Wednesday, March 12, 2014

அன்பும் பண்பும் நிறைந்த மாமாஅவர்களுக்கு அஞ்சலி!

பிப்ரவரி 17ஆம் தேதி கோவை பயணம். ஒரு பத்து நாட்கள் மாமனார், மாமியாருடன் இருந்து வரலாம் என்று போய் இருந்தோம்.105 வயது நிரம்பி விட்டதால் மாமா எங்கும் வெளியில் செல்வது இல்லை . அத்தைஅவர்கள் மாமாவை ஒரு குழந்தையை பார்த்துக் கொள்வது போல் பார்த்துக் கொள்வார்கள்.

அத்தை அவர்கள் எப்போதும் சொல்வது ”எல்லோரும் சுமங்கலியாய் போக வேண்டும் என்பார்கள் , ஆனால்  என்னைப் பொறுத்தவரை அவர்களுக்குப் பின் தான் நான் போக வேண்டும் ”என்பார்கள். அவர்கள் விருப்பம் போல் மாமாவிற்குக் கடைசி வரை தன் பணிவிடைகளைச் செய்தார்கள்.

மாமா அவர்கள் 23 ம் தேதி ஞாயிறு காலை திடீரென்று இறைவனடி
சேர்ந்தார்கள். அதற்கு முதல் நாள்   நான்கு அன்பர்கள் வந்து 105 வயதான
அவர்களை வந்து பார்த்து மாலை, மற்றும் பொன்னாடை போர்த்தி ஆசி
பெற்று சென்றார்கள். அவர்களை வாழ்க வாழ்க என்று வாழ்த்தினார்கள்.
”அவர்கள் போவதற்கு வெளி வாசல் இருட்டி விட்டது லைட் போடு ”என்று
என் கணவரிடம் பேசினார்கள்.பேரன் பேத்திகள் பூட்டன், பூட்டிகளை ஸ்கைப்பில் பார்த்து மகிழ்ந்தார்கள் லேப்டாப்பில் தெரிந்த படத்தை தடவி மகிழ்ந்தார்கள்.


ஞாயிறு அன்று மாமாவைப் பார்த்துக் கொள்ளும்  நண்பரிடம் அவர் பேரன்,
பேத்திகளைப் பற்றி விசாரித்து கொண்டார்கள் . வழக்கம் போல் குளித்து
இறைவனை வணங்கி விபூதி அணிந்து சன் தொலைக்காட்சியில்
திருக்கோவில்கள் உலாவை பார்த்து கொண்டு இருந்தார்கள். அவர்களுக்கு அத்தை இட்லியைக்கரைத்து கொடுத்தார்கள் . அவர்கள் கையால் உணவு சிறிது அருந்திவிட்டு இறைவனடி சேர்ந்து விட்டார்கள்.

மாமா அவர்கள் 102   வயது வரை சிவபூஜை செய்தவர்கள்,   அவர்களை கஷ்டப்படுத்தாமல்இறைவன் நொடியில் தன்னுடன் சேர்த்துக் கொண்டார்.

மாமா தினமும்   பள்ளியில் தமிழாசிரியர்  பணியை  முடித்து வந்த பின் மாலையில் பேட்டைஈஸ்வரன்  கோவிலில் , “மருதநாயக முதலியார் அன்னபூரணி அம்மாள் தேவாரப் பாடசாலை”யில்   தேவாரம்
சொல்லித்தருவார்கள். 80ஆம் வயது வரை அந்த பணியை பேட்டைஈஸ்வரன்கோவிலில் சிறப்பாக  ஆற்றினார்கள். நாற்பத்தைந்து ஆண்டுகள் தேவார ஆசிரியராக இருந்தார்கள், மேலும் இத்திருக்கோயிலில் கந்தபுராணம் மற்றும் பெரியபுராணம் சொற்பொழிவு ஆற்றுவார்கள்.

அதன் பின் வயது அதிகம் ஆகி விட்டது அவ்வளவு தூரம் செல்ல வேண்டாம் என்று தன் பிள்ளைகள் சொன்னதை ஏற்று தன் வீட்டுக்கு அருகில் இருக்கும் அருள் விநாயகர் கோவிலில் சிறு குழந்தைகளுக்கு தேவாரம் சொல்லி தந்தார்கள்.

கோவை ஆர் எஸ் புரம் இரத்தின விநாயகர் கோவிலில் பல ஆண்டுகள் கந்தபுராணம் மற்றும் பெரியபுராண தொடர் சொற்பொழிவு ஆற்றி உள்ளார்கள்.

கேரள மாநிலம் திருவஞ்சைக்களத்தில் கோவை சேக்கிழார், திருக்கூட்டத்தினர்களால் நடத்தப்படும் சேரமான் பெருமாள் நாயனார், சுந்தரமூர்த்தி நாயனார் குருபூஜைகளில் சேக்கிழார் திருக்கூட்டத்தின் பொருளாளர் என்ற முறையில் சுமார் 50 ஆண்டுகள் சேவைபுரிந்தார்கள்.

கோவைத் தமிழ்ச்சங்கத்தின் செயலாளராகப் பல ஆண்டுகள் பணிபுரிந்து பல அரிய சொற்பொழிவுகளுக்கு ஏற்பாடு செய்து உள்ளார்கள். இச்சங்கத்தில் தொடர் சொற்பொழிவுகள் ஆற்றியுள்ளார்கள்.மாமா அவர்கள் ’அன்புவெள்ளம்’ என்ற நூலினை எழுதினார்கள் . அதைக் கலைமகள் காரியாலயத்தினர் வெளியிட்டனர், இந்நூல் சேரமான்பெருமான் நாயனார், மற்றும் சுந்தரமூர்த்தி நாயனார் பற்றியது. இந்நூல் நகராட்சி பள்ளிகளில் பாடப்புத்தகமாய் இருமுறை வைக்கப்பட்டது. மேலும் இவர்கள் தலைமையில் தமிழ்ப்பாடநூல்கள் தொகுக்கப்பட்டு நகராட்சி பள்ளிகளில் பாடமாக வைக்கப்பட்டது.கோவை நகராட்சிப்பாடப்புத்தகத் தேர்வுகுழு உறுப்பினராக இருந்தார்கள்.

கோவை சிவக்கவிமணி திரு. சி.கே. சுப்பிரமணிமுதலியார் அவர்கள் இவர்களுக்கு “திருமுறைச் செல்வர்” எனற பட்டத்தினை அளித்து சான்றிதழ் அளித்தார்கள்.

பேரூர் தவத்திரு சாந்தலிங்க இராமசாமி அவர்கள் முன்னிலையில் தொண்டை மண்டல ஆதீனம் அவர்களால் “பண்ணிசைச் செல்வர்” என்ற பட்டம் அளிக்கப்பட்டது.

கோவை சைவப் பெருமக்கள் பேரவையில் இவர்களுக்கு  “சைவப்பெருந்தகை” என்ற பட்டம் அளித்தார்கள்.
மணிவிழா, முத்துவிழா, கனகாபிஷேகவிழா, நூற்றாண்டு விழா என விழாக்களை  அவர்களின் ஐந்து மகன்களும்  மற்றும் பேரன், பேத்திகள் குடும்பத்தினர் நடத்தி அவர்களிடம் ஆசி பெற்றார்கள்.

பேட்டைஈஸ்வரன் கோவிலில்  மாமாவிடம் கற்றுக் கொண்ட  மாணவர்கள் வந்து  இரண்டு நாளும்   தேவாரம், திருவாசகம் படித்து அவர்களின் இறுதி சடங்குகளை மிக சிறப்பாக செய்தார்கள். 16 தினங்களும் யாராவது மாணவர்கள் வந்து மாமா படத்தின் முன் வந்து உட்கார்ந்து தேவாரத்தை இசைத்து சென்றார்கள்.16ம் நாள் திருமுறை செல்வர், சைவப்பெருந்தகை மாமா அவர்களுக்கு கோவை புரந்தரதாசர் அரங்கத்தில்   படத்திறப்புவிழா செய்து நினைவு அஞ்சலி கூட்டம் நடத்தி தங்கள் ஆசிரியருக்கு சிறப்பு செய்தார்கள்.

சிரவை ஆதீனம் சீர் வளர் சீர் குமரகுருபர சுவாமிகள் அவர்கள் தலைமை  தாங்க  12 அன்பர்கள் பேசினார்கள். மற்றும் தேவார பாடசாலை அன்பர்கள் போற்றித்திருத்தாண்டகம் படித்து மலர் அஞ்சலி செய்தார்கள்.

நிறைவான வாழ்க்கை வாழ்ந்து அனைவரிடமும் அன்பு உள்ளம் கொண்ட அவர்கள் இறைவனிடம் செல்லும் போதும் எந்த தொந்தரவும் யாருக்கும் கொடுக்காமல் அமைதியாக தூங்குவது போல் தூங்கி விட்டார்கள்.

//வையத்து வாழ்வாங்கு வாழ்பவர்
வானுறையும் தெய்வத்துள் வைக்கப்படும்//

இப்படி வள்ளுவர் சொன்ன குறள் படி வாழ்ந்து எங்கள் குடும்பத்தை வாழவைக்கும் தெய்வம் ஆனார்கள்.
                                                                     
படத்திறப்புவிழா படம்

தம்பி மகன் அவர்கள் தன் பெரியப்பாபற்றிய செய்திகளை நினைவுகூர்கிறார்கள்
கணவரின் அண்ணன் அவர்கள் தன் அப்பாவின் நினைவுகளை பகிர்ந்து கொள்கிறார்கள்.
தேவார மாணவர்கள் போற்றி திருத்தாண்டகம் படிக்கிறார்கள்.
வந்தவர்கள் அனைவரும் மலர் அஞ்சலி செய்கிறார்கள்.

மாமா அவர்கள் நாட்குறிப்பு எழுதும் பழக்கம் உள்ளவர்கள் . அதில் என் கணவரைப்பற்றி எழுதியது.
                                                                     -------------------

48 comments:

திண்டுக்கல் தனபாலன் said...

அவரின் சிறப்புக்கள் அனைத்தையும் பகிர்ந்து கொண்டு அறிய வைத்தமைக்கு நன்றி அம்மா...

திண்டுக்கல் தனபாலன் said...

குறள் படி சொன்னது மிகச் சரி...

தங்களின் துணைவரைப் பற்றி எழுதியதை படிக்க ஆவலுடன் உள்ளேன்...

ராமலக்ஷ்மி said...

தங்கள் மாமா அவர்களுக்கு எங்கள் அஞ்சலிகள். நிறைவான வாழ்வு! அவரைப் பற்றி விரிவாக அறியத் தந்திருப்பதற்கு நன்றி. நாட்குறிப்பில் சீரான கையெழுத்து!

கீத மஞ்சரி said...

திருமுறைச் செல்வர், பண்ணிசைச் செல்வர், சைவப் பெருந்தகை என்று பெருமைகளுக்குரிய பெருமகனார் தங்கள் மாமனாரைப் பற்றிய செய்திகள் அனைத்தும் வியப்பளிக்கின்றன. எவ்வளவு அற்புதமான தொண்டாற்றியிருக்கிறார்கள்! நிறைவான வாழ்க்கையை வாழ்ந்துள்ள அவர்களது இறுதி நாட்களில் அவர்களுடன் கழிக்கும் பாக்கியம் பெற்றிருக்கிறீர்கள். அவர்களை இருகரம் கூப்பி வணங்குகிறேன்.

துரை செல்வராஜூ said...

நிறை வாழ்வு வாழ்ந்து - சிவப் பழமாகக் கனிந்து ஈசனுடன் இரண்டறக் கலந்து விட்டார்.
பெருந்தகையாளராகிய அவருக்கு எனது அஞ்சலி.
உங்களுடைய துயரில் எமக்கும் பங்குண்டு!..

அம்பாளடியாள் வலைத்தளம் said...

இறைவன் கொடுத்த ஆயுளைப் பூரணாமாக வாழ்ந்து விட்டுச் சென்ற
பெரியவரின் பாதங்களைத் தொட்டு வணங்கியவர்கள் புண்ணியம்
செய்தவர்கள் ! தன் கணவனுக்குப் பணிவிடை செய்து இறைவனடி
எய்த வேண்டும் என்று காத்திருந்து பணிவிடை செய்த தாயின் உள்ளம்
தான் இறைவன் வாழும் இல்லம் .இந்தப் பகிர்வின் மூலம் நாமும்
அந்த அன்பு தெய்வங்களைக் காணக் கொடுத்து வைத்துள்ளோம் தோழி .
இறந்தவரின் ஆன்மா இந்நேரம் அந்தப் பரம் பொருளின் பாதங்களில்
சரணடைந்திருக்கும் அன்னாருக்கு என் இறுதி வணக்கமும் தங்கள்
குடும்பத்தினருக்கு என் ஆழ்ந்த அனுதாபங்களும் தோழி .

Kanchana Radhakrishnan said...

நிறைவான வாழ்வு.எங்கள் அஞ்சலிகள்.

sury Siva said...

சற்று நேரம் முன்பு தமிழ் இசை என்னும் வலைப் பதிவிலே
கோச்சடையான் படத்தில் வந்த பாடல்களில் ஒன்று வெளியிடப்பட்டு இருந்தது.

தனது அன்புக் கணவரிடம் மனைவி சொல்வது போல:

உனக்கு வயசாகும்போது நான் உன்னை தாயாக பார்த்துக்கொள்வேன் என்று பொருள் படும்படி வைரமுத்து அவர்கள் கவிதை அது.

பல வயதான தம்பதியர்கள் இடையே நடக்கும் உரையாடல்களை கவனித்து இருக்கிறேன். " இரண்டு பேரில் நான் முன்னாடி போய் விடுவேனோ என்ற பயமாக இருக்கிறது. எனக்கு சுமங்கலி பாக்கியம் கிடைக்கும் என்றால் அதெல்லாம் வேண்டாம். என் அன்புக்கணவருக்கு,கடைசி நாள் வரை உறுதுணையாக நான் இருக்க வேண்டும் " என்று பலர் சொல்கிறார்கள். இது உண்மை.

நீங்கள் கொடுத்து வைத்தவர்கள். இது போன்ற மாமனார், மாமியார் கிடைப்பதே பாக்கியம்.

சுப்பு தாத்தா.
www.subbuthatha.blogspot.com
www.pureaanmeekam.blogspot.com

கோமதி அரசு said...

வணக்கம் திண்டுக்கல் தனபாலன், வாழ்க வளமுடன்.

மாமா அவர்களின் சிறப்புகள் எண்ணில் அடங்காது. ஒரு மனிதன் எப்படி வாழ வேண்டும் என்பதை வாழ்ந்து காட்டியவர்கள்.

மாமாவின் நாட்குறிப்பில் என் கணவரும் நாங்களும் மாயவரம் புறப்பட்டு விட்டத்தை எழுதி இருக்கிறார்கள்.

தினம் நடக்கும் நிகழ்வுகளை எழுதும் பழக்கம் உள்ளவர்கள்.
வேறு ஒரு சமயத்தில் அவர்களைப் பற்றியும் என் கணவரை பற்றி எழுதியதையும் பகிர்கிறேன். உங்கள் வரவுக்கும், கருத்துக்கும்
நன்றி.

கோமதி அரசு said...

வணக்கம் ராமலக்ஷ்மி, வாழ்க வளமுடன்.
நிறைவான வாழ்வு தான் அவர்களுடையது.
நான்கு நாட்களுக்கு ஒரு கடிதம் வரும் முன்பு எல்லாம் மாமாவிடமிருந்து.
நம்மையும் நாலுவரி எழுதுங்கள் என்பார்கள்.

கல்யாணம், மற்றும் எந்த விஷேசமாக இருந்தாலும் போகமுடியவில்லை என்றால் அவர்களுக்கு வாழ்த்து கடிதம் அனுப்பிவிடுவார்கள்.

நாலு, ஐந்து வருடமாய்தான் கடிதம் எழுதுவது இல்லை.
அஞ்சலிக்கு நன்றி ராமலக்ஷ்மி.

துபாய் ராஜா said...

தாத்தாவிற்கு அஞ்சலிகள்.

ADHI VENKAT said...

இத்தனை சிறப்புகள் மிக்க தாத்தாவுக்கு எங்களது அஞ்சலிகளும். இறைவனுடன் ஒன்றாக கலந்து விட்ட அவர்களுடைய இறுதி நேரத்தில் உடனிருந்தது தங்களுடைய பாக்கியம் தான் அம்மா.

ஹுஸைனம்மா said...

நிறைவான வாழ்வு வாழ்ந்தவர்கள் என்பது மகிழ்ச்சியான விஷயம். மாமி தற்போது எங்கிருக்கிறார் அக்கா?

இந்தியா செல்லும்போது முதிய உறவினர்களைக் காணச் செல்வதுண்டு. அவர்களின் இளவயதில், தம் குடும்பத்தினரை எப்படி நடத்தினார்களோ அவ்விதம் தற்போது இவர்களின் முதுமையில் அவர்கள் நடத்தப்படும் விதத்தில் பிரதிபலிக்கக் காண்பேன். சில நிகழ்வுகள் - நியாயமானவை என்றாலும் - வருத்தம் தரும்.

ஸ்ரீராம். said...

சரித்திரமாக வாழ்ந்திருக்கிறார். வணங்குகிறோம். அவரின் ஆசிகள் எங்களுக்கும் கிடைக்கட்டும்.

கோமதி அரசு said...

வணக்கம் கீதமஞ்சரி, வாழ்க வளமுடன். அவர்கள் வாழ்க்கை தெளிந்த நீரோடை போல. ஆரவாரம் இல்லாமல் அழகாய் வாழ்க்கையை ரசித்து வாழ்ந்தவர்கள். எல்லாவற்றிலும் நிதானம். அவர்களின் கடைசி நேரத்தில் நாங்கள் எங்கும் போகாமல் அவர்கள் அருகில் இருந்தது இறைவனின் கருணை என்று நினைக்கிறேன்.
உங்கள் ஆறுதலான வார்த்தைகளுக்கும், வணக்கத்திற்கும் நன்றி கீதமஞ்சரி.

கோமதி அரசு said...

வணக்கம் துரைசெல்வராஜூ சார், வாழ்க வளமுடன்.
நீங்கள் சொல்வது சரி, அவர்கள் ஈசனுடன் இரண்டற கலந்து விட்டார்கள்.
உங்கள் அன்பான வார்த்தைகளுக்கு நன்றி.

கோமதி அரசு said...

வணக்கம் அம்பாளாடியாள், வாழ்க வளமுடன்.
தினம் யாராவது ஆசீர்வாதம் வாங்க வந்து கொண்டே இருப்பார்கள். 75 வருட வாழ்க்கை வாழ்ந்த இந்த தம்பதியரைப்போல நம் வாழ்க்கையும் நலமாக இருக்க வேண்டும் என்று நினைப்பார்கள். வருபவர்கள், போகிறவர்கள்,
பத்திரிக்கை பேட்டிகளில் அத்தை சொல்லும் வார்த்தை தான் நான் பகிர்ந்து கொண்டது.
உயிரை கையில் பிடித்துக் கொண்டு என்று சொல்லும் வார்த்தை அத்தைக்கு பொருந்தும். தன் கணவரின் கடமைகளை தானே பார்க்க வேண்டும் என்று உதவியாளாரை பக்கத்தில் வைத்துக் கொண்டு அவர்களே அனைத்தும் செய்வார்கள். உதவியாளுரும் இறைவன் அனுப்பிய அன்பு துணை.மாமா செய்த சிவபூஜையின் பலன்.
உங்கள் ஆதரவான வார்த்தைகளுக்கு நன்றி தோழி.

கோமதி அரசு said...

வணக்கம் காஞ்சனா ராதாகிருஷ்ணன், வாழ்க வளமுடன்.
உங்கள் அஞ்சலிகளுக்கு நன்றி.

‘தளிர்’ சுரேஷ் said...

சைவம் வளர்த்த பெரியவரை இறைவன் தன்னருகில் அழைத்துக் கொண்டுவிட்டான் என்று தோன்றுகிறது.என்னுடைய அஞ்சலிகள்! நன்றி!

கோமதி அரசு said...

வணக்கம் சூரி சார், வாழ்க வளமுடன்.

http://mathysblog.blogspot.com/2009/08/blog-post_09.html
””தாய்மை ”என்ற 2009ம் வருடம் எழுதிய பதிவில் என் மாமியாரைப் பற்றி கூறும் போது அவர்கள் என் மாமனார் அவர்களை (100 வயது அப்போது) குழந்தையை பார்த்து கொள்வது போல் பார்த்து கொள்கிறார்கள் என்று எழுதி இருந்தேன். அப்போது நடப்பார்கள். 102 வயது வரை நன்றாக நடந்தார்கள். கீழே ஒரு முறை விழுந்தார்கள் பிறகு தான் நடக்காமல் போய் விட்டார்கள் பயத்தால்.

என் மாமனார் சொல்லும் வார்த்தை என்னை முந்திக் கொண்டு நீ சென்றால் நானும் உடனே வந்து விடுவேன் என்பது தான்.

வயது செல்ல செல்ல ஒருவருக்கு ஒருவர் துணை மிக இன்றியமையாதது. நாள் ஆக ஆக அதை அனுபவபூர்வமாய் உணரும் தருணங்கள் பல.

நீங்கள் சொல்வது உண்மைதான் அன்பான மாமனார், மாமியார் அமைவது பாக்கியம் தான்.
உங்கள் அன்பான வார்த்தைகளுக்கு நன்றி.
கோமதி அரசு said...

வணக்கம் துபாய் ராஜா, வாழ்க வளமுடன்.
அஞ்சலிகளுக்கு நன்றி.

கோமதி அரசு said...

வணக்கம் ஆதி, வாழ்க வளமுடன்.
நீங்கள் சொல்வது உண்மைதான். இறுதி நேரத்தில் எங்களை அங்கு அனுப்பி வைத்த இறைவனுக்கு நன்றி.
உங்கள் அஞ்சலிகளுக்கு நன்றி.

rajalakshmi paramasivam said...

உப்களுடைய மாமா அவர்களுக்கு அஞ்சலிகள். வாழ்வாங்கு வாழ்ந்த அவரைப் பற்றிய செய்திகளைப் பகிர்ந்து கொண்டதற்கு நன்றி.

கோமதி அரசு said...

வணக்கம் ஹுஸைனம்மா, வாழ்க வளமுடன். மாமியார் இப்போது அவர்கள் வீட்டில் தான் இருக்கிறார்கள். நாங்கள் ஒருவர் மாற்றி ஒருவர் உடன் இருந்துப் பார்த்துக் கொள்ள முடிவு செய்யப்பட்டு உள்ளது. இப்போது என் கணவரின் தம்பி உடன் இருக்கிறார்கள். நாங்கள் அங்கு போய் 25 நாட்கள் ஆகி விட்டது அதனால் இங்கு வந்து விட்டு போக இருக்கிறோம்.

நீங்கள் சொல்வது போல அன்பைக் கொடுத்தால் அன்பை பெறலாம் தானே!

பிள்ளைகள், பேரன், பேத்திகள் எல்லோரும் தங்களுடன் வரும்படி அழைக்கிறார்கள்.

காலம் ஏதாவது நல்ல தீர்வை தரும்.

நிகழ்வுகளை ஏற்றுக் கொள்ளும் பக்குவம் பெற்றவர்கள் அத்தை.
உங்கள் அன்பான விசாரிப்பு நன்றி ஹுஸைனம்மா.


கோமதி அரசு said...

வணக்கம் தளிர் சுரேஷ், வாழ்க வளமுடன். உங்கள் அஞ்சலிகளுக்கு நன்றி.

கோமதி அரசு said...

வணக்கம் ஸ்ரீராம், வாழ்க வளமுடன்.
நீங்கள் சொன்னது போல் சரித்திரமாய் தான் வாழந்து இருக்கிறார்கள் மாமா.
அவர்களின் எளிமை, மற்றவர்கள் பின் பற்றவேண்டிய நல்ல குணம்.
எல்லோருக்கும் அவர்கள் ஆசி எப்போதும் உண்டு.
நன்றி ஸ்ரீராம்.

தி.தமிழ் இளங்கோ said...

தமிழ்ப் பணி, இறைப் பணி இரண்டினோடு நிறைவான வாழ்க்கையும் வாழ்ந்திட்ட தங்களது மாமனார் அவர்களுக்கு எனது அஞ்சலி! அவர் மீது தாங்கள் வைத்து இருக்கும் பெருமதிப்பின் காரணமாக அவரது பெயரினை தாங்கள் குறிப்பிடவே இல்லை! இருப்பினும் தாங்கள் வெளியிட்ட படத்தின் மூலம் அவரது பெயரினைத் தெரிந்து கொண்டேன்!

வை.கோபாலகிருஷ்ணன் said...

உத்தமமாக உயர்வாக வாழ்ந்துள்ள மனிதர். கேட்கவும் படிக்கவும் ஆச்சர்யமாக உள்ளது. அனாயாசமாக மரணம் ஏற்பட்டுள்ளது.

அவரின் ஆன்மா சாந்தியடைந்து, தெய்வமாகிப்போன அவர்கள் தங்களின் குடும்பத்தை தொடர்ந்து என்றும் ரக்ஷிப்பார்கள்.

வெங்கட் நாகராஜ் said...

எனது அஞ்சலிகளும்......

உங்கள் மகளிடம் பேசும்போதும் முதல் நாள் இரவு ஸ்கைப்பில் பேசியது பற்றி சொல்லிக் கொண்டிருந்தார்.....

சிறப்பான மனிதரின் அத்தனை சிறப்புகளையும் இங்கே பகிர்ந்தமைக்கு நன்றி.

கோமதி அரசு said...

வணக்கம் ராஜலக்ஷ்மி பரமசிவம் வாழ்க வளமுடன்.

உங்கள் கருத்துக்கும், அஞ்சலிக்கும் நன்றி.

கோமதி அரசு said...

வணக்கம் இளங்கோசார், வாழ்க வளமுடன்.
நீங்கள் சொல்வது போல் தமிழ்பணி, இறைபணி இரண்டையும் இரண்டு கண் போல் செய்து வந்தார்கள்.
இண்டர்மீடியட் படிப்பு அண்ணாமலை பல்கலைக்கழகத்தில் தொடங்கிய ஆண்டில் 1931 லில் அதில் முதல் தொகுப்பில் சேர்ந்து படித்தார்கள்.முன்னாள் குடியரசுத் தலைவர் திரு.வெங்கட்ராமன் அவர்கள் இவர்களது வகுப்பு நண்பர் ஆவார்கள்.அண்ணமலை பல்கலைக்கழக் வைரவிழாவில் எங்களிடமிருந்த போட்டோவை வாங்கி கொண்டு மாமாவுக்கு சிறப்பு செய்தார்கள்.
உங்கள் அஞ்சலிக்களுக்கு நன்றி.

கோமதி அரசு said...

வணக்கம் ,வை. கோபாலகிருஷ்ணன் சார், வாழ்க வளமுடன்.

நீங்கள் சொன்னது போல் தெய்வாமாகி எங்களை ரக்ஷிப்பார்கள்.


உங்கள் அன்பான வார்த்தைகளுக்கு நன்றி.

இராஜராஜேஸ்வரி said...

கோவை ஆர் எஸ் புரம் இரத்தின விநாயகர் கோவிலில் பல ஆண்டுகள் கந்தபுராணம் மற்றும் பெரியபுராண தொடர் சொற்பொழிவு ஆற்றி உள்ளார்கள்//

நிறைய முறை கேட்டுள்ளோம்..

வினாசைன்யேன ஜீவிதம்
அனாசயேன மரணம்...!

எங்கள் அஞ்சலிகள்..!

கோமதி அரசு said...

வணக்கம் இராஜராஜேஸ்வரி, வாழ்க வளமுடன்.
நீங்கள் பலமுறை கேட்டு இருப்பது மகிழ்ச்சி.

உங்கள் ஆறுதலான வார்த்தைகளுக்கும், அஞ்சலிகளுக்கும் நன்றி.

Ranjani Narayanan said...

மரியாதைக்குரிய உங்கள் மாமாவைப் பற்றி சிறப்பாக எழுதி அவருக்கு மிகச்சிறந்த அஞ்சலி செலுத்தி இருக்கிறீர்கள்,கோமதி. அவரது சிறப்புகள் எல்லாம் தெரிந்து ரொம்பவும் வியந்தேன்,என்ன ஒரு மாமனிதர் என்று. நிறைவாழ்வு வாழ்ந்து சிவனடி சேர்ந்த அவருக்கு எனது அஞ்சலிகளும்.

Geetha Sambasivam said...

ரொம்ப நாட்களாய்க் காணோமேனு நினைச்சேன்.

இத்தனை சிறப்புக்கள் பொருந்திய உங்கள் மாமனார் நிறை வாழ்வு வாழ்ந்து ஈசனோடு இரண்டறக் கலந்திருக்கிறார்.

என்ன சொல்வது எனத் தெரியவில்லை. எங்கள் அஞ்சலிகள். உங்கள் அத்தைக்குத் தான் கைக்குழந்தை கையை விட்டுச் சென்றுவிட்டது போல் தவிப்பாக இருக்கும்.

Geetha Sambasivam said...

தனக்கும் நிறைவாகப் பிறருக்கும் பயனாக அவர்கள் வாழ்விலும் ஒளி விளக்கேற்றிய பெருந்தகைக்கு மீண்டும் அஞ்சலிகள்.

Geetha Sambasivam said...

எங்கள் ப்ளாகின் பின்னூட்டத்தில் பார்த்தேன், அதான் உடனே வந்தேன்.

கோமதி அரசு said...

வணக்கம் ரஞ்சனி நாராயணன், வாழ்க வளமுடன்.
அன்புக்கும், மரியாதைக்கும் உரியவராக அவர்கள் காலம் முழுவதும் வாழ்ந்து காட்டி விட்டு போய் விட்டார்கள்.
உங்கள் அன்பான கருத்துக்கும், அஞ்சலிகளுக்கும் நன்றி.

கோமதி அரசு said...

வணக்கம் கீதாசாம்பசிவம், வாழ்க வளமுடன்.

நீங்கள் சரியாக சொன்னீர்கள் கீதா.அத்தை தவித்துதான் போகிறார்கள்.
அத்தை இந்த நேரம் மாமா காலையில் குளித்து இருப்பார்கள், இவ்வளவு நேரத்திற்கு உன் மாமாவுக்கு சாப்பாடு கொடுத்து இருப்பேன், என்று மாமாவின் நினைவுகளுடன் இருக்கிறார்கள்.

மாமாவை எடுத்து சென்ற அன்று அவர்களுக்கு நினைவு தப்பி பிழைத்தது மறு ஜென்மம். நானும் இன்னொரு மருமகளும் முதல் உதவி செய்து உயிரை மீட்டோம் இறைவன் அருளால் அந்த நேரம் மிகவும் கொடுமையானது.

என் தங்கை வாயோடு வாய் வைத்து சுவாசம் கொடுத்தாள், நான் நெஞ்சில் குத்தி , தடவி,முதல் உதவி செய்து மீண்டார்கள்.
மூளைக்கு செல்லும் இரத்த குழாய் சுருங்கி வருகிறது. அத்தைக்கு, அதனால் மூன்று முறை இப்படி மயக்கம் வந்து இருக்கிறது. மாத்திரை தினம் எடுத்துக் கொள்ள வேண்டும். மாமா இறந்த வருத்ததில் மாத்திரை சாப்பிட மறந்து விட்டதின் விளைவு அது.

மாமாஅவர்கள் மாணவர்கள் எல்லோரும் வாத்தியார் ஐயா தங்கள் வாழ்வில் அருள் ஒளி ஏற்றியவர்கள் என்று தான் சொல்கிறார்கள்.

உங்களின் அன்பான விசாரிப்புக்கும், ஆறுதலான வார்த்தைகளுக்கும், அஞ்சலிக்கும் நன்றி கீதா.


சே. குமார் said...

தங்கள் மாமாவின் சிறப்பை இங்கு அனைவரும் அறியத் தந்தமைக்கு நன்றி அம்மா...

அவரின் ஆன்மா சாந்தியடைய இறைவனைப் பிரார்த்திக்கிறேன்...

நிறைவான வாழ்க்கை வாழ்ந்து சென்றிருக்கிறார்கள்...

கோமதி அரசு said...

வணக்கம் குமார், வாழ்க வளமுடன்.

உங்களின் அன்பான கருத்துக்கும், பிரார்த்தனைக்கும் நன்றி குமார்.

கோமதி அரசு said...

வணக்கம் குமார், வாழ்க வளமுடன்.

உங்களின் அன்பான கருத்துக்கும், பிரார்த்தனைக்கும் நன்றி குமார்.

arumugam piramanayagam said...

Engal anaivarin anjalikalai samarpikirome. Iraiyai irundu elloraiyum kakatum. Valga valamudan. Thangal athai poorana nalam pera pirarthikirome. K.p.arumugam, and thirugnanasundari family, chennai

கோமதி அரசு said...

வணக்கம், வாழ்க வளமுடன்.
உங்கள் அனைவரின் அஞ்சலிகளுக்கும் நன்றி.

நீங்கள் சொல்வது போல் இறை அருள் எல்லோரையும் காக்கும்.
அத்தை அவர்கள் நலமாய் இருக்கிறார்கள் இறை அருளால்.

உங்கள் பிரார்த்தனைகளுக்கும், கருத்துக்கும் நன்றி.

கோமதி அரசு said...

வணக்கம் காஞ்சனா ராதகிருஷ்ணன்,வாழ்க வளமுடன்.

உங்கள் அஞ்சலிகளுக்கு நன்றி.

Jaleela Kamal said...

உங்கள் மாமா அவர்களின் நிறைவான் வாழ்வு பற்றி மிக சிறப்பாக எழுதி இருக்கீறீர்கள்.

//என் அன்புக்கணவருக்கு,கடைசி நாள் வரை உறுதுணையாக நான் இருக்க வேண்டும் " என்று பலர் சொல்கிறார்கள். இது உண்மை...//

உங்கள் மாமியார் போல் தான் இப்ப என் மாமியாரும் என் மாமனாரை பார்த்து கொண்டு இருக்கிறார்கள்.

கோமதி அரசு said...

அன்பு ஜலீலா, வாழ்க வளமுடன்.
நீங்கள் சொல்வது உண்மை. ஜலீலா முன் போல் கணவருக்கு முன்பு போக வேண்டும் என்று இப்போது யாரும் நினைப்பது இல்லை. கடைசிவரை உறுதுணையாக இருக்க வேண்டும் என்று நினைக்கிறார்கள்.

உங்கள் மாமானார், மாமியார் அவர்களுக்கு எங்கள் வணக்கங்கள்.
உங்கள் வரவுக்கும்,அன்பான கருத்துக்கும், நன்றி ஜலீலா.