ஞாயிறு, 19 ஏப்ரல், 2020

வீட்டுக்கு வந்த பெண்குயில்

 மதியம் வீட்டுவேலைகளை முடித்து சற்று ஓய்வாக சோபாவில் படுத்துக் கொண்டு முரசு  தொலைக்காட்சியில்  'துணைவன்' படம் பார்த்துக்கொண்டு இருந்தேன் . உடல் நலம் இல்லாமல் குழந்தையை எடுத்துக் கொண்டு குமரன் இருக்கும் ஊர்களில் எல்லாம் போய் உருக்கமாய் வேண்டிக்கொண்டு குழந்தையைக் குணப்படுத்தப் பாடிக் கொண்டு இருந்தார்கள்.

மதியம் 3.40  இருக்கும் திடீர் என்று ஒரு சத்தம்- இறக்கை 'பட பட' என்று அடிக்கும் சத்தம். (ஹாலில் இரண்டு ஃபேனில் ஒன்று ஓடிக்கொண்டு இருந்தது ஒன்று ஓடாமல் இருந்தது)  ஓடாத ஃபேனில் வந்து அமர்ந்தது ஒரு  பெண் குயில்.நான் படுத்திருந்தவள் எழுந்ததும் அது பயந்து பறந்து ஓடிக் கொண்டு இருந்த ஃபேனில் அடிபட்டு சோபாவில் விழுந்தது. பதறிப் போனேன் "முருகா "என்று வாய் அழைத்தது.



மதியம் ஓய்வு எடுத்துக் கொண்டு இருக்கும் என் கணவரை அழைத்து காட்டினேன். குயில் தலை தூக்காமல் படுத்து இருந்தது.   அவர்கள் கணினியில் ஆண்  குயில் கூவும் ஒலியை வைத்தார்கள் 

அதை ஆசுவாசப் படுத்த கொஞ்சம் தண்ணீர் வைத்தேன். அது அதை  குடிக்கவில்லை
சத்தமே கொடுக்காமல் வாயை மட்டும் திறந்து திறந்து மூடியது
வாயை திறந்தபோது வாயில் இருந்து சாதம் கீழே விழுந்தது. நான் வழக்கமாய் மதியம் வைத்த சாதத்தை வாயில் வைத்துக் கொண்டு தான்  வீட்டுக்குள் வந்து இருக்கிறது,  பசிக்கும் என்று சிறிய தட்டில் சாதம் வைத்தேன் அதற்கு வலியில் பயத்தில் சாப்பிடத் தோன்றவில்லை போலும் 
பக்கத்தில் போனால் பயந்து அங்கும் இங்கும் நகர்ந்தது.
கொஞ்சம் பறந்து என் மடிக் கணினியில் வந்து அமர்ந்தது
அதன் பின் திவானில் அமர்ந்து 'துணைவன்' படம் பார்க்க ஆரம்பித்து விட்டது
என் வாய் மட்டும் 'முருகா! அதைக் காப்பாற்று! அது நல்லபடியாகப் பறந்து போக வேண்டும்' என்று வேண்டிக்கொண்டு இருந்தது.

திடீர் என்று பறந்து பால்கனி வாசல் கதவில் இடித்துக்  கம்பியைப் பிடித்துக் கொண்டு சில நிமிடங்கள் இருந்தது. பால்கனி வாசல் கதவைத் திறந்தால் வெளியே பறந்து போய்விடும்  என்று மெதுவாக நடந்து கதவை திறக்கப் போனால்  உடனே அங்கிருந்து பக்கத்தில் உள்ள ஷோகேஸில் இடித்து ஊஞ்சல் அடியில் விழுந்தது.

அங்குதானே இருக்கிறது அதற்குள் கதவைத் திறந்து விடலாம் என்று திறந்தேன்




மீண்டும் பறந்து கம்பியை பிடித்துக் கொண்டு நின்றது
சிறிது நேரம் கழித்து வெளியே போனது
முன்பு சின்னக்குருவிக் குஞ்சு கூட்டிலிருந்து அவசரமாகப் பறந்து பால்கனியில் விழுந்தது. சகோ துரை செல்வராஜூ அவர்கள் பால்கனிக் கதவு, தாழ்ப்பாள், குருவியை வைத்து கவிதை எழுதினார்கள் அந்தப் பதிவு நினைவுக்கு வருதா?

அந்த குருவிக் குஞ்சு இருந்த இடத்தில் இதுவும் வெகு நேரம் இருந்தது அதன் பின்
செருப்புகள் வைக்கும் ஸ்டாண்டில் உள்ள செருப்பு டப்பாமேல் வெகு நேரம் அமர்ந்து இருந்தது. எங்கள் இரண்டு பேருக்கும் கவலை இருட்டி விட்டால் அதற்கு தன் இருப்பிடம் போக முடியுமா என்று

ஞாயிறு  மாலை ராகு காலத்தில் பைரவர் வழிபாடு செய்வேன்; விளக்கு ஏற்றி விட்டு அவசர அவசரமாக ஸ்லோகங்களைச் சொல்லிப் பூஜையை முடித்து வந்து பார்த்தால் அந்த செருப்பு டப்பா மேல் பறவை இல்லை. ஓ! பறந்து போய் விட்டதா   என்று பறக்கும்போது பார்க்கவில்லையே என்ற ஏமாற்றம் ஒரு பக்கம் -நிம்மதி ஒரு பக்கம் இருந்தது   என்ன மனதோ என்று சொல்லிக் கொண்டே திரும்பினால் எதிர்ப்பக்கம் கைப்பிடியில் அமர்ந்து என்னைப் பார்த்தது.  கைப்பிடிக் குழாய் வழுவழுப்பாக இருந்ததால்  குயில் வழுக்கி வழுக்கி கீழே விழப்பார்ப்பதும் பிடித்துக்கொள்வதுமாய் இருந்தது . சரி மெல்ல போ காலையில் என்று சொல்லி விட்டு உள்ளே வரப் போனேன் 'விர் 'என்று பறந்து விட்டது .   

முருகன் காப்பாற்றி விட்டார்.



கூப்பிட்ட குரலுக்கு யார் வந்தது குழந்தையின் வடிவிலே யார் வந்தது என்று பாடிக் கொண்டு இருந்தார் சுந்தராம்பாள்.

'நெஞ்சத் துணைவராக வருவான்' என்று பாடி முடித்தார்.

குழந்தையின் நோயைப் போக்கினார்  படத்தில் -என் வீட்டில் அடிபட்ட குயிலைப் பறக்க வைத்தார்.  உலகமக்கள் அனைவரையும் நலமோடு காக்க வேண்டும் கந்தக் கடவுள்.

கொரோனா காலத்தில் வீட்டை விட்டு எங்கும் போகாமல்  இருக்கிறோம், யாரும் வருவதும் இல்லை. யாரும் வரப் பயப்படும் காலத்தில் எங்கள் வீட்டுக்கு வந்து  எங்களைப் பார்க்க வந்த பெண் குயிலுக்கு அடி பட்டு விட்டதே என்ற கவலை இருந்தது. அது மறைந்து இப்போது மகிழ்ச்சி ஆனது மனது.

வாழ்க வையகம்  ! வாழ்க வையகம் ! வாழ்க வளமுடன்.
-------------------------------------------------------------------------------------------------------------------

70 கருத்துகள்:

  1. குயில் மின்விசிறியில் அடிபட்டுவிட்டது என்பதைப் படித்ததும் ரொம்பவும் வருத்தமாக இருந்தது. கடைசியில் ஒரு வழியாக அது நல்லபடியாக பறந்து சென்றது என்பது வரை படித்ததும் நிம்மதி.

    படங்களும் உங்கள் வர்ணனைகளுக்குப் பொருத்தமாக அமைந்துவிட்டது.

    ஆமாம் இது குயில்தானா? இறக்கை டிசைன் வித்தியாசமாக இருக்கிறதே.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வணக்கம் நெல்லைத்தமிழன், வாழ்க வளமுடன்
      குயில் நல்லபடியாக பறந்து சென்றது நிம்மதி தான்.
      இது குயில் தான் நெல்லைத்தமிழன், கூகுளில் பெண் குயிலைப் பாருங்கள். பெண்குயிலுக்கு அழகான உடை நேர்த்தியாக செய்யப்பட்டது போல் இருக்கும் அது இறக்கை மிக அழகாய் இருக்கும். நான் நிறைய பெண்குயில் படங்கள் போட்டு இருக்கிறேன் என் பதிவுகளில் நெல்லை.
      உங்கள் கருத்துக்கு நன்றி.

      நீக்கு
    2. நெல்லைத்தமிழரே, பெண்குயில் இப்படித்தான் இருக்கும். புட்டாப் போட்ட புடைவை கட்டி இருக்கு என்போம் நாங்கள். முடிந்தால் பறவைகளைக் கவனியுங்கள். வித்தியாசங்களும் புரியும். அவற்றைப் பற்றியும் புரிந்து கொள்ளலாம். எனக்கு முன்னர் அம்பத்தூரில் இருந்தவரை இதான் பொழுதுபோக்கு. இப்போது எப்போவானும் வந்து அமரும் தேன் சிட்டுக்கள், மைனாக்கள் தான். மற்றபடிப் பக்கத்தில் தோப்பு இருப்பதால் விதம்விதமான பறவைகளின் சப்தங்களைக் கேட்கலாம். அதில் ஒன்று கோகி, கோகி என்று கத்தும். ஆள்காட்டிக்குருவி என்பார்கள் அதை.

      நீக்கு
    3. எங்கள் பில்டிங் அருகிலேயே பருந்துகள், காக்கைகள், புறாக்கள் ஏராளம். எங்கள் பெட்ரூம் பால்கனியில், ஒரு பெரிய ஸ்டூல் வைத்து அதன் மீது தண்ணீர் வைத்தேன். ஒரு பறவையும் வரலை. எப்படி வரவைக்கிறது? அதுகளுக்கு தெரியலைனு நினைக்கிறேன்.

      60 மீட்டர் தள்ளி இன்னொரு பெரிய பில்டிங் வரப்போவதால் ரொம்ப ஆழமாக 300 மீட்டர் சுற்றளவுக்குத் தோண்டி வைத்திருக்கிறார்கள். அதில் ஒரு பெரிய குழியில் தண்ணீர் நிரம்பி இருந்தது. இரு நாட்கள் முன்பு ஏகப்பட்ட காக்கைகள் அங்கு வந்து ஒரு குளியல் போட்டன. அன்றுதான் வாட்சப்பில், காக்கைக்கூட்டத்தில் யாரேனும் இறந்தால் காக்கைகள் துக்கத்திற்குப் பின்பு ஒரு குளியல் போடும் என்று படித்தேன். கடந்த இரு நாட்களாக காக்கைக் கூட்டங்கள் குளியல் போடுவதைப் பார்க்கவில்லை.

      நீக்கு
    4. மதுரையில் முன்னால் இருந்த வீட்டில் பறவைகளுக்கு ஒரு நாளில் இரண்டு மூன்று தடவை தண்ணீர் வைத்து இருக்கிறேன். எல்லா பறவைகளும் வரும் அங்கும்.

      இந்த வீட்டுக்கு வந்த போது தண்ணீர் வைக்க வசதி இல்லை என்று வருந்தினேன். அப்புறம் ஸ்டூலில் தான் மண் பாத்திரத்தில் தண்ணீர் வைத்தேன். முதலில் வர பயந்து கொண்டு வரவில்லை. பால்கனி கதவை அடைத்து வைத்தேன், அப்புறம் குளியல் போட்டது, தண்ணீர் குடித்தது. பறவைகள் வரும்,நீங்கள் பறவைகள் வந்து தண்ணீர் குடிக்க வேண்டும் என்று நினைத்து கொள்ளுங்கள் வரும்.

      ஆனால் காகம் கண்டதை கொண்டு வந்து போட்டு கழுவி சாப்பிடும் நீங்கள் பொறுத்துக் கொள்ள வேண்டும்.

      அந்த மண்பாத்திரம் கழுவ தனியாக பிரஷ் வைத்து இருக்கிறேன். கையுறை போட்டுக் கொண்டு கழுவி சுத்தமாக வைக்க வேண்டும் தினம் கழுவி தண்ணீர் வைக்க வேண்டும்.

      இப்போது தண்ணீர் தேடி தவிக்கும் பறவைகள். பறவைகள் குளிக்கும் .காகம் சேர்ந்து குளிப்பது துக்கத்திற்கு என்று இப்போது தான் கேள்வி படுகிறேன். காகம் சேர்ந்து கரையும் கேட்டு இருக்கிறேன்.

      இப்போது ஜன்னலில் தண்ணிர் வைத்து இருக்கிறேன். தண்ணீர் காலி ஆகி இருக்கும் பார்க்க முடியாது அது குடிப்பதை.
      முன்பு வைத்த பால்கனியை செடிகளை பறவைகள் கொத்தி எடுத்து போகிறது(புள்ளிசில்லை குருவி)ஆதனால் வலை அடித்து இருக்கிறேன். இன்னொரு பால்கனியில் சாதம் மட்டும் வைக்கிறேன்.

      உங்கள் மீள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.

      நீக்கு
    5. முன்பு தண்ணீர் வைத்த பால்கனியில் வலை அட்டித்து இருப்பதால் இப்போது அங்கு தண்ணீர் வைக்க முடியாது. சாப்பிடும் தட்டில் ஒரு கிண்ணத்தில் தண்ணிர் வைத்தேன் அது உடகார்ந்து கொட்டி கவிழ்த்து விடுகிறது. கீழே யாராவது போய் கொண்டு இருக்கும் போது இப்படி பறவைகள் செய்தால் அவர்கள் மேல் பட்டு விட்டால் என்ன செய்வது என்று ஜன்னலில் வேறு பக்கம் வைக்கிறேன்.

      நீக்கு
  2. வணக்கம் சகோதரி

    தங்கள் பதிவு ஒரு இறைவன் துணையாக இருப்பான் என்ற அர்த்தத்தில், உள்ள படத்தை பார்த்தது மாதிரி இருந்தது. குயிலுக்காக நீங்கள் பட்ட பரிதவிப்புக்கு கந்தன் கருணை காட்டி விட்டான். சில சமயம் இப்படி கூப்பிட்ட குரலுக்கு ஓடிவந்து நம்மை மெய் சிலிர்க்கச் செய்து விடுவான்.

    இன்று நீங்கள் பட்ட கவலைக்கு நல்ல பலன் கிடைத்தது எங்களுக்கும் மகிழ்ச்சியை தருகிறது. அத்தனைப் பதற்றத்திலும் நீங்கள் பொறுமையாக படங்கள் எடுத்துள்ளீர்கள். அந்த பெண் குயில் படங்கள் பாவமாக இருந்தது. அந்த ஜீவனுக்கு வேண்டிய நீர், தந்து, உணவு கொடுத்து அதன் பட்ட அடிக்காக ஒரு தாயினும் மேலாக பரிதவித்து பார்த்துக் கொண்ட உங்களது நல்ல உள்ளத்திற்காக கடவுள் உங்களது எல்லா பிரத்தனைகளையும் செவிமடுத்து தீர்த்து வைப்பார். கவலை வேண்டாம். உங்களுக்கு எனது மனமார்ந்த பாராட்டுக்களுடன் நன்றிகளும் சகோதரி.

    நன்றியுடன்
    கமலா ஹரிஹரன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வணக்கம் கமலா ஹரிஹரன், வாழ்க வளமுடன்
      இறைவன் துணையாக இருப்பான் என்பது நம் வாழ்வில் நிறைய தருணங்களில் ஒவ்வொருவரும் உணர்ந்து இருப்பார்கள் இல்லையா?

      //கந்தன் கருணை காட்டி விட்டான். சில சமயம் இப்படி கூப்பிட்ட குரலுக்கு ஓடிவந்து நம்மை மெய் சிலிர்க்கச் செய்து விடுவான்.//

      அந்த படமும் இதை உணர்த்தி விட்டது கமலா.

      பக்கத்தில் போய் அதை தூக்கி அதற்கு ஏதாவது மருந்து தடவ ஆசை ஆனால் அது நான் பக்கத்தில் போனால் எங்காவது போய் முட்டிக் கொள்கிறது, இனி பக்கத்தில் போக வேண்டாம் என்று அதன் அசைவுகளை மட்டும் கூர்ந்து கவனித்துக் கொண்டு இருந்தேன்.
      அதன் அசைவுகளை படம் எடுக்கும் போதும் மனம் இறைவனை வேண்டிக் கொண்டே இருந்தது.

      இறைவன் எப்போதும் கை கொடுக்க வேண்டும் அதுதான் எல்லோர் பிரார்த்தனையும்
      கமலா. உங்கள் அன்பான கருத்துக்கும் பிராத்தனைகளுக்கும் நன்றி.




      நீக்கு
  3. படபடக்கும் மனதுடனே வாசித்தேன். உங்கள் பயம் எனக்கும் தொற்றிக்கொண்டது. எவ்வித கஷ்டமில்லாமல் பறந்து போனது மனதுக்கு நிம்மதி. உங்கள் பயம் ஒவ்வொருவரிகளிலும் தெரிகிறது அக்கா.சோபாவில் இருக்க அதன் கலரும்,சோபாகலரும் பொருந்துகிறது. ஆனாலும் நீங்கள் படங்களை எடுக்க தவறவில்லை. பயத்துடன் இருக்கும் குயிலை பார்க்க பாவமா இருக்கு. நல்லகாலம் அடிபடவில்லை போல. கணனியில் அழகாக இருக்கிறது. திரைபடத்தையும் அழகாக படம் பிடித்து இருக்கிறீங்க. அட..குட்டி ஊஞ்சல் கூட இருக்கே.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வணக்கம் பிரியசகி அம்மு, வாழ்க வளமுடன்
      அடிப்பட்டதும் சிறிது நேரம் அந்த பறவை தலை தூக்காமல் இருந்தது மனதுக்கு வேதனை அளித்தது. செல்லில் படம் எடுத்து வைத்துக் கொண்டு என் குழந்தைகளுக்கு காட்ட என்று மனம் இருந்தது.

      இறைவன் அதற்கு அது போன்ற பலத்தை கொடுத்து இருக்கிறார் போலும் இறக்கை அடிபட்டால் பறக்க முடியாது அதற்கு, உடம்பில் தான் அடிபட்டு இருக்கும் போல.

      பெரிய ஊஞ்சல் தான் அம்மு , அதன் பாகங்களை நிறைய கழற்றி வைத்து விட்டோம் கூடாரம் எல்லாம் உண்டு.

      உங்கள் கருத்துக்கு நன்றி.

      நீக்கு
  4. பதிவு முழுவதும் பதற்றமே....

    பாவம் அந்தக் குயில் பேடு...
    முருகனருளால் தப்பிப் பிழைத்தது..

    முருகா.. முருகா...

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வணக்கம் சகோ துரை செல்வராஜூ, வாழ்க வளமுடன்
      அதற்கு வலித்து இருக்கும் பாவம் தான் அந்தக் குயில்.
      முருகனருளால் தப்பிப் பிழைத்தது என்று நம்புகிறேன்.
      அதற்கு ஆயுசு கெட்டி போல !

      நீக்கு
  5. அதுதானே...

    நம்மைப் பார்க்க என்று
    நம் வீட்டுக்கு வந்த ஒரு உயிர்
    நம் கண் எதிரே துன்பப்படுவதோ!...

    துயர் கெடுத்தான் முருகன்..
    நலங் கொடுத்தான் முருகன்..

    சில சத்தியங்கள் நம் கண் முன்னே
    அரங்கேறிக் கொண்டேயிருக்கின்றன...

    நலம் வாழ்க... நலம் வாழ்க...

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நீங்கள் மிக அழகாய் சொல்லி விட்டீர்கள் கவிதையாக.
      உண்மைதான், துயர் கெடுத்தான் முருகன்
      நலம் கொடுத்தான்.

      நீங்கள் சொல்வது போல் கண்முன்னே காட்சியாக நடைபெறும் போது நம்பிக்கை
      மேலும் வளர்கிறது.

      நலம் வாழ்க

      நீக்கு
  6. துணைவன் படத்தில் இடம் பெற்ற
    மருத மலையானே.... என்ற பாடலை இன்றைய சமுதாயம் எப்படி எடுத்துக் கொள்ளுமோ தெரியாது...

    ஆனால் அன்றைய கால கட்டத்தில்
    திரையரங்குகளில் கண்ணீரும் கம்பலையுமாக இந்தக் காட்சிகளில் மக்கள் உருகினார்கள்...

    அதிலும் ஸ்ரீமதி KBS அவர்கள் கணீரென
    கூப்பிட்ட குரலுக்கு யார் வந்தது.. குழந்தையின் வடிவிலே யார் வந்தது.. நீறிட்ட நெற்றியுடன் யார் வந்தது... என் நெஞ்சம் துடிக்குதே யார் வந்தது..

    என்று பாடும் போது கண்ணீர் சிந்தாத மக்களே கிடையாது...

    வருவான் வடிவேலன்..
    வந்தே தீர்வான் வடிவேலன்...

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. //அன்றைய கால கட்டத்தில்
      திரையரங்குகளில் கண்ணீரும் கம்பலையுமாக இந்தக் காட்சிகளில் மக்கள் உருகினார்கள்..//

      ஆமாம், நீங்கள் சொன்னது உண்மை. குழந்தை குண்மாக வேண்டும் என்று வேண்டிக் கொண்டோர் உண்டு.

      //ஸ்ரீமதி KBS அவர்கள் கணீரென
      கூப்பிட்ட குரலுக்கு யார் வந்தது.. குழந்தையின் வடிவிலே யார் வந்தது.. நீறிட்ட நெற்றியுடன் யார் வந்தது... என் நெஞ்சம் துடிக்குதே யார் வந்தது..

      என்று பாடும் போது கண்ணீர் சிந்தாத மக்களே கிடையாது...//

      நானும் அந்த பாடலை பார்க்கவே நேற்று படம் பார்த்தேன், ஸ்ரீதேவி முருகனாக வருவார், அவர் மழலைப் பேச்சு மனதை மயக்கும்.

      வருவான் வடிவேலன்..
      வந்தே தீர்வான் வடிவேலன்...//

      வரவேண்டும் அவன் வேலால் வினைகளை தீர்க்க வேண்டும்.
      உங்கள் அன்பான கருத்துக்களுக்கு நன்றி நன்றி நன்றி.

      நீக்கு
  7. பயந்த குயில் பற்றி மோதி விழுந்ததில் பதிவொன்று கிடைத்தது. பாவம் எப்படியோ சமாளித்துப் பறந்து விட்டது. பத்திரமாய் இருப்பிடம் சேர்ந்திருக்கும் என்று நம்புவோம். முருகள் காப்பாற்றி இருப்பான்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வணக்கம் ஸ்ரீராம், வாழ்க வளமுடன்
      பதிவு எழுதி நிறைய டிரப்பிட்டில் இருக்கிறது. படங்களை சேர்த்து போட வேண்டும். நேரம் இல்லை, விடுமுறையில் பேரன் இருப்பதால் காலை வந்து விடுகிறான் ஸ்கைப்பில் அவனுடன் காலை 11 மணி வரை சரியாகி விடுகிறது. அப்புறம் உறவினர்கள், நண்பர்கள் போனில் நலம் விசாரிப்பு ,வீட்டு வேலைகள் என்று காலை பொழுது சரியாகி விடுகிறது. . இது அவசர பதிவு குழந்தைகளுக்கு காட்ட எடுத்த படம் , அப்புறம் வலைக்குடும்பத்துடன் பகிர என்று போட்டது.

      பத்திரமாய் இருப்பிடம் சேர்ந்து விட்டது, காலை உணவு எடுக்க வந்தது அதுவாய் தான் இருக்கும் என்று நம்புகிறேன்.

      உங்கள் கருத்துக்கு நன்றி.

      நீக்கு
    2. //பத்திரமாய் இருப்பிடம் சேர்ந்திருக்கும் என்று நம்புவோம். முருகள் காப்பாற்றி இருப்பான்.//

      முருகன் காப்பாற்றி இருப்பான் என்று நம்புவோம். நம்பிக்கைத்தான் வாழ்க்கை.

      நீக்கு
    3. ஸ்ரீராம், மகன் ஊரில் அவன் வீட்டில் கூடு கட்டி இருக்கும் பறவைகளைப்பற்றி போட நினைத்து இருந்தேன். அடை காத்துக் கொண்டு இருந்த ஒரு பறவை இரண்டு நாளாக வரவில்லையாம், ஏதாவது அதற்கு இடையூறு ஏற்பட்டு இருக்குமோ முட்டைகள் எப்படி பொறியும் என்று கூகுளில் தகவல் சேகரித்து கொண்டு இருக்கிறான், அதைபற்றி அவன் சொன்ன தகவல்களை போடலாம் என்று நினைத்தேன். இறை எண்ணம் குயிலை போட வைத்து விட்டது.

      நீக்கு
    4. தாயைப் போல பிள்ளை! பாராட்டுகள்.

      நீக்கு
    5. உங்கள் பாராட்டுக்களுக்கு நன்றி ஸ்ரீராம்.

      நீக்கு
  8. கடைசி வரை பதற்றமாகவே இருந்தது. நல்லபடியாகப் பறந்து போனதே! எங்களுக்கும் இப்படிச் சில அனுபவங்கள் முன்னர் ஏற்பட்டிருக்கின்றன. ஒரு சமயம் சிட்டுக்குருவி, ஒரு சமயம் கிளிக் குஞ்சு. கிளிக்குஞ்சை 3 நாட்கள் வைத்துப் பாதுகாத்தோம். பின்னர் தானாகவே பறந்துவிட்டது.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வணக்கம் கீதாசம்பசிவம், வாழ்க வளமுடன்
      ஆமாம் ,நல்லபடியாக பறந்து போனது.
      எங்களுக்கும் நிறைய அனுபவங்கள் இருக்கிறது கீதா, கிளி, தேன்சிட்டு, அணில் பிள்ளை, குருவி என்று.

      தென்னைமர பொந்திலிருந்து விழுந்த கிளியை பாதுகாத்து பறக்க வைத்தோம். புதிதாக வாங்கிய வெங்காய கூடையில் வைத்து (முன்பு தொங்க வைப்பது போல் கூடை வரும்.) பாதுகாத்து வந்தோம் ஒரு நாள் சொல்லாமல் கொள்ளாமல் பறந்து போனது.
      வீட்டில் கூடு கட்டி இருந்த தேன் சிட்டு குஞ்சு விழுந்து விட்டது மீண்டும் கூட்டில் வைக்க முடியவில்லை வாய் சின்னதாக குடுவை போல் கொடி கயிர்றில் கூடு கட்டி இருந்தது.

      தேன் சிட்டுக்கு பிலிபஸ் டிரான்சிஸ்டர் கவரை கொடுத்து அதில் குடியிருக்க வைத்து தேன் கொடுத்து பறக்கும் வரை பாதுகாத்தோம்.

      அணிலை பாதுகாத்து அது துள்ளி குதித்து ஓடும் வரை பாதுகாத்தோம்.

      உங்கள் அனுபவங்களை பகிர்ந்து கொண்டதற்கும் பதிவைப்பற்றிய கருத்துக்கும் நன்றி.

      நீக்கு
  9. மனிதர்களை வாழைமரம் போல் வெட்டிச் சாய்க்கும் இந்த உலகில் ஓர் பறவைக்காக வருந்தும் உங்களைப் போன்றவர்களும் வாழ்கிறார்கள் இது இறைவன் வகுத்த முரண் அவனியில் அவனைப் புரிந்தோர் இல்லை வாழ்க வையகம்.

    இரண்டு தினம் முன்பு எனது வீட்டின் வாயிலில் உள்ள மின்கம்பத்தில் மயில் ஒன்ற் அமர்ந்து மின்சாரம் தாக்கி இறந்து விட்டது தெரு முழுவதும் இறகுகள்.

    எனக்கு வெளியில் வந்து காணவே மனம் வரவில்லை சிலர் அதை எடுத்துப்போய் புதைத்து விட்டனர்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வணக்கம் தேவகோட்டை ஜி, வாழ்க வளமுடன்
      மனித உயிர்களை வாழைமரம் போல் என்று நீங்கள் சொல்லும் போதே குலை நடுங்குகிறது.

      எல்லோரும் இறைவனின் திருவிளைடாலை புரிந்து கொள்ள முடியாது.
      முயற்சித்துக் கொண்டு தான் இருக்கிறோம் ஜி.


      புதுக்கோட்டையில் வனப்பகுதியில் மயில்களுக்கு உணவு கிடைக்காமல் ஊருக்குள் வந்து கஷ்டபடுகிறது என்று நல்ல உள்ளம் படைத்த ஒருவர் நிறைய கோதுமை, அரிசி போன்ற தானியங்களை சுமந்து சென்று காட்டு பகுதியில் போட்டு வருகிறார், காவலர் தடுத்தார்களாம், அவர்களிடம் அனுமதி பெற்று தொற்று காலத்திலும் கொண்டு போய் போட்டு வருகிறார்.

      உங்கள் பக்கமும் உணவு தேடி வந்தஇருக்கும் போல மயில் .

      //மின்கம்பத்தில் மயில் ஒன்ற் அமர்ந்து மின்சாரம் தாக்கி இறந்து விட்டது தெரு முழுவதும் இறகுகள்.//

      படிக்கவே கஷ்டமாய் இருக்கிறது. பார்த்தால் இன்னும் கஷ்டம்.
      புதைத்து விட்டது நல்லது.

      உங்கள் பகிர்வு மனதை சங்கடபடுத்தி விட்டது.

      உங்கள் கருத்துக்கும் நன்றி.


      நீக்கு
    2. இயல்பாகவே தேவகோட்டையில் மயில்கள் அதிகம்தான் சகோ அதுவும் எனது வீட்டின் பின்புற காலி இடத்தில் நிறைய உலாவும்.

      காரணம் இறந்த எனது தங்கை வனிதா அவைகளுக்கு உணவு வைத்துப் பழக்கி விட்டது.

      நீக்கு
    3. ஆமாம், அன்று மூன்று மயில்கள் உங்கள் காலி இடத்திற்கு வந்தது என்று சொன்னீர்களே!
      அதற்கு காரணம் உங்கள் தங்கையின் இளகிய மனம் தானா? நீங்களும் தொடர்ந்து அதை செய்து வாருங்கள் ஜி.

      தேவகோட்டையில் மயில்கள் அதிகம் தான், அங்கு வந்த போது பார்த்து இருக்கிறேன்.

      நீக்கு
  10. மிகவும் பதட்டத்துடனே படித்தேன்... முடிவில் நிம்மதி... முருகா...

    எவ்வளவு அழகாக உள்ளது அம்மா...

    மடிக் கணினியில் வந்து அமர்ந்து, உங்களின் பதிவுகளையும் வாசித்தது போல... மிகவும் ரசித்த படம்...

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வணக்கம் திண்டுக்கல் தனபாலன், வாழ்க வளமுடன்
      குயில் மடிக்கணினியில் வந்து அமர்ந்த படம் உங்களுக்கு பிடித்து இருப்பது மகிழ்ச்சி.
      இவ்வளவு அழகாய் கருத்து சொன்னதற்கும் நன்றி தனபாலன்.

      நீக்கு
  11. படத்தைப் பார்த்தால் குயில் மாதிரி இல்லையே என்றுதான் தோன்றுகிறது. ஆனால் நீங்கள் சொன்னால் நம்பாமல் இருக்க முடியுமா? சரி, எங்களின் திருப்திக்காக ஒரு ஆண் குயிலைப் பிடித்துவந்து அதன் படத்தையும் வெளியிட்டுவிடுங்களேன்?

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வணக்கம் இராய செல்லப்பா சார், வாழ்க வளமுடன்
      நலம் தானே சார்?
      குயில் தான் விக்கிபீடியா, கூகுள் சென்று பார்த்துக் கொள்ளலாம்.
      நான் ஆண் குயில் படம் போட்டு இருக்கிறேன் நிறைய . இப்போது மேலே கணினியில் ஆண் குயில் படம் போட்டு இருக்கிறேன் பாருங்கள்.
      உங்களுக்கு தெரியும் இருந்தாலும் இப்படி என்னிடம் கேட்கிறீர்கள்.
      உங்கள் வரவுக்கும், கருத்துக்கும் நன்றி.

      நீக்கு
  12. குயில் நலம் பெற்று பறந்து சென்றதில் மகிழ்ந்தேன்

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வணக்கம் சகோ கரந்தை ஜெயக்குமார், வாழ்க வளமுடன்

      உங்கள் கருத்துக்கு நன்றி.

      நீக்கு
  13. ஆஆஆ கோமதி அக்கா, ஃபானில் அடிபட்ட முதல் படம் பார்த்ததும் நெஞ்செல்லாம் பதறி மூச்சடைப்பதைப்போல இருந்தது எனக்கு, ஆனா பின்னர்தான் மனம் அமைதியானது.. அது கோமதி அக்கா வெளியே போகாததால், நலம் விசாரிக்க வீட்டுக்குள் வந்திருக்கிறது..

    அழகான குயிலக்கா:).. ஆனா நேற்றுக் கோமதி அக்கா, இந்தக் குயிலில் ஆண் ஜோடி எங்கட வீட்டுக்கு வந்திருந்தது தெரியுமோ? அதிராவைப் பார்க்க:)).. அந்தப் பிரிவைத்தாங்காமல்தான் பெண் குயில் ஃபானில் விழுந்து சூஊஊஊஊஊஊஉ சைட்டுப் பண்ண முயற்சித்திருக்கிறது கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்:))

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வணக்கம் கோமதி அக்கா, வாழ்க வளமுடன்
      னானும் அது கீழே விழுந்த போது பதறி போனேன். அப்புறம் மனம் தெளிந்து விட்டது.

      நான் பால்கனிக்கு மட்டும் தான் போய் கொண்டு இருக்கிறேன். என்னை காணவில்லை என்று நீங்கள் சொல்வது போல் வந்து விட்டது என்னைப்பார்க்க அதிரா.

      ஐயோ! அதிரா, உங்கள் கற்பனை !

      ஆண்குயிலை இராயசெல்லப்பா சார் பார்க்க வேண்டுமாம் , அதிராவைப்பார்க்க வந்த ஆண்குயிலை படம் எடுத்து போடுங்க.

      நீக்கு
    2. படம் பிடிச்சிருக்கிறேன் போடுறேன், ஆனா தூரமாக இருப்பதால காகக்குஞ்சுபோல இருக்குது ஹா ஹா ஹா..

      நீக்கு
    3. நான் எடுத்த ஆண்மயில் படங்கள் எல்லாம் இருக்கிறது.
      இராயசெல்லப்பா சார் கேட்டதற்கு சொன்னேன்.
      காகம் குஞ்சு உண்மைதான்.
      கொஞ்சம் காகம் போல தான் இருக்கும் காகத்தை விட சின்ன உருவம் இறக்கை பின்புறம் அதிகமாய் தோகை போல் நீண்டு இருக்கும்.
      மீண்டும் வந்து கருத்து சொன்னதற்கு நன்றி.

      நீக்கு
  14. வீட்டுக்குள் வந்த குயிலக்கா, உடனே திரும்பாமல், வீடெல்லாம் சுத்திப் பார்த்திட்டே புறப்பட்டிருக்கிறா.. ஏதோ சீரியல்களில் வரும் சம்பந்தி அம்மாவைப்போல ஹா ஹா ஹா:))..

    மாமாவுக்கு நல்ல ஐடியா டக்கென உதிச்சிருக்குதே, ஆண் குயில் கூவுவதை எடுத்துப் போட்டிருக்கிறார்ர்... எல்லாம் கோமதி அக்காவின் ட்ரெயினிங் தான் போலும் ஹா ஹா ஹா.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஆமாம் அதிரா, சம்பந்தி அம்மாவைப்போலத்தான் போலும் முதலில் சமையல் அறைக்கு தான் போய் இருக்கிறா.

      முதலில் அடுக்களைக்குள் போய் இருக்கா, அங்கு இருக்கும் ஜன்னல்வழியே போக பார்த்து ஜன்னலில் வைத்து இருக்கும் படங்களை எல்லாம் தள்ளி விட்டு இருக்கிறது. அப்புறம்தான் நடு அறைக்கு வந்து இருக்கிறா.

      நான் பக்கத்தில் போய் தூக்கவும் முடியலை ஒரு சத்தமும் போடாமல் இப்படி பார்த்துக் கொண்டு படுத்து இருக்கே என்று புலம்பினேன் அதனால் மாமாவுக்கு அந்த ஆண் குயில் சத்தம் கொடுக்க எண்ணம் வந்தது.

      மாமாவுக்கு நல்ல யோசனை வந்தது பாராட்டினேன் மாமாவை பெருமை தாங்கவில்லை மாமாவுக்கு.

      நீக்கு
  15. ஆனா இப்படி அடிபட்ட பறவைகளை, உடனே கதவைத் திறந்து வெளியே போக விட்டிடக்கூடாது கோமதி அக்கா, கொஞ்ச நேரம் வைத்திருந்து, நன்கு ஹீல் ஆன பின்பே அனுப்போணும், இல்லை எனில், அவசரமாகப் பறந்து எதிலாவது அடிபட்டுவிடவும் சான்ஸ் இருக்கு, அதைத் தெரிஞ்சுதான், கதவைத்திறந்தும் பறக்காமல், உங்கட வீட்டுக்குள்ளேயே ரெஸ்ட் எடுத்திருக்கிறா குயிலக்கா.. என்னா அறிவு ஹா ஹா.. அழகழகாக படங்கள் எடுத்திட்டீங்க...

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அதிரா, நாங்கள் வீட்டில் இருக்க செய்யலாம், அது முழித்தவுடன் பயந்து அங்கும் இங்கும் பறந்து அடிபடுவதைப்பார்க்க சகிக்காமல்தான் வெளியே திறந்து விட்டோம்.

      எழுந்து கொள்ளமுடியாமல் நம்மைபார்த்துக் கொண்டு பேசாமல் இருந்த பறவை கொஞ்சம் தெம்பு வந்ததும் அது வெளியே போக துடித்தது. மாமாவும் அதற்கு
      இப்படி அடிபடுவது எல்லாம் இயற்கை, இறைவன் அதற்கு சரி செய்து விடுவார் என்றார்கள். நானும் வெளியே என்றால் பால்கனியில் தான் செருப்பு டப்பாவில்தானே இருக்கிறது என்று விட்டேன்.


      நீங்கள் சொல்வது போல் வைத்து இருக்கலாம், முன்பு அடிபட்ட ஒரு குருவியை வைத்து இருந்தேன் இரண்டு நாள், அதற்கு இங்க் பில்லரில் தண்ணீர் பால் எல்லாம் கொடுத்தேன் இரண்டு நாளில் இறந்து விட்டது. அதை மண்ணில் புதைத்தேன் அழுது கொண்டு. பக்கத்து வீட்டு காரர் மறு நாள் பால் ஊற்றுங்கள் என்று சொல்லி கிண்டல் செய்தார்.

      அதிலிருந்து பார்த்து ரசிப்பதோடு சரி. அவைகளுக்கு பிரார்த்தனை செய்வேன்.

      நேற்று பறந்து போனது நல்ல ஆரோக்கியமாய்தான் இருந்தது . உடலில் பலமான அடி இருந்தால் அதனால் பறந்து இருக்க முடியாது.


      இருந்தாலும் வீட்டில் வைத்து இருக்கலாம் என்று மனது சொல்கிறது இப்போது.
      நலமாக இருக்க வேண்டும் என்று பிரார்த்த்னை செய்து கொள்வோம் அதிரா.



      நீக்கு
  16. பொதுவாக பறவைகளில் ஆண் தானே அழகாக இருக்கும், ஆனா குயிலில், பெண் தான் அழகுபோலும்.. மனிதரைப்ப்போல ஹா ஹா ஹா:))

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஆமாம் , பெண் குயில்தான் அழகு. ஆண்குயிலும் அழகுதான் கறுப்பு உடம்பு, சிவப்பு கண்கள் என்று.

      உங்கள் கருத்துக்களுக்கு நன்றி அதிரா.

      நீக்கு
  17. // பெண் குயிலுக்கு அடி பட்டு விட்டதே என்ற கவலை இருந்தது. அது மறைந்து இப்போது மகிழ்ச்சி ஆனது மனது.//

    இதை படித்த பின்பே முழு பதிவையும் வாசிச்சேன்க்கா .கடவுளுக்கு நன்றி .குயிலம்மா உங்க பார்வை பட்டதால் கூடவே இறையருளும் கிட்டி பிழைச்சிட்டா .

    என்னமோ தெரிலக்கா இப்போல்லாம் பாசிட்டிவ் செய்தி மட்டுமே மனது ஏற்கிறது .குறிப்பா இப்போதைய சூழலில் .

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வணக்கம் ஏஞ்சல், வாழ்க வளமுடன்

      நீங்கள் சொல்வது சரிதான் குயிலம்மாவுக்கு இறையருள் இருந்ததால் லேசான அடியால் பிழைத்து விட்டாள்.

      நீங்கள் சொல்வது போல் இப்போது உள்ள காலத்தில் பாசிடிவ் எண்ணங்கள், பாசிடிவ் செய்திகள் தான் நல்லது ஏஞ்சல். அதைதான் மனம் ஏற்கிறது.

      நீக்கு
  18. பெண் குயில் இந்த புள்ளி வைத்த நிறம்தான் .பிலிமத்ரோக் கோழி நிறம் போல் ஆண்குயில் கருப்பா ஷைன் செய்யும் ..ராபின் பறவைகளிலும் ஆண் பெண் வித்யாசம் உண்டு .

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. பெண் குயில் படங்கள் நிறைய போட்டு இருக்கிறேன் ஏஞ்சல். ஆண்குயில் , பெண் குயில் எல்லாம் வரும். அதை பறவைகள் பதிவுகள் போட்டு இருக்கிறேன்.
      ராபின் பறவைகளிலும் ஆண், பெண் பேதம் தெரியும்.

      நீக்கு
  19. இப்படி பறவை சட்டுன்னு வருவது நீர் தேடி அதனால் அடிபட்டு விழுந்தவுடன் ஹோல்ஸ் போட்ட கார்ட்போர்ட் பெட்டியில் மூடி வைங்க உள்ளே சிறிது தண்ணீர் வைத்தால் அது ரிலாக்ஸாகும் ..படபடப்பில் தான் அங்குமிங்கும் பறக்கும் .கொஞ்சம் அமைதியானதும் சரிநிலைக்கு திரும்ம்பும் 

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. உங்கள் யோசனைக்கு நன்றி ஏஞ்சல்.
      நமக்கு பட படப்பு அதிகம் ஆகிறது.
      அது நார்மல் ஆகியும் தண்ணீர், சாதம் எடுக்கவில்லை.

      நான் சாதம் வைத்து இருப்பதை சாப்பிட வரும் நான் பார்த்து விட்டால் விர் என்று பறந்து போய் விடும். எங்கள் குடியுருப்பு வளாகத்தில் உள்ள மரத்தில் தான் இருக்கு. காலை மூன்று, நாலுமணிக்கே பாட ஆரம்பித்துவிடும். எதிர்வீட்டில் வைக்கும் உணவை சாப்பிடுவதைதான் படம் எடுக்க முடியும்.
      உங்கள் கருத்துக்கு நன்றி ஏஞ்சல்.

      நீக்கு
  20. கோமதிக்கா முதல் வரிகளை வாசித்துப் படம் பார்த்ததும் ஹையோ குயிலக்காவுக்கு என்னாச்சு என்று பதற்றம். கடைசிவரை ஏதோ த்ரில்லர் படம் பார்ப்பது போல பதற்றம். பாத்தீங்களா நீங்கள் எல்லாம் பத்திரமா இருக்கீங்களானு பார்க்க சாதத்தைக் கூட வாயில் வைத்துக் கொண்டு உள்ளே வந்திருக்கு...பாவம் ஃபேனில் அடிபட்டு ..பாவம்

    அதான் அப்படித் தவித்திருக்கு

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வணக்கம் கீதா ரெங்கன், வாழ்க வளமுடன்
      ஆமாம் கீதா, எங்களை பத்திரமாய் இருக்கிறீர்களா என்று பார்க்க வந்த மாதிரியே இருக்கிறது.

      வந்த குயில் அடி பட்டதுதான் வருத்தம்.

      நீக்கு
  21. பாருங்க ஆண் குயில் சத்தம் கேட்டதும் ஒரு வேளை அதான் கணினியின் பக்கம் போய் பார்த்ததோ?

    அக்கா அடிபட்டால் அவற்றை கொஞ்ச நேரம் விட்டுவிட்டால் பயப்படாமல் ஆசுவாசப்படுத்திக்க் கொண்டு பறந்துவிடும். இல்லை என்றால் பயத்திலேயே முட்டி முட்டி விழும். பறக்கவும் முடியாமல்...

    எப்படியோ பாருங்க குருவி இருந்த இடத்தில் ரெஸ்ட் எடுத்து பறந்து போனாளே..

    துரை அண்ணாவின் கவிதை அவர் எழுதினார் நினைவிருக்கு..

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. மாமா டெஸ்ட் டாப்பில் போட்டார்கள் குயில் குரலை.

      இது என் மடிகணினி. எப்படியோ நமக்கு முதல் அனுபவம். முன்பு வீட்டுக்குள் குருவி போட்டோகளுக்கு பின் கூடு கட்டிய காலத்தில் அப்பா குருவி குறுக்கு மறுக்கு (உணவு கொண்டு வந்து குஞ்சுக்கு கொடுக்க)போகிறதுஃபேனை போடாதீர்கள் அடிபட்டுவிடும் என்பார்கள்.

      எப்படியோ நல்ல பறந்து போனது மகிழ்ச்சி. இப்போதும் தினம் அதன் நலனுக்கு வேண்டிக் கொண்டு இருக்கிறேன் இறைவனிடம்.

      சகோவின் கவிதை நினைவு இருப்பது மகிழ்ச்சி.

      நீக்கு
  22. குயிலே குயிலே குயிலக்கா
    கூ(வீ)ட்டுக்குள்ளே யாரக்கா

    பாட்டு ம் குக்கூ சின்ன குயில் கூவாதோ பாட்டும், குயில் பாட்டு ஹோ...

    எல்லாம் நினைவுக்கு வந்தது கோமதிக்கா...

    எப்படியோ இறுதியில் பறந்து போச்சே ஹப்பா பாவம்...

    படங்கள் எல்லாம் நல்லாருக்கு எல்லாம் எடுத்துருக்கீங்க...அதுக்குத் தெரியும் கோமதிக்கா வீட்டுக்குள்ள விழுந்தாலும் பிழைச்சிருவோம்னு! பாராட்டுகள் அக்கா உங்களுக்கும் மாமாவுக்கும் உங்கள் அன்பிற்கு...

    கீதா

    பதிலளிநீக்கு
  23. குயில் பாடலகளை பாடி, படங்களை ரசித்து ,குயில் பறந்து போனதில் மகிழ்ந்து அன்பான கருத்து சொன்னதற்கு நன்றி கீதா.

    பதிலளிநீக்கு
  24. அன்பு கோமதி மா. குயிலை இவ்வளவு பக்கத்தில் பார்த்ததில்லை் எவ்வளவு பெரிய ஆபத்திலிருந்து தப்பி இருக்கிறது இந்தக் குயிலம்மா.,,,,.,! விசிறியில் அடிபட்டு முருகன் அருளால் பிழைத்ததே. எத்தனை பாடுபட்டதோ உங்க மனம். படங்கள் அத்தனையும் உயிரோடு இருக்கிறது. இத்தனை கருணை படைத்தவர்களின் மக்கள் வளம் பெறுவாரகள் நீங்களும் சாரும் நன்றாக இருக்க வேண்டும். சட்டென்று ஆண்குயில் குரலைப் போட்டி உக்கிறாரே. அற்புத தம்பதி! மனம் நிறை வாழ்த்துகள.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வணக்கம் வல்லி அக்கா, வாழ்க வளமுடன்
      குயிலை பக்கத்தில் பார்க்க அழகுதான், அது தவித்த தவிப்பு மனதுக்கு கஷ்டமாச்சு.
      காலை வேளையில் உங்களின் வாழ்த்து மனதுக்கு இதம்.
      உங்கள் வாழ்த்துக்கள் குழந்தைகளுக்கும், எங்களுக்கும் கிடைத்தது மகிழ்ச்சி அக்கா.
      உங்கள் அன்பான கருத்துக்கு நன்றி அக்கா.

      நீக்கு
  25. குயில் அடிபட்டு விழுந்தது என்று படித்தவுடன், பக்கென்று இருந்தது. நல்ல வேளை நல்லபடியாக பறந்து  சென்றதே. குயிலுக்கு உதவி கொண்டே படங்களும் எடுத்திருக்கிறீர்கள். ஒரு முறை எங்கள் அலுவலகத்தில் ஒரு குருவி இப்படித்தான் மின்விசிறியில் அடிபட்டு விழுந்தது. என்னுடன் பணியாற்றிய பெண் அதா மெல் தூக்கி, கொஞ்சம் நீர் கொடுத்ததும் அதி பருகி விட்டு பறந்து சென்ற நிகழ்ச்சி நினைவுக்கு வந்தது. 

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வணக்கம் பானுமதி வெங்கடேஷ்வரன், வாழ்க வளமுடன்
      நல்லபடியாக பறந்து சென்றது, மறு நாள் இரைஎடுக்கவும் வந்துவிட்டது .

      தூக்கி கொடுக்கலாம் தண்ணீரை என்றால் அது ஷோபாவில் முட்டி மோதி கொள்கிறது அதனால் தூக்காமல் பக்கத்தில் போய் வைத்தேன்.
      உங்கள் அலுவலக நினைவுகளை பகிர்ந்து கொண்டதற்கும், கருத்துக்கும் நன்றி.

      நீக்கு
  26. அடிபட்டுக் கொண்டது என படித்தபோது பதட்டம். நல்ல வேளை பிழைத்துக் கொண்டதே என படித்து முடித்ததும் நிம்மதி.

    படங்கள் அனைத்தும் அழகு...

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வணக்கம் வெங்கட், வாழ்க வளமுடன்
      அடிபட்டவுடன் பதட்டம் தான் ஏற்படுகிறது முதலில்.
      ஆமாம், நல்லவேளை பிழைத்துக் கொண்டது இறைவனுக்கு நன்றி.
      உங்கள் கருத்துக்கு நன்றி.

      உங்கள் பதிவுகளை மதியம் வந்து தான் படிக்க வேண்டும்.

      நீக்கு
  27. ஆஹா அருமை.உயிர்களிடத்து அன்பு வேணும் தெய்வம் உண்மை என்ரு தானறிதல் . அந்தப் பறவையின் துன்பம் கண்டு உங்கள் பதைப்தைப்பு நெகிழவைக்கிறது படங்கள் அழகு.
    மேடம் என்னை ஞாபகம் இருக்கிறதா
    என் வலைப்பதிவில்
    நான் கிருஷ்ணதேவராயன் வித்தியாசமான சரித்திரக் கதை-ரா.கி.ரங்கராஜன் நேரம் கிடைக்கும்போது வருகை தர வேண்டுகிறேன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வணக்கம் முரளிதரன் , வாழ்க வளமுடன்
      ஆசிரியரை மறக்க முடியுமா? நினைவு இருக்கிறது.


      வருகிறேன் உங்கள் பதிவை படிக்க.
      உங்கள் கருத்துக்கு நன்றி.

      நீக்கு
  28. முருகன் காப்பாற்றிவிட்டார். இப்படித்தான் அமையும் என்று நினைத்தேன். அவ்வாறே அமைந்தது. (எங்கள் பள்ளி நூற்றாண்டு விழா மலர்ப் பணியில் ஈடுபட்டுள்ளதால் பதிவுகளைப் பார்ப்பதில் சற்று தாமதம் ஏற்படுகிறது.)

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வணக்கம் முனைவர் ஐயா, வாழ்க வளமுடன்
      தெய்வ நம்பிக்கை உள்ளவர்கள் நினைப்பு சரியாகவே இருக்கும்.
      மலர் பணி சிறப்பாக நடக்கட்டும் ஐயா,வாழ்த்துக்கள்.
      முடிந்தபோது வாங்க. உங்கள் கருத்துக்கு நன்றி.

      நீக்கு
  29. அடிபட்ட குயில் வருத்தத்தை தந்திருக்கும்.நலமே பறந்துசென்றது மனதுக்கு மகிழ்ச்சியாக இருந்திருக்கும். அழகிய குயில்.

    எங்கள் பால்கனி பறவைகள் கூட்டில் ரொபின் குஞ்சு வைத்து அப்பா,அம்மா இருவரும் உணவூட்டி இருந்தார்கள் இப்பொழுது வளர்ந்து பறந்து விட்டார்கள்.

    பதிலளிநீக்கு
  30. வணக்கம் மாதேவி, வாழ்க வளமுடன்
    ஆமாம் மாதேவி, வருத்தம் தந்தது ஆனால் சில மணி நேரம் ஓய்வு எடுத்து பறந்து சென்றது மகிழ்ச்சி.

    ரொபின் குஞ்சு வளர்ந்து பறந்து விட்டதா? அவை இருக்கும் வரை மகிழ்ச்சியாக இருக்கும். இங்கு பால்கனி வழியே பார்த்துக் கொண்டு இருக்கிறேன் சிட்டுக்குருவி குஞ்சுகளுக்கு உணவூட்டும் காட்சியை. இன்னும் 10 நாளில் பறந்துவிடும் அப்புறம் வெறிச் என்று ஆகிவிடும்.

    உங்கள் கருத்துக்கு நன்றி மாதேவி.

    பதிலளிநீக்கு
  31. பயப்படாமல் வீட்டைச் சுற்றிப் பறந்த விதம் ஆச்சரியமே. வலியிலிருந்து மீண்டு மறுபடியும் சிறகு விரித்தது மகிழ்ச்சி. அருமையாகத் தொகுத்துள்ளீர்கள்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வணக்கம் ராமலக்ஷ்மி, வாழ்க வளமுடன்
      வலியிலிருந்து மீண்டு பறந்து சென்றது மகிழ்ச்சி.
      உங்கள் வரவுக்கும், கருத்துக்கும் நன்றி.

      நீக்கு