மலைக்கோவில்
இரண்டு பக்கம் நாகங்களுடன் சித்தி விநாயகர்
பாலதண்டாயுதபாணி
ஆறு தாமரைகளில் ஆறு முருகன்
மூன்று தூவாரங்களிலும் குரங்கு எட்டிப்பார்த்துக் கொண்டு இருந்தது. நான் போட்டோ எடுக்கப் போகும்போது ஒன்று மட்டும்- அதுவும் அந்தப் பக்கம் முகத்தைத் திருப்பி விட்டது.
மதுரைக்கு பஸ்ஸில் போகும் போதெல்லாம் இந்தக் கோவிலைப் பார்ப்போம்.
இந்த முறை காரில் மதுரை போனதால் மதுரையிலிருந்து மயிலாடுதுறை திரும்பும் போது இறங்கி முருகனைக் கும்பிட்டு வந்தோம்.
40 படிகள் கொண்ட சிறிய கோவில். நடுவில் பாலதண்டாயுதபாணி, அவருக்கு வலது பக்கம் சித்தி விநாயகர் இருக்கிறார். ஆள் நடமாட்டம் இல்லை குரங்குகளின் இருப்பிடமாய் இருக்கிறது. கோவிலுக்கு வெளியே அமர்ந்து இருப்பவரிடம் குரங்குகள் தொந்திரவு செய்யுமா? குச்சி ஏதாவது எடுத்துப் போக வேண்டுமா ? என்று என் கணவர் கேட்டபோது, ஒன்றும் செய்யாது போங்கள் என்றார்.
படிகளில் அமர்ந்து இருந்த குட்டிக் குரங்கு ஒன்று நாங்கள் படி ஏறியதைப்பார்த்து முறைத்து விட்டு மதில் மேல் இருந்து உற்றுப்பார்த்தது.
பூட்டிய கம்பிக் கதவுக்குள் முருகனைக் கண்டோம். கண்மலர் , ராஜகிரீடம் அணிந்து, எலுமிச்சை மாலையுடன் இருந்தார் சிறிய அழகிய முருகர். முந்திய நாள் தைப்பூசத்திற்குச் செய்த அலங்காரம் கலைக்கப்படாமல் இருந்தது. பக்கத்திலிருந்த சித்திவிநாயகரையும் பூட்டிய கம்பிக் கதவு வழியாகத் தரிசனம் செய்து விட்டு நிமிர்ந்தால் தாயும் சேயும் இரண்டு குரங்குகள் கொஞ்சிக் கொண்டு இருந்தன. மல்லாந்த நிலையில் குட்டி, அதன் வயிற்றில் வாயை வைத்து அதைச் சிரிக்க வைத்துக் கொண்டு இருந்தது, தாய்க் குரங்கு.
அழகிய காட்சி எடுக்கப் போனபோது கணவர், ”மேலே வந்து விழுந்து காமிராவைப் பிடுங்கப் போகிறது வா” என்று அழைத்தவுடன் வேகமாய் எடுத்த காரணத்தால் தெளிவில்லாத தாய், சேய் படம்.
என் கணவர் கூப்பிட்ட சத்தம் கேட்டு குட்டி குரங்கு என்னை திரும்பி பார்த்தது.
இருந்தாலும் அதையும் விடாமல் பதிவில் இடம்பெறச் செய்து விட்டேன். விளையாடுவது அழகாய் இருக்கிறது அல்லவா?
குன்று இருக்கும் இடமெல்லாம் குமரன் இருக்கும் இடம் என்பார்கள். இப்படி சிறிய குன்றில் முருகன் கோவில் கட்டியது மகிழ்ச்சியான விஷயம். அந்த மலை பிழைத்தது. இப்படி மலை மீது கோவிலை கட்டினால் மலைகள் கால காலமாய் இருக்கும்.
வாழ்க வளமுடன்.
--------------------------------------------------