ஞாயிறு, 28 செப்டம்பர், 2014

ஆலயங்களில் நவராத்திரி விழா

நவராத்திரியில் நிறைய பாடல்கள் பாடி மகிழ்வோம். நம் தேசியக் கவி பாடிய பாடலையும்  பாடி மகிழலாம்.

லக்ஷ்மி பிரார்த்தனை

மலரின் மேவு திருவே-- உன் மேல்
மையல் பொங்கி நின்றேன்;
நிலவுசெய்யும் முகமும் -காண்பார்
நினைவழிக்கும் விழியும்
கலக லென்ற மொழியும்-தெய்வக்
களிதுலங்கு நகையும்
இலகு செல்வவடிவும்- கண்டுன்
இன்பம் வேண்டுகின்றேன்

திருமகளை சரண் புகுதல்

பொன்னிலும் மணிகளிலும்- நறும்
பூவிலும் சாந்திலும்  விளக்கினிலும்
கன்னியர் நகைப்பினிலும் -செழுங்
காட்டிலும் பொழிலிலும் கழனியிலும்,
முன்னிய துணிவினிலும் -மன்னர்
முகத்திலும் வாழ்ந்திடும் திருமகளைப்
பன்னிநற்  புகழ்பாடி- அவள்
பதமலர் வாழ்த்திநற் பதம்பெறுவோம்.

சரஸ்வதி தேவியின் புகழ்

வெள்ளைத் தாமரைப் பூவில் இருப்பாள்,
வீணை செய்யும் ஒலியில் இருப்பாள்;
கொள்ளை யின்பம் குலவு கவிதை
கூறு பாவலர் உள்ளத் திருப்பாள்;
உள்ள தாம்பொருள் தேடி யுணர்ந்தே
ஓதும் வேதத்தின் உள்நின் றொளிர்வாள்;
கள்ள முற்ற முனிவர்கள் கூறும்
கருணை வாசக்த் துட்பொரு ளாவாள்.                                    (வெள்ளைத்)

மாதர் தீங்குரற் பாட்டில் இருப்பாள்,
மக்கள் பேசும் மழலையில் உள்ளாள்;
கீதம் பாடும் குயிலின் குரலைக்
கிளியின் நாவை இருப்பிடங் கொண்டாள்;
கோத கன்ற தொழிலுடைத் தாகிக்
குலவு சித்திரம் கோபுரம் கோயில்
ஈதனைத்தின் எழிலிடை யுற்றாள்
இன்ப மேவடி வாகிடப் பெற்றாள்.

காளி    ஸ்தோத்திரம்

யாதுமாகி நின்றாய்-காளி!-எங்கும் நீ நிறைந்தாய்;
தீது நன்மையெல்லாம்-நின்தன்-செயல்க ளன்றி யில்லை.
போதும் இங்கு மாந்தர்-வாழும்-பொய்மை வாழ்க்கை யெல்லாம்
ஆதிசக்தி,தாயே!-என் மீ-தருள் புரிந்து காப்பாய்.

எந்த நாளும் நின்மேல்-தாயே!இசைகள் பாடி வாழ்வேன்;
கந்த னைப்ப யந்தாய்,-தாயே!கருணை வெள்ள மானாய்!
மந்த மாரு தத்தில்-வானில்-மலையி னுச்சி மீதில்,
சிந்தை யெங்கு செல்லும்-அங்குன்-செம்மை தோன்று மன்றே

கர்ம் யோக மொன்றே-உலகில்-காக்கு மென்னும் வேதம்;
தர்ம நீதி சிறிதும்-இங்கே-தவற லென்ப தின்றி,
மர்ம மான பொருளாம்-நின்தன்-மலர டிக்கண் நெஞ்சம்,
செம்மை யுற்று நாளும்-சேர்ந்தே-தேசு கூட வேண்டும்.    

   
நவராத்திரி விழா சில நினைவுகள்:-

ஆலயங்களில் கொலு வைத்து  அம்மன் ஒவ்வொரு நாள் ஒவ்வொரு அலங்காரத்தில் கொலுவீற்று இருப்பாள். கோவிலில்  கொலு10 நாட்கள் நடைபெறும்
எங்கள் ஊரில் இருக்கும் புனுகீஸ்வரர்  கோவிலுக்கு கொலு பார்க்க நாங்கள் தினமும் குழந்தைகளுடன் போவோம். அங்கு அழகாய் கொலு பொம்மைகள் இருக்கும்.
பின் அங்கிருந்து பக்கத்தில் இருக்கும் சாரங்கபாணி கோவில் செல்வோம். அங்கும் கொலு பார்த்துவிட்டு அதன் அருகில் இருக்கும் காமாட்சி அம்மன் கோவில் போவோம். அங்கும் கொலு வைத்து இருப்பார்கள் .தினம் பார்த்தாலும் புதிதாகப் பார்ப்பது போல்,”அந்த பொம்மையைப் பார், இந்த பொம்மையைப் பார் ”என்று பிள்ளைகள் பேசி மகிழ்வார்கள். மயூரநாதர் கோவிலிலும் கொலு நன்றாக இருக்கும். கோவில் கோவிலாக குழந்தைகளுக்காக் கொலு பார்க்கச் சென்ற நினைவுகள் மனதில் மலர்கிறது.

நாங்கள் திருவெண்காட்டில் இருந்தபோது, ஸ்வேதாரண்யர் கோவிலில் நவராத்திரி கொலு மிகச் சிறப்பாக நடைபெறும். கொலு பொம்மைகளை வைத்து தினம் கதைகள் சொல்வார்கள் .ஒருநாள் கைலாயக் காட்சி என்றால் இன்னொருநாள் வைகுண்ட வாசல், ஏழுகதவுகள் திறக்கும்.கடைசி கதவு திறக்கும் போது பாற்கடலில் பரந்தாமன் காட்சி அளிப்பார்.  பெரிய பெரிய பொம்மைகள் அதை மாற்றி மாற்றி வைத்துக் காட்சி அமைப்பார்கள். வெகு அழகாய் இருக்கும். கச்சேரிகளும் உண்டு.பெரிய பெரிய பிரபலமானவர்களின் கச்சேரிகள் நடக்கும். இப்போது அப்படி நடப்பதில்லை.

வீட்டில் கொலு வைத்து இருக்கும்போது இறைவன் புகழைப் பாடி மகிழ்வார்கள். ஆடல்கலையால் இறைவன் புகழை ஆடியும்  மகிழ்வார்கள். தங்களுக்கு வித்தை சொல்லிக் கொடுத்த குருவிற்கு விஜய தசமி அன்று குரு காணிக்கை அளித்து மகிழ்வார்கள். எடுத்தக் காரியத்தில் வெற்றி பெற இறைவன் அருளும் குருவருளும் மிகவும் முக்கியம்  இல்லையா?

இந்த ஒன்பது நாளும் தங்களுக்கு இருக்கும் பலகலைகளையும் வெளிப்படுத்தக் கிடைத்த நல்ல வாய்ப்பாக குடும்பத்தினர் அனைவரும் பயன்படுத்திக் கொள்ளலாம். அவர்களுக்கு மகிழ்ச்சியும் ஆனந்தமும் இந்த விழாக்கள் மூலம் கிடைக்கும். உறவினர், நண்பர்கள் இவர்களைச் சந்தித்து உரையாடும் வாய்ப்பாகவும் இருக்கிறது.

இந்த விழா மட்டும்  தான் சாதி மதம் பாராமல் அனைவரும் அவர்கள் தொழில் செய்யும் இடத்தைக் கோவிலாக நினைத்து கொண்டாடும் விழாவாக இருக்கிறது. தொழில் புரிபவர்கள்  தாம் பயன்படுத்தும் அனைத்துப் பொருட்களையும் சுத்தமாகத் துடைத்து அதற்குப் பொட்டு வைத்துப் பூஜை போடும் நாள்.

கொலுவிற்கு அக்கம் பக்கத்தில் உள்ள அனைத்து மதத்தினரும் மகிழ்வாய் வந்து கலந்து கொண்டு மகிழ்வதால்  நவராத்திரி விழா மிகவும் சிறப்பு வாய்ந்த விழா.

கோவிலோ வீடோ எல்லோரும் சேர்ந்து செய்யும் கூட்டு முயற்சியால்தான் விழாக்களை சிறப்பாக செய்யமுடியும். ஒருவர் மட்டும் செய்தால் அதில் அலுப்பும், சலிப்பும் வந்து விடும்.  கூட்டுமுயற்சிக்கு ஒரு விழா நவராத்திரி.

விழா முடிந்த பின் கொலுவை எடுத்து வைத்தவுடன் கோவிலும், வீடும் கொலுவீற்றிருந்த இடம் வெறிச்சோடி இருக்கும். அடுத்த வருடம் வரும் வரை இந்தப் பத்து நாட்களின் மகிழ்ச்சி மனதில் ஓடிக் கொண்டே இருக்கும்.

           
மயிலாடுதுறை கூறைநாட்டில் அமைந்துள்ள அருள்மிகு புனுகீஸ்வரர் சமேத சாந்தநாயகி கோவிலில் அம்மன் சாந்தநாயகி.

நவராத்திரி முதல் நாள் சாந்தநாயகி கொலுவீற்றிருக்கும் அழகு
கொலுமண்டபம்
படியில் கொலு பொம்மைகள் அணி வகுப்பு
தெப்பகுளம் அமைத்து அதில் மீன்கள் விடப்பட்டு இருக்கிறது
சாந்தநாயகி - நவராத்திரி இரண்டாம் நாள்


நவராத்திரி மூன்றாம் நாள் - சாந்த நாயகி
காமாட்சி கோவில் கொலு
 (இரு மனைவியருடன் கல்யாண மாப்பிள்ளை ) கல்யாணத்தில் பாட்டுக்கச்சேரி (சாரங்கபாணிகோவில் கொலு)
சாரங்கபாணி  கோவில் கொலு
சாரங்கபாணி கோவிலில் நவராத்திரி விழா   _தாயார் கலசத்தில் இருக்கிறார்
திருமலையில் நடக்கும் பிரம்மோற்சவத்தில் கலைமகள் அலங்காரம்

அன்னையின் புகழ் பாடும் நாட்டிய நாடகம்

மேல் மருவத்தூர் ஆதி பராசக்தி கோவிலில் நடந்த நவராத்திரி விழாவில்  குழந்தைகள் அம்மன் அலங்காரத்தில் (ந்ன்றி ராஜ் டி.வி)

நவராத்திரி கொலுவில் மும்மூர்த்திகள்
நவராத்திரியில் அன்னையின் புகழ்பாடும் சிறுமியர்

சென்ற வருடம் நவராத்திரி அமெரிக்காவில் - அப்போது அங்கு   மகன் வீட்டில்  என் கணவர் செய்த சரஸ்வதி அம்மன்.


ஆதாரம்  சக்தி யென்றே அருமறைகள் கூறும்
யாதானும் தொழில் புரிவோம்; யாதுமவள் தொழிலாம்
துன்பமே இயற்கையெனும் சொல்லை மறந்திடுவோம்;
இன்பமே வேண்டி நிற்போம்; யாவுமவள் தருவாள்.
நம்பினார் கெடுவதில்லை ; நான்கு மறைத்தீர்ப்பு;
அம்பிகையைச் சரண் புகுந்தால் அதிகவரம் பெறலாம்.

வாழக வளமுடன்
----------------

37 கருத்துகள்:

 1. பெண்மை வெல்க.. என்று கூத்தாடிய மகாகவியின் மங்களகரமான பாடல்களுடனும் அழகிய படங்களுடனும் நவராத்திரிப் பதிவு கண்களில் நிறைகின்றது.

  ஐயாவின் கைவண்ணத்தில் அம்மன் தரிசனம் அருமை..

  கண்டிப்பாக அவள் மனம் மகிழ்ந்திருப்பாள்..

  பதிலளிநீக்கு
 2. வணக்கம் துரைசெல்வராஜூ சார், வாழ்க வளமுடன்.

  உங்கள் முதல் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.

  பதிலளிநீக்கு
 3. அனைத்துப்படங்களும் பதிவும் அழகாக உள்ளன. பாராட்டுகள். வாழ்த்துகள். பகிர்வுக்கு நன்றிகள்.

  பதிலளிநீக்கு
 4. வணக்கம் வை.கோபாலகிருஷ்ணன் சார், வாழ்க வளமுடன்.

  உங்கள் கருத்துக்கும், பாராட்டுகளுக்கும், வாழ்த்துக்களுக்கும்நன்றி சார்.

  பதிலளிநீக்கு
 5. அழகான படங்களுடன் சிறப்பான கொலுப் பகிர்வு! பாராட்டுக்கள்!

  பதிலளிநீக்கு
 6. வணக்கம் தளிர் சுரேஷ், வாழ்க வளமுடன்.
  உங்கள் வரவுக்கும், கருத்துக்கும் நன்றி.

  பதிலளிநீக்கு
 7. மலரின் மேவு திருவே - சீர்காழியின் கம்பீரமான குரலில் பாடல் காதில் ஒலிக்கிறது.

  வேல்லைத்தாமரைப் பூவிலிருப்பாள் பாடல் மதுரை மணி குரலில் காதில் ஒலிக்கிறது!

  கொலு நினைவுகளும், படங்களும் (குறிப்பாக தெப்பக்குளம்) அருமை.

  பதிலளிநீக்கு
 8. வணக்கம் ஸ்ரீராம், வாழ்க வளமுடன்.
  பாடல் பிரியருக்கு கடைசி பாட்டு பழைய சினிமாவில் எ,எம் ராஜா குரலில் காதில் ஒலிக்கவில்லையா?

  சார் செய்த அம்மன் படத்தை பார்த்தீர்களா?
  உங்கள் வரவுக்கும் கருத்துக்கும் நன்றி.

  பதிலளிநீக்கு
 9. கொலுவும் குளமும் பார்க்கக்கிடைத்தது . நன்றிம்மா.

  பதிலளிநீக்கு
 10. வா முத்துலெட்சுமி, வாழ்க வளமுடன்.

  தினம் கொலு பார்க்கும் போது உங்கள் நினைவுதான். நீங்கள் இருவரும் ரசித்து பார்த்துக் கொண்டே வீட்டுக்கு வர மறுக்கும் நினைவுகள், கோவில் கோவிலாக கொலு பார்த்த நினைவுகள் என்று நினைவுகள் இனிமையானது.
  முதல் நாள் மீன் இல்லை, மறு நாள் நல்ல பெரிய பெரிய மீன்கள் குளத்தில் போட்டு இருந்தார்கள் மூன்றாம் நாள் மீன்கள் இல்லை என்னாச்சு தெரியவில்லை. நேற்று கோவில் போகவில்லை, நாளை போனால் மீன் என்னாச்சு என்று கேட்கனும்.
  உன் வரவு மகிழ்ச்சி அளிக்கிறது. நன்றி.

  பதிலளிநீக்கு
 11. சிறந்த பதிவு
  சிந்திக்கவைக்கிறது
  தொடருங்கள்

  எழுதுகோல் ஏந்திய யாழ்பாவாணன் பதிவுகள் (மின்நூல்)
  http://yppubs.blogspot.com/2014/09/blog-post_26.html
  படித்துப் பாருங்கள். நண்பர்களிடம் தெரிவியுங்கள்.

  பதிலளிநீக்கு
 12. வணக்கம்
  அம்மா.

  நவராத்திரி விழாபற்றி மிக அற்புதமாக சொல்லியுள்ளீர்கள் ஒவ்வொரு தெய்வத்துக்கும் ஒவ்வொரு பாடல்கள்.படங்கள்எல்லாம்அழகு எல்லாவற்றையும் விட தங்களின் கணவர்செய்த சரஸ்வதி சிலை மிக அழகு அம்மா...
  பகிர்வுக்கு நன்றி த.ம 1வது வாக்கு

  -நன்றி-
  -அன்புடன்-
  -ரூபன்-

  பதிலளிநீக்கு
 13. //சார் செய்த அம்மன் படத்தை பார்த்தீர்களா?//

  பார்த்தேன். ரசித்தேன். ஓவியமாய் இருந்திருந்தால் சட்டென கவனத்தில் பதிந்திருக்கும். புகைப்படம் என்பதால் இப்போதுதான் கவனித்தேன்.

  பதிலளிநீக்கு
 14. அருமை
  அருமை
  மகாகவியின் பாடலும்
  படங்களும்

  பதிலளிநீக்கு
 15. வணக்கம் கரந்தை ஜெயக்குமார், வாழ்க வளமுடன்.
  உங்கள் வரவுக்கும் கருத்துக்கும் நன்றி.

  பதிலளிநீக்கு
 16. வணக்கம் காசிராஜாலிங்கம், வாழ்க வளமுடன்.
  உங்கள் வரவுக்கும், கருத்துக்கும் நன்றி.
  உங்கள் மின் நூலுக்கு வாழ்த்துக்கள்.படித்துப்பார்க்கிறேன்.

  பதிலளிநீக்கு
 17. வணக்கம் ரூபன், வாழ்கவளமுடன்.

  உங்கள் வரவுக்கும், கருத்துக்கும் நன்றி.
  சார் செய்த சரஸ்வதிஅம்மனை பாராட்டியதற்கு மிகவும் மகிழ்ச்சி நன்றி.
  தமிழ்மண வாக்கிற்கும் நன்றி.

  பதிலளிநீக்கு
 18. வணக்கம் ஸ்ரீராம், வாழ்க வளமுடன்.

  மறுபடியும் வந்து சார் செய்த சரஸ்வதி அம்மனை ரசித்தமைக்கு நன்றி.

  பதிலளிநீக்கு
 19. அந்த முதல் இரண்டு பாடல்களை யாரும் பாடி நான் இதுவரை கேட்டதில்லை.

  என்ன செய்வது ? என யோசித்தேன். சரி, நானே பாடிவிடுகிறேன், யாரும் கேட்காவிட்டாலும் பரவாயில்லை.

  இதை விட அற்புதமான துதி எங்கே இனி பாடப்போகிறோம் என நினைத்தேன்.
  subbu thatha.
  www.subbuthatha.blogspot.com

  பதிலளிநீக்கு
 20. நீங்கள் போட்டிருக்கும் மூன்று பாடல்களும் எங்கள் பள்ளியில் எங்களுக்கு சொல்லிக்கொடுக்கப் பட்ட பாடல்கள். அந்தக் காலத்துக்கே சென்றுவிட்டேன்.
  சாந்தநாயகி அன்னை என்ன ஒரு தெய்வீக அழகு! பார்க்கப் பார்க்க மனம் நிறைகிறது. கொலு பொம்மைகளுக்கும், குளமும், கல்யாணக் காட்சியும் மிக அருமை. உங்கள் கணவரின் கைவண்ணத்தில் அன்னை மிகச் சிறப்பாக அழகு மிளிர இருக்கிறாள்.

  பாராட்டுக்கள், கோமதி!

  பதிலளிநீக்கு
 21. வணக்கம் சூரி சார்,வாழ்க வளமுடன்.

  உங்கள் வரவுக்கு மகிழ்ச்சி.

  நீங்கள் பாடியதை அனுப்பி இருக்கலாமே! உங்கள் தளத்தில் பகிர்ந்து இருக்கிறீர்களா என்று பார்த்தேன்.

  உங்கள் வரவுக்கும் மிகவும் மகிழ்ச்சி.
  நன்றி.

  பதிலளிநீக்கு
 22. வணக்கம் ரஞ்சனி, வாழ்க வளமுடன்.
  நான் படிக்கும் போதும் இந்த பாடல்களை பாடுவோம்.

  மிகவும் பிடித்த பாடல்.
  பள்ளி பருவம் திரும்ப கிடைத்தது மகிழ்ச்சி.

  உங்கள் வரவுக்கும் கருத்துக்கும் மிக நன்றி.

  பதிலளிநீக்கு
 23. அருமையான பாடல்களும்...
  அழகான படங்களும்...
  குறிப்பாக ஐயா அவர்களின் கைவண்ணத்தில் அழகான ரோஜாவாய் இதழ் விரித்திருக்கும் அம்மன் என அருமையோ அருமை அம்மா...

  பதிலளிநீக்கு
 24. வணக்கம் குமார், வாழ்க வளமுடன்.
  உங்கள் வரவுக்கும், கருத்துக்கும் நன்றி.

  பதிலளிநீக்கு
 25. வணக்கம் அக்கா!

  பக்தி மணம் நிறைந்த பாடல்களும், படங்களும் கொலுவும் காணக் கண்கோடி வேண்டும்!..
  அத்தனையும் மிக அருமை அக்கா!
  எல்லாவற்றையும் பார்க்கும்போது இதெல்லாம் அனுபவிக்கக் கொடுத்து வைக்கணுமே என்று மனசு அங்கலாய்க்கின்றது!..

  நவராத்திரி பற்றிய உங்கள் பதிவு உளம் நிறைத்தது!
  தங்கள் துணைவரின் கைகளில் மலர்ந்த அன்னை சரஸ்வதி அற்புதம்!

  அனைவருக்கும் உளமார்ந்த நல் வாழ்த்துக்கள் அக்கா!

  பதிலளிநீக்கு
 26. பல் கோவில்களின் கொழுவுடன், உங்கள் கணவர் செய்த சரச்வதியம்மணி முகமும் வெகு அழகு கோமதி

  பதிலளிநீக்கு
 27. கோவில் கொலுக்கள் மிகப் பிரமாதம். எத்தனை காலப் பழைய பொம்மைகளோ. கலை நிகழ்ச்சிகள் எங்கள் ஊரிலும் நடந்து கொண்டிருக்கும். தொலைக்காட்சியிலும் நடக்கிறது போலிருக்கிறது. மலரின் மேவு திருவே பாடல் காதில் ஒலிப்பது போல உணர்வு. சார் செய்த சரஸ்வதி அம்மன் உருவம் மிக நேர்த்தியாக இருக்கிறது. நல்வாழ்த்துகள் கோமதி.

  பதிலளிநீக்கு
 28. வணக்கம் ராஜலக்ஷ்மி பரமசிவம், வாழ்க வளமுடன்.

  உங்கள் வரவுக்கும், கருத்துக்கும் நன்றி.

  பதிலளிநீக்கு
 29. அரசு சாரிடம் இவ்வளவு திறமைகளா..எது பற்றியும் மூச்சுக் கூட விடவில்லையே. அவ்வளவு தன்னடக்கம்...? கொலு பொம்மைகளும் கொலு பற்றிய வர்ணனைகளு பிரமாதம் கொலுவுக்கு அழைத்தால் பாடினால்தான் சுண்டல் என்று சில வீடுகளில் பெண்குழந்தைகளிடம் கூறு வார்கள். சிலர் பாடுவதை விட பாடாமல் இருப்பதே மேல் என்று தோன்றும். நவராத்திரி நினைவுகளை மீட்டி விட்டீர்கள். வாழ்த்துக்கள்.

  பதிலளிநீக்கு
 30. வ்ணக்கம் வல்லி அக்கா , வாழ்க வளமுடன்.
  மிக பழைமையான பொம்மைகள் தான் அனைத்தும்.நீங்கள் சொன்னது போல் சென்னையில் கோவில் விழாக்களில் இப்போது கச்சேரிகள் நாட்டியங்கள் நடந்து கொண்டு இருக்கும்.

  உங்கள் வரவுக்கும் அன்பான கருத்துக்களுக்கும் நன்றி அக்கா.

  பதிலளிநீக்கு
 31. வணக்கம் பாலசுப்பிரமணியம், வாழ்க வளமுடன்.
  போன வருடமும் நவராத்திரி பதிவில் சார் செய்த அம்மன் படம் பகிர்ந்து இருக்கிறேன்.

  பிள்ளையார் சதுர்த்திக்கு பிள்ளையார் செய்தார்கள்.

  பதிவை ரசித்து கருத்து சொன்னதற்கு நன்றி சார்.
  வாழ்த்துக்களுக்கு நன்றி.

  பதிலளிநீக்கு
 32. மகாகவியின் பாடல்களும் கொலுக்காட்சிகளும் மனம் நிறைத்தன. பகிர்வுகளுக்குப் பாராட்டுக்கள்.!

  பதிலளிநீக்கு
 33. வணக்கம் இராஜராஜேஸ்வரி, வாழ்க வளமுடன்.


  உங்கள் வரவுக்கும், கருத்துக்கும் நன்றி.

  பதிலளிநீக்கு
 34. அருமையான படங்கள்...

  கொலு பார்க்கப் போவதே ஒரு சுகமான அனுபவம் தான்....

  இந்த கொலுவில் தில்லியில் எடுத்த சில ப்டங்களைப் பகிர வேண்டும் - நேரம் தான் தட்டுப்பாடு! :)

  பதிலளிநீக்கு
 35. வணக்கம் வெங்கட், வாழ்க வளமுடன்.
  இன்று தான் ஊரிலிருந்து வந்தேன்.

  உங்கள் வரவுக்கும் கருத்துத்துக்கும் நன்றி.

  பதிலளிநீக்கு
 36. நவராத்த்ரி நினைவுகள் படங்களுடனும், பாரதியார் பாட்டுடனும் அருமை அருமை.

  பதிலளிநீக்கு
 37. வணக்கம் முருகானந்தம் சுப்பிரமணியன், வாழ்க வளமுடன்.
  உங்கள் வரவுக்கும் கருத்துக்கும் நன்றி.

  பதிலளிநீக்கு