கட்டுரை லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
கட்டுரை லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

சனி, 14 ஜனவரி, 2023

தினம் ஒரு வெண்டைக்காய் !குறையும் சர்க்கரை உறுதியாய்!!

உடல் நலம் காப்போம் நோய்நாடி நோய்முதல் நாடி அதுதணிக்கும் வாய்நாடி வாய்ப்பச் செயல் - குறள். தற்போது அதிகமாகி வரும் சர்க்கரை நோய் பற்றி தினமணி மருத்துவமலர்( 2001) கூறிய சில கருத்துக்களை இங்கு தொகுத்துத் தந்துள்ளேன் மக்களிடம் சர்க்கரை நோய் உள்பட எந்த நோயாக இருந்தாலும் அது குறித்த விழிப்புணர்வு அவசியம் இந்தியாவில் கடந்த 10 ஆண்டுகளாக சர்க்கரை நோய் குறித்த விழிப்புணர்வு அதிகரித்து வருகிறது. 

 சர்க்கரை நோய்ச் சிகிச்சைக்கான சிறப்பு மருத்துவமனைகளில் சர்க்கரை நோய்க் கல்வித் துறை என்ற தனிப் பிரிவே செயல்படுகிறது சர்க்கரை நோயாளிகளின் மாத்திரை அளவு குறைய வேண்டுமென்றால் தினமும் நடைப் பயிற்சி, உடற்பயிற்சி,செய்யவேண்டும்.இப்படி செய்தால் உடலில் உள்ள இன்சுசிலின் நன்றாக வேலை செய்யும்.

ரத்தஓட்டம் அதிகரிக்கும், உடல் எடை இயல்பான அளவுக்குக் குறையும், இதயத்துக்குத் தீமை செய்யும் கெட்ட கொலஸ்டரால் (எல்டிஎல்) குறைக்கும்,நல்லகொலஸ்டரால்(எச்டிஎல்) அளவை அதிகரிக்கிறது, மன அழுத்தம் குறையும், நன்றாக தூக்கம் வரும்.உணவு எளிதில் ஜீரணமாகும். மொத்தத்தில் வாழ்க்கை சுபிட்சமாக இருக்கும்.

 உடற்பயிற்சிகளைத் தொடங்குவதற்கு முன்பு 5 முதல் 10 நிமிஷங்கள் உங்களைத் தயார்ப் ப்டுத்திக் கொள்ளுங்கள். இதேபோன்று உடற்பயிற்சியை முடித்தவுடன் 5 முதல் 10 நிமிஷங்கள் இளைப்பாறுங்கள். 

 தினமும் 30 முதல் 45 நிமிடங்கள் வாக்கிங் செல்லுங்கள். முடிந்தவரை வேகமாக நடக்க முயற்சி செய்யுங்கள். நடந்து செல்லும்போது நீண்ட வழியையே தேர்வு செய்யுங்கள். லிஃப்ட்டில் செல்லாமல் மாடிக்குப் படி ஏறிச்செல்லுங்கள். கடைக்குச் செல்லும் போது வாகனங்களைச் சிறிது தொலைவிலே நிறுத்திவிட்டு மீதித் தொலைவை நடந்து செல்லுங்கள். 

 முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள்: தாழ் சர்க்கரை நிலை காரணமாகத் தலை சுற்றல், மயக்கம் ஏற்படலாம் என்பதால் சர்க்கரை நோயாளிகள் கடைப் பிடிக்கவேண்டியவை: கையில் எப்போதும் சாக்லேட்,மிட்டாய் வைத்துக் கொள்ளுங்கள்.

 சர்க்கரை நோய் அடையாள அட்டையை எப்போதும் சட்டைப் பாக்கெட்டில் வைத்திருங்கள். உடற்பயிற்சியின்போது நெஞ்சில் வலி அல்லது அசௌகரியம் ஏற் பட்டால் உடனடியாக உடற்பயிற்சியை நிறுத்திவிடுங்கள். இவ்வாறு அம்மலர் கூறுகிறது.

 இனி, வெண்டைக்காய் விஷயத்திற்கு வருகிறேன். தமிழ் நாடு ஓய்வுபெற்ற கல்லூரி ஆசிரியர் கழக ஒன்பதாவது மாநில மாநாட்டு மலரில் வெண்டைக்காய் பற்றி Dr. N.செல்லையா அவர்கள் எழுதி இதைப் படித்தவர்கள் நகல் எடுத்துப் பலருக்கும் கொடுத்தால் பெரும் தொண்டு! தேவைப் பட்டவர்கள் கேட்டுப் பின்பற்றிப் பயன் அடைந்தால் நல வாழ்வு என்று எழுதியிருந்தார். 

அதை நான் இங்கு தருகிறேன். நீங்களும் இதைப் படித்து மற்றவர்களுக்கு சொல்லலாம். // ஒரு வெண்டைக்காயை எடுத்துக்கொள்ளுங்கள். அதன் தலையையும், நுனியையும் வெட்டி எறிந்துவிடுங்கள். மீதியுள்ள காயை இரண்டு அல்லது மூன்று துண்டங்களாக நறுக்கிக்கொள்ளுங்கள். இரவு படுக்கப் போகும் முன் அரை டம்ளர் தண்ணீரில் அதை ஊறப்போடுங்கள் .காலையில் எழுந்ததும் வெறும் வயிற்றில் முதல் வேலையாக வெண்டைக்காய் துண்டங்களை வெளியே எடுத்துப்போட்டுவிட்டு அந்த தண்ணீரைக் குடியுங்கள்.

 (குறைந்தது ஒரு மணி நேரம் காபி, டீ வேறு எதுவும் அருந்த வேண்டாம்.) எதற்கு இது? இப்படிக் குடித்து வந்தால் நீரிழிவு நோய் உள்ளவர்களுக்கு இரத்தத்தில் உள்ள ச்ர்க்கரை இரண்டே வாரங்களில் மளமள என்று இறங்கிவிடும் என திரு.பி.எஸ் பஞ்சநாதன் அவர்கள் தன் நண்பர் புகழ்மிக்க எழுத்தாளர் திரு.ரா.கி.ரங்கராஜன் அவர்களுக்கு மின் அஞ்சல் அனுப்பியுள்ளார்.

 இதனை திரு.ரா.கி.ர அண்ணாநகர் டைம்ஸ் பத்திரிக்கையில் நாலு மூலைப் பகுதியில் வெள்யிட்டுள்ளார். அப்பத்திரிக்கைக் குறிப்பில் மேலும் கூறியுள்ள செய்திகள் யாவை தெரியுமா? இதோ: தன் சர்க்கரை லெவல் இற்ங்கிவிட்டதாகவும் தன் சகோதரி இன்சுசிலின் ஊசி போட்டுக்கொள்வதை நிறுத்தி விட்டதாக்வும் இப்பொழுது அவர்கள் பழம், ஐஸ்கிரீம் எல்லாவற்றையும் சாப்பிடுகிறார்கள் எனவும் இன்சுலின் பக்கம் போவதில்லை எனவும் திரு.பி.எஸ்.பஞ்சநாதன் தெரிவித்துள்ளார்.

 தினம் ஒரு வெண்டைக்காய் தானே செலவு. திரு. ரா.கி. ரங்கராஜன் அவர்கள் மேலும் எழுதியுள்ளது: நானும் என் ம்னைவியும் நீரிழிவு நோயளிகள்தான். 190 மிலிகிராமுக்கும் சற்று மேலோ,கீழோ இருந்து வருகிறது. சில் சமயங்களில் 230 வரை எகிரி விடும் நண்பர் பஞ்சநாதனின் இமெயில் கிடைத்த மறுதினம் முதல் இரவில் வெண்டைக்காய் தண்ணீர் வைத்து காலையில் குடித்து வருகிறோம், 15 நாட்கள் சென்றபின் இரத்தப்பரிசோதனை செய்து பார்த்தபோது என்ன ஆச்சிரியம்! எனக்கு 60 இறங்கி இருக்கிறது என் மனைவிக்கு 30 இறங்கி இருக்கிறது. புதிதாக ஏதாவது மாத்திரை மருந்து சாப்பிட்டோமா என்றால் அறவே கிடையாது. பல வருடங்களாக 3 வேளைகளும் எதை விழுங்கி வருகிறோமோ அதே மாத்திரைகள்தாம். உணவில் கட்டுப்பாடா என்றால் புதிதாக அப்படி ஒன்றும் இல்லை. வாடிக்கையான உணவுதான். ஆகவே இந்த அதிசயம் வெண்டைக்காய் வைத்தியத்தினால் மட்டுமே நடந்திருக்கிறது என்று திடமாக நம்புகிறேன். 

 இந்த மருந்தைத் தொடர்ந்து அருந்தவும் தீர்மானித் திருக்கிறேன்.இதைப் படிப்பவர்கள் பின்பற்றிப் பாருங்கள். பலன் இல்லை என்றால் விட்டுவிடுங்கள். செலவே இல்லாத வைத்தியம்.ஆனால் ஒன்று,வெண்டைக்காய்த் தண்ணீர் ஆகையால் வாயில் அரை நிமிடம் கொளகொள என்றிருக்கும். கூடவே ஒரு மடங்கு சாதா தண்ணீர் குடித்தால் அந்த உணர்வும் அகன்றுவிடும். அல்லது ஒரு திராட்சைப் பழத்தை மெல்லலாம். இந்த வெண்டைக்காய்த் தண்ணீரை எவ்வளவு நாள் அருந்தி வரவேண்டும்?எப்போது நிறுத்துவது? தற்சமயம் சாப்பிட்டு வரும் மாத்திரைகளை நிறுத்தலாமா?ரத்தத்தில் சர்க்கரையின் அளவு குறைந்து விட்டால் அபாயம் ஆயிற்றே? இப்படி எல்லாம் பல அன்பர்கள் சந்தேகம் எழுப்பியுள்ளார்கள்.

 மாதத்திற்கொருமுறை ரத்தப் பரிசோதனை செய்து கொள்ளுவது அவசியம்.அந்த ரிபோர்ட்டைத் தகுந்த டாக்டரிடம் காட்டுங்கள். வெண்டைக்கை வைத்தியத்தைத் தொடரலாமா?அல்லது தற்காலிகமாக நிறுத்திக் கொள்ள லாமா? என அவரிடம் கேளுங்கள். அவர் சொல்கிறபடி செய்யுங்கள்-என அறிவுறுத்தியுள்ளார் திரு.ரா.கி.ர அவர்கள். நன்றி: திரு.தி.எஸ்.பஞ்சநாதன், எழுத்தாளர் திரு.ரா.கி. ரங்கராஜன (இ.மெயில் முகவரி:rankamala @ yahoo.co.in) அண்ணா நகர் டைம்ஸ்-ஏப்ரல் 19-25,2009 மற்றும் ஏப்ரல் 26-மே2,2009.// நம் வீட்டுத் தோட்டங்களில் இயற்கை உரமிட்ட வெண்டைக்காய் கிடைத்தால் இன்னமும் நல்லது. வாழ்க நலமுடன். வாழ்க வளமுடன்.

வெள்ளி, 11 செப்டம்பர், 2009

பாரதியாரை நினைவுகூர்வோம்

பாரதியார்

நம் தேசிய கவி பாரதியார்க்கு இன்று நினைவு நாள்.
அவரை நினைவு கூர்வோம்.

ஓராயிரம் ஆண்டு ஓய்ந்து இருந்த தமிழகத்தில்

வாராது போல் வந்த மாமணி பாரதி.

மகாகவி, மக்கள்கவி, மானுடம் பாட வந்த வரகவி

பாரதி.

பாட்டுக்கு ஒரு புலவன் பாரதியடா என்று கவிமணி
தேசிக விநாயகம்பிள்ளை பாடியது போல் அவர்
சொல்லாத, எழுதாத விஷயங்கள் எதுவும் இல்லை.


பக்திப் பாடல்கள்,தேசபகதிப் பாடல்கள்,தன்வரலாறும்
பிறபாடல்களும்,கற்பனையும் கதையும்,
பொதுமைப் பாடல்கள் என்று நிறைய எழுதியிருக்கிறார்.

கடவுள் பாடலிலும் பிறர்துயர் தீர்த்தல்,பிறர்நலம்
வேண்டுதல் என்று யார் எந்தப்பெயரிட்டு அழைத்தாலும்
அந்த கடவுள் அவ்ர்களுக்கு அருள் புரிதல் வேண்டும்
என்கிறார். நமக்குத் தொழில் கவிதை நாட்டிற் குழைத்தல்
என்னை நீ காப்பாய் என்கிறார்.

அச்சமில்லை யச்சமில்லை என்றுபாடி நம் அச்சத்தை
போக்குகிறார்.ஜயமுண்டு பயமில்லை இந்த ஜன்மத்திலே
விடுதலையுண்டு, என்றுபாடி வெற்றிப்பாடல் பாடுகிறார்,
ஜய பேரிகை கொட்டடா-கொட்டடா என்று.

காக்கை,குருவி யெங்கள் ஜாதி-கடலும் மலையுமெங்கள்
கூட்டம் என்று சமத்துவம் பேசுகிறார்.
ஓயாதே நின்றுழைத்திடுவாய் என்று மனத்திற்குக் கட்டளை
யிடுகிறார்,கவலைப்படும் மனதிற்குஅந்த கவலையை விட்டு
வெளியில் வந்து இன்று புதிதாய்ப் பிறந்தோ மென்று நீவீர்
எண்ணமதைத் திண்ணமுற இசைத்துக் கொண்டு
தின்றுவிளை யாடியின் புற்றிருந்து வாழ்வீர்; என்று
வாழ்த்துகிறார்.

தேசிய கீதத்தில்// ஒன்றுபட்டாலுண்டு வாழ்வே-நம்மில்
ஒற்றுமை நீங்கிலனைவர்க்கும் தாழ்வே//என்று ஒற்றுமையை
வலியுறுத்துகிறார்.

நாட்டு வணக்கத்தில் நாட்டுக்காக இன்னுயிர் நீத்தவர்களுக்கு
வீர வணக்கம் தெரிவிக்கிறார்.

பாருக்குள்ளே நல்ல நாடு- எங்கள் பாரதநாடு என்றும்
வெள்ளிப் பனிமலையின் மீதுலவுவோம்-அடி
மேலைக் கடல்முழுதுங் கப்பல்விடுவோம்
பள்ளித் தலமனைத்துங் கோயில்செய்குவோம் எங்கள்
பாரத தேசமென்று தோள்கொட்டுவோம் என்று நம் உடலில்
புது ரத்தம் பாயசெய்கிறார்.

தாயின் மணிக்கொடி பாரீர்-அதைத்
தாழ்ந்து பணிந்து புகழ்ந்திட வாரீர்

கம்பத்தின் கீழ்நிற்றல் காணீர்-எங்கும்
காணரும் வீரர் பெருந்திருக் கூட்டம்
நம்பற் குரியரவ் வீரர்-தங்கள்
நல்லுயி ரீந்துங் கொடியினைக் காப்பார் என்று

கொடி வணக்கத்தில் வீரர் புகழ் பாடுகிறார்.
கொடி வணக்கம் பாடும் போது நம் உடல்
சிலிர்த்துப் பூரிப்பு அடைவதை உணரலாம்.

அஞ்சி வாழ்பவர்களைக் கண்டு
நெஞ்சு பொறுக்குதிலையே-இந்த
நிலைகெட்ட மனிதரை நினைத்துவிட்டால் என்று
ஜனங்களின் தற்காலநிலைமை என்று பாடினார்.அது
இக்காலமனிதருக்கும் பொருந்துகிறது.

ஒளி படைத்த கண்ணினாய் வா வா வா
உறுதிகொண்ட நெஞ்சினாய் வா வா வா என்று
பாரதத்தை வாழ்த்துகிறார்.

பாரத சமுதாயம் எல்லோருக்கும் உரியது என விளக்க
எல்லாரு மோர்குலம் எல்லாருமோரினம்
எல்லாரு மிந்திய மக்கள்
எல்லாருமோர்நிறை எல்லாரு மோர்விலை
எல்லாரும் இந்நாட்டு மன்னர்-நாம்
எல்லாரும் இந்நாட்டு மன்னர்-ஆம்
எல்லாரும் இந்நாட்டு மன்னர்- வாழ்க

என்று பாடுகிறார்.

செந்தமிழ் நாடெனும் போதினிலே-இன்பத்
தேன் வந்து பாயுது காதினிலே என்று
தமிழ் நாட்டைப் போற்றிப் புகழ்கிறார்.

வாழ்க நிரந்தரம் வாழ்க தமிழ்மொழி
வாழிய வாழியவே.என்று பாடுகிறார்.

சுதந்திரப் பயிருக்காக:
தண்ணீர்விட்டோவளர்த்தோம்? சர்வேசா! இப்பயிரைக்
கண்ணீராற் காத்தோம்; கருகத் திருவுளமோ

மேலோர்கள் வெஞ்சிறையில் வீழ்ந்து கிடப்பதுவும்
நூலோர்கள் செக்கடியில் நோவதுங் காண்கிலையோ? என்ற
இந்தப் பாட்டைக் கப்பலோட்டிய தமிழன் படத்தில்
திருச்சி லோகநாதன் அவர்கள் உருக்கமாய்ப் பாடி
இருப்பார்கள். அதைக் கேட்டால், கண்ணீர் அருவியாய்க் கொட்டும்.

என்று தணியுமிந்த சுதந்திர தாகம்?
என்று மடியுமெங்கள் அடிமையில் மோகம்?
இந்தப் பாடலையும் திருச்சி லோகநாதன் பாடியிருப்பார்,
கப்பலோட்டிய தமிழன் படத்தில். பாரதியார் பாடல்கள்
அந்தக் காலம் முதல் இந்தக்காலம் வரை சினிமாக்களில்
பாடப் படுகிறது. கர்நாடக இசை கச்சேரிகளிலும்
பாடப் படுகிறது,இன்னும் அதிகமாக பாட வேண்டும்.
பள்ளிகளில் குழந்தைகளுக்குப்
பாரதியார் பாடல்கள் கற்றுத் தரவேண்டும்.
நான் பள்ளியில் படிக்கும் போது உடற்கல்வி ஆசிரியர்
சொல்லிக் கொடுத்தபடி
ஒளி படைத்த கண்ணினாய் வா வா வா என்ற
பாடலைப்பாடிக் கொண்டே உடற்பயிற்சி செய்வோம்.
சுதந்திர தினத்தன்று ஆடுவோமே பள்ளு பாடுவோமே
என்ற பாட்டைப் பாடுவோம்.

நிமிர்ந்த நன்னடை நேர்கொண்ட பார்வையும்
நிலத்தில் யார்க்கு மஞ்சாத நெறிகளும்
திமிர்ந்த ஞானச் செருக்கும் இருப்பதால்
செம்மை மாதர் திறம்புவ தில்லையாம்

என்று அவர் கூறியபடி இக்காலப் பெண்கள் எல்லாத்
துறைகளிலும் சிறந்து விளங்குவது மகிழ்ச்சியளிக்கிறது.











.

திங்கள், 10 ஆகஸ்ட், 2009

தாய்மை





”பேருலகில் வாழுகின்ற மக்களெல்லாம் பெண்ணினத்தின் அன்பளிப்பே எனில்
வேறென்ன பெருமை இதைவிட எடுத்துப் பேசுதற்கு”

தெய்வம் மனித வடிவத்தில் வரும் என்று சொல்வார்கள். அப்படித்தான்
ஒவ்வொரு வீட்டிலும் தாய் என்ற தெய்வம் குடிகொண்டுள்ளது. ஒவ்வொருவரும்
அந்த குடியிருந்த கோயிலை மறக்க முடியாது - மறக்கக் கூடாது,

மாதா,பிதா,குரு, தெய்வம் என்று சொல்வார்கள். முதல் இடம் தாய்க்குத்தான்.
மாதா சொல்லித்தான் மற்றவர்களை நமக்குத் தெரியும்.
’அன்னையும் பிதாவும் முன்னறி தெய்வம்’,’தாயிற் சிறந்த கோயிலும்
இல்லை.’என்றெல்லாம் தாயின் பெருமையைக் கூறிக் கொண்டே போகலாம்.

எனது தாய்

எனது தாயைப் பற்றி முதலில் கூறுகிறேன். வீரலெட்சுமி என்ற
பெயருக்கு ஏற்றாற் போல் வீரமிகு தாய்.

'சிதைவிடத்து ஒல்கார் உரவோர் புதையம்பிற்
பட்டுப் பாடூன்றும் களிறு' என்றார் திருவள்ளுவர்.


போர்க்களத்தில் உடம்பை மறைக்கும் அளவு
அம்புகளால் புண்பட்டும் யானையானது தன் பெருமையை நிலை
நிறுத்தும். அதுபோல ஊக்கம் உடையவர் துன்பங்கள் வந்த இடத்திலும்
மனம் தளராமல் இருப்பார்கள் என்பதற்கிணங்க வாழ்ந்தவர்கள்.
எனது தந்தையார் 51 வயதில் திடீரென்று மறைந்துவிட்டபோதும், மேலும் மேலும்
துன்பங்கள் வந்தபோதும் எங்கள் குடும்பம் என்ற படகு தத்தளித்தபோதும்
இறைநம்பிக்கை என்ற துடுப்பைக் கொண்டு என் தாயார் படகைக் கரை
சேர்த்தார்கள்.

எனது அக்காவிற்கும், எனக்கும் தந்தையார் இருக்கும்போதே
திருமணம் ஆகிவிட்டது. தம்பி தங்கைகளோ சிறு குழந்தைகள் . அண்ணன்
படித்துக் கொண்டிருந்தான்.தம்பி தங்கைகளை வளர்த்துத் திருமணம் செய்து
வைத்தார்கள். பேரன்,பேத்திகள்,கொள்ளுப்பேரன், கொள்ளுப்பேத்தி ஆகியோரையும் பார்த்து மகிழ்ந்து, தன் 75 ஆம் வயதில் இறைவனடி சேர்ந்தார்கள்.
இறக்கும்போது எங்களிடம் ,"நான் நிறைவான வாழ்க்கை வாழ்ந்து
விட்டேன்.உங்கள் அப்பா என்னிடம் விட்டுச் சென்ற கடமைகளை முடித்து
விட்டேன். நான் இறந்தபின் யாரும் அழக்கூடாது .தேவாரம், திருவாசகம்
கருடப்பத்து படியுங்கள் "என்று கேட்டுக் கொண்டு எங்கள் தந்தை இறந்த அதே
கார்த்திகை மாதம் திங்கட்கிழமை இறைவனடி சேர்ந்தார்கள்.
எல்லாப் பேரக்குழந்தைகளுக்கும் கோலம், சமையற்குறிப்பு , எம்பிராய்டரி
என்று எல்லாவற்றையும் சொல்லிக் கொடுத்துவிட்டார்கள்.

எனது மாமியார்

"மங்கலம் என்ப மனைமாட்சி மற்றதன்
நன்கலம் நன்மக்கட் பேறு”

என்றார் திருவள்ளுவர். மனைவியின் நற்பண்பே இல்வாழ்க்கைக்கு மங்கலம்
என்றும் நல்ல மக்களைப் பெறுதலே அதற்கு நல்ல அணிகலன் என்றும்
கூறினார். நல்ல அணிகலன் முத்து. முத்துப்போல் விளங்குவதால் எங்கள்
மாமியாருக்கு முத்தம்மாள் என்ற பெயர் பொருத்தமுடையதாகவே உள்ளது.

முத்தம்மாள் பெற்ற நல்முத்துக்கள் ஐந்து. நல்லொழுக்கம், நல்ல இறை
நம்பிக்கை கொண்ட நல்ல மனிதராய்களாய் வளர்த்து ஆளாக்கியவர் அவர்.
ஐந்து மருமகள்களையும் நல்ல முறையில் பார்த்துக்கொள்கிறார்கள்.எனது
மாமனாருக்கு நல்ல வாழ்க்கைத்துணையாக இருந்து வருகிறார்கள்.
இப்போது நூறு வயதான என் மாமனாருக்கு நல்லதொரு தாயாகி ஒரு
குழந்தையைப் பார்த்துக் கொள்வது போல் பேணிப் பாதுகாத்து வருகிறார்கள்.
அவர்களுக்கும் வயது 85 ஆகிறது. தனது முதுமையால் ஏற்படும் உடல்
துன்பத்தைக் காட்டிக் கொள்ளாமல் தன் கணவரை கண்ணும் கருத்துமாய்ப்
பாதுகாக்கிறார்.

விடுமுறைக்குப் பேரன் பேத்திகள் வந்தால் அவர்களுக்குப் பிடித்த பலகாரங்
களைச் செய்து அவர்களை மகிழ்விப்பார். இப்போது முதுமை காரணமாகப்
பழையமாதிரி செய்யமுடியாமற் போனாலும் ’நமக்கு முடியும்போது வருவார்
களா?’ என்று கேட்டுவிட்டு எளிதாகச் செய்யும் பலகாரங்களைச் செய்து
கொடுத்து மகிழ்வார்கள்.

பேரன் பேத்திகளோடு இக்கால அக்கால எல்லா உலக விஷயங்களையும்
பேசி அவர்களை மகிழ்விப்பார்கள். அவர்களுக்குத் தெரியாத விஷயங்களே
இல்லை என்று கூறலாம்.

எனது மகள்

எனது மகள் இரண்டு குழந்தைகளுக்குத் தாய் . தன் குழந்தைகள் பல கலை
களிலும் சிறந்து விளங்கவேண்டும் என்று பாடுபடும் தாய். தன் குழந்தைகளுக்கு
எவ்வளவு விஷயங்கள் சொல்லிக் கொடுக்க முடியுமோ அவ்வளவு
விஷயங்களையும் சொல்லிக் கொடுத்திருக்கிறாள். நடனம்,பாட்டு.
விளையாட்டு,பொது அறிவு ஆகியவற்றில் அவர்கள் சிறக்கச் செய்திருக்கிறாள்.
அதைப் பார்க்கும்போது, ஆச்சரியமாகவும் மகிழ்ச்சியாகவும் உள்ளது.
தம்மின் தம் மக்கள் அறிவுடைமை என்பது போல் எனது மகள் என்னைக்
காட்டிலும் சிறந்த தாயாக விளங்குகிறாள்.

எனது மருமகள்

எனது மருமகளும் இப்போது ஒரு ஆண்மகவிற்குத் தாயாகி இருக்கிறாள்.
அவள் இருப்பது அமெரிக்காவில். அங்கு பிரசவ நேரத்தில் கணவனும் உடன்
இருக்கலாம். என் மகன் உடன் இருந்தான். சுகப்பிரசவம் என்று சொல்லி
கடைசி நேரத்தில் ஆயுதம் போட்டு என் பேரனை வெளியில் எடுத்தார்கள்.
திருச்சி தாயுமானவரே பிரசவம் பார்த்தது போல் ’ டாக்டர் தாய் ’எனது
பேரனை எனது மருமகளிடம் கொடுத்தார்கள்.

எனது மருமகள் டாக்டருக்கு தாய்மையின் சிறப்பை அற்புதமாய்க் காட்டும்
சிலையை(தாய் குழந்தையை மார்போடு அணைத்துக் கொஞ்சும் சிலை)
கொடுத்து ,’எனக்கு என் மகனைக் கொடுத்த தேவதை நீங்கள்’ என்று கண்ணீர்
மல்கப் பாராட்டியபோது, சிலையையும் என் மருமகளையும் அணைத்துக்
கொண்டு அவர்களும் கண்ணீர் மல்கியபோது தாய்மையின் சிறப்பு
தெரிந்தது.

என் மருமகளுக்கும் பிரசவத்தின் போது உதவிக்கு வந்திருந்த தன் தாயின்
மீது அன்பும் பாசமும் அதிகரித்திருக்கும்.

எனது மகன் பிரசவத்தின் சமயம் உடனிருந்ததால் அவனுக்கும் தாய்மையின்
சிறப்பு தெரிந்திருக்கும்.அவனுக்கும் அவள் மேல் பாசம் அதிகரித்திருக்கும்.
அந்தக் காலத்தில் பெரியவர்கள் குழந்தையைப் பார்க்கவரும் போது
அம்மாவைப் பார்த்து ’பெற்றுப் பிழைத்தாயா?’ என்று கேட்பார்கள்.
ஆம். பெற்றவளுக்கு அது மறுபிறவிதான்!

தாய்மை இப்படி பல உறவுகளில் பரிணமிக்கிறது!

பெண்வயிற்றில் உருவாகிப் பெண்பாலுண்டே வளர்ந்தாய்
பெண்துணையால் வாழ்கின்றாய் பெண்ணின் பெருமையுணர்

தாய்மையைப் போற்றுவோம்.