திருச்செந்தூர் அனுபவம் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
திருச்செந்தூர் அனுபவம் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

வெள்ளி, 5 ஜூலை, 2013

சின்னக் கண்ணன் ஆடுகிறான் ஊஞ்சல் !

இந்த முறை திருச்செந்தூருக்கு என் கணவரின் தம்பி பேரனுக்கு மொட்டை அடித்துக் காது குத்தும் விழாவிற்குப் போனோம்.


நாழிக் கிணறு  போகும் பாதையில் புதிய  அலங்கார வளைவு - தோரண வாயில். அதில் ஐயப்ப பக்தர்களை மகிழ்விக்க  இரு புறமும் புலிகளுடன்  அமர்ந்து இருக்கும் திருக்கோலத்தில் ஐயப்பன். ஐயப்ப பக்தர்கள் தலையில் இருமுடியைத் தாங்கி நிற்கும் கோலம்.  மறு பக்கத்தில்  பிள்ளையார், சிவன். பார்வதி, முருகன் குடும்ப சகிதமாய் காட்சி தருகிறார்கள்.








குழந்தைக்கு முடி கொடுக்கும் இடத்தில் குழந்தை அழுதால் பஞ்சு மிட்டாய் வாங்கி கொடுப்பார்கள் என்று சுத்தி சுத்தி வரும் பஞ்சு மிட்டாய் பையன். பாவம்.  காலம் மாறி விட்டது இதை வாங்கி கொடுக்காமல் அழும் குழந்தைகளுக்கு  பைவ் ஸ்டார் சாக்லேட்  கொடுக்கிறார்கள் சிலர்.

  இந்த மாதிரி இடத்தில் முடி வெட்டவே தயங்கும் இளைய சமுதாயம் இப்போது,

 புது பிளேடு, தலையில் ஊற்றும் தண்ணீர்

 முடி வெட்டுபவர் ஒரு வாளியில் வைத்து இருக்கும் தண்ணீர் சுத்தமாக இல்லை என்று கையில் மினரல் வாட்டரை தலையில் தடவி முடி வெட்டச் சொல்லும்  சிலர்.
பின் குளித்து முடித்து காது குத்தச் சென்றால்.” ஏன் இப்படி குழந்தையை கஷ்டபடுத்துகிறீர்கள்? பேசாமல் அழகு நிலையத்தில் காது வலி இல்லாமல் குத்தி விடுவார்களே என்று சொல்பவர்கள் சிலர்  பெரியவர்களின்  ஆசைக்கு இங்கு வந்து விட்டார்கள். ஆனால் ஆசாரி மிகவும் திறமை வாய்ந்தவர் ஒரு நிமிடத்தில் காது குத்தி விடுகிறார்.


எல்லாம் நிறைவான பின்   இறைவனை கண்டு  வணங்கி வெளியில் வந்தால் யானை வந்து சுவாமி மண்டபத்துக்குள் வந்து கால் மடக்கி வணங்குகிறது பின் வெளியில் செல்கிறது.




அதன் பின் ஒருவர் மாட்டை  சுவாமிக்கு கொடுக்க கூட்டி வந்தார். மாட்டுக்கு உடம்பில் கொஞ்சம் வீங்கி இருக்கிறது. அதனால் வீட்டில் வைத்துக் கொள்ள வேண்டாம் என கொடுக்கிறாரா தெரியவில்லை.


கடற்கரைக்கு செல்ல எங்களுடன் வந்தவர்கள் வரட்டும் என்று காத்து இருந்த போது   தொலைக்காட்சி தொகுப்பாளராகவும், பல நடிகர்களின் குரல்களில் பேசும் திறமையானவரும், புதிய தலைமுறை தொலைக்காட்சியில்  பல ஊர்களின் சிறப்பு, அந்த ஊர்களின்  சிறப்பான சமையல் பற்றி எல்லாம் பேசும் ஒருவர் தன் நண்பருடன் கோவிலுக்கு வந்தார். நாங்கள் அவருடன் பேசினோம் ”சாமி தரிசனம் ஆச்சா ? ”என்று கேட்டார்,” எங்களுக்கு ஆகவில்லை திரை போட்டு இருக்கிறது, அலங்காரம் ஆனவுடன் பார்ப்போம்., அதனால் காத்து இருக்கிறோம்” என்றார். அவரை அவர் நண்பருடன் புகைப்படம் எடுத்துக் கொண்டோம் . எங்கள் குடும்பத்தில் அவர் பேரை ஒவ்வொருவரும் ஒவ்வொரு மாதிரி சொன்னார்கள்., அவர் கல்யாணத்தை விஜய் தொலைக்காட்சியில் நம்ம வீட்டுக் கல்யாணத்தில் காட்டினார்கள்.அவர் யார் என்று  உங்களுக்கு தெரிகிறதா? பாருங்கள். குறுந்தாடி வைத்து இருப்பவர்.
                                                                                                                                                                         இவர் யார் என்று சொல்லுங்கள்  (குறுந்தாடி வைத்து இருப்பவர்)


கடற்கரை செல்லாமல் பயணம் நிறைவு பெறுமா ? உடனே எல்லோரும் கடற்கரை சென்றோம்.


அங்கு கண்ட காட்சி! வரிசையாக ஆண், பெண்கள் கடற்கரை மணலில் இரு கைகளாலும் எதையோ தோண்டிக் கொண்டு இருந்தார்கள்.







இறைவனை தேடி தேடி இளைத்தனே என்று கேள்வி பட்டு இருப்பீர்கள் !
இது போல் ஒரு தடவையும் நாங்கள் கண்டது இல்லை.   பெண்களும் ஆண்களும் கைகளாலும், சல்லடைகளாலும் கடற்கரையில் ஏதோ தேடிக் கொண்டே இருந்தார்கள். தேடும் போது அவர்கள் கண்கள் நாலா பக்கமும் பார்த்துக் கொண்டே இருந்தன. கடலில் குளிப்பவர்கள் தங்கள் ஆடைகளை வீசி எறியும் போது ஓடி சென்று அதை எடுத்து வைத்துக் கொள்கிறார்கள்.
முன்பெல்லாம் இப்படி யாரும் தங்கள் ஆடைகளை கடலில் வீசி எறிய மாட்டார்கள். திருநள்ளாறில் தான் அப்படிப்பார்த்து இருக்கிறேன். அங்கு அந்த துணிகளை வேறு யாரும் எடுக்க முடியாது அதற்கு உரிமை பெற்றவர்கள் மட்டும் தான் எடுத்து செல்வார்கள், லாரிகளில்.

”ஒரு அம்மாவிடம் என்ன தேடுகிறீர்கள் ”என்று கேட்டால் ”ஒன்று மில்லை சும்மா ”என்றார்கள். ஒரு அம்மா ”சிப்பி” என்றார்கள். அதை இப்படியா தேடுவார்கள்! கைகளால் கடல் மண்ணைத் தோண்டித் தோண்டிக் குழி செய்கிறார்கள். அதில் அலை நீரைக் கொண்டு வந்து நிரப்புகிறது உடனே அதில் ஏதாவது இருக்கா எனத் தேடுகிறார்கள். சல்லடை வைத்து இருக்கும் பையன்கள் அலை வரும் போது சல்லடையை நீட்டுகிறார்கள் பின் அதைப் பார்த்து விட்டு மீண்டும் கடலில் விட்டுவிடுகிறார்கள்.  முகம் ஏமாற்றத்தால் சுருங்கி போகிறது. அவர்கள் முகம் மலருமா ஏதாவது அவர்கள் தேடிய பொக்கிஷம் கிடைத்து அவர்கள் முகம் மலருமா அப்போது அந்த மலர்ந்த முகத்தை புகைப்படம் எடுக்கலாம் என்று பார்த்தால் என் ஆசை நிறைவேற வில்லை. ஏதோ விலை மதிப்பு உள்ள பொருள் கிடைக்கும் போல! அது தானே இப்படி கைகள் வலிக்க வலிக்க தோண்டுகிறார்கள்.  பழைய சினிமாக்களில் புதையல்  எடுக்க தோண்டுவார்களே கண்களில் ஆசை மின்ன அது போல் அல்லவா தோண்டுகிறார்கள்.

பின் போனமுறை திருச்செந்தூர் போய் வந்த பதிவில் நட்சத்திர மீன் படம் போட்டு இருந்தேன். முன்பு கொஞ்சம் பெரிய சிறுவர்கள் வைத்து விளையாடிக் கொண்டு இருந்தார்கள் அவர்களிடம் கடலில் விட்டு விடுங்கள் உயிர் இருக்கிறது என்றேன். விட்டு விட்டார்கள். இந்த முறையும் ஒரு அண்ணன், தங்கைகளுக்கு கிடைத்தது நட்சத்திர மீன். அவர்களிடமிருந்ததை புகைப்படம் எடுத்துக் கொண்டு கடலில் விட்டு விடுங்கள் என்றால் இருவரும் மாட்டோம் என்று சொல்லி விட்டார்கள்.


பிறகு  வேறுஒரு இடத்தில் நட்சத்திர மீன், கரும்பின் அடி பாக துண்டு போல் வேர் எல்லாம் நீட்டிக் கொண்டு இருப்பது போல் ஒரு ஜீவராசி, பெயர்
தெரியவில்லை,



அப்புறம் முள் முள்ளாக  ஒரு ஜீவராசி. எல்லாம் பார்த்தோம்.  காதணி விழாவிற்கு வந்த அனைத்து தரப்பினரும் (எல்லா வயதினரும்)கடலில்  காலகளை நனைத்து அலைகள் வரும் போது எல்லாம் சிரித்து மகிழ்ந்தோம். பெரிய அலை வருது என்று கத்தும் போது அருகில் வரும் போது சின்னதாகி விடும் ஏமாற்றம் ஆகி விடும். சின்னதாக வருகிறது என்று நினைக்கும் போது வேகமாய் நம் இடுப்புவரை நனைத்து செல்லும். கடல் குழந்தை நம்மிடம் ஓடி பிடித்து விளையாடியது. எல்லை இல்லா  மகிழ்ச்சி கொடுத்தது. சிறிது நேரம் என்றாலும் அது கொடுத்த இன்பம் ஏராளம்.
மயிலாடுதுறைக்குக் கிளம்பியாச்சு


விழாவுக்கு வந்த அனைவரும் மயிலாடுதுறை வந்தார்கள், திருக்கடையூர் போக வேண்டும் என்று. பேரன்  ”பிறந்த நாள், ஆயுஸ் ஹோமம் , மொட்டை அடிக்கிறது, காது குத்து என்றுமூன்று நாளாய் என்னைப் படுத்தி விட்டீர்கள் நான் ஜாலியாக பெரிய தாத்தாவீட்டில் ஊஞ்சலில் ஆடுகிறேன் யாரும் என்ன தொந்திரவு செய்யாதீர்கள் ”என்று  சின்னக் கண்ணன் ஆடுகிறான் ஊஞ்சல்.


                                                         வாழ்க வளமுடன்.