எங்கள் குலதெய்வம்.
எங்கள் குலதெய்வம் திருநெல்வேலி மாவட்டம் ஆழ்வார்குறிச்சிக்கு அருகில் மடவார் விளாகம் எனும் இடத்தில் இருக்கிறது. ஒவ்வொருவரும் குலதெய்வ வழிபாடு அவசியம் செய்ய வேண்டும் என்பார்கள் முன்னோர்கள். வீட்டில் என்ன விசேஷம் நடந்தாலும் முதன் முதலில் குலதெய்வத்திற்கு அந்த விழா சிறப்பாய் தடை இல்லாமல் நடைபெற ஒரு மஞ்சள் துணியில் காசு முடிந்து வைத்து குலதெய்வத்தை வேண்டிக் கொள்வார்கள். குழந்தைகளுக்கு , அல்லது வீட்டில் உள்ளவர்களுக்கு உடம்பு சரியில்லை என்றாலும், உடம்பு சரியாகவேண்டுமென்று காசு முடிந்து வைத்து பிரார்த்தனை செய்து கொள்வார்கள்.
என் மகளின் மகனுக்கு உடல் நிலை சரியில்லை. இப்போது அவன் இறைவன் அருளால் நலம் பெற குலதெய்வத்தை வேண்டி மஞ்சள் துணியில் காசு முடிந்து வைத்துள்ளேன். அவர் அவனை நல்லபடியாக காப்பார்.
சனிக்கிழமை, திங்கள் கிழமை குலதெய்வ வழிபாடு மிக விசேஷம் என்பார்கள். மற்ற நாட்களும் மிக நல்ல நாள் தான்.
வீட்டில் ஏதோ குறையோ, மனக் கஷ்டமோ என்று சிலர் ஜாதகத்தை எடுத்துக் கொண்டு ஜோசியரிடம் போனால் அவரும் முதலில் சொல்வது குலதெய்வ வழிபாடு செய்யுங்கள் எல்லாம் சரியாகி விடும் என்பது தான்..
இப்போது தொலைக்காட்சிகளிலும் எங்கள் குலசாமி, என்று பிரபலங்களின் குலதெய்வ வழிபாட்டை ஒளிபரப்புகிறார்கள். பத்திரிக்கைகளில் முக்கிய பெரிய மனிதர்களின் குலதெய்வம், வீட்டுப் பூஜை அறை முதலியவற்றை காட்டுகிறார்கள்.
ஒவ்வொருவரும் தன் தாய், தந்தையருக்கு அடுத்தபடியாக குலதெய்வ வழிபாட்டை அவசியம் செய்ய வேண்டும்.
மாதா மாதம் குலதெய்வத்திற்கு பணம் எடுத்து வைத்து விடுவேன். அதில் தான் நாங்கள் கோவில் போகும்போது செய்ய வேண்டிய, அபிஷேகம், வஸ்திரம் சாற்றுவது ஆகிய செலவுகளுக்கு பயன்படுத்துவோம்.
வருடா வருடம் பங்குனி உத்திரத்தின் போது அங்கு போகிறவர்கள் இருக்கிறார்கள் . அன்று மிகவும் கூட்டமாய் இருக்கும்.. எங்கள் வீடுகளில் கல்யாணம் முடிந்தவுடன் மாப்பிள்ளை, பெண்ணை அழைத்துக்கொண்டு சென்று பொங்கல் வைத்து வழிபட்டு வருவோம். பின், குழந்தை பிறந்தால் போய் வருவோம்.. அது தான் இப்போது முடிகிறது. அப்படிப் போகும்
போது குடும்பத்தினர் மட்டும் போவதால் நின்று நிதானமாய் வழிபாடு செய்து குடும்பத்தினர் எல்லோரும் கலந்து பேசி , பொங்கல் வைத்து உறவோடு சேர்ந்து உண்டு மகிழ ஒரு வாய்ப்பு.
போன மாதம் 14 ம் தேதி இரவு நாகர்கோவில் விரைவு ரயிலில் திருநெல்வேலிக்குப் பயணம் செய்து .நான் , என் கணவர், என் மகன், மருமகள், பேரன் ஆகியோர் குலதெய்வம் கோவிலுக்குச் சென்று வந்தோம். பொங்கல் வைக்க வேண்டும் என்று ஆசை. ஆனால் எங்கள் குடும்பமே ஒன்றாய்ச் சேர்ந்து தான் பொங்கல் வைத்து இருக்கிறோம். தனியாக வைத்தது
இல்லை. அதனால் குருக்களை பிரசாதம் செய்து கொண்டு வரச்சொல்லி, சின்ன அளவில் அபிஷேகம் செய்து, சாமிக்கு வஸ்திரங்கள் சார்த்தி வழிபட்டு வந்தோம். எல்லோரும் நன்றாக இருக்க வேண்டும் என்று. பிராத்தனை செய்து
கொண்டோம்.
எங்கள் குல்தெய்வத்திற்கு களக்கோடி சாஸ்தா என்று பெயர். அவர் இருக்கும் இடத்தைச் சுற்றிலும் வயல் வெளி, அறுவடையின்போது நெற்கதிர்களை அங்கு தான் போட்டு அடித்து நெல் மூட்டைகளை எடுத்துச் செல்வார்கள். களத்துமேட்டுக்குக் கடைசியில் உள்ளதால் களக்கோடி சாஸ்தா என்ற பெயர்.
.
இந்த படம் மட்டும் ஆகஸ்டு மாதம் (போன முறை )எடுத்தது
பக்கத்தில் ஏரி, வயல்கள், கோவிலின் அருகே ஆலமரங்கள் என்று மிகவும் ரம்மியமாக இருக்கும்.
வயல்வெளி |
ஏரியில் அந்த அந்த பருவத்திற்கு ஏற்ற மாதிரி பறவைகள் வரும்.. கறுப்பு ஹெரான், பெரியவாய் பெலிக்கன் போன்ற அபூர்வ பறவைகள் அங்கு பார்த்தோம்.
பெலிக்கன் |
ஏரியில் முன்பு குளித்து விட்டு ஈர உடையுடன் பொங்கல் வைப்பார்கள். ஏரியில் மீன்கள் நிறைய இருக்கும். பறவைகளுக்கு வேண்டிய உணவுகள் கிடைப்பதால் ஏரியைச் சுற்றி நிறைய பறவைகள் வரும் பார்ப்பதற்கு ரம்மியமாய் மனது மகிழ்ச்சி அளிக்கக் கூடியதாய் இருக்கும்.
””கொக்கு பறக்கும் அந்த குளக்கரையில் -வண்ணக்
குருவி பறக்கும் அந்த வனத்துறையில்
கோழி பறக்கும் தன் குஞ்சை நினைந்து
மதுரை மீனாட்சி கொடி பறக்கும் உனை நினைந்து -
அம்மா உனை நினைந்து.;;
என்ற பாடல் நினைவுக்கு வந்து சென்றது .
முன்பெல்லாம் குடும்பத்தினர் எல்லோரும் சேர்ந்து செல்லும்போது , என் கணவரின் அத்தை வீட்டிலிருந்து துவையல் அரைத்து, அப்பளம் பொரித்து, எல்லாக் காய்களும் போட்டு, சாம்பார் வைத்து எடுத்துச் செல்வோம். , அங்கு சுவாமிக்கு வெண்பொங்கல். அம்மனுக்கு அரிசியும், பாசிப்பருப்பும் சேர்த்து பாயசம் வைப்போம். பனை ஓலை, சிறு குச்சிகள் வைத்து. கல் கூட்டி. வெண்கலப் பானையில் பொங்கல் வைப்போம். சாமி கும்பிட்ட பின் அனைவரும் குதூகலமாய் அங்கேயே இலை போட்டு உண்போம்.. வயலில் வேலை பார்ப்பவர்கள் , ஆடு மாடு மேய்ப்பவர்கள் எல்லாம் கோவில்
மணி அடித்தால் வந்து விடுவார்கள். அவர்களுக்கும் கொடுத்து உண்டு வருவோம்.
பங்குனி உத்திரம் அன்று கூட்டம் நிறைய இருக்கும். கூட்டம் இல்லாத நேரம் நாங்கள் போனதால் குருக்கள் வரும் வரை, பேரன் கோவில் வெளிப்புறம் நன்கு விளையாடினான். ஆலமரத்தின் இலைகளைக் கைகளாலும், குச்சிகளாலும் தள்ளித் தள்ளி விளையாடினான். கோவிலைச் சுற்றி சுற்றி வந்து சந்தோஷமாய் விளையாடினான். ஆடுகள் மேய்வதையும் மேய்ப்பவர்களையும் பார்த்து மகிழ்ந்தான்.
ஸாதிகா என் பேரனின் படம் கேட்டு இருந்தார்கள் . அவர்கள் விருப்பத்திற்காக அவன் படம் பகிர்ந்து கொண்டு இருக்கிறேன். அவனை வாழ்த்துங்கள். மாதாஜி ஸாதிகா!..
காலையில் 10 .30 மணியிலிருந்து காத்துக் கிடந்தோம் குருக்களின் வருகைக்காக. ஆடு , மேய்ப்பவர்கள், மற்றும் வயலில் வேலை பார்ப்பவர்கள் எல்லாம் ”போன் செய்து விட்டீர்களா குருக்களுக்கு ? அவர் 10 கோயிலுக்கு மணி அடிக்க வேண்டும், மெதுவாய்த் தான் வருவார் ”. என்றார்கள். மதியம் 12 மணிக்குத் தான் வந்தார்.
பின் அபிஷேகம், அர்ச்சனை செய்து குலதெய்வத்தை வணங்கினோம். வழிபாடு முடிய பிற்பகல் இரண்டு மணி பக்கம் ஆகி விட்டது. அங்கு உள்ளவர்களுக்கு பிரசாதங்களை கொடுத்து விட்டு நாங்களும் சாப்பிட்டு குருக்களுக்கு நன்றி சொல்லி, குலதெய்வத்தைப் பிரிய மனம் இல்லாமல் பிரிந்து வந்தோம்.
முருகன் கோயில் |
அதன் பின் குலதெய்வம் கோவிலுக்கு அருகேயே ஒரு மலைக் கோவில் இருக்கிறது.. எங்கள் கோவிலில் இருந்து பார்த்தால் தெரியும். ஆனால் சரியான பாதை இல்லை, வரப்பில் நடந்து தான் போக வேண்டும். குழந்தையை தூக்கிக் கொண்டு வரமுடியாது என்பதால் என் மருமகள் வரவில்லை. மகனும், நானும், என் கணவரும் போனோம். பல வருடங்களாக
அந்த மலைக்கோயிலுக்குப் போக வேண்டும் என்று நினைத்து அது இந்தமுறைதான் கைகூடியது.
என் கணவர்,’ நீ வரப்பில் நடப்பாயா ?செருப்பில்லாமல் நடக்க வேண்டும்’ அது இது என்று சொன்னார்கள். எனக்கு வயற்காட்டில் வரப்பில் நடக்க ஆசை. அருமையான அனுபவம்.
சில இடங்களில் வரப்பு காய்ந்து இருக்கும் சில இடங்களில் அப்போது தான் மண் அணைத்து புதிதாக வரப்பு கட்டி இருப்பார்கள் அதில் மாட்டின் குளம்பு அழுந்தி இருப்பதை வைத்து அதன் ஆழத்தை கவனித்துக் கொள்ளலாம். அதை லாவகமாய் கடந்து போனோம். அந்த உயரமான வரப்பு சில இடங்களில் குறுகியும் சில இடங்களில் அகலமாயும் இருந்தது.. பச்சைப் பசேல் என்று மஞ்சள் செடிகள், மற்றும் மரவள்ளி கிழங்கு என்று நினைக்கிறேன், பயிர் செய்து இருந்தார்கள்.
ஒரு கிலோ மீட்டர் வரப்பில் நடந்து போனால் மலைக்கோவில். அதன்பின் பாதை இல்லை, மலைப் பாறை வழியாக ஏறிச் சென்று அந்தச்சிறுகோயிலை அடைந்தோம். கோயிலின் சிறிய கதவுகள் மூடியிருந்தன. பூட்டிய கதவின் சிறு துவாரத்தின் வழியாக முருகனை வழி பட்டோம். அங்குள்ள முருகனுக்கு சரவணன் என்று பெயர்.. அருகில் ஒரு பாறையில் சுனை இருந்தது.
வள்ளி சுனை |
அங்கிருந்து பார்த்தால் மலையைச்சுற்றி கண்ணுக்குக் குளுமையாய் தென்னைந் தோப்பும், வயல்களும் அழகாய் தெரியும். ’கடவுளே இந்த இடம் இயற்கை மாறாமல் இப்படியே இருக்க வேண்டும்’ என்று வேண்டிக் கொண்டேன்.
வெகு நாள் ஆசை என் மகனால் நிறைவேறியது. அவன்தானே அங்கு போக வேண்டும் என்றான்... என் மகனுக்கு நன்றி.
அருமையான பயணம் அழகான படங்கள்.
பதிலளிநீக்குமிகவும் ரசித்தேன்.
அழகான பயணத்தை மிஸ் செய்திருக்கேன்..
பதிலளிநீக்குநல்ல அனுபவம். எங்க குலதெய்வ கோயிலுக்கு போகணும் போல இருக்கு.
பதிலளிநீக்குஇது எங்கெ இருக்கு? ஆழ்வார்க்குறிச்சியில இருந்து இந்த இடத்துக்கு எப்படி போகணும்?
பேரனுக்கு வாழ்த்துகள்...
பதிலளிநீக்குஅருமையான குலதெய்வ கோவில் பயணம் ..பாராட்டுக்கள்..
அழகாகப் பகிர்ந்துள்ளீர்கள். பேரனுக்கு வாழ்த்துகள்.
பதிலளிநீக்கு/ இயற்கை மாறாமல் இப்படியே இருக்க வேண்டும்’ என்று வேண்டிக் கொண்டேன்./
ஆம் இருக்கும் வளமாவது காக்கப்பட வேண்டும்.
நல்ல பதிவு.
முதலில் உஙக்ள் பேரனுக்கு வாழ்த்துக்கள்.
பதிலளிநீக்குகுலதெய்வ வழிபாடு பற்றிய விளக்கம் ,
மற்றும் போட்டோக்கள் மிக அருமையாக இருந்தது.ரசித்தேன்.
மலைப் பயணம்(trekking)) பற்றி சுவரஸ்யம் குறையாமல் எழுதியிருக்கிறீர்கள்.
பாராட்டுக்கள்.
ராஜி
வாங்க துளசி, வாழ்க வளமுடன். உங்கள் முதல் வரவுக்கும் கருத்துக்கும் நன்றி.
பதிலளிநீக்குகோமதிம்மா,என் வேண்டுகோளை நிறைவேற்றிவைத்தமைக்கு மிக்க நன்றி.பேரன் அழகாக மழலைக்கே உரித்தான லட்சணங்களுடன் இருக்கின்றார்.இறைவன் அவருக்கு நீண்ட ஆரோக்கியமான ஆயுளும் ,சிறப்பான கல்வியும்,பெற்றோரும் உற்றோரும் தாத்தா பாட்டிகளும் மெச்சும் படியான சிறப்பான வாழ்க்கை வாழ என்னுடைய மனமார்ந்த பிரார்த்தனைகள்.
பதிலளிநீக்குஅழகான படங்களுடன் அறிந்திராத விஷயங்களை பகிர்ந்துள்ளீர்கள்.தொடருங்கள்.
பதிலளிநீக்குநம்பிக்கையே பலரை வழி நடத்திச் செல்கிறது. இந்த மாதிரியான வழிபாடுகளில் உண்டாகும் அனுகூலங்களை உங்கள் பதிவிலிருந்து அறிகிறேன். வாழ்த்துக்கள்.
குலதெய்வ கோயில் + பயண வர்ணனைகள் எல்லாமே அழகோ
பதிலளிநீக்குஅழகு.
தங்கள் பேரக்குழந்தை அதைவிட அழகு.
பாராட்டுக்கள். வாழ்த்துகள்.
பகிர்வுக்கு நன்றிகள்.
அழகான பயணத்தை மிஸ் செய்திருக்கேன்..
பதிலளிநீக்குவா கயல்விழி, வாழ்க வளமுடன்.
உண்மைதான் நீயும் வந்து இருந்தால் மிக நன்றாக இருந்து இருக்கும்.
உங்கள் பயணத்தில் எங்களையும்
பதிலளிநீக்குஇணைத்தமைக்கு நன்றி
அருமையான புகைப்படங்கள்
வாங்க , வாழ்க வளமுடன். உங்கள் முதல்வரவுக்கும். கருத்துக்கும் நன்றி.
பதிலளிநீக்கு//இது எங்கெ இருக்கு? ஆழ்வார்க்குறிச்சியில இருந்து இந்த இடத்துக்கு எப்படி போகணும்? //
உங்கள் கேள்விக்கு பதில்:
ஆழ்வார்க்குறிச்சிக்கு கிழக்கே இரண்டு கிலோமீட்டரில் இருக்கிறது. பாப்பான் குளத்திற்கு மேற்கே 1 கிலோமீட்டர். அம்பாசமுத்திரத்திலிருந்து 9 கிலோ மீட்டர்.
எங்கள் குலதெய்வத்தின் இருப்பிடம் மடவார்விளகம்.
உங்களுக்கு என் பதிவைப் படித்து உங்கள் குலதெய்வம் கோவில் போக ஆசை வந்தது மிகுந்த மகிழ்ச்சி.
வாங்க இராஜராஜேஸ்வரி, வாழ்கவளமுடன். உங்கள் வாழ்த்துக்கும், கருத்துக்கும் நன்றி.
பதிலளிநீக்குவாங்க ராமலக்ஷ்மி, உங்கள் வாழ்த்துக்கு நன்றி.
பதிலளிநீக்குஊருக்கு போகும் போதெல்லாம் நான் வேண்டிக் கொள்வது இதை தான். இயற்கை வளம் காக்கப்பட வேண்டும் என்றுதான்.
வாங்க ராஜலக்ஷ்மி பரமசிவம், வாழ்கவளமுடன். உங்கள் வரவுக்கும், அருமையான பின்னூட்டத்திற்கும் நன்றி.
பதிலளிநீக்குவாங்க பாகசுப்பிரமணியம், வாழ்க வளமுடன்.
பதிலளிநீக்குநீங்கள் சொன்னது போல் நம்பிக்கை தான் வழி நடத்தி செல்கிறது.
உங்கள் வரவுக்கும், கருத்துக்கும் நன்றி.
வாங்க கோபாலகிருஷ்ணன் சார், வாழ்க வளமுடன். உங்கள் பாராட்டுக்கும் வாழ்த்துக்கும் நன்றி.
பதிலளிநீக்குமறக்க கூடாத மறக்கமுடியாத இடமும் அருமை.உங்களின் பேரனுக்கு வாழ்த்துக்கள்
பதிலளிநீக்குவாங்க ஸாதிகா, வாழ்கவளமுடன். உங்கள் மனமார்ந்த பிரார்த்தனைகளுக்கு நன்று ஸாதிகா.
பதிலளிநீக்குவாங்க கவியாழி கண்ணதாசன், வாழ்க வளமுடன். உங்கள் முதல் வரவுக்கும், கருத்துக்கும் வாழ்த்துக்கும் நன்றி.
பதிலளிநீக்குவாங்க முரளிதரன், வாழ்க வளமுடன்.
பதிலளிநீக்குஉங்கள் வரவுக்கும், கருத்துக்கும் நன்றி.
படங்களுடன் பதிவு நாங்களும்
பதிலளிநீக்குஉங்களுடன் பயணித்த திருப்தியை அளித்தது
மனம் கொள்ளை கொண்ட படங்கள்
பகிர்வுக்கு வாழ்த்துக்கள்
அருமையான படங்களும் பயணமும். எங்களையும் அழைத்துச் சென்றது உங்கள் பகிர்வு....
பதிலளிநீக்குவாங்க ரமணி சார், வாழக வளமுடன்.
பதிலளிநீக்குஉங்கள் கருத்துக்கும், வாழ்த்துக்களுக்கும் நன்றி.
வாங்க வெங்கட், வாழ்க வளமுடன்.
பதிலளிநீக்குஉங்கள் வரவுக்கும், கருத்துக்கும் நன்றி.
நா(ங்கள்)ன் எங்கள் குலதெய்வம் கோவிலுக்குப் போய் வருடங்களாகின்றன. போக வேண்டும். படங்கள் ரம்யமாய் இருக்கின்றன. உங்கள் பேரனுக்கு எங்கள் வாழ்த்துகள்.
பதிலளிநீக்குவாங்க ஸ்ரீராம், வாழ்க வளமுடன்.
பதிலளிநீக்குஉங்கள் குலதெய்வம் நினைவுக்கு வந்து விட்டதா போய் வாருன்ங்கள்.
படங்களை ரசித்தமைக்கும்,
பேரனுக்கு வாழ்த்துக்கள் சொன்னதற்கு நன்றி.
படங்களும் விவரங்களும் பயண ஆசையைத் தூண்டுகின்றன.
பதிலளிநீக்குகளக்கோடி சாஸ்தா என்றால் என்ன ஸ்வாமி? முருகனா, சிவனா, விஷ்ணுவா?
இந்த மாதிரி கிராமக் காட்சிகள் இன்னும் காணக் கிடைப்பது ஒரு வகையில் வரம்.
வாங்க அப்பாதுரை சார், வாழ்கவளமுடன்.
பதிலளிநீக்குகளக்கோடி சாஸ்தா என்றால் என்ன ஸ்வாமி? முருகனா, சிவனா, விஷ்ணுவா?//
அய்யானார் தான் சாஸ்தா. தன் மனைவிகள் பூர்ணகலா, புஷ்கலாவுடன் இருக்கிறார்.
நிறைய வயல் இருக்கும் போது பயிர்களை சேர்த்து ஒரு இடத்தில் சேகரித்து அதை அடித்து தூத்தி நெற்மணீகளை பிரித்து எடுக்கும் இடம் களம் அந்த இடம் கோடியில்(கடைசியில்) இருப்பதால் களக்கோடி என்று பெயர் அந்த இடத்தில் உள்ள சாஸ்தாவை குறிப்பிட களக்கோடி சாஸ்தா.
கிராம தேவதை அவர்.
இந்த மாதிரி கிராமக் காட்சிகள் இன்னும் காணக் கிடைப்பது ஒரு வகையில் வரம்.//
ஆம் , நீங்கள் சொல்வது உண்மை. இறைவனின் கொடை தான் அந்த இடம் .
மேலும் ஒரு படம் பகிர போகிறேன் முடிந்தால் மறுபடியும் வந்து பாருங்கள்.
உங்கள் வருகைக்கு நன்றி.
அப்பாதுரை அவர்களுக்கு கிராமமக்கள் காவல் தெய்வம் என்பார்கள் அய்யனாரை.
பதிலளிநீக்குஎங்கள் குலதெய்வமும் சாஸ்தா/ஐயனார் தான். கும்பகோணம் திருவாரூர் அருகே உள்ளது கோவில்!
பதிலளிநீக்குவாங்க ஸ்ரீராம், உங்கள் மறு வருகைக்கு நன்றி.
பதிலளிநீக்குஉங்கள் குலதெய்வமும் சாஸ்தா என்னும் போது மகிழ்ச்சி. மேலும் இரண்டு படங்கள் பகிர்ந்து இருக்கிறேன்
உங்களுக்கு நேரம் இருந்தால் பாருங்கள்.
இரண்டு படங்களும் பார்த்து விட்டேன். சூழல் ரொம்ப ரம்மியம்.
பதிலளிநீக்குஅருமையான பயணம்..
பதிலளிநீக்கு//மகளின் மகனுக்கு உடல் நிலை சரியில்லை//
பதிலளிநீக்குமுத்தக்காவின் மகனுக்கா? தற்போது நலமாகியிருப்பார் என நம்புகிறேன்.
குலதெய்வங்களின் முக்கியத்துவத்தைப் படங்களில், கதைகளில் படித்துத் தெரிந்துகொண்டதுதான்.
அழகான இயற்கைச் சூழல். என் சிறுவயது ஞாபகங்களைக் கிளறிவிட்டது. அறுவடை சம்யத்தில் களத்துமேடே கதியென்று இருப்போம், நாங்கள் சின்னப் பிள்ளைகள். வைக்கப்போரில் குதித்து விளையாடி, மேலேல்லாம் அரிக்கத்தொடங்கியதும், அங்கேயுள்ள (வாய்க்கால்) ஆற்றில் குதித்துக் குளித்து ஆட்டம் போட்டு...
பெரியாறான தாமிரபரணிக்கு விடிகாலை குளிக்கச் செல்லும்போது வரப்புவழிதான் போகணும். ஒற்றையடிப் பாதையான அதில் நடக்க தனித்திறமை வேண்டும். எதிரே யாரும் வந்தால், இறங்கி வழிவிட வேண்டும்.
பேரனோடு, நீங்களும் சேர்ந்து இந்தப் பயணத்தில் மகிழ்ந்திருப்பீர்கள்.
வாங்க ஹுஸைனம்மா, வாழ்கவளமுடன்.
பதிலளிநீக்குமுத்தக்காவின் மகனுக்கு தான். இறைவன் அருளால் இப்போது நலம்.
உங்கள் அன்பான விசாரிப்புக்கு நன்றி.
ஒற்றையடிப் பாதையான அதில் நடக்க தனித்திறமை வேண்டும். எதிரே யாரும் வந்தால், இறங்கி வழிவிட வேண்டும்.//
திறமை வேண்டும் என்பது நடந்து பார்த்தவுடன் புரிந்து கொண்டேன் ஹுஸைனம்மா.
உங்கள் மலரும் நினைவுகள் அருமை. புதிதாக இரண்டு படம் சேர்த்து இருக்கிறேன் பார்த்தீர்களா?
நாங்கள் இரண்டு பேர் மட்டும் பயணம் செய்வதை விட குழந்தைகள், பேரனுடன் பயணம் செய்தது மனதுக்கு மகிழ்ச்சி. உடலுக்கு புத்துணர்வு.
இயற்கை அழகும் மழலையும் இணைந்த அருமையான பதிவு. பேரக்குழந்தைக்கு வாழ்த்துக்கள். நன்றிஅம்மா.
பதிலளிநீக்குஅன்பு கோமதி,கயல் மகனுக்கு உடல் நலம் ஆனது நிம்மதி.நீங்கள் கோயிலுக்குப் போக ஒரு கரணம் வைத்துவிட்டார் களக்காட்டு சாஸ்தா. இயற்கை அழகு கொஞ்சுகிறது படங்களில். உங்கள் கட்டுரை விளக்கமும் பாசப் பிணைப்போடு மிளிர்கிறது,. பேரனுக்கும் வாழ்க வளமுடன் ஆசிகளும் சொல்லிக் கொள்ளுகிறேன்.பகிர்வுக்கு மிக நன்றி.
பதிலளிநீக்குவாங்க இந்திரா சந்தானம், வாழ்கவளமுடன்.
பதிலளிநீக்குஉங்கள் வரவுக்கும், கருத்துக்கும் , பேரனை வாழ்த்தியமைக்கும் நன்றி இந்திரா.
இயற்கை விரிந்து கிடக்கின்றது.
பதிலளிநீக்குகுலசாமியும், மலைக்கோயில் வயல்கள் என மனதுக்கு இனிய பயணம்.
வாங்க வல்லி அக்கா, வாழ்க வளமுடன்.
பதிலளிநீக்குகயல் மகன் இப்போது நலம்.
மறுபடியும் நன்றி சொல்ல போகவேண்டும்.
உங்கள் வாழ்த்துக்கள் பேரன்களுக்கு நலம் தரும்.
உங்கள் கருத்துக்கும் வரவுக்கும் நன்றி அக்கா.
வாங்க மாதேவி, வாழ்கவளமுடன்.
பதிலளிநீக்குநீங்கள் சொல்வது போல் இயற்கை விரிந்து கிடக்கிறது.
கண்கள் விரிய மனம் நிறைய அள்ளிக் கொண்டு வந்தேன்.
உங்கள் வரவுக்கும், கருத்துக்கும் நன்றி மாதேவி.
குல தெய்வ வழிபாடு பற்றிய அருமையான பதிவு படங்களுடன்.
பதிலளிநீக்குமிக்க மகிழ்ச்சி
தங்களின் பதிவொன்றை வலைச்சரத்தில் பகிர்ந்துள்ளேன்! வாருங்கள்!http://blogintamil.blogspot.in/2012/12/blog-post_9668.html நன்றி!
பதிலளிநீக்குகுல தெய்வ கோவில் படங்களும் பகிர்வும் சிறப்பாக இருக்கிறது.. பாராட்டுக்கள்..
பதிலளிநீக்குவாங்க முரளிதரன், வாழ்கவளமுடன்.
பதிலளிநீக்குஉங்கள் வரவுக்கும் கருத்துக்கும் நன்றி.
வாங்க சேஷாத்திரி, வாழ்க வளமுடன். நீங்கள் வலைச்சரத்தில் என் மார்கழியின் சிறப்பை பகிர்ந்து கொண்டதற்கு நன்றி.
பதிலளிநீக்குவாங்க இராராஜேஸ்வரி, வாழ்கவளமுடன் உங்கள் மறுவரவுக்கும் பாராட்டுக்கும் நன்றி.
பதிலளிநீக்குதங்களின் பனிமலைப் பயணம் படிக்க விருவிருப்பாக இருந்தது. கேதார்நாத் பயணம், வாசித்தோரும் கூடப் பயணம் செய்த அனுபவம் தந்தது. இந்த தங்கள் குலதெய்வம் கோயில் வழிபாட்டுப் பயணமும் கிராமசூழல் படங்களோடு சிறப்பாக இருந்தது. விவரித்துச் சொல்லும் அழகு அத்தனை அனுபவங்களோடு கலந்து குழைந்து இன்னும் அழகு சேர்ப்பதை அறிந்து கொள்ளவும் முடிந்தது.
பதிலளிநீக்குமிக்க நன்றி, கோமதிம்மா.
வாங்க ஜீவி சார், வாழ்கவளமுடன்.
பதிலளிநீக்குஉங்கள் வரவும், மனம் நிறைந்த பாராட்டும் மனதுக்கு மகிழ்ச்சி அளிப்பதாய் இருக்கிறது.
மேலும் எழுத உற்சாகம் அளிக்கிறது.
நன்றி சார்.