திங்கள், 22 செப்டம்பர், 2014

யானை ! யானை!

யானை என்றால் சிறியவர் முதல் பெரியவர்கள் வரை மகிழ்ச்சி தானே!
யானை வரும் முன்னே! மணி ஓசை வரும் பின்னே !என்பார்கள்.

யானை நடந்து வரும் போது தாளலயத்தோடு அதன்மேல் தொங்கவிடப்பட்டு இருக்கும் மணியோசை கேட்கும். அதைக் கேட்டு வீட்டிலிருந்து ”யானை வருது யானை வருது ” என்று எல்லோரும் விழுந்தடித்து ஓடி வருவோம் பார்க்க. பெரியவர்கள் வெல்லம், பச்சரிசி முறத்தில் எடுத்து வருவார்கள். சிறியவர்களை யானை மேல் வைத்து சிறிது தூரம் நடத்திச் சென்று காசு வாங்குவார், யானைப்பாகன். பயந்த குழந்தைக்கு யானைத் துதிக்கையால் மூச்சை வேகமாய் வெளியே விடச்சொல்வார்கள்,  அப்படி, பன்னீர் தெளிப்பது போல் தெளிக்க வைத்தால் பயம் போய்விடும் என்று இன்றும் நம்பப்படுகிறது.

அந்தக்காலத்தில் குழந்தைகளை அட்சராப்பியாசம் செய்து வைக்கும் போது யானை மேல் வைத்து ஊர்வலம் போய் ,அப்புறம் வீட்டில் நல்ல வாத்தியார் வைத்து   அட்சராப்பியாசம் நடைபெறும். என் அப்பா, பெரியப்பாவிற்கு அப்படி நடந்ததாக என் பாட்டி சொல்வார்கள்.

மாப்பிள்ளைஅழைப்பு, , பெரியமனிதர்கள் வரவேற்பில் எல்லாம் யானை மாலையிட்டு வரவேற்கும்.  கோவில் விழாக்களில் தீர்த்தவாரிக்கு, யானைமேல் ஸ்வாமி ஆற்றங்கரைக்குப் போவார். திருவிழாக்களில் யானை மேல் இறைவனுக்கு மாலை மரியாதைகள் வரும்.


 திருச்சி  காவேரி ஆற்றங்கரைக்கு அம்மாமண்டபத்திற்கு வந்து செல்கிறது  ஸ்ரீரங்கத்து யானை

மைசூர் தசரா யானைகளை ராமலக்ஷ்மி அழகாய் படம்பிடித்துக் காட்டி இருப்பார்கள்.

திருச்சூர்  பூரத்திருவிழாவிற்கு யானைகள் அணிவகுப்பு பார்த்து இருப்பீர்கள்.

புராண இதிகாசங்களில் யானை இடம்பெறுகிறது. முருகப்பெருமான் வள்ளியை மணக்க உதவியாக ,விநாயகப் பெருமான் யானையாக வருகிறார்
.
தவமுனிவர் துர்வாசர் கொடுத்த மாலையை, இந்திரன் செருக்கால்  தன் வெள்ளை யானை ஐராவதத்திற்கு அளிக்க, அது அதைக் காலில் போட்டு மிதிக்க, துர்வாசர்  கோபம் கொண்டு  இந்திரனின் செல்வங்கள் அனைத்தும் கடலுக்கு அடியில் போக சாபம் கொடுத்த கதை, அப்புறம் பாற்கடல் கடையப்பட்டது ,செல்வங்கள் எல்லாம் வந்த கதை தெரியும்தானே!

யானைக்கு நினைவாற்றல் அதிகம் என்பதைச்சொல்லும், பழிவாங்கும் கதையை, நாம் சின்னவயதில் பள்ளியில் படித்திருக்கிறோம். ”யானையும், தையல்காரானும்” கதை நினைவு இருக்கும் எல்லோருக்கும்.

யானை, ”ஆதிமூலமே! ”என்று அழைத்தபோது பெருமாள்,  கருடன் மீது பறந்து வந்து யானையைக் காப்பாற்றிய கதை அறிவோம்.

  பெரியபுராணத்தில் இடம்பெற்ற கதை:- புகழ்ச்சோழநாயனாரின் பட்டத்து யானை, சிவகாமி ஆண்டார் எனும் முதிய சிவனடியாரின் பூக்குடலையைப் பறித்து அதில் உள்ள மலர்களை சிதைக்க, யானையின் துதிக்கையை வெட்டி கொன்றார்,எறிபத்தநாயனார்., . தடுத்தபாகர் முதலியோரையும் கொன்றார். எறிபத்தர். சிவனடியார்களுக்கு இடையூறு நேர்ந்தால் அதனைத் தீர்க்கும் பரசு போன்ற ஆயுதம் கொண்டவர் என்பதால் எறிபத்தர் என்ற பெயர் பெற்றார்.

வாரிசு இல்லாத இராஜ்ஜியத்தை ஆள ஆள் இல்லாவிட்டால் பட்டத்து யானையின் கையில் மாலையைக் கொடுத்து நகர்வலம் போக வைத்து யானை யார் கழுத்தில் மாலையைப்  போடுகிறதோ, அவர் அரசராக தேர்ந்து எடுக்கப்படும் நிலையும் சொல்லப்படுகிறது.

இப்படி, சொல்லிக் கொண்டே போகலாம். யானையைப் பற்றி.

//யானை யானை அம்பாரி யானை
குட்டி யானைக்கு கொம்பு முளைத்ததாம்
பட்டணம் எல்லாம் பறந்து போச்சாம்//




இப்படிச் சொல்லி குழந்தைகளை தன் மேல் ஏற்றி மகிழ்ச்சியாக யானை நடை நடந்து குழந்தைகளை மகிழ்ச்சிப்படுத்தாதவர்கள் இருக்க மாட்டார்கள்.


.
நான் எடுத்த யானை புகைப்படங்களை பகிர்ந்து கொள்கிறேன்.

கடந்த ஜூலை மாதம் சிதம்பரத்தில்  பன்னிருதிருமுறை உரை, பதினான்கு  சாத்திரஉரை, திருக்குறள் உரைவளம், ஆகியவற்றை அரங்கேற்றி வெளியிட்ட விழாவில்,  விழாவிற்கு வரும் விருந்தினரை வரவேற்க வந்திருந்த யானைகள் சிதம்பரம் கோவிலுக்கு வரும் பக்தர்களுக்கு 
வைத்திருக்கும் குடிநீர்க்குழாயில் தண்ணீர் பிடித்துக் குடித்தது, பாகன் தண்ணீரைப் பிடித்துக் குளிப்பாட்டினார்.  அதன் படங்கள் கீழே:-



யானை ஆனந்தமாய் குளிப்பதைப் பார்க்கும் பள்ளிச் சிறுவன்

யானைக்கு சிறிய கப்பில் எடுத்து ஊற்றினால் அதன் குளியல் ஆசை நிறைவு பெறுமா?

நீராடியபின் ஒரு யானைக்கு திருநீற்றுப் பட்டை அலங்காரம்
மற்றொரு யானைக்கு ஓம் என்றும், அங்குசம் போன்றும் வரைந்து அலங்காரம்
ஆயிரம்கால் மண்டபத்தின் வாசலில் இரண்டு யானைகளும்  அலங்கரிக்கப்பட்டு வருபவரை  வரவேற்க எதிர் எதிராக நிறுத்தப்பட்டன.
பட்டை போட்ட யானை ஓம் போட்ட யானையைப் பார்த்து பிளிறிய ஒலி பக்கத்தில் இருக்கும் ஒலிபெருக்கியில் கோவில் வளாகம் முழுவதும் எதிரொலித்தது.

இரண்டும் போடும் சத்தம் கேட்டு, ஒருவர் காதை அடைத்துக் கொள்கிறார் பாருங்கள்.


யானையின் முதுகில் இடப்பட்டுள்ள இரண்டு மணிகளும் அதன் நடைக்கேற்ற மாதிரி அழகாய் தாளலயத்தோடு ஒலி எழுப்பியது.

திருக்கடையூரில் முன்பு மணிவிழா செய்பவர்கள், கோபூஜை, கஜபூஜை செய்வார்கள் திருமணத்திற்கு முன்பு. திருமணத்திற்கு வரும் தம்பதியர்களை யானை கோபுர வாசலிருந்து வரவேற்று, கோவிலுக்கு உள்ளே கூட்டிப்போகும். இப்போது இல்லை. அந்த யானை ’அபிராமி’ இறந்து விட்டது. இப்போது கோவிலில் யானை இல்லை.

யானை அபிராமி

போனமாதம் பேரூரில்(கோவை) எங்கள் உறவினர் வீட்டுத் திருமணத்திற்கு போய் இருந்தோம். அங்கு உள்ள யானையைப் பெரிய தண்ணீர்த் தொட்டியில் படுக்க வைத்து உடல் தேய்த்துக் குளிப்பாட்டிக்கொண்டு இருந்தார்கள்.

அம்மன் சன்னதி எதிரில் அதன் குளியல் தொட்டி இருந்தது நான் அம்மன் சன்னதி வாசலில் இருந்து(தூரத்தில் இருந்து) எடுத்தேன்.
பக்கத்திலிருந்து எடுக்கலாம் என்று போனபோது குளிப்பதை எடுக்கக் கூடாது என்று செல்போனில் எடுப்பவர்களிடம்  சொல்லிக் கொண்டு இருந்தார் கோவிலைச் சுத்தம் செய்யும் பணியாளர்.   அதனால்  பக்கத்தில் எடுக்கவில்லை. யானை மேல் ’கரட்டு கரட்டு; என்று தேய்த்துக் கொண்டு இருந்தார்கள். யானை தன் காதுகளை ஆட்டிக்கொண்டு மகிழ்ச்சியாக கொடுத்துக் கொண்டு இருந்தது . யானையை ஆற்றிற்குக் கூட்டிப் போய் உடம்பு தேய்த்துக் குளிப்பாட்டி வருவார்கள்,  முன்பு.  இப்போது  ஆற்றில் தண்ணீர் இல்லை .அதனால் மோட்டார் போட்டுத் தொட்டியில் தண்ணீர் நிரப்பிக் குளிப்பாட்டுகிறார்கள். யானை  ஆற்றுத் தண்ணீரில் குளித்தபின் ஆற்று மணலை உடல் முழுவதும் தூற்றிக் கொள்ளும்,ஆனந்தமாய்.



என் மாமியார் அவர்கள், சிறுமியாக இருக்கும்போது பின்னிய யானை படம் இது. அவர்கள் மூன்றாம் வகுப்பில் படிக்கும்போது  பின்னியதாம். (80 வருடங்களுக்கு முன்) காட்போர்ட் என்ற அட்டையில் ஓட்டை ஓட்டையாக இருக்கும். அதில் கம்பிளி நூலால் பின்னியது. மண்டபம் பின்னி அதில் சரஸ்வதி படம் வைத்து இருப்பார்கள். என் அம்மாவும் இதுபோல் கன்னியாகுமரி, தாஜ்மஹால் எல்லாம் பின்னி இருப்பார்கள். அது தம்பியிடம் இருக்கிறது. அவற்றைப் பின்னர் காணத்தருகிறேன் .





மார்கழி மாதம் நான் வரைந்த யானைக்கோலம் (சிரிக்க வேண்டாம்)
இந்த யானை படம் ஒரு மஞ்சப்பையில் இருந்தது. அதைப் பார்த்துக் கோலம் வரைந்தேன்.

யானையின் பலம் தும்பிக்கையில் மனிதனின் பலம் நம்பிக்கையில் 
தன்னம்பிக்கையுடன் வாழ்வோம். வளம் பெறுவோம்.
வாழ்க வளமுடன்.

51 கருத்துகள்:

  1. யானை பற்றிய பதிவும் படங்களும் அழகு. எத்தனை முறை பார்த்தாலும் அலுக்காத நண்பன்.

    லிஸ்ட்டில் உதயணன் யானையை மறந்து விட்டீர்கள்! :)))

    ஐ.. ஸாரோட படம்!

    "ஆனை...ஆனை... அழகர் ஆனை...
    ஆனை வந்ததாம் தோப்பிலே..
    அழகப் பழுத்ததாம் மாம்பழம்..
    குட்டி யானைக்கும் கொம்பு முளைச்சுதாம்
    பட்டணம் எல்லாம் கொண்டாட்டம்"

    என்று என் அம்மா பாடும் பாடல் நினைவுக்கு வந்தது.

    பதிலளிநீக்கு
  2. வணக்கம் ஸ்ரீராம், வாழ்க வளமுடன்.
    சரியாக சொன்னீர்கள் எத்தனைமுறை பார்த்தாலும் அலுக்காத நண்பன் தான்.

    உதயணன் யானையை மறக்க வில்லை பதிவு நீண்டு விடும்.
    திருவெண்காட்டில் படிக்கும் போது பள்ளி ஆண்டுவிழாவில் என் தோழி உதயணனாக நடித்தாள் அவள் கண்ணாடி போட்டு இருப்பாள் பவர் அதிகம் என்பதால் கழற்ற மாட்டேன் என்று சொல்லி விட்டாள். அந்த நாடகம் கோவிலில் நடந்தது, திரை மறைவில் வாசவதததைக்கு யாழ் கற்றுக் கொடுக்கும் கட்டம் வரும் போது எல்லோரும் ஏய் வாசவதத்தை உதயணன் கண்ணாடி போட்டு இருக்கிறான் என்று கத்தினர்.
    யாழ் இசைக்கு யானை மயங்கும் அதை உதயணன் கற்றுக் கொடுக்க சொல்வார்கள்.
    சாரின் படம் மட்டும் தான் தெரிகிறதா? நான் வரைந்த யானை கோலம் எப்படி ? சொல்லவில்லையே!

    அம்மாவின் யானை பாடலை குறித்து வைத்துக் கொண்டேன்.
    நன்றி.


    பதிலளிநீக்கு
  3. வணக்கம்
    அம்மா.

    யானைபற்றி மிகச்சிறப்பாக புராண இதிகாச வரலாறுடன் மிக அருமையாக சொல்லியுள்ளீர்கள் யானை படங்கள் மிக அழகாக உள்ளது பகிர்வுக்கு நன்றி அம்மா
    த.ம 2வது வாக்கு

    -நன்றி-
    -அன்புடன்-
    -ரூபன்-

    பதிலளிநீக்கு
  4. சிரிக்க வேண்டாம் என்ற குறிப்புடன் யானைக் கோலம் தந்துள்ளீர்கள். தன்னடக்கம்! நன்றாக இருக்கிறது கோலம்.

    கண்ணாடி போட்ட உதயணன் தமாஷ்தான்!

    //அழகப் பழுத்ததாம்// அழுகப் பழுத்ததாம் என்று வரவேண்டும்!

    பதிலளிநீக்கு
  5. வணக்கம் ரூபன், வாழ்க வளமுடன்.
    பதிவை ரசித்து கருத்து சொன்னதற்கும், தமிழ்மண வாக்கு அளித்தமைக்கும் நன்றி ரூபன்.

    பதிலளிநீக்கு
  6. யானை புராணம். படிக்கும் போதே நிகழ்ச்சிகள் மனத்திரையில் தெளிவாக ஓடுகின்றன.

    80 வருடத்திற்கு முந்திய காட்போர்ட்டில் யானை படம். அதுவும் உங்கள் மாமியாரின் படைப்பு. பழம் பொருட்களை நன்றாகவே பாதுகாத்து வருகின்றீர்கள் என்று நினைக்கிறேன். அப்படியானால் அந்த காலத்து பஞ்சாங்க புஸ்தகங்களும் இருக்கும். அவற்றிலும் நிறைய சுவையான செய்திகள் இருக்கும். பதிவினில் எடுத்துப் போடுங்கள்.போட்டோகிராபியில் ரொம்பவும் ஆர்வமாக இருக்கிறீர்கள் போலிருக்கிறது. பதிவினில் அழககழகாக நிறைய படங்கள்.
    த.ம.3

    பதிலளிநீக்கு
  7. யானையைப்பற்றி யானை அளவுக்கு பல செய்திகளைக்கொடுத்து அசத்தியுள்ளீர்கள்.

    >>>>>

    பதிலளிநீக்கு
  8. //யானை யானை அம்பாரி யானை
    குட்டி யானைக்கு கொம்பு முளைத்ததாம்
    பட்டணம் எல்லாம் பறந்து போச்சாம்//

    இதன் கீழ் சார் வரைந்துள்ள படம் நன்னா இருக்கு. அவருக்கு என் பாராட்டுகளைச் சொல்லவும்.

    >>>>>

    பதிலளிநீக்கு
  9. //மார்கழி மாதம் நான் வரைந்த யானைக்கோலம் (சிரிக்க வேண்டாம்)//

    சிரிக்கவில்லை. சீரியஸ் ஆகவே சொல்கிறேன். அருமையாகவே கோலம் போட்டுள்ளீர்கள்.

    யானை நின்ற கோலத்தில் அப்படியே திரும்பும் கோலம் இயற்கையாக உள்ளது.

    >>>>>

    பதிலளிநீக்கு
  10. //என் மாமியார் அவர்கள், சிறுமியாக இருக்கும்போது பின்னிய யானை படம் இது. அவர்கள் மூன்றாம் வகுப்பில் படிக்கும்போது பின்னியதாம். (80 வருடங்களுக்கு முன்) காட்போர்ட் என்ற அட்டையில் ஓட்டை ஓட்டையாக இருக்கும். அதில் கம்பிளி நூலால் பின்னியது.//

    80 வருடங்கள் ஆகியும் சிறுவயதில் தங்கள் மாமியார் அவர்களால் பின்னிப்பெடலெடுக்கப்பட்ட அந்த கைவேலை இன்றும் உள்ளது ஆச்சர்யமாக உள்ளது. அவர்களுக்கும் என் பாராட்டுகளைச் சொல்லுங்கோ.


    >>>>>

    பதிலளிநீக்கு
  11. யானையைப்பற்றி பழமொழிகளும், யானையைப்பற்றிய இலக்கியச் செய்திகளையும் சேகரித்துச்சொல்லியுள்ளது அருமை.

    யானை படங்கள் அத்தனையும் அழகோ அழகு.

    இயற்கை படைப்புகளான ‘யானை’ ’கடல்’ ‘சந்திரன்’ ஆகியவை எவ்வளவு முறை பார்த்தாலும் அலுக்காதவைகள்.

    அதுபோலவே மனிதனின் செயற்கைப் படைப்புகளிம் ரயில் வண்டி, ஆகாயவிமானம் முதலியன.

    அழகான பயனுள்ள மிகப்பெரிய பதிவுக்கு என் பாராட்டுகள், வாழ்த்துகள் + நன்றிகள்.

    பதிலளிநீக்கு
  12. யானைக்கு சோளப்பொறியா என்பார்கள். குடிநீர் குழாயில் நீர் குடிக்கும் முயற்சியில் யானையை பார்த்ததில் நினைவில் தேங்கியது.

    பதிலளிநீக்கு
  13. யானை குறித்து சொன்னதும் அழகிய படங்களைப் பகிர்ந்ததும் அருமை அம்மா...

    பதிலளிநீக்கு
  14. யானை படங்களும் கோலமும் அருமை சகோதரியாரே
    யானையின் பேரில் தங்களுக்குள்ள ஈடுபாட்டை உணர முடிகிறது

    பதிலளிநீக்கு
  15. வணக்கம் தி. தமிழ் இளங்கோ, வாழ்க வளமுடன்.

    அத்தை அவர்கள் திருமணத்திற்கு முன் தான் பின்னிய யானை படத்தை சட்டம் இட்டு இவ்வளவு காலம் பத்திரபடுத்தி வைத்து இருக்கிறார்கள் .
    பாராட்டுக்கள் எல்லாம் அத்தைக்கே!

    உங்கள் வரவுக்கும், கருத்துக்கும், தமிழ்மண வாக்கு அளித்தமைக்கும் நன்றி.

    பதிலளிநீக்கு
  16. வணக்கம் வை,கோபாலகிருஷ்ணன் சார், வாழ்க வளமுடன்.

    யானை அளவுக்கு இல்லை செய்திகள் ஏதோ கொஞ்சம்.

    சாருக்கு பாராட்டுக்களை தெரிவித்து விட்டேன். உங்களுக்கு தன் நன்றியை சொல்ல சொன்னார்கள்.

    ஆஹா! என் கோலத்தை பாராட்டியதற்கு நன்றி சார்.

    அத்தை அவர்களை பாராட்டியதற்கு நன்றி, கண்டிப்பாய் சொல்கிறேன் அவர்களிடம் மகிழ்வார்கள்.

    //இயற்கை படைப்புகளான ‘யானை’ ’கடல்’ ‘சந்திரன்’ ஆகியவை எவ்வளவு முறை பார்த்தாலும் அலுக்காதவைகள்.

    அதுபோலவே மனிதனின் செயற்கைப் படைப்புகளிம் ரயில் வண்டி, ஆகாயவிமானம் முதலியன.//

    நீங்கள் சொல்வது போல் இவை எல்லாம் எவ்வளவு முறை பார்த்தாலும் அலுக்காதவைகள் தான்.

    உங்கள் பாராட்டுக்களுக்கும் வாழ்த்துக்களுக்கும் மிகவும் நன்றி.
    பல பின்னூட்டங்கள் அளித்து உற்சாகப்படுத்தியதற்கு மிகவும் நன்றி நன்றி நன்றி சார்.



    பதிலளிநீக்கு
  17. வணக்கம் ஜீவி சார், வாழ்க வளமுடன்.

    எனக்கும் அதே நினைவு கப்பில் நீர் எடுத்து அதை குளிக்க வைக்கும் போது வந்தது.
    உங்கள் வரவுக்கும், கருத்துக்கும் நன்றி.

    விமர்சன தேர்வில் முழு மூச்சாய் செயல்பட்டுக் கொண்டு இருக்கும் போதும் என் தளத்திற்கு வந்து கருத்து சொன்னமைக்கு நன்றிகள் .

    பதிலளிநீக்கு
  18. கலைக் களஞ்சியமாகத் திகழ்கின்றது!..

    ஐயா அவர்களின் சித்திரம் அருமை!..

    திருக்கடவூர் யானை அபிராமியைக் குறித்த வரிகளில் மனம் கனத்தது.

    பதிலளிநீக்கு
  19. அனுபவங்களையும் தகவல்களையும் தொகுத்து அளித்திருப்பது அருமை. கப் குளியல் பாவம், யானைக்கு குளித்த திருப்தியை தந்திருக்காது. சார் வரைந்த படம் மிக அருமை.

    பதிலளிநீக்கு
  20. யானைக் கோலங்களும் அழகு:). இரண்டாவது திரும்பிப் பார்ப்பது க்யூட்.
    மாமியாரின் கைவேலையிலும் ஆனையார் கம்பீரமாக இருக்கிறார்.

    பதிலளிநீக்கு
  21. வணக்கம் குமார், வாழ்க வளமுடன்.
    உங்கள் வரவுக்கும், கருத்துக்களுக்கும் நன்றி.

    பதிலளிநீக்கு
  22. வணக்கம் துளசி, வாழ்க வளமுடன். உங்களை உங்கள் யானைகூட்டங்கள் அழைத்து வந்து விட்டதா? என் பதிவுக்கு. எப்போதும் உங்கள் கணவர் பிறந்தநாளுக்கும், உங்கள் வலைத்தளத்தின் பிறந்தநாளுக்கும் பதிவு போட்டு விடுவீர்களே !

    வல்லி அக்கா முகநூலில் அதை நினைவு படுத்தி வாழ்த்தி இருந்தார்கள் நானும் கலந்து கொண்டு வாழ்த்தினேன்.

    உங்கள் வரவுக்கும், கருத்துக்கும் நன்றி.

    பதிலளிநீக்கு
  23. வணக்கம் துரைசெல்வராஜூ சார், வாழ்க வளமுடன்.
    சார் ஓவியத்தை ரசித்தமைக்கு நன்றி.

    எனக்கும் திருக்கடையூர் போகும் போதெல்லாம் அபிராமியின் நினைவு வந்து மனம் கனத்து தான் போகும்.
    உங்கள் வரவுக்கும் கருத்துக்கும் நன்றி.

    பதிலளிநீக்கு
  24. வணக்கம் ராமலக்ஷ்மி, வாழ்க வளமுடன்.
    சார் படம் , என் யானை கோலம் அத்தையின் கைவேலை இவைகளை ரசித்த உங்களுக்கு நன்றி ராமலக்ஷ்மி.

    உங்கள் தசரா யானைகள் நன்றாக இருக்கும் என்று பதிவில் எழுதி இருக்கிறேன். உங்கள் அளவு படம் எடுக்க தெரியாது . ‘உங்கள் வரவுக்கும், கருத்துக்கும் நன்றி ராமலக்ஷ்மி.

    பதிலளிநீக்கு
  25. வணக்கம் ஸ்ரீராம், வாழ்க வளமுடன் .
    மறுமுறை வந்து என் கோலத்திற்கு கருத்து சொன்னதற்கு நன்றி.

    //கண்ணாடி போட்ட உதயணன் தமாஷ்தான்!//

    இப்போதும் அவளை சந்திக்கும் போதெல்லாம் அந்தக் கால நினைவுகளை பேசி சிரித்த்க் கொள்வோம்.

    அவளும் நானும் திருவெண்காடு நூலகத்தில் எத்தனை எத்தனை கதைகள் எடுத்து வந்து படிப்போம்.

    உதயணனை கேட்டு என் மலரும் நினைவுகளை ம்லரவைத்தமைக்கு நன்றி ஸ்ரீராம்.

    அம்மாவின் பாடல் பகிர்வில் திருத்தம் செய்தமைக்கும் நன்றி.

    பதிலளிநீக்கு
  26. ஃபேஸ்புக்கில் யானையைப் பார்த்துட்டு ஓட்டமா ஓடி வந்தால் இத்தனை பேர் முந்திட்டு இருக்காங்களே!

    உங்க கோல யானை கொஞ்சம் தும்பிக்கைப்பக்கமா இளைச்சிருக்கே? ஏன்?

    அம்மாமண்டபத்துக்கு ஆண்டாளம்மா தினமும் வரமாட்டாங்க. தினசரிக் குளியலுக்குக் கொள்ளிடத்து நீர் தான் கொண்டுவரப் போவாங்க. துலா மாசம் மட்டும் காவிரிக்கரைக்கு வருவாங்க. :)))

    பதிலளிநீக்கு
  27. இந்தக் காட்போர்டில் நூலால் சித்திரம் வரையறது, நானும் போட்டிருக்கேன். அதெல்லாம் எங்கேனே தெரியலை! :(

    பதிலளிநீக்கு
  28. It remainds me of our temple elephant (old, no more now) named, sengamalam. I am looking for its photo on the NET.. not lucky so far.

    பதிலளிநீக்கு
  29. நன்றி. தசராவுக்காக யானைகளுக்குத் தரப்படும் பயிற்சி, குட்டிகளைப் பிரிந்து வரவேண்டியிருப்பது என அவை படும் சிரமங்களைச் சென்ற வருடம் பத்திரிகையில் வாசிக்க நேர்ந்தது. அது குறித்தும் பதிய நினைத்து விட்டுப் போனது. ஆனால் மக்கள் நம்பிக்கை சார்ந்த விடயங்களை நிறுத்துவது அத்தனை எளிதல்ல என்றே தோன்றுகிறது.

    பதிலளிநீக்கு
  30. திரு அரசுவின் caricature ஆ அது,. பார்த்ததும் தஞ்சாவூர்க் கவிராயரின் கவிதை ஒன்று உங்களோடு பகிர்கிறேன்
    “பேரனுக்காக
    எவ்வளவோ அவதாரங்கள்
    எடுக்க வேண்டி இருக்கிறது.
    அதிலும் அந்த யானை அவதாரம்
    ரொம்பக் கஷ்டம்

    இல்லாத வால் ஆட்டி
    ஆடாத காது அசைய
    நாலு கால் நடையில்
    ஒரு கை தூக்கிப் பிளிற வேண்டும்.

    முதுகில் உட்கார்ந்து
    முன்னேறிச் செல் என்பான்
    முழங்கால் வலிக்கும்
    அப்புறம் சிங்கம் போல்
    உறுமு என்பான்
    நான் இருமுவேன்
    இருமலிலும் உறுமலின் சாயை
    இருந்திருக்கும் போல
    விட்டு விடுவான்
    பிறகு யார் துணையுமின்றி
    கனவுலகில் பிரவேசித்து
    தூங்கிப் போவான்
    நான் சும்மா
    பார்த்துக் கொண்டிருப்பேன்
    கடவுளைப் போல”
    யானையையும் கடலையும் பார்த்துக் கொண்டே இருக்கலாம். திகட்டாது. வாழ்த்துக்கள்.

    பதிலளிநீக்கு
  31. வணக்கம் கீதா, வாழ்கவளமுடன்.
    ஓடி வந்தீர்களா!

    அது தான் உடம்பை தேற்ற கரும்பு கொடுத்துக் கொண்டு இருக்கிறேன். சத்து உள்ள உணவுகள் கொடுத்து அடுத்தமுறை துதிக்கையை பலமாக்கி விடுகிறேன்.
    இந்த பதிவு எழுதிக் கொண்டு இருக்கும் போது விஜய் தொலைக்காட்சியில் ஆழவார்கள் தரிசனம் நிகழ்ச்சி நடந்து கொண்டு இருந்தது. அதில் யானை அம்மா மண்டபத்திற்கு வந்து இருப்பதை காட்டினார்கள் அது என்ன விழா எதற்கு யானை வந்து இருக்கிறது என்பதை எல்லாம் கவனிக்கவில்லை கீதா பதிவுக்காக படம் எடுத்து விட்டேன்.

    இப்போது பிளாஸ்டிக் சீட்டில் இப்படி வருகிறது அதில் கண்மேட்டி டிசைன் எல்லாம் பின்னி இருக்கிறேன் நானும்.
    உங்கள் வரவுக்கும், கருத்துக்கும் நன்றி.

    பதிலளிநீக்கு
  32. வணக்கம் மாதவன், வாழ்க வளமுடன். நலமா?

    ஸ்ரீரங்கம் யானை செங்கமலம் நினைவுக்கு வந்து விட்டதா? துளசி கோபால் அவர்கள் பதிவில் ஸ்ரீரங்கத்து யானை படம் போட்டு செய்தி போட்டார்களா? கீதா பதிவில் போட்டார்களா தெரியவில்லை. அவர்கள் பதிவில் பார்த்தால் யானை படம் கிடைக்கும்.
    உங்கள் வரவுக்கும், கருத்துக்கும் நன்றி.

    பதிலளிநீக்கு
  33. வணக்கம் பாலசுப்பிரமணியம், வாழ்க வளமுடன்.

    நான் சாரிடம் இந்த ஓவியத்தை வரைய சொன்னதை நினைத்து சந்தோஷப்படுகிறேன்.

    அருமையான் கவிதை கிடைத்தது உங்களிடமிருந்து.
    தஞ்சைக் கவிராயர் கவிதை பகிர்வு மிக அருமை.
    பேரன், பேத்திகளை சுமக்கும் போது எந்தவலிகளும் தெரியாது தான். அவர்கள் மகிழ்ச்சிதானே தாத்தாவின் மகிழ்ச்சி.
    நன்றி சார்.

    பதிலளிநீக்கு
  34. ஶ்ரீரங்கம் ஆனையம்மா பெயர் ஆண்டாளம்மா. அவங்க அம்மா மண்டபத்துக்குச் சித்திரா பௌர்ணமி கஜேந்திர மோக்ஷத்தில் கஜேந்திரனாக வருவாங்க. அதைத் தவிர ஆடிப்பெருக்கன்னிக்கு அவங்க மேலே தான் ரங்கநாதர் அளிக்கும் சீர் காவிரிக்குச் சமர்ப்பிக்கப்படும். மத்த நாளெல்லாம் கொள்ளிடக்கரை தான். தினம் தினம் வரது துலா மாசத்தில் மட்டும் தங்கக் குடத்தில் காவிரி நிர் போகும். :)

    பதிலளிநீக்கு
  35. வாங்க கீதா, மறுபடியும் வந்து தகவல்கள் தந்தமைக்கு நன்றி.

    மாதவனுக்கு ஸ்ரீரங்கத்து யானை செங்கமலத்தின் படம் வேண்டுமாம் , முன்பு இருந்த யானை பேரு செங்கமலம் போலும், அதை தேடுகிறார் உங்கள் பதிவில் செங்கமலத்தை பற்றி எழுதி இருக்கிறீர்களா படத்துடன்?

    பதிலளிநீக்கு
  36. எனக்குத் தெரிஞ்சு ஆண்டாளம்மா தான் பெயர். செங்கமலம் னு முன்னே இருந்தது குறித்துத் தெரியலை. இவங்க பல வருடங்களாக இருக்காங்களே! :))))

    பதிலளிநீக்கு
  37. யானை பற்றிய தகவல் அருமை. எத்தனை எத்தனை அறிய பொக்கிசங்களை பாதுகாத்து வைத்திருக்கிறீர்கள்.

    பதிலளிநீக்கு
  38. யானை யானைன்னு ரொம்பவே ரசிக்கும்படியான பதிவும் அதன் பின்னூட்டங்களும் பலே ஜோர்! பின்னே...யானைன்னா சும்மாவா? :-)

    செங்கமலம் பற்றி முன்பொருக்கில் நான் பதிவு ஒன்னு போட்டுருந்தேன். இவள் மன்னார்குடிக்காரி!

    http://thulasidhalam.blogspot.co.nz/2013/03/b.html


    யானைப்பிரியர்களுக்காக இன்னொரு சுட்டி இதோ! இது என் மகள் எனக்கனுப்பியது. உங்களுடன் பகிர்ந்துகொள்வதில் அளவிலா மகிழ்ச்சி.

    http://www.zooborns.com/zooborns/2014/09/the-whole-herd-welcomes-whipsnades-elephant-calf.html

    பதிலளிநீக்கு
  39. அதானே பார்த்தேன், இங்கே ஆண்டாளம்மாவுக்குப் போட்டியா யாருமில்லையேனு யோசிச்ச்சேன். :)

    பதிலளிநீக்கு
  40. வாங்க கீதா, ஸ்ரீரங்கத்து யானை பேர் ஆண்டாள்ம்மா என்று சொன்னதற்கு நன்றி.

    மாதவன் அவர்களுக்கு மன்னார்குடிதான் ஊர் என்று நினைக்கிறேன்.

    நான் நினைத்த மாதிரி துளசிதான் செங்கமலம் யானை பதிவு போட்டு இருக்கிறார்கள். மாதவன் துளசி அவர்கள் தளத்திற்கு சென்று செங்கமலத்தை தரிசிக்கலாம்.
    உங்கள் மறு வருகைக்கு நன்றி நன்றி.

    பதிலளிநீக்கு
  41. வணக்கம் சசிகலா, வாழ்க வளமுடன்.
    உங்கள் வரவு மகிழ்ச்சி அளிக்கிறது.உங்கள் வரவுக்கும் , கருத்துக்கும் நன்றி.

    பதிலளிநீக்கு
  42. வணக்கம் துளசி, வாழ்க வளமுடன்.
    நான் செங்கமல யானை பதிவு படித்த நினைவு இருக்கிறது, அது நீங்களா. கீதாவா என்ற சந்தேகம் இருந்தது. அதுதான் மாதவனுக்கு பதில் யார் என்று தெரியவில்லை என்று கருத்திட்டேன்.
    நீங்கள் தான் என்று வந்து சுட்டிக் கொடுத்தற்கு நன்றி.
    உங்கள் மகள் கொடுத்த சுட்டியும் சென்று பார்த்தேன். அருமையான காணொளி.

    உங்கள் மறு வருகைக்கு நன்றி யானை மீண்டும் மீண்டும் அழைத்து வருவது மகிழ்ச்சி அளிக்கிறது.நன்றி.

    பதிலளிநீக்கு
  43. மாதவன், நீங்கள் தேடிய செங்கமலம் யானை படத்தை துளசிதளத்தில் தரிசிக்கலாம். அவர்கள் சுட்டி கொடுத்து இருக்கிறார்கள் பாருங்கள்.

    பதிலளிநீக்கு
  44. யானை பற்றிய பகிர்வுகள் ரசிக்கவைத்தன..

    மணக்குளவிநாயகர் கோவில் யானை லஷ்மி காலில் கொலுசு போட்டிருக்கும் அழகு படத்தை துளசிதளம் துளசி அவர்களின் பதிவில் காணலாம்..

    பதிலளிநீக்கு
  45. வணக்கம் இராஜராஜேஸ்வரி, வாழ்க வளமுடன். உங்கள் தகவலுக்கு நன்றி.
    உங்கள் வரவுக்கும் கருத்துக்கும் நன்றி.

    பதிலளிநீக்கு
  46. பின்னல், பாடல், கோலம், புகைப்படம் தகவல் என்று கண்குளிர யானையின் தரிசனம் எத்தனை எத்தனை ரூபங்களில்! ஆஹா... சாரின் படம் அருமை. சுமப்பவரின் புன்னகை கூட அதில் தெரிகிறது. பின்னூட்டங்களிலும் சுவாரசியத் தகவல்கள். அனைத்தையும் ரசித்தேன். நன்றி மேடம்.

    பதிலளிநீக்கு
  47. ராமலக்ஷ்மி, வாழ்க வளமுடன்.யானையைப்பற்றி பகிர்ந்து கொள்ளுங்கள்.பயிற்சிக்கு வரும் போது தாய் யானை குட்டிகளை பிரிந்து வருவதை படிக்கும் போது கஷ்டமாய் இருக்கே!

    உங்கள் மறு வரவுக்கு நன்றி.

    பதிலளிநீக்கு
  48. வணக்கம் கீதமஞ்சரி, வாழ்க வளமுடன். வலைச்சரப்பொறுப்பை சிறப்பாக நிறைவு செய்து விட்டீர்கள்.
    நீங்கள் குறிப்பிட்ட பதிவுகள் நிறைய படிக்க வேண்டும்.அனைத்தும் அருமை.

    பதிவையும், படங்களையும் ரசித்தமைக்கு நன்றி கீதமஞ்சரி.
    சாரின் ஓவியத்தை பற்றி நீங்கள் சொன்ன கருத்தை சொன்னேன் மகிழ்ந்தார்கள்.

    பதிலளிநீக்கு
  49. யானை - எவ்வளவு நேரம் வேண்டுமானாலும் பார்த்துக் கொண்டே இருக்கலாம்....

    திருவரங்கத்திலும் தண்ணீர் தட்டுப்பாடு காரணமாக மோட்டார் போட்டு தான் தண்ணீரை குழாய் மூலம் ஆண்டாள் மேல் ஊற்றிக் குளிப்பாட்டுகிறார்கள்.....


    சார் வரைந்த படமும், நீங்கள் போட்ட கோலமும் அழகு!

    ’’யானையின் பலம் தும்பிக்கையில் மனிதனின் பலம் நம்பிக்கையில்
    தன்னம்பிக்கையுடன் வாழ்வோம். வளம் பெறுவோம்.’’ நல்ல அறிவுரை....

    பதிலளிநீக்கு
  50. வணக்கம் வெங்கட் நாகராஜ், வாழ்க வளமுடன்.

    நலமா? வேலை அதிகமா?
    நீங்கள் சொல்வது போல் யானையை எப்போதும் பார்த்துக் கொண்டே இருக்கலாம்.


    ஆண்டாளுக்கும் மோட்டார் தண்ணீர்தானா?

    சார் வரைந்த ஓவியம், நான் வரைந்த கோலத்தை ரசித்தமைக்கு நன்றி.
    முடிந்த போது நவராத்திரி பதிவுகள் படித்து கருத்துச் சொல்லுங்கள்.
    நன்றி வெங்கட்.

    பதிலளிநீக்கு