புதன், 2 மே, 2018

திருமலை நாயக்கர் மஹால்





இப்போது நடைபெறும் சித்திரை திருவிழாவை சிறப்பாக்கிய விழா நாயகர்.
அழகர் திருவிழாவையும், மீனாட்சி திருவிழாவையும் ஒன்றாக்கியவர்.
மீனாட்சி அம்மன் கோவிலில் சுவாமி சன்னதியில் தன் மனைவிகளுடன் உள்ள சிலை இருக்கும்.

அடுத்த பதிவில்  திருமலை நாயக்கர் அரண்மனை  என்று  முந்திய பதிவில் தொடரும் போட்டேன். பசுமை நடை இயக்கத்துடன் சென்றதால் 10 மணிக்கு முன்பே சிறப்பு நுழைவு அனுமதி பெற்று உள் சென்றோம்..



மொட்டை மரத்திலும் கிளி
மணிக்கூண்டு
இப்போது எங்கள் குடியிருப்பு என்று உச்சிமேல் ஏறிச் சொல்கிறது புறா



டிக்கட் கொடுக்கும் வாசல் உள் நுழையும் இடத்தின் மேல் விதானம்
பத்துப் பல்லும் பயங்கர வலிமை -காலத்தை கடந்தும் இருக்கே!

தொல்லியல்  ஆராய்ச்சியாளர் திரு. சாந்தலிங்கம் அவர்கள், திருமலை நாயக்கர் காலம் அவர்களுக்கு பின் ஆண்டவர்கள் முதலிய வரலாறு சொல்கிறார். 


விஜயநகரம் உருவான கதையை நாம் பாடத்தில் படித்து இருக்கிறோம்.

ஹரிஹரர் புக்கர் என்ற இரு சகோதரர்கள் விஜயநகர சாம்ராஜ்யத்தை உருவாக்கியதையும் , புக்கரின் மகன் குமாரகம்பணன் மதுரையைக் கைப்பற்றி  மீனாட்சி கோவிலை மீட்டு சாம்ராஜயத்தை நிறுவியதையும்   சொன்னார்.

1929 முதல் 200 ஆண்டுகள் 13 அரசர்கள் ஆட்சி செய்த காலத்தைச் சொன்னார்.

நாகமநாயக்கர் கதை. அவர் மகனே (விஸ்வநாத நாயக்கர்) அவரைச் சிறைப்பிடித்த கதை, கிருஷ்ணதேவராயர் விஸ்வநாத நாயக்கருக்கு மதுரை அரசைக் கொடுத்த கதை,  விஸ்வநாத நாயக்கர் அமைச்சர் அரியநாத முதலியார் திறம்பட நாட்டை ஆள 72 பாளையங்களாக பிரித்த விவரம் ஆகியவற்றைக் கூறினார். இப்படி அரசாண்ட நாயக்கர்களில் திருமலை நாயக்கரும், ராணி மங்கமாளும்  இன்றளவும் பேசப்படுபவர்கள். இவர்கள் காலம் பொற்காலமாக இருந்தது. போர் இல்லாமல் அமைதியாக இருந்தது.

திருமலை நாயக்கர் கால ஆட்சியில் கலை, விழாக்கள் சிறப்பாக இருந்ததைச் சொன்னார். அவருக்கு மண்டைச்சளி நோய் வந்த போது மீனாட்சியம்மை கனவில் வந்து  திருச்சி போகாமல் இங்கேயே இரு நோய் குணமாகும் என்று சொன்னதாகவும் மறுநாள் அவர் நோய் தீர்ந்ததாகவும் சொன்னார். மீனாட்சியம்மைக்குக் கொடுத்த வாக்குப்படி தலைநகரைத் திருச்சியிலிருந்து மதுரைக்கு மாற்றி அரசாண்டார்.

கடைசியாக ஆண்ட ராணி மீனாட்சிக்குக் குழந்தைகள் இல்லை . சூழ்ச்சியால் மீனாட்சிக்கு பின் நாயக்கர் அரசு முடிவுக்கு வந்து விட்டது.

சென்னை ஆளுநராகயிருந்த நேப்பியர்  அவர்கள் மதுரைக்கு வந்து இந்த அரண்மனையை ப்பார்த்து வியந்து அரண்மனையைப் புதுப்பிக்க ரூ5 லட்சத்திற்கு மேல்நிதி  ஒதுக்கினார்.   நீதிமன்றமாய் செயல்பட்ட  அரண்மனை 1975 க்குப் பின் தொல்லியல் துறை வசம் வந்து விட்டதை விரிவாகச் சொன்னார்.

திருமலை மன்னர் காலத்தில் ஏரிகள் உருவானது, கோவில்களும் அதிகம் கட்டப்பட்டது.
கிறித்துவ மத போதர்களை ஆதரித்தார், இஸ்லாமிய  தர்காவை ஆதரித்தார், சைவ, வைணவ ஆலயங்களுக்குத் திருப்பணிகள் செய்து இருக்கிறார். புதிதாகக் கட்டியும் இருக்கிறார்.

இந்த திருமலைநாயக்கர்மஹாலை இத்தாலியர் வடிவமைத்தார். இந்திய இஸ்லாமிய ஜெர்மானிய கலை என்றும் இந்தோ-சார்சானிக் கலை என்று அழைக்கப்படுகிறது என்றார்.
இப்போது அரண்மனை இருப்பது நான்கில் ஒரு பங்குதான் என்றும்  சொன்னார். மீண்டும் இதை புதுப்பிக்க ரூ.4கோடி தொல்லியல் துறை ஒதுக்கி இருப்பதைச் சொன்னார்.

இவ்வளவு செலவு செய்வதால் இதனைப் பாதுகாப்பது நம் கடமை என்றார்.


பின்னர்  எழுத்தாளர்  அர்ஷியா அவர்களுக்கு மெளன அஞ்சலி செய்யப்பட்டது. (மதுரையைச் சேர்ந்த எழுத்தாளர் அவர் . அன்றைய முந்தினம் சனிக்கிழமை மாரடைப்பால் காலமானார் )

 மாலை அவர் வீட்டில் நடக்கு இறுதி அஞ்சலியில் கலந்து கொள்பவர்கள் கலந்து கொள்ளலாம் என்றார்.  

இந்த சிம்மாசனம் பழைய சிம்மாசனம் இல்லை 

பாடத்தில் படித்தது -ஒருவராகத் தூண்களை கட்டிப்பிடிக்க முடியாது என்று


மேல் பகுதி உடைந்து விழுந்து இருப்பதால் அந்தப் பகுதிக்குப் போகத் தடை 
கயிறு கட்டி வைத்து இருக்கிறார்கள்.
ஒலியும், ஒளியும் முன்பு பார்த்து இருக்கிறோம் இங்கு

புறாக்கள் மட்டும் மில்லை- தேனீக்கூடுகளும்  உண்டு, இரண்டு மூன்று இடங்களில் இருந்தது.
கலசங்களிடையே  சின்ன பறவை நானும்  இருக்கிறேன் என்று சொல்கிறது. வானம் அழகாய் இருந்தது.
தூண்களில் ஜன்னல் வேலை செய்த  சூரிய ஒளி


இந்தத்  தூண் பக்கம் இருக்கும் ஜன்னலில் அமர முடியாதபடி ஆணி போன்ற அமைப்பைச் செய்து வைத்து இருக்கிறார்கள், ஜன்னல் மேல் ஏறிச் சுவர் மேல் புறம் எல்லாம் பேர்களை எழுதி வைத்து இருக்கிறார்கள்.
அரண்மனையின் பின் பகுதி

பின் வாசல் வழி எடுத்த படம்

நிறைய அழகிய கலை அம்சத்துடன் உள்ள  சிலைகள் இங்கு இருக்கிறது.
ஒவ்வொரு கோணமும் அழகுதான்
2012ல் பார்த்த போது   விதானம் மிக அழகாய் இருந்தது , இப்போது  வண்ணம் குறைந்து விட்டது
நரசிம்மர் பக்கத்தில் இருக்கும் அலமாரிகளில் இப்போது காலியாக இருக்கிறது.   பராமரிப்பு வேலை நடைபெறுகிறது என்று போட்டு இருந்தார்கள்.
அருங்காட்சியகம் 
கிணறு தோண்டப்பட்ட வரலாறு
இந்த அரண்மனையைப் பராமரிக்க ஆகும் செலவு ரூ4 கோடியாம் 
ஆனால் நம் மக்கள் இப்படித் தூண்களில் தங்கள் பெயர்களைச் செதுக்கிப் பாழ் செய்கிறார்கள் , கண்காணிப்புக் கேமிரா பொருத்தி, காவலுக்கு ஆட்கள் போட்டால் நல்லது. 

                                                        வாழ்க வளமுடன்.

28 கருத்துகள்:

  1. அழகிய படங்கள். ரொம்ப காலத்துக்கு முன்னால் பார்த்த இடம் என்பதால் அந்த ஒளி ஒலிக்காட்சி மட்டுமே நினைவில் இருக்கிறது.. பிரம்மாண்டமான மற்ற அந்த இடங்கள் நினைவில் இல்லை. உங்கள் புகைப்படங்களை பார்க்கும்போது மௌபடி ஒருதரம் சென்று பார்த்து வரலாமா என்று தோன்றுகிறது.

    மதுரையில் மழை, பெங்களூரு, ஓசூரில் மழை என்று கடுப்பேற்றுகிறீர்கள். சென்னை கொளுத்துகிறது.

    பதிலளிநீக்கு
  2. மக்கள் பணத்தில் செலவு செய்து புதுப்பித்ததை மக்களே கரியால் கிறுக்குவது வேதனைக்குறியது.

    படங்கள் அழகாக இருக்கிறது சகோ.

    பதிலளிநீக்கு
  3. வணக்கம் ஸ்ரீராம், வாழ்க வளமுடன்.
    அடுத்த தடவை வரும் போது பாருங்கள்.


    மதுரை வைகையில் தண்ணீர், மழை என்பது மகிழ்ச்சியான விஷயம் ஸ்ரீராம்.

    சென்னையிலும் இறைவன் அருளால் மழை பெய்யட்டும்.
    உங்கள் கருத்துக்கு நன்றி.

    பதிலளிநீக்கு
  4. வணக்கம் தேவகோட்டை ஜி, வாழ்க வளமுடன்.

    கரியால் கிறுக்கினால் கூட பரவாயில்லை.
    உளிபோன்ற கருவியால் செதுக்கி உடைத்து வைத்து இருக்கிறார்கள்.
    உங்கள் கருத்துக்கும்
    படங்களை ரசித்தமைக்கும் நன்றி.

    பதிலளிநீக்கு
  5. படங்களுடன் பகிர்வு அருமை
    வாழ்த்துக்களுடன்...

    பதிலளிநீக்கு
  6. முதலில் மழைக்கு வாழ்த்து சொல்லி விடுகிறேன் கோமதிக்கா...ஆமாம் பின்ன இங்கு வெயில் கொளுத்தி எடுக்கிறது. கார்மேகத்தை இங்கும் வந்து பொழியச் சொல்லுங்கள்! கார்மேகத்தூது போல் ஹா ஹா ஹா ஹா...

    அக்கா ரொம்பச் சிறு வயதில் பார்த்திருக்கிறேன் திருமலைநாயக்கர் மஹால்.பிரம்மாண்டம். உங்கள் படங்கள் அருமை. தூண்கள் மட்டுமே நினைவில் இருக்கிறது. இப்போது சென்றால் எனது மூன்றாவது விழியிலும் சேமித்துவிடலாம்...ஆனால் வாய்ப்பு எப்போதோ தெரியவில்லை. அப்புறமும் மதுரை சென்றிருந்தாலும் சுற்றுலாவாகச் செல்லவில்லை ஏதேனும் விழா என்று சென்று வந்தோம்.

    தகவல்களும் படங்களும் செம. மொட்டைமரத்தில் கிளி ஆஹா!! தேன் கூடு, புறா என்று அனைத்தும் அழ்கு..

    கீதா

    பதிலளிநீக்கு
  7. அழகான படங்கள் தகவல்கள். ம்துரையில் படித்த காலத்தில் பார்த்திருக்கிறேன். கேரளத்திற்குச் சென்றபிறகு பார்க்கும் வாய்ப்பு அதுவும் குழந்தைகளைக் கூட்டிக் கொண்டு போய்க் காட்டும் வாய்ப்பும் கிடைக்கவில்லை. கில்லர்ஜியின் பதிவில் அவர் நன்றாகப் பராமரிக்கபப்டவில்லை என்றும் சொல்லியிருந்தார். பல நினைவுகளை மீட்டது தங்களின் படங்கள்.

    பார்க்க வேண்டும்.

    துளசிதரன்

    பதிலளிநீக்கு
  8. நான் மதுரையிலேயே பிறந்து வளர்ந்தும் திருமலை நாயக்கர் மகாலைப் பார்த்தது கல்யாணம் ஆன பின்னர் தான். அப்போத் தான் அழகர் கோயிலுக்கும் போனேன். அங்கெல்லாம் செல்ல அப்பா அனுமதிக்கவில்லை. இத்தனைக்கும் துணையோடு. கல்யாணம் ஆனபின்னரும் கொஞ்சம் முறைப்பு எல்லாம் காட்டினார் தான். ஆனால் நம்ம ரங்க்ஸ் என்னையும் அழைத்துச் சென்றார் திருப்பரங்குன்றம் மட்டும் தாத்தா வீட்டிற்கு டிவிஎஸ் நகர் செல்லும்போது அங்கிருந்து நடந்தே போயிருக்கோம்.

    பதிலளிநீக்கு
  9. இப்போத் தான் கில்லர்ஜியும் பதிவு போட்டிருந்தார். நம் மக்கள் புராதனச் சிற்பங்கள், கட்டிடங்களைச் சீரழிப்பது போல் உலகில் வேறு எங்கும் காண முடியாது! :(

    பதிலளிநீக்கு
  10. வரலாற்றுச் சின்னங்களில் கிறுக்கி பாழ்படுத்துவதில் நமக்கு ஈடு இணை கிடையவே கிடையாது

    பதிலளிநீக்கு
  11. மதுரை செல்லும்போதெல்லாம் இங்கு செல்வதை வழக்கமாகக் கொண்டுள்ளேன். பாதுகாக்கப்படவேண்டிய கலைச்சின்னங்களில் இதுவும் ஒன்று.

    பதிலளிநீக்கு
  12. வணக்கம் ரமணி சார், வாழ்க வளமுடன்.
    உங்கள் கருத்துக்கும், வாழ்த்துக்களுக்கும் நன்றி.

    பதிலளிநீக்கு
  13. வணக்கம் கீதா வாழ்க வளமுடன்.
    கார்மேக தூது நன்றாக இருக்கிறது.
    கார்மேகமே கார்மேகமே சென்னையில் இன்று மழை வரும் என்றார்கள் அதை மெய்பித்துவிடு, கீதா வீட்டு பக்கம் அதிகமாய் பொழிந்து விடு.
    வாருங்கள் பாருங்கள், மூன்றாவது கண்ணில் சேமித்து விடுங்கள் மஹாலை.
    முதலில் மஹால் வாசலில் கிளிதான் வர்வேற்றது இரண்டு மூன்று கிளிகள் மொட்டை மரத்தில் விளையாடி கொண்டு இருந்தது நான் படம் எடுக்கும் போது ஒன்று மட்டுமே நின்றது.
    அனைத்தையும் ரசித்து கருத்து சொன்னதற்கு நன்றி கீதா.

    பதிலளிநீக்கு
  14. வணக்கம் சகோ துளசிதரன், வாழ்க வளமுடன்.
    குழந்தைகளை விடுமுறைக்கு அழைத்து வந்து காட்டலாமே!
    தேவகோட்டை ஜி பத்துத்தூண் பதிவில் நானும் திருமலைநாயக்கர் பதிவு போட போகிறேன் என்றார் அதனால் தான் அவர் போட்ட பின் போட்டேன்.
    அவர் அருமையாக சொல்லி இருந்தார் மஹால் பாரமரிக்க பட வேண்டும் என்று.
    உங்கள் கருத்துக்கு நன்றி.

    பதிலளிநீக்கு
  15. வணக்கம் கீதா சாம்பசிவம், வாழ்க வளமுடன்.
    திருமணம் ஆனவுடன் கணவருடன் சென்று வந்தது மகிழ்ச்சி தானே?
    அப்போது எல்லாம் அழகர் கோவிலுக்கு மேலே பழமுதிர் சோலை போக பஸ் கிடையாது இல்லையா?
    மலை பாதையில் மாலை 5 மணிக்கு மேல் ஏறவிட மாட்டார்கள் அதனால் வேண்டாம் என்று அப்பா சொல்லி இருப்பார்கள்.

    நானும் என் கணவரும் மாலை அப்பா அமர்த்தி கொடுத்த டாக்ஸியில் அழகர் கோவிலுக்கு சென்றோம், என் தம்பி, தங்கைகளும் வந்தார்கள் (திருமணம் ஆன புதிதில்) மலை ஏறும் போது மணி ஆகி விட்டது இனி ஏறக்கூடாது என்று தடுத்து விட்டார்கள்.
    பழமுதிர் சோலை பார்க்கவில்லை, முருக பக்தர் என் கணவர் வழி எல்லாம் மணி தெரியாமல் நம்மை அனுப்பி வைத்து விட்டார்களே என்று சொல்லிக் கொண்டே வந்தார்கள்.

    //இப்போத் தான் கில்லர்ஜியும் பதிவு போட்டிருந்தார். நம் மக்கள் புராதனச் சிற்பங்கள், கட்டிடங்களைச் சீரழிப்பது போல் உலகில் வேறு எங்கும் காண முடியாது! ://

    ஆமாம் , தேவகோட்டை ஜியும் மக்கள் இப்படி சீரழிப்பதை எழுதி இருந்தார்.
    நம் புராதனச் சிற்பங்கள் கட்டிடங்களை பாதுகாக்கும் பொறுப்பு இருக்கு என்பதை உணர வேண்டும்.

    உங்கள் மலரும் நினைவுகள் என் மலரும் நினைவுகளுக்கு அழைத்து சென்றது.

    நன்றி.
    கருத்துக்களுக்கு நன்றி.

    பதிலளிநீக்கு
  16. வணக்கம் சகோ கரந்தை ஜெய்குமார், வாழ்க வளமுடன்.

    //வரலாற்றுச் சின்னங்களில் கிறுக்கி பாழ்படுத்துவதில் நமக்கு ஈடு இணை கிடையவே கிடையாது//

    உண்மைதான் வரலாற்றுச் சின்னங்கள் மட்டும் அல்ல, ரயில் பெட்டிகளில், பஸ்ஸில் எல்லாம் கிறுக்கி பாழ்படுத்துகிறார்கள். கோவிலை விட்டு வைப்பது இல்லை பரீட்சை நேரம் கோவில் சுவற்றில் நம்பர்களை எழுதி வைப்பது கரியால், எண்ணெயால்.

    உங்கள் கருத்துக்கு நன்றி.

    பதிலளிநீக்கு
  17. வணக்கம் ஜம்புலிங்கம் சார், வாழ்க வளமுடன்.

    மதுரை செல்லும்போதெல்லாம் இங்கு செல்வதை வழக்கமாகக் கொண்டுள்ளேன். பாதுகாக்கப்படவேண்டிய கலைச்சின்னங்களில் இதுவும் ஒன்று//

    ஆமாம் சார், பாதுகாகப்படவேண்டிய கலைச்சின்னம்
    உங்கள் கருத்துக்கு நன்றி.

    பதிலளிநீக்கு
  18. டெல்லி செங்கோட்டையை பராமரிக்கும்பொறுப்பை தனியாருக்கு தாரை வார்த்தது போல் நாயக்கர் மஹலையும் தாரை வார்க்கலாம் பொறுப்புகளை தட்டிக் கழிக்க ஒரு வழி

    பதிலளிநீக்கு
  19. வணக்கம் பாலசுப்பிரமணியம் சார், வாழ்க வளமுடன்.
    தட்டி கழிக்க நல்ல யோசனை
    தான்.
    உங்கள் கருத்துக்கு நன்றி.

    பதிலளிநீக்கு
  20. வணக்கம் சகோதரி

    திருமலை நாயக்கர் மஹால் பற்றி மிகவும் நன்றாக பதிவு எழுதியிருக்கிறீர்கள். அழகான படங்கள். பார்த்து ரசித்தேன். ஒரு தடவை செல்லவேண்டும். அழகர் கோவில், பழமுதிர் சோலைக்கு ஒருதடவை சென்றுள்ளேன். தங்களது புகைப்படங்களை காண்கையில் இங்கும் சென்ற வர எண்ணம் வருகிறது. பெரிய தூண்களை உடைய படங்கள் உச்சியில் அமர்ந்திருக்கும் புறா, சூர்ய ஒளி ஜன்னல் வரைந்த படம், அருங்காட்சியகம் அனைத்துப் படங்களும் மிக நன்றாக இருக்கிறது.

    கோடிக்கணக்கில் செலவு செய்து பராமரிப்பு செய்தாலும், மக்களின் கவனக்குறைவால் அத்தனையும் பாழாகி போகிறதே... கலைபெட்டகமாய் போற்றி பாதுகாத்தால், வரும் சந்ததிகளுக்கு புராதான கலை பொக்கிஷங்களை பற்றி அறிந்து கொள்ள உபயோகமாக இருக்கும். பகிர்வுக்கு மிக்க நன்றி சகோ.

    பதிலளிநீக்கு
  21. அன்பு கோமதி, ஒவ்வொரு பதிவும் பொக்கிஷம்.
    எத்தனையோ ஆடித்திரிந்திருக்கிறொம் இந்த மஹலில். அரண்மனைப் பக்கம் போனதில்லை. பள்ளியுடன் பயணம் சென்ற இரு நாட்களில் இந்த நாயக்கர் மஹல் முக்கிய இடம் பெற்றது.

    அரண்மனைப் பக்கம் போகவில்லை.
    மந்திகளைப் போல நடக்கும் மாந்தர்கள் இது போலக் கிறுக்குபவர்கள். எப்படித்தான் மனம் வருமோ.
    இனிமேலாவது பாதுகாக்கப் பட்டால் பெருமை ந்மக்குத்தான். வாழ்க வளமுடன் கோமதி.

    பதிலளிநீக்கு
  22. வணக்கம் சகோ கமலா ஹரிஹரன், வாழ்க வளமுடன்.
    படங்களை ரசித்து கருத்து சொன்னதற்கு நன்றி.
    நீங்கள் சொல்வது போல் கலைபெட்டகத்தை போற்றி பாதுகாத்து அடுத்து வரும் சந்ததிக்கு கொடுக்க வேண்டும்.

    உங்கள் அருமையான கருத்துக்கு நன்றி.

    பதிலளிநீக்கு
  23. வணக்கம் அக்கா, வாழ்க வளமுடன்
    பள்ளி சமயத்தில் தோழிகளுடன் மகிழ்ச்சியாக மஹாலில் ஆடியது நினைவுக்கு வருதா?

    அது மிகவும் மகிழ்ச்சியான காலம் இல்லையா அக்கா?
    மறுபடியும் பராமரிக்க பட்டவுடன் இப்படி கிறுக்காமல் பார்த்து கொள்வார்கள் என்று நம்புவோம்

    உங்கள் கருத்துக்கு நன்றி.


    பதிலளிநீக்கு
  24. சிறு வயதில் சென்றிருக்கிறேன். படங்கள் எடுக்க செல்ல வேண்டுமென நினைத்தபடி இருக்கிறேன். நேரம் அமையவில்லை.

    அழகான படங்களும்.. கூடவே தகவல்களும். நல்ல பகிர்வு.

    பதிலளிநீக்கு
  25. வணக்கம் ராமலக்ஷ்மி, வாழ்க வளமுடன்.
    நேரம் ஒதுக்கி வாருங்கள், நீங்கள் எடுக்கும் படங்கள் வெகு அழகாய் இருக்கும்.
    உங்கள் கருத்துக்கு நன்றி.

    பதிலளிநீக்கு
  26. திருமலை நாயக்கர் மஹால் விவரமும் படங்களும் அருமை! மதுரைக்கு மூன்று முறை சென்றிருக்கிறோம், ஆனால் திருமலை நாயக்கர் மஹால் பார்த்ததில்லை. அடுத்த முறை கண்டிப்பாக செல்ல வேண்டும்.நான் உங்கள் பதிவை படித்தவுடன் பின்னூட்டம் அனுப்பி இருந்தேன். ஏனோ பப்லிஷ் ஆகவில்லை.

    திருமலை நாயக்கர் மஹாலில்தானே 'இருவர்' 'ரோஜா' படங்களில் சில காட்சிகள் படமாக்கப்பட்டிருக்கும் இல்லையா?

    பதிலளிநீக்கு
  27. வணக்கம் பானுமதி வெங்கடேஸ்வரன், வாழ்க வளமுடன்.

    இப்போதுதான் உங்கள் பின்னூட்டம் வந்தது.
    நிறையபடங்கள் இங்கு படம்பிடித்து இருக்கிறார்கள்.

    அடுத்த முறை வரும் போது கண்டிப்பாய் பாருங்கள்.

    உங்கள் வரவுக்கும், கருத்துக்கும் நன்றி.

    பதிலளிநீக்கு