சனி, 24 செப்டம்பர், 2016

திருமோகூர் காளமேகப் பெருமாள் கோவில்


காளமேகப் பெருமாள் கோவில் கோபுரம்

இன்று புரட்டாசி  இரண்டாவது சனிக்கிழமை  திருமோகூர் காளமேகப் பெருமாளைத் தரிசனம் செய்து வந்தோம். இது
103 வது திவ்ய தேசம்.  திருமங்கையாழ்வார் , நம்மாழ்வார் மங்களாசஸனம் செய்து இருக்கிறார்கள்.நம்மாழ்வாருக்கு மோட்சம் தந்த தலம்.மோகினி அவதாரம் எடுத்த தலம் அதனால் திருமோனவூர் என்று அழைக்கப்பட்டு நாளடைவில் திருமோகூர் ஆயிற்று.


காலை எட்டு மணிக்கே வீட்டிலிருந்து கிளம்பி விட்டோம். காலையில் சிக்கீரம் போனால் கூட்டம் இருக்காது என்று  சொல்வார்கள். 


வாசலில் மாடு நின்று கொண்டு வருவோர் போவோர் என்ன கொடுப்பார்கள் என்று ஏங்கிப் பார்த்துக் கொண்டு இருந்தது.

ஓம் நமோ நாராயண என்று சொல்லிக் கொண்டே உள்ளே நுழைந்தோம். கொடிமரம் வணங்கி உள்ளே சென்றால் உற்சவர் அழகாய் கொலுவிருந்தார். அவருக்குத்தான் அர்ச்சனை எல்லாம். மூலவரை பார்த்து விட்டு வந்து  விட வேண்டும்.. இரண்டு ரூபாய் கட்டணம் உள்ளே போக. முன்பு பலவருடங்களுக்கு முன் பார்த்த பெருமாள்  இவ்வளவு உயரமா? நினைவில் இல்லை. (இப்போது வளர்ந்து விட்டாரா என்ன எப்போதும் இதே உயரம் தான்)  

ஸ்ரீதேவி, பூதேவியுடன் மலர் அலங்காரத்துடன் அற்புதமாய் காட்சி அளித்தார். நன்கு கண்ணாரக் கண்டு மனதாரத் தொழுது வாங்கிச் சென்ற துளசி மாலையைக் கொடுத்து வணங்கி வந்தோம்.

சுவாமி சன்னதி வாசல் தூணில் மன்மதன் சிலை நல்ல பெரிதாக உடல் முழுவதும் சந்தனம் பூசி இருக்கிறது அழகாய், அதற்கு எதிர் தூணில் ரதி சிலை அழகாய் சந்தனம் பூசி இருக்கிறது.
                               
                           காளமேகப் பெருமாள் இருக்கும் சன்னதி விமானம்
தாயார் மோகனவல்லி  சன்னதி  விமானம்

பெயருக்கு ஏற்றார் போல் தாயார் மோகனமாய் இருக்கிறார். அவர் சன்னதி மண்டபத்தில் உற்சவர் சக்கரத்தாழ்வார், பின் புறம் நரசிம்மர் உள்ள உற்சவருக்கு அர்ச்சனை நடக்கிறது .

 தாயார் மோகனவல்லி. தாயார் சன்னதியில்   ஒரு பட்டர் உயர்ந்த ஆசனத்தில் அமர்ந்து குங்குமம் கொடுத்துக் கொண்டு இருக்கிறார்  

                                                   
                               சக்கரத்தாழ்வார் சன்னதி தங்கக்கோபுரம் 

நரசிம்ம சுதர்னம் என்று அழைக்கிறார்கள். சுதர்சனரும், நரசிம்மரும் தங்க கவசத்தில் ஜொலிக்கிறார்கள். இவரைப் பார்க்கவும் இரண்டு ரூபாய் கட்டணம்.  சக்கரத்தாழ்வார் 16 கைகளுடன்16 ஆயுதங்களுடன் அழகாய்க் காட்சி அளிக்கிறார். மந்திர எழுத்துக்களுடன் மிகவும் சகதி வாய்நதவராம். இவரை வேண்டிக் கொண்டால்  எல்லாம் நல்லபடியாக நடக்கும் என்ற நம்பிக்கை.
                                                         
                    சிறு விமானம் தெரியும் சன்னதி- ஆண்டாள் சன்னதி                                          
சிறு முன் மண்டபத்தை கடந்து உள்ளே போனால் மலர்  உடை தரித்து வெகு அழகாய் காட்சி தருகிறார் ஆண்டாள். உற்சவ ஆண்டாளும் அழகிய அலங்காரத்தில் காட்சி தருகிறார். ஆரத்தி தட்டைக் காட்டி  நாமே ஆரத்தியைத் தொட்டு வணங்கிக் கொண்டு மஞ்சளை எடுத்துக் கொள்ளச் சொல்கிறார் பட்டர். 

அழகிய பிரகாரம் கால் சுடாமல் இருக்க வெள்ளை  வர்ணம் பூசி இருக்கிறார்கள் .அதில் நடந்தால் சுடவில்லை.

கோடியில் இருக்கும் பெரிய கிணறு  இரும்பு கம்பி போட்டு மூடி இருக்கிறார்கள். பாலீதீன், பூ, குப்பைகளைக் கிணற்றில் போடாதீர்கள் என்ற அறிவிப்பு வைத்து இருக்கிறார்கள். எட்டிப் பார்த்தேன் காசுகள் போட்டு இருக்கிறார்கள். மக்கள்.


சிலபடிகள் ஏறிச் சென்றால் நவநீதகிருஷ்ணர் சன்னதி. வெள்ளிஅங்கியில் அழகாய் இருக்கிறார். அவரைச் சுற்றி வணங்கி வர வசதி உள்ளது. 

உள் சன்னதியை வலம் வந்து வெளியில் வந்தால்  வெளிப்பிரகாரத்தில் ஆஞ்சனேயர் சன்னதி வெள்ளி கவசம் தாங்கி துளசி மாலை அணித்து சிறிய மூர்த்தியாய் காட்சி தந்தார்.


 அவருக்கு அருகே மதியம் அன்னதானத்திற்கு சமைக்கும் இடம். ஒரு அம்மா ஐந்து ஆறு வெண்டைக்காயை ஒன்றாய் அடுக்கி வைத்துக் கொண்டு வெட்டிக் கொண்டு இருந்தார்கள். அடுத்து மடைப்பள்ளி அங்கு புளியோதரை, பொங்கல், மற்றும் பலகாரங்கள் தயார் ஆகி கொண்டு இருந்தது. அதை தயார் செய்ய அடுப்பிற்கு விறகுகள் மரத்தடியில் அடுக்கி வைத்து இருந்தார்கள். பாதாம், தென்னை, மாமரம் இருந்தன.


தென்னை மரங்களுக்கு இடையே சக்கரத்தாழ்வாரின் தங்க விமானம்

                      மேல் தளத்திற்கு செல்லும் படிக்கட்டுகள்.

அதனை ஒட்டி ஒரு பெரிய பாழடைந்த  கிணறு
குப்பை கூளங்களுடன் தென்னை மர நிழலும் விழுந்து இருக்கிறது, மொட்டைத் தென்னைமரம்,  கீற்றுடன் தென்னைமரம்
                       
 அடுத்து சதுரக் கல்லில்  சுற்றிவர சின்ன சின்ன  உருவங்கள் நடுவில்  சக்கரத்தாழ்வார். விளக்குகள் ஏற்றி வழிபடுகிறார்கள்.



தரையிலும்  மேலேயும் பல கிளைகளை பரப்பிக் கொண்டு மரம் பச்சையாய்
அந்த மரத்தில் தங்கள் இதயங்களையும், பெயரையும்   வரைந்து வைத்து இருக்கிறார்கள்.

பிரகாரத்தின் முடிவில் சுவாமி இளைப்பாறும் மண்டபம்.


பிரகாரம் சுற்றி  கொடிமரம் தாண்டி வந்தால் பள்ளிகொண்ட பெருமாள் சன்னதி இருக்கிறது. யாரும் மறைக்காமல்  பாம்பு படுக்கையில் ஸ்ரீதேவி, பூதேவி கால் அருகில் இருக்க வலது கையை படித்து மலர் கண்களை நன்கு மலர்த்தி நம்மை பார்க்கிறார். நல்ல வெளிச்சம் அவர் மேல் படுவதால் நன்கு கண்குளிரப் பார்க்க முடிகிறது.


சன்னதியை விட்டு வெளியில் வந்தால் அன்னதானத்திற்கு மேஜைகள் போட்டு இருக்கிறது ஒரு பக்கம், நடுவில் இருக்கும் மண்டபத்தில் மின்விசிறிகள் சுழல்வதால் மக்கள் பிரசாதங்களை வாங்கி வந்து அமர்ந்து சாப்பிட்டு இளைப்பாறிச் செல்கிறார்கள்.

அவர் சன்னதிக்கு செல்லும் படிக்கட்டுகளில் கைகூப்பி சாஷ்டாங்க நமஸ்காரம் செய்வது போல்  உருவங்கள் அமைக்கப்பட்டு இருக்கிறது.
அதைப் பார்த்தவுடன்  சீர்காழி கோவிந்தராஜன் பாடும் பாடல் நினைவுக்கு வந்தது.( பாடல் -குலசேகராழ்வார் )

 /செடியாய வல்வினைகள் தீர்க்கும் திருமாலே!
நெடியானே! வேங்கடவா! நின் கோயிலின் வாசல்
அடியாரும் வானவரும் அரம்பையரும் கிடந்து இயங்கும்
படியாய் கிடந்து உன் பவளவாய் காண்பேனே!//
குலசேகராழ்வாரின் பெருமாள் திருமொழி.

அடியவர்களின்  பாதம் அந்த உருவங்களின் மேல்

உள்ளே தரிசனம் செய்து வெளியில் வந்தால் எதிரில் கருடன் மேல் திருமால் அமர்ந்து இருக்கும் மண்டபம் தெரிகிறது.

 நாம் முதலில் திருக்குளத்தில் கால்களை கழுவி, தலையில் தெளித்துக் கொண்டு  திருக்குளத்து அருகே இருக்கும் ஆலமரத்த்டியில் இருக்கும் தும்பிக்கை ஆழவாரைப் பணிந்து  பின்  உள்ளே காளமேகப் பெருமாளை வணங்கச் சென்று இருக்க வேண்டும். கூட்டம் வரும் முன்னே சேவிக்க வேண்டும் என்று முதலில் உள்ளே போய் விட்டு பின் ஆற அமர திருக்குள தரிசனம்.

இங்கு உள்ள திருக்குளம் திருப்பாற்கடல் என்று அழைக்கப்படுகிறது . அழகிய நீராழி மண்டபத்துடன்   திருக்குளம். நன்கு சுத்தமாய் இருக்கிறது.

சிறுவர்கள் நீச்சலடித்து குளித்துக் கொண்டு இருந்தார்கள்.
ஆலமரத்தின் நிழலும் திருக்குளத்தில் அலையடிப்பதும் பார்க்க அழகு.



ஆலமரத்தடியில் அகத்திக்கீரையும், அருகம்புல்லும் விற்கும் தாய்
  
அங்கு நிறைய பசுமாடுகள் இருக்கிறது அதற்கு அகத்தி கீரை விற்கிறார்கள், தும்பிக்கை ஆழவாருக்கு அருகம்புல் விற்கிறார்கள் அந்த அம்மா தன்  குழந்தையை கொஞ்சுவதைப் பாருங்கள்.




ஆலமரத்தில் தொட்டில் கட்டி தன் செல்லத்தை அதில் இட்டுக் கொஞ்சிப் பேசித் தாலாட்டும் தாய்.
ஆலமரக் காற்றும், திருக்குளக் காற்றும் உடலை வருட, தாயின் அன்பு குரல் மனதை வருட சுகமான தூக்கம் வராதோ குழந்தைக்கு!



இப்போது இடுப்பில் இருக்கும் குழந்தை சற்று முன் தொட்டில் ஊஞ்சலில் ஆடிய குழந்தை.


                                           ஆலமரத்தடியில் நாகர்கள்.
இந்த மண்டபத்தில் சூரியன் வரப்போகிறார் என்று நினைக்கிறேன். மேலே குதிரைகள் இருக்கே!
இப்போது ஆலமரத்தடியில் தகரக் கொட்டகையில் இருக்கும்  தும்பிக்கை ஆழவார் இங்கு வரப்போகிறார்.

குளத்து அருகே தாமரைக்குளம். தண்ணீர் இல்லை .சேறும் சகதியுமாய்,
 புற்களும் புதர்களுக்கு இடையே தாமரையும்  அழகாய் தலைதூக்கி சிரிக்கிறது. தூரத்தில் இருந்து எடுத்தேன். நிறைய மாடுகள் கூர்மையான கொம்புடன் அங்கு நின்றன.

கருப்பண்ணசாமி சன்னதியும் வெளியில் இருக்கிறது.

வாழ்க வளமுடன்.

----------

சனி, 17 செப்டம்பர், 2016

ஸ்ரீ பிரசன்ன வெங்கடேச பெருமாள் கெருடசேவை

செளராஷ்டிர மக்கள் கட்டிய அழகிய கோவில்   ஸ்ரீ பிரசன்ன வெங்டேச பெருமாள்  கோவில்

நான் அடிக்கடி போகும் காளகத்தீஸ்வரர் கோவிலில் (இந்த கோவிலும் இவர்களது கோவில் தான்) ஸ்ரீ பிரசன்ன வெங்கடேச பெருமாள் கோவிலில்  சனிக்கிழமை காலையில் கருடசேவை நடக்கும் என்று   நோட்டிஸ் ஒட்டி இருந்தார்கள்.  தெற்கு கிருஷ்ணன் கோவில் தெருவில்  இருக்கிறது இந்த கோவில். இந்த கோவிலை பார்த்தது இல்லை. அதனால்  இன்று காலை ஆட்டோக்காரரிடம் இந்த இடத்தையும்  கோவில் பேரையும் சொல்லி போக சொன்னால் நீங்கள் சொல்வது கூடல் நகர் பெருமாள் என்று சாதித்தார், இல்லை செளராஷ்டிர மக்களுக்கு சொந்தமான தனிக் கோவில் என்றவுடன் தேடிக் கொண்டுபோய் விட்டார்.   

மிகவும் அழகிய கோவில். இரண்டு பக்கமும் குடியிருப்புகள், நெருக்கடியான இடம் ஆனால் கோவில் உள்ளே நல்ல விஸ்தாரமாய் நிறைய மூர்த்திகளை கொண்டு இருக்கிறது.
‘உள்ளே போனவுடன் பிள்ளையார்  வெள்ளிக்கவசம் சார்த்தி அழகாய் இருந்தார்.  பெரிய அனுமன் முத்தங்கி சார்த்தி வெகு அழகாய்க் காட்சி தந்தார். 

கடந்து உள்ளே போனால் பன்னிரு ஆழ்வார்கள் வெள்ளிக் கவசத்தில் அழகாய், அதற்கு அடுத்து  செளராஷ்டிர மக்கள் குருவாய் ஏற்றுக் கொண்டுள்ள நடனகோபால சுவாமிகள். அவருக்கும் வெள்ளி கவசம்.

நடுவில் மூலவர் ஸ்ரீ பிரசன்ன வெங்டேசபெருமாள், முத்தங்கியால் அலங்கரிக்கப்பட்டு வெகு அழகாய் காட்சி தந்தார். ஆரத்தி, தீர்த்தம், சடாரி, துளசி பிரசாதம் பெற்றுக் கொண்டு கண்குளிர , மனம் குளிர பார்த்துக் கொண்டோம், நகரு, வாங்க வாங்க என்ற ஓலி இல்லாமல் பெருமாளை நின்று நிதானமாய் வணங்க முடிந்தது தான் ஆச்சரியம்.

அலமேலு தாயாரும்  முத்தங்கி அணிந்து, தாமரை மலர் சூடி அழகாய் காட்சி தந்தார். ஆரத்தியும், குங்கும பிரசாதமும் கிடைத்தது.

அடுத்து  ஹயக்கிரீவர், பூவராகப்பெருமாள், யோகநரசிம்ம  பெருமாள், ராமர்.   பள்ளி கொண்ட பெருமாள் (சிறிய மூர்த்தியாக) அனைவரும்  வெள்ளி  , தங்கம் ஆகிய கவசங்கள்  சார்த்தப்பட்டு அழகாய் இருந்தார்கள்.

தனிச் தன்னதியில் ஆண்டாள்  முத்தங்கி சார்த்தி,  மூலவரும் உற்சவரும் ஒரே சன்னதியில் வெகு அழகாய் இருந்தனர்.

 சிலபடிகள் கீழே இறங்கி வந்தால்  பசுமாடுகள்,  அகத்திகீரை விற்கிறார்கள் பசு மாட்டுக்குக் கொடுக்க. 

வெளியே போகும் வாசல் பக்கம் பளிங்கு ராதா கிருஷ்ணர் அழகாய்.

அழகிய கோவில்  தள்ளு, முள்ளு இல்லாமல் புரட்டாசி சனிக்கிழமை தரிசனம் செய்தது இதுவே முதல் முறை.

கருடசேவையும் கிடைத்தது. கோவிந்தன் அருள்தான்.

ஸ்ரீ பிரசன்ன வெங்கடேச பெருமாளை வணங்கி விட்டுப் பக்கத்தில் இருக்கும் வீரராகவ பெருமாள் கோவில் போய் வணங்கி விட்டு வெளியே வந்தோம்.அப்போது வீதியில் பிரசன்ன வெங்கடேசப்பெருமாள் உலா வந்து கொண்டு இருந்தார்.  முரசு முன்னே சென்று விட்டது. சிறுவர்கள் கோவிந்தன் புகழ் பாடிக் கொண்டு போனார்கள்.   

கோபுரவாசலில் ஒருபுறம் சக்கரத்தாழ்வார் மறுபுறம் கருப்பண்ணசாமி
உள்ளே போனவுடன் கருடன்மேல் பெருமாள் காட்சி தந்தார்

வாசலில்  பெருமாள் வீதிவலம் வருவதை முரசு அறைந்து சொல்லிப்போக தயாராக இருக்கும் முரசு
இதோ கிளம்பிவிட்டார் !
துளசி  பிரசாதம் தர, குட்டிக் கண்ணன் 
தருகிறார் துளசி, சின்னக் கண்ணன்
பத்து மணிக்கே வெயில் கொளுத்துகிறது

புரட்டாசி மாதம் ஒவ்வொரு கனிக்கிழமையும் கெருட சேவை நடக்கும் என்றார்கள். இந்த முறை ஐந்து சனிக்கிழமை வருகிறது.
கோவிலின் பக்கத்தில் இருப்பவர்களுக்கு  நல்ல தரிசனம் கிடைக்கும்.
                                                          வாழ்க வளமுடன்.

ஞாயிறு, 11 செப்டம்பர், 2016

மண்ணைப் படைத்தவன் மண் சுமந்தான்





பிட்டுக்கு மண் சுமந்து பிரம்படி பட்ட லீலை    இன்று..

பல வருடங்களாய் பார்க்க நினைத்த விழாவை போன வருடம் பார்க்கும் நல் சந்தர்ப்பம் கிடைத்தது.

உறவினர்களுடன் சென்று வந்தேன். நிறைய கூட்டம், பிட்டுக்கு மண் சுமந்த கதை சொல்லப்படுகிறது., அது போல் நடித்துக் காட்டப்படுகிறது.
மண்டபத்தின் மேல் முக்கிய பிரபலங்கள் மட்டும் அனுமதி ,கீழ் இருந்து படம் எடுப்பது மிகவும் சிரமமாய் இருந்தது.

வெள்ளி, 9 செப்டம்பர், 2016

வளையல் வாங்கலையோ! வளையல்


மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் ஆவணி மூலத் திருவிழா நடக்கிறது.  இறைவன் நடத்திய 64 திருவிளையாடல்  நிகழ்ச்சியாக நடத்திக் காட்டப்படும். போன வருடம்  வளையல் திருவிழா, புட்டுக்கு மண்சுமந்த திருவிழா பார்த்தோம்.

64 திருவிளையாடல்களில் 32 வது திருவிளையாடல்.
 தாருகாவனத்து முனிவர்கள்  மனைவியர் சாபம் நீங்க வளையல் விற்கும் வணிகராய் வந்து  அவர்களுக்கு வளையல் அணிவித்து அவர்கள் சாபம் நீக்கி பலரும் காணும்படி விண்ணில் மறைந்தார்.


இன்று சோமசுந்தரக் கடவுள் வளையல் விற்ற திருநாள்.
நாங்கள் மீனாட்சி அம்மன் கோவில் போன போது வளையல் எல்லாம் அணிந்து சோமசுந்தரப்பெருமான் வளையல் விற்கப் போக ஆயத்தமாகிக் கொண்டு இருந்தார்.



மீனாட்சி அம்மன் கையில் வளையல் சரம்.

சுவாமி கையில் வளையல் சரம்.  ”வளையல் வாங்குவீர், வளையல் வாங்குவீர்  “


சுவாமி பல்லாக்கு எல்லாம் வல்ல சித்தர் சன்னதி அருகிலிருந்ததால் சரியாக படம் எடுக்க முடியவில்லை மூங்கில் கம்பு கட்டி இருந்தார்கள் அருகில் போக முடியாமல் இருக்க.


தங்கவளை, வைரவளை விற்க வந்து இருக்கிறார்.

பஞ்ச மூர்த்தி புறப்பாடு நடக்கும், நாங்கள் போன போது இவர்கள் மட்டும் இருந்தார்கள், முருகன், சண்டேஸ்வரர் எல்லாம் இனிமேல்தான் வருவார்கள். 



                   முரசு முதுகில் - இறைவன் வருவதைக் கட்டியம் கூற
                                                      
                             வளையல் வணிகர் வந்தார்(இது போனவருஷப்படம்)

இறைவன் வளையல் வணிகராக வருவதால் குடை  உபசாரம்(போனவருஷப்படம்)




கோவிலுக்குள்ளே  பெரிய சந்தனக்கல்லில் சந்தனம் அரைத்துக் கொண்டு இருந்தார்கள்,  நான் எட்டிப் பார்த்தவுடன் சந்தனம் அரைக்கிறீர்களா ? நாளை இறைவனுக்கு தேவைபடும் சந்தனம் என்றார்கள்.  சந்தோஷமாய் நானும் , என் கணவரும் அரைத்தோம்.
அரைக்க போகும் முன் அவர்கள் சொன்னது நம் கையை துடைத்து விட வேண்டும் கையில் ஒட்டி இருந்தால், நெற்றியில் அணிந்துவிட கூடாது,முகர்ந்து பார்த்து விட கூடாது என்பதுதான்.  பெரிய சந்தனகட்டை என்பதால் அரைக்கும் போது நம் கையில் படவில்லை.


                                                   
போன வருடம் இன்மையில் நன்மை தருவார் கோவிலில் எடுத்த படம் இந்த படம்..


இந்த கோவில் வாசலில் வளையல் விற்றதை போன வருடம் பார்த்தோம். பக்தர்கள் டப்பா டப்பாவாய் வளையல் கோவிலில் கொடுத்துக் கொண்டு இருந்தார்கள் அங்கு இருக்கும் மக்களுக்கு.

இம்மையில்  நன்மைதருவார் கோவிலில் உள்ளே  மூலவர் இருக்கும் இடத்தில்  உள்ளே போகும் அன்பர்கள் எல்லோருக்கும் குருக்கள் இரண்டு வளையல் கொடுத்தார்.

                                                          வாழ்கவளமுடன்.