திங்கள், 20 ஆகஸ்ட், 2012

திருக்கேதாரத் தலபயணம் - பகுதி - 7




                                   பகுதி - 7
                               திருக்கேதாரம்
                                 KEDHARNATH
15.05.2012  காலை மணி 7.30 மணியளவில் திருக்கேதாரம் செல்லு வதற்கான டோலி ஸ்டேண்டை அடைந்தோம். டோலியில் செல்வதற்கும் குதிரையில் செல்வதற்கும் மக்கள் வந்து சேர்ந்தவண்ணம் இருந்தார்கள்.




திருக்கோயில் நிர்வாகம் நல்ல ஏற்பாடுகளைச் செய்துள்ளது. பொதுவாக ஒரு ஆளுக்கு 4000 ரூபாய் .ஒவ்வொருவரின் எடையும் கருவிமூலம் பார்க்கப்படுகிறது. 60கிலோவுக்குக்கு மேல் போனால் 5000ரூபாய் எனவும், அதேபோல் எடை அதிகமாக அதிகமாக ரூபாயும் அதிகமாய்ப் போய்க் கொண்டே இருக்கிறது. எங்களுடன் வந்த ஒரு அம்மா ரொம்ப வெயிட். அவர் ஒருவருக்கே எட்டாயிரம் ரூபாய் வாங்கிவிட்டார்கள். எங்கள் இரண்டு பேருக்கு டோலியில் செல்ல மொத்தம் 8200 ரூபாய் ஆகியது.

டோலியில் மேலே செல்ல சுமார் 4 மணிநேரம் ஆகிறது.

மேலே செல்ல.14.5 கி.மீ தூரம். இடையில் டோலிவாலாக்களுக்கு கானாபீனா (குடித்தல்,உண்ணல்) . அருமையான மலைவழி.

ஆங்காங்கே டிராபிக் ஜாம். வழியில்  7கி.மீ தொலைவில்  ராம்போடா என்ற இடம் உள்ளது. குதிரைகள் அங்கு சிறிது நேரம் ஓய்வு எடுத்துக் கொள்கின்றன. அருவிகள் பல இடங்களில் அழகாக விழுகின்றன. 




பனிப்பகுதிகள்:

செல்லும் வழியில் பனிக்கட்டிகள் இருபுறமும் கைக்கெட்டும் தூரத்தில் காணப்படுகின்றன. சில இடங்களில் பனிக்கட்டி உருகி ஓடுவதையும் காணலாம். சில இடங்களில் 4 அடி உயரத்திற்கு பனி காணப்படுகிறது.







ஹெலிகாப்டர் வசதி உள்ளது. சீதாப்பூரில் இருந்து 10 கி.மீ தூரத்தில் உள்ள phata என்ற ஊரில் ஹெலிபேட் உள்ளது. அதன் அருகில் நல்ல தங்கும் விடுதி hotel paradise உள்ளது. ஒரே நாளில் திருக்கேதாரம் சென்று வருவது போல் நெருக்கடியான பயணத்திட்டம் வைத்திருப்பவர்கள் ஹெலிகாப்டரில் செல்லுவது கடினம். வானிலை நன்றாக இருந்தால் மட்டுமே இவை செல்லும். இரண்டு மூன்று நாட்கள் கால அவகாசம் இருந்தால் நல்லது. ஹெலிகாப்டரில் செல்லக் கூடியவர்கள் மலைமேலே சென்றவுடனேயே திருக்கோயிலுக்குள் காத்திராமல் சென்று தரிசித்து, வெளியே வந்து, உடனே ஹெலிகாப்டரில் ஏறித்திரும்பலாம். மற்றவர்கள் எல்லாம் உள்ளே செல்வதில் உள்ள கஷ்டம் சொல்லி முடியாது. அது அங்கே போனபின் தான் தெரிகிறது. இரவில் சிறப்பு பூசைக்கட்டளை செய்யும் அன்பர்கள் தரிசிக்க வாய்ப்பு உள்ளது. அதற்குப் பலஆயிரம் ருபாய் ஆகிறது. அந்த வாய்ப்பு ஒரு குழுவினருக்கு மட்டுமே தரப்படும். மேலும் திருக்கேதாரத்தில் இரவு தங்கினால் மட்டுமே அந்த வசதியைப் பயன்படுத்திக் கொள்ள முடியும்.

கேதார்நாத்தில் தங்குமிட வசதிகள், மருத்துவ வசதிகள் மிகக் குறைவு. குளிர் மிக அதிகம். இந்த ஆண்டு திருக்கோயில் திறந்த முதல்நாள் அன்றே 4 பக்தர்கள் கேதார்நாத்கோயிலில் குளிரால் இறந்துபோனார்கள் என்று செய்தி வந்திருந்தது.

என் கணவரின் அண்ணன் குடும்பத்தினர் போன போது கேதார்நாத்திலேயே தங்கியதால் அதிகாலையில் ஒரு அலங்காரம், மாலையில் ஒரு அலங்காரம் பார்த்து வந்தார்கள். எங்கள் வழி காட்டி மாலை 5 மணிக்குள் கீழே இறங்கி விட்டால் நல்லது என்று சொல்லி விட்டார். எங்கள் குழுவில்  வந்த 40 அல்லது 45 வயது இருக்கும் ஒரு பெண்மணிக்கு கங்கோத்திரியில் 
மூச்சுத் திணறல்  ஏற்பட்டு விட்டது. அவர்கள் பஸ் நிறுத்தி வைத்திருந்த இடத்தை அடையவே கஷ்டப்பட்டார்கள். சீத்தாபூரில் வந்து டாக்டரிடம் போய் வந்தார்கள். ’ஆக்ஸிசன்  சிலிண்டர் சிறியது வைத்துக் கொள்ளுங்கள். தேவைப் பட்டால் பயன்படுத்திக் கொள்ளுங்கள். இல்லையென்றால் கொடுத்து விடலாம்’ என்று சொல்ல, அதை வாங்கி வந்தார்கள்.

கேதாரத்திற்கு டோலிக்காரர்களின் கட்டணம் முதலியவை வரைமுறைப் படுத்தப் பட்டிருக்கிறது. இருந்தாலும் அவர்களுக்கு அவ்வப்போது. டீ,குளிர்பானம், சிற்றுண்டி முதலியவற்றை வாங்கிக் கொடுத்துக் கொண்டே யிருககவேண்டும். எப்போது டோலியைக் கீழே வைப்பார்கள் என்று சொல்ல முடியாது. அதற்குத் தகுந்தாற்போல், வழி நெடுகிலும் கடைகள். ஆனால் டோலி தூக்குபவர்கள் மிகுந்த கஷ்டத்தோடு தான் மலையேற வேண்டியிருக்கிறது. குதிரைக்காரர்களின் பாடும் சிரமம் தான். ஆன்மிகச்சுற்றுலாவை நம்பியே இவர்கள் இருககிறார்கள். ஆண்டில் 4 மாதங்களே இந்தத் தொழில் செய்ய முடியும். குளிர்காலமானால் கோயில்கள் மூடப்படும்.. அந்த நாட்களில் இவர்களின் பாடு இன்னும் சிரமம் தான்.

திருக்கேதாரத்தை நெருங்குகிறோம்.





திருக்கேதார நகரியத்தில்  பனிக்கட்டிகள் சாலையில் ஓரளவு மட்டும் அகற்றப்படுகிறது. ஊர்ச் சாலைகளின் இருபுறமும் பனிககட்டிகள் உள்ளன






திருக்கோயிலில் மிகுந்த கூட்டம். எங்கள் டோலி வாலா எங்களை சீக்கிரம் தரிசனம் செய்ய அங்குள்ள பூசாரியிடம் ஏற்பாடு செய்கிறேன் என்று பேசினார். பூசாரி தரிசனம் செய்து வைக்க ஆளுக்கு 1000 ரூபாய் என்று சொல்லி விட்டு அங்கேயும் இங்கேயும் பார்த்துக் கொண்டு இருந்தார். நேரமும் ஆகி கொண்டே இருந்தது. போலீஸ்காரர்களை மீறி அவர்களால் எதுவும் செய்யமுடியவில்லை.போலீஸ்காரர்கள் எங்களிடம், கடவுளுக்காக கொஞ்சநேரம் வரிசையில் நிற்க முடியாதா? போங்க! போய் வரிசையில் நின்று தரிசனம் செய்யுங்கள் ! என்றார். 



சிறப்பு வழியில்லை. வரிசையாய் மக்கள் ஒரு கி.மீ தூரத்திற்கு நிற்கிறார்கள். கியூ மெதுவாக நகர்கிறது. மேற்கூரை நீளமாக அமைக்கப்பட்டிருந்தாலும். அதற்கு வெளியேயும் வரிசையின் வால்பகுதி நிற்கிறது. அங்கு தான் நின்றோம் குளிர் காற்று வீசியது. கை எல்லாம் விரைத்து போய் விட்டது. எங்களுக்கு மதிய உணவாக சப்பாத்தியும், தக்காளி தொக்கும்  கொடுத்து இருந்தார்கள். குளிரில் சாப்பிட முடியவில்லை. உச்சி வேளையிலும் அதிகக் குளிர்காற்று வீசிக்கொண்டே இருந்தது.

.
வரிசையில் நிற்கும் போது பனியில் காய்ந்து போன புதர்ச் செடியில் ஊர்க் குருவி கீச் கீச் என்றி ஒலி எழுப்பி அங்கேயும் இங்கேயும் பறந்து கொண்டு இருந்தது. சில குருவிகள் நம் ஊர்க் குருவி மாதிரி கலர் !
சில குருவிகள் சிறிது சிவப்பாய் இருந்தன. அன்னதானக் கூடத்தில் மக்கள் உணவு உண்டு கொண்டு இருந்தார்கள். அதன் அருகில் அரிசி குருவிகளுக்காகப் போட்டார்களா அல்லது சிதறி விட்டதா என்று தெரியவில்லை அவற்றை அவை கொத்திக் கொண்டு இருந்தன.

 ஆங்காங்கே வரிசையின் நடுவில் நுழைவதற்குப் பலர் முயற்சி செய்வதும், அவர்களை நோக்கி வரிசையின் பின்னே இருப்பவர்கள் கூக்குரலிடுவதும் நடந்தவண்ணம் இருக்கிறது. வரிசையில் நிற்பவர்களிடம் தரிசனம் செய்து வைக்கிறோம் வாங்க என அழைப்பவர்களும் உண்டு. அவர்களை உள்ளே போலீஸ்காரர்கள் அனுமதிப்பது இல்லை ஆனாலும் நம்மை ஏமாற்றப் பார்க்கிறார்கள். வரிசையின் முன்பகுதியில் மட்டும் - கோயிலுக்கு அருகில் உள்ள பகுதிகளில் மட்டும் - போலீஸ்காரர்கள் நின்று ஒழுங்குபடுத்துகிறார்கள். பின்பகுதியில் நடப்பவற்றைக்கண்டு கொள்வதில்லை. 

பக்தர்களிடத்தில் ஒழுங்கு கட்டுப்பாடு இல்லை. சந்நிதிக்குள் நுழையும் போது வரிசை குலைந்து நெருக்கடியாக ஏற்படுகிறது.. 

கோயில் நுழைவாயில் பகுதிக்கு படிகள் ஏற வேண்டும். அங்கு கூட்டம் நம்மை படி ஏறவிடாமல் நெருக்கி தள்ளுகிறது.  நுழைவாயில் சென்றதும் இன்னும் நெருக்கடி அதிகமாக உள்ளது. கருவறை அருகே செல்வதற்குள் கூட்டம் அலைமோதுகிறது.

இனந்தெரியாத ஒரு அச்சம் ஏற்படுகிறது. நல்லபடியாக வெளியே வரவேண்டுமே என்ற எண்ணம் தோன்றுகிறது. இந்த நேரத்தில் இறைவனின் திருநாமத்தைச் சொல்லியே இத்துன்பங்களை ஒதுக்கவேண்டியிருககிறது. கருவறைக்குள்ளே ஒரு வழியாக நுழைந்தோம்.(சொல்லப்போனால் தள்ளப் பட்டோம். சுவாமி மேலே கை தொட்டு வணங்கும் நிலை தானாகவே ஏற்படுகிறது.) தெய்வீக அனுபவம்! வார்த்தைகளால் சொல்லமுடியாது. அதுவரை பட்ட கஷ்டங்கள் எல்லாம் பறந்து போய்விட்டது. மூலஸ்தானத்தில் திருக்கேதாரநாதரைத் தொட்டு வணங்கினோம். சாமிமேல்  வெண்ணெயும் குங்குமமும்  இருப்பதால் எங்கள் கைகள் சிவப்பாய் ஆனது. அங்கு சுவாமி பக்கத்திலிருந்து கூட்டத்தை  ஒழுக்கு படுத்தும் அன்பர் என் கணவருக்கு இறைவன் பிரசாதமாய் இரண்டு ரூபாய் கொடுத்தார் கருவறையினுள்ளே மின்னொளி பிரகாசிக்கிறது..கருவறைக்குள்ளேயே சுவாமியைச் சுற்றி  வலம்வரும் வகையில், அகலநடைபாதை உள்ளது. அதில் சுற்றி வந்தோம்.அங்கு வேலைப்பாடு மிகுந்த தூண்கள் உள்ளன. . முழுமையான திருப்தியோடு வெளியே வந்தோம்.உள்ளே பைரவர் சந்நிதியுள்ளது.





கோவிலுக்கு பின் புறம் ஐஸ் குவியல் இருந்தது அதை பெண்கள் எல்லோரும் கையால் சிவலிங்கம் மாதிரி பிடித்து வைத்து குங்கும், பூ எல்லாம் வைத்து வணங்கினார்கள் நானும் வணங்கினேன்.

கோவிலின் வடகிழக்கு பகுதியில் திருஞானசம்பந்தர் பாடிய தேவார கல்வெட்டு இருந்தது.


தேவாரக் கல்வெட்டு

நாங்கள் உள்ளே இருக்கும்போதே வெளிப்புறம் சந்நிதிவாசல் அடைக்கப்பட்டது. இனி மாலை 5 மணிக்குத் தான் திறக்கும் என்றார்கள். நல்லவேளை எங்களுக்கு அதிக நேரம் மறுபடியும் காத்திருக்கத்தேவை இல்லாமல் போனது.

எங்கள் குழுவில் ஒரே குடும்பத்தை சேர்ந்தவர்கள் 13 பேர் வந்தார்கள் அவர்களில் ஒரு பெண்ணை அழைத்து வந்தவர்கள் டோலி சரியில்லாமல் காலை டோலியில் ஏறியவர் மதியம் மூன்று மணிக்குத் தான் கோவில் வந்து சேர்ந்தார். உடன் வந்தவர்களை பார்க்க முடியாமல், பேசமுடியாமல், கோயிலில் வந்து ஒலிபெருக்கியில் அறிவிப்பு கொடுத்து, உடன் வந்தவர்களைப் பார்த்து, பின் எல்லோரும் தரிசனம் செய்து,அவர்கள்  கீழே வரும் போது இரவு 9 மணி விடுதி வந்து சேர 11 ம்ணிக்கு மேல் ஆனது. அவர்கள் எல்லாம் 5 மணிக்கு கோவில் திறந்த பின் பார்த்து வந்ததால் இப்படி நேரமாயிற்று. மேலும் அவர்களை கருவறைக்குள் விடவில்லையாம். மாலை சுவாமிக்கு நகைகள் அணிவித்து அலங்கார தங்க குடை எல்லாம் வைத்து விடுகிறார்கள், அதனால் வெளியிலிருந்து பார்த்து விட்டுப் போய்க் கொண்டே இருக்க வேண்டும் சிறிது நேரம்கூட நிற்க முடிய வில்லையாம்.

ஒவ்வொரு நாளும் கவசத்தோடு சுவாமியைத் தரிசிக்கும் நேரமும் கவசம் இல்லாது பார்க்கும் நேரமும் உள்ளன. நாம் போகிற நேரத்தைப் பொறுத்து இந்த வாய்ப்புக்கள் கிடைக்கின்றன. 


எங்களை சீக்கிரம் நல்லபடியாக அழைத்து சென்று கூடவே வந்து எங்களை வழி நடத்திய டோலி வாலாக்களுக்கு  நாங்கள் நன்றி சொன்னோம்.  என் கணவரை அழைத்துச் சென்றவர்களும் நல்லவர்கள். என்னை அழைத்து சென்றவர்களும் மிக மிக நல்லவர்கள்.
ஏமாற்றுபவர்களும் இருக்கிறார்கள். நாங்கள் டோலியில் ஏறப் போகும் போது ஒரு பையனின் அடையாள அட்டையை நம் கழுத்தில் மாட்டி விட்டு விடுகிறார்கள் - திரும்பி வந்து நாம் அவர்களை அடையாளம் தெரிந்து ஏற வசதியாக இருக்கும் என்று.

அரசாங்கத்தில் அனுமதி பெறாதவர்களிடம் நாம் போகக் கூடாது. ஒருவர் எங்களை ஏமாற்ற பார்த்தார் . டோலி ஏறும் இடத்தில் ’மாதாஜி என் கூட வாருங்கள் நல்ல டோலியில் அழைத்து செல்கிறேன்’ என்று ஆனால் அதற்குள் எங்கள் டோலிக்காரார் வந்து எங்களிடம்,’ நாங்கள் தான் மாதாஜி உங்களை அழைத்து செல்ல வேண்டும்’ என்று அடையாள அட்டையைக் காட்டி அழைத்து சென்றார்கள்.

டோலிக்காரர்கள் தங்கள் உடல் நலத்தை கவனித்துக் கொண்டால் நல்லது. வழியில் இருக்கும் கடைகளில் சிகரெட் வாங்கி அதன் உள் இருப்பது வெளியில் கொட்டி விட்டு இவர்கள் கையில் கசக்கிய ஏதோ வைத்து புகைக்கிறார்கள். வாயில் பான் பராக் வேறு. இது உடலுக்கு கேடு அல்லவா! சுவரை வைத்துத் தான் சித்திரம் என்பது போல் அவர்கள் உடல் தாம் மூலதனம்  அதுவும் வயது ஆகி விட்டால் இப்படித் தூக்கி செல்ல முடியுமா! இதை உணர்ந்தால் நல்லது.
அதை அவர்களிடம் தமிழில் தான் சொன்னேன். ஏதோ புரிந்த மாதிரி ’சரி மாதாஜி ’என்றார்கள். கடவுளிடம் அவர்களுக்கு நல்ல ஆரோக்கியத்தை கொடுக்க வேண்டினேன்.

திரும்பி வரும் போது மிகவும் கூட்டம், இறங்கி வருபவர்கள், மேலே இறைவனை தரிசிக்க போகிறவர்கள், நடப்பவர்கள், குதிரையில் போகிறவர்கள் என்று நெரிசல். 

நடந்து வந்த  ஒரு வயதானவர்,அவருடன்  மருமகளோ. மகளோ யார் என்று தெரியவில்லை, குழந்தையுடன் வந்தார்! குழந்தைக்கு 1 வயது இருக்கும். எதிரில்  வந்த குதிரை  அவரைக் கீழே தள்ளி அவர் உடம்பின் குறுக்கே தாண்டிப் போனது. எங்கும் ஒரே கூச்சல்! என்ன நடந்தது என்று தெரியாத பெரியவர் போனவர், வந்தவர் என்று கண் மூடித்தனமாக எல்லோரையும் அடித்தார். உதவிக்கு போன எங்கள் டோலி வாலாக்களுக்கும் அடி விழுந்தது. அவர்கள்,அவரிடம்’ தாத்தா நாங்கள் இல்லை,  குதிரைக்காரர்’ என்று சொன்னதும் குதிரைக்காரரைத் துரத்திக் கொண்டு ஓடினார். நல்ல வேளை குழந்தைக்கு ஒன்றும் ஆகவில்லை. அந்தப் பெண்மணிக்கு ஊமைக் காயம்.  தொடர்ந்து நடந்து போய்த் தரிசனம் செய்தார்களா எனத் தெரியவில்லை. அவர்களுக்கு ஒன்றும் ஆக கூடாது என்று பிரார்த்தனையுடன் எங்கள் பயணம் தொடர்ந்தது
.
என்னைத் தூக்கி வந்தடோலிக்காரர்களுக்கும் பின்னாலே வேறு ஒருவரை தூக்கி வருபவர்களுக்கும், முன்னே போவதில் போட்டி  .போட்டியில் பின்னே வந்தவர் என் கை மேல் இடித்து விட்டுப் போனார். (கையில் ரத்தம் கட்டி விட்டது.) நான்  கூச்சல்  போட்டதில் எங்கள் ஆட்களுக்கும், பின்னே தூக்கிவந்தவர்களுக்கும் சண்டை வந்து விட்டது. சமாதானம் செய்து பின், தொடர்ந்து இறங்கினோம். வழியில் கொஞ்ச தூரத்திற்கு படிகள் இருக்கும் பகுதிகள் உள்ளன. அப்போது அவர்கள் படியில் ஓடினால் நம் உடம்பு குலுங்கி வலி ஏற்படுகிறது. வயிற்றுக்கு பெல்ட் அணிந்து சென்றால் நலம். அனுபவங்கள் பல.

எந்த நேரமும் மழை பெய்யும். அதனால் மழைக்கோட்டு  அணிந்தே போக வேண்டும் என்றார்கள். கொண்டு வராதவர்களுக்கு அங்கே ஒன்று 15 ரூ வீதம் விற்கிறார்கள். அது ஒரு முறை உப்யோகித்தவுடன் தூக்கி எறிந்து விடலாம். குளிருக்கும் ரேயின் கோட் நன்றாக இருக்கும்.

கோயிலின் பின்புறம் ஆதிசங்கரர் தவமியற்றிய இடம் உள்ளது. அங்கு பெரிய மண்டபம் உள்ளது. அவரது உருவச்சிலை உள்ளது.
டோலிக்காரர்களிடம்  விடைபெறல்
மாலை 4 மணிக்கு மீண்டும் டோலியில் ஏறி 7.30 மணிக்குக் கீழே வந்து சேர்ந்தோம்.அதன் பின்னர் ஜீப்பில் ஏறி சீதாப்பூர் திரும்பினோம்.

மறுநாள் பத்ரிநாத் புறப்பட்டோம்.அது பற்றி அடுத்த பதிவில்.
(தொடரும்)

ஞாயிறு, 19 ஆகஸ்ட், 2012

திருக்கேதாரத் தலபயணம் -பகுதி 6




                             பகுதி-6

                        அநேகதங்காவதம்
                       (ANEKATHANGAVATHAM)
14.05.2012 
அதிகாலை 4.50க்கு உத்தரகாசியிலிருந்து  புறப்பட்டோம். தராசு, டெஹ்ரி, ஸ்ரீநகர் என்கிற ஊர்களின் வழியாக ருத்ரப் ப்ரயாகை அடைந்தோம். உலகிலேயே அதிக உயரத்தில் அமைந்த அணைக்கட்டு டெஹ்ரி அணைக்கட்டு என்றார்கள்.



டெஹ்ரி அணைக்கால்வாய்

டெஹ்ரி அணை

டெஹ்ரி நகரமும் மன்னர் கோட்டையும்


நெடுஞ்சாலைச் சுரங்கப்பாதை-ருத்ரப்ரயாகை
ருத்ரப்ரயாகையில் கங்கை நதியின் மூல நதியாகிய அலக்நந்தா ஆறும், மந்தாகினி ஆறும் கூடுகின்றன.
ருத்ரப் ப்ரயாகை

குப்தகாசி
ருத்திரப்ரயாகையிலிருந்து சுமார் 40 கி.மீ தூரத்தில் குப்தகாசி என்னும் நகரம் உள்ளது. நகரத்தில் நடுவில், ஒரு மலை மீது அமைந்திருக்கும் விஸ்வநாதர் திருககோயிலைச் சென்று பார்த்தோம். சுமார் 100 படிகள் ஏறவேண்டும். 

குபதகாசி கோயில் செல்லும் வழி

குப்தகாசி விஸ்வநாதர் கோயிலுக்குச் செல்லும் வழி




மகாபாரதப் போர் முடிவுக்கு வந்ததும், பஞ்சபாண்டவர்கள் உறவினர்களைக் கொன்ற பாவம் நீங்கவும், மோட்சம் அடையவும் சிவபெருமானைக் காசியில் வழிபட வந்தார்களாம். இதனை விரும்பாத சிவபெருமான் அவர்களுக்குக் காட்சி தராமல் குப்தகாசிக்கு வந்து நந்தி வடிவில் ஒளிந்திருந்தாராம். பஞ்சபாண்டவர்கள் இங்கு வந்து எப்படியோ கண்டுபிடித்து வணங்கி அருள் பெற்றார்களாம். குப்த என்ற சொல்லுக்கு ஒளிதல் என்று அர்த்தமாம். காசியிலிருந்து சிவபெருமான் இங்கு வந்து ஒளிந்திருந்ததால் இந்த இடத்திற்கு குப்தகாசி என்ற பெயர் வந்ததாம்.
குப்தகாசி விஸ்வநாதர் கோயில்

மூலஸ்தானத்தில் சிவலிங்கம். பின்னால் பார்வதி உருவம்.  அங்குள்ள பூசாரி இதனை சக்தி பீடங்களில் ஒன்று என்றார். விஸ்வநாதர்  கோயிலின் முனனால் ஒரு சிறிய நீர்த்தொட்டி(குளம்) அதன் ஒரு மூலையில் கோமுகி அமைப்பிலிருந்து நீர் விழுந்து கொண்டிருக்கிறது. 
திருக்கோயில் திருக்குளம்
இதனை மணிக்கர்ணகை குண்டு என்கிறார்கள். கோயிலின் ஒரு புறம் பெண்கள் அமர்ந்து கூட்டு வழிபாடு செய்து கொண்டு இருந்தனர். அர்த்தநாரீசுவரருக்கு தனிச்சந்நிதி உள்ளது. இங்கு அவ்வப்போது சிறுதூறல் இருந்தது. 
சீதாப்பூரில் நாங்கள் தங்கியிருந்த இடம்

வழியெல்லாம் சற்று வெப்பமாகவே இருநதது. மாலை 7.30 மணிக்கு சீத்தாப்பூர் சென்று சேர்ந்தோம். இங்கு தங்கும் இடம் வசதியாக இருக்கவில்லை. சீத்தாப்பூரில் நல்ல குளிர்.
சீத்தாப்பூர் தங்கும் விடுதியில் கொடிரோஜா

15.05.2012
அதிகாலை 4-30 மணிக்கு சீதாப்பூரிலிருந்து புறப்பட்டோம்.
சாலைகளில், மேலிருந்து கற்கள் சரியும் பகுதி-எச்சரிக்கைப்பலகை

கெளரி குண்ட்(அநேகதங்காவதம்)

காலை 7.00 மணிக்கு கௌரிகுண்ட் அடைந்தோம். நாங்கள் எங்களை அழைத்துச் செல்லும் வழிகாட்டி  ஆனந்திடம் முன்பே கூறி விட்டோம் - அநேகதங்காவதம் பாடல் பெற்ற ஸ்தலம் என்பதால் அதைப் பார்ப்பது எங்கள் பயணத்திட்டத்தில் முக்கியம், அதனால் அங்கு நீங்கள் நிறுத்திக் காண்பிக்க வேண்டும் என்று சொல்லி விட்டோம். அவர் கேதார்நாத் சீக்கீரம் போக வேண்டும்., தரிசனம் முடிந்து திரும்பி வருவதும் சீக்கிரம் வர வேண்டும். பாதை மோசமாக இருப்பதால் பெரிய பஸ் இரவு நேரத்தில் ஓடத்தடை விதித்திருக்கிறார்கள் .  நீங்கள் எல்லாம் வர வர உங்கள் எல்லோரையும் ஜீப்பில் தங்கும் இடத்திற்கு அனுப்பி விடுவேன் என்றார். சீக்கிரம் போனால் தான் டோலி  கிடைக்கும் என்றார். எப்படி என்றாலும் அநேகதங்காவதம் கோவிலைப் பார்ப்பதில் நாங்கள் உறுதியாக இருந்ததால், எங்களுக்கு அந்த இடத்தை காட்டி, சீக்கீரம் போய் வந்து விடுங்கள் என்றார். நாங்கள் அது போல் நாங்கள் விரைவாகச் சென்று தரிசித்து வந்தோம்.

இருப்பிடம்

கேதார்நாத் போக கொஞ்சதூரம் படியேற வேண்டும். படியேறும்போது. பாதி தூரத்தில் வலது புறம் திரும்பினால் கௌரிகுண்டம் உள்ளது. இது வெந்நீர்க்குளம். குளத்தின் ஒரு மூலையில் கோமுகியிலிருந்து வெந்நீர், குளத்தினுள் எப்போதும் விழுந்து கொண்டேயிருககிறது. பக்தர்கள் குளிக்க ஆண்களுக்குத் தனியாகவும் பெண்களுக்குத் தனியாகவும் இரண்டு வெந்நீர்க்குளங்கள் உள்ளன. தீர்த்தத்தைத் தலையில் தெளித்துக் கொண்டோம். 
கெளரிகுண்டம்-வெந்நீர் ஊற்று

கௌரிகுண்டத்திற்குத்  தென்புறம் கௌரி கோயில் உள்ளது. 
கெளரி தவம் செய்த இடம் இது என்று கூறப்படுகிறது. அநேகதங்காவதம் என்னும் பாடல் பெற்ற சிவத்தலம் இதுதான் என்று கருதப்படுகிறது.
(திருக்கயிலாயத்தின் கிழக்கு பரிக்கிரமத்தில் அமைந்துள்ள கெளரிகுண்டமே அநேகதங்காவதம் என்றும் சிலர் கூறுவார்கள்)

சூல முண்டுமழு வுண்டவர் தொல்படை சூழ்கடல்
ஆல முண்டபெரு மான்றன் அநேகதங் காவதம்
நீல முண்டதடங் கண்ணுமை பாகம் நிலாயதோர்
கோல முண்டள வில்லை குலாவிய கொள்கையே

என்று திருஞானசம்பந்தர் இத்தலத்து இறைவனைப் பாடுகிறார்

இங்கு மூலஸ்தானத்தில் சிவபெருமான் இலிங்கவடிவில் அமைந்துளளார். 1 அடி உயரம்.  இங்கும் ஒரு சிறுகுளம் உள்ளது. அதில் கோமுகி உள்ளது.
திருஅநேகதங்காவதம் தேவாரப்பாடல் பெற்ற தலம்-கெளரிகுண்டம்


மூலஸ்தானம்

கெளரி குண்டத்தில் தீர்த்தம் சேகரித்துக் கொண்டு  சுவாமி, அம்பாளை தரிசனம் செய்தோம். அங்குள்ள பூசாரி, வந்தவர்களுக்காக ஆரத்தி காட்டாமல் இருந்த இடத்தில் இருந்து கொண்டு காணிக்கை மட்டும் கேட்கிறார்.
சுவாமி சன்னதிக்கு வெளியில் இருக்கும் அம்பாள் ஒற்றைக் காலில்  தபசு செய்யும்  காட்சி அழகாய் வடிக்கப்பட்டு இருக்கிறது.
ஒற்றைக்காலில் நின்று பார்வதி தேவி தவம்
கோவிலைச் சுற்றிலும் உள்ள சாதுக்கள் நம்மிடம் காசு கேட்கிறார்கள்.


.
கோவிலுக்கு போகும் பாதை எல்லாம் ஈரம் - காலை ஊன்றி நடக்க வேண்டும். இல்லையென்றால் விழநேரிடும்.


அநேகதங்காவதம் தரிசித்த பின் திருக்கேதாரம் செல்ல டோலி ஸ்டாண்ட் நோக்கிச் சென்றோம்.

திருக்கேதாரம் சென்று தரிசித்த செய்திகளை அடுத்த பதிவில் காணலாம்

 (தொடரும்)

சனி, 18 ஆகஸ்ட், 2012

திருக்கேதாரத் தலப்பயணம்-பகுதி-5




                                    பகுதி-5

                                  கங்கோத்ரி
13.05.2012
இன்று காலை 4.20 மணிக்குப் புறப்பட்டோம். முக்கிய லக்கேஜ்களை உத்தரகாசி அறையிலே வைத்துவிட்டு குறைவான பொருட்களுடன் சென்றோம். பேருந்து செல்லும் வழியில் மலைக்காட்சிகள் அருமை. அச்சம் தருவதும் கூட . 
கங்கைப்பள்ளத்தாக்கு


இயற்கை அழகு
சூரியோதயம்
யமுனோத்திரிக்கு சொல்லப்பட்டது போலவே மே, ஜுன், செப்டம்பர். அக்டோபர் மாதங்கள் கங்கோத்ரி செல்ல உகந்ததாம். அக்ஷ்ய திரிதியை முதல் தீபாவளி வரை கோயில் திறந்திருக்கும்

பேருந்து கங்கோத்ரி வரை செல்லுகிறது. கோயில் வருவதற்கு   முன்பாக ஒரு கி. மீ தூரத்திலேயே பேருந்தை நிறுத்திவிடுகிறார்கள். அங்கிருந்து நடக்கவேண்டும். நடக்க  முடியாதவர்கள், மிக வயதானவர்கள் மட்டும்  டோலியில் செல்லலாம். பால்கியும் இருக்கிறது.(ஒருவரை கூடையில் முதுகில் தூக்குவது).  யமுனோத்திரியில் நிறைய டோலி. குதிரைகள் இருக்கும் இங்கு அப்படி  இல்லை.

கங்கோத்ரி நுழைவாயில்
கங்கோத்ரியில் நிறைய கடைகளும் ,உணவு விடுதிகளும் உள்ளன. தென்னிந்திய உணவுகள் கிடைக்கின்றன. தமிழில் நம்மை அழைக்கிறார்கள்.

கங்காதேவி கோயில்
கியூவரிசை


விமானம்
கோயிலில் நிறைய கூட்டம். பக்தர்கள் வரிசையில் நிற்க வேண்டும். ஒரு மணி நேரத்திற்குள் கோயிலுக்குள் சென்று விட்டோம். உள்ளே  ஒரு சில விநாடிகளே நின்று தரிசிக்க அனுமதிக்கிறார்கள். வெளியே இழுத்து விட்டுவிடுகிறார்கள்.  திருப்பதி தேவலாம் என்றாகிவிட்டது. கங்கையம்மன் உருவச்சிலை பெரியதாக அழகாக உள்ளது. இரண்டு நொடிகளில் தரிசித்துக்கொள்ள வேண்டும். நம் நெற்றியில் குங்கும பொட்டை வைத்து, போங்க  என்கிறார்கள்.  பிரகாரத்தின்  சுவர்களில் ஸ்டிக்கர் பொட்டுக்களை ஒட்டி வைத்து இருக்கிறார்கள்.

500 ரூபாய் கொடுத்து விசேஷபூசை டிக்கட் வாங்கினால் கியூவில் நிற்காமல் உள்ளே போகலாம் என்று சிலர் கூறினார்கள். அது பற்றி விசாரிக்கவில்லை. 

பாராமிலிட்டரிக்காரர்கள் மற்றும் வாலண்டியர்கள் நிறைய பேர் ஒழுங்கு படுத்தியவண்ணம் இருக்கிறார்கள்.

கோயிலுக்கு முன்னால் கங்கை பூலோகத்திற்கு இறங்கி வரும் புராணக்கதையைக் கூறும் பெரிய சிற்பங்கள் உள்ளன. சிவபெருமான் கங்கையைத் தலையில் தாங்கும் காட்சி தத்ரூபமாகக் காணப்படுகிறது.



யாகசாலை
கோயிலுக்கு வடக்கே கௌமுக் என்ற தலத்திற்குச் செல்லும் பாதை அமைந்துள்ளது. கெளமுக் செல்ல அரசாங்கத்திடம் முன் அனுமதி பெற வேண்டுமாம்.
ஸ்நானக் கட்டம் செல்லும் வழி


கங்கையாறு

கங்கையில் நிறைய பேர் நீராடுகின்றார்கள். கங்கை உற்பத்தி ஆகும் இடம் இன்னும் மேலே இருக்கவேண்டும்.


கங்கை உற்பத்தியாகும் மலைத்தொடர்கள்
ஹரித்துவாரில் இருப்பதைவிட இங்கு கங்கைநீர் ஜில் என்று இருககிறது. இன்னும் சிலநாட்கள் பயணம் செய்து எங்களின் சமயக்குறிக்கோளான திருக்கேதாரம், பத்ரிநாத் பயணம் நல்லபடியாக முடியவேண்டுமே. அதனால் நாங்கள் நீராடாமல் தண்ணீரைத் தலையில் தெளித்துக் கொண்டோம். கங்கா மாதாவிற்கு என்று  சட்டைதுணி, வளையல், மஞ்சள், குங்குமம் எல்லாம் தண்ணீரில் விடச்சொன்னார்கள்,
முதலில் போய் வந்தவர்கள்.  இதை எல்லாம் போட்டு  நீரை அசுத்தம் செய்யவேண்டுமா என்று நினைத்து அங்கு வைத்து வணங்கி விட்டு ஒரு அம்மா அங்கு குளித்துக் கொண்டு இருந்தவர்களிடம் கொடுத்தேன் அவர்கள் எனக்கு வேண்டாம் கங்கா மாதாவிற்கு கொடு என்று சொல்லி அதை கங்கை ஆற்றில் விட்டு விட்டார்கள்.

கோயிலின் உள்ளே சிவன் சந்நிதி உள்ளது. கங்கையிலிருந்து பக்தர்கள் சிறிய பாத்திரங்களில் கங்கை நீரை  எடுத்துவந்து இங்கு சுவாமிக்கு அவர்களே அபிஷேகம் செய்கிறார்கள். நாங்களும் செய்தோம்.


இந்த நீரை ராமேஸ்வரத்திற்கு எடுத்து சென்று அங்கு சிவபெருமானுக்கு அபிஷேகம் செய்வார்களாம்.
பனிமலை
இயற்கைக்காட்சி


நிலச்சரிவு

அங்கு கடைகளில் எல்லோருக்கும் கொடுக்க, படங்கள் வாங்கினோம்.
நாற்படைவீடு யாத்திரை என்று தமிழில் சிடி விற்கிறார்கள்.
உத்திரகண்ட் மாநிலத்தில் நான்கு புண்ய தாமங்கள் என்றும் சிடி விற்கிறார்கள்.
சாரோ தாம், யாத்ரீ மஹாத்மீயம் என்று சிறு புத்தகம் விற்கிறார்கள் 
நம் மக்கள் நிறையபேர் வாங்கினார்கள். தீர்த்தம் எடுத்துப் போக சிறிய கேனிலிருந்து பெரியகேன் வரை எல்லாம் கிடைக்கிறது.

பின்னர் பேருந்தில் ஏறி உத்தரகாசி திரும்பினோம். வழியில் சில இடங்களில் நிலச்சரிவுகள் ஏற்பட்டு அவை சரிசெய்யப்பட்டிருந்தன.
காசி விசுவநாத்ர் கோயிலுக்கு மீண்டும் சென்று தரிசித்தோம்.
மறுநாள் திருக்கேதாரம் சென்றோம். அது பற்றி அடுத்த பதிவில் காணலாம்.