திங்கள், 13 ஜனவரி, 2020

பொங்கல் வருது ! பொங்கல் வருது ! கொண்டாடலாம் வாங்க


உழவுக்கும் தொழிலுக்கும் வந்தனை செய்வோம்.

மார்கழிக் கோலம் 
மார்கழி நிறைவு பெற்று தைபிறக்கப்  போகிறது. தைமகள் எல்லோர் வாழ்வில் மகிழ்ச்சியை கொண்டு வர வேண்டும்.
சிறுவீட்டுப் பொங்கலுக்கு மருமகள் வரைந்த வீட்டுக்குள் பேரன் அவன் விளையாட்டு சமையல் அறையுடன்
பொங்கல் அன்று சூரிய வழிபாடு செய்கிறான் பேரன்

 பொங்கல் பாடலை என் பேரன் சின்ன வயதில் தன் மழலைக் குரலால் பாடுவான். அது கீழே வருகிறது கேட்டுப் பாருங்கள்  நன்றாக இருக்கும். பொங்கலை வரவேற்க வீட்டை வெள்ளை அடிப்பது ஆரம்பித்து  பொங்கல் வைப்பது வரும்.

அரிசோனா தமிழ்ப் பள்ளியின் தமிழ் மொழி பேச்சுப் போட்டி தலைப்பு -"பொங்கல் "'
பொங்கலைப் பற்றிச் சொல்லிவிட்டுப் பொங்கல் பாடலைப் பாடுகிறான்.

 இந்தக்கால குழந்தைகள் பொங்கல் பற்றித் தெரிந்து கொள்ள எளிமையாக பொங்கல் பாடல்

 பொங்கலைப் பற்றிய பாடலைக்  குழந்தைகள் ஆடிப் பாடும் போது  மனது மகிழுது. கேட்டுப் பாருங்கள் அவசியம். அந்தப் பாட்டு வரிகளைக் கீழே கொடுத்து இருக்கிறேன். சின்னக் குழந்தைகளுக்கு சொல்லித் தரலாம்:

"பொங்கல் வருது பொங்கல் வருது கொண்டாடலாம் வாங்க
 உழைக்கும் அந்த உழவர்க்கெல்லாம் நன்றி சொல்வோம் வாங்க
 ஒளி கொடுக்கும் சூரியனும் நமக்குத் தெய்வம் தாங்க
இயற்கைக்கு நன்றி சொல்லிக் கொண்டாடலாம் வாங்க
இனிக்கும் சர்க்கரைப் பொங்கல் சாப்பிடலாம் வாங்க
தித்திக்கும் கரும்பைக் கொஞ்சம் கடித்துப் பாருங்க நீங்க

அழ அழகாய் புதுத் துணிகள் அப்பா வாங்கினாங்க
புத்தாடை அணிந்து நாங்க ஆடும் ஆட்டம் பாருங்க
மஞ்சள் இஞ்சி கட்டிய பானையில் பொங்கல் கொதிக்குதிங்கே
மங்களமான வாழ்க்கைக்கு மனமும் வேண்டுதிங்கே
உணவு தந்த உழவரெல்லாம் உயர்ந்து வாழ வேண்டும் -அந்த
பொங்கலைப் போல அவர்கள் வாழ்க்கை இனிமையாக வேண்டும்

பொங்கலோ! பொங்கல்! பொங்கலோ பொங்கல்!
போன வருடம் மஞ்சளை நட்டு வைத்தேன். இந்த வருடம்  பொங்கலுக்கு எடுக்க வேண்டும்.

கண்ணுக்கு எட்டிய வரை பசுமை கண்ணை நிறைக்கும். 
 தாமிரபரணி ஆறு பாய்ந்து முப்போகம்  விளையும் பொன்விளையும் பூமி கடைய நல்லூர்.


கடைய நல்லூர் பக்கம் உள்ள வயல்கள். ரயிலில் போகும்போது எடுத்த படங்கள்.

அரிசி இடுகிறாள் மருமகள்.
மகனே செய்த பொங்கல் பானை

பேரனின் பொங்கல் கொண்டாட்டம் -படங்கள் ஆலை கரும்பு தான் கிடைக்கும் அவன் ஊரில். கரும்பு பயிர் செய்யும் இடத்திற்கே போய் வாங்கி வருவான் மகன்.

மகன் தயார் செய்த சூரிய ரதம்


லெகோ விளையாட்டுப் பொருளில் செய்த பெரிய பொங்கல் பானை பொங்குகிறது. முன்னால் அலங்கார மின் விளக்குகள் போட்டு இருக்கிறான் , வாசலில் வரவேற்கக் காத்து இருக்கிறான். பானை அருகில் கரும்பு நிற்க வைத்து இருக்கிறான். இன்று காலை ஸ்கைப்பில் பேசிய போது. பொங்கல் விளையாட்டு விளையாடினான்.

தாத்தா, ஆச்சி,  அப்பா, அம்மா மற்றும் உறவுகள், மற்றும் ஆடு மாடு  பூனை நாய் குதிரைகளுடன் பொங்கல் கொண்டாடுகிறான். அழைத்து இருக்கிறான் எங்களை. உங்கள் ஊரில் கேஸ் அடுப்பில் பொங்கல் .இங்கு பாரம்பரிய பொங்கல் வைக்கிறோம் வாருங்கள் என்கிறான் மகன்.

நான் போட்ட பொங்கல் கோலம்

கதிரவனை வணங்குவோம்.   உண்ணும் உணவு வந்தவகை அறிந்து அதற்குப் பாடுபடும் விவசாயிகள் நிலை உயர வாழ்த்துவோம்.  இயற்கையைப்  போற்றுவோம். எல்லாம் வல்ல இறைவனைப் போற்றுவோம்.

எல்லோருக்கும்  இனிய பொங்கல் நல்வாழ்த்துக்கள்! 

மகன் வீட்டில் பொங்கும் பொங்கல் பானை

//உறவுகளின் புன்னகை வீட்டில் பொங்க இனம் புரியா இன்பம் மனதில் பொங்க.. நண்பர்கள் சூழ மகிழ்ச்சி பொங்க பொங்கட்டும் தைப் பொங்கல்.//

= நன்றி தெய்வீகம்  வலைத்தளம்.

வாழ்க வளமுடன்!

53 கருத்துகள்:

 1. மீதான் 1ஸ்ட்டூஊஊஊ பின்புதான் வருவேன் போஸ்ட் படிக்க...

  பதிலளிநீக்கு
 2. வணக்கம் அதிரா, வாழ்க வளமுடன்

  நீங்கதான் முதலில் வந்தீர்கள். வாங்க, வாங்க .

  பதிலளிநீக்கு
 3. வாவ்.கவின்குட்டியின் மழலைகுரலில் பொங்கல்பாட்டு சூப்பர் அக்கா. அழகா உச்சரித்து பாடுகிறார் அப்பவே. சின்னவயதிலேயே பழகிய பழக்கமென்பதால் இப்பவும் அழகான உச்சரிப்பு. வாழ்த்துக்கள் கவின்குட்டி. உங்க லோகோ பொங்கல்பானை சூப்பர். 1வது படம் அசத்தலா இருக்கு. கவின்குட்டியின் எல்லா படமுமே அழகு. இம்முறையும் நன்றாக பொங்கலை கொண்டாடுங்கள்.

  பச்சை பசேலென வயல்வெளி பார்க்க அழகு. நான் கடந்தவருடம் இதே நாள் ஊரில் நின்றேன்.பொங்கலை கொண்டாடியது ஞாபகம் வருது. கரும்பு நானும் நேற்று வாங்கியாச்சு. ஆனா சூரியனார் வாறாரோ தெரியாது.
  உங்க மகன் இடத்தில் வெளியில் வைத்தா பொங்குவாங்க அக்கா.? அவர் அழகாக கைவேலை செய்பவராச்சே.முன்பு படங்கள் போட்டு பார்த்திருக்கேன். அழகா இருக்கு பொங்கல் பானை, சூரியரதம் .

  மஞ்சள்கிழங்கு நான் இப்பதான் போட்டிருகேன். எப்ப வருதோ தெரியாது. பிரஷ்மஞ்சள் கிடைப்பதால் அதையே உணவுக்கு எடுக்கிறேன். இம்முறை நீங்க பொங்கலுக்கு எடுக்ககூடியதா வந்திருக்கு. பொங்கல் கோலம் அழகா இருக்கு.

  பொங்கல் பாட்டு நன்றாக இருக்கு. இப்படி கேட்டுதான் பிள்ளைகளுக்கு சொல்லிக்கொடுக்கவேண்டியதா இருக்கு.
  உங்களுக்கும்,குடும்பத்தினருக்கும் இனிய பொங்கல் நல்வாழ்த்துகள் அக்கா.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வணக்கம் பிரியசகி அம்மு, வாழ்க வளமுடன்

   கவின் குட்டியை பாராட்டியதற்கு நன்றி.

   நான் மகன் வீட்டுக்கு போவதாய் நினைத்து கொண்டீர்களா! இல்லை அம்மு . இங்குதான் பொங்கல். மகன் அழைத்துக்கொண்டு இருக்கிறான் போக முடியவில்லை.

   உங்கள் ஊர் பொங்கல் பண்டிகையை முன்பு பதிவு போட்டு இருந்தீர்கள் நன்றாக இருந்தது.

   //உங்க மகன் இடத்தில் வெளியில் வைத்தா பொங்குவாங்க அக்கா.?//

   தோட்டத்தில் வைத்து பொங்கல் வைப்பான். நண்பர் குடும்பங்கள் வரும் அவர்களுடன் சேர்ந்து பொங்கல் வைப்பார்கள். போன வருடம் மருமகளின் அம்மா இருந்தார்கள் பொங்கல் சமயம்.

   முன்பு எல்லாம் நானும் வெளியில் விறகு அடுப்பில் பொங்கல் வைத்து இருக்கிறேன்.
   எங்கள் ஊரில் பனஓலை கொண்டு வந்து பொங்கல் சமயம் வீடு வீடாய் கொண்டு வந்து போட்டு காசு வாங்கி போவார்கள் அதைல் தான் அடுப்பெரித்து பொங்கல் செய்வோம்.

   எங்கள் ஊர் பக்கம் வயல்கள் பசுமையாக இருக்கும் அம்மு உங்கள் ஊர் போல.
   மஞ்சள் கிழங்கு புதுசாக பச்சையாக கிடைக்குமா! நல்லதுதான்.

   இந்த முறை பொங்கலுக்கு வீட்டு மஞ்சள்தான்.

   பொங்கல் பாட்டு கேட்டு மகிழந்தது மகிழ்ச்சி அம்மு.

   உங்கள் கருத்துக்கும், வாழ்த்துக்களுக்கும் நன்றி.

   நீக்கு
 4. //அவன் விளையாட்டு சமையல் அறையுடன்.. //

  மகன் விளையாட டென்னிஸ் கோர்ட் போடாமா, இது என்ன?.. ஓ! காலத்தின் தேவையோ?..

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வணக்கம் ஜீவி சார், வாழ்க வளமுடன்
   மகன் விளையாட டென்னிஸ் கோர்ட் போடலாம் தான்.
   நாலுநாள் விழாவில் சிறுவீட்டு பொங்கல் என்ற விழாவும் உண்டு குழந்தைகளை அதில் பங்கு பெற செய்வார்கள் எங்கள் பக்கம். பெண் குழந்தைகள் உள்ள வீட்டில் கண்டிப்பாய் செய்ய வேண்டும்.

   நீங்கள் சொல்வது போல் காலத்தின் தேவைக்கும் உதவும் இந்த விழா.ஆண்களும் இந்த அவசர உலகத்தில் இப்போது குடும்பத்தினருக்கு உதவலாம் தான். எல்லாம் தெரிந்து வைத்துக் கொள்வது நல்லதுதானே!

   நீக்கு
 5. //அரிசோனா தமிழ்ப் பள்ளியின் தமிழ் மொழி பேச்சுப் போட்டி.. //

  எந்த விசேஷத்திற்கும் சினிமா நடிக, நடிகையர் தொடர்பாகத் தான் இன்றைக்கும் நம் தொலைகாட்சி சேனல்கள் இருக்கின்றன. இல்லையென்றால் பெண், ஆண், மருமகள், மாமியார் தொடர்பான பட்டிமன்றங்கள்..

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. நீங்கள் சொல்வது சரிதான். தொலைக்காட்சிகள் எல்லா விசேஷத்திற்கும் நடிக நடிகைகளை பேட்டி எடுப்பது என்று. பள்ளிக் குழந்தைகள் இங்கும் நன்றாக பேசுகிறார்கள். சில சேனல்களில் குழந்தைகள் பேசுவதை வைக்கிறார்கள்.
   மக்கள் விரும்புவதாக தொலைகாட்சியினர் சொல்கிறார்கள்.

   அரிசோனா தமிழ்ப் பள்ளியில் ஒவ்வொரு விழாவைப்பற்றியும் அந்த அந்த சமயம் குழந்தைகளை பேச வைக்கிறார்கள். பெற்றோர்களும் ஆர்வமாக குழந்தைகளுக்கு சொல்லி தருகிறார்கள். சுற்றுலா சென்று வந்தது பற்றியும், எங்கள் ஊர் என்ற தலைப்பிலும் பிள்ளைகள் பேசுகிறார்கள்.

   நீக்கு
 6. இனிய பொங்கல் வாழ்த்துக்கள்! வாழ்க வளமுடன்!..

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. ஒவ்வொரு ஆண்டும் மறக்காமல் வாழ்த்து சொல்லி விடுவீர்கள்.
   உங்கள் வாழ்த்துக்கள் மகிழ்ச்சி அளிக்கிறது. உங்கள் வாழ்த்துக்களுக்கு நன்றி சார்.

   நீக்கு
 7. வணக்கம் சகோதரி

  அழகான இயற்கை வனப்பு படங்களுடன் பொங்கல் பதிவு நன்றாக உள்ளது.பொங்கல் பாட்டு கேட்டு ரசித்தேன். தங்கள் பேரன் கவின் தமிழ் பேச்சுப் போட்டியில் கலந்து கொண்டு நன்றாக பேசி,பாடி பரிசு வாங்கியது கண்டு மகிழ்ச்சியடைந்தேன். அவருக்கு என் அன்பான ஆசிகளுடன், இனிய பொங்கல் வாழ்த்துக்களையும் தெரிவியுங்கள்.

  தாங்கள் போட்ட மார்கழி கோலம், பொங்கல் கோலம் அனைத்தும் மிக அழகாக இருக்கின்றன. தங்கள் மகன் செய்த சூரிய ரதம் அருமையாக உள்ளது. பொங்கலன்று வாசலில் நிறுத்தி வைத்து பொங்கல் வைத்து கும்பிடும் பழக்கம் என நினைக்கிறேன். நன்றாக தேர் செய்துள்ளார். வருடந்தோறும் அவர் செய்த மண்பானையில்தான் பொங்கல் வைப்பாரா? மண்பானையும் நன்றாக செய்ய கற்றுக் கொண்டிருக்கிறார். அவருக்கும் உங்கள் மருமகளுக்கும் என் மனம் நிறைந்த பொங்கல் நல்வாழ்த்துகள்.

  நீங்களும் எல்லவற்றையும் நன்றாக பொறுமையாக தொகுத்து எங்கள் பார்வைக்கு பொங்கல் விருந்தாக அளித்துள்ளீர்கள். நீங்கள் வளர்த்த மஞ்சள் செடியும் அழகாக உள்ளது. உங்களுக்கும் உங்கள் குடும்பத்தில் உள்ள அனைவருக்கும் இனிய பொங்கல் திருநாள் நல் வாழ்த்துகளை முன்கூட்டியே தெரிவித்துக் கொள்கிறேன். பகிர்வுக்கு மிக்க நன்றி.

  நன்றியுடன்
  கமலா ஹரிஹரன்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வணக்கம் கமலா ஹரிஹரன், வாழ்க வளமுடன்
   உங்களை போன பதிவில் காணோமே என்று நினைத்தேன், ஊருக்கு எங்காவது போய் இருப்பீர்கள் என்று நினைத்தேன்.

   பேரனை பாராட்டி வாழ்த்தியது மகிழ்ச்சி, நன்றி.உங்கள் பொங்கல் வாழ்த்தை சொல்கிறேன்.

   சூரிய ரதம் ஒரு வருடம் செய்தான். ஒரு வருடம் மண்ணில் பெரிய சூரியன் செய்தான். பழைய பதிவுகளில் போட்டு இருக்கிறேன் கமலா. எங்கள் பழக்கம் மண்ணில் சூரியன் செய்து அதற்கு செம்மன் , சுண்ணாம்பு பட்டை அடித்து வைத்து கும்பிடுவோம்.
   அதுவும் செய்து வைத்து இருக்கிறான். சூடன் தட்டு மண்ணில் பெரிதாக செய்து இருக்கிறான். அதேல்லாம் முன்பே பகிர்ந்து விட்டேன். இன்று முகநூலில் போட்டு இருக்கிறேன்.

   கோலங்களை பாராட்டியதற்கு நன்றி. என் சின்னச் சின்னகோலங்கல் பதிவு பார்த்தீர்களா? மார்கழி மாதம் போட்ட கோலங்கள்.


   எல்லாவற்றையும் பொறுமையாக படித்து அருமையாக கருத்து சொன்னதற்கு நன்றி கமலா.

   நீக்கு
  2. உங்கள் பொங்கல் வாழ்த்துக்களுக்கு நன்றி.

   நீக்கு
 8. பேரன் பாடிய பாடல் அருமை.  இரண்டாவது பரிசும் வாங்கி விட்டார் போல!  அதைவிட பொங்கலுக்கு பானை கூட தானே தயார் செய்வது பாராட்டுக்குரியது.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வணக்கம் ஸ்ரீராம், வாழ்க வளமுடன்
   ஆமாம், இரண்டாம் பரிசு வாங்கி விட்டான். பொங்கலைப் பற்றி சொல்லி பாடலும் பாடி விட்டான்.

   மகன் பானை செய்யும் வகுப்புக்கு போய் கற்றுக் கொண்டான். அடுப்பு, மணி, சூரியன், சூடன் தட்டு போன்றவை செய்த படம் ஒரு பதிவில் போட்டேன்.
   உங்கள் பாராட்டை மகனிடம் சொல்கிறேன்.

   நீக்கு
 9. பகிர்ந்திருந்த பாடலை நானும் பாடிப்பார்த்தேன்!  நாங்கள் வெளியில் வைத்து பொங்கல் செய்ததில்லை.  வீட்டுக்குள்தான்.   

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. எங்கள் ஊரில் வாசலில், அல்லது முற்றத்தில் பொங்கல் வைப்போம்.
   சூரியன் உதிக்கும் போது பொங்கல் வைத்தால் நல்ல நேரம் மணி எல்லாம் பார்க்க வேண்டாம். வரிசையாக எல்லோர் வீடுகளில் ஒன்று போல் பால் பொங்குவதைப் பார்க்க மிகவும் அழகாய் இருக்கும்.

   நீக்கு
 10. வெளிநாட்டில் வசிப்பவர்கள்தான் தமிழ்ப் பாரம்பர்ய வழக்கங்களை விடாமல் நிறைவேற்றுகிறார்கள்.

  கோலத்திலேயே வீடு.  வீட்டில் சமையயல் அரை.   சமையலறையில் பேரன்...    சூப்பர்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. அவர்களுக்கு வசதியும் இருக்கிறது வெளியில் பொங்கல் வைக்க ஆர்வமும் இருக்கிறது. மருமகள், மகன் இருவரும் எல்லாம் ஆர்வமாக செய்வார்கள். பேரனுக்கும் இதில் ஆர்வம் இருக்கிறது.

   என் அம்மா களிமண்ணில் வீடு கட்டி தருவார்கள். அறை அறையாக இருக்கும் ஆட்டுக்கல், அம்மிக்கல், பாத்திரங்கள் எல்லாம் களி மண்ணில் செய்து தருவார்கள். பொங்கல் முடிந்த பின்னும் விளையாடுவோம். சுண்ணம்பில் வீடு வரைவதோடு இப்போது முடித்துக் கொள்கிறோம்.

   அவனுக்கு சமையல் செய்து விளையாடுவது பிடிக்கும் வித விதமாய் சமைத்து தருவான். சிறு வயதில்.

   நீக்கு
 11. இனிய தைப் பொங்கல் திருநாள் வாழ்த்துகள்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. உங்கள் கருத்துக்களுக்கும் பொங்கல் வாழ்த்துக்களுக்கும் நன்றி.

   நீக்கு
 12. படங்கள் அனைத்தும் அழகோவியம் சகோ
  தங்கள் குடும்பத்துக்கு இனிய பொங்கல் வாழ்த்துகள்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வணக்கம் தேவகோட்டை ஜி, வாழ்க வளமுடன்
   படங்களை மட்டும் பார்த்தீர்களா? காணொளி பார்க்கவில்லையா ஜி
   உங்கள் கருத்துக்கும், வாழ்த்துக்களுக்கும் நன்றி.

   நீக்கு
 13. உங்கள் பெயரன் பாடிய பொங்கல் பாட்டு கேட்டேன் வாழ்த்துகள் சொல்லவும்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. பேரன் பாடிய பாடல் கேட்டது மகிழ்ச்சி, நன்றி.
   வாழ்த்துக்களை சொல்கிறேன்.

   நீக்கு
 14. சிறப்பான பொங்கல் பதிவு.

  தங்களுக்கும் குடும்பத்தினருக்கும் நண்பர்கள் அனைவருக்கும் இனிய தைப்பொங்கல் வாழ்த்துகள்!

  மேடையில் பேரனின் உரையும் பாட்டும் அருமை. மகன் செய்த பொங்கல் பானையும் சூரிய ரதமும் அழகு.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வணக்கம் ராமலக்ஷ்மி வாழ்க வளமுடன்

   உங்கள் கருத்துக்கும், வாழ்த்துக்களுக்கும் நன்றி.

   நீக்கு
 15. மழலைக் குரலில் பாடல்... கேட்டு ரசித்தேன் மா...

  சிறப்பான பதிவு.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வணக்கம் வெங்கட், வாழ்க வளமுடன்
   உங்கள் கருத்துக்கு நன்றி.

   நீக்கு
 16. பாடல் அருமை...

  இனிய பொங்கல் நல்வாழ்த்துகள் அம்மா...

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வணக்கம் திண்டுக்கல்தனபாலன், வாழ்க வளமுடன்
   உங்கள் கருத்துக்கும் நல் வாழ்த்துக்கும் நன்றி.

   நீக்கு
 17. அன்பு கோமதி அற்புதமான பதிவு் எத்தனை தகவல்கள். மகன் பொங்கல் பானை செய்வதும் மருமகள் பொங்கல் இடுவது, பேரனின் மழலைப் பாடல் ,பொங்கல் பாடல் எல்லாமே நன்று. மீண்டும் மீண்டும் பார்ககிறேன் அலுக்கவில்லை. சிறு வீட்டுப் பொங்கல் அருமை. உங்களுக்கும் குடும்பத்தாருக்கும் இனிய பொங்கல் வாழ்த்துகள். எங்கும் வளம் பெருகட்டும்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வணக்கம் அக்கா, வாழ்க வளமுடன்
   பதிவை மீண்டும் மீண்டும் பார்த்து படித்து அன்பான கருத்து சொன்னதற்கு நன்றி.
   உங்கள் கருத்துக்கும் வாழ்த்துக்களுக்கும் நன்றி.

   நீக்கு
 18. அதுக்குள் பொங்கலும் வந்துவிட்டதே.. முதலில் வாழ்த்தைச் சொல்லி விடுகிறேன், இனிய தைப்பொங்கல் வாழ்த்துக்கள் கோமதி அக்கா.

  பேரனின் வேட்டி உடுப்பும் கும்பிடுதலும் அழகோ அழகு.. பக்திமானாகத் தெரிகிறார்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வணக்கம் அதிரா, வாழ்க வளமுடன்
   அதுக்குள் பொங்கல் வந்து விட்டது.
   பேரனை ரசித்து கருத்து சொன்னதற்கும், பொங்கல் வாழ்த்துக்களுக்கும் நன்றி.

   நீக்கு
 19. ஹா ஹா ஹா பேரனின் பேச்சும் பாட்டும் ச்சோ சுவீட்ட்.. பெரியவர்கள்போல நல்ல அழகாக கம்பீரமாக நின்று பேசுகிறார்.. உண்மையில் மிகவும் ரசிக்கிறேன்...

  ஓ கற்பூரவள்ளியை அருகில் வச்சிருக்கிறீங்க.. மஞ்சளில் கற்பூர வள்ளி வாசம் வராதோ கோமதி அக்கா?

  நானும் இங்கு மஞ்சள் கிடைச்சால் வாங்கி நடப்போறேன், பச்சை மஞ்சளோ நடோணும்?

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. பேரனின் பேச்சை ரசித்தமைக்கு நன்றி அதிரா.
   கற்பூரவள்ளி வாசம் வருமா தெரியவில்லை நாளை காலைதான் எடுக்க போகிறேன். எப்படி வாசம் இருந்தது என்பதை சொல்கிறேன்.
   பச்சை மஞ்சள் தான் நட வேண்டும் நாள் பட்டு காய்ந்து போய் இருந்தாலும் குறுத்து வந்து இருந்தால் நட்டு வைத்தால் வந்து விடும்.

   நீக்கு
 20. அழகிய விவசாய நிலம்.. படங்கள் அழகு.. பொங்கல் பாட்டு நாம் சின்ன வயதில் பாடமாக்கியது..இப்போ நிறையவே மறந்திட்டேன்..

  தைத்திருநாள் இல்லமெல்லாம் தளிர்த்திடும் தைப்பொங்கல்
  குதித்தெழுவோம் குளிப்போம், பூவெடுப்போம் புதிதணிவோம் பொங்கலன்று நாங்கள்..
  கோலமிட்டு விளக்கேற்றிக் கும்பிடுவாள் அம்மா
  பால் எடுத்துப் பொங்கலுக்குப் பானை வைப்பார் அப்பா.. இப்படி வரும் அப்பாடல்..

  மகன் செய்த பானை அழகு.. நல்லதாகவே வந்துவிட்டது. மருமகளின் காப்புக்களில்தான் எனக்குக் கண்ணாக இருக்குது.. நாங்கள் இலங்கையில் குழந்தையில்தான் இப்படி காப்பு போடுவோம் பின்பு பவுண் மட்டுமே போடுவோம், ஆனா இப்போ எங்கள் ஜெனரேசன் எல்லோரும் இப்படிப் போடத் தொடங்கி விட்டார்கள்.. நானும்தேன்:))

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. பொங்கல் பாட்டு நினைவுக்கு வந்தால் பதிவிடுங்கள், உங்கள் பாட்டும் நன்றாக இருக்கிறது.

   பவுண் வளையலும் அலங்கார காப்புகளும் போட்டு இருக்கிறாள். இப்போது எல்லோரும் வித விதமாய் அணிய ஆரம்பித்து விட்டார்கள். பொன்நகை ஆபத்து. புன்னகை போதும்
   என்ற மனநிலைக்கு வந்து விட்டார்கள்.

   நீக்கு
 21. பேரனின் பொங்கல் படத் தொகுப்பு, சூரிய ரதம் அனைத்தும் அழகு. லோகோப் பொங்கல் மிக அழகு.

  போஸ்ட்டைப் பிரிச்சு ரெண்டாக்கிப் போட்டிருக்கலாம் கோமதி அக்கா.

  அனைத்தும் அழகு.. மீண்டும் தைப்பொங்கல் வாழ்த்துக்கள். நல்லவேளை இம்முறை புதன் கிழமை வருவதால் எனக்கு மகிழ்ச்சி, நன்கு பொங்கலாம் ஆறுதலாக.. திங்கள் செவ்வாய் எனில் காலையில பொங்குவதுக்கு கஸ்டப்பட்டு செய்வேன், பின்பு வெளிக்கிட்டு ஓடோணும் அல்லது லீவு எடுகோணும்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. பதிவில் இடம்பெற்ற அனைத்தையும் ரசித்த உங்களுக்கு நன்றி.
   போஸ்டை பிரித்து போட்டு இருக்கலாம். ஆனால் பொங்கல் வேலை இருப்பதால் சேர்த்து போட்டு விட்டேன்.

   நீங்கள் பொங்கல் வைத்து அதை படமாக்கி பதிவு போடுங்கள். விடுமுறை என்பதால் நின்று நிதானமாய் படம் எடுங்கள்.
   உங்களுக்கும் எங்கள் பொங்கல் வாழ்த்துக்கள்.
   உங்கள் கருத்துக்களுக்கு நன்றி நன்றி.

   நீக்கு
 22. ஆஹா !! சூப்பர் செல்லக்குட்டி அழகா பாடறார் முதலில் பார்த்தது அவரின் காணொளிதான் .மற்றவற்றுக்கு அப்புறம் வறேன்க்கா படிச்சிட்டு பின்னூட்டமிடறேன் 

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வணக்கம் ஏஞ்சல், வாழ்க வளமுடன்
   செல்லக்குட்டியின் பாட்டை கேட்டு விட்டீர்களா? மகிழ்ச்சி.
   வாங்க நேரம் கிடைக்கும் போது.

   நீக்கு
 23. பதில்கள்
  1. வணக்கம் சகோ கரந்தை ஜெயக்குமார், வாழ்க வளமுடன்
   வாழ்த்துக்களுக்கு நன்றி.

   நீக்கு
 24. மகிழ்வான படங்களுடன் அருமையான பதிவு.. தங்கள் அனைவருக்கும் அன்பின் இனிய பொங்கல் நல்வாழ்த்துகள்...

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வணக்கம் சகோ துரை செல்வராஜூ, வாழ்க வளமுடன்
   உங்கள் அன்பான வாழ்த்துக்களுக்கு நன்றி.

   நீக்கு
 25. உங்களுக்கும் உங்கள் கணவர், மகன், பேரன், மருமகள், ஆகிய அனைவருக்கும் இனிய பொங்கல் வாழ்த்துகளைத் தாமதமாகச் சொல்கிறேன். இது திங்கள் அன்றே வந்து கவனிக்காமல் விட்டிருக்கேன். உங்கள் மகனின் கைவேலைத் திறமைகளைப் பல சமயங்களில் பார்த்து வியந்திருக்கேன். பொங்கலுக்குச் செய்த பானையும், சூரிய ரதமும் அற்புதமாக அமைந்துள்ளது. வசதியும் இடமும் இருந்தாலும் இம்மாதிரிப் பாடுபட்டுச் செய்ய உடம்பும் ,மனமும் ஒத்துழைக்கணும் இல்லையா? இதனால் குழந்தைகளுக்கும் ஆர்வம் வந்து நம் பாரம்பரியங்களையும் தெரிந்து கொள்வார்கள். உங்கள் மகன் குடும்பம் இதே போல் என்றென்றும் பாரம்பரியத்தை விடாமல் குழந்தைக்கும் சொல்லிக் கொடுத்துக் கொண்டு மகிழ்வோடும் பூரண உடல் ஆரோக்கியத்தோடும் வாழ வாழ்த்துகள், பிரார்த்தனைகள். எல்லாப் படங்களும் காணொளிகளும் நன்றாக இருந்தன. முகநூலிலும் பார்த்தேன்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வணக்கம் கீதா சாம்பசிவம், வாழ்க வளமுடன்
   வாழ்த்துக்களுக்கு நன்றி.
   மகனுக்கு எப்போது எல்லா பண்டிகைகளையும் கொண்டாட பிடிக்கும்.
   அது போல் மருமகளும் அவனுக்கு இயந்து ஒத்துழைப்பதால் செய்ய முடிகிறது. ஆர்வமாக எல்லா விழாக்களையும் செய்வாள்.
   பேரனுக்கும் பண்டிகை, விழாக்கள் நடத்துவது, கலந்து கொள்வது பிடிக்கும்.
   உங்கள் வாழ்த்துக்களுக்கும், பிரார்த்தனைகளுக்கும் நன்றி.
   உங்கள் விரிவான கருத்துக்கு நன்றி.

   நீக்கு
 26. அழகிய படங்கள். உங்கள் வீட்டு பொங்கல் களைகட்டுகிறது.
  குடும்பத்தினர் அனைவருக்கும் தை திருநாள் வாழ்த்துகள்.

  பதிலளிநீக்கு
 27. வணக்கம் மாதேவி, வாழ்க வளமுடன்
  உங்கள் கருத்துக்கும், வாழ்த்துக்களுக்கும் நன்றி.

  பதிலளிநீக்கு
 28. வெளிநாட்டில் வசித்தாலும் பாரம்பரிய முறையில் பொங்கல் கொண்டாடிய உங்கள் மகன் குடும்பத்திற்கு பாராட்டுகள். பேரனின் பொங்கல் பனையும், அலங்காரங்களும் வெகு சிறப்பு. நாள் பதிவு.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வணக்கம் பானுமதி வெங்கடேஷ்வரன், வாழ்க வளமுடன்
   உங்கள் கருத்துக்கும் மகன் குடும்பத்தை பாராட்டியதற்கும் நன்றி. பேரனின் பொங்கல் பானை அலங்காரங்களை ரசித்தமைக்கும் நன்றி.

   நீக்கு