புதன், 21 டிசம்பர், 2011

திருக்கயிலை யாத்திரை - பகுதி- 3

காவாய் கனகத் திரளே போற்றி!
கயிலை மலையானே போற்றி!


4. 09. 2011 அன்று காலை 7 மணிக்கு காத்மாண்டு விடுதியிலிருந்து புறப்பட்டோம். சற்று தூரம் நடந்து சென்று சுற்றுலாப் பேருந்தில் ஏறினோம்.

நாங்கள் எடுத்துச்செல்லும் பெரிய சுற்றுலாப் பைகளுக்கு ,யாருடையது என்பதைத் தெரிந்து கொள்வதற்காக அவற்றுக்கு எண்ணிடப் பெற்றன.அவற்றை நடத்துநர் குழுவினரே தங்கள் பொறுப்பில் எடுத்துவந்து தங்கும் இடம் வந்தவுடன் எங்களிடம் ஒப்படைப்பார்கள்.


பின்னர் பாணிபா(banepa)என்கிற நகரம், சுகூட்(sukute) என்கிற கிராமம் ஆகிய ஊர்களின் வழியாகச் சென்றோம். மலைகளும்,ஆறுகளும்,பள்ளத்தாக்குகளுமாக இயற்கை, அற்புதம் புரிந்திருந்தது. ஆற்றோரங்களில் சில இடங்களில் வாழை மரங்கள் செழுமையாக வளர்ந்திருந்தன. படிப்படியான தோற்றத்துடன் வயல்கள் இருந்தன.

வழிகளில் ஆங்காங்கே இராணுவத்தினரின் சோதனைகள் இருந்தன.

பார்க்பிசே (bhargbise town), சிந்துபால் சவுக் ஆகிய இடங்களைக் கடந்தோம். பின்னர் நேபாள-சீன எல்லையில் அமைந்துள்ள கோத்தாரி என்னும் இடத்தை அடைந்தோம். காத்மாண்டுவில் இருந்து சுமார் 115 கி.மீ தூரத்தில் உள்ள இவ்வூருக்கு காலை 10 மணிக்கு சுமாருக்கு வந்து சேர்ந்தோம். அங்கு ஒரு உணவு விடுதியில் உணவு உண்டோம். அந்த ஓட்டலில் நம் ஊர்ப் பணத்தைக் கொடுத்து சீனப்பணம் பெற்றுக்கொள்ளலாம். அந்த ஒட்டலின் பின்புறம் ஆற்று நீர் சல சல என்று அருவி மாதிரி ஓடுகிறது.
பார்க்கக் கொள்ளை அழகு. அங்கு மானஸரோவர் கயிலை படங்களை விற்கிறார்கள்.

அந்த ஓட்டலில் இருந்து ’நட்பு பாலம்’ வரை நடந்து போக வேண்டும். நம் முதுகில் மாட்டி இருக்கும் பையைத் தூக்கிக்கொள்ள திபெத்திய சிறு பெண்கள், பெரிய ஆட்கள் , சிறு பையன்கள் போட்டி போட்டுக் கொண்டு வருகிறார்கள். ஒருவர் சுமையை தூக்கி வர 50 ரூபாய் வாங்கிக் கொள்கிறார்கள். அங்கு சுமார் ஒரு மணி நேரத்திற்கு நல்ல மழை இருந்தது. சுற்றுலாப்பைகளை உதவியாளர்கள் எடுத்து வரும்போது அவை நனைந்துவிட்டன.

பெரிய ஆறு ஒன்று இரண்டு நாட்டுக்கும் எல்லையாக அமைந்துள்ளது. அதன் மீது அமைந்துள்ள பாலம் “நட்புப் பாலம்”(friendship bridge)என்று அழைக்கப்படுகிறது. அந்தப் பாலத்தின் பாதிப் பகுதி நேபாளத்திற்கும் பாதிப் பகுதி சீனாவிற்கும் உரிமையானது. சீனப் பகுதிக்குள் நுழைய இமிகிரேஷன் ஆவணங்கள் சரிபார்க்கப்படுகின்றன. சுங்க இலாகாவின் சோதனை நடக்கிறது.அந்தப் பாலத்தின் நுழைவாயிலில் இரண்டு புறமும் துவார பாலகரைப் போல் சீனச் சிப்பாய்கள் ஆடாமல் அசையாமல் நிற்கிறார்கள். சுற்றுலாப் பயணிகளைக் காட்டிலும் நேபாளத்திலிருந்து சீனாவுக்குத் தினமும் சென்றுவரும் கூலித்தொழிலாளர்கள் எண்ணிக்கை அதிகமாக உள்ளது. அதிக சுமைகளைத் தலையிலும் முதுகிலுமாகத் தூக்கிச் செல்லும் ஆண்களையும்,பெண்களையும் பார்க்க வேதனையாக உள்ளது. பெண்கள் பொருட்களோடு தங்கள் கைக்குழந்தைகளையும் தங்கள் முதுகுத் தொட்டிலில் தூக்கிச் செல்கின்றனர்.

சோதனைகளைக் கடந்து சென்ற பின்னர் 3 மணி அளவில் சீனப் பகுதியில் எங்களுக்கு அமர்த்தப்பட்டிருந்த பேருந்தில் ஏறினோம். மலைப்பகுதிகளில் வளைந்து வளைந்து சென்றது பஸ்.

மலையுச்சியிலிருந்து மிக நீண்டு விழும் அருவிகள் பல. பள்ளத்தாக்குகள், அடுக்கடுக்காய் அமைந்த குடியிருப்புப் பகுதிகள், நிலச்சரிவுத் தடங்கள், வழியாக எங்கள் பேருந்து சென்றது. குளிர் காரணமாய் ஜன்னல்கள் அடைத்து பஸ்ஸில் ஹீட்டர் போட்டு இருந்தார்கள். ஜன்னல் வழியாகத்தான் போட்டோ எடுக்க முடிந்தது. நிறைய படம் கயிலையில் எடுக்க வேண்டும் (கேமிரா பேட்டரி சார்ஜ் செய்யும் முறை) என்று அழகிய அருவிகளை எடுக்க வில்லை வரும் போது எடுக்கலாம் என்று விட்டு விட்டோம். திரு.ஏ.பி. நாகராஜன் அவர்கள் எடுக்கும் பக்தி படத்தில் காட்டும் காட்சிகள் போல் இருந்தன பலஇடங்கள்.

பிற்பகல் 3.35 மணிக்கு நியாலம் என்னும் ஊரை அடைந்து she sha bang ma hotel என்ற விடுதியில் தங்கினோம். அங்கு சென்ற உடனேயே கடுங்குளிரை உணரத்தொடங்கினோம்.

இறங்கினவுடனேயே ஸ்வெட்டர் மட்டுமின்றி ஜெர்க்கினையும் கட்டாயம் போடவேண்டியிருந்தது. குரங்குக் குல்லா, கையுறையையும் அணிய வேண்டியிருந்தது.அந்த வளாகத்திலேயே ஒரு விற்பனை நிலையம் இருந்தது. அங்கு கம்பளி ஆடைகள் சூடாக விற்பனையானது. ஐ.எஸ்.டி வசதியும் அங்கே இருந்தது. பயன்படுத்திக்கொண்டோம். அங்கு தங்கும் அறைகள் வசதியாகவே உள்ளன.
படுக்கை வசதி, மின்விளக்கு, கழிவறை வசதிகள் நன்றாகவே இருந்தன. இரவு கூட்டுவழிபாடு செய்தோம்.

உணவு தயார் செய்ய சமையலாளர் குழு எங்களுடன் வந்தது. ஒரு தனி லாரியில் காய்கறிகள், மளிகை சாமான்கள்,காஸ் அடுப்புகள் முதலியவற்றை எடுத்து வந்தனர். பஃபே முறையில் உணவுகள் வழங்கினர்.
05.09.11 அன்று காலை எழுந்தோம்.கடுங்குளிரையும் உணர்ந்தோம்.குளிக்க வெந்நீர் வசதியில்லை, குளியல் அறையும் கிடையாது. முகம் கழுவ, பல்தேய்க்க வெந்நீர் தருவார்கள். காலை, காப்பி, டீ, ஹார்லிஸ் அல்லது பூஸ்ட் தருவார்கள் நமக்கு வேண்டியதை வாங்கி பருகலாம். பூரி,உருளைக்கிழங்கு, சேமியா பாயசம், ஓட்ஸ் கஞ்சி, பப்பாளி ஸ்லைஸ் முதலியவற்றைக் காலை உணவாகக் கொண்டோம்.

சிலர் அருகிலிருந்த பாதையில் மலையேற்றப் பயிற்சி மேற்கொண்டனர். கடுங்குளிருக்கு எங்கள் உடம்பை பழக்கப்படுத்திக்கொள்வதற்காக அன்று நியாலத்திலேயே தங்கினோம்.


முந்திய நாளில் நனைந்திருந்த எங்கள் உடைகளையும் உடைமைகளையும் வெயிலில் காயவைத்து எடுத்துவைத்துக் கொண்டோம். மதிய உணவு, அருமையாக சமைத்து இருந்தார்கள். இரவு உணவுக்கு பின் நாங்கள் தங்கி இருந்த அறையில் தான் எல்லோரும் அமர்ந்து கூட்டு வழி பாடு செய்தோம். ’தினமும் போற்றித் திருத்தாண்டகம் படிக்க வேண்டும், அப்போது தான் திருக்கயிலை தரிசனம் நன்கு கிடைக்கும்; என்று மனோகர் சொல்லிக் கொண்டு இருப்பார். எங்கள் குழுவில் உள்ள வய்து முதிர்ந்தவர்(வயதில் பெரியவர், உற்சாகம் சுறு சுறுப்பில் இளைஞர்) மூன்றாவது முறையாக கயிலை வந்த இளமுருகுசார் சொல்லச் சொல்ல நாங்கள் சொல்வோம்.அவர் சைவ சித்தாந்தம் படித்தவர்.
06.09.11.அன்று இந்திய நேரப்படி காலை நியாலத்திலிருந்து பேருந்தில் புறப்பட்டோம். சாகா என்னும் ஊரை நோக்கிப் பயணமானோம்
. வழியில் இரண்டு பக்கங்களிலும் மலைப்பகுதிகள்,
சமதளங்கள், பரந்த வெளிகள்; மரங்கள் கிடையாது. புல்,பூண்டுகள் மட்டுமே. பனிமூடிய மலைகள் ஆங்காங்கே தெரிந்தன.நீண்டும் வளைந்தும் உள்ள சாலைகள் 10,15 மைல்களுக்கு மேலாகக் கண்களுக்குத்தெரிந்தன. தார்ச்சாலைகள் செம்மையாக உள்ளன.குறிப்பிடும்படியாக எங்கும் ஊர்களே இல்லை. 50 மைல்களுக்கு ஒருமுறை 10,15 வீடுகள் காணப்படும். அவையும் வசதிகளற்றவை. சுமார் 100 கி.மீ அளவில்சென்றால் மிகச்சிறு விடுதிகள் உள்ளன.
சாம்பல் நிற மண்பூமியே எங்கும். விலங்குகள், பறவைகளைக் காண்பது மிக மிகஅரிது. மனிதர்கள் வாழிடங்களில் மட்டும், நாய்கள், காகங்கள் முதலியவற்றைக் காணமுடிகிறது.

சாகா ,பிரம்மபுத்ரா நதிக்கரையில் உள்ளது. குளிர்ந்த தெளிந்த நீரோட்டத்தோடு விரைந்து செல்கிறது,பிரம்மபுத்திரா.

பிற்பகல் 2 மணி அளவில் சாகா நகரை அடைந்தோம்.அங்கு jilin tour hotel என்னும் விடுதியில் தங்கினோம். விடுதி நல்ல வசதியாகவே இருந்தது.
டி.வி, கெய்சர் வசதிகள் இருந்தன. டி.வியில் 50 மேற்பட்ட சேனல்கள் தெரிந்தன. ஆனால் அனைத்தும் சீன மொழி சேனல்களாகவே இருந்தன. ஆங்கில சேனல் கூட இல்லை.
விடுதியுடன் சூப்பர் மார்க்கெட் இணைந்துள்ளது. வளாகத்தின் அருகில்சிட்டுக்குருவிகளின் ஒலி கேட்டவண்ணம் இருந்தது.

மறுநாள் பயணம் குறித்து அடுத்த பகுதியில் காணலாம்.

27 கருத்துகள்:

 1. நிறைய விவரங்களுடன், படங்கள் அற்புதம். அந்தந்த செய்தி வரும் பொழுது அதற்கான புகைப்படமும் வருவது உடனே உடனே அவற்றைப் பார்ப்பது போல இருக்கிறது.

  குறிப்புகள் எடுத்துக் கொண்டீர்களா?.. நினைவில் பாதி, குறிப்புகள் பாதி என்றா?.. பயணக் கட்டுரை இலக்கியம் எழுத உங்களுக்கு அழகாக வருகிறது.

  மிக்க நன்றி.

  பதிலளிநீக்கு
 2. மிகவும் சுவாரசியமான பயண அனுபவங்கள்,நல்ல படங்களுடன். தொடருங்கள்.

  பதிலளிநீக்கு
 3. இன்றுதான் உங்கள் பதிவைப் பார்த்தேன். மூன்று பகுதிகளையும் ஒரே மூச்சில் படித்தேன். நல்ல வர்ணனைகள். மிகவும் ரசித்தேன். நானே நேரில் போவது போல் உணர்ந்தேன். தொடர்ந்து வருகிறேன்.

  பதிலளிநீக்கு
 4. மலைகளும்,ஆறுகளும்,பள்ளத்தாக்குகளுமாக இயற்கை, அற்புதம் புரிந்திருந்தது. ஆற்றோரங்களில் சில இடங்களில் வாழை மரங்கள் செழுமையாக வளர்ந்திருந்தன. படிப்படியான தோற்றத்துடன் வயல்கள் இருந்தன.

  எங்களையும் இனிமையாக
  பயணத்திறகு அழைத்து சென்றீர்கள் .நன்றி..

  பதிலளிநீக்கு
 5. நல்ல கட்டுரை... புகைப்படங்களுடன் படிக்கும்போது நன்றாக இருக்கிறது.....

  உங்களுடனேயே எங்களையும் அழைத்துச் செல்வதற்கு நன்றி.

  பதிலளிநீக்கு
 6. குறிப்புகள் எடுத்துக் கொண்டீர்களா?.. நினைவில் பாதி, குறிப்புகள் பாதி என்றா?.. //

  ஊர் பெயர்கள் எல்லாம் மறந்து விடும். அதனால் நான் என் கணவரை கொஞ்சம் எழுதி வைத்துக் கொள்ளுங்கள் என்றேன். எந்த ஊருக்கு சென்றாலும் குறிப்புகள் என் கணவர் எழுதி வைத்து கொள்வார்கள். போட்டோ அவர்கள் எடுத்தது. அதையும் என் நினைவில் நின்றவைகளையும் இணைத்து எழுதுவது என்வேலை.

  முதன் முதலில் வந்து கருத்திட்டதற்கு மிகவும் நன்றி சார்.

  பதிலளிநீக்கு
 7. வாங்க,baleno, உங்கள் வரவுக்கும் கருத்துக்கும் நன்றி.

  பதிலளிநீக்கு
 8. வாங்க பழனியப்பன் கந்தசாமி, உங்கள் முதல் வருகைக்கு நன்றி. மூன்று பதிவுகளை உடனே படித்து கருத்துக் கூறியதற்கு நன்றி.

  பதிலளிநீக்கு
 9. வாங்க இராஜராஜேஸ்வரி, பயணம் இனிமையாக இருந்தது அறிந்து மகிழ்ச்சி.

  பதிலளிநீக்கு
 10. வாங்க வெங்கட், உங்கள் வரவுக்கும் கருத்துக்கும் நன்றி.

  பதிலளிநீக்கு
 11. அருமையான படங்களுடன் அழகான பதிவு. பாராட்டுக்கள்.

  //குரங்குக் குல்லா, கையுறையையும் அணிய வேண்டியிருந்தது.அந்த வளாகத்திலேயே ஒரு விற்பனை நிலையம் இருந்தது. அங்கு கம்பளி ஆடைகள் சூடாக விற்பனையானது.//

  குரங்குக்குல்லா, என்னுடைய சொல் இது.

  மிகவும் ரஸித்தேன்.

  என் [7 மாதப்] பேரனுக்குப்போட்டுவிட்டு “குல்லாக்குல்லா குரங்குக்குல்லா” என்று பாடுவேன். அவன் கலகலவெனச் சிரிப்பான்.vgk

  பதிலளிநீக்கு
 12. நேபாள் சீனஎல்லை பிரமபுத்ரா நதி கண்டுகொண்டு இனிய பயணத்தில் வருகின்றோம்.
  படங்கள் விபரங்களுடன் அருமை.

  பதிலளிநீக்கு
 13. என் [7 மாதப்] பேரனுக்குப்போட்டுவிட்டு “குல்லாக்குல்லா குரங்குக்குல்லா” என்று பாடுவேன். அவன் கலகலவெனச் சிரிப்பான்.//

  மிகவும் மகிழ்ச்சி சார்.
  பேரக் குழந்தைகளுடன் விளையாடும் போது நாமும் குழந்தைகளாய் ஆகிவிடுவோம்.

  உங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி சார்.

  பதிலளிநீக்கு
 14. மாதேவி, தொடர்ந்து வருவது மிகவும் மகிழ்ச்சி.

  பதிலளிநீக்கு
 15. நல்ல பல தகவல்களுடன் தொடர்கிறீர்கள். நாங்களும் உங்க கூடவே வருவது போல் உள்ளது அம்மா.

  பதிலளிநீக்கு
 16. வாங்க ஆதி, தொடர்ந்து வருவது மகிழ்ச்சியைத் தருகிறது.

  பதிலளிநீக்கு
 17. பெரிய ஆறு ஒன்று இரண்டு நாட்டுக்கும் எல்லையாக அமைந்துள்ளது. அதன் மீது அமைந்துள்ள பாலம் “நட்புப் பாலம்”(friendship bridge)என்று அழைக்கப்படுகிறது.

  பயணம் இனிமையாய் போகிறது

  பதிலளிநீக்கு
 18. வாங்க ரிஷபன், பயணம் இனிமையாக இருப்பது அறிந்து மகிழ்ச்சி.

  உங்கள் வருகைக்கு நன்றி.

  பதிலளிநீக்கு
 19. படங்களும் பகிர்வும் அருமை!..கிறிஸ்மஸ் வாழ்த்துக்கள்
  சகோ .மிக்க நன்றி பகிர்வுக்கு ...

  பதிலளிநீக்கு
 20. வாங்க அம்பாளடியாள், உங்கள் வரவுக்கும், கருத்துக்கும் நன்றி.

  பதிலளிநீக்கு
 21. வாங்க அம்பாளடியாள், உங்கள் வரவுக்கும், கருத்துக்கும் நன்றி.

  பதிலளிநீக்கு
 22. கூடவே வந்தது போன்ற உணர்வைத் தருகிற விரிவான பகிர்வு. நட்புப் பாலம், படங்கள் யாவும் அருமை.

  /சீனாவுக்குத் தினமும் சென்றுவரும் கூலித்தொழிலாளர்கள் எண்ணிக்கை அதிகமாக உள்ளது. அதிக சுமைகளைத் தலையிலும் முதுகிலுமாகத் தூக்கிச் செல்லும் ஆண்களையும்,பெண்களையும் பார்க்க வேதனையாக உள்ளது. பெண்கள் பொருட்களோடு தங்கள் கைக்குழந்தைகளையும் தங்கள் முதுகுத் தொட்டிலில் தூக்கிச் செல்கின்றனர்./

  எல்லை தாண்டிச் சென்று பிழைப்பு நடத்துபவர்களின் சிரமங்கள் குறித்து வாசித்திருக்கிறேன். வேதனையே.

  இந்த வருடம் பெங்களூர் குளிரே வழக்கத்தை விட அதிகமாய் உள்ளது. அங்கே எப்படி இருந்திருக்கும் என நினைத்தால் இன்னும் குளிர்கிறது.

  பதிலளிநீக்கு
 23. உங்கள் பயண அனுபவமும் பகிர்வும் அருமை.நல்ல இலகுவான எழுத்து நடை.புதிய இடங்கள்
  புதிய அனுபவங்கள் நிச்சயம் எங்களுக்கு சுவாரசியமாக இருக்கும்.தொடர்ந்து எழுதுங்கள்.

  பதிலளிநீக்கு
 24. வாங்க ராமலக்ஷ்மி, இந்த முறை குளிர் அதிகம் என்று தான் எல்லோரும் சொல்கிறார்கள். இங்கும் காலை பனி மூட்டம் நிறைய.

  உங்கள் வரவு உற்சாகத்தை அளிக்கிறது.
  நன்றி.

  பதிலளிநீக்கு
 25. வாங்க ஆசியா, உங்கள் வரவுக்கும் கருத்துக்கும் நன்றி.

  பதிலளிநீக்கு
 26. படஙக்ள் அழகு. மேகங்கள் தொட்டுவிடும் தூரத்தில் இருப்பது போல் இருக்கின்றன. குளிரைச் சமாளிப்பதுதான் பெரும் சவால் இல்லையா?

  //சீனாவுக்குத் தினமும் சென்றுவரும் கூலித்தொழிலாளர்கள்//
  இவர்களுக்கு இமிக்ரேஷன் பிரச்னை எப்படி சமாளிப்பார்கள்? “பாஸ்” கொடுத்திருப்பார்களோ?

  பதிலளிநீக்கு
 27. உங்கள் பயண அனுபவமும் பகிர்வும் அருமை.நல்ல இலகுவான எழுத்து நடை.புதிய இடங்கள்
  புதிய அனுபவங்கள் நிச்சயம் எங்களுக்கு சுவாரசியமாக இருக்கும்.தொடர்ந்து எழுதுங்கள்.

  பதிலளிநீக்கு