ஞாயிறு, 25 அக்டோபர், 2026

கருப்பனே வாரும் அய்யா! அருள் வாக்கு தர வாரும் அய்யா!

அரிசோனாவில் மகன் . மருமகள், பேரன்,  வைத்த கொலு.

நவராத்திரி பண்டிகை நிறைவு  பெற்றதும்  இத்தனை நாட்கள் கழித்து பதிவு போடுகிறேன். நவராத்திரி சமயம் உறவினர் வருகை,  நட்புகள் வருகை அவர்கள் வைத்த கொலுவுக்கு போவது என்று நாட்கள் வேகமாக ஓடி விட்டது.

நல்ல பொழுதுகளாக போனது.கொலு பார்க்க வந்தவர்கள் பாட்டு பாடி , பேரன் தயார் செய்த "கண்ணன் வருவான்"

குறுபடத்தை பார்த்து சென்றார்கள்.




பதிவை படிக்க வருபவர்களுக்கு நல்வரவு


விநாயகர் அருளால் நவராத்திரி பண்டிகை நல்லபடியாக நிறைவு பெற்றது.

விநாயகரை வணங்கி உள்ளே வீட்டுக்குள் போவோம்.


குறும்புக்கார கண்ணன் உங்களை ஒளிந்து நின்று பார்க்கிறான்


வாங்க வாங்க என்று அழைக்கிறோம், சந்தனம், பன்னீர், கற்கண்டு  எடுத்து கொள்ளுங்கள்.


குட்டி பையன் இரட்டையரில் ஒருவன் சந்தனம், குங்குமம் இட்டு கொள்கிறான்.


மீண்டும் மீண்டும் நெற்றி நிறைய பூசி கொண்டான்.


சரஸ்வதி பூஜை அன்று  "ஏடு அடுக்குதல்" ஏடு அடுக்கி  புத்தகங்களில் மேல் அன்னை உருவை கொண்டு வருவோம். விஜயதசமி அன்று ஏடுபிரித்து படிக்கும் வழக்கம்.  என் கணவர் அம்மன் முகம் செய்வார்கள் சந்தனத்தால்.
முன்னர் பதிவுகள் போட்டு இருக்கிறேன் 

வெள்ளை குதிரைகள் மகன் செய்தான்.

வெள்ளைக் குதிரையில் கருப்பரடி- அவர் 
வீரம் விளைக்கும் தெய்வமடி
அக்கிரமச் செயல் அழிப்பாரடி ! - அவர் 
அண்டம் குலுங்கச் சிரிப்பாரடி.


மகன் இந்த முறை மதுரை வந்த போது வாங்கியது கருப்ப சாமி பொம்மை. நவராத்திரிக்கு நிறைய பொருட்கள் வாங்க கடைக்கு போன போது கருப்பசாமி மனதை கவர்ந்தார் என்று வாங்கி வந்தார்கள் .  இந்த தடவை வைத்து  இருக்கும் மீனாட்சி கல்யாண வைபவ நிகழ்ச்சிக்கு பொருத்தமுடையவர் தான் இவர். தானக வந்து சேர்ந்தார்.

சித்திரை திருவிழாவில் மீனாட்சி பவனி வரும் போது நிறைய குட்டி, பெரிய கருப்பசாமிகள் வலம் வருவார்கள். 

அழகர் ஆற்றில் இறங்க வரும் போது18 ஆம் படி கருப்பசாமி அவரோடு அரூபமாக வருவதாக நம்பிக்கை.

கள்ளழகர் மதுரைக்கு கிளம்பும் போது அவர் அணியும் விலைமதிப்பற்ற தங்க நகைகளை  கருப்பசாமி சன்னதி முன்பாக வைக்கப்பட்டுப் பட்டியலிடப்பட்டு அவர் முன் வாசிப்பார்கள்.

"உன்னுடைய கள்ளழகரை உன்னிடம் ஒப்படைக்கிறோம், பத்திரமாக பார்த்துக்கொள்" என்று ஒப்படைப்பார்கள்.




கருப்பசாமி  அருள்  வாக்கு கொடுப்பதை கேட்கலாம். இந்த வீடியோவில் சிறிய வீடியோ தான். கருப்பசாமிக்கு பின் அருள் வட்டம் சுழலும் பாருங்கள்.


                     
 இந்தியாவிலிருந்து மகள் வீட்டுக்கு வந்த உறவினர் ஆசையாக எடுத்து கொண்டார்.
                                   
திருநெல்வேலியிலிருந்து அவர்  மகன் வீட்டுக்கு  வந்த  உறவினர்   மகிழ்ச்சியாக அருள்வாக்கு எடுத்துக்  கொண்டார்கள்.
                                         
                                                               மகனின் நண்பர் 
அருள்வாக்கு எடுக்கிறார்.
கை வைத்தவுடன் கருப்பசாமி பேசுவது போல அமைத்து இருந்தான். அது ஒரே வாக்கு தான் அனைவருக்கும் சொல்வார் கருப்பசாமி. எடுக்கும் சீட்டு மட்டும் வேறு வேறு  அருள் வாக்கு இருக்கும்.

 இப்படி கொலுவுக்கு வந்த 200 பேர்களுக்கும் கருப்பசாமி நல் வாக்கு  அருள்வாக்கு கொடுத்தார். அனைவரும் சரியாக இருக்கிறது என்று மகிழ்ந்து சொன்னார்கள். பெற்றோர்களை பார்த்து குழந்தைகள் உங்களுக்கு சரியாக சொல்லி இருக்கிறார் கருப்பு என்பார்கள், குழந்தைகளை பார்த்து பெற்றோர்கள் சரியாக சொல்லி இருக்கிறார் உனக்கு  என்பார்கள்.

 ஊரிலிருந்து நட்புகளும், சொந்தங்களும் விரும்பி எடுத்து கொண்டார்கள். அவர்கள் சார்பில் நாங்கள் எடுத்து அனுப்பி வைத்தோம். அவர்களும் சரியாக சொல்லி இருக்கிறார் என்றார்கள்.


                              
                                              எடுத்த அருள் வாக்கை     படிக்கிறார்

                         
 தமிழ், மற்றும் ஆங்கிலத்தில் இருக்கிறது  அருள் வாக்கு அவர் மலையாளம் பேசுபவர் ஆங்கிலத்திலும் இருக்கிறது படித்ததும் இவருக்கு மிகவும் மகிழ்ச்சி.


சிறுவர்களும் ஆர்வமாக அருள்வாக்கு  எடுத்தார்கள்.


இந்த பையனின் அப்பா  பையனை பார்த்து "சரியாக  சொல்லி இருக்கிறார்  கோபத்தை குறைத்து கொள்" என்றார்.




மகன் அரிவாள் செய்து அட்டையில் (காட்போர்ட்) இருந்தான் அதை கையில் வைத்து கொண்டு எல்லோரும் படம் எடுத்து கொண்டார்கள்.

இப்படி குடும்பத்தோடும் தனி தனியாகவும் அரிவாளை கையில் வைத்து படம் எடுத்து கொண்டார்கள்.

அழகர்மலையின்  காவல் தெய்வம் கருப்பசாமி தீமைகள், எதிரிகள் மற்றும் செய்வினைகளை நீக்குவார் .  அவரிடம் வேண்டி வந்தவர்கள் வேண்டுதல் பலித்தால் சுவாமியின் ஆயுதமான இரும்பு அரிவாள் செய்து  வைப்பார்கள் .பிரம்மாண்டமான 5 அடி முதல் 15 அடி வரை பெரிய அரிவாள்கள் செய்து வைத்து இருப்பார்கள். முன்பு அழகர் கோயில் பதிவில் இந்த படங்களை போட்டு இருப்பேன்.




இரண்டு நிமிட வீடியோதான்  

மேலே உள்ளது வரவில்லை என்றால்  இதை பார்க்கலாம். யூடியூப் சிட்டி கொடுத்து இருக்கிறேன் பார்க்கலாம். இரண்டு நிமிட வீடியோ தான் பார்த்து விட்டு சொல்லுங்கள்.
கொலுபடியில் நடுவில் வைத்து இருக்கும் படியில் கண்ணனின் வரலாறு சொல்லும் பொம்மைகள் காட்போர்டில் செய்தவை இருக்கும். பாருங்கள்.


குத்து விளக்கில்  மீனாட்சி சுந்தரேஸ்வரர்


மகன் செய்த  முகம்

அன்னை  மீனாட்சி  முகம் மதுரையில் வாங்கியது

மீனாட்சி திருகல்யாணம் காட்சி மரபாச்சி  பொம்மைகளுக்கு இப்படி மீனாட்சி சுந்தரேஸ்வரர் அலங்காரம் செய்து கொடுத்தார் மருமகளின் கல்லூரி தோழி . அவர்  மதுரையில்  எங்கள் குடியிருப்பில்தான் இருக்கிறார். இன்ஸ்டாவில் ஆர்டர் செய்து இருந்தார் மருகமள், எங்கள் வீட்டு முகவரியை தோழிக்கு  அனுப்பிய போதுதான் எங்கள் குடியிருப்பில் தான் தோழியும்  இருக்கிறார் என்று மருமகளுக்கு தெரியும். எங்கள் குடியிருப்பு கொலுவுக்கு இவர் செய்த பொம்மைகளை கொலு பதிவில் பகிர்ந்து இருந்தேன்  போன வருடம்.



வாராஹி இந்த முறை வாராஹி அம்மனும் வந்து விட்டார் சோழர்கள் போருக்கு போகும் முன் வழிபட்டு செல்லும் அன்னை. ஆதிபராசக்தியின் போர்ப்படைத் தளபதி. ரத்தபீஜன், பந்தாசுரன் போன்ற அசுரர்களை அழிக்க அம்பிகையின் சகதியிலிருந்து வெளிப்பட்டவர் வாராஹி.  இவருக்கு பன்றியின் முகமும், மனித உடலும்  உண்டு. திருமால் வராக அவதாரம் எடுத்த போது அவரது சகதியாகவும், துர்கை தேவியின்  அம்சமாகவும் இவர் தோன்றினார் என்று புராணாங்கள் கூறுகிறது. எதிரிகள் தொல்லைகள் நீங்கவும்  , மனபயம்  அகலவும்  தீய சகதிகளிடமிருந்து பாதுகாப்பு பெற என்று சமீப காலமாக வாராகி வழிபாடு  பஞ்சமி திதியில் அதிகமாக மக்கள் வணங்குகிறார்கள்.


சமயபுரான்னையை வணங்கும்போது எல்.ஆர் ஈஸ்வரி பாடிய இந்த பாடல் நினைவுக்குவரும்.


மகமாயி சமயபுரத்தாயே
உன் மகளெனக்கு எல்லாமும் நீயே
மகமாயி சமயபுரத்தாயே
உன் மகளெனக்கு எல்லாமும் நீயே
கொள்ளிடத்தின் கரைமேலே உன் கோவில்
தரும் குங்குமம்தான் மங்கையர்க்கு காவல்
தரும் குங்குமம்தான் மங்கையர்க்கு காவல்
மகமாயி சமயபுரத்தாயே
உன் மகளெனக்கு எல்லாமும் நீயே

கண்கொடுக்கும் கண்ணபுர தேவி
அருள் தருவாள் இமயமலைச் செல்வி
கண்கொடுக்கும் கண்ணபுர தேவி
அருள் தருவாள் இமயமலைச் செல்வி
மூவிலை வேல் கைகொண்ட காளி
பகை முடிக்க வந்த எங்கள் முத்துமாரி
மகமாயி சமயபுரத்தாயே
உன் மகளெனக்கு எல்லாமும் நீயே

வேப்பமரம் நிழல் கொடுக்கும் வீடு
அது வினைதீர்க்க நீ அமைத்த கூடு
வேப்பமரம் நிழல் கொடுக்கும் வீடு
அது வினைதீர்க்க நீ அமைத்த கூடு
திருநீறே அம்மா உன் மருந்து
அதை அணிந்தாலே நோய் ஓடும் பறந்து

பெற்றவளே நீ அறிவாய் என்னை
உன் பேரருளால் வளர்ந்த இந்தப் பெண்ணை
பெற்றவளே நீ அறிவாய் என்னை
உன் பேரருளால் வளர்ந்த இந்தப் பெண்ணை
கற்றகலை சிறு துளியே எனக்கு
அதை கடலாக்கி வைத்த புகழ் உனக்கு

இணையத்தில் பாடல் பகிர்ந்தவருக்கு நன்றி.

சமயபுர மாரியம்மனை ஜூன் மாதம்   தரிசனம் செய்தோம். சிறு வயதில் மருமகளுக்கு முதல் மொட்டை சமயபுர மாரியம்மன் கோயிலில் அடித்தார்களாம் . அதனால் இந்த வருடம் சமயபுர மாரியம்மனை வைக்கவேண்டும் என்று முடிவு செய்தாள்   

 




வந்த குழந்தைகள்  எல்லாம் பாடினார்கள்.


ஒவ்வொரு நாளும்  கொலு பார்க்க  வந்த பெண்கள், குழந்தைகள் எல்லோரும் கும்மி  அடித்து மகிழ்ந்தார்கள்.


 சிறிய வீடியோதான்.





கவின் தயார் செய்த கண்ணன் வருவான் படம் அடுத்த பதிவில்.

வாழ்க வையகம்! வாழ்க வையகம்! வாழ்க வளமுடன்!



=========================================================================

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக