ஆலய தரிசனம். லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
ஆலய தரிசனம். லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

சனி, 17 ஜனவரி, 2015

கீழச் சூரிய மூலை அருள்மிகு சூரிய கோடீஸ்வரர் ஆலயம்

பொங்கல் திருநாள் அன்று (15/01/2015) நாங்கள் கீழச்சூரிய மூலை என்ற ஊரில் உள்ள அருள்மிகு சூரிய கோடீஸ்வரர் ஆலயத்திற்குச் சென்று இருந்தோம்.,
இக் கோயில் கும்பகோணத்தில் இருந்து 15.கி.மீ தொலைவில் உள்ளது. சூரியனார் கோவிலுக்கு அருகே கஞ்சனூர், திருலோகி கிராமங்களை அடுத்து இவ்வூர் அமைந்துள்ளது.

கீழச்சூரிய மூலை என்றகிராமத்தில் அருள்மிகு பவளக்கொடி அம்பிகை சமேத ஸ்ரீ சூரிய கோடீஸ்வரர் திருக்கோயில் அமைந்துள்ளது.




 தன் வாழ்நாளெல்லாம் தமிழுக்கே தம்மை அர்ப்பணித்துக் கொண்டவரும் , ஓலைச்சுவடிகளிலிருந்து சங்க நூல்களையும் , காப்பியங்களையும் நூலாக அச்சிலேற்றி தமிழ் உலகுக்குத் தந்தவருமாகிய, தமிழ்த் தாத்தா டாக்டர் .உ.வே. சாமிநாதய்யர் பிறந்த ஊர் ,கீழச் சூரிய மூலையாகும். கோவிலில்  அவரின் ஓவியம் வரைந்து வைத்து இருக்கிறார்கள். அவர் வீடு இருந்த தெருவே இப்போது இல்லையாம்.

கீழச்சூரிய மூலைகோவிலின் சிறப்பு :--

கருவறையில் ஈச்வர லிங்கத்திற்கு மேல் ஓராயிரத்திற்கு மேலான “ஏகமுக”
ருத்திராட்சத்தினால் ஆன பந்தல் உள்ளது.
                அருள்மிகு  சூரிய கோடீஸ்வரர்                    
அருள்மிகு பவளக்கொடி அம்பிகை 
ஸ்வாமிக்கு நேரே  மண்டபத்தில் நந்தி இருக்கிறார்.

இங்குள்ள மூலவரை , காலை முதல் மாலைவரை சூரிய பகவான் தன் பொன்கதிர்களால் ஆராதனை செய்வதாக ஐதீகம். அதற்கேற்ப சூரிய உதயம் முதல் சூரிய அஸ்தமனம் வரை  மூலவரின் நிழல் சுவரில் தெரியுமாம். குருக்கள் கண்ணாடி வைத்து சூரிய ஒளியைக் காட்டினார். 


பிரதோஷ காலத்தில் சூரியன் இறைவனைத் தரிசிக்க அருள்புரிந்த ஸ்ரீ காலபைரவர்  மிகவும் விஷேசமானவர்.  இவர் சொர்ணபைரவர் என்று அழைக்கப்படுகிறார்.
இந்த பைரவருக்கு  தீபாராதனை காட்டும் போது அவரது கண்டத்தில் சிறிதாக  பவளமணி அளவில் சிவப்பு ஒளி வெளிப்படுகிறது. அது தீபாராதனையின் போது மெல்ல அசைவது போல் இருக்கும். இதைக் குருக்கள்  விவரித்து தீபாராதனை செய்து காட்டினார்.

இந்த பைரவரின் கண்டப்பகுதி ஆறு மாதங்களுக்கு ஒரு முறை நிறம் மாறுவதும், பின் பழைய நிலையை அடைவதும் இததலத்தின் சிறப்பு. இத் தலத்தின் பைரவரை தரிசனம் செய்தால் பக்தர்களின் கண்டம் நீங்குமாம்.

பைரவரின் கழுத்தில் தெரியும் பவளமணியின் ஏழு ஒளிக் கிரணங்களின் மூலம் அனைத்து கோடி சூரிய , சந்திர மூர்த்திகளின் ஒளிக் கிரணங்களால் ஏற்படும் தோஷங்களையும் , பிணிகளையும் நிவர்த்தி செய்கிறார் என்பது பக்தர்களின் நம்பிக்கையாம்.

தெற்கு கோஷ்டத்தில் ஆனந்த தட்சிணாமூர்த்தி புன்னைகைத்த நிலையில் காட்சி தருகிறார். இவருக்கு மேலே உள்ள சர்ப்பத்தின் ஒரு தலையில் ஆஞ்சநேயரின் முகம் தெரிகிறது
இங்கு உள்ள துர்க்கைக்கு ஒரு பாதத்தில் மட்டும் மெட்டி உள்ளது. தன்னைத் தரிசிக்க வரும் பக்தர்களை அம்மன் வலது காலை முன் வைத்து எழுந்து வரவேற்கிறாளாம்.


கோயிலைச்சுற்றி வந்தபின் தான் குருக்கள் சொன்னார் துர்க்கையின் சிறப்பை .முன்பே சொல்லி இருந்தால் கால் விரலை குளோசப்பில் எடுத்து இருக்கலாம்.
வெளிப்பிரகாரத்தில் பிள்ளையார், வள்ளி தெய்வானையுடன் முருகன், 






சுந்தர மஹாலக்ஷ்மி
சண்டேஸ்வரரின் கால் பகுதியில் சூரியஒளி

நவக்கிரகங்கள் தங்கள் வாகனத்துடன் இருக்கிறார்கள்








மேலும்  கோவிலின் சிறப்புகள்   ;-

ஸ்ரீ யாக்ஞவல்கியருடைய வேதமந்திர சக்திகளெல்லாம் ஸ்ரீ சூர்ய கோடீஸ்வரருடைய திருவடிகளிலே ஓர் அற்புத விருட்சமாய் மலர்ந்த
இலுப்பை  மரம்தான் இக்கோவிலின் தலவிருட்சமாகும்.

சூரிய தோஷம் , மனசஞ்சலம் உள்ளவர்கள் இங்குள்ள இறைவனுக்கு இளநீர் அபிஷேகம் செய்தால் தோஷம் நீங்குமாம்.

பார்வைக்குறைகள், பலவிதமான கண் நோய் உடையவர்கள் பிரதோஷவழிபாட்டையும், ஞாயிற்றுக்கிழமை காலை 6-7 சூரிய ஹோரை நேரத்தில் பூஜையையும் செய்தால் கண்  நோய்களிலிருந்து தீர்வு பெறலாம் என்றும், அன்னதானம் செய்தால் நம் முன்னோர்களுக்கு நாம் செய்த பாவங்களும் அதனால் ஏற்பட்ட தோஷங்களும் விலகும் என்றும் குருக்கள் கூறினார்.

சுக்கிராச்சாரியார் தான் இழந்த கண்பார்வையை திரும்பவும் பெற, ஆதித்யஹ்ருதய  மந்திர ஹோம பூஜைகளைச் செய்த ஸ்தலம் இது.

ஸ்ரீராமர் தசரதருக்கு  ஈமக்கடன்களை ஆற்ற இயலாமற் போனதால் அதனால் ஏற்பட்ட தோஷம் நீங்க 108 புனித விருட்சங்களின்  கீழ் ஸ்ரீராமர் தர்ப்பணம் செய்தார். அப்படி இலும்பை மரத்துக்கு கீழ் செய்த தலம் கீழச்சூரிய மூலையாகும்.

 இத்தலத்தில் பித்ரு தர்ப்பணம் செய்வதால் பித்ரு சாப நிவர்த்தி கிடைக்கும்.
இக்கோவிலில் ஆதித்ய ஹ்ருதய மந்திரங்களை ஓதி வழிபட்டால் சாந்தமும், மனநிம்மதியும் கிடைக்கும்  என்று தலவரலாறு கூறுகிறது என்று சொன்னார் குருக்கள்.

கும்பகோனத்திலிருந்து  திருலோகி செல்லும் டவுன் பஸ் 38ல்  கோவிலுக்கு செல்லலாம். ஆடுதுறை, திருப்பனந்தாளிலிருந்து ஆட்டோ, கார் வசதிகள் உண்டு. அம்பிகா சர்க்கரை ஆலையிலிருந்து 2கி.மீ வடக்கே உள்ளது.

                                                           வாழ்க வளமுடன்

                                      =================================