புதன், 4 நவம்பர், 2026

அரிசோனா தமிழ்ச்சங்கத்தின் ஆண்டு மலர் -பாலைப்பூ 2026 மரகத இதழ்


                    




அரிசோனா தமிழ்ச் சங்கத்தின்  ஆண்டு மலர் "பாலைப்பூ 2026 மரகத இதழில் "   எழுத்தாகட்டும் உங்கள் எண்ணங்கள் என்று   கேட்டு இருந்தார்கள் கொடுக்கப்பட்ட தலைப்புகள் அனைத்தும் அருமை. அதில் நான் எடுத்து கொண்டது பெற்றோர் அனுபவங்கள் &  குழந்தை வளர்ப்பு.


எங்கள் காலத்தில் குழந்தைகளை  வளர்த்த அனுபவங்கள் இப்போது எவ்வளவு தூரத்திற்கு உதவும் என்று தெரியாது. 

அக்கால குழந்தை வளர்ப்பிற்கும் இக்கால குழந்தை வளர்ப்பிற்கும் இடையே மிகப்பெரிய சமூக மற்றும் வாழ்வியல் மாற்றங்கள் ஏற்பட்டுள்ளன.

 இக்காலத்தில் தொழில்நுட்ப அறிவு  உலகளவிய விழிப்புணர்வு,மற்றும் தங்கள் கருத்துக்களைத் தைரியமாக வெளிப்படுத்தும் சுதந்திரம் பெற்றுள்ளனர் குழந்தைகள்.

இப்போது குழந்தைகளுக்கு கற்க  உள்ள வசதி , வாய்ப்புக்கள் அதிகம். கல்வி முறை, பாடதிட்டங்கள்   மாற்றம் அடைந்துள்ளது.

அதிக  மதிப்பெண்கள் பெற வேண்டும் என்று பள்ளிகளில், வீடுகளில் பெற்றோர்கள்  எதிர்பார்க்கும் காலம் இது.  

இக் காலத்தில் குழந்தைகளை வளர்ப்பது பெற்றோர்களுக்கு மிகவும்  கடினமாக  இருக்கிறது. பல  சவால்களை சமாளிக்க  வேண்டி உள்ளது. 

போட்டிகள் அதிகம் உள்ள காலமாக இருக்கிறது.

இப்போது குழந்தை வளர்ப்பு என்பது பெற்றோர்களுக்கு அன்பும் , சவால்களும் நிறைந்த    பயணமாக இருக்கிறது.

குழந்தைகள் வளர்ப்பு ஒரு கலை என்றும் சொல்வார்கள்.

தன் பெற்றோர்கள் தன்னை வளர்த்தது போல தங்கள் குழந்தைகளை  வளர்க்க ஆசைபட்டாலும்  தங்கள்  பெற்றோர்களை விட    அன்பையும் , பாசத்தையும், கவனிப்பையும்  அதிகமாக சொல்லபோனால் தங்கள் வாழ்வே அதற்கு தான் என்ற அர்ப்பணிப்பு உணர்வுடன்  வளர்க்கும்  பெற்றோர்களாகத்தான் இன்றைய காலப் பெற்றோர்கள் இருக்கிறார்கள்.

தம்மிலும் தம் மக்கள் அறிவுடைமை மாநிலத்து 

மன்னுயிர்க்கெல்லாம் இனிது

= திருக்குறள்.

தம்பிள்ளைகள் அறிவு மிக்கவராக இருப்பது , தம்மைக் காட்டிலுமிப்பெரிய பூமியில் அழியாமல் தொடரும் உயிர்களுக்கு எல்லாம் இனிது .

- சாலமன் பாப்பையா

இந்த குறள் போல பெற்றோர்கள் தங்கள் பிள்ளைகள் தங்களைவிடச் சிறந்த அறிவு உடையவர்களாக விளங்குவதைக் கண்டு பெருமகிழ்ச்சி அடைகிறார்கள்.

இப்போது உள்ள குழந்தைகள் நிறைந்த அறிவுடையவர்களாக இருக்கிறார்கள்.  அப்பனுக்கு பாட சொன்ன சுப்பையா போல தாய் , தந்தையருக்கே நிறைய புதிய விஷயங்களை கற்றுக் கொடுக்கிறார்கள்.

பாரதி தாசன் அவர்கள் எழுதிய குடும்ப விளக்கில்  தாய் குழந்தைகளுக்கு பாடம் சொல்லி கொடுப்பதை பாடி இருப்பார்.

அறை வீடு கழகம்:-

தவழ்ந்தது தங்க தமிழ்ச் சுவை; அள்ளி

விழுங்கினர்  பிள்ளைகள்

(குடும்ப விளக்கு தாய் தான் வாத்திச்சி)

இரவு உணவு உண்டு முடித்த குழந்தைகளுக்கு ஓழுங்காக உட்கார வைத்து பாடம் சொல்லிக் கொடுத்தாள். அன்னையே  ஆசிரியையாகிப் பாடம் சொல்லிக் கொடுத்ததால் வீடே அங்குப் பள்ளிக் கூடம் ஆனது .

தந்தை மகற்காற்றும் நன்றி அவையத்து 

முந்தி இருப்பச் செயல்

- திருக்குறள்

தகப்பன் தன் பிள்ளைக்குச் செய்யும் நல்ல உதவி அவன் கற்றவர்கள் நிறைந்த சபையில் மற்றவர்களை விட முந்தியிருக்கும்படி  மகனுக்கு கல்வி மற்றும் நல்லொழுக்கத்தைக் கொடுப்பதுதான்.

ஈன்று புறந்தருதல் என் தலைக்கடனே

சான்றோன் ஆக்குதல் தந்தைக்குக் கடனே

- பொன்முடியார் எழுதிய புறநானூற்றுப்பாடல்.

இந்த பாடலில் தாய் தந்தையின் கடமையை சொல்கிறது.

மாதா, பிதா, குரு தெய்வம் என்ற  வரிசையில் முதன்மை இடம் பிடிப்பவர்கள் பெற்றோர்களே! பெற்றோர்களின் பொறும்பும் கடமையும் அளவிட முடியாது.

என் பேரன் கதை எழுதும் போது, கதை சொல்லும் போதும் இன்று ஒரு அழகான நாள் என்றுஆரம்பிப்பான். 

அது போல குழந்தைகளை வளர்க்கும்  காலங்கள் ஒரு அழகான நாட்கள்தான்.

ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு அனுபவம் கிடைக்கும்.

அப்போது உள்ள குழந்தைகளுக்கு பெற்றோர், பாட்டி, தாத்தா, ஆசிரியர் , கற்றுக் கொடுப்பார்கள். வெளியில் போனால் உலகம் கற்றுக் கொடுக்கும்.

 ஆனால் இன்றைய குழந்தைகளின் கைகளில் உலகம் இருக்கிறது, மொபைல், டேப்லெட், கணினித் திரைகளில்   நிறைய விஷயங்களை அவர்களே தெரிந்து கொள்ளகூடிய  வசதி வாய்ப்புகள் அதிகம். பெற்றோர்கள்  எது அவர்களுக்கு தேவை, எது தேவை இல்லை என்பதை  குழந்தைகளுக்கு எடுத்து சொல்லி அவர்களை நல்வழி படுத்தும் மிக பெரிய பொறுப்பில்  இருக்கிறார்கள். அவர்களை எப்போதும்  கண்காணித்து வர வேண்டும். 

"விளையும் பயிர் முளையிலே தெரியும்"  என்பது போல  குழந்தைகளும்  வளரும்பருவத்திலேயே  நல்ல  பழக்க வழக்கத்தோடு    செழித்து வளர பெற்றோர்களின்   அன்பு எனும் நீர்,  சூரிய ஓளி,  உரம் போல   அன்பும் அரவணைப்பும், பயிரை பாதுகாக்க வேலி போல  அன்பு கவனிப்பும் கொடுத்தால்      நாளைய சமுதாயத்தை நல்வழிப்படுத்தும்  நல் வழிகாட்டியாக இருப்பார்கள் குழந்தைகள் .

பயிர்களுக்கு இடையே வளரும் தேவையற்ற களைகளை நீக்கினால் பயிர் நன்றாக செழிப்பாக வளரும்  அதுபோல குழந்தைகளிடம் இருக்கும்  சில வேண்டாத குணங்களை  ஆரம்பத்திலேயே  கவனித்து அன்போடு திருத்தி விட்டால்  எதிர்காலத்தில் சிறந்த குடிமக்களாக மாறி தங்களின் குடும்பத்திற்கும் நாட்டிற்கும் பெருமை தேடித் தருவார்கள்.

பெற்றோர்கள் குழந்தைகளுக்கு   நாங்கள் இருக்கிறோம் உங்களுக்கு என்று நம்பிக்கை கொடுக்க வேண்டும்.   குழந்தைகள் பள்ளி சென்று வந்ததும்   அவர்கள் அனுபத்தை கேட்கும் பழக்கத்தை   ஏற்படுத்தி கொள்ள வேண்டும், கல்லூரி பருவத்தில் அனைத்தையும் பகிரும்  உற்ற தோழியாக , தோழனாக பெற்றோர்கள்  இருந்தால்  எதுவானாலும்  பயமில்லாமல் தாய் தந்தையரிடம் மனம் விட்டு பேசலாம், பகிரலாம் என்ற எண்ணம் வரும். 

அவர்கள் நண்பர்களை கவனிக்க வேண்டும். பெற்றோர்கள்  தங்கள் குழந்தைகளின் நட்புகளை தங்கள் நட்புகளாக  ஆக்கி கொள்ள வேண்டும்.

தவறுகளும்  தோல்விகளும்  வாழ்க்கையின் ஒரு பகுதி, அதிலிருந்து  மீண்டு வர மன வலிமையை  கற்றுக் கொடுக்க வேண்டும். சிறு சிறு வேலைகளை அவர்களே செய்ய பழக்க வேண்டும். குழந்தைகளுக்கு  தானே சுயமாக முடிவு எடுக்கும் அனுமதி கொடுத்தால் தன்னம்பிக்கை வளரும் அவர்களுக்கு.

பாடப்புத்தகங்கள் மட்டுமின்றி பொது அறிவு மற்றும் நல்ல  கதை புத்தங்களை படிக்க ஊக்குவிக்க வேண்டும்

பணத்தின் மதிப்பு சேமிப்பின் முக்கியத்துவத்தையும், பணத்தை சரியான முறையில்  பயன்படுத்தவும் கற்றுக் கொடுக்க வேண்டும்.

ஒரு குழந்தைக்கு நீங்கள் தரும் மிகப்பெரிய சொத்து, அவர்களுக்கு நீங்கள் கற்றுக்கொடுக்கும் நல்ல ஒழுக்கமும், அவர்கள் சொந்தக் காலில் நிற்பதற்கான தன்னம்பிக்கையும்தான்.

ஒவ்வொரு வருடமும் நான் இங்கு  வரும் போது மகன், மருமகளின்  நண்பர்கள் குழந்தைகளை பார்க்கிறேன், அவர்கள் பெரியவரிடம் மரியாதை,மற்றும் அன்பாய், அக்கறையாக  பேசுவதும் அவர்களுக்கு ஓடி சென்று  உதவி செய்வதையும்  பார்க்கிறேன். படிப்பு மற்றும் பல கலைகளில் பன்முக திறமை பெற்றவர்களாக இருக்கிறார்கள். என் பேரனையும் சேர்த்து தான் சொல்கிறேன்.

 எல்லா பெற்றோர்களும்  நல்ல முறையில் குழந்தைகளை வளர்த்து இருக்கிறார்கள் என்ற மகிழ்ச்சி எப்போதும் ஏற்படும் எனக்கு.

இருவரும் வேலைக்கு போகும் பெற்றோர்கள் தான் அதிகம்,  சனி ஞாயிறு என்று ஓய்வு எடுக்காமல் தங்கள் குழந்தைகளை அழைத்து கொண்டு தமிழ்ச் சங்கம் வந்து அவர்கள் நடத்தும் தமிழ் பள்ளியில் சேர்த்து தமிழ் கற்க வைக்கிறார்கள்.

பெற்றோர்களும்  தமிழ் கற்றுக் கொடுக்கும் ஆசிரியாராக  தொண்டு செய்கிறார்கள். தமிழ்கற்றுக்  கொண்ட முன்னால் மாணவ , மாணவிகள் ஆசியர்களுக்கு உதவும் ஆசிரியராக  தொண்டுசெய்கிறார்கள் பெற்றோர்கள் அதற்கு    அனுமதித்து அவர்களை ஊக்கப்படுத்துகிறார்கள். 

மற்றும் குழந்தைகளுக்கு பிடித்த இதர கலைகளை கற்கவும் உறுதுணையாக இருக்கிறார்கள்.

தமிழ்ச்சங்கம் வாழ்க ! அதன் தமிழ்  தொண்டு மேலும் சிறக்க வேண்டும்.

தமிழ்ச்சங்கம்,  பொறுப்பாளர்கள் அனைவருக்கும் பாராட்டுக்கள் வாழ்த்துக்கள்.

 தமிழ் பள்ளி பொறுப்பாளர்கள், மற்றும் தன்னார்வ தொண்டர்கள் அனைவருக்கும் வாழ்த்துகள் 

தமிழ்ச்சங்கம் நடத்தும் தமிழ் பள்ளி வாழ்க ! மேலும் மேலும் வளர்க!

அன்புடன் 

கோமதி திருநாவுக்கரசு


வாழ்க வையகம் ! வாழ்க வையகம்! வாழ்க வளமுடன்!


இப்படி அரிசோனா  தமிழ்ச்சங்கம் ஆண்டு மலரில்   என் கட்டுரை மூன்றாவது தடவையாக இடம் பெறுகிறது.  (மூன்று ஆண்டு  என் கட்டுரை இடம் பெற்று இருக்கிறது)

மிகவும் சிறப்பாக  வந்து இருக்கிறது ஆண்டு மலர் . அதை தயார் செய்தவர்கள் அனைவருக்கும் வாழ்த்துகள், பாராட்டுகள்.


மலரில் இடம்பெற்ற தமிழ்த் தாய் படமும் , தமிழ்த்தாய் பாடலும்


அரிசோனாவும்  தமிழரின் பாலைத்திணையும் மகனும் ஒரு  கட்டுரை எழுதி இருக்கிறான். 





  படிக்க முடிகிறதா?படிக்க முடியவில்லை என்றால் இன்னொரு பதிவாக போடுகிறேன். படித்து விட்டு சொல்லுங்கள்.

பேரன் புகைப்பட போட்டியில்  முதல் பரிசு பெற்றான்


மகன் செய்தது



வீட்டில் தயார் செய்யும் போது எடுத்தது



 பள்ளி எடுத்து செல்லும் முன் வீட்டில்


பள்ளியில் எடுத்து கொண்டோம்.

நண்பரின் மகன் எங்களிடம் மிக பிரியமாக இருப்பான், கவின் அண்ணா கவின் அண்ணா என்று   அன்புடன் அழைப்பான்

இந்த ஆண்டு  இந்த ஐந்து குழந்தைகளும் திரு .முருகன் கே. பாதம் நினைவு  அறக்கட்டளை வழங்கும்  கல்வி உதவி தொகை பெரிசு  பெற்றார்கள்.




பேரன் கவின் பெற்றது


தமிழ் பள்ளி ஆசிரிய பெருமக்கள், மற்றும் முன் வரிசையில் இருக்கும் குழந்தைகள் உதவி ஆசிரியர்கள்.




பறை இசை முழக்கம்



நன்றாக  இசை முழக்கம் செய்தார்கள்.




நகைச்சுவை பட்டிமன்றம். "உடல் நலமும், உணவு பழக்கமும்."

போர் பயிற்சியை அழகான நடனமாக மாற்றினார்கள். பின்னால் இருக்கும் அந்த நான்கு பேரும் பாதி பாட்டில்கலந்து கொண்டார்கள். 

காய்கறிகளின் நன்மைகள் அதில் உள்ள சத்துக்களை சொல்லும் குழந்தைகள்

ஆண்டு விழாவில் ஆடல், பாடல், நாடகம் என்று குழந்தைகள் மிகவும் சிறப்பாக  செய்தார்கள்


ஒருவர் குறும்படமாக எடுத்து அனுப்பி இருந்தார். அயல் நாட்டில் வேலை செய்பவர்கள் அங்கு வந்து வேலை பார்க்க வேண்டிய காரணத்தை, மற்றும் ஊருக்கு திரும்பி போக ஆசை இருந்தாலும் இங்கு தொடர்ந்து வாழ்வதைப்பற்றி விளக்கமாய் சொன்னது.


முன்பு சகோதர , சகோதரிகளின் படிப்பு, திருமணத்திற்கு பொருள் தேட வந்தார்கள், அப்புறம் தாய் தந்தையரின் மருத்துவ செலவு, அதன் பின் தங்கள் குழந்தைகள் படிப்பு எதிர்காலம் என்று நீடிக்கிறது வெளி நாட்டில் வாழ்க்கை என்று முடிகிறது.  தங்களால் முடிந்த உதவிகளை சமுதாயத்திற்கும் உறவுகளுக்கும் செய்து வருவதை மகிழ்ச்சியுடன்  சொல்லி நிறைவு செய்து இருந்தார் .

சமையல் குறிப்புகள், மற்றும் கதைகள் , கவிதைகள் , "மற்றும் உங்கள் ஆரோக்கியத்திற்கு நேரம் ஒதுக்குவது உங்கள் மீதான் சுய நலம் இல்லை, அது குடும்பத்தின் மீதான் அக்கறை" என்று   விழிப்புணர்வு கட்டுரைகள். குழந்தைகள் கதை எழுதி இருந்தார்கள். 79 பக்கங்கள் கொண்ட அருமையான ஆண்டு மலர்.  மீண்டும் ஆண்டு மலரை சிறப்பாக தொகுத்தவர்களுக்கு  பாராட்டுக்கள், வாழ்த்துகள்.

ஞாயிறு நன்றாக நடந்தது ஆண்டு விழா. நிறைய கடைகள் போட்டு இருந்தார்கள். தீபாவளி பலகார கடை, துணிக்கடை, மற்றும் வளையல் , மாலைகள்,  கலைப்பொருட்கள் ஆகிய கடைகள், உணவு கடை என்று நிறைய இருந்தது. மாலை நேர சிற்றுண்டி வாங்கி உண்டோம். இரவு உணவு வாங்கி சென்றார்கள், அங்கும் சாப்பிட்டு சென்றார்கள்.

மழை பெய்து கொண்டே இருந்தது அன்று நாள் முழுவதும் இருந்தாலும் மழையை பொருட்படுத்தாமல் அனைவரும் வந்து தங்கள் குழந்தைகள் ஆடுவதை, பாடுவதை பரிசு பெறுவதை கண்டு களித்தார்கள்.


வாழ்க வையகம்! வாழ்க வையகம்! வாழ்க வளமுடன்!

-----------------------------------------------------------------------------------------------------------------------------

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக