பொன்மேனி ஐயனார் கோவில் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
பொன்மேனி ஐயனார் கோவில் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

வெள்ளி, 2 ஆகஸ்ட், 2019

வெள்ளிக் கிழமையிலே அம்மா உன் வாசலிலே!

வெள்ளிக்கிழமையிலே அம்மா உன் வாசலிலே

எங்கள் வீட்டுக்கு அருகில் இருக்கும்  ஐயனார் கோவிலில் இருக்கும் அம்மன்களுக்கு ஆடி வெள்ளிக்கிழமை ஒவ்வொரு வாரமும் கஞ்சி வார்த்தல், கூழ் வார்த்தல் நடை பெறும். இன்று மூன்றாவது வெள்ளிக்கிழமை சிறப்பான பூஜை நடைபெற்றது.

புதன், 31 மே, 2017

கிராமியக் கோயில்


பல்லுயிர் ஓம்புக என்று ஒரு கட்டுரையை  தஞ்சையம்பதி என்று வலைத்தளம் வைத்து இருக்கும் திரு . துரைசெல்வராஜூ அவர்கள்  மே மாதம் 22ம் தேதி    சர்வதேச  பல்லுயிர் பெருக்க நாள் அன்று   எழுதி இருந்தார்கள்.  படிக்காதவர்கள் படிக்கலாம் அருமையான கட்டுரை. மரங்கள், குளங்களைப் பாதுகாத்தால் அதில் வாழும்  உயிரினங்கள் வாழும் என்றார். உண்மைதான் குளம், குட்டைகள், ஏரிகள், மரங்களில் எவ்வளவு உயிரினம் அடைக்கலமாக  உயிர் வாழ்ந்து கொண்டு இருக்கிறது. !

//பாலை நிலத்தைக் கூட இல்லை பாழ் நிலத்தை அல்லவா நம் குழந்தைகளுக்கு விட்டுச் செல்ல இருக்கிறோம் என்று வருத்தப்பட்டு எழுதி இருந்தார்கள். //

நான் அவர்கள்  பதிவுக்குப் பின்னூட்டம்    போட்டபோது இந்த பொன்மேனி ஐயனார்    கோவிலைப்பற்றியும் அங்கு இருக்கும் மரங்கள், பறவைகள் பற்றியும்  குறிப்பிட்டு இருந்தேன்.

எனக்கும் பல்லுயிர் ஓம்ப வேண்டும் என்று ஆசை உண்டு. இன்னும் இப்படி சில இடங்களில்  கிராமிய மணம் கமழும் கோவில்கள் இருப்பது மனதுக்கு நிறைவு அளிக்கிறது.

கிராமக் கோவில்கள் மரங்கள் சூழ வெகு அழகாய் இருக்கும். ஏரி, குளம் என்று  இருக்கும்  சுற்றுவட்டார மக்கள் அந்த ஏரி, குளங்களில் தண்ணீர் எடுத்துப் போவார்கள். இப்போது கிராமங்களிலும் தண்ணீர்த் தட்டுப்பாடு வந்துவிட்டது.

எங்கள் குலதெய்வம்  இருக்கும் மடவார்விளாகம்  (திருநெல்வேலி அருகில்) அமைந்து இருக்கும் இடம் ஆலமரங்கள் , பெரிய ஏரி வயல்கள் சூழ்ந்து இயற்கை எழில் கொஞ்சும் இடமாய் விளங்கும்.  இந்த முறை போனபோது ஏரியில் தண்ணீர் இல்லாமல் இருப்பதைப் பார்த்து மிகவும் கஷ்டமாய் இருந்தது. வயல்கள் தண்ணீர் இல்லாமல் காய்ந்து கிடந்தது.

           
                                     குலதெய்வம் கோவில் ஏரியின் கடைக்கோடியில்
                                                             காய்ந்து கிடக்கும் ஏரி

இங்கு மதுரை வந்தபோது , இந்த பொன்மேனி ஐயனார் கோவிலைப் பார்த்தபோது எனக்கு எங்கள் கோவில் நினைப்பு வந்து விட்டது. இங்குள்ள ஆலமரம், வேப்பமரம், புளியமரம், வில்வ மரம், அருகில் இருக்கும் பனைமரம் எல்லாம் பார்க்கும்போது மகிழ்ச்சியாக இருக்கும். காற்று அடிக்கும்போது   பனைமரம் போடும் சலசலப்பு,  எவ்வளவு பறவைகள் இங்குள்ள ஆலமரத்திற்கு வந்து ஆலம்பழத்தைச் சாப்பிட்டு அதன் நிழலில் இளைப்பாறுகிறது.

புளியமரத்தில் பறவைக் கூடு இருக்கிறது.

வேப்பமரத்தில் பழுத்த பழங்களுக்கு கிளிகள் வருகிறது. பக்கத்தில் உள்ளவர்கள் வீடுகளில் வளர்க்கும், ஆடு, மாடு, கோழிகளுக்குக் கோவில் முன்பகுதி  இடம் தான் வாழும் இடமாய் இருக்கிறது. இப்படி எல்லோருக்கும் அடைக்கலம் தரும் இடமாய்  கோவில்  இருக்க வேண்டும் எப்போதும்.

கோவிலை சீர் அமைப்பவர்கள் பழமையைச் சிதைக்காமல்  காத்தால் நல்லது. மரங்களை வெட்டாமல் குளங்களைச் சீர் அமைத்தால்  அதில் வாழும் பல்லுயிர்களும் வாழும்.

குளம் தூர்வாரப்படுகிறது என்று இன்றைய செய்தியில் சொன்னார்கள். குளங்களில் மீண்டும் நீர் வந்து  எங்கும் இயற்கை  பசுமையாக  இருக்க வேண்டும்.

கோவிலின் முன் பகுதி - ஆடு, மாடு, கோழிகள்,  சுதந்திரமாய்த் திரியும், ஆலமரத்தில் ஊஞ்சல் கட்டி  குழந்தைகள் விளையாடுவார்கள்

இயற்கைப் பின்னணியில் கோவில் குதிரைகள்
கோழி குஞ்சுகளுக்கு  இரை அளித்துக் கொண்டு இருந்தார் ஒரு பெண் ,கோவில்  வாசலில்
ஆடு, மாடு, கோழி,  சேவல்

ஆகிய செல்வங்களுடன் இந்நாட்டு மன்னர்

நெல்லை காந்திமதி  அம்மன் குளம்
குளத்தில் தண்ணீர் வற்றி குட்டையாகக் காட்சி அளித்தாலும்  அங்கு கிடைக்கும்  உணவுக்காகக் காத்து இருக்கும் முக்குளிப்பான்கள்

தென்காசி ஊரில் உள்ள  குளத்தில்  பறவைகள் (முக்குளிப்பான்கள்}

மதுரை ரயில் நிலையத்தில் உள்ள மொட்டை மரத்தில் மோன தவம் செய்யும் இரட்டைவால் குருவி.

மீண்டும் மரம் துளிர்த்து  வர வேண்டும் என்று இறைவனிடம் பிரார்த்தனை செய்கிறதோ இந்த  இரட்டை வால் குருவி. ! அதனுடன் சேர்ந்து நாமும் பிரார்த்தனை செய்வோம். 
வாழ்க வையகம்! வாழ்க வளமுடன்!
ஏரி, குளம்,  கிணறு, ஆறு எல்லாம் நிரம்பி வழிய
மாரி  அளவாய்ப் பொழிய
மக்கள் வளமாய் வாழ்க !

வாழ்க வளமுடன்.

"நாளை சர்வ தேச குழந்தைகள் தினம் "   குழந்தைகள் எல்லோருக்கும் வாழ்த்துக்கள். வாழ்க வளமுடன், வாழ்க நலமுடன்.