புதன், 12 டிசம்பர், 2012

வந்தேன் , வந்தேன்


வந்தேன், வந்தேன் ,

நலமா எல்லோரும்.

ஆகஸ்டு மாதம் முதல்  பேரனின் வரவால்  இணையத்திற்கு இடை இடையே தான்வர முடிந்தது.  என் மகன்  ’போன வருட கொலுவைவிட அடுத்த ஆண்டு கொலுவை சிறப்பாக கொண்டாடுவோம். நாங்கள் வருவோம்’ என்று சொல்லி இருந்தான்.  அது போலவே  வந்து சிறப்பித்தார்கள். தான் வரும்முன் தன் மனைவியையும், மகனையும் அனுப்பிவிட்டான்.  அவர்கள் வந்த இந்தவருடம் ,இரண்டு கிருஷ்ணஜெயந்தி வந்தது . அதனால் இரண்டாவது கிருஷ்ண ஜெயந்தியில் கலந்து கொண்டான் பேரன்.  பின் நவராத்திரியும் அவர்கள் வரவால் சிறப்பாகக்   கொண்டாடப்பட்டது.   மகன், மருமகள், பேரனின் கை வண்ணத்தில் நவராத்திரி  மேலும் சிறப்பானது. அதை  இன்னொரு பதிவில் பகிர்கிறேன்.

பல ஊரு தண்ணீர் குடித்து , சூறாவளி சுற்றுப் பயணம்  செய்ததில் உடம்பு கொஞ்சம் சரியில்லை.  பேரன் வருகையால் நடைமுறை வாழ்க்கையே மாறி விட்டது.  உடல், பொருள்,  ஆவி,  நேரம்,  காலம் எல்லாம்  அவனைச் சுற்றித் தான் ஓடியது.  இப்போது அவன் ஊருக்குப் போய் விட்டான். வீடு வெறிச் என்று இருக்கிறது. அவனுடன் இருந்த நாட்களை மனச்சுரங்கத்தில் இருந்து எடுத்து அசை போட்டு கொண்டு இருக்கிறோம். அடுத்த விடுமுறைக்கு அவன் வரும் நாளை எதிர்பார்த்து.

தீபாவளி வாழ்த்து சொன்ன அனைவருக்கும் நன்றிகள் . மகன் ,மருமகள், பேரனை வழி அனுப்பி வைத்து விட்டு  26 ஆம் தேதி தான் ஊரிலிருந்து வந்தேன்.  கார்த்திகைப் பண்டிகை முடிந்தவுடன் மறுபடியும் ஊர்ப் பயணம்,  குடும்ப விழாக்களில் கலந்து  கொண்டு  11ஆம் தேதி தான் வந்தேன்.

தீபாவளி சிறப்பாக நடந்தது . அதற்கு முன்பு எங்கள் மாமா, அத்தை திருமணநாள் மற்றும் பிறந்தநாள் விழா சிறப்பாக நடந்தது.

தீபாவளி வாழ்த்து சொன்ன ஹுஸைனம்மா ஒரு கேள்வி கேட்டு இருந்தார்கள்.  அந்த கேள்வியும் அவர்களுக்குப் பதிலும் கீழே:

//மாமனார்-மாமியார் 75 ஆண்டு திருமண வாழ்வு, சதம் தாண்ட என் பிரார்த்தனைகள். இதுவரை திருமண தினம் கொண்டாடியதில்லை என்பது ஆச்சர்யம்தான். சஷ்டியப்தபூர்த்தி, சதாபிஷேகம் இவையெல்லாம் செய்ததில்லையா?  நூறு வயதில் செய்வது கனகாபிஷேகம்தானே? அதுவா இப்போது செய்யப்போகிறீர்கள்?//


என்று ஹுஸைனம்மா கேள்வி கேட்டு இருந்தார்கள். அவர்களுக்கு :

சஷ்டியப்தபூர்த்தி, சதாபிஷேகம் , கனகாபிஷேகம் எல்லாம்  முன்பே நடந்து விட்டது. அதை எல்லோரும் சேர்ந்து நடத்தி விட்டோம்.

சஷ்டியப்தபூர்த்தி என்பது - 60 வயது பூர்த்தி ஆனவுடன் செய்வது. சதாபிஷேகம் என்பது - 80 பூர்த்தியானவுடன் செய்வது,
கனகாபிஷேகம் என்பது - மகனுக்கு பேரன் பிறந்தால் பேரன்  கையால் தங்கக் காசுகள், தங்கப்பூ, வெள்ளிப்பூ போட்டு  கனகாபிஷேகம் செய்து வணங்குவது.

நான் இதுவரை திருமண நாள்கொண்டாடவில்லை என்றது முதன் முதலில் திருமணம் செய்த தேதியை வைத்து அடுத்த வருடம் திருமண நாள்  கொண்டாடுகிறோமே அதை. அப்படி பார்க்கும் போது அவர்கள் திருமணம் செய்து 75 ஆண்டுகள் ஆகி  விட்டது. அந்த நாளைத்தான் பேரன், பேத்திகள் கொண்டாடினார்கள்.

ஹுஸைனம்மாவின் ஆர்வமான  கேள்விக்கு மகிழ்ச்சி. அவர்களுக்கு இதில் பதில அளித்து விட்டேன்.

12.11.2012 ல் திங்கட்கிழமை  கோவையில் ’அன்னபூர்ணா உணவகம் ’கங்கா கலைஅரங்கத்தில்’ குடும்ப உறுப்பினர்களும்,  மற்றும் உள்ளூர் சொந்தங்கள் மட்டும் வைத்து எளிமையாக விழா  நடந்த்து.
விழா அறிவிப்புப் பலகை


விழா நாயகர்


காலை தேவார இன்னிசை கச்சேரி - என் மாமாவிடம் தேவாரம் கற்றுக் கொண்டவர்கள் தன் ஆசிரியரின் மணவிழாவிற்கு  மகிழ்வோடு பாடினார்கள்.

தேவார இன்னிசை

  மச்சினர் பேத்தி பாட்டு பாடினாள். என் தோழி  சில பாடல்கள் பாடினாள்.  பிறகு  கேக் வெட்டி மாமாவின் பிறந்தநாளும் 75 வது திருமண நாளும் கொண்டாடப்பட்டது.  வந்தவர்களுக்கு விழா நாயகனும், நாயகியும் வாழ்த்தி ஆசீர்வாதம் செய்தார்கள்.

பிறந்தநாள் கேக்

மணமக்கள் மாலை மாற்றல்
பிறகு என் கணவர் வந்தவர்களுக்கு நன்றி உரை சொன்னார்கள்.  மதியம் விருந்துடன் விழா இனிதே நிறைவுற்றது.

தீபாவளி 13ஆம் தேதி சிறப்பாக நடந்தது.   காலை மருமகள் மூவரும்( என் மருமகளும், மற்ற இரண்டு மருமகளும்)  சேர்ந்து  வடை, பஜ்ஜி எல்லாம் செய்தார்கள்.
வடை ரெடியாகுது

பெரிய மருமகள் தீபாவளி கோலம் வரைந்தாள்.  இளைய தலைமுறைகள் பொறுப்பை எடுத்துக் கொண்டது எல்லோருக்கும் மகிழ்ச்சி அளிப்பதாய் இருந்தது.

கோலம்
                                                         

மத்தாப்பு சுட்டு சுட்டுசுழலும் தரைச்சக்கரம்
அன்று வீட்டுக்குப் பக்கத்தில்    உள்ள  பிள்ளையார் கோவிலுக்கு போய்  அபிஷேகம் அர்ச்சனை செய்து வழிபட்டு வந்தோம்.  பேரனுடன் கொண்டாடும் முதல் தீபாவளி.  மழலை மொழியால் எல்லோருடனும் கலந்து உறவாடி  தீபாவளியை சிறப்பித்தான். எல்லோருக்கும் மத்தாப்புக்களையும், புஷ்வாணம்,  தரைச்சக்கரம்  எல்லாம் எடுத்துக் கொடுத்து அவர்கள்  வைப்பதை  ஆசையாய் பார்த்து மகிழ்ந்தான் .ஆனால் அவன் வைக்க மாட்டேன் என்று சொல்லி விட்டான்.


                                               பூப் பூவாய் சிதறும் புஸ்வாணம்


புத்தாடைகளும் ,பலகாரங்களும் 
புத்தாடை அணிந்து மாமா அத்தையிடம் ஆசீர்வாதம்

14ம் தேதி மறு நாள் மாமாவின் நட்சத்திர பிறந்தநாள்.  அதற்கு கோனியம்மன் கோவில் போய் சாமி கும்பிட்டு வந்தோம்.

அன்று இரவு நாகர்கோவில் எக்ஸ்பிரஸில் திருநெல்வேலி சென்றோம்.
எங்கள் பேரனை அழைத்துக் கொண்டு  குலதெய்வத்தை வணங்கி வர.

குலதெய்வம் இருக்கும் இடம் இயற்கையின் கொடை என்றுதான் சொல்லவேண்டும்.  அவசியம் பார்க்க வாருங்கள் என் அடுத்த பதிவில்.36 கருத்துகள்:

 1. பல விஷயங்கள் இருக்கிறது பகிர. நீங்கள் பகிர நாங்கள் படிக்க காத்திருக்கிறோம். தொடரட்டும் பகிர்வுகள்.

  பதிலளிநீக்கு
 2. அட, மறக்காமல் என் சந்தேகத்திற்கும் பதில் சொல்லிட்டீங்களே!!

  புரிந்துவிட்டது. நன்றி கோமதிக்கா.

  வீட்டில் குழந்தைகள் இருப்பது மனதுக்கு மகிழ்ச்சி என்றால், பெரியவர்கள் இருப்பது நிம்மதியைத் தரும். நமக்காகப் பிரார்த்தனை செய்ய பெரியவர்கள் இருப்பது பெரிய பாக்கியம்.

  பதிலளிநீக்கு
 3. பல்வேறு விஷயங்களைப் பட்டியலிட்டுச் சொல்லியுள்ளது அழகாகவும் கேட்கவே மகிழ்ச்சியாகவும் உள்ளது.

  படங்கள் அத்தனையும் அழகு.

  கனகாபிஷேகம் பற்றிய விளக்கமும் அருமை.

  அருமையான பகிர்வுக்கு நன்றிகள்.
  பாராட்டுக்கள். வாழ்த்துகள்.

  பதிலளிநீக்கு
 4. அருமையான பகிர்வு அம்மா..நன்றி ;)

  பதிலளிநீக்கு
 5. எல்லாமே அருமை! எதைச்சொல்ல எதை விட?

  பெரியவர்களின் ஆசிகளைக்கோரி நிற்கும் வரிசையில் நாங்களும் இருக்கின்றோம்.

  இனிய வாழ்த்து(க்)கள்.

  பதிலளிநீக்கு
 6. படங்களுடன் பதிவைப் படிக்க
  நேரடியாக நிகழ்வுகளில் கலந்து கொள்கிற
  உணர்வும் மகிழ்வும் ஏற்பபட்டது
  சந்தோஷமும் மகிழ்ச்சியும் என்றும் இதுபோல்
  தொடர மதுரை மீனாட்சியை வேண்டிக் கொள்கிறேன்

  பதிலளிநீக்கு
 7. ஆவலுடன் எதிர்பார்த்திருந்த அருமையான மனதைத்தொட்ட பதிவு.நன்றி அம்மா.

  பதிலளிநீக்கு
 8. வாங்க வெங்கட், வாழ்க வளமுடன். முதலில் வந்து கருத்து சொல்லியதற்கும், காத்திருப்புக்கும் நன்றி.

  பதிலளிநீக்கு
 9. வாங்க ஹுஸைனம்மா, வாழ்கவளமுடன்.

  நீங்கள் சந்தேகம் கேட்டதால் தான் இந்த பதிவே !

  உங்கள் புரிதலுக்கு நன்றி.

  பெரியவர்கள் செய்த பிராத்தனைகளாலும், வாழ்த்துக்களாலும் தான் வாழ்ந்து கொண்டு இருக்கிறோம்.
  கள்ளமில்லா குழந்தைகள் மகிழ்ச்சியின் இருப்பிடம் அல்லவா! சரியாகச் சொன்னீர்கள்.

  பதிலளிநீக்கு
 10. அருமையான பகிர்வு கோமதிம்மா. மனசுக்கு நிறைவா இருக்கு.

  பதிலளிநீக்கு
 11. வாங்க, வை. கோபாலகிருஷ்ணன் சார், வாழ்க வளமுடன்.

  உங்கள் அழகான கருத்துக்கும், வாழ்த்துக்களுக்கும், பாராட்டுக்களுக்கும் மனம் நிறைந்த நன்றி சார்.

  பதிலளிநீக்கு
 12. வாங்க கோபிநாத், வாழ்க வளமுடன்.

  உங்கள் வரவுக்கும் , கருத்துக்கும் நன்றி.

  பதிலளிநீக்கு
 13. வாங்க துளசி, வாழ்கவளமுடன்.
  பெரியவர்களின் ஆசி எப்போதும் உங்களுக்கு உண்டு.உங்கள் வரவுக்கும், வாழ்த்துக்கும் நன்றி.

  பதிலளிநீக்கு
 14. வாங்க ரமணி சார், வாழ்கவளமுடன்.

  உங்கள் அருமையான கருத்துக்கும், மனப்பூர்வமான வேண்டுதலுக்கு நன்றி.அன்னை மீனாட்சி நம் எல்லோருக்கும் நலங்கள் அருள்வாள்.

  பதிலளிநீக்கு
 15. வாங்க இந்திரா, வாழ்க வளமுடன்.
  உங்கள் எதிர்ப்பார்பை அறிந்து மகிழ்ந்தேன். பகிர்வு உங்களுக்கு பிடித்தது அறிந்து மகிழ்ச்சி, நன்றி.

  நீங்களும் எழுதலாமே.

  பதிலளிநீக்கு
 16. உறவோடு மகிழ்தல்
  உற்சாகமான இனிய பகிர்வுகள்..
  வாழ்க வளமுடன் ..

  பதிலளிநீக்கு
 17. வாங்க அமைதிச்சாரல், வாழ்க வளமுடன்.

  உங்கள் வரவுக்கும், கருத்துக்கும் நன்றி.

  பதிலளிநீக்கு
 18. வருக!வருக!
  விழா சிறப்புற நடைபெற்றதற்கு மகிழ்ச்சி.உங்கள் அனுபவப் பகிர்வுகளுக்கு காத்திருக்கிறோம்.

  பதிலளிநீக்கு
 19. வாங்க இராஜ்ராஜேஸ்வரி, வாழ்கவளமுடன்.

  உங்கள் வரவுக்கும், வாழ்த்துக்கும் நன்றி.

  பதிலளிநீக்கு
 20. வாங்க முரளிதரன், வாழ்க வளமுடன். உங்கள் வரவுக்கும், கருத்துக்கும் நன்றி.

  பதிலளிநீக்கு
 21. படங்களும் பகிர்வும் மனதுக்கு நிறைவு.

  ஹுஸைனம்மா கேள்வியும் தங்கள் பதிலும் அருமை.

  பெரியவர்களுக்கு என் வணக்கங்கள்.

  பதிலளிநீக்கு
 22. வாங்க ராமலக்ஷ்மி, வாழ்க வளமுடன்.

  உங்கள் வணக்கங்களை அவர்களிடம் தெரிவித்து விடுகிறேன்.
  என் மாமா இப்போது வாழ்த்தும் போது வாழ்க வளமுடன் என்றே வாழ்த்துகிறர்கள். அந்த வாழ்த்து உங்களுக்கு கண்டிப்பாய் உண்டு.
  பதிவை ரசித்தமைக்கு நன்றி.

  பதிலளிநீக்கு

 23. உறவுகளுடன் பண்டிகைக் கொண்டாட்டம் உங்கள் பதிவில் தெரிகிறது. மீண்டும் வருகைக்கு வாழ்த்துக்கள். .

  பதிலளிநீக்கு
 24. 104 வது பிறந்த நாள்,75வது பிறந்த நாள் எனும் பொழுது படத்தினையும்,பகிர்வையும் பார்க்க பரவசமாக இருந்த்து.அந்த தம்பதிகள் நல்ல ஆரோக்கியத்தோடு,.மேன்மேலும் மக்ழ்ச்சியோடும் இன்னும் பல்லாண்டு வாழ என் பிரார்த்தனைகள்.அழகான குடும்ப நிகசழ்ச்சியை எங்களுடன் படங்கள்:உடன் பகிர்ந்து கொண்டது மிகவும் மகிழ்வாக உள்ளது.அடுத்த பதிவிலாவது பேரனின் புகைப்படத்தை காட்டுங்கள் கோமதிம்மா.

  பதிலளிநீக்கு
 25. வாங்க பாலசுப்பிரமணியம் சார், வாழ்க வளமுடன்.

  உங்கள் வரவுக்கும் , வாழ்த்துக்களுக்கும் நன்றி.

  பதிலளிநீக்கு
 26. வாங்க ஸாதிகா, வாழ்கவளமுடன்.
  104 வது பிறந்தநாள், 75 வது திருமணநாள்.

  உங்கள் அழகான பின்னூட்டத்திற்கும், பிராத்தனைக்கும் நன்றி.

  அடுத்தபதிவில் பேரனின் புகைப்படத்தை காட்டிவிடுகிறேன்.

  பதிலளிநீக்கு
 27. அழகான பகிர்வும்மா. புகைப்படங்களும் தங்களின் விவரிப்பும் நாங்களும் உங்களுடன் இருப்பது போல் இருந்தன.தாத்தா பாட்டிக்கு எங்கள் வணக்கங்களும்...

  அடுத்த பதிவுக்காக ஆவலுடன் காத்திருக்கிறேன்.

  பதிலளிநீக்கு
 28. வாங்க ஆதி, வாழ்கவளமுடன்.
  தாத்தா , பாட்டிக்கு வண்க்கங்களை தெரிவித்து விடுகிறேன்.
  அடுத்த பதிவு திங்கள் கிழமை.
  உங்கள் வரவுக்கும், கருத்துக்கும் நன்றி.

  பதிலளிநீக்கு
 29. உங்கள் வலைத் தளத்திற்கு வந்து பார்த்ததில் பெரு மகிழ்ச்சி அடைகிறேன்.
  75வது திருமண நாளை கொண்டாடும் பெரியவர்களிடமிருந்து ஆசிகள் கிடைப்பத்ற்கு கொடுத்து வைத்திருக்க வேன்டும்.உங்களுக்கு கிடைத்திருக்கிறது.
  தீபாவளி கொண்டாட்டம்,மற்றும் பேரனை நீங்கள் மிஸ் பண்ணுவதை அழகாக பதிவிட்டுள்ளீர்கள். பாராட்டுக்கள்.
  உங்களுக்கு நேரம் கிடைக்கும் போது என் தளத்திற்கு வந்து பார்த்தால் மகிழ்வேன்.

  ராஜி

  பதிலளிநீக்கு
 30. வாங்க ராஜி, வாழ்க வளமுடன்.

  உங்கள் முதல் வரவுக்கும், கருத்துக்கும் நன்றி.
  உங்கள் வலைத்தளம் வந்து கருத்தும் பகிர்ந்து கொண்டு விட்டேன்.
  உங்கள் பாராட்டுக்கு நன்றி.

  பதிலளிநீக்கு
 31. கோமதிம்மா,என் வேண்டுகோளை நிறைவேற்றிவைத்தமைக்கு மிக்க நன்றி.பேரன் அழ‌காக மழலைக்கே உரித்தான லட்சணங்க‌ளுடன் இருக்கின்றார்.இறைவன் அவருக்கு நீண்ட ஆரோக்கியமான ஆயுளும் ,சிற‌ப்பான கல்வியும்,பெற்றோரும் உற்றோரும் தாத்தா பாட்டிகளும் மெச்சும் படியான சிறப்பான வாழ்க்கை வாழ என்னுடைய மனமார்ந்த பிரார்த்தனைகள்.

  அழகான படங்களுடன் அறிந்திராத விஷயங்களை பகிர்ந்துள்ளீர்கள்.தொடருங்கள்.

  பதிலளிநீக்கு
 32. அட கோமதிம்மா லைனில்தான் இருக்கீங்களா?வெரி குட்

  பதிலளிநீக்கு
 33. உங்கள் குடும்பம் எப்போதும் இதே போல எப்போதும் நலமோடு இருக்க வேண்டும். நானும் மனதார உங்கள் மாமியார் மாமனாரிடம் ஆசிகள் வங்கிக் கொண்டேன்.அருமை அத்தனை படங்களும்.பார்க்கப் பார்க்க இன்பம் . நன்றி கோமதி. வாழ்க வளமுடன்.

  பதிலளிநீக்கு
 34. இனிய குடும்ப விழாவை பகிர்ந்து கொண்டீர்கள். பார்த்து மகிழ்ந்தேன்.

  ஆசீர்வாதம் பெற்றுக்கொண்டேன்.

  பதிலளிநீக்கு
 35. படங்கள் நிறைவைக் கூட்டியது. நேரில் கலந்து கொண்ட உணர்வு. தங்கள் பகிர்தலுக்கு நன்றி.

  பதிலளிநீக்கு
 36. வாங்க ஜீவி சார், வாழ்கவளமுடன். உங்கள் வரவும் கருத்தும் மனதுக்கு நிறைவு அளித்தது.
  நன்றி சார்.

  பதிலளிநீக்கு