வெள்ளி, 5 ஜூலை, 2013

சின்னக் கண்ணன் ஆடுகிறான் ஊஞ்சல் !

இந்த முறை திருச்செந்தூருக்கு என் கணவரின் தம்பி பேரனுக்கு மொட்டை அடித்துக் காது குத்தும் விழாவிற்குப் போனோம்.


நாழிக் கிணறு  போகும் பாதையில் புதிய  அலங்கார வளைவு - தோரண வாயில். அதில் ஐயப்ப பக்தர்களை மகிழ்விக்க  இரு புறமும் புலிகளுடன்  அமர்ந்து இருக்கும் திருக்கோலத்தில் ஐயப்பன். ஐயப்ப பக்தர்கள் தலையில் இருமுடியைத் தாங்கி நிற்கும் கோலம்.  மறு பக்கத்தில்  பிள்ளையார், சிவன். பார்வதி, முருகன் குடும்ப சகிதமாய் காட்சி தருகிறார்கள்.








குழந்தைக்கு முடி கொடுக்கும் இடத்தில் குழந்தை அழுதால் பஞ்சு மிட்டாய் வாங்கி கொடுப்பார்கள் என்று சுத்தி சுத்தி வரும் பஞ்சு மிட்டாய் பையன். பாவம்.  காலம் மாறி விட்டது இதை வாங்கி கொடுக்காமல் அழும் குழந்தைகளுக்கு  பைவ் ஸ்டார் சாக்லேட்  கொடுக்கிறார்கள் சிலர்.

  இந்த மாதிரி இடத்தில் முடி வெட்டவே தயங்கும் இளைய சமுதாயம் இப்போது,

 புது பிளேடு, தலையில் ஊற்றும் தண்ணீர்

 முடி வெட்டுபவர் ஒரு வாளியில் வைத்து இருக்கும் தண்ணீர் சுத்தமாக இல்லை என்று கையில் மினரல் வாட்டரை தலையில் தடவி முடி வெட்டச் சொல்லும்  சிலர்.
பின் குளித்து முடித்து காது குத்தச் சென்றால்.” ஏன் இப்படி குழந்தையை கஷ்டபடுத்துகிறீர்கள்? பேசாமல் அழகு நிலையத்தில் காது வலி இல்லாமல் குத்தி விடுவார்களே என்று சொல்பவர்கள் சிலர்  பெரியவர்களின்  ஆசைக்கு இங்கு வந்து விட்டார்கள். ஆனால் ஆசாரி மிகவும் திறமை வாய்ந்தவர் ஒரு நிமிடத்தில் காது குத்தி விடுகிறார்.


எல்லாம் நிறைவான பின்   இறைவனை கண்டு  வணங்கி வெளியில் வந்தால் யானை வந்து சுவாமி மண்டபத்துக்குள் வந்து கால் மடக்கி வணங்குகிறது பின் வெளியில் செல்கிறது.




அதன் பின் ஒருவர் மாட்டை  சுவாமிக்கு கொடுக்க கூட்டி வந்தார். மாட்டுக்கு உடம்பில் கொஞ்சம் வீங்கி இருக்கிறது. அதனால் வீட்டில் வைத்துக் கொள்ள வேண்டாம் என கொடுக்கிறாரா தெரியவில்லை.


கடற்கரைக்கு செல்ல எங்களுடன் வந்தவர்கள் வரட்டும் என்று காத்து இருந்த போது   தொலைக்காட்சி தொகுப்பாளராகவும், பல நடிகர்களின் குரல்களில் பேசும் திறமையானவரும், புதிய தலைமுறை தொலைக்காட்சியில்  பல ஊர்களின் சிறப்பு, அந்த ஊர்களின்  சிறப்பான சமையல் பற்றி எல்லாம் பேசும் ஒருவர் தன் நண்பருடன் கோவிலுக்கு வந்தார். நாங்கள் அவருடன் பேசினோம் ”சாமி தரிசனம் ஆச்சா ? ”என்று கேட்டார்,” எங்களுக்கு ஆகவில்லை திரை போட்டு இருக்கிறது, அலங்காரம் ஆனவுடன் பார்ப்போம்., அதனால் காத்து இருக்கிறோம்” என்றார். அவரை அவர் நண்பருடன் புகைப்படம் எடுத்துக் கொண்டோம் . எங்கள் குடும்பத்தில் அவர் பேரை ஒவ்வொருவரும் ஒவ்வொரு மாதிரி சொன்னார்கள்., அவர் கல்யாணத்தை விஜய் தொலைக்காட்சியில் நம்ம வீட்டுக் கல்யாணத்தில் காட்டினார்கள்.அவர் யார் என்று  உங்களுக்கு தெரிகிறதா? பாருங்கள். குறுந்தாடி வைத்து இருப்பவர்.
                                                                                                                                                                         இவர் யார் என்று சொல்லுங்கள்  (குறுந்தாடி வைத்து இருப்பவர்)


கடற்கரை செல்லாமல் பயணம் நிறைவு பெறுமா ? உடனே எல்லோரும் கடற்கரை சென்றோம்.


அங்கு கண்ட காட்சி! வரிசையாக ஆண், பெண்கள் கடற்கரை மணலில் இரு கைகளாலும் எதையோ தோண்டிக் கொண்டு இருந்தார்கள்.







இறைவனை தேடி தேடி இளைத்தனே என்று கேள்வி பட்டு இருப்பீர்கள் !
இது போல் ஒரு தடவையும் நாங்கள் கண்டது இல்லை.   பெண்களும் ஆண்களும் கைகளாலும், சல்லடைகளாலும் கடற்கரையில் ஏதோ தேடிக் கொண்டே இருந்தார்கள். தேடும் போது அவர்கள் கண்கள் நாலா பக்கமும் பார்த்துக் கொண்டே இருந்தன. கடலில் குளிப்பவர்கள் தங்கள் ஆடைகளை வீசி எறியும் போது ஓடி சென்று அதை எடுத்து வைத்துக் கொள்கிறார்கள்.
முன்பெல்லாம் இப்படி யாரும் தங்கள் ஆடைகளை கடலில் வீசி எறிய மாட்டார்கள். திருநள்ளாறில் தான் அப்படிப்பார்த்து இருக்கிறேன். அங்கு அந்த துணிகளை வேறு யாரும் எடுக்க முடியாது அதற்கு உரிமை பெற்றவர்கள் மட்டும் தான் எடுத்து செல்வார்கள், லாரிகளில்.

”ஒரு அம்மாவிடம் என்ன தேடுகிறீர்கள் ”என்று கேட்டால் ”ஒன்று மில்லை சும்மா ”என்றார்கள். ஒரு அம்மா ”சிப்பி” என்றார்கள். அதை இப்படியா தேடுவார்கள்! கைகளால் கடல் மண்ணைத் தோண்டித் தோண்டிக் குழி செய்கிறார்கள். அதில் அலை நீரைக் கொண்டு வந்து நிரப்புகிறது உடனே அதில் ஏதாவது இருக்கா எனத் தேடுகிறார்கள். சல்லடை வைத்து இருக்கும் பையன்கள் அலை வரும் போது சல்லடையை நீட்டுகிறார்கள் பின் அதைப் பார்த்து விட்டு மீண்டும் கடலில் விட்டுவிடுகிறார்கள்.  முகம் ஏமாற்றத்தால் சுருங்கி போகிறது. அவர்கள் முகம் மலருமா ஏதாவது அவர்கள் தேடிய பொக்கிஷம் கிடைத்து அவர்கள் முகம் மலருமா அப்போது அந்த மலர்ந்த முகத்தை புகைப்படம் எடுக்கலாம் என்று பார்த்தால் என் ஆசை நிறைவேற வில்லை. ஏதோ விலை மதிப்பு உள்ள பொருள் கிடைக்கும் போல! அது தானே இப்படி கைகள் வலிக்க வலிக்க தோண்டுகிறார்கள்.  பழைய சினிமாக்களில் புதையல்  எடுக்க தோண்டுவார்களே கண்களில் ஆசை மின்ன அது போல் அல்லவா தோண்டுகிறார்கள்.

பின் போனமுறை திருச்செந்தூர் போய் வந்த பதிவில் நட்சத்திர மீன் படம் போட்டு இருந்தேன். முன்பு கொஞ்சம் பெரிய சிறுவர்கள் வைத்து விளையாடிக் கொண்டு இருந்தார்கள் அவர்களிடம் கடலில் விட்டு விடுங்கள் உயிர் இருக்கிறது என்றேன். விட்டு விட்டார்கள். இந்த முறையும் ஒரு அண்ணன், தங்கைகளுக்கு கிடைத்தது நட்சத்திர மீன். அவர்களிடமிருந்ததை புகைப்படம் எடுத்துக் கொண்டு கடலில் விட்டு விடுங்கள் என்றால் இருவரும் மாட்டோம் என்று சொல்லி விட்டார்கள்.


பிறகு  வேறுஒரு இடத்தில் நட்சத்திர மீன், கரும்பின் அடி பாக துண்டு போல் வேர் எல்லாம் நீட்டிக் கொண்டு இருப்பது போல் ஒரு ஜீவராசி, பெயர்
தெரியவில்லை,



அப்புறம் முள் முள்ளாக  ஒரு ஜீவராசி. எல்லாம் பார்த்தோம்.  காதணி விழாவிற்கு வந்த அனைத்து தரப்பினரும் (எல்லா வயதினரும்)கடலில்  காலகளை நனைத்து அலைகள் வரும் போது எல்லாம் சிரித்து மகிழ்ந்தோம். பெரிய அலை வருது என்று கத்தும் போது அருகில் வரும் போது சின்னதாகி விடும் ஏமாற்றம் ஆகி விடும். சின்னதாக வருகிறது என்று நினைக்கும் போது வேகமாய் நம் இடுப்புவரை நனைத்து செல்லும். கடல் குழந்தை நம்மிடம் ஓடி பிடித்து விளையாடியது. எல்லை இல்லா  மகிழ்ச்சி கொடுத்தது. சிறிது நேரம் என்றாலும் அது கொடுத்த இன்பம் ஏராளம்.
மயிலாடுதுறைக்குக் கிளம்பியாச்சு


விழாவுக்கு வந்த அனைவரும் மயிலாடுதுறை வந்தார்கள், திருக்கடையூர் போக வேண்டும் என்று. பேரன்  ”பிறந்த நாள், ஆயுஸ் ஹோமம் , மொட்டை அடிக்கிறது, காது குத்து என்றுமூன்று நாளாய் என்னைப் படுத்தி விட்டீர்கள் நான் ஜாலியாக பெரிய தாத்தாவீட்டில் ஊஞ்சலில் ஆடுகிறேன் யாரும் என்ன தொந்திரவு செய்யாதீர்கள் ”என்று  சின்னக் கண்ணன் ஆடுகிறான் ஊஞ்சல்.


                                                         வாழ்க வளமுடன்.

67 கருத்துகள்:

  1. அருமையான படங்கள் மூலம் நாங்களும் பயணித்தோம்...

    கடல் விளையாட்டு என்றும் ரசிக்கத்தக்கவை...

    நட்சத்திர மீன் அழகு...

    சின்னக் கண்ணனுக்கு வாழ்த்துக்கள்...

    பதிலளிநீக்கு
  2. நிறைவான பதிவு. அருமையான படங்கள்!

    குழந்தை ரொம்ப க்யூட்! ஆசிகள்.

    நாழிக்கிணறு வாயில் நன்றாக இருக்கிறது.

    நான் கோட்டை விட்டுட்டேன்:(

    பதிலளிநீக்கு
  3. கோயில் தரிசனமும்.மீன்களின் படங்களும் அருமை.மிகத்துல்லியமான படங்கள் அருமை

    பதிலளிநீக்கு
  4. இரண்டு மாதம் முன்பு திருசெந்தூர் சென்று வந்தோம்.. திரும்பவும் திருசெந்தூர் சென்று வந்த அனுபவத்தை தரும் பதிவு. நான் சென்ற போதும் கடலில் எதையோ தேடி கொண்டுதான் இருந்தார்கள். கவனித்து கொண்டே இருந்தேன்.. வித்தியாசமான வடிவத்தில் ஒரு மீனின் ஓடு கிடைக்க அதை பக்கத்தில் உள்ள பாறை மீது நன்றாக தேய்த்து சுத்தம் செய்து உடனே அங்கு உள்ள கூட்டத்தில் பேரம் பேச ஆரம்பித்து விட்டனர். அவர்கள் பிழைப்பு அதுதான் போல..

    பதிலளிநீக்கு
  5. கடல் குழந்தை நம்மிடம் ஓடி பிடித்து விளையாடியது. எல்லை இல்லா மகிழ்ச்சி கொடுத்தது.

    நிறைவான பகிர்வுகள்.. வாழ்த்துகள்..!

    பதிலளிநீக்கு
  6. பாவம் சின்னக் கண்ணன் உற்சாக ஊஞ்சலடட்டும்.
    உங்கள் திருசெந்துர் பயன்த்திற்கு நாங்களும் வந்தது போல் உணர்ந்தோம் .
    நன்றி.

    பதிலளிநீக்கு
  7. சின்ன கண்ணன் செம கியூட். அதும் அந்த பெட்டி மேல. என் கணு பட்டிருக்கும் சுத்தி போட சொல்லுங்கோ

    பதிலளிநீக்கு
  8. படங்கள் அனைத்தும் அருமை... நானும் சென்றிருந்தேன் சென்றவாரம்...

    பதிலளிநீக்கு
  9. புகைப்படங்களுடன் பகிர்ந்த விதம்\
    மிக மிக அருமை
    நாங்களும் நேரில் கண்டு ரசித்த நிறைவு
    பகிர்வுக்கு வாழ்த்துக்கள்

    பதிலளிநீக்கு
  10. மிகவும் அருமையான படங்களுடன் கூடிய அற்புதமான பயணக்கட்டுரை.

    நாங்களும் உடன் பயணித்து கடல் நீரில் புதையல் தேடியது போன்ற உணர்வு ஏற்பட்டது. ;)

    மனமார்ந்த பாராட்டுக்கள்.

    அன்பான இனிய நல்வாழ்த்துகள்.

    பதிவுக்கும் பகிர்வுக்கும் நன்றிகள்.

    பதிலளிநீக்கு
  11. இனிமையான அனுபவங்களை, அருமையான படங்களுடன் சொல்லியிருக்கிறீர்கள். விஜய் டிவியில் வரும் அவர் யார் என்று தெரியவில்லை. பின்னூட்டம் இனிமேல்தான் படிக்க வேண்டும்! அங்கு தெரியலாம்!

    பதிலளிநீக்கு
  12. அருமையான படங்களுடன் அழகு வர்ணனை ரசித்தேன்

    பதிலளிநீக்கு
  13. திருச்செந்தூரின் கடலோரம் நாங்களும் நனைந்து வந்தோம்.

    இனிய பயணத்தில் நாங்களும் பங்கு கொண்டோம்.

    பதிலளிநீக்கு
  14. சுவாரசியமான கட்டுரை. பிரமாதமான படங்கள். கடைசியில் என்ன தேடிக்கொண்டிருந்தார்கள் என்று தெரிந்ததா?

    பதிலளிநீக்கு
  15. சிறுவயதில் திருச்செந்தூர் சென்று வந்த அனுபவம் எனக்கும் கண்முன்னால் வந்தது. நட்சத்திர மீன் அழகு...

    குழந்தை கியூட்டாக இருக்கிறது....

    அவரின் பெயர் தான் சட்டுனு நினைவில் வர மாட்டேங்குது...:)

    பதிலளிநீக்கு
  16. வாங்க திண்டுக்கல் தனபாலன் சார், வாழ்க வளமுடன்.
    நீங்கள் சொல்வது போல் கடல் விளையாட்டு என்றும் ரசிக்க தக்கவை தான்.
    சின்ன கண்ணனுக்கு அளித்த வாழ்த்துகளுக்கு நன்றி.
    உங்கள் வரவுக்கும் கருத்துக்கும் நன்றி.

    பதிலளிநீக்கு
  17. வாங்க துளசி, வாழ்க வளமுடன்.
    பேரனுக்கு ஆசிகள் வழங்கியமைக்கு நன்றி.
    அடுத்த முறை வந்து தரிசித்து விடலாம்.
    உங்கள் வரவுக்கும், கருத்துக்கும் நன்றி.

    பதிலளிநீக்கு
  18. வாங்க கவியாழி கண்ணதாசன், வாழ்க வளமுடன். உங்கள் வரவுக்கும் கருத்துக்கும் நன்றி.

    பதிலளிநீக்கு
  19. வாங்க ராதாராணி, வாழ்க வளமுடன்.
    ரொம்ப நாட்கள் ஆகி விட்டதே உங்களைப்பார்த்து!
    //வித்தியாசமான வடிவத்தில் ஒரு மீனின் ஓடு கிடைக்க அதை பக்கத்தில் உள்ள பாறை மீது நன்றாக தேய்த்து சுத்தம் செய்து உடனே அங்கு உள்ள கூட்டத்தில் பேரம் பேச ஆரம்பித்து விட்டனர். அவர்கள் பிழைப்பு அதுதான் போல..//
    ஆம், உண்மைதான் அவர்கள் பிழைப்புக்கு தான் தேடுகிறார்கள்.
    வள்ளிகுகை பக்கம், பெரிய பெரிய சங்குகள் விற்பார்கள்.
    உங்கள் வரவுக்கும், கருத்துக்கும் நன்றி.

    பதிலளிநீக்கு
  20. வாங்க இராஜராஜேஸ்வரி, வாழ்கவளமுடன்.
    உங்கள் வரவுக்கும், கருத்துக்கும் நன்றி.

    பதிலளிநீக்கு
  21. வாங்க ராஜலக்ஷ்மி பரமசிவம், வாழ்கவளமுடன்.
    இரண்டு நாள் குழந்தையை படுத்திவிட்டர்கள். அப்புறம் செல்லகுட்டிக்கு மகிழ்ச்சிதான்.
    உங்கள் வரவுக்கும் , கருத்துக்கும் நன்றி.

    பதிலளிநீக்கு
  22. வாங்க ராஜி, வாழ்கவளமுடன்.
    உங்களைப்பார்த்து வெகு நாட்கள் ஆகி விட்டதே!
    பெட்டிமேல் இருக்கும் கண்ணன் படம் நல்லா இருக்கா? நன்றி.
    உங்கள் வரவுக்கும் , கருத்துக்கும் நன்றி.

    பதிலளிநீக்கு
  23. வாங்க சங்கவி, வாழ்க வளமுடன்.
    உங்கள் தொடர் வருகைக்கும், கருத்துக்கும் நன்றி.

    பதிலளிநீக்கு
  24. வாங்க ரமணிசார், வாழ்க வளமுடன்.
    உங்கள் வரவுக்கும், கருத்துக்கும், தமிழ்மண ஓட்டுக்கும் நன்றி.

    பதிலளிநீக்கு
  25. வாங்க வை. கோபாலகிருஷ்ணன் சார், வாழ்க வளமுடன்.
    உங்கள் வரவுக்கும், உற்சாகமூட்டும் பின்னூட்டத்திற்கும் நன்றி.

    பதிலளிநீக்கு
  26. வாங்க ஸ்ரீராம், வாழ்க வளமுடன். நீங்கள் அந்த தொலைக்காட்சி தொகுப்பாளரை சொல்லிவிடுவீர்கள் என்றுப்பார்த்தேன். உங்கள் வரவுக்கும், கருத்துக்கும் நன்றி.

    பதிலளிநீக்கு
  27. வாங்க ஸாதிகா, வாழ்க வளமுடன்.
    உங்கள் வரவுக்கும், கருத்துக்கும் நன்றி.

    பதிலளிநீக்கு
  28. வாங்க மாதேவி, வாழ்கவளமுடன்.
    நீங்கள் கடற்கரைக்கு வந்தது மகிழ்ச்சி.
    உங்கள் வரவுக்கும், கருத்துக்கும் நன்றி.

    பதிலளிநீக்கு
  29. வாங்க அப்பாதுரை சார், வாழ்க வளமுடன்.
    விடுமுறையில் எங்கும் போகவில்லையா?
    அவர்கள் தேடுவது கடல் அன்னை தரும் அரிய பொருட்களை என்று மட்டும் தெரிகிறது. ராதாராணி பின்னூட்டத்தில் சொல்கிறார்கள் பாருங்கள்.
    உங்கள் வரவுக்கும், கருத்துக்கும் நன்றி.

    பதிலளிநீக்கு
  30. வாங்க ஆதி, வாழ்கவளமுடன்.
    சிறுவயதில் திருச்செந்தூர் போன அனுபவம் நினைவில் வந்ததா? மகிழ்ச்சி.

    அவரின் பெயர் தான் சட்டுனு நினைவில் வர மாட்டேங்குது...:)//
    இப்படித்தான் சில நேரம் சட்டுனு நினைவுக்கு வராது வந்தால் சொல்லுங்கள்.
    உங்கள் வரவுக்கும், கருத்துக்கும் நன்றி.


    பதிலளிநீக்கு
  31. http://www.youtube.com/watch?v=0YGOQDO5C8g&feature=youtube_gdata_player
    அவர் பேரு சேது தான். நம்மவீட்டுக்கல்யாணம் அந்த எபிசோட் செம கலகலப்பு

    பதிலளிநீக்கு
  32. வாங்க முத்துலெட்சுமி,வாழ்க வளமுடன்.
    அவர் யார் என்ற கேள்விக்கு பதிலும் கொடுத்து அவர் பெயர் சேது என்று சொல்லி, நம்மவீட்டுக் கல்யாண்ம் என்ற நிகழ்ச்சியில் விஜய் தொலைக்காட்சியில் காட்டினார்கள் என்றவுடன் அதன் லிங்கையும் கொடுத்தமைக்கு நன்றி, பாராட்டுக்கள்.

    பதிலளிநீக்கு
  33. சுவாரஸ்யமாகப் படித்தேன்.

    அலைமணலில் தேடித் திரிவோரைப் பற்றி விவரிக்கும் பொழுது அந்த சமயத்தில் நீங்கள் கொண்டிருந்த
    க்யூரியாசிடி உங்கள் வரிகளில் அப்படியே சிறை கொண்டுள்ளது.



    பதிலளிநீக்கு
  34. சின்னக் கண்ணனுக்கு என் அன்பான வாழ்த்துகள்.

    கடலில் பொருள் தேடி பிழைப்பவர் வாழ்வு.. புதிய தகவலாய் உள்ளது.

    நட்சத்திர மீன் கவருகிறது.

    அனைத்துப் படங்களும் அனுபவப் பகிர்வும் அருமை, கோமதிம்மா.

    பதிலளிநீக்கு
  35. கடலில் விளையாடுவது எல்லா வயதினருக்கும் பிடித்த ஒன்று.
    குழந்தைக்கு ஆசிகள்.

    வெகு நாட்களுக்குப் பிறகு உங்கள் பதிவை படிக்க நன்றாக இருந்தது. ஒன்றே ஒன்று missing - உங்கள் துணைவர் வரையும் படம்!

    பதிலளிநீக்கு
  36. வாங்க ஜீவி சார், வாழ்கவளமுடன்.
    நீங்கள் என் பதிவை ரசித்து படித்தமைக்கு நன்றி.
    உங்கள் உற்சாகம் தரும் பின்னூட்டத்திற்கு நன்றி சார்.

    பதிலளிநீக்கு
  37. வாங்க ராமலக்ஷ்மி, வாழ்க வளமுடன்.
    //கடலில் பொருள் தேடி பிழைப்பவர் வாழ்வு.. புதிய தகவலாய் உள்ளது.//
    ஆம், ராமல்க்ஷ்மி இப்போது தான் நானும் பார்க்கிறேன்.
    உங்கள் வரவுக்கும், அருமையான கருத்துக்கும் நன்றி ராமல்க்ஷமி.

    பதிலளிநீக்கு
  38. ஆஹா எத்தனை தடவை பார்த்தாலும் அலுக்குமா திருச்செந்தூர்.
    படங்கள் அனைத்தும் வரலாற்றுச் சிறப்பு வாங்கிக் கொண்டன.


    குழந்தைக்கு மொட்டை அடிப்பது மஹ்ஹ பெரிய உத்சவம். அதுவும் இவர்கள் வெளியூரிலிருந்தவந்துவிட்டால் அவ்வளாவுதான்.வாய் பேசாமல் அவர்கள் வழியில் நடத்திக் கொண்டு போய்விடுவார்கள்:)
    ஒருவேளை முருகனைத் தேடுகிறார்களோ.!!!!!அந்த அலையில் வலைபோடுபவர்கள்?
    சின்னக் கண்ணன் சுட்டி. அழகாய் ஆடுகிறான் ஊஞ்சல். மனம் நிறைந்த வாழ்த்துகள் கோமதி/வாழ்கவளமுடன்.

    பதிலளிநீக்கு
  39. வாங்க ரஞ்சினி நாராயணன், வாழ்க வளமுடன்.
    குழந்தைக்கு உங்கள் வாழ்த்துக்கள் நலம் பயக்கும் நன்றி.
    நீங்கள் சொல்வது உண்மை. கடல் விளையாட்டு அனைத்து தரப்பினருக்கும் பிடித்த ஒன்று தான்.
    என் கணவர் வேறு வேலைகளில் கவனமாய் இருக்கிறார்கள் அதனால் என் பதிவுகளுக்கு படம் வரைந்து தர நேரம் இல்லை.
    உங்கள் எதிர்பார்ப்பை என் கணவரிடம் சொன்னேன் மகிழ்ந்தார்கள்.
    உங்கள் வரவுக்கும், கருத்துக்கும் நன்றி.

    பதிலளிநீக்கு
  40. வாங்க வல்லி அக்கா, வாழ்க வளமுடன்.
    நீங்கள் சொல்வது போல் எத்தனை முறை பார்த்தாலும் அலுக்கவே அலுக்காது திருச்செந்தூர் உண்மை.
    ஊரிலிருந்து வரும் பிள்ளைகளின் வசதி படிதான் எல்லாம் நடைபெறும். நீங்கள் சொல்வது உண்மை.
    அன்பெனும் வலையில் அகப்படுவான் முருகன்.
    சின்ன கண்ணனுக்கு உங்கள் வாழ்த்துக்களை அளித்து விடுகிறேன்.
    அவர்கள் தாத்தாவிற்கு மணிவிழாவுக்கு வருவான்.
    உங்கள் வாழ்த்துக்களுக்கு நன்றி அக்கா.

    பதிலளிநீக்கு
  41. சிறப்பான படங்கள். சின்னக் கண்ணனுக்கு எங்களுடைய வாழ்த்துகளும்.....

    என்ன தான் தேடுகிறார்கள் - நிச்சயம் ஆதாயம் தரக்கூடியதாகத் தான் இருக்க வேண்டும். இல்லையெனில் இத்தனை வருந்தமாட்டார்களே....

    பதிலளிநீக்கு
  42. வாங்க வெங்கட், வாழ்கவளமுடன்.
    சின்னக் கண்ணனுக்கு எங்களுடைய வாழ்த்துகளும்..//
    வாழ்த்துக்களுக்கு நன்றி வெங்கட்.

    //என்ன தான் தேடுகிறார்கள் - நிச்சயம் ஆதாயம் தரக்கூடியதாகத் தான் இருக்க வேண்டும். இல்லையெனில் இத்தனை வருந்தமாட்டார்களே....//
    நீங்கள் சொல்வது சரிதான் வெங்கட்.
    அவர்களுக்கு ஏதோ ஆதாயம் இருக்கும்.
    உங்கள் வருகைக்கும், கருத்துக்கும் நன்றி.


    .

    பதிலளிநீக்கு
  43. ''..யானை வந்து சுவாமி மண்டபத்துக்குள் வந்து கால் மடக்கி வணங்குகிறது பின் வெளியில் செல்கிறது...''' Arumai...
    Star fish beautiful.
    நானும் மீன் இறைச்சி உண்பவள் இல்லை.
    மரக்கறிப் பிறவியே என் அம்மா அப்பா போல.
    ஆகவே இதைப் பார்த்து ரசிக்கவே முடியும்.
    மிக மகிழ்ச்சி தங்கள்ஆக்கம் கண்டு.
    அன்பு வாழ்த்து.
    வேதா. இலங்காதிலகம்.

    பதிலளிநீக்கு
  44. வாங்க வேதா.இலங்காதிலகம், வாழ்கவளமுடன்.
    உங்கள் வரவுக்கும், அருமையான பின்னூட்டத்திற்கும் நன்றி.
    வாழ்த்துக்கு நன்றி.

    பதிலளிநீக்கு
  45. குட்டிப்பையன் ரொம்ப அழகாருக்கான்..

    பதிலளிநீக்கு
  46. வாங்க அமைதிச்சாரல், வாழ்க வளமுடன்.
    உங்கள் வரவுக்கும், கருத்துக்கும் நன்றி.

    பதிலளிநீக்கு
  47. கடல் படங்களின் அழகு மிக அருமை
    பேரனை போட்டு இப்படி படுத்தி எடுத்திட்டீங்களா.
    கடைசியில் நிம்மதியாக ஊஞ்சாலுவதும் அழகோ அழகு.

    வாழ்க வளமுடன்..

    பதிலளிநீக்கு
  48. வாங்க ஜலீலா, வாழ்க வளமுடன்.
    உங்கள் வரவுக்கும், கருத்துக்கும் மிக மகிழ்ச்சி.
    உங்கள் வாழ்த்துக்கும் நன்றி.

    பதிலளிநீக்கு
  49. பையனுக்கா காது குத்து? நான் பொண்ணுன்னு நினச்சேன்! :-)

    //வாளியில் வைத்து இருக்கும் தண்ணீர் சுத்தமாக இல்லை//

    ம்... கொஞ்சம் பந்தா செய்வதுபோலத் தெரிந்தாலும், குழந்தைகள் விஷயத்தில் ரிஸ்க் எடுக்க மனம் வருவதில்லை என்பது உண்மையே. நானும் இப்படித்தான். :-(

    நட்சத்திர மீனுக்குப் பக்கத்தில் இருப்பது லாப்ஸ்டர் என்று சொல்லும் வகை அல்லவா? மற்றது என்னென்று தெரியவில்லை. பார்க்கவே பயம்மா இருக்கே, எப்படி எல்லாரும் அந்தக் கடற்கரையில் நடமாடுகிறார்களோ!

    நானும் அவர்கள் தேடுவது செயின், கம்மல் போன்ற நகைகளோ என்று நினைத்தேன். மீனின் ஓடா.. அதை வாங்கி என்ன செய்வார்கள்?

    பதிலளிநீக்கு
  50. வாங்க ஹுஸைனம்மா, வாழ்கவளமுடன்.
    பையனுக்கு காது குத்தி கொஞ்சநாள் தான் போட்டுக் கொள்வான்.(பையன் , பெண் என்று வேறு பாடு இல்லாமல் பிறந்த குழந்தைக்கு ஆண்டு நிறைந்தவுடன் காது குத்தி மொட்டை அடிப்பது வழக்கம்)
    காது குத்தாமல் இருக்க கூடாது என்பதற்கு குத்துகிறார்கள்.
    முன்னோர்கள் எல்லாம் ஆண்கள் காதில் கடுக்கன் என்ற தோடு போட்டு இருப்பார்கள்.
    இப்போதும் இளவயது பையன்கள் நாகரீகமாய் காது குத்திக் கொள்கிறார்கள்.

    குழந்தைகள் விஷயத்தில் ரிஸ்க் எடுக்க மனம் வருவதில்லை என்பது உண்மையே. நானும் இப்படித்தான். //

    முனெச்சரிக்கையாய் பாதுகாப்பாய் இருப்பது நல்லது தான்.

    //
    நட்சத்திர மீனுக்குப் பக்கத்தில் இருப்பது லாப்ஸ்டர் என்று சொல்லும் வகை அல்லவா? மற்றது என்னென்று தெரியவில்லை. பார்க்கவே பயம்மா இருக்கே, எப்படி எல்லாரும் அந்தக் கடற்கரையில் நடமாடுகிறார்களோ!//

    அது விஷ ஜந்து இல்லை போலூம்!

    //நானும் அவர்கள் தேடுவது செயின், கம்மல் போன்ற நகைகளோ என்று நினைத்தேன். மீனின் ஓடா.. அதை வாங்கி என்ன செய்வார்கள்?//

    என் கண்வர் சொல்கிறார்கள் செயின், கம்மல் போன்ற விலைஉயர்ந்த பொருட்கள் கிடைத்து இருக்கும் அதனால் தான் அப்படி தேடுகிறார்கள் என்று.
    அவர்கள் வாழ்வு கடலோடு என்கிறபோது அவர்கள் வாழ்ந்து ஆக வேண்டுமே!

    கடல் அருகாட்சியகத்தில் கடல்வாழ் உயிரினங்களின் எலும்புகள், ஓடுகள் எல்லாம் இருக்குமே!
    அதற்கு வாங்கி செல்வார்களோ என்னவோ!
    உங்கள் வரவுக்கும், கருத்துக்கும் நன்றி.








    பதிலளிநீக்கு
  51. இருமுறை திருச்செந்தூர் போயும் கடற்கரை போனதில்லை. மற்றபடி நீங்க சொல்லி இருக்கும் விஷயங்களை நானும் கவனித்திருக்கிறேன். மாற்றங்கள் பற்றிச் சொல்லி இருப்பவை அடுத்த முறை திருச்செந்தூர் போனால் கவனிக்கணும். :)))) மணலில் யாருடைய மோதிரம், சங்கிலி எனத் தங்கம் அடித்துக் கொண்டு வந்திருந்தால் கிடைக்குமா எனப் பார்க்கிறார்கள். இதைக் கன்யாகுமரியில் கண்டிருக்கோம். :)))))

    பதிலளிநீக்கு
  52. தொலைக்காட்சியில் நீங்க சொல்லும் நிகழ்ச்சிகள் எல்லாம் பார்க்காததால் யாருனு தெரியலை! சாயந்திரம் சாப்பிடறச்சே ஒரு மணி நேரம் பார்க்கிறது தான் தொலைக்காட்சியே. அதிகம் போனால் பொதிகையில் கச்சேரியும், சங்கரா, திருப்பதி தேவஸ்தானத் தொலைக்காட்சியில் கச்சேரிகள் தான்! :))))

    பதிலளிநீக்கு

  53. திருச்செந்தூர் பயணம் படித்தேன். அங்கே கடலில் சிறிது தூரம் செல்லலாம். shallow beach. நாங்கள் சென்றபோதும் எங்களுக்கும் ஒரு ஸ்டார் ஃபிஷ் கிடைத்தது. உறவினர் அதை பாலிதீன் பையில் நீரூற்றி அதில் மீனைப் போட்டு ஊருக்கு எடுத்துச் சென்று தொட்டியில் வளர்க்க விரும்பினார். ஆனால் ஊர் போய்ச் சேருமுன் மீன் பரலோகம் போய் விட்டது. நாங்கள் சென்று ஆறேழு வருடங்கள் ஆகிவிட்டன. சில சிற்பங்கள் புதியவையோ. நீங்கள் மாயவரம் வாசி என்று இப்போதுதான் தெரிந்தது. பதிவு சில பழைய நினைவுகளை கிளறி விட்டது. அங்கு பனை வெல்லம் விசேஷம் வாங்கினீர்களா.?

    பதிலளிநீக்கு
  54. அழகான அமைதியான வர்ணனை.
    ஆரவாரம் ஏதும் இல்லாத வர்ணனை.

    உள்ளதை உள்ளபடி எடுத்துச்சொல்லும் வர்ணனை.
    வந்தோம் போனோம் என்று இல்லாமல்
    திரும்பத் திரும்ப படிக்கத தூண்டிடும் வர்ணனை.

    பலே!

    சுப்பு தாத்தா.
    www.subbuthatha.blogspot.com
    www.subbuthatha72.blogspot.com

    பதிலளிநீக்கு
  55. வாங்க கீதா , வாழ்க வளமுடன்.
    நாங்கள் கன்னியாகுமரிக்கும் செம்டம்பர் மாதம் போய் இருந்தோம் அங்கு இப்படி தேடுவதை பார்க்கவில்லை. அங்கும் இப்படி தேடுவார்கள் என்று படிக்கும் போது ஆச்சிரியமாய் இருக்கிறது.
    கடலில் குளிக்கும் போது அடித்து செல்லப்படும் நகைகள் நீங்கள் சொல்வது போல் அவர்களுக்கு கிடைத்து இருக்கலாம்.
    தொலைக்காட்சி நிகழ்ச்சி தொகுப்பாளர் பேர் சேது.
    நானும் சில குறிபிட்ட நிகழ்ச்சிகள் தான் தொலைக்காட்சியில் பார்ப்பேன்.
    உங்கள் வரவுக்கும், கருத்துக்கும் மிகவும் நன்றி.

    பதிலளிநீக்கு
  56. வாங்க பாலசுப்பிரமணியன் சார், வாழ்க வளமுடன்.
    உங்கள் திருச்செந்தூர் அனுபவம் படித்தேன். நட்சத்திர மீன்கள் அடிககடி கடல் ஓரத்தில் ஒதுங்குகிறது. போன முறை போன போதும் பார்த்தேன்.
    பனைவெல்லம் வாங்கினேன், அதன் பேர் சுக்கு கருப்பட்டி, சில்லு கருப்பட்டி என்றெல்லாம் சொல்வார்கள்.
    மாயவரவாசிதான் நான் இப்போது.
    உங்கள் வரவுக்கும் கருத்துக்கும், நன்றி.

    பதிலளிநீக்கு
  57. வாங்க சூரி சார், வாழ்க வளமுடன்.
    உங்கள் பாராட்டு மகிழ வைக்கிறது.ஊரில் எல்லோரும் நலமா?
    உங்கள் பயணக் கட்டுரை படிக்க மிக நன்றாக இருக்கிறது.நீங்கள் கொடுத்த பதிவுகளை படித்துக் கொண்டு இருக்கிறேன். குறித்துக் கொண்டும் இருக்கிறேன்.
    உங்கள் வரவுக்கும், கருத்துக்கும் நன்றி.

    பதிலளிநீக்கு
  58. வாங்க சூரி சார், வாழ்க வளமுடன்.
    உங்கள் பாராட்டு மகிழ வைக்கிறது.ஊரில் எல்லோரும் நலமா?
    உங்கள் பயணக் கட்டுரை படிக்க மிக நன்றாக இருக்கிறது.நீங்கள் கொடுத்த பதிவுகளை படித்துக் கொண்டு இருக்கிறேன். குறித்துக் கொண்டும் இருக்கிறேன்.
    உங்கள் வரவுக்கும், கருத்துக்கும் நன்றி.

    பதிலளிநீக்கு
  59. விசிட் : http://blogintamil.blogspot.in/2013/07/3_25.html

    வாழ்த்துக்கள்...

    பதிலளிநீக்கு
  60. தொடர்பதிவு : http://kovai2delhi.blogspot.in/2013/07/blog-post_26.html

    தொடர வாழ்த்துக்கள்...

    பதிலளிநீக்கு
  61. நல்ல நினைவுப்பகிர்வு,வாழ்த்துக்கள்/

    பதிலளிநீக்கு
  62. வாங்க விலமன், வாழ்க வளமுடன்.
    உங்கள் வரவுக்கும் கருத்துக்கும் நன்றி.

    பதிலளிநீக்கு
  63. திருச்செந்தூருக்கு போகனும்னு நினைத்தோம் இந்தமுறை இந்தியா சென்றபோது.. ஆனால் நிறைய கோயில்கள் திட்டமிட்டபடி போக முடியவில்லை...

    அந்த குறையை போக்கிவிட்டீர்கள்பா...

    ஸ்டார் ஃபிஷ் அதுவும் ஒரு உயிரினம் தானே.. பாவம் வாழ விடமாட்டேன்கிறார்களே மக்கள்...

    படங்கள் எல்லாம் மிக அற்புதம் மேம்...

    குழந்தை மொட்டை அடித்தப்பின் இன்னும் அழகு கூடுதல்...

    அன்பு நன்றிகள் மேம் பகிர்வுக்கு..

    பதிலளிநீக்கு
  64. வாங்க மஞ்சுபாஷிணி, வாழ்க வளமுடன்.
    அடுத்த முறை வரும் போது திருச்செந்தூர் தரிசனம் செய்யலாம்.
    ஸ்டார்ஃபிஷ் திருசெந்தூர் கடல் ஓரத்தில் அடிக்கடி ஒதுங்கும் அதை சங்கில் நூல் சுற்றி அதன் கீழ் இந்த ஸ்டார்ஃபிஷ்கட்டி கண்திருஷ்டிக்கு வீடுகளில் கட்ட விற்பார்கள். ஒன்றின் இறப்பு சிலருக்கு வயிற்று பிழைப்பு.
    உங்கள் வரவுக்கும், கருத்துக்கும் நன்றி.

    பதிலளிநீக்கு
  65. வாங்க திண்டுக்கல் தனபாலன், வாழ்க வளமுடன்.உங்கள் போஸ்ட் மெயிலில் ஒளிந்து கொண்டு இருந்தது ஜி மெயிலின் குளறுபடிகளால் இன்று தான் பார்த்தேன், தகவலுக்கும், வாழ்த்துக்கும் நன்றி.

    பதிலளிநீக்கு
  66. வாங்க ஜோதிஜி, வாழ்க வளமுடன்.
    உங்கள் வரவுக்கும், கருத்துக்கும் நன்றி.

    பதிலளிநீக்கு