை எல்லாமே மிஸ் ஆகிவிடும் எனத் தோன்றுகிறது, நுங்கு உட்பட.

    இடுகை என்ன என்னவோ எண்ணங்களை ஏற்படுத்துகிறது.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வணக்கம் நெல்லைத்தமிழன், வாழ்க வளமுடன்.
      உங்கள் பாராட்டுக்களுக்கும் வாழ்த்துக்களுக்கும் நன்றி.

      // இந்த முறை எல்லாமே மிஸ் ஆகிவிடும் எனத் தோன்றுகிறது, நுங்கு உட்பட.//

      ஆஹா! நானும் நுங்கு படத்தை போடாமல் விட்டு விட்டேனே! புளியங்காய்(பழம்)
      நுங்கு படங்கள் இருக்கிறது அடுத்த பதிவில் போடுகிறேன்.
      மாயவரத்தில் நுங்கு சீஸனில் அடிக்கடி வாங்குவேன். இங்கு வந்து வெகு தூரம் போய் வாங்க வேண்டும். இப்போது வெளியில் போகவே முடியாது.

      மாவடுவும் இந்த முறை போடவில்லை நானும்.

      மாம்பழம் இயற்கை காய்கறி விற்பவர் நேற்று கொண்டு வந்தார் ஒரு பழம் 60 ரூபாஉ பெரிய பழம்.
      உங்கள் எண்ணங்களை பகிருங்கள்.
      உங்கள் கருத்துக்கு நன்றி நெல்லை.

      நீக்கு
    2. 1. அடையாரில், எங்கள் தெருவில், நுங்கு விற்பவர், ஒரு நாளைக்கு 3,000 ரூபாய்க்கு பிஸினெஸ் செய்வார். இப்படி ஒரு மாதம் வரை நுங்கு பிஸினெஸ் நடக்கும். இதுபோல சென்னையில் குறைந்தபட்சம் 200 பேர்களாவது பிஸினெஸ் செய்வார்கள் என்று வைத்துக்கொண்டால், ஒரு நாளைக்கு 6 லட்சம் வீதம், ஒரு மாதத்திற்கு கிட்டத்தட்ட 2 கோடி ரூபாய், அடித்தட்டு மக்களுக்கு நஷ்டம்தானே. (பனைமரத்தில் நுங்கு விளைந்து வீணாகத்தானே போயிருக்கும்). நான் இந்த மாதிரி அடித்தட்டு மக்களிடம் பேசுவேன். அவங்க சொல்வாங்க, பலாப்பழ சீசனில் அதை விற்போம், நுங்கு, மாம்பழம் என்று சீசனைப் பொறுத்து விதவிதமா விற்றால்தான் எங்க வயித்துப் பொழைப்பு என்பார்கள்.

      2. பலாப்பழம், சுளைகளை எடுத்து விற்பவர்கள். 400 ரூபாய்க்கு பலாப்பழம் வாங்கி 1000 ரூபாய்க்கு விற்பாங்க. இந்த பிஸினெஸ் 3 மாதம் வரை நடக்கும். இங்க பெங்களூர்ல மார்ச் ஆரம்பித்து ஜூலை வரை இந்த பிஸினெஸ் நடக்கும். ஊரடங்கு ஆரம்ப மூன்று நாட்களில், சுளை விற்க முடியாது என்பதற்காக முழு பலாப்பழம் (மீடியம் சைஸ் 80 ரூபாய்னு) விற்றுக்கொண்டிருந்தார்கள். ஆனால் நான் எதுக்கு வம்புன்னு வாங்கலை.

      3. இப்போ அடுத்தது மாம்பழ சீசன். இங்க 5-6 வாரங்களுக்கு கிலோ 50 ரூபாய்க்கும் அல்ஃபோன்ஸா பழம் பெரிய சைஸ்ல கிடைக்கும். அதை நம்பி ஏகப்பட்ட வியாபாரிகள்.

      இந்த மாதிரி எத்தனையோ அன்றைய வியாபாரம் பார்ப்பவர்கள் வாழ்க்கையில் இரு மாதங்களுக்கு கடுமையான பாதிப்பு.

      அவங்களை நினைக்கும்போது மனதுக்கு வருத்தமா இருக்கும். கஸ்டமர்களான நமக்கும் இந்த எல்லாவற்றையும் சுவைக்கும் வாய்ப்பு போயிடுது. அவங்களுக்கும் வியாபாரம் போயிடுது.

      தள்ளு வண்டிகள்ல காலை 10 மணிக்குள் 1/2 கிலோமீட்டரில் நிறைய காய்கறிகள் (குறைந்த அளவு) வருது. 20 ரூபாய்க்குப் பதில் கிலோ 30-40 ரூபாயாக ஆகிவிட்டது. அவங்களும் என்னதான் செய்வாங்க.

      நீக்கு
    3. நீங்கள் சொல்வது சரிதான். மாயவரத்தில் 4, 5 மூட்டைகளில் நுங்கு கொண்டுவருவார் காலை 10 மணிக்கு ஆரம்பிக்கும் வியாபாரம் மதியம் 3 மணி வரை வியாபாரம் செய்வார். இப்போது அவர்களால் முடியாது.

      சீஸன் வியாபாரம் செய்பவர்களுக்கும் கஷ்டம் தான்.

      மொத்த கடையில் வாங்கி சில்லறை வியாபாரம் செய்பவர்கள் எல்லோரும் மிகவும் பாதிக்க பட்டு இருக்கிறார்கள். பெரிய பலா பழம் வாங்கி சுளைகள் விற்றால் லாபம். பெரிய பழம் ஒன்று விற்றால் நஷ்டம் தான் அவர்களுக்கு வந்தவரை விற்பது கொடுமை.

      //இந்த மாதிரி எத்தனையோ அன்றைய வியாபாரம் பார்ப்பவர்கள் வாழ்க்கையில் இரு மாதங்களுக்கு கடுமையான பாதிப்பு.//

      இது போன்ற பண்டிகை சமயம் மட்டும் கடை போடுபவர்கள் அன்றைய வியாபாரம் மட்டும் பார்ப்பவர்களுக்கு கடுமையான பாதிப்பு தான்.

      இருபக்கமும் பாதிப்பு இருக்கிறது தான். விற்பவர்களுக்கும் கஷ்டம், நுகர்வோருக்கும் கஷ்டம் தான்.

      குறைந்த அளவில் கிடைத்தால் அதிக விலைக்குக்கு தானே விற்று ஆக வேண்டும்.

      இந்த நிலை இன்னும் மோசமாகதான் போக போகிறது போல இறைவன் அருளால் மட்டுமே இதை சரிசெய்ய முடியும்.

      மீண்டும் வந்து விரிவான கருத்தை தெரிவித்தமைக்கு(உங்கள் எண்ணங்களை பகிர்ந்து கொண்டதற்கு ) நன்றி.

      இன்று டெல்லியில் பால் கொட்டி கிடப்பதை (பால் வண்டி கவிழ்ந்து விட்டது) அதை ஒரு பக்கம் மனிதன் அள்ளுகிறார் பாத்திரத்தில் ஒரு பக்கம் நாய்கள் குடிக்கிறது இதைப் பார்க்கும் போது மனது மிகவும் வேதனை படுகிறது.

      நீக்கு
  14. அன்பின் இனிய புத்தாண்டு நல்வாழ்த்துகள்..

    புத்தொளி பிறக்கட்டும்..
    புவியெங்கும் வாழட்டும்....

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வணக்கம் சகோ துரை செல்வராஜூ வாழ்க வளமுடன்
      உங்கள் வாழ்த்துக்களுக்கு நன்றி.

      நீக்கு
  15. வணக்கம் சகோதரி

    தங்களுக்கும் தங்கள் குடும்பத்தினருக்கும் இனிய தமிழ் புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்.

    பதிவு நன்றாக உள்ளது. அறுசுவைகளின் விவரிப்பை அருமையாக சொல்லியுள்ளீர்கள். படங்களும் அழகாக உள்ளது. அம்மா வீட்டிலிருந்த வரை இன்றைய தினம் காலையில் எழுந்ததும், வேப்பம் கொழுந்துகள் உருண்டைகளை (அறுசுவையோடு) சாப்பிட்ட பின்னர்தான் காலை காஃபியே..

    இன்னமும் தங்கள் பதிவை விரிவாக படித்து விட்டு கொஞ்ச நேரம் கழித்து மறுபடியும் வருகிறேன்.

    நன்றியுடன்
    கமலா ஹரிஹரன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வணக்கம் கமலா, ஹரிஹரன், வாழ்க வளமுடன்

      வாழ்த்துக்களுக்கு நன்றி.

      பதிவு நன்றாக உள்ளது. அறுசுவைகளின் விவரிப்பை அருமையாக சொல்லியுள்ளீர்கள்.//

      நமக்கு எல்லாம் நம் அம்மா சொல்லி இருக்கிறார்கள் தெரியும். இப்போது உள்ள குழந்தைகளுக்கு மருத்துவர் சொன்னார் என்றால் கேட்பார்கள் அதுதான் மருத்துவர் சொன்னதை பகிர்ந்து கொண்டேன்.


      //இன்றைய தினம் காலையில் எழுந்ததும், வேப்பம் கொழுந்துகள் உருண்டைகளை (அறுசுவையோடு) சாப்பிட்ட பின்னர்தான் காலை காஃபியே.//

      நல்லது உடம்புக்கு. நானே வீட்டு வேலைகள் அதுதான் தாமதமாக பதில் தருகிறேன்.
      முடிந்த போது வாருங்கள்.
      உங்கள் கருத்துக்கு நன்றி.


      நீக்கு
  16. சிறப்பான தகவல்கள் மா...

    தங்களுக்கும் தங்களது குடும்பத்தினருக்கும் இனிய புத்தாண்டு நல்வாழ்த்துகள்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வணக்கம் வெங்கட், வாழ்க வளமுடன்

      உங்கள் கருத்துக்கும், வாழ்த்துக்களுக்கும் நன்றி.

      நீக்கு
  17. விஷுக்கனி குறித்த விடயங்கள் பிரமிக்க வைக்கிறது சகோ.

    தங்கள் குடும்பத்தினருக்கு தமிழ் புத்தாண்டு வாழ்த்துகள்.

    வாழ்க வையகம்

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வணக்கம் தேவகோட்டை ஜி, வாழ்க வளமுடன்

      //விஷுக்கனி குறித்த விடயங்கள் பிரமிக்க வைக்கிறது சகோ.//

      ஒவ்வொரு பண்டிகைக்கும் ஒவ்வொரு காரணம் உள்ளது சகோ.
      தங்கள் வாழ்த்துக்களுக்கும், கருத்துக்கும் நன்றி.

      வாழ்க வையகம்.

      நீக்கு
  18. அருமையான விளக்கங்கள்... வாழ்த்துகள் அம்மா...

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வணக்கம் திண்டுக்கல் தனபாலன், வாழ்க வளமுடன்
      உங்கள் கருத்துக்கும், வாழ்த்துக்களுக்கும் நன்றி.

      நீக்கு
  19. புத்தாண்டு வாழ்த்துகள் மற்றும் விஷு வாழ்த்துகள் கோமதிக்கா

    எங்கள் பிறந்த வீட்டிலும் விஷு மற்றும் கை நீட்டம் உண்டு. அதுக்காகவே நாங்கள் விஷுவை எதிர்பார்த்து இருப்பது வழக்கம்.

    விளக்கங்கள் எல்லாமே அருமை கோமதிக்கா..

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வணக்கம் கீதாரெங்கன், வாழ்க வளமுடன்

      //புத்தாண்டு வாழ்த்துகள் மற்றும் விஷு வாழ்த்துகள் கோமதிக்கா//
      நாம் எல்லாம் ஒரேஊர் அப்புறம் எப்படி இல்லாமல் போகும்?

      விளக்கங்களை ரசித்தமைக்கு நன்றி.



      நீக்கு
  20. ஒவ்வொன்றிற்கும் தனி தனியான விளக்கங்களும் பயன் பற்றிச் சொல்லியதும் மிகவும் சிறப்பு.

    எங்கள் பிறந்த வீட்டிலும் இப்படித்தான் அலங்காரம் செய்வோம். சாமி முன் கண்ணாடியும் வைத்து அதற்கு நகை பூ எல்லாம் வைத்து முக்கனிகள் காய்கள் கொன்றைப்பூ எல்லாம் வைத்து முதல் நாளே வைத்துவிட்டு மறுநாள்காலை எழுந்ததும் கண்ணைத் திறக்காமல் சாமி முன் நின்று கண் திறந்து பார்த்து விட்டுத்தான் மற்ற வேலைகள்.

    படம் எல்லாம் அழகு. பரவாயில்லை அக்கா மீள் பதிவுனா என்ன...இப்போது இருக்கும் சூழலில் இவ்வளவு செய்ய முடிகிறதே அதுவே பெரிய விஷயம் தானே அக்கா...விரைவில் இனி வரும் நாட்கள் எல்லாம் இவ்வுலகிற்கு நன்மை பிறந்திட நல்வழி காட்டிட வேண்டும்.

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. கொன்றை பூ மிகவும் விசேஷம் . கிடைக்கவில்லையே இங்கு.
      சாரின் தம்பி வீட்டில் கொன்றை மரம் இருக்கிறது அவர்கள் இன்று வைத்து இருக்கிறார்கள்.

      இரவு வைத்து விடுவோம். நாங்கள் எல்லாம் தூங்கிய பிறகுதான் அம்மா வைப்பார்கள்.
      காலை எழுந்து அம்மாவுடன் உதவியுடன் கண்ணைத்திறக்காமல் வந்து முக்கனிகளைப் பார்த்து வைத்து இருக்கும் அனியத்தையும் பார்த்து கண்ணாடியில் முகம் பார்த்து இறைவனை கும்பிட்டு இந்த வருடம் நன்றாக இருக்க வேண்டும், விளைச்சல், மழை எல்லாம் நன்றாக இருக்க வேண்டும் என்று வேண்டிக் கொள்ள சொல்வார்கள்.

      வீட்டுவேலைகள் காரணமாகவும், காலையில் பிள்ளைகள் பேரன் பேசுவதாலும் , மற்றும் உற்றார், உறவினர்கள், நண்பர்கள் பேசுவதாலும் இணையம் வர நேரம் ஆகிறது.
      புதிதாக் பதிவுகள் எழுத முடியவில்லை. பழைய பதிவுகள் நீங்கள் எல்லாம் படிக்காத பதிவு அதுதான் அதையே போட்டேன்.

      இனி வரும் நாட்கள் நல்லதாக எல்லோருக்கும் நன்மைதரும் நாளாக இருக்க அந்த இறைவன் அருள்புரிவார்.

      உங்கள் கருத்துக்களுக்கும் வாழ்த்துக்களுக்கும் பிரார்த்தனைகளுக்கும் நன்றி கீதா.

      நீக்கு
  21. மிக அருமையான பதிவு.
    இத்தனை செய்திகள் படிக்கப் படிக்க இனிமை. வேப்பிலை, மாவிலை
    ,துளசி,வாழைமரம் எல்லாமே விஷ முறிவுக்கும், சளி
    தொலைவதற்கும் உபயோகமாகும்.

    அழகிய படங்கள். உலகில் எல்லோரும்வளமுடன்
    வாழ இறைவன் அருளட்டும். இனிய தமிழ்ப் புத்தாண்டு வாழ்த்துகள் அம்மா.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வணக்கம் வல்லி அக்கா, வாழ்க வளமுடன்
      ஆமாம் அக்கா, நோய் நொடிகளை நீக்கும் மூலிகைகள் .
      உங்களுக்கும் உங்கள் அன்பு குடும்பத்தினருக்கும் புத்தாண்டு வாழ்த்துக்கள்.
      உங்கள் கருத்துக்கும் வாழ்த்துக்களுக்கும் பிரார்த்தனைக்கும் நன்றி.

      நீக்கு
  22. தங்கள் நல்லெண்ணங்களை வரவேற்கின்றேன்

    தங்களுக்கும் தங்கள் குடும்பத்தினருக்கும் இனிய தமிழ் சித்திரை புத்தாண்டு வாழ்த்துக்கள்

    பதிலளிநீக்கு
  23. வணக்கம்Yarlpavanan வாழ்க வளமுடன்
    உங்கள் வரவுக்கும், கருத்துக்கும் வாழ்த்துக்களுக்கும் நன்றி.

    பதிலளிநீக்கு
  24. சிறப்பான விளக்கங்களுடன் கூடிய பதிவுக்குப் பாராட்டுகள். ஒவ்வொன்றும் மனிதனுக்குத் தேவை என்பதை நிரூபித்துக் கொண்டே இருக்கிறது காலம். நாம் தான் அதை உணர்வதில்லை. எங்களுக்குக் கனி காணும் வழக்கம் இல்லை. கை நீட்டமும் இல்லை. ஆனால் புத்தாடைகள் உண்டு. விருந்து உண்டு. ஆமவடை, போளி இல்லாமல் புத்தாண்டு கொண்டாடியது இல்லை.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வணக்கம் கீதா சாம்பசிவம், வாழ்க வளமுடன்
      உங்கள் பாராட்டுக்களுக்கு நன்றி.
      ஆமாம் நீங்கள் சொல்வது சரிதான்,காலம் நிறைய உணர்த்திக் கொண்டு தான் இருக்கிறது. வடை ,பாயாசம், அவலில் செய்த இனிப்பு எல்லாம் உண்டு.
      கர்நாடகா, ஆந்திராவில் கண்டிப்பாய் போளி உண்டு யுகாதி பண்டிகைக்கு.
      நீங்களும் போளி செய்வது அறிந்து மகிழ்ச்சி.

      நீக்கு
  25. உங்களுக்கும் சாருக்கும் எங்கள் புத்தாண்டு வாழ்த்துகளை தாமதமாகத் தெரிவித்துக் கொள்கிறேன். கடைசி மைத்துனருக்கு நேற்றுத் தான் மாதாந்திரத் திதி என்பதால் புத்தாண்டு கொண்டாடவில்லை. சென்னையில் அவர் பெரிய தம்பி திதி காரியங்கள் செய்கிறார். நாளையோடு முடியும். அப்படி இப்படினு ஒரு மாதம் ஓடி விட்டது. இப்போ நினைத்தாலும் திக், திக் என்றிருக்கிறது எப்படித்தான் முடித்தோமோ என. இனி ஒவ்வொரு பூஜையாக ஏற்கெனவே வழக்கமாகச் செய்தவைகளைச் செய்ய ஆரம்பிக்கலாம். மற்றபடிப் பண்டிகைகள், குலதெய்வக் கோயில் தரிசனம் எல்லாம் இல்லை.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. உங்கள் வாழ்த்துக்களுக்கு நன்றி கீதா.

      //எங்கள் புத்தாண்டு வாழ்த்துகளை தாமதமாகத் தெரிவித்துக் கொள்கிறேன்.// தாமதம் பரவாயில்லை எப்போது என்றாலும் இந்த வருடம் நல்லதாக அமையட்டும் என்று வாழ்த்தலாம்.
      மைத்துனர் மாதாந்திரத் திதியை சென்னையில் நன்றாக கொடுக்க முடிந்ததா?

      ஆமாம், கடந்தவைகளை நினைக்க மலைப்பு தான் அதுவும் வெளியே போக கூடாது என்ற சமயத்தில் காரியங்களை சிறப்பாக செய்து விட்டீர்கள் அதை நினைத்து இறைவனுக்கு நன்றி சொல்லி ஆறுதல் அடைய வேண்டும்.

      ஒருவருடம், பண்டிகை, குலதெய்வ வழிபாடு கூடாது என்பார்கள்தான்.

      உங்கள் கருத்துக்கு நன்றி.

      நீக்கு
  26. ஊருக்குச் சென்று வந்த உணர்வு உண்டாகிறது. இனிய தமிழ்ப் புத்தாண்டு நல்வாழ்த்துகள் கோமதி மேடம்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வணக்கம் கீதமஞ்சரி, வாழ்க வளமுடன்
      உங்கள் கருத்துக்கும் வாழ்த்துகளுக்கும் நன்றி.

      நீக்கு
  27. நீண்ட நாட்கள் ஆயிற்று தங்கள் வலைப்பக்கம் வந்து. தமிழ்ப்புத்தாண்டு வாழ்த்துகள் விளக்கங்கள் அருமை

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வணக்கம் முரளிதரன், வாழ்க வளமுடன்
      நலமா? உங்கள் கருத்துக்கும், தமிழ்ப்புத்தாண்டு வாழ்த்துக்கும் நன்றி.

      நீக்கு
  28. இனிய தமிழ்ப் புத்தாண்டு வாழ்த்துகள்
    மகிழ்ச்சி பரவட்டும்

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வணக்கம் சகோ கரந்தை ஜெயக்குமார், வாழ்க வளமுடன்
      உங்கள் கருத்துக்கும் வாழ்த்துக்களுக்கும் நன்றி.

      நீக்கு
  29. சுவையான பகிர்வு. இனிய புத்தாண்டு வாழ்த்துகள்.

    பதிலளிநீக்கு
  30. வணக்கம் மாதேவி, வாழ்க வளமுடன்
    உங்கள் கருத்துக்கும் வாழ்த்துக்களுக்கும் நன்றி.

    பதிலளிநீக்கு