செவ்வாய், 26 நவம்பர், 2019

குடியிருந்த கோவில்

எனது பெற்றோர்

எனது தாய்

எனது தாயைப் பற்றி முதலில் கூறுகிறேன். வீரலெட்சுமி என்ற
பெயருக்கு ஏற்றாற் போல் வீரமிகு தாய்.

'சிதைவிடத்து ஒல்கார் உரவோர் புதையம்பிற்
பட்டுப் பாடூன்றும் களிறு' 

என்றார் திருவள்ளுவர்.

போர்க்களத்தில் உடம்பை மறைக்கும் அளவு
அம்புகளால் புண்பட்டும் யானையானது தன் பெருமையை நிலை
நிறுத்தும். அதுபோல ஊக்கம் உடையவர், துன்பங்கள் வந்த இடத்திலும்
மனம் தளராமல் இருப்பார்கள் என்பதற்கிணங்க வாழ்ந்தவர்கள் என் தாய்.


எனது தந்தையார் 51 வயதில் திடீரென்று மறைந்துவிட்டபோதும், மேலும் மேலும் துன்பங்கள் வந்தபோதும் எங்கள் குடும்பம் என்ற படகு தத்தளித்தபோதும் இறைநம்பிக்கை என்ற துடுப்பைக் கொண்டு என் தாயார் படகைக் கரை சேர்த்தார்கள்.

எனது அக்காவிற்கும், எனக்கும் தந்தையார் இருக்கும்போதே
திருமணம் ஆகிவிட்டது. தம்பி தங்கைகளோ சிறு குழந்தைகள் . அண்ணன் படித்துக் கொண்டிருந்தான்.தம்பி தங்கைகளை வளர்த்துத் திருமணம் செய்து வைத்தார்கள். பேரன்,பேத்திகள்,கொள்ளுப்பேரன், கொள்ளுப்பேத்தி ஆகியோரையும் பார்த்து மகிழ்ந்து, தன் 75 ஆம் வயதில் இறைவனடி சேர்ந்தார்கள்.


இறக்கும்போது எங்களிடம் ,"நான் நிறைவான வாழ்க்கை வாழ்ந்து
விட்டேன்.உங்கள் அப்பா என்னிடம் விட்டுச் சென்ற கடமைகளை முடித்து
விட்டேன். நான் இறந்தபின் யாரும் அழக்கூடாது .தேவாரம், திருவாசகம்
கருடப்பத்து படியுங்கள் "என்று கேட்டுக் கொண்டு எங்கள் தந்தை இறந்த அதே கார்த்திகை மாதம் ஞாயிற்றுக் கிழமை இறைவன
டி சேர்ந்தார்கள்.


என் தாயின் நினைவுகள் சில:--

அதிகாலையில்  எழவேண்டும், கடவுளை வணங்க வேண்டும்.
அந்த அந்த நேரத்தில் அந்த அந்த வேலையை முடிக்க வேண்டும். அதில் முக்கியமானது நேரத்திற்குச் சாப்பிடுவது.  நேரத்திற்குச் சாப்பிட்டாலே உடலுக்கு ஆரோக்கியம். வீட்டுவேலைகளும் நேரத்திற்கு நடக்கும் என்பது அவர்களின் கருத்து. நேரம் தவறி உண்பவர்களைப் பார்த்தால் இந்த வயிற்றுக்குத் தானே சம்பாதிக்கிறீர்கள் வயிற்றைக் காயப்போடலாமா இவ்வளவு நேரம் என்று கடிந்து கொள்வார்கள்.

 துணி காயப்போட்டால் காய்ந்தவுடன் மடித்து விட வேண்டும். கொடியிலிருந்து எடுத்தவுடன் மடித்தால் ஒரு அழகு, அதை அங்கே போட்டு இங்கே போட்டு மடித்தால் நன்றாக இருக்காது என்பார்கள்.
பீரோவில் அழகாய்த் துணிமணிகள் மடித்து இருக்க வேண்டும். இல்லையென்றால் பானையில் சுருட்டி வைத்த மாதிரி இருக்கு என்பார்கள்.

மதியம் தூங்கக் கூடாது. பொழுதை வீணாய்க் கழிக்காமல் ஏதாவது கைவேலை செய்ய வேண்டும் என்பார்கள். நல்ல புத்தகம் படித்தல், சுவாமி புத்தகங்கள் படித்தல் என்று ஏதாவது  செய்து கொண்டே இருக்க வேண்டும். 

அவர்கள் படிக்கும் தோத்திரப் புத்தகங்களுக்கு அட்டை போட்டுச் சுத்தமாக வைத்து இருப்பார்கள். கொஞ்சம் கிழிந்து விட்டால்  கனமான அட்டை வைத்துத்   தைத்து  அட்டை போட்டு விடுவார்கள். எனக்குப் பள்ளி நோட்டுக்கள், புத்தகங்கள் எல்லாவற்றுக்கும் அம்மா தான் அட்டை போட்டுத் தருவார்கள், நான் செய்ததே இல்லை. (என் குழந்தைகளுக்கு என் கணவர் போட்டுக் கொடுப்பார்கள்,அப்புறம் அவர்களே போட்டுக் கொண்டார்கள்.)

அம்மா விதவிதமாய் ஜடை பின்னுவார்கள்.  எல்லாப் பேத்திகளும்  ஆச்சியிடம் ஆசையாகப் பின்னிக் கொள்வார்கள்.

கண்கண்டால் கை செய்ய வேண்டும் என்பார்கள். பின்னல் கைவேலை எல்லாம் அந்த அந்த சீஸனுக்கு எது புதுசோ அதைச் செய்து விடுவார்கள் அவை ஒவ்வொரு கொலுவுக்கு வந்து விடும் எனக்கு.


எல்லாப் பேரக்குழந்தைகளுக்கும் கோலம், சமையற்குறிப்பு , எம்பிராய்டரி என்று எல்லாவற்றையும் சொல்லிக் கொடுத்துவிட்டார்கள்.
புத்தகங்களில் தனக்குப் பிடித்தவற்றை பைண்ட் செய்தோ அல்லது கைப்பட எழுதியோ  வைத்துக் கொள்வார்கள்.

அம்மாவின் பொக்கிஷங்கள் : - அவர்கள் கைப்படஎழுதி வைத்து இருந்த குழந்தைப் பாடல்களை. முன்பு பகிர்ந்து இருக்கிறேன். 


அக்கம் பக்கத்து வீட்டுப் பெண்கள் வயதுக்கு ஏற்றாற் போல் உறவு முறை சொல்லி கொண்டு வந்து   அம்மாவிடம்  புதிதாகக் கைவேலை, பின்னல்களைக்  கற்றுக் கொண்டு போவார்கள், செய்தவர்கள் சரியா என்று காட்டி அம்மாவிடம் பாராட்டைப்  பெற்றுச் செல்வார்கள்.

அக்கம் பக்கத்துக் குழந்தைகளை அம்மாவிடம் விட்டுச் செல்வார்கள் அவர்களுக்குப்  பருப்பு சாதம் ஊட்டி ,  சுவாமி பாட்டுச் சொல்லித் தூங்க வைப்பது என்று அந்த வேலையை  மகிழ்ச்சியாகச் செய்வார்கள்.

கார்த்திகை மாதத்தில் வரும் திங்கள் கிழமை (சோமவாரவிரதம்)வீட்டில்
என் அப்பாவைத் தவிர எல்லோரையும் கடைப்பிடிக்க வைத்தார்கள். காலையும், மதியமும், உணவு அருந்தாமல், மாலை மாவிளக்கு செய்து பூஜை முடிந்தபின் தான் உணவு. 

நாங்கள் பள்ளி சென்று வந்தபின் மீண்டும் ஒருமுறை குளித்துப் பூஜையில் உட்கார்ந்தால் இரண்டு மணி நேரம் பஜனை. அம்மா எப்போது பாடல் முடிப்பார்கள் உணவு தருவார்கள் என்று எங்களுக்கு இருக்கும்..பூஜை முடிந்தபின் அக்கம்பக்கத்தில் உள்ளவர்களுக்கு மாவிளக்குப் பிரசாதம் கொடுத்து வந்தபின்தான் எங்களுக்கு உணவு. அப்பாதான் எங்களிடம் , ’காலையிலிருந்து ஒன்றும் சாப்பிடாமல் இருக்கிறீர்கள் சீக்கீரம் சாப்பிடுங்கள்’’ என்பார்கள். 

இந்த விரதத்தைச் சிறு  வயதில் கடைப்பிடிக்கக் கஷ்டமாய் உணர்ந்தாலும், இப்போது ஆரோக்கியமாக இருக்கிறேன். இன்றும் சோமவார விரதம் கடைப்பிடித்து வருகிறேன்.

 வெள்ளிக் கிழமை பூஜைக்கு. அம்மா  சர்க்கரைப்  பொங்கல் செய்து தருவார்கள் . அஷ்டலட்சுமி ஸ்தோத்திரம் சொல்லி,’விளக்கு போற்றி’ சொல்லி, பூஜை முடிந்தபின்தான் காலை உணவு.   . அந்தப் பழக்கம்தான்  இறைவன் அருளால்  எல்லாம்  நல்லபடியாக நடக்கும் என்ற மனப் பக்குவத்தை இப்போது கொடுத்து இருக்கிறது.


குக்கர் கேஸ்கட்டில் உல்லன் நூலால் அம்மா  பின்னியது
டீப்பாய் மேல் போடு வதற்கு.

ஒட்டகம் 
கொலுவில்அம்மாவின் கைவேலைப்பாடுகள்  இடம்பெற்று அம்மாவின் நினைவுகளைத் தந்து கொண்டே இருக்கிறது.  கீழ்த் தட்டில் இருக்கும் பூஜாடிகள் அம்மா பின்னியவை. கீழே இருப்பது பாசியில் கோர்சா ஒயர் வைத்துப் பின்னியது. மேல் தட்டில் உள்ளது கோர்ஸா ஒயர் மட்டும். உள்ளே கெட்டுப் போன குண்டு பல்பு இருக்கும்.

அம்மா கல்யாணத்திற்கு முன் பின்னியது  கல்யாணம் செய்துவரும் போது   கொண்டு வந்தது . . இப்போது தம்பி வீட்டில் இருக்கிறது அவனை அதைப் படம் எடுத்து அனுப்பச் சொன்னேன் அனுப்பினான்
நடுவில் கன்னியாகுமரி அம்மன் படம் வைத்து இருக்கிறார்கள்.

பேத்தியைப் பின்ன வைத்தது
அம்மா கொலுவிற்கு ஒவ்வொரு தடவையும்  பின்னிக் கொடுத்து விட்டவை 


நானும், அம்மாவும்

பேரன், பேத்தி  வட நாட்டுச் சுற்றுலா அழைத்துச் சென்ற போது மகிழ்ச்சியுடன்  ரசித்துப் பார்த்தார்கள்.  


அம்மா சொல்லிக் கொடுத்து நான் பின்னியது- நிறைய பின்னினேன், தலையணை உறையில் ,குழந்தைகளின் கவுனில்.   இப்போது    இருப்பது  இந்த இரண்டுதான்.
இந்த இரண்டையும் கொலுவிற்கு மட்டும் எடுத்து மாட்டுவேன்.

அம்மா சொல்லிக் கொடுத்து கண் மேட்டித் துணியில் நான் பின்னிய   பிள்ளையார்.  கண் மேட்டி  நிறைய பின்னினேன், அவை எல்லாம் கிழிந்து விட்டது. என் அப்பா என் பெண்ணுக்கு கண் கெட்டு விடும் இப்படி இதை பின்ன சொல்கிறாயே என்று  அம்மாவைக் கேட்பார்கள்.

இந்த விநாயகரை பிரேம் செய்ய வேண்டும் என்று நினைத்து  இங்க் கொட்டி விட்டது என்று செய்யவில்லை.  மோதகம்  வைத்து இருக்கும் தட்டில் இடையில் பின்னவில்லை விடுபட்டு போய் இருக்கிறது. நாலு பக்கமும் பார்டர்  பின்ன வேண்டும். அதுவும் பாதியில் நிற்கிறது.



அக்காவை "உஷா" தையல் வகுப்பில் சேர்த்து படிக்க வைத்து  பரீட்சைக்குத் தயார் செய்த போது. மிஷின்  எம்பிராய்டரி மாதிரிகள் தைத்துச் செய்த ஆல்பம்-
அக்காவும் , அம்மாவும் சேர்ந்து நிறைய செய்வார்கள்  பாசியில் நாய்க் குட்டி, சோபா, அலங்காரம் செய்யும் கண்ணாடி மேஜை.  கீதோபதேசம் .

கை எம்பிராயிடு போடச் சொல்லிக் கொடுத்த அந்தப் புத்தகம் நிறைய பல  எம்பிராய்டரி டிசைன்கள் இருக்கிறது.  இப்படி சின்ன  கைக்குட்டை போல்  வெட்டித் தைத்து அதில்  டிசைன் வரைந்து ஒவ்வொரு தையலும் சொல்லித் தருவார்கள். முடிவு பெறாத பின்னல் ஊசியுடன் இருக்கிறது. அம்மாவின் நினைவாக வைத்து இருக்கிறேன் அப்படியே.



கண் மேட்டி டிசைன்   தொகுப்பு. பல வருடங்கள் ஆனதால் எல்லாம்  உடைந்து தூள் தூளாய்க்கொண்டிருக்கிறது..

ஒயர் கூடை நிறைய பின்னச் சொல்லிக் கொடுத்துப் பின்னி இருக்கிறேன். நாலு இதழ் கூடை, ஆறு இதழ் கூடை (நெல்லிக்காய்க் கூடை) பூக்கூடை,  பின்னி இருக்கிறேன்.







அப்பா பேப்பரில் இராமாயணம் பற்றிப் படித்த செய்திகளை வெட்டி   வைத்து இருப்பதை  நோட்டில் ஒட்டி வைத்து இருந்தார்கள் அம்மா.

எது நடந்தாலும் எல்லாம் இறைவன் அருள், இறைவன் விருப்பம் என்று தான் சொல்வார்கள்.


நடப்பது எல்லாம் அவன் செயல் என்று சொல்வார்கள். 


கீதாரெங்கன் என் அம்மாவைப் பற்றிச் சொல்லுங்கள் என்றார்கள். நிறைய பதிவில் அம்மாவை குறிப்பிடும் போதும் போனில் பேசும் போதும் அவ்வாறு சொல்வார்கள். அதனால் அம்மாவின் நினைவு நாளில் சொல்லி விட்டேன்.


வாழ்க வளமுடன்.


================================================================

62 கருத்துகள்:

  1. காலை வணக்கம்.  

    //இறைநம்பிக்கை என்ற துடுப்பைக் கொண்டு//

    இந்தத்துடுப்பு இருக்கக் கவலை எதற்கு?  நடனராகச் சொல்லி இருக்கிறீர்கள்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வணக்கம் ஸ்ரீராம், வாழ்க வளமுடன்
      நீங்கள் சொல்வது சரிதான். இறைவனின் பாதகமலங்களை பற்றியவர்களுக்கு கவலை வேண்டாம் தான். எந்த வேலை செய்து கொண்டு இருந்தாலும் ராம, கிருஷ்ணன் , சிவ மந்திரங்களை சொல்லிக் கொண்டே இருப்பார்கள் அம்மா.
      கிருஷ்ணா ராமா, சிவ சிவா என்று இரு என்பார்கள் அப்படியே வாழ்ந்தவர்கள் அம்மா.

      நீக்கு
  2. அப்பா மறைந்த அதே நாளில் மறைந்தது இன்னும் சிறப்பு.   என்ன ஒற்றுமை...

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அப்பா மறைந்த அதே மாதம், அம்மா ஞாயிறு , அப்பா திங்கள் .
      அம்மா அமாவாசை, அப்பா வளர்பிறை நவமி.அடுத்த மாதம் 5ம் தேதி அப்பாவுக்கு நினைவு நாள் வருகிறது.

      நீக்கு
  3. பிரமிக்க வைக்கும் நியாயக் கட்டுப்பாடுகள், திறமைகள்...   மனதால் நமஸ்கரித்துக் கொள்கிறேன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நம்மிடம் சொல்லிக் கொண்டு இருக்காமல் வாழ்ந்து காட்டியவர்கள் ஸ்ரீராம்.

      உங்கள் நமஸ்காரங்களுக்கும் கருத்துக்களுக்கும் நன்றி.

      நீக்கு
  4. பதிவின் ஒவ்வொரு வரிகளும் தாங்கள் அம்மாவின் மீது வைத்திருக்கும் ஆழமான அன்பை காட்டுகிறது.

    வீட்டில் பெரியோர்கள் இருப்பது பல வகையான நன்மைகளை தரும்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வணக்கம் தேவகோட்டை ஜி, வாழ்க வளமுடன்

      அம்மாவை நினைக்கும் போது மதிப்பும் மரியாதையும் தான். எப்போதும் பிரமிக்க வைப்பார்கள்.
      அப்பாமேல்தான் அளவு கடந்த அன்பு. அம்மா கண்டிப்பு, திருமணம் ஆனபின் தான் அம்மாமேல் பாசமும், அன்பும் எனக்கு ஏற்பட்டது. எனக்கு ஏதாவது வேண்டும் என்றால் அப்பாமூலம் நேரடியாக சாதித்து கொள்வேன். அம்மாமூலம் அணுக மாட்டேன்.நான் அப்பா செல்லம்.

      பெரியோர் இருப்பது பலவகை நன்மைதான்.
      உங்கள் கருத்துக்கு நன்றி.

      நீக்கு
  5. எல்லாம் ரொம்ப அழகாய் இருப்பதோடு பத்திரமாயும் வைத்திருக்கிறீர்கள். நானும் அம்மாவிடம் க்ரோஷா ஊசிப்பின்னல் கற்றுக்கொண்டு நிறையப் போட்டு என் கடைசி நாத்தனாருக்கும் சொல்லிக் கொடுத்தேன். அம்மாவின் ஊசி கூட அவரிடம் தான் இருந்தது. அதோடு இம்மாதிரி டிசைன்கள் வரைந்த பேப்பர், ட்ரேஸ் பண்ணிக் காப்பி எடுத்தவை என நிறைய உண்டு. நான் மிஷின் எம்ப்ராய்டரிங் கற்றபோது இம்மாதிரித் தான் மாதிரித் தையல்களை ஒரு மீட்டல் துணியில் போட்டு வைத்திருந்தேன். எங்கே போயிற்றோ. நைலான் வயரில் கூடை பின்னுவது இப்போது மீண்டும் வந்திருக்கு என முகநூல் சிநேகிதி ஒருத்தர் சொன்னார். நானும் நிறையப் போட்டிருக்கேன். பூக்குட்டை நான் போட்டதைத் தான் கோயிலுக்கெல்லாம் எடுத்துப் போவோம். பழைய நினைவுகள் பலவற்றை மீட்டி விட்டது இந்தப் பதிவு.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வணக்கம் கீதாசாம்பசிவம், வாழ்க வளமுடன்
      அம்மாவை நினைக்கும் போது எப்போதும் பிரமிப்பு ஏற்படுவது போல் உங்களை பார்க்கும் போதும் எனக்கு ஏற்படும். உங்களுக்கு தெரியாத விஷயமே இல்லை. அனைத்தும் தெரியும்.

      கரோஷா பின்னல் மற்றும் அம்மாவிடம் கற்றுக் கொள்ளவில்லை. தங்கைகள் பின்னுவார்கள். பதிவு உங்கள் பழைய நினைவுகளை மீட்டியதில் மகிழ்ச்சி எனக்கு.
      உங்கள் கருத்துக்கும் நினைவுகளை பகிர்ந்து கொண்டதற்கும் நன்றி.

      நீக்கு
    2. நேற்றுப் பார்க்கும்போதே திடீரென உடல்நிலை முடியலை. அதிக நேரம் நிற்க நேர்ந்ததால் காலில் வலி. உடலும் உள்ளமும் சோர்ந்து விட்டது! :) அதான் உடனே போய்ப் படுத்துட்டேன். உங்க அம்மாவின் கைவேலை எல்லாம் மிக அழகாகவும் இன்றும் கூடப்புத்தம்புதியதாகவும் காணப்படுகின்றன. ஒரு சிலவற்றைத் தவிர்த்து மற்றவற்றை அழகாய்ப் பராமரித்து வருகிறீர்கள்.உங்கள் இந்த ஈடுபாட்டுக்குத் தலை வணங்குகிறேன். உங்க அம்மாவின் கையெழுத்துப் பிரதி ஒன்றைகூட முன்னர் பகிர்ந்த நினைவு.

      நீக்கு
    3. "பூக்கூடை" என்பது அவசரத்தில் "பூக்குட்டை" என வந்திருக்கு. திருத்தி வாசிக்கவும்.

      நீக்கு
    4. வடக்கே போனதும் ஸ்வெட்டர் பின்னக்கூடக் கற்றுக்கொண்டு பல ஸ்வெட்டர்கள், ஷால், ஸ்கார்ஃப் போன்றவை போட்டுப் பல வருடங்கள் இருந்தன. பின்னர் அவை தேவை இல்லை இனிமேல் என்பதால் தானம் கொடுத்தோம். என்னோட தையல் மிஷினை 2002/2003 ஆம் ஆண்டுகளில் தான் விற்றோம். ரொம்பவே மன வருத்தம் அதிகமாக இருந்தது. அழுதேன். சுமார் 16 வயதிலிருந்து அந்த மிஷினோடு எனக்கு உறவு. இப்போது அனைத்தும் நினைவுகள் மட்டுமே! :))))))

      நீக்கு
    5. உங்கள் அம்மாவுக்கும் அப்பாவுக்கும் அவர்கள் நினைவுநாளைப் போற்றி வரும் உங்களுக்கும் என் வணக்கம்.

      நீக்கு
    6. //ஒரு மீட்டல்// ஒரு மீட்டர் துணியில்/ :)))) அவசரத்தில் நிறையத் தப்பு வந்திருப்பதைக் கூடக் கவனிக்கவில்லை. :)))))

      நீக்கு
    7. வாங்க கீதா, இப்போது எப்படி இருக்கிறது உடம்பு?

      எனக்கும் வெகு நேரம் நின்றால் கால்வலி வந்து விடுகிறது.
      அங்கு குளிர் இருக்கா? உடம்பை பார்த்துக் கொள்ளுங்கள்.

      நான் அம்மாவின் கைவேலை பொருட்களை கொலு பெட்டியில் தான் வைத்து இருப்பேன். அதனால் அவை எப்போதும் புதிதாக இருக்கிறது .

      சில பூஜாடிகள் மட்டும் உள்ளே பல்பு வைத்த ஜாடிகள் கீழே தவறி விழுந்து உடைந்து விட்டது. இன்னும் இருக்கிறது கொலு பெட்டியில் . ஒயரில் பனை ஓலை கிலு கிலுப்பை போலவே பின்னி இருப்பார்கள், உள்ளே மணி போட்டு இருப்பார்கள்.
      அதை ஆட்டினால் சத்தம் வரும்.

      அம்மாவின் பொக்கிஷங்கள் பதிவு சுட்டி கொடுத்து இருக்கிறேனே, அதில் அவர்கள் கையெழுத்துப் பிரதி இருக்கும். தங்கைகள் ஒவ்வொருவருக்கும் சுவாமி பாட்டு தன் கைபட எழுதி கொடுத்து இருக்கிறார்கள். அவர்கள் எழுத்து நன்றாக இருக்கும்.
      எனக்கு எழுதி கொடுத்தது ஜன்னல் பக்கம் வைத்து இருந்த போது மழை சாரல் அடித்து வீணாகி போய் விட்டது. ஆனால் அவர்கள் பிள்ளை பேறு மருந்து எழுதி கொடுத்தது இருக்கிறது.

      பூக்கூடை என்றே படித்தேன்.
      மீண்டும் வந்து கருத்து சொன்னதற்கு நன்றி.

      நீக்கு
    8. நானும் அம்மாவிடம் ஸ்வெட்டர் பின்ன கற்றுக் கொண்டு பின்னி இருக்கிறேன் என் அக்கா மகனுக்கு. ஸ்கார்ப் பின்னி இருக்கிறேன். மப்ளர் பின்னி இருக்கிறேன்.நானும் மிஷின் வைத்து இருந்தேன் என் சட்டைகளை நானே தைத்துக் கொள்வேன். குழந்தைகளுக்கு உள் ஆடைகளை தைப்பேன். நானும் மிஷினை கொடுத்து விட்டேன்.
      வருத்தமாய் தான் இருக்கும் .
      அம்மாவீட்டில் இருந்த தையல் மிஷின் அண்ணியிடம் இன்னும் நல்ல நிலையில் இருக்கிறது.
      சில நம் நினைவுகளில் மட்டுமே!
      அவைகளை மீட்டி சில நேரம் மகிழ்ச்சி அடைகிறோம், சில நேரம் வருத்தம் அடைகிறோம். நினைவுகள் வந்து கொண்டு தான் இருக்கும் நாம் இருக்கும் வரை.

      உங்கள் கருத்துக்கும் வணக்கத்திற்கும் நன்றி.

      கீதாரெங்கன் தான் கேட்டார்கள் அம்மாவை பற்றி எழுத சொல்லி அவர்களால் வர முடியவில்லை.

      நீக்கு
    9. ஸ்கார்ஃப் இருக்கிறது அதை படம் எடுத்து இன்னொரு முறை ஏதாவது பதிவில் போடுகிறேன். என் ஓர்ப்படிகள் நன்றாக பின்னுவார்கள் ஸ்வெட்டர், ஸ்கார்ப் எல்லாம் அவர்களிடமும் கற்றுக் கொண்டேன்.

      நீக்கு
  6. அப்புறமாக கருத்தைச் சொல்லுகிதேன்...
    வேலைக்கு நேரமாயிற்று....

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. காலை நேரம் வேலை நேரத்தில் பதிவுகளை படித்து கருத்து சொல்வது கஷ்டம் தான்.

      நீக்கு
  7. அருமையான அம்மாவுக்கு வணக்கம். எத்தனை அற்புதமான பெண்மணி.
    இவ்வளவு கற்றுத் தேர்ந்து அனைவருக்கும் சொல்லிக் கொடுத்திருக்கிறார்கள். உழைப்பாளி.
    பார்க்கப் பார்க்கப் பிரமிப்பாக இருக்கிறது.

    என் அம்மாவின் பொக்கிஷங்கள் தம்பியுடன் தங்கி விட்டன.

    நீங்களும் அம்மாவும் இருக்கும் படம் மிக அழகு.
    மீண்டும் வருகிறேன் அன்பு கோமதி.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வணக்கம் வல்லி அக்கா, வாழ்க வளமுடன்
      புதிதாக ஏதாவது பின்னி இருந்தால் வீட்டுக்கு வந்த உறவினர் நன்றாக இருக்கிறது என்றால் அவர்களுக்கு கொடுத்து விடுவார்கள் . மீண்டும் பின்னிக் கொள்வார்கள்.

      என் மாமியார், ஓர்ப்படி வீடுகளில் அம்மாவின் கை வண்ணங்கள் இப்போதும் இருக்கிறது. அவர்கள் வீட்டு கொலுவில்.

      அம்மாவின் பொக்கிஷங்கள் அவர் அவர்கள் கொஞ்சம் எடுத்துக் கொண்டோம்.
      உங்கள் அன்பான கருத்துக்கு நன்றி.

      நீக்கு
  8. எப்போதுமே கலைப் பொக்கிஷம் தங்களுடைய பதிவு....

    தொடக்கத்தில் தேவாரம் திருவாசகம் என்று பக்தி நெறி கொண்டு வாழ்க்கைக் கடலை இறையெனும் துடுப்பைக் கொண்டு கடந்த விதம் கண்ணில் நீரை வரவழைத்து விட்டது..

    அப்போதெல்லாம் அம்மாவுக்கும் மகள்களுக்கும் ஆச்சிக்கும் பேரக்குழந்தைகளுக்கும் இடையில் பந்தமும் பாசமும் பின்னிக் கிடந்தன...

    இப்போது அப்படி இல்லை.. என்பது எல்லார்க்கும் தெரியும்....

    தங்களது தாயைப் போன்ற பெருமக்கள் எல்லாருக்கும் முன் மாதிரியானவர்கள்..

    என்னுடைய வணக்கத்தைத் தெரிவித்துக் கொள்கிறேன்...

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வணக்கம் சகோ துரைசெல்வராஜூ, வாழ்க வளமுடன்
      திருவாசக புத்தகத்திற்கு தூணியில் உறை தைத்து அதில் சங்க்கிலி பின்னலில் திருவாசகம் என்று எழுதி இருப்பார்கள். அது போல் பகவத்கீதை புத்தகத்திற்கும் அது என் தங்கையிடம் இருக்கிறது.

      அப்போது இருந்தது போல் இப்போது இருக்க முடியவில்லை தான் என் அம்மா இருந்தவரை ஆலமரம் போல் இரு பக்க உறவினர்கள் வந்து அமர்ந்து செல்லும் இடமாக இருந்தது. இப்போது அவர் அவர் வீடுகளில் இருந்து கொண்டு நலமா என்று பாடி கொண்டு இருக்கிறோம். நல்லது, கெட்டதுகளில் கலந்து கொண்டு இருக்கிறோம் முடிந்தவரை.

      இப்படியாவது இருக்கமுடிகிறதே என்று நினைத்துக் கொள்ள வேண்டும்.

      உங்கள் அன்பான கருத்துக்கும், வணக்கத்திற்கும் நன்றி.

      நீக்கு
  9. எவ்வளவு அழகாக எல்லாம் செய்திருக்கிறார்? அதை நீங்கள் பத்திரமாக வைத்துக் கொண்டிருக்கிறீர்கள். உங்கள் அம்மாவைப் போலவே எங்கள் அம்மாவும் திறமையும், திடமும், உறுதியும் கொண்டவர். அவர்களிடமிருந்து நாம் கற்றுக் கொள்ள நிறைய இருக்கிறது.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வணக்கம் பானுமதி வெங்கடேஷ்வரன், வாழ்க வளமுடன்.
      ஆமாம் பானுமதி, அந்தக்கால அம்மாக்களிடம் திறமையும் திடமான மனஉறுதியும் இருந்தது. அவர்களிடம் கற்றுக் கொள்ள நிறைய இருக்கிறதுதான்.
      உங்கள் கருத்துக்கு நன்றி.

      நீக்கு
  10. போற்றுதலுக்கும்
    வணங்குதலுக்கும் உரியவர்

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வணக்கம் சகோ கரந்தை ஜெயக்குமார், வாழ்க வளமுடன்
      உங்கள் கருத்துக்கும் வணக்கத்திற்கும் நன்றி.

      நீக்கு
  11. வார்த்தைகளே இல்லை. அத்தனை அழகாக விதவிதமாக அம்மா செய்த்திருக்கிறாங்க. பொம்மைகளுக்கு அழகா பின்னி போட்டிருக்காங்க. அம்மாவுக்கு என் வணக்கங்கள். எத்தனை போல்ட் ஆ இருந்திருக்கிறாங்க. இருவரும் இருக்கும் படம் அழகா இருக்கு. நீங்கள் அத்தனையும் பத்திரமா வைத்திருப்பது அருமை அக்கா. அவங்க உங்க கூடவே இருந்து வழிநடத்துறாங்க. அம்மாவின் அழகான நினைவுகள்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வணக்கம் பிரியசகி, வாழ்க வளமுடன்
      இன்னும் சில அம்மா பின்னிய பாசி பொம்மைகள் தங்கை வீட்டில் இருக்கிறது.

      நீங்கள் சொல்வது சரிதான் அவர்கள் எங்களை எல்லாம் அன்பாக வழி நடத்தி செல்கிறார்கள் இன்றும்.

      வருத்தமும், மனபாரமும் வரும் போதேல்லாம் அம்மா தனி மனுஷியாக திடமாக நின்றது நினைவுக்கு வரும் . பிரச்சனைகளை சமாளிக்க இறை பக்தியை எடுத்து கொண்டு மனநலம், மனபலம் பெற்றார்களே! அது போல் நாமும் இருக்கவேண்டும் என்ற எண்ணம் வரும்.

      உங்கள் அன்பான கருத்துக்கு நன்றி அம்மு.

      நீக்கு
  12. போற்றப்பட வேண்டியவர்கள் உங்களம்மா எல்லோருக்கும் இம்மாதிரி கைவினைப்பொருட்கள் செய்ய வராது

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வணக்கம் பாலசுப்பிரமணியம் சார், வாழ்க வளமுடன்

      உங்கள் கருத்துக்கு நன்றி.

      நீக்கு
  13. மனதைப் பாதித்த பதிவு. நெகிழ்வு.

    பிறகு எழுதுகிறேன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வணக்கம் நெல்லைத்தமிழன், வாழ்க வளமுடன்

      உங்கள் கருத்துக்கு நன்றி.
      வாங்க நேரம் கிடைக்கும் போது.

      நீக்கு
  14. வணக்கம் சகோதரி

    தங்கள் அம்மாவின் அன்பு மனமும், தங்களையெல்லாம் கண்டிப்பாக வளர்த்த பாங்கும் கண்டு மகிழ்ச்சியடைகிறேன். தங்கள் அம்மாவை நீங்கள் எவ்வளவு நேசித்திருக்கிறீர்கள் என்பது இந்த பதிவிலே நாங்கள் அறிய முடிகின்றது. அவர்களின் கை வேலைகளும், தினமும் இயங்கும் நல்ல முறையான தன்மையையும் விரிவாக விளக்கிக் கூறியுள்ளீர்கள். வாழும் போது இறைபக்தியுடன் சிறப்பான முறையில் வாழ்ந்து உங்களுக்கு இப்போதும் அன்பான துணையாக இருக்கும் உங்கள் வீரமான அம்மாவுக்கு என்னுடைய நமஸ்காரங்கள்..

    உங்கள் பதிவு என் அம்மாவையும் நினைவுபடுத்தியது எங்கள் அம்மாவும் கண்டிப்பும், பாசமுமாக என் அண்ணாவையும். என்னையும் வளர்த்தார்கள். அந்த வளர்ப்புதான் இன்னமும் எங்களை நல் வழியில் செல்ல வைக்கிறது.

    உங்களது அம்மாவின் கை வேலைகள் பிரமிக்க வைக்கின்றன. எல்லாமே நன்றாக உள்ளது. நீங்கள் அதையெல்லாம் இன்னமும் பத்திரமாக வைத்திருந்து அவர்களை சிறப்பிப்பது அவர்களுக்கு பெருமையை தருகிறது. தங்கள் பதிவு மிகவும் நெகிழ்வை தருகிறது. பகிர்வுக்கு மிக்க நன்றி சகோதரி.

    நன்றியுடன்
    கமலா ஹரிஹரன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வணக்கம் கமலாஹரிஹரன், வாழ்க வளமுடன்

      அம்மா கோவில்களில் நடக்கும் சொற்பொழிவுகளுக்கு அழைத்து செல்வார்கள்.
      அங்கு சொல்லபடும் சீதாகல்யாணம் , ருக்மணி கல்யாணம், எல்லாம் கேட்க வைப்பார்கள். தொடர் சொற்பொழிவுகளில் கல்யாணம் வந்தால் அழைத்து சென்று விடுவார்கள். நல்ல வாழ்க்கைத்துணை அமையும் கேட்டால் என்று சொல்வார்கள்.
      அது போல் இறை பக்தி உள்ள கணவர் கிடைத்தார்.

      நீங்கள் சொல்வது போல் இப்போதும் அன்பான துணையாக இருக்கிறார்கள்.
      உங்கள் அம்மாவை நினைவுகூர்ந்தது மகிழ்ச்சி.

      சேலைகளுக்கு பார்டரில் பின்ன சொல்லி கொடுத்தார்கள். நவராத்திரி சமயம் கொலு படி அலங்காரத்திற்கு , பொம்மைகளுக்கு கழுத்து மாலை செய்வார்கள்.
      கலர் கலராக பேப்பர்களை கத்தரித்து பூ போல செய்து மாலை கட்டுவார்கள். தூரத்திலிருந்து பார்த்தால் நிஜ பூக்களால் செய்த மாலை போலவே இருக்கும்.
      பேத்திகளுக்கு சமையல் குறிப்புகள், கோலங்கள் நோட்டு புத்தகத்தில் எழுதி கொடுத்து இருக்கிறார்கள்.

      பதிவை படித்து அன்பான கருத்தை சொல்லி அம்மாவிற்கு நமஸ்காரங்கள் செய்தது மகிழ்ச்சி. நன்றி கமலா.


      நீக்கு
  15. அசர வைத்தன அம்மாவின் நினைவுகளும் அவர்களின் கைவினை பொக்கிஷங்களும் .எல்லாமே அழகு அக்கா .அந்த இங்க் பட்ட பிள்ளையார் இருக்கும்படத்தில் இங்கிற்கு மேலும் சரியா அடுத்த பக்கமும் இரண்டு மலர்களை தைச்சி ஓட்டிடுங்க பிறகு பிரேம் செய்தால்  இங்க அடையாளம் தெரியாது 

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வணக்கம் ஏஞ்சல், வாழ்க வளமுடன்
      உங்களுக்கு பிடிக்குமே கை வேலைபாடுகள் என்று நினைத்து கொண்டேன் பதிவு போடும் போது.

      நீங்கள் வந்து பார்த்து கருத்து சொன்னது மனதுக்கு மகிழ்ச்சி.
      அதிரா கார்த்திகை பிறை என்று பெயர் சூட்டிக் கொண்டது இப்படி காணமல் போகதானா? விடுமுறையா? எங்கும் பயணம் போய் இருக்கிறார்களா?

      நீங்கள் சொன்னது இரண்டு மலர்களை தைச்சி ஒட்டி விடுகிறேன்.
      உங்கள் கருத்துக்கு நன்றி.

      நீக்கு
    2. காணாமல் போகவில்லை கோமதி அக்கா, நேற்று எங்கள் நாட்டில் மறக்க முடியாத ஒரு தினமாகக் கொண்டாடப்படுகிறதெல்லோ.. அதனால என்னால் முடிஞ்சது மெளனமாக இருந்தேன்...

      நீக்கு
    3. ஓ விஷயம் தெரிந்து கொண்டேன்.
      மெளனம் கடைப்பிடித்தது நல்லதுதான்.
      உங்களை எங்கும் பார்க்காமல் கஷ்டமாய் இருந்தது அதுதான் ஏஞ்சலிடம் கேள்வி.

      நீக்கு
  16. வணங்குகிறேன்...

    இதை விட வேறு வார்த்தைகள் இல்லை...

    நன்றி அம்மா...

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வணக்கம் திண்டுக்கல் தனபாலன், வாழ்க வளமுடன்
      உங்கள் கருத்துக்கும் வணக்கத்துக்கும் நன்றி.

      நீக்கு
  17. அம்மாவின் நினைவுகள் போற்றுதலுக்குரியது. அவரது வழக்கங்கள் நமக்குப் பாடங்கள்.

    சிறுவயதுப் படத்தைப் பார்க்கும்போது நீங்கள் அப்படியே அம்மாவின் முகஜாடையைக் கொண்டிருப்பது தெரிகிறது.

    கைவேலைப்பாடுகள் கச்சிதம். தாங்கள் செய்த 2 கைவேலைப்பாடுகளும் நன்று.

    அம்மாவுக்கு என் வணக்கங்கள்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வணக்கம் ராமலக்ஷ்மி, வாழ்க வளமுடன்
      நீங்கள் சொல்வது சரி ராமலக்ஷ்மி, அவர்களது வழக்கங்கள் நமக்கு பாடங்கள்தான்.

      அம்மாவின் முகஜாடையா ? மகிழ்ச்சி. வல்லி அக்காவும் அப்படித்தான் சொன்னார்கள்.
      என் கை வேலைப்படுகளையும், அம்மாவின் கை வேலைப்பாடுகளைப் பற்றி கருத்து சொன்னதற்கும், அம்மாவுக்கு வணக்கங்கள் சொன்னதற்கும் நன்றி.

      நீக்கு
  18. ஆஆ அம்மா அப்பாவின் நினைவு நாளில் பல நினைவுகளைப் புரட்டி எங்களையும் கை வேலைகளுக்குள் மூழ்க வைத்துவிட்டீங்கள் கோமதி அக்கா.

    சிறிய வயசிலே தனிமையாகி, அனைவரையும் நல்ல அழகாக வளர்த்துவிட்டா அம்மா. அவர் தன் கடமையைச் செய்திட்டா ஒழுங்கா, இருப்பினும் சின்ன வயதில் அப்பாவை இழந்திட்டமே எனும் மனக்கவலை அவவுக்குள் இருந்திருக்கும் கடசிவரை.

    ஒரே மாதத்தில் இருவரும் மறைந்திருக்கிறார்கள், அப்பாவின் திதி கொடுக்குமுன்பே போயிருக்கிறா போலும் அந்த வருடம்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வணக்கம் அதிரா, வாழ்க வளமுடன்
      அம்மாவின் நினைவு நாள் அதிரா, அப்பாவிற்கு 5ம் தேதி வருகிறது.
      சின்ன வயதில் அப்பாவை இழந்தது வருத்தமே, ஆனால் அதை வெளி காட்ட மாட்டார்கள். அப்பாவின் 25வது வருஷதிதிக்கு எல்லோருக்கும் இரண்டு வெள்ளிவிளக்கு கொடுத்தார்கள். அதை அப்பாவின் படத்திற்கு முன் வைத்து வழிபட, இப்போது இருவருக்கும் வைத்து வழி படுகிறோம்.

      நீக்கு
  19. //என் தாயின் நினைவுகள் சில:--//

    அத்தனையும் எவ்வளவு அழகான விசயங்கள், நானும் இதில் பல விசயங்களைக் கடைப்பிடிக்க விரும்புவேன்.. சில சமயம் முடியாமல் போய்விடும்:).

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நானும் கடைபிடிக்கிறேன், சில நேரம் துணிகள் மடிக்க அலுப்பாக இருந்தால் அம்மா சொன்னது நினைவுக்கு வந்து எழுந்து மடித்து வைப்பேன். அது அது அதன் இடத்தில் இருக்க வேண்டும் அவர்களுக்கு. எந்த வேலையும் உடனே செய்யவேண்டும் அது தான் சில நேரம் முடியாது.

      நீக்கு
  20. தன் பிள்ளைகளுக்கு மட்டுமின்றி, பக்கத்து வீட்டுக் குழந்தைகளுக்கும் நல்ல ஒரு அம்மாவாக, பாட்டியாக இருந்திருக்கிறா, எனக்கும் இப்படி இருக்கவே விருப்பம், முடிஞ்சவரை என்னால் முடிந்த உதவிகளைச் செய்து வருகிறேன் அடுத்தவர்களுக்கும்.

    //குக்கர் கேஸ்கட்டில் உல்லன் நூலால் அம்மா பின்னியது//

    ஆவ்வ்வ்வ் என்னா ஒரு அழகு... இங்கு வெள்ளைகள் - வயதானோர் இப்படி நிறையப் பின்னிக் கொடுக்கிறார்கள், கடைகளுக்கும் மற்றும் சரட்டி ஷொப் களுக்கும்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. முடிஞ்சவரை அவர்களை பார்த்துக்கொண்டு மற்றவர்களுக்கும் உதவியாக இருப்பார்கள்.
      எப்போதும் எல்லோருக்கும் உதவி கொண்டு இருப்பார்கள். எங்களுக்கு சில நேரம் கோபம் வரும் , நமக்கு அவர்கள் வந்து உதவி செய்தார்களா? நீங்கள் ஏன் இழுத்து போட்டு கொள்கிறீர்கள் என்றால் செய்யாதவர்களுக்கு செய்து காட்டவேன்டும். என்பார்கள்.அவர்கள் அப்படி இருந்தால் நாமும் அப்படி இருக்க கூடாது என்பார்கள்.


      நீக்கு
  21. கொலுக்கள் மிக அழகு. நிறையக் கைவேலைகள் பண்ணியே தன் பொழுதைக் கழிச்சிருக்கிறா அம்மா, எனக்கு இவை பிடிக்கும், ஆனா பழகிப்பார்த்தேன் என்னால் முடியவில்லை, எங்கட அம்மாவும் இப்படி வூலனில் பின்னுவா, நிறைய கழுத்துக்குக் கட்ட மஃப்ளர்கள் பின்னித் தந்திருக்கிறா, ஆனா இக்காலத்தில கொம்பியூட்டர் ரிவி என புரோகிராம்ஸ் அதிகரித்து விட்டமையால், இப்படியான விஷயங்கள் செய்வது குறைந்து விட்டது.

    //தந்தையும் தாயும்//
    அது தங்கையும் தாயும் என வந்திருக்கோணும் கோமதி அக்கா.

    உங்களைப்போலவே அச்சு அசலாக இருக்கிறா தங்கை, நிறம் அதிகம்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அம்மா தொலைக்காட்சியில் கைவேலைகளை செய்து காட்டுவதையும் பார்த்து செய்து விடுவார்கள். கண்ணாடி பீரோவிற்கு கற்றன் தைத்து அதில் பூடிசைன் தைத்து போடுவார். அப்போதும் நாடகம் எல்லாம் உண்டு ஆனால் அவ்வளவாக பார்க்க மாட்டார்கள். மருமகள் இருவரும் சமையல் பொறுப்பை பார்த்து கொண்டதால் அவர்கள் அவர்களுக்கு உதவியாக ஏதாவது செய்து கொடுப்பார்கள். அப்புறம் கைவேலைகள், அப்புறம் கடவுள் வழிபாடுதான்.
      //தந்தையும் தாயும்//

      முதலில் இருந்த படத்தை கீழே போட்டு இருந்தேன். அதை கட் செய்து மேலே போட்ட போது இந்த தந்தையும் தாயும் என்பதை எடுக்க மறந்து இருக்கிறேன்.

      நானும் அம்மாவும் அதிரா. என்னை அடையாளம் தெரியவில்லையா? கேலி செய்கிறீர்களா?
      இப்போது திருத்தி விடுகிறேன்.
      உங்கள் கருத்துக்களுக்கு நன்றி.



      நீக்கு
    2. ஓ கோமதி அக்கா, தந்தையும் தாயும் என தலைப்பு இருந்தமையாலும், அதிலிருக்கும் கோமதி அக்கா நல்ல வெள்ளையாக இருப்பதாலும்[இப்போதையதைவிட] தங்கை என்பதைக் கைமாறி தந்தை என ரைப் பண்ணிட்டீங்க என நினைச்சு விட்டேன்.

      அப்போ, மாமா உங்களை அதிகம் வெயிலுக்குள் கூட்டிச் சென்று நிறம் குறையப் பண்ணிட்டார்போல ஹா ஹா ஹா.

      நீக்கு
    3. அதிரா, நல்ல சந்தேகம்.
      பழைய மாதிரியே இருக்க முடியுமோ!
      அக்காவிற்கு வயது ஆகிறதே அதிரா.

      நீக்கு
  22. அந்த குட்லக் பார்க்க, எங்கள் வீட்டிலும் நாம் சின்னவர்களாக இருந்தபோது, இப்படி நிறைய எம்பராயற்றி வேர்க் மெசினில் செய்து அம்மா வைத்திருந்தது, குட்லக் போட்ட தலையணை உறைகள் எல்லாம், ஆனா அவை பழுதாகி காணாமல் போய்விட்டது, பின்னர் அம்மாவும் அவற்ரைக் கைவிட்டு விட்டா..

    //கை எம்பிராயிடு போடச் சொல்லிக் கொடுத்த அந்தப் புத்தகம் நிறைய பல எம்பிராய்டரி டிசைன்கள் இருக்கிறது. //

    ஆவ்வ்வ் நானும் இப்படிக் கொஞ்சம் கலக்‌ஷன்ஸ் வைத்திருக்கிறேன்.. பல தலையணை உறைகள் ஆரம்பித்துப் பாதியில் நிக்குது, பலது பற்றன்ஸ் போட்டுப் போட்டு பலருக்கு கிஃப்ட் டாக கொடுத்துள்ளேன்.. இன்னும் செய்யோணும், நேரம் கிடைப்பது இப்போ மிகவும் கஸ்டமாக இருக்கு.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. விடுமுறை தினத்தில் வெயிலில் விளையாட விடமாட்டார்கள். "மாலை வெயில்தாழ விளையாடலாம" என்று மதிய நேரம், கோலம் போட்டு காட்டுவது, தையல் சொல்லி கொடுப்பது செய்வார்கள்.
      குட்லக் பெரிய வாசல் கற்றன், பாதி கற்றன் எல்லாம் பின்னீ இருக்கிறோம். அவை எல்லாம் கிழிந்து விட்டது.

      நேரம் கிடைக்க மாட்டேன் என்கிறது ஒரு பக்கம் என்றாலும் போதும் இனி எல்லோரும் வித விதமாய் படுக்கை விரிப்பு, கற்றன்கள் வாங்கி விடுகிறார்கள் அப்புறம் ஏன் கஷ்டபட்டு பின்னிக் கொண்டு என்று பின்னுவதில்லை.

      நீங்கள் எல்லோருக்கும் கிஃப்டாக கொடுத்துள்ளது மகிழ்ச்சி.உங்களிடம் பெற்றவர்களுக்கும் மகிழ்ச்சி. நேரம் கிடைக்கும் போது செய்யுங்கள்.

      நீக்கு
  23. //நடப்பது எல்லாம் அவன் செயல் என்று சொல்வார்கள். //

    உண்மைதான், அத்தனையும் அழகிய நினைவுகள் பொக்கிஸங்கள்.. ஆனா உங்களுக்குப் பின் இதை எல்லாம் யார் பராமரிப்பார்கள் கோமதி அக்கா.. அப்படி நினைச்சே நான் பலதை இப்போ உடனுக்குடன் வீசி விடுவதும் உண்டு... வைத்துப் பார்க்கையில் ஒரு மகிழ்ச்சிதான். படமெடுத்து அல்பமாக்கி வையுங்கோ.. அது எக்காலத்திலும் இருக்கும்.

    பதிலளிநீக்கு
  24. எனக்கு நினைவு பொக்கிஷங்களாக நான் வைத்து இருக்கிறேன்.
    எனக்கு பின் யார் பராமரிப்பார்கள் என்று தெரியாது.
    தேவை படுவோர்களுக்கு அதை கிடைக்க செய்வார் ஆண்டவன் என நினைக்கிறேன்.


    நீங்கள் சொல்வது போல் ஆல்பம தயார் செய்து வைக்கிறேன். காலத்துக்கும் இருக்கும்.
    நானும் இப்போது எதையும் சேகரிப்பது இல்லை. முன்பு சேர்த்து வைத்தது.
    அப்பாவின் புத்தகங்களை மாமாவும், அம்மாவின் சிலவற்றை நானும் எடுத்து வந்தது போல் வேண்டுமென்றால் எடுத்து கொள்ளட்டும். மற்றதை தேவை படுவோருக்கு கொடுக்கட்டும்.

    உங்கள் கருத்துக்களுக்கு நன்றி அதிரா.

    பதிலளிநீக்கு
  25. ரொம்ப அழகான பதிவு மா ...அம்மாவின் நினைவுகள் ...


    இன்று உங்கள் நினைவில் மட்டும் அல்ல எங்கள் நினைவிலும் அம்மாவின் நினைவுகள் ...


    எத்தனை அழகான வேலைப்பாடுகள் அனைத்தும் மிக அழகு மா ...

    சிலவற்றை நானும் செய்து உள்ளேன் ...

    அந்த ஒட்டகம் மிக கவர்ந்தது என்னை இது போல இதுவரை கண்டது இல்லை ..


    கன்னியாகுமரி அம்மன் படம் வைத்து உள்ள frame ..அழகு ..

    தங்களின் தாஜ்மஹால் படமும் மிக ரசித்தேன் ...

    ரசனையான பதிவு ...

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வணக்கம் அனுபிரேம், வாழ்க வளமுடன்
      அம்மாவின் நினைவுகளை போற்றியதற்கு நன்றி அனு.
      அந்த ஒட்டகம் கொஞ்சம் பிரிய ஆரம்பித்து விட்டது, பல வருடம் ஆகி விட்டதால்.
      முன்பு சிறு வயதில் என் சகோதரி சிகரெட் அட்டையில் இந்த ஒட்டகம் செய்து இருக்கிறாள். பள்ளி கூடத்தில் சொல்லி கொடுத்தது.
      அப்போது அதை படம் எடுத்து வைத்து கொள்ளவில்லை.
      அம்மா கன்னியாகுமரி அம்மன் வைத்து இருப்பது போல் என் மாமியார் சரஸ்வதி அம்மன் வைத்து இருப்பார். அந்தக்காலத்தில் இப்படி பின்னல் பிரேம் எல்லோர் வீட்டிலும் இருக்கும்.

      பெரிய கண்ணாடி பாட்டில் உள்ளே சிறு பாசியில் பின்னிய மரம், கிளிகள் எல்லாம் இருக்கும். அது இப்போது யாரிடம் இருக்கிறது என்று தெரியவில்லை.

      பதிவை ரசித்து படித்து கருத்து சொன்னதற்கு நன்றி அனு.

      நீக்கு