யானையின் படங்கள் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
யானையின் படங்கள் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

திங்கள், 22 செப்டம்பர், 2014

யானை ! யானை!

யானை என்றால் சிறியவர் முதல் பெரியவர்கள் வரை மகிழ்ச்சி தானே!
யானை வரும் முன்னே! மணி ஓசை வரும் பின்னே !என்பார்கள்.

யானை நடந்து வரும் போது தாளலயத்தோடு அதன்மேல் தொங்கவிடப்பட்டு இருக்கும் மணியோசை கேட்கும். அதைக் கேட்டு வீட்டிலிருந்து ”யானை வருது யானை வருது ” என்று எல்லோரும் விழுந்தடித்து ஓடி வருவோம் பார்க்க. பெரியவர்கள் வெல்லம், பச்சரிசி முறத்தில் எடுத்து வருவார்கள். சிறியவர்களை யானை மேல் வைத்து சிறிது தூரம் நடத்திச் சென்று காசு வாங்குவார், யானைப்பாகன். பயந்த குழந்தைக்கு யானைத் துதிக்கையால் மூச்சை வேகமாய் வெளியே விடச்சொல்வார்கள்,  அப்படி, பன்னீர் தெளிப்பது போல் தெளிக்க வைத்தால் பயம் போய்விடும் என்று இன்றும் நம்பப்படுகிறது.

அந்தக்காலத்தில் குழந்தைகளை அட்சராப்பியாசம் செய்து வைக்கும் போது யானை மேல் வைத்து ஊர்வலம் போய் ,அப்புறம் வீட்டில் நல்ல வாத்தியார் வைத்து   அட்சராப்பியாசம் நடைபெறும். என் அப்பா, பெரியப்பாவிற்கு அப்படி நடந்ததாக என் பாட்டி சொல்வார்கள்.

மாப்பிள்ளைஅழைப்பு, , பெரியமனிதர்கள் வரவேற்பில் எல்லாம் யானை மாலையிட்டு வரவேற்கும்.  கோவில் விழாக்களில் தீர்த்தவாரிக்கு, யானைமேல் ஸ்வாமி ஆற்றங்கரைக்குப் போவார். திருவிழாக்களில் யானை மேல் இறைவனுக்கு மாலை மரியாதைகள் வரும்.


 திருச்சி  காவேரி ஆற்றங்கரைக்கு அம்மாமண்டபத்திற்கு வந்து செல்கிறது  ஸ்ரீரங்கத்து யானை

மைசூர் தசரா யானைகளை ராமலக்ஷ்மி அழகாய் படம்பிடித்துக் காட்டி இருப்பார்கள்.

திருச்சூர்  பூரத்திருவிழாவிற்கு யானைகள் அணிவகுப்பு பார்த்து இருப்பீர்கள்.

புராண இதிகாசங்களில் யானை இடம்பெறுகிறது. முருகப்பெருமான் வள்ளியை மணக்க உதவியாக ,விநாயகப் பெருமான் யானையாக வருகிறார்
.
தவமுனிவர் துர்வாசர் கொடுத்த மாலையை, இந்திரன் செருக்கால்  தன் வெள்ளை யானை ஐராவதத்திற்கு அளிக்க, அது அதைக் காலில் போட்டு மிதிக்க, துர்வாசர்  கோபம் கொண்டு  இந்திரனின் செல்வங்கள் அனைத்தும் கடலுக்கு அடியில் போக சாபம் கொடுத்த கதை, அப்புறம் பாற்கடல் கடையப்பட்டது ,செல்வங்கள் எல்லாம் வந்த கதை தெரியும்தானே!

யானைக்கு நினைவாற்றல் அதிகம் என்பதைச்சொல்லும், பழிவாங்கும் கதையை, நாம் சின்னவயதில் பள்ளியில் படித்திருக்கிறோம். ”யானையும், தையல்காரானும்” கதை நினைவு இருக்கும் எல்லோருக்கும்.

யானை, ”ஆதிமூலமே! ”என்று அழைத்தபோது பெருமாள்,  கருடன் மீது பறந்து வந்து யானையைக் காப்பாற்றிய கதை அறிவோம்.

  பெரியபுராணத்தில் இடம்பெற்ற கதை:- புகழ்ச்சோழநாயனாரின் பட்டத்து யானை, சிவகாமி ஆண்டார் எனும் முதிய சிவனடியாரின் பூக்குடலையைப் பறித்து அதில் உள்ள மலர்களை சிதைக்க, யானையின் துதிக்கையை வெட்டி கொன்றார்,எறிபத்தநாயனார்., . தடுத்தபாகர் முதலியோரையும் கொன்றார். எறிபத்தர். சிவனடியார்களுக்கு இடையூறு நேர்ந்தால் அதனைத் தீர்க்கும் பரசு போன்ற ஆயுதம் கொண்டவர் என்பதால் எறிபத்தர் என்ற பெயர் பெற்றார்.

வாரிசு இல்லாத இராஜ்ஜியத்தை ஆள ஆள் இல்லாவிட்டால் பட்டத்து யானையின் கையில் மாலையைக் கொடுத்து நகர்வலம் போக வைத்து யானை யார் கழுத்தில் மாலையைப்  போடுகிறதோ, அவர் அரசராக தேர்ந்து எடுக்கப்படும் நிலையும் சொல்லப்படுகிறது.

இப்படி, சொல்லிக் கொண்டே போகலாம். யானையைப் பற்றி.

//யானை யானை அம்பாரி யானை
குட்டி யானைக்கு கொம்பு முளைத்ததாம்
பட்டணம் எல்லாம் பறந்து போச்சாம்//




இப்படிச் சொல்லி குழந்தைகளை தன் மேல் ஏற்றி மகிழ்ச்சியாக யானை நடை நடந்து குழந்தைகளை மகிழ்ச்சிப்படுத்தாதவர்கள் இருக்க மாட்டார்கள்.


.
நான் எடுத்த யானை புகைப்படங்களை பகிர்ந்து கொள்கிறேன்.

கடந்த ஜூலை மாதம் சிதம்பரத்தில்  பன்னிருதிருமுறை உரை, பதினான்கு  சாத்திரஉரை, திருக்குறள் உரைவளம், ஆகியவற்றை அரங்கேற்றி வெளியிட்ட விழாவில்,  விழாவிற்கு வரும் விருந்தினரை வரவேற்க வந்திருந்த யானைகள் சிதம்பரம் கோவிலுக்கு வரும் பக்தர்களுக்கு 
வைத்திருக்கும் குடிநீர்க்குழாயில் தண்ணீர் பிடித்துக் குடித்தது, பாகன் தண்ணீரைப் பிடித்துக் குளிப்பாட்டினார்.  அதன் படங்கள் கீழே:-



யானை ஆனந்தமாய் குளிப்பதைப் பார்க்கும் பள்ளிச் சிறுவன்

யானைக்கு சிறிய கப்பில் எடுத்து ஊற்றினால் அதன் குளியல் ஆசை நிறைவு பெறுமா?

நீராடியபின் ஒரு யானைக்கு திருநீற்றுப் பட்டை அலங்காரம்
மற்றொரு யானைக்கு ஓம் என்றும், அங்குசம் போன்றும் வரைந்து அலங்காரம்
ஆயிரம்கால் மண்டபத்தின் வாசலில் இரண்டு யானைகளும்  அலங்கரிக்கப்பட்டு வருபவரை  வரவேற்க எதிர் எதிராக நிறுத்தப்பட்டன.
பட்டை போட்ட யானை ஓம் போட்ட யானையைப் பார்த்து பிளிறிய ஒலி பக்கத்தில் இருக்கும் ஒலிபெருக்கியில் கோவில் வளாகம் முழுவதும் எதிரொலித்தது.

இரண்டும் போடும் சத்தம் கேட்டு, ஒருவர் காதை அடைத்துக் கொள்கிறார் பாருங்கள்.


யானையின் முதுகில் இடப்பட்டுள்ள இரண்டு மணிகளும் அதன் நடைக்கேற்ற மாதிரி அழகாய் தாளலயத்தோடு ஒலி எழுப்பியது.

திருக்கடையூரில் முன்பு மணிவிழா செய்பவர்கள், கோபூஜை, கஜபூஜை செய்வார்கள் திருமணத்திற்கு முன்பு. திருமணத்திற்கு வரும் தம்பதியர்களை யானை கோபுர வாசலிருந்து வரவேற்று, கோவிலுக்கு உள்ளே கூட்டிப்போகும். இப்போது இல்லை. அந்த யானை ’அபிராமி’ இறந்து விட்டது. இப்போது கோவிலில் யானை இல்லை.

யானை அபிராமி

போனமாதம் பேரூரில்(கோவை) எங்கள் உறவினர் வீட்டுத் திருமணத்திற்கு போய் இருந்தோம். அங்கு உள்ள யானையைப் பெரிய தண்ணீர்த் தொட்டியில் படுக்க வைத்து உடல் தேய்த்துக் குளிப்பாட்டிக்கொண்டு இருந்தார்கள்.

அம்மன் சன்னதி எதிரில் அதன் குளியல் தொட்டி இருந்தது நான் அம்மன் சன்னதி வாசலில் இருந்து(தூரத்தில் இருந்து) எடுத்தேன்.
பக்கத்திலிருந்து எடுக்கலாம் என்று போனபோது குளிப்பதை எடுக்கக் கூடாது என்று செல்போனில் எடுப்பவர்களிடம்  சொல்லிக் கொண்டு இருந்தார் கோவிலைச் சுத்தம் செய்யும் பணியாளர்.   அதனால்  பக்கத்தில் எடுக்கவில்லை. யானை மேல் ’கரட்டு கரட்டு; என்று தேய்த்துக் கொண்டு இருந்தார்கள். யானை தன் காதுகளை ஆட்டிக்கொண்டு மகிழ்ச்சியாக கொடுத்துக் கொண்டு இருந்தது . யானையை ஆற்றிற்குக் கூட்டிப் போய் உடம்பு தேய்த்துக் குளிப்பாட்டி வருவார்கள்,  முன்பு.  இப்போது  ஆற்றில் தண்ணீர் இல்லை .அதனால் மோட்டார் போட்டுத் தொட்டியில் தண்ணீர் நிரப்பிக் குளிப்பாட்டுகிறார்கள். யானை  ஆற்றுத் தண்ணீரில் குளித்தபின் ஆற்று மணலை உடல் முழுவதும் தூற்றிக் கொள்ளும்,ஆனந்தமாய்.



என் மாமியார் அவர்கள், சிறுமியாக இருக்கும்போது பின்னிய யானை படம் இது. அவர்கள் மூன்றாம் வகுப்பில் படிக்கும்போது  பின்னியதாம். (80 வருடங்களுக்கு முன்) காட்போர்ட் என்ற அட்டையில் ஓட்டை ஓட்டையாக இருக்கும். அதில் கம்பிளி நூலால் பின்னியது. மண்டபம் பின்னி அதில் சரஸ்வதி படம் வைத்து இருப்பார்கள். என் அம்மாவும் இதுபோல் கன்னியாகுமரி, தாஜ்மஹால் எல்லாம் பின்னி இருப்பார்கள். அது தம்பியிடம் இருக்கிறது. அவற்றைப் பின்னர் காணத்தருகிறேன் .





மார்கழி மாதம் நான் வரைந்த யானைக்கோலம் (சிரிக்க வேண்டாம்)
இந்த யானை படம் ஒரு மஞ்சப்பையில் இருந்தது. அதைப் பார்த்துக் கோலம் வரைந்தேன்.

யானையின் பலம் தும்பிக்கையில் மனிதனின் பலம் நம்பிக்கையில் 
தன்னம்பிக்கையுடன் வாழ்வோம். வளம் பெறுவோம்.
வாழ்க வளமுடன்.