வியாழன், 21 நவம்பர், 2019

அன்றும் இன்றும்


ஒரு காலத்திலே என்று சகோ துரைசெல்வராஜூ அவர்கள் பதிவு போட்டு இருந்தார்கள் இன்று.

அந்தக் காலத்தில் குழந்தைகள் விளையாடிய விளையாட்டுக்களைப் பற்றியும், வீடு நிறைய குழந்தைகள் அண்ணன், அக்காள், தங்கைகள், தம்பிகள் என்று வீட்டில் அதிக குழந்தைகள் இருப்பார்கள்; அவர்கள் விளையாடியும், அவர்களுக்குள் சண்டையிட்டும் , பின் சமாதானம் ஆகியும் களிப்பார்கள்.
தாத்தாவோடு விளையாடுவது எல்லாம் வரும் அந்த காணொளியில்.நாங்களும் அப்படித்தான் நிறைய உடன்பிறப்புகளுடன் விளையாடி மகிழ்ந்தோம்.


அவர்கள்  பதிவுக்குப் போட்ட பின்னூட்டத்தில், மகனது ஊரில் தமிழ்ச்சங்கத்தில் "அன்றும் இன்றும்" என்ற தமிழ் நாடகம் போட்டார்கள். பேரன் அதில் நடித்திருந்தான். அந்தக் காணொளியைப் பதிவாகப் போடுகிறேன் என்று எழுதியிருந்தேன். அவர்களும் உங்களிடமிருந்து பதிவே இல்லையே! விரைவில் பதிவு போடுங்கள் என்றார்கள். அவரது விருப்பப்படி பதிவு போட்டாயிற்று. நன்றி சகோ.


அந்தக் காணொளி இங்கே


பேரன் கவின்

நாடகத்தை  எழுதிக் குழந்தைகளை நடிக்க வைத்தவர்கள் திரு . துரைராஜ் ஸ்ரீராமூலு அவர்கள் மற்றும் திருமதி .லலிதா அவர்கள்.

மகனது ஊரில் (பினீக்ஸ்) இந்த வருடம் அரிசோனா  தமிழ்ச் சங்கம் நடத்திய தீபாவளி 'சரவெடி" நிகழ்ச்சியில்
'அன்றும் இன்றும்' என்ற நாடகத்தில், 1964 ல் குழந்தைகள் விளையாடிய விளையாட்டை 2019 ல் உள்ள குழந்தைகள் 'டைம் மிஷினி"ல் போய்ப் பார்ப்பதாய் வரும்.(ஒவ்வோராண்டும் சரவெடி என்று நிகழ்ச்சியை நடத்துவார்கள்)

ஒரே மாதிரி இருக்காமல் ஏதாவது செய்யலாம் என்று நினைக்கும் குழந்தைகள் டைம் மெஷினில் ஏறிப் போய்  தாத்தா பாட்டி காலத்திற்கு போய் அந்தக் காலக் குழந்தைகளிடம்  இது என்ன விளையாட்டு  என்று கேட்டு அவர்கள் விளையாடும் விளையாட்டைப் பார்ப்பார்கள்.

அந்தக்கால குழந்தைகள் நீங்கள் என்ன  விளையாடுவீர்கள் என்று கேட்கும் போது,"  நாங்கள் மொபைல், போனில் நிறைய விளையாட்டு இருக்கும் அதை விளையாடுவோம்" என்பார்கள். அதற்கு அந்தக்காலக் குழந்தைகள்," கையில் வைத்துக் கொண்டு விளையாடுவீர்களா? நாங்கள் விளையாடும் விளையாட்டு எவ்வளவு தெரியுமா?" என்று  விளையாட்டின் பேரை அடுக்கிக் கொண்டே போவார்கள். வீட்டுக்குள் விளையாடும் விளையாட்டு, வீட்டுக்கு வெளியே விளையாடும் விளையாட்டு என்று சொல்வார்கள்.

2019 ஆம் ஆண்டில் இருக்கும் குழந்தைகளை அழைத்து செல்லும்  டைம் மிஷினை இயக்கி அழைத்து  செல்பவராக எங்கள் பேரன் வருவான். வழிகாட்டியாக வருவான்.

 அந்நிய நாட்டில் குழந்தைகள் ஆர்வமுடன்  தமிழ் படித்து தமிழ்  நாடகம் நடிப்பது எப்படி இருக்கிறது என்று சொல்லுங்கள், காணொளியை ப்பார்த்து.
சின்ன காணொளிதான்.


பேரன்  விதவிதமாய்ச் செய்து காட்டி மகிழ்விப்பான்.


"ஆச்சி! இது என்ன சொல்லுங்கள்?' என்று ஸ்கைப்பில் வந்து  கேட்பான்.
"பப்பட் ஷோ" என்று சொல்லித் திரையை விலக்குவான்

உங்களுக்கும் தாத்தாவிற்கும் சூப் வேண்டுமா ? என்று கேட்டுக் கப்பலில் சூப் வருவதைக் காட்டுவான்
ராஜா கதை சொல்வான்  சிம்மாசனம் வைத்து ராஜா அதில் அமர, கட்டியம் கூறுவான் 'ராஜாதி ராஜ ராஜகுலதிலக ராஜ மார்த்தாண்டர் வருகிறார்'  பராக் பராக் சொல்லிக்  கதையை ஆரம்பிப்பான்.

பேரன் விதவிதமாய் விளையாட்டுப் பொருட்கள்  வைத்து இருக்கிறான். வீட்டுக்கு வரும் நண்பர்களுடன் விளையாடுவான் . போகும் இடங்களுக்கும் விளையாட்டுக்கு என்று தனியாக ஒரு பை எடுத்துப் போவான். 


என் தங்கை பேரன் , பேத்தி எங்கள் வீட்டுக்கு வந்து பல்லாங்குழி விளையாடிய போது

என் தம்பியின் குழந்தைகள் கல்லூரி மாணவிகள். அவர்களும் விரும்பி பல்லாங்குழி விளையாடினார்கள்.
 ஒத்தையா, ரெட்டையா விளையாட புளியங் கொட்டைகள், ஏழுகல் விளையாட்டுக்கு (சொட்டாங்கல் ) கறுப்பு கல், சிவப்புக்கல்,  தாயம் விளையாட நம்பர் கட்டைகள், பெரிய சோழிகள் , Brainvita puzzle, Chinese Checkers
தாயகட்டை  பித்தளையில் உள்ளது எங்கோ கை மறந்தாற் போல்வைத்து விட்டேன். தேட வேண்டும்.  
குழந்தைகள் வந்தால் விளையாட எங்கள் வீட்டில் நிறைய அந்தக்கால விளையாட்டுச் சாமான்கள்  இருக்கிறது.

கும்பகோணத்தில் ஒரு ஓட்டலில் குழந்தைகள் விளையாட நிறைய விளையாட்டு சாமான்கள், தொலைக்காட்சி பெட்டியில் குழந்தைகள் கார்ட்டூன் போட்டு இருந்தார்கள் , ஆனால் இந்த குழந்தை தாயின் மொபைலை வாங்கிப் போய்த் தனியாக சோபாவில் அமர்ந்து ஏதோ தனியாக விளையாடுகிறான்.

எந்தக்காலமாக இருந்தாலும் குழந்தைகள் அவர்களுக்கு என்று ஒரு உலகம் உருவாக்கிக் கொண்டு அதில் விளையாடி மகிழ்கிறார்கள்.
                                                                   வாழ்க வளமுடன்.

71 கருத்துகள்:

  1. வணக்கம் சகோ
    உண்மையிலேயே அயல் தேசத்தில் வாழ்பவர்கள்தான் தமிழ் மொழியை வாழவைக்க முயன்று கொண்டு இருக்கின்றார்கள்.

    ஆனால் தமிழகத்தில் நுணி நாக்கு ஆங்கிலத்தில் பேசுகின்றார்கள்.

    காணொளி கண்டேன்

    தங்களது பெயரன் கவினுக்கு எமது வாழ்த்துகள்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வணக்கம் தேவகோட்டை ஜி, வாழ்க வளமுடன்
      அங்குள்ள தமிழ் பள்ளியில் பல மொழி பேசும் குழந்தைகள் இருக்கிறார்கள். அவர்களும் தமிழை ஆர்வமுடன் கற்கிறார்கள்.
      தமிழ் பேசும் பெற்றோர்கள் ஆசிரியர் பணியை மகிழ்ச்சியுடன் ஒரு தொண்டாக செய்கிறார்கள். வாரம் ஒரு நாள் அதற்கு ஒதுக்கி விடுகிறார்கள்.
      பேரனுக்கு உங்கள் வாழ்த்து கிடைத்தது மகிழ்ச்சி.
      உங்கள் கருத்துக்கு நன்றி.

      நீக்கு
  2. வணக்கம்.  
    துரை செல்வராஜூ ஸார் நம் நினைவுகளை எல்லாம் தூண்டி விட்டு விட்டார்.  நாந்தி தஞ்சாவூர் தெருக்களில் கொஞ்சம் மனதார அலைந்து விட்டு வந்தேன்.  மருத்துவக்கல்லூரி குடியிருப்பில் புட்பால் விளையாடி காலில் பாட்டில் ஓடு குத்திக்கொண்டேன்!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வணக்கம் ஸ்ரீராம், வாழ்க வளமுடன்
      ஆமாம் , இந்த பதிவு எழுத துரைசெல்வராஜூ அவர்கள் தான் காரணம்.
      நம் நினைவுகளை தூண்டி விட்டு விட்டார். மகிழ்ச்சியான நினைவுகளும், நீங்கள் சொன்னது போல் விளையாட்டில் விழுபுண்கள் பெற்றதும் நினைவுகளில் வந்து போனது.
      காலில் அடி பட்டு கொண்டு வீட்டுக்கு போன போது அம்மாவுக்கு வருத்தமும் கோபமும் வந்து இருக்கும் இல்லையா?

      நீக்கு
    2. காலில் கண்ணாடியைக் குத்திக் கொண்டு வீட்டுக்குப் போனதும் நாலு சாத்துப்படி
      (சாத்துக்குடி அல்ல!..) கிடைத்ததா.. இல்லையா?...

      சும்மா... தான் .. வெளையாட்டுக்கு!..

      இஃகி.. இஃகி..இஃகி!..

      நீக்கு
  3. தமிழ்ச்சங்கத்தில் அன்றும் இன்றும் கான்செப்ட்டை அனைவரும் ரசித்திருப்பார்கள். நம் ஊரில் நாம் இதெல்லாம் விளையாடுவது போல அவர்களூரில் அவர்கள் அந்தக் காலத்தில் என்ன விளையாடி இருப்பார்கள்?

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தமிழ்ச்சங்கத்தில் அனைவரும் இந்த நாடகத்தை ரசித்தார்களாம், கொடுக்கபட்ட கொஞ்ச நேரத்தில் முடிந்தவரை சொல்லி இருக்கிறார்கள். இதையே வேறு ஒரு இடத்தில் போட முடியுமா இந்த நாடகத்தை என்று கேட்டு இருக்கிறார்களாம்.

      அங்குள்ளவர்கள் இங்கிலாந்தில் என்ன விளையாடினார்களோ அதை விளையாடி இருப்பார்கள் அந்தக்காலத்தில்.

      அங்கும் பரபதம் போல் விளையாட்டு, சதுரங்கம், ஏரோபிளேன் பாண்டி போல் எல்லாம் விளையாடி இருக்கிறார்கள். பூங்காவில் இவை காணப்படுகிறது.

      கீழடியில் கிடைத்த பொருடகளை மதுரை தமிழ்ச்சங்கத்தில் கண்காட்சியாக வைத்து இருக்கிறார்கள் அந்தக்கால குழந்தைகள் விளையாடிய விளையாட்டுப் பொருட்கள் கிடைத்து இருப்பதை வைத்து இருக்கிறார்கள்.

      நீக்கு
  4. பேரனுக்கு வாழ்த்துகள்.  நல்ல கற்பனையும், பல்வேறு திறமைகளும் கவினுக்கு இருப்பது தெரிகிறது.  மென்மேலும் உயர பிரார்த்தனைகள்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஆமாம் ஸ்ரீராம், பேரன் எப்போதும் நிறைய கற்பனையாக விளையாடுவான், அதில் நம்மையும் இணைத்துக் கொள்வான். உங்கள் ஆசிகள், பிரார்த்தனைகளுக்கு மகிழ்ச்சி, நன்றி.

      நீக்கு
  5. பல்லாங்குழி, தாயம், ஆடுபுலி ஆட்டம், பரமபதம்...    என்னென்ன விளையாட்டுகள் விளையாடி இருக்கிறோம்...  கிட்டிப்புள், கோலிக்குண்டு, கிரிக்கெட், புட்பால், கபடி (ஒரு டம்ளர் ஜெயித்திருக்கிறேன் இதில்!) உட்கார்ந்தாவா நின்னாவா?, ஓடிப்பிடித்து...   கண்ணாமூச்சி...

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நிறைய விளையாட்டுக்கள் விளையாடி இருக்கிறோம் தான். நீங்கள் டம்ளர் பரிசு பெற்று இருப்பது மகிழ்ச்சியான நினைவுகள்.

      கல்லா, மண்ணா, பிஸ்கட் பிஸ்கட் என்ன பிஸ்கட்? வெயிலோடு விளையாடி வெயிலோடு விளையாடி பாடல் நினைவுக்கு வருது.

      நீக்கு
    2. உங்கள் கருத்துக்களுக்கு நன்றி ஸ்ரீராம்.

      நீக்கு
  6. அயல்நாட்டில் இருந்தாலும் தமிழில் பேசிப் பழகி, தமிழில் எழுதும் வழக்கம் இருப்பதற்கு வாழ்த்துகள். ஏற்கெனவே உங்கள் பேரன் நடித்த நாடகம் ஒன்றையும் பகிர்ந்திருந்தீர்கள்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வணக்கம் கீதா சாம்பசிவம், வாழ்க வளமுடன்
      தமிழ்ச்சங்கம் , மற்றும் வீடுகளில் பேசுவதால் குழந்தைகள் தமிழ் பேசுகிறார்கள்.
      ஒவ்வொரு வருடமும் நடக்கும் நிகழ்ச்சியில் பங்கு கொண்டு விடுவான்.
      போனா ஆண்டு' பக்தபிரகலாதன்' நாடகத்தில் அமைச்சராக நடித்தான்.
      உங்கள் வாழ்த்துக்களுக்கு நன்றி.

      நீக்கு
  7. காணொளி பார்க்கணும். காலையில் பார்க்கிறேன்.

    பதிலளிநீக்கு
  8. காணொளி கண்டு ரசித்தேன்.  குழந்தைகள் ரசித்திருப்பர்கள் என்பதோடு, அவர்களுக்கு அதெல்லாம் என்ன என்று ஒரு கேள்வியும் வந்திருக்கும்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஸ்ரீராம், குழந்தைகளுக்கு அந்த விளையாட்டுக்களை சொல்லி கொடுத்து இருக்கிறார்கள் வாரம் ஒரு முறை தமிழ் கற்க போகும் போது கிடைக்கும் நேரத்தில் குழந்தைகள் தங்கள் நண்பர்களுடன் விளையாடுகிறார்கள்.

      நீக்கு
  9. பதில்கள்
    1. வணக்கம் சகோ கரந்தை ஜெயக்குமார் வாழ்க வளமுடன்
      பேரனை வாழ்த்தியது மகிழ்ச்சி.
      உங்கள் வாழ்த்துக்களுக்கு நன்றி.

      நீக்கு
  10. கவின் செல்லத்திற்கு பாராட்டுகள்... வாழ்த்துகள்...

    காணொளி அருமை...

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வணக்கம் திண்டுக்கல் தனபாலன், வாழ்க வளமுடன்
      பேரனுக்கு பாராட்டுக்கள், வாழ்த்துக்கள் தெரிவித்தது மகிழ்ச்சி.
      காணொளி பார்த்தது அறிந்து மகிழ்ச்சி.
      உங்கள் கருத்துக்கு நன்றி.

      நீக்கு
  11. மகிழ்ச்சி... எனது விருப்பத்தினையும் ஏற்று பதிவு வழங்கியதற்கு மகிழ்ச்சி...

    படங்கள் ஒவ்வொன்றும் அழகு.. அற்புதம்...

    காணொளி அருமை..

    தங்கள் அன்பு கவினுக்கு நல்வாழ்த்துகள்..

    வாழ்க நலம்... வாழ்க தமிழ்..
    வாழ்க பழங்கலைகள்!...

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வணக்கம் சகோ துரைசெல்வராஜூ, வாழ்க வளமுடன்

      எழுதுவதற்கு நேரம் ஒதுக்க முடியாமலும், ஒருவித அலுப்பும், சலிப்பும் ஏற்பட்டு இருந்த நேரத்தில் , உங்கள் பதிவும், உங்கள் அழைப்பும் தான் உற்சாகம் கொடுத்து எழுத வைத்தது, அதற்கு நன்றி உங்களுக்கு.

      கவினுக்கு நல்வாழ்த்துக்கள் சொன்னதற்கு நன்றி.
      உங்கள் எல்லோர் வாழ்த்துக்களும் அவனை மேன்மேலும் சிறப்பாக இயங்க வைக்கும்.
      உங்கள் கருத்துக்கும் வாழ்த்துக்களுக்கும் நன்றி.

      நீக்கு
  12. கவினின் நாடகத்தை ரசித்தேன் மா ...

    குட்டி தம்பிக்கு எனது வாழ்த்துக்கள் ..


    பல்லாங்குழி விளையாடும் குழந்தைகள் மிகவும் ஈர்கிறார்கள்..அழகு


    சின்ன சின்ன விளையாட்டு சாமான்களும் மிக அழகு மா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வணக்கம் அனுபிரேம், வாழ்க வளமுடன்.
      கவின் குட்டியை வாழ்த்தியது மகிழ்ச்சி.
      எங்கள் வீட்டுக்கு வந்தால் பல்லாங்குழி விளையாடுவார்கள். அவர்கள் பாட்டிவீட்டில் பல்லாங்குழி, தாயம் விளையாடுவார்கள் தங்கை பேரன் நம் காய்களை வெட்டி வீழ்த்துவதிலேயே இருப்பான். சின்னவள் சாமி பாட்டுக்கள், சாமி கதைகள் சொல்வாள்.

      சின்ன சின்னதாய் நிறைய விளையாட்டு சாமான்கள் உண்டு. ஒரு நாள் அதை பதிவாக போடுகிறேன்.
      உங்கள் கருத்துக்கு நன்றி அனு.

      நீக்கு
  13. ஆஆ பேரனின் வீடியோவை ஃபுல் ஸ்கிரீனில் பார்த்தேன் அருமை அருமை, குழந்தைகள் கஸ்டப்பட்டு மிக அழகாக தமிழை உச்சரிக்கிறார்கள். உங்கள் பேரனும் அழகாக உச்சரிக்கிறார் தமிழை. வெளிநாட்டில் இருப்போர்கள்தான் இப்படி தமிழ்ப் புரோக்கிராம்ஸ் வைத்து தமிழை வளர்க்கப் பாடுபடுகிறார்கள்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வணக்கம் அதிரா, வாழ்க வளமுடன்.
      ஃபுல் ஸ்கிரீனில் வீடியோவை பார்த்தது மகிழ்ச்சி. வளர்ந்த குழந்தைகள் இப்போதுதான் தமிழ் படிக்கிறார்கள். கவின் சிறு வயது முதலே படிக்கிறான். தமிழை தாய் மொழியாக இல்லாத குழந்தைகளும் அழகாய் தமிழ் கற்றுக் கொண்டு அருமையாக பேசுகிறார்கள்.

      நீக்கு
  14. உண்மைதான், ஆதிகால விளையாட்டு என்பதைவிட, அந்த ஊரில் பக்கத்து வீட்டினரோடெல்லாம் ஒன்றுகூடி பல விளையாட்டுக்கள் விளையாடுவது இன்றைய பிள்ளைகளுக்கு கிடைக்கவில்லையே...

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஆமாம் அதிரா, பக்கத்து வீட்டு குழந்தைகளுடன் விளையாட முடியாமல் இருப்பது உண்மைதான். விடுமுறையில் நண்பர்கள் வீட்டுக்கு வருகிறார்கள் அப்போது விளையாடி மகிழ்வான். பள்ளித் தோழன் சில சமயம் வருவான் காலை அவன் அம்மா விட்டு செல்வார்கள் மாலை வந்து அழைத்து செல்வார்கள். அந்த ஊர் பையன்.

      நீக்கு
  15. //நாங்களும் அப்படித்தான் நிறைய உடன்பிறப்புகளுடன் விளையாடி மகிழ்ந்தோம்.//
    இப்போ வீட்டுக்குள்ளேயே சகோதரங்கள் சாப்பிடும் நேரம் தவிர மற்றைய நேரத்தில் ஒருவரை ஒருவர் சந்திப்பதில்லையே, தத்தமது றூமிலேயே இருக்கின்றனர்... நான் அதிகமாக ஃபோன் பண்ணியே கூப்பிடுவேன், எங்கட றூமிலிருந்து கூப்பிட்டால் கேளாது அவர்களுக்கு கர்ர்ர்:))

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. //இப்போ வீட்டுக்குள்ளேயே சகோதரங்கள் சாப்பிடும் நேரம் தவிர மற்றைய நேரத்தில் ஒருவரை ஒருவர் சந்திப்பதில்லையே,//

      கேட்கவே கஷ்டமாய் தான் இருக்கிறது. நான் என் அண்னன், அக்காள் கொஞ்சம் வயது வித்தியாசம், என் தம்பி தங்கைகள் ஒரு வயது இரண்டு வயது வித்தியாசம் அவர்கள் சேர்ந்து விளையாடும் போது சில நேரம் சண்டை வரும் அம்மாவை அழைப்பார்கள், அண்ணன் , அக்காவை அழைப்பார்கள் அவர்கள் சமாதானம் செய்வார்கள். நாங்கள் இருந்த ஊர்களில் எல்லாம் அவர் அவர் வயதை ஒத்த விளையாட்டு துணை கிடைக்கும் விளையாடிக் கொண்டே இருப்போம்.

      நாங்கள் கதை படித்தால் கதையில் ஆழ்ந்து விடுவோம், அம்மா கூப்பிடுவது கேளாது அப்போது அம்மாவிடம் திட்டு விழும் கதை புத்தகம் கிடைத்தால் போதுமே! காதில் விழாதே கூப்பிடுவது என்பார்கள்.

      நீக்கு
    2. ஹா ஹா ஹா உண்மைதான், முன்பு புத்தகம்/கதை படிப்பதுகூட சேர்ந்திருந்தே படிப்போம்.. இப்போ காலம் மாறிவிட்டது.. இங்கு சின்னவயதில்தான் ஒன்றாக விளையாடுகின்றனர் ..

      எங்கள் அண்ணனும் எப்பவும் என்னோடு ஏதும் சேட்டை விட்டுத்தனகிக்கொண்டே இருப்பார்.. நான் அம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்மாஆஆஆஆஆஆஆஆ என எபவும் கத்திக் கொண்டே இருப்பேன்ன்.. சரிசரி கத்தாதே கத்தாதே என்பார் ஹா ஹா ஹா... இப்பவும் ஒன்று சேர்ந்தால் அப்படித்தான் மாறவில்லை நாங்கள் ஹா ஹா ஹா.. அக்காவை அல்லது அண்ணியைக் கிண்டல் பண்ணிக்கொண்டிருப்போம் இருவருமாக:)..

      நீக்கு
    3. ஆஹா ! நீங்களும் அண்ணனும் எசலி கொண்டு இருப்பீர்களா?
      அண்ணி, அக்காவை நீங்களும் அண்ணனும் சேர்ந்து கிண்டல் அடிப்பீர்களா?
      மகிழ்ச்சியான தருணங்கல் தான்.
      உங்கள் மலரும் நினைவை மகிழ்வை மீண்டும் வந்து பகிர்ந்து கொண்டது மகிழ்ச்சி.

      நீக்கு
  16. ///"ஆச்சி! இது என்ன சொல்லுங்கள்?' என்று ஸ்கைப்பில் வந்து கேட்பான்//

    ஹா ஹா ஹா ஆண்பிள்ளைகள் விளையாடும் விளையாட்டுக்கள்.. எங்கள் வீட்டிலும் நிறைய லெகோக்கள் இருக்கு.. முன்பு விளையாடியது..

    //ராஜா கதை சொல்வான் சிம்மாசனம் வைத்து ராஜா அதில் அமர, கட்டியம் கூறுவான் 'ராஜாதி ராஜ ராஜகுலதிலக ராஜ மார்த்தாண்டர் வருகிறார்' பராக் பராக் சொல்லிக் கதையை ஆரம்பிப்பான்.//

    ஹா ஹா ஹா பாருங்கோ நீங்கள் பழசு பழசு விட்டுப்போச்சுது என அக்காலத்திலேயே நிக்கிறீங்க, ஆனா இன்று விஞ்ஞான வளர்ச்சியாலதானே இப்படி பேரனுடன் நேருக்கு நேர் இருந்து பேசுவதைப்போல பேசி மகிழ முடியுது.. இல்லை எனில் நேரில் போனால்தானே உண்டு...

    பேரனுக்கும் நீங்களிருவரும் நல்லதொரு நண்பர்கள் ஹா ஹா ஹா.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நான் பழசு பழசு என்று அக்காலத்தில் நிறகவில்லை அதிரா, விஞ்ஞானவளர்ச்சியால்தான் என் பேரன் அவனுக்கு நேரம் கிடைக்கும் போது எங்களுடன் விளையாடுகிறான் என்று எங்களுக்கு மகிழ்ச்சியே!

      அந்தக்கால பாட்டிகளுக்கு பேரனை கண்ணால் பார்க்க முடியாது போனில் குரலை மட்டுமே கேட்க முடியும். இப்போது தொடு உணர்ச்சி மட்டும் இல்லையே தவிர மற்ற அனைத்தும் கிடைக்கிறது. காரில் பயணம் செய்யும் போது சூரியன் மறையும் காட்சி எனக்கு பிடிக்கும் என்று அதை உடனே வீட்டியோ காலில் காட்டுவான், மழை பிடிக்கும் என்று மழை பெய்தால் காட்டுவான். காணொளி அனுப்புவான். இறைவனுக்கு நன்றி சொல்லி கொண்டு இருக்கிறேன்.

      நீக்கு
    2. பேரனும் நிறைய லெகோக்கள் வைத்து இருக்கிறான் புதிதாக வாங்க்கினாலும் பழையதையும் பயன்படுத்தி வித் விதமாய் செய்து காட்டி மகிழ்விப்பான்.


      நாங்கள் பேரனுக்கு நல்லதொரு நண்பர்கள் தான்.அவன் எங்களுக்கு நண்பன் அவன் இப்போது புதிதாக் அலாவூதீன் கதை செட் வாங்கி இருக்கிறான் அதை வைத்து கதை சொல்வான்.

      நீக்கு
  17. //என் தங்கை பேரன் , பேத்தி எங்கள் வீட்டுக்கு வந்து பல்லாங்குழி விளையாடிய போது
    //

    ஓ பல்லாங்குழி அழகு, நான் விளையாடியதில்லை.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஓ பல்லாங்குழி விளையாட்டு இலங்கையில் பிரபலம் இல்லையா? நீங்கள் சிறுமியாக இருந்த காலத்தில்?
      வாங்க இங்கு விளையாடி களிக்கலாம்.

      நீக்கு
  18. //குழந்தைகள் வந்தால் விளையாட எங்கள் வீட்டில் நிறைய அந்தக்கால விளையாட்டுச் சாமான்கள் இருக்கிறது.//

    ஆவ்வ்வ்வ் பார்க்கவே ஆசையாக இருக்கு.

    //எந்தக்காலமாக இருந்தாலும் குழந்தைகள் அவர்களுக்கு என்று ஒரு உலகம் உருவாக்கிக் கொண்டு அதில் விளையாடி மகிழ்கிறார்கள்.//
    உண்மை!.

    குண்டுப்பிள்ளையாரும் மிக அழகு.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. முன்பு ஒரு பதிவில் அம்மா வீட்டில் உள்ள விளையாட்டு சாமான்கள் படம் போட்டு இருந்தேன். அம்மா குட்டி குட்டியாக தோசை, இட்லி செய்து தருவார்கள்.

      இரும்பு அரிவாள்மனையில் செடி கொடிகளை வெட்டி மகிழ்வோம். மண் விளையாட்டு பாத்திரங்கள், பித்தளை பாத்திரங்கள், அப்புறம் எவர்சில்வர், மரசெப்புகள் காலத்துக்கு ஏற்றார் போல் பீங்கான், பிளாஸ்டிக் என்று விளையாட்டு பொருட்கள் மாறி இருக்கிறது.

      சோடா பாட்டில் மூடியால் இலையை வட்டமாக வெட்டி அதை தண்ணீரீல் மிதக்கவிட்டு தாமரை தடாகம் உருவாக்கி விளையாடுவோம். ஒரு மரத்தில் சாட்டை சாட்டையாக ஒரு காய் இருக்கும். அதை உறித்து எடுத்தால் அதில் கேரம் போர்டு காய் போலவே வட்டமாய் காய் இருக்கும் அதை வைத்து மண்தரையில் கேரம் போர்டு உருவாக்கி விளையாடுவோம்.

      கால மாற்றத்தால் விளையாட்டு பொம்மைகள் மாறினாலும் குழந்தை மனம் அடுத்து என்ன விளையாடலாம் என்று யோசித்து ஏதாவது விளையாடி மகிழ்வார்கள்.

      குண்டு பிள்ளையாரை ரசித்தீர்களா? பின்னால் இருக்கும் பையனை பார்த்தீர்களா?

      உங்கள் பின்னூட்டங்கள் மகிழ்வை தருகிறது அனைத்து கருத்துக்களுக்கும் நன்றி.

      நீக்கு
    2. ஹா ஹா ஹா அனைத்தும் மகிழ்வான தருணங்கள் கோமதி அக்கா, எங்கள் ஊர் மண் சிவப்புக் களிமண்.. ஊருக்குப் போனால் பிள்ளைகள் சேர்ந்து களிமண்ணில் பலகாரம் செய்து விளையாடுவோம், ஹொலிடே முடிஞ்சு திரும்பும்போது அந்த மண் பலகாரங்களை எங்காவது வைத்துப்போட்டு, கவனமாக பார்த்துக் கொள்ளுங்கோ நான் அடுத்தமுறை திரும்பி வரும்வரை, என அம்மமா அன்ரி ஆட்களிடம் சொல்லிப்போட்டு வருவேன், நாம் புறப்பட்டபின் அதைப் பார்த்து அழுவார்களாம்:(..

      வீட்டில் பீற்றூட் கறி சமைக்கும் நாளில், அதன் சிவப்பு தண்ணியை எடுத்து போத்தலில் ஊத்தி, அதுக்கு ஸ்ரோ வச்சு யூஸ் என, கடை போட்டு விற்று விளையாடுவோம்:))..

      தென்னை ஓலையில் சிறு குடிசை கட்டி, வீட்டில் போய் கொஞ்சம் அரிசி பருப்பு வாங்கி வந்து ஓரிரு தடவை சமைச்ச நாட்களும் உண்டு:))..

      பின்னேரத்தில் நிற்க நேரமில்லாமல் ஓடிப்பிடிச்சு விளையாடுவோம், அப்போ அம்மா ரீ ஊத்தி வச்சுக்கொண்டு கூப்பிடுவா, நின்று குடிக்க நேரமில்லாமையால், நல்லா ஆத்தி வையுங்கோ எனச் சொல்லிப்போட்டு, ஓடி வந்து மடமடவெனக் குடிச்சுப்போட்டு விளையாட்டுத் தொடரும்.. இது பற்றி ஒரு போஸ்டே போடலாம் கோமதி அககா... அவ்ளோ நினைவலைகள் இருக்குது:)..

      ஓ பின்னால ஷோபாவில் ஒரு குட்டி இருக்கிறதே அவரோ.. ஹா ஹா ஹா நீங்கள் கேட்டபின் தான் கவனிச்சேன்...

      நீக்கு
    3. அதிரா, மீண்டும் வந்து மலரும் நினைவுகளை பகிர்ந்து கொண்டது மகிழ்ச்சி.
      பேர குழந்தைகள் வந்து போனபின் வீடு வெறுமையாக காட்சி அளிப்பதும் அவர்களின் நினைவுகள் வந்து மனதை கலங்க வைப்பதும் இயல்பு.

      கூட்டாம் சோறு சமைத்து சாப்பிடாத குழந்தைகள் உண்டோ!

      //வீட்டில் பீற்றூட் கறி சமைக்கும் நாளில், அதன் சிவப்பு தண்ணியை எடுத்து போத்தலில் ஊத்தி, அதுக்கு ஸ்ரோ வச்சு யூஸ் என, கடை போட்டு விற்று
      விளையாடுவோம்:))..//

      ஞாபகம் வருதே ஞாபகம் வருதே! பாடலாம் போல அதிரா.

      சிறு வயது மலரும் நினைவுகளை போஸ்ட் போடுங்க படிக்க இனிமையாக இருக்கும்.
      'அந்நாளை நினைக்கையிலே என் வயது மாறுதுடா" என்ற பாடல் நினைவுக்கு வருது.

      சிறுவனை கவனித்தீர்களோ! அவன் மொபைலில் விளையாடுவதை குறிப்பிட்டு இருந்தேன்.

      மீள் கருத்து சுவையாக இருந்தது , நன்றி அதிரா.





      நீக்கு
  19. மாலை முழுதும் விளையாட்டு என்பதற்கேற்ப மாலை முழுவதும் விளையாடிக் கொண்டிருப்போம். விடுமுறை நாட்களில் பகல் முழுவதும், தாயம், பல்லாங்குழி, கேரம் போர்ட்,  என்று விளையாடுவோம். என் குழந்தைகளுக்காக வாங்கிய பல்லாங்குழியில் சமீபத்தில் நானும், என் சம்பந்தியும் விளையாடினோம். 

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வணக்கம் பானுமதி வெங்கடேஸ்வரன், வாழ்க வளமுடன்
      ஆமாம் மாலை முழுவதும் விளையாட்டுதான், விடுமுறை காலங்களில் காலையிலும் விளையாட்டுதான். கேரம் போர்ட் எங்கள் இருவருக்காய் முதலில் வாங்கினோம், குழந்தைகள் பிறக்கும் முன், அப்புறம் அக்கம் பக்கத்து குழந்தைகளும் வரும் விளையாட . நீங்களும் சம்பந்தியும் விளையாடியது மகிழ்ச்சியான தருணம் தான்.

      நீக்கு
  20. அமெரிக்காவில் வாழ்ந்தாலும், அழகாக தமிழ் பேசும் குழந்தைகளை பார்க்க மகிழ்ச்சியாக இருக்கிறது. சபைக்கூச்சம் இல்லாமல் தைரியமாக நடித்திருக்கும் கவினுக்கு வாழ்த்துக்கள். 

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஆமாம் , குழந்தைகள் தமிழ் பேசுவதை கேட்பது மகிழ்ச்சிதான். பெற்றோர்களிடம் இப்படியே தொடர்ந்து படிக்க ஊக்கம் அளிக்கும் படி கேட்டு வந்தோம்.
      கவினை வாழ்த்தியது மகிழ்ச்சி.
      உங்கள் வரவுக்கும், கருத்துக்கும் நன்றி.

      நீக்கு
  21. பச்சைக்குதிரை கிட்டிப்புள் தவிர எல்லாமே விளையாடி இருக்கேன் :)அன்றும் இன்றும் செம கான்செப்ட் .பிள்ளைங்களுக்கு தாத்தா பாட்டி கால விளையாட்டு பொருட்களை காணலாம் .எங்க மகளுக்கு மரசொப்புக்களை பார்த்து ஆச்சர்யம் .இங்கே எல்லாம் பிளாஸ்டிக் தானே .நானா பல்லாங்குழி வாங்க போனேன் மகளுக்கு ஆனா து சரியா தேய்க்காமல் சொறசொறன்னு இருந்ததால் விட்டுட்டேன் சில வருஷமுன் .நல்ல பதிவுக்கா .அணைத்து படங்களையும் ரசித்தேன் கவின் முகத்தில் சந்தோஷம் .

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வணக்கம் ஏஞ்சல், வாழ்க வளமுடன்
      நானும் பச்சைக்குதிரை, கிட்டிபுள் தவிர மற்ற விளையாட்டுக்கள் விளையாடி இருக்கிறேன்.
      காணொளி பார்த்தீர்களா? நல்ல கான்செப்ட் தான்.

      இப்போது மிக அழகாய்கலை வேலைபாட்டுடன் பல்லாங்குழி கிடைக்கிறது ஏஞ்சல். எங்கள் வீடுகளில் கல்யாணவீட்டில் மணமக்கள் நலுங்கில் விளையாட பல்லாங்குழி வேண்டும். அதனால் கல்யாணத்திற்கு வாங்கி கொடுப்பார்கள்.

      மரசொப்பிலும் இப்போது புது மாடல் வந்து விட்டது கிரைண்டர், கேஸ் அடுப்பு, புது மாதிரி பாத்திரம் என்று அதுவும் பேரனுக்கு வாங்கி கொடுத்து இருக்கிறேன்.
      அனைத்து படங்களையும் ரசித்தமைக்கு நன்றி. உங்கள் கருத்துக்கு நன்றி ஏஞ்சல்

      நீக்கு
  22. கரணம் அடித்துக் கொண்டே போவது வழக்கம் ஒரு நாள் அப்படிப் போகையில் தலையில் கல் குத்திகாயம் ஏற்பட்டு ரத்தம் வழிந்தது காயத்துக்கு ஒட்டடை போட்டு ஏதும் நடக்காதது போல் இருந்தது நினைவுக்கு வருகிறது
    இருந்தது நினைவுக்கு வருகிறது

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வணக்கம் பாலசுப்பிரமணியம் சார், வாழ்க வளமுடன்
      வீட்டில் திட்டுவார்கள் என்று கல் குத்திய காயம் இருந்தும் அதை மறைத்து ஏதும் நடக்காதது போல் போய் இருக்கிறீர்கள்.

      உங்கள் நினைவுகளை பகிர்ந்து கொண்டதற்கு நன்றி.

      நீக்கு
    2. எனக்கு ஜி.எம்பி சாரின் பின்னூட்டத்தைப் பார்த்து, என் காலில் கண்ணாடி குத்தி ஏகப்பட்ட ரத்தம் வந்தபோது, அதில் மண்ணை அடைத்துக்கொண்டேன். வீட்டில் சொன்னால் திட்டுவார்கள் என்ற பயத்தில். அப்புறம் அவங்க பார்த்து, டாக்டர்ட்ட போய், இன்னும் அந்தத் தழும்பு இருக்கு.

      என் சின்ன வயது, வம்புகள் நிறைய பண்ணிய வயது. ஹா ஹா

      நீக்கு
    3. கண்ணாடி குத்தி ரத்தம் வந்த போது காயத்தில் மண்ணை அடைப்பதா? டாகடர் திட்டி இருப்பாரே!
      வீர தழும்புகள் நிறைய இருக்குமே! குறும்புக்கார குழந்தைகளுக்கு.

      நீக்கு
  23. மிகமிக அழகாக தமிழ் பேசுகிறார் கவின் செல்லம். வாழ்த்துகள் கண்ணா. சூப்பரா இருக்கு வீடியோ.நல்ல முறையில் அக்கால விளையாட்டுக்களை சொல்லியிருக்கினம். உண்மையில் நானும் நினைப்பதும், என் மகனுக்கு இங்கும் சொல்லுவதும்தான் எங்கள் பழக்கவழக்கங்கள்,பழைய வாழ்க்கை முறைகளை. அவர்களுக்கு எல்லாமே ப்ரக்டிக்கலா செய்தால்தான் புரியும். சொல்லும்போது கேட்கம்ட்டுமே செய்வார்.
    கவின்குட்டி ஆச்சி என அழைப்பதை வாசிக்கும்போதே எனக்கு புல்லரிக்கிறது. உங்களுக்கும்,சாருக்கும் கஷ்டமாதான் இருக்கும்.ஆனாலும் இந்தளவுக்கு விஞ்ஞானவளர்ச்சியில் இருப்பதால் பரவாயில்லை.

    எங்க வீட்டிலும் நான் கடைசி என்பதால் போட்டியில்லை. கொஞ்சம் போரிங்தான்.ஆனாலும் சும்மாவேனும் சண்டைபிடிப்பது. எங்க வீட்டில் பெரிய முற்றம் இருக்கு.அதில் வெயிலுக்காக பந்தல் போட்டிருக்கும். அதில் 8கோடு விளையாட்டு விளையாடுவோம், தாயம், ஏணியும்,பாம்பும், கொக்கான் எனும் விளையாட்டு(இது க்ல்லை மேலே எறிந்து அது வருவதற்குள் 1,2,3, என கீழ் இருக்கும் கல்லை எடுப்பது) கிட்டிபுல்,மாபிள் அடிப்பது,டக் டிக் டொக், இப்படி பல. ஓ....எவ்வளவு விளையாட்டுகள். நினைத்தாலே கவலை. இவையெல்லாம் உடம்புக்கும்,மனசுக்கும் எவ்வளவு புத்துணர்ச்சி. இக்கால பிள்ளைகளுக்கு இங்கு வளரும் பிள்ளைகளுக்கு இவை தெரியாது. ஊரிலும் இப்ப குறைந்துவிட்டது போல. சூழ்நிலைக்கேற்பதானே வாழ்க்கையும்..

    மப்பட்ஷோ நான் முன்பு டிவியில் விரும்பி பார்ப்பேன். கிச்சன் செட் கூட வீட்டில் இருந்தது. ஆனா விளையாட அனுமதியில்லை. நவராத்திரிக்கு வைத்துவிட்டு முடிந்தபின் 2நாட்கள் மட்டும் விளையாடலாம். அது அக்காவின் கலக்‌ஷென்.

    பல்லாங்குழி விளையாடினது இல்லை. ஆனா பார்த்திருக்கேன். அதுவும் இந்தியாவில்தான்.

    அழகான பிள்ளையார்.. அதற்கு பின்னால் சோபாவில் கூட ஒருவர் விளையாடுகிறார்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வணக்கம் பிரியசகி வாழ்க வளமுடன்
      கவினுக்கு வாழ்த்துக்கள் சொன்னதற்கு நன்றி.
      பழைய கால விளையாட்டுக்களை பார்த்தால் தான் குழந்தைகளுக்கு தெரியும்.
      அந்தக்காலத்தில் வெளி நாடில் இருக்கும் குழந்தைகளை அவர்கள் வரும் போதுதான் பார்க்கலாம். இப்போது விஞ்ஞான வளர்ச்சியால் நமக்கு நேரில் பார்த்து பேரகுழந்தைகளிடம் பேச முடிவது மகிழ்ச்சி.

      விளையாட்டுக்களால் புத்துணர்ச்சி கிடைக்கும் உடம்புக்கு, மனதுக்கு என்பது உண்மை அம்மு.

      பப்பட் ஷோவிற்கு படங்கள் வரைந்து காட்சிகளை ட்க்க டக் என்று மாற்றி விளையாடுவான். பொம்மைகளை வைத்து விளையாடுவான்.
      அவன் டாக்டரா மருத்துவம் பார்ப்பான், வாத்தியாராக பாடம் சொல்லி தருவான்.

      உங்கள் உடன்பிறப்புகளுடன் விளையாடிய மலரும் நினைவுகளை பகிர்ந்து கொண்டது மகிழ்ச்சி அம்மு.

      கொலுவில் வைத்த விளையாட்டு சாமான்கள் பேர குழந்தைகள் வந்தவுடன் அவர்களுக்கு விளையாட கொடுத்து விட்டேன்.

      கிச்சன் செட் வித விதமாக பேரனுக்கு விளையாட விளையாட நாங்களும், உறவுகளும் , நட்புகளும் வாங்கி தந்து இருக்கிறோம்..

      பிள்ளையாருக்கு பின் ஒரு சிறுவன் அலைபேசியில் விளையாடுகிறார்.
      இப்போது பிறந்த சின்ன குழந்தை கூட மொபைல் பார்க்கிறது.

      உங்கள் கருத்துக்கும் வாழ்த்துக்களுக்கும் நன்றி பிரியசகி.

      நீக்கு
  24. பதிவை மிகவும் ரசித்தேன். படங்கள் என் குழந்தைப் பருவத்தை நினைவுபடுத்தியது.

    என் பசங்க இவைகளை விளையாடியதே இல்லை. என் பெண் ஓரிரு முறை விடுமுறைக்கு இந்தியா வந்திருந்தபோது பல்லாங்குழி ஆடியிருக்கலாம்.

    இப்போ தோணுது... இன்னும் வேறு மாதிரி அவங்க இளமைக்காலத்தைக் கட்டமைத்திருக்கலாமோ என்று.

    வெளிநாட்டில் வாழ்பவர்கள் தமிழ், தமிழ்க் கலைகளை முன்னெடுத்துச் செல்வது போற்றத்தக்கது. உங்க பேரன், பேத்திகள் நல்ல வாழ்க்கை வாழட்டும். வாழ்த்துகள்

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வணக்கம் நெல்லைத்தமிழன், வாழ்க வளமுடன்

      உங்கள் குழந்தை பருவம் நினைவுக்கு வந்தது மகிழ்ச்சி.
      இளமைகாலாங்களில் வெளி நாட்டில் இருந்தார்களோ குழந்தைகள்?
      முன்பு விடுமுறைக்கு பாட்டி வீட்டுக்கு போனால் வெயிலில் வெளியில் விளையாட விடமாட்டார்கள், இப்படி தாயம், பல்லாகுழி கேரம் போர்ட் விளையாட சொல்வார்கள்.

      பதிவை ரசித்து படித்து கருத்து சொன்னதற்கும் பேரன், பேத்திகளை வாழ்த்தியதற்கும் நன்றி.


      நீக்கு
    2. ஆமாம் கோமதி அரசு மேடம்... பெண் 15 வயது வரையிலும் பையன் 12 வயது வரையிலும் என்னுடனே வெளிநாட்டில் இருந்தார்கள்.

      நீக்கு
    3. ஓ , குழந்தைகள் வெளி நாட்டில் இருந்ததை அறிந்து கொண்டேன்.

      நீக்கு
  25. வணக்கம் சகோதரி

    தாங்கள் பதிவில் கூறியது அனைத்தையும் ரசித்தேன். தங்கள் பேரன் கவின் அழகாக நாடகத்தில் தமிழ் பேசி நடித்திருக்கிறார். நிறைய விளையாட்டு தயாரிப்புகளை அவரே உருவாக்கி தங்களுக்கும் காண்பித்து தானும் அழகாக விளையாடி மகிழ்கிறார். அவரின் தயாரிப்புகள் எல்லாமும் நன்றாக இருக்கிறது. அவர் இன்றும்,அதுவும் வெளி நாட்டில் இருக்கும் போதும் அவர் தம் நண்பர்களுடன் விளையாடி மகிழ்வது மகிழ்வான செய்தி...! அவருக்கு என் மனப்பூர்வமான வாழ்த்துக்களையும், ஆசிகளையும் தெரியப்படுத்துங்கள்.

    அந்த காலத்தில்,டி.வி ஃபோன் வசதிகள் எதுவுமில்லாததால் நாம் வீட்டினுள்ளும் வெளியிலும் கல்லாங்கா, பல்லாங்குழி, தாயம் பரமபதம் என விளையாடி மகிழ்ந்தோம். பெண்கள் விளையாடும் விளையாட்டென வெளியில் பாண்டி, கல்லா,மண்ணா என விளாயாடி இருக்கிறோம். ஆனால் எங்கள் அம்மாவும் ஏதும் கீழே விழுந்து காயங்கள் வந்து விடுமென அவ்வளவாக வெளியில் விளையாட விட மாட்டார்கள். அவ்வளவு பாசம்..அவ்வளவு கண்டிப்பு.. ! அம்மாவுடனே வீட்டுக்குள் பல்லாங்குழி, ஒத்தையா இரட்டையா போன்ற விளையாட்டுக்களை பக்கத்து வீட்டு தோழிகளுடன் விளையாடி மகிழ்ந்தது நினைவுக்கு வருகிறது.

    இப்போதெல்லாம் என் பேத்திக்கு ஒவ்வொரு வேளையும் சாப்பிட அவ்வளவு அடம். ஃபோனை கையில் கொடுத்தால்தான் ஏதோ இரண்டு வாய் உள்ளே போகிறது. வேறு வழியில்லை. இந்த விளையாட்டெல்லாம் இன்னும் பழக வேண்டும். என்னிடமும் அம்மா கொடுத்த சீதனமாய் மீன் பல்லாங்குழி உள்ளது. கொஞ்சம் வளர்ந்த பின் விளையாட கற்றுத் தர வேண்டும். பதிவு நன்றாக உள்ளது. பகிர்வுக்கு மிக்க நன்றி சகோதரி

    நன்றியுடன்
    கமலா ஹரிஹரன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வணக்கம் கமலாஹரிஹரன், வாழ்க வளமுடன்

      மகனின் நண்பர்கள் ஒவ்வொருவரும் நேரம் கிடைக்கும் போது குழந்தைகளை அழைத்து வருவார்கள். ஊரின் நினைவு வந்து வருத்தபட வைக்காமல் இருக்க அடிக்கடி ஏதாவது சந்தர்ப்பத்தை வைத்து நண்பர்கள் சந்திப்பு நிகழும்.

      குழந்தைகள் கூடி விளையாட முடியும்.

      தனிமையிலும் விளையாடி மகிழ்வான். கற்பனை விளையாட்டுக்கு பஞ்சமே இல்லை.

      //அவருக்கு என் மனப்பூர்வமான வாழ்த்துக்களையும், ஆசிகளையும் தெரியப்படுத்துங்கள்.//

      தெரியபடுத்தி விட்டேன். உங்கள் வாழ்த்துக்களும், ஆசிகளும் கிடைத்தது மகிழ்ச்சி, நன்றி.


      இப்போது உள்ள குழந்தைகளை சாப்பிட வைக்க காக்கா, குருவி காட்டி ஏமாற்ற முடியவில்லைதான், செல்போந்தான் வேண்டி இருக்கிறது.

      //அம்மாவுடனே வீட்டுக்குள் பல்லாங்குழி, ஒத்தையா இரட்டையா போன்ற விளையாட்டுக்களை பக்கத்து வீட்டு தோழிகளுடன் விளையாடி மகிழ்ந்தது நினைவுக்கு வருகிறது.//

      மலரும் நினைவுகள் பகிர்ந்து கொண்டது மகிழ்ச்சி.


      மீன் பல்லாகுழி உள்ளதா? மகிழ்ச்சி.

      மாயவரத்தில் எங்கள் வீட்டில் தான் அக்கம் பக்கம் குழந்தைகள் விளையாடுவார்கள், என் குழந்தைகளின் தோழர், தோழிகள் என் நண்பர்களாய் ஆகி போனார்கள் என்னயும் அவர்கள் விளையாட்டில் சேர்த்துக் கொள்வார்கள்.

      உங்கள் விரிவான கருத்துக்கு நன்றி கமலா.


      நீக்கு
  26. அருமையான காணொளி. இந்த விளையாட்டுக்களை எல்லாம் சின்ன வயசில் தாத்தா வீட்டில் விளையாடிய நினைவு வருகிறது. எங்க அப்பா விளையாட அனுமதிக்க மாட்டார். அதிலும் பெண் குழந்தைகள் எனில் கட்டாயமாய் விளையாடக் கூடாது என்னும் கருத்து. ஆனால் தாத்தா வீட்டுக்கோ, பெரியப்பா, சித்தி வீடுகளுக்கோ போனால் இஷ்டம் போல் விளையாடலாம் பல்லாங்குழி, சீட்டுக்கட்டு விளையாட்டு, ட்ரேட் விளையாட்டு. கட்டம் போட்டு நிரப்பி விளையாடுவது (இதில் என்னை வென்றவர்கள் இல்லை) என விளையாடி இருக்கோம். பல்லாங்குழியில் தனியாக விளையாட "சீதைப் பாண்டி" என்றொரு விளையாட்டு உண்டு. அதில் நாமே தனியாக விளையாடிக்கலாம். அதுவும் விளையாடி இருக்கோம். பல்லாங்குழியில் காசி தட்டுதல், தாயம் விளையாடுதல், பரமபதம். தாயக்கட்டை எங்களிடமும் இருந்தது. தரையில் கட்டம் கட்டி விளையாடுவோம்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வணக்கம் கீதாசாம்பசிவம், வாழ்க வளமுடன்
      தாத்தா வீட்டில் விளையாடிய நினைவு இருக்கிரதா? மகிழ்ச்சி.

      சீதைப் பாண்டி தெரியது எனக்கு எப்படி விளையாடுவது?
      ஏன் தங்கையிடம் கேட்க வேண்டும் நீங்கள் சொல்லும் விளையாட்டு தெரியுமா என்று.
      பல்லாங்குழியில் காசி தட்டுதல் என்றாலும் எனக்கு தெரியாது அதையும் எப்படி என்று சொல்லுங்கள்.

      ட்ரேட் விளையாடுவது மிகவும் பிடித்தது.நான் என் அண்ணன் இருவரும் உறவினர் கொடுத்த காசை வைத்து ட்ரேட் வாங்கினோம், எத்தனை இடங்கள் வாங்கினோம், நம் இடத்திற்கு வருபவரிடம் வாடகை வசூல் செய்வது பெரிய மகிழ்ச்சியை தரும்.
      இப்போது பிஸினஸ் என்று விளையாடுகிறார்கள். பணத்தை பாங்கில் கொடுத்து சில்லறை மாற்றுவது பெரிய மகிழ்ச்சியை கொடுத்தது ஆறாவது படிக்கும் போது.

      தாயம் அட்டையில் வரந்து தந்தார்கள் எங்கு வேண்டுமென்றாலும் தூக்கி செல்வோம்.
      வைகுண்ட ஏகாதசிக்கு கண் முழிக்கும் போது தாயம் விளையாட அனுமதி உண்டு. அன்று மட்டும் இரவு விளையாடலாம், மற்ற நாட்களில் பொழுது போனால் விளையாட அனுமதி இல்லை தாயம்.தாயகட்டையை மாலை பொழுதில் உருட்ட கூடாது என்பார்கள்.

      நீக்கு
  27. கவினும் தோழர்களும் அழகாகப் பேசி நடித்திருக்கின்றனர்.பல்வேறு திறமைகளை ஒளித்து வைத்திருக்கும் கவினுக்கு எங்கள் ஆசிகள். சந்தோஷமாக இருக்கிறது. நல்லமுறையில் நேரம் செலவிடப்படுவது குறித்து மகிழ்ச்சியாகவும் இருக்கிறது. இங்கெல்லாம் பக்கத்து வீட்டுக் குழந்தைகளோடு தினம் விளையாட முடியாது. ப்ளே ஏரியா போனால் அங்கே விளையாடும் குழந்தைகளோடு விளையாடலாம். சில சமயங்களில் குழந்தைகளின் நண்பர்கள் இங்கே "ஸ்லீப் ஓவர்"க்கு வருவார்கள். அதே போல் இவர்களும் போவார்கள். ஆனால் எல்லாப்பெற்றோரும் இதற்கு ஒத்துக்கொள்ளுவது இல்லை.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. கவினுக்கும் பக்கத்து வீட்டுக் குழந்தைகளோடு விளையாட முடியாது. மகனின் நண்பர் குழந்தைகளுடன் விளையாடுவான். அவர்கள் குழந்தை அவன் படிக்கும் பள்ளியில் படிக்கிறார்கள் சில குழந்தைகள் அவர்கள் அடிக்கடி வீட்டுக்கு வருவார்கள்.
      உங்கள் கருத்துக்கும் கவினை வாழ்த்தி ஆசி வழ்ங்கியதற்கும் நன்றி நன்றி.

      நீக்கு
  28. குழந்தைகள் உலகமே தனிதான். அவர்கள் நம்மையும் குழந்தைகளாக்கிவிடுகின்றனர்.
    தமிழ் விக்கிபீடியா டிசம்பர் 2019இல் நடத்துகின்ற ஆசிய மாதம் போட்டியில் கலந்துகொண்டு கட்டுரைகளை எழுதி வருகிறேன். இந்த மாதம் 30ஆம் நாள் வரை இப்போட்டி நடைபெறுகிறது. தமிழில் இல்லாத செய்திகளை/பதிவுகளை ஆங்கில விக்கிபீடியாவிலிருந்து தமிழுக்குக் கொண்டு வரும் என்னுடைய சிறிய முயற்சி. ஒரு நாளைக்குக் குறைந்தது ஒரு கட்டுரையாவது எழுத/மொழிபெயர்க்க திட்டமிட்டு எழுதி வருகிறேன். ஆதலால் கருத்துரை இடுவதில் தாமதமாகிறது. பொறுத்துக்கொள்க.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வணக்கம் முனைவர் ஐயா, வாழ்க வளமுடன்
      நீங்கள் சொல்வது சரிதான். அவர்கள் நம்மையும் குழந்தைகளாக்கி விடுகிறார்கள்.

      உங்கள் பணி சிறப்பாக நடக்கவும், பணியில் வெற்றி பெறவும் வாழ்த்துக்கள்.

      பொறுத்துக் கொள்க என்று எல்லாம் சொல்லாதீர்கள் முடிந்த போது வந்து கருத்து சொல்க.

      நீக்கு
  29. அன்றும் இன்றும் நாடகம் அருமை. சிறப்பாகப் பேசி நடித்துள்ளார்கள். பேரனுக்கும் அத்தனை குழந்தைகளுக்கும் வாழ்த்துகளும் பாராட்டுகளும். குழந்தைகள் மொபைல் விளையாட்டுகளில் மூழ்கிப் போவது வருத்தமே. ஆனாலும் குடியிருப்புகளில் குழந்தைகள் சேர்ந்து வெளியில் விளையாடுகிறார்கள். பார்க்க ஆனந்தமாக உள்ளது.

    பல நினைவலைகளை எழுப்பியது பதிவு.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வணக்கம் ராமலக்ஷ்மி, வாழ்க வளமுடன்
      குழந்தைகளின் நடிப்பை பார்த்து அவர்களுக்கு வாழ்த்துக்களும், பாராட்டுகளும் சொன்னது மகிழ்ச்சி நன்றி ராமலக்ஷ்மி.

      எங்கள் குடியிருப்பிலும் குழந்தைகள் விடுமுறையில் நெடுநேரம் விளையாடுகிறார்கள், பார்க்க மகிழ்ச்சியாக இருக்கிறது. ஒரு சிலர் குழந்தைகளை வெளியில் விடாமல் இருப்பதால் அவர்கள் குழந்தைகள் மொபைலில் விளையாடுகிறார்கள்.
      பதிவு உங்கள் நினைவலைகளை எழுப்பியது மகிழ்ச்சி.
      உங்கள் கருத்துக்கு நன்றி.

      நீக்கு
  30. அருமையான காணொளி கோமதி.
    குழந்தைகளின் உழைப்பில் சிறப்பாக இருந்தது. தங்கள் பேரனின்
    நல்ல தமிழில் சொல்லாடல் அழகாக இருந்தது. பழைய விளையாட்டுகள்
    இதனால் பரிமளித்தால் சிறப்பாக இருக்கும். நம் நாட்கள்
    இனிமையானவை. எத்தனை சுதந்திரம் கிடைத்தது/?

    வெயிலொடூ விளையாடி பாடல்தான் நினைவுக்கு வருகிறது.

    நான் கொடுத்து வைத்திருக்கிறோம் இந்த இனிமையான நினைவுகளுக்கு.
    நன்றி கோமதி. இப்போது எங்கும் லெகோ, ரொபாடிக்ஸ்,இப்படிப் போகிறது.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வணக்கம் வல்லி அக்கா, வாழ்க வளமுடன்
      நீங்கள் சொல்வது போல் குழந்தைகள் நன்றாக உழைத்து இருக்கிறார்கள் என்பது உண்மை.
      அவர்களுக்கு சொல்லி கொடுத்த ஆசிரிய பெருமக்களையும் , நாடக பயிற்சி நடக்கும் இடத்திற்கு கொண்டு விட்டு கூட்டி வந்த பெற்றோர்களையும் பாராட்ட வேண்டும்.

      நாம் கொடுத்த வைத்தவர்கள் தான் நீங்கள் சொல்வது போல் சுதந்திரமாக விளையாடினோம். இப்போது நிறைய கட்டுபாடுகள், கல், மண் தொடக் கூடாது,
      விளையாட்டு சாமான்களும் உயர்தரமாக இருக்க வேண்டும்.

      கிராமத்தில் குழந்தைகள் எளிமையான பாட்டில் மூடிகள், விலை குறைவாய் கிடைக்கும் இரண்டாம் தர பிளாஸ்டிகில் செய்த விளையாட்டு பொருட்களை வைத்துக் கொண்டு மகிழ்ச்சியாக விளையாடியதை. குழந்தைகளுக்கு எதிலும் சந்தோஷம் அடைவார்கள்.
      அந்த குழந்தைகளிய படம் எடுத்து ஒரு பதில் போட்டு இருந்தேன் அக்கா.

      உங்கள் கருத்துக்கு நன்றி அக்கா.


      நீக்கு