புதன், 16 அக்டோபர், 2024

புத்தம் புது காலை பொன்னிற வேளை



காலை எழுந்தவுடன் சூரிய வணக்கம்  செய்வது நல்லது.

எனக்கு காலை நேரம் சூரியன் உதிப்பதை பார்ப்பது பிடிக்கும், அதில் ஆனந்தம் கிடைக்கும். இங்கு மகன் வீட்டுத்தோட்டத்திலிருந்து காலையில் மலைகளுக்கு இடையே சூரியன் எழுவது பார்க்க அழகாய் இருக்கும், அப்போது வானத்தின் அழகு ஒவ்வொரு நாள் ஒவ்வொரு மாதிரி இருக்கும். நான் பார்த்து ரசித்த சூரிய உதயத்தை   இங்கு  உங்கள் பார்வைக்கு இந்த பதிவில் பகிர்ந்து இருக்கிறேன்.



சூரியன் உதிக்கும் முன்பே எழுந்து வாசலில் நீர் தெளித்து கோலம் போட்டு  வீட்டு வேலைகளை தொடங்கி விடுவோம்.
சூரியன் உதிக்கும் அழகை காணமுடியாமல் குழந்தைகளை பள்ளிக்கும், கணவரை அலுவலகத்திற்கும் அனுப்ப வேலைகளை முடித்தாக வேண்டும். 

பேரன் சூரியன் உதிக்கும் நேரம் பள்ளி போகிறான், மருமகள் கொண்டு விடுகிறாள்,  காரில் போகும் போது சூரியனை தரிசனம் செய்வார்கள் இருவரும்.

இப்போது தாய்மார்கள்  குழந்தைகள், மற்றும் பெரியவர்கள் வீட்டில் இருந்தால் அவர்களுக்கும் எல்லாம் தயார் செய்து வைத்து விட்டு  தானும் ஒரு வாய் அள்ளிப் போட்டுக் கொண்டு அவர்களும் வேலைக்கு கிளம்ப வேண்டும்.  இதில் எங்கு சூரிய நமஸ்காரம் செய்வது?


காலை சூரிய நமஸ்கார 12 நிலை உடற்பயிற்சி செய்தால் உடலுக்கு, மனதுக்கு நல்லது. ஆரோக்கியமாக இருக்கலாம்.


நன்றி - கூகுள்


நின்று கொண்டு செய்ய முடியாதவர்கள் நாற்காலியில் அமர்ந்து செய்யலாம்.



நன்றி - கூகுள்

நேரமும், மனமும் ஒத்துழைக்க வேண்டும். காலை செய்ய முடியவில்லை என்றால் மாலையிலும் செய்யலாம்.


மகன் வீட்டில் நேரமும் கிடைக்கிறது ,  பார்க்க வசதியாகவும் இருக்கிறது. பார்த்து ரசிக்கிறேன்.
உடற்பயிற்சிகள் வேதாத்திரி மகரிஷியின் உடற்பயிற்சி செய்து விடுகிறேன்.


மலை முகடு போல தெரியும் பின்னால் வீட்டு கூரை
மலை முகட்டுக்கு போட்டியாக


வானில் தோன்றும் வர்ணஜாலம்

காலைச்சூரியன் தன் கதிர்களை பரப்பி வருகிறான்

ஆயிரம் கரங்கள் நீட்டி அணைக்கின்ற தாயே போற்றி !- படம் கர்ணன்

புத்தம் புது காலை 
பொன் நிற வேளை

- "அலைகள் ஓய்வது இல்லை" , மற்றும் "மேகா "படப்பாடல் இரண்டு படத்திலும் வருகிறது இந்த பாடல்
 



//பொழுது புலர்ந்தது, யாம்செய்த தவத்தால், 
புன்மை யிருட்கணம் போயின யாவும், 
எழுபசும் பொற்சுடர் எங்கணும் பரவி 
எழுந்து விளங்கியது அறிவெனும் இரவி, 
தொழுதுனை வாழ்த்தி வணங்குதற்கு இங்குஉன் 
தொண்டர்பல் லாயிரர் சூழ்ந்துநிற் கின்றோம 
விழிதுயில் கின்றனை இன்னும்எம் தாயே 
வியப்பிது காண்! பள்ளி யெழுந்தரு ளாயே! //

- மகா கவி பாரதியார்


மாயவரத்தில் காலைச்சூரியன் சமையல் அறை ஜன்னல் வழியே தெரியும்,   பார்த்து ஒரு வணக்கம் வைத்து விட்டு வேலைகளை ஆரம்பித்து விடுவேன். மொட்டைமாடியில் பறவைகளுக்கு உணவும், தண்ணீரும் வைக்க போகும் போது அவசரமாய் பார்த்து வணக்கம் வைத்து  வருவேன் தினம்.

மதுரையில் வீட்டுக்கு வெளியே வந்து காலைச்சூரியனை பார்க்கலாம், மதியம் 12 மணி உச்சி வெயிலில் பால்கனியிலிருந்து பார்க்கலாம்.

இங்கு அரிசோனாவில் மகன் வீட்டில் காலைச்சூரியன் பின் பக்கம் தோட்டத்திலிருந்தும், மாலைச்சூரியன் முன் வாசல்  பக்கம் இருந்தும் பார்க்கலாம்.

ஊருக்கு வந்தால் இந்த சூரியன் உதிக்கும் காட்சிகளை தினம் பார்க்க என் சேமிப்பாய் இங்கு  பதிவு செய்து இருக்கிறேன்.

கதிரவன் வரவு கண்டு கமலமுகம் மலர்ந்தது- "அவன் பித்தனா" படப் பாடல் 

தங்கமாய் மின்னும் சூரிய ஒளி


//வானமெங்கும் பரிதியின் சோதி;
மலைகள் மீதும் பரிதியின் சோதி;
தானை நீர்க்கடல் மீதிலும் ஆங்கே
தரையின் மீதும் தருக்களின் மீதும்
கான கத்திலும் பற்பல ஆற்றின்
கரைகள் மீதும் பரிதியின் சோதி;
மானவன்தன் உளத்தினில் மட்டும்
வந்து நிற்கும் இருளிது வென்னே!//

 -மகா கவி பாரதியார்




//சோதி என்னும் கரையற்ற வெள்ளம்
தோன்றி எங்கும் திரைகொண்டு பாய,
சோதி என்னும் பெருங்கடல்,சோதிச்
சூறை,மாசறு சோதி யனந்தம்,
சோதி என்னும் நிறைவிஃதுலகைச்
சூழ்ந்து நிற்ப,ஒரு தனி நெஞ்சம்
கோதி யன்றதொர் சிற்றிருள் சேரக்
குமைந்து சோரும் கொடுமையி தென்னே!//

- மகா கவி பாரதியார்

சூரியன் வருவது யாராலே!



மெல்ல மெல்ல விடியும் வைகறைப் பொழுது.



நிறைய பதிவுகள் மாலைச்சூரியனை, காலைச்சூரியனை படம் எடுத்து பதிவு செய்து இருக்கிறேன். அவற்றில்  சில பதிவுகள் உங்கள் பார்வைக்கு.


//நலமா? உங்கள் வீட்டில் கொலு வைபவங்கள் சிறப்பாக நடைபெற்றதா? அது பற்றிய உங்கள் பதிவுகளை ஆவலுடன் எதிர்பார்க்கிறேன். நன்றி.

நன்றியுடன்
கமலா ஹரிஹரன்.//

நவராத்திரி விழா படங்கள் போட்டு பதிவை எதிர்பார்க்கிறேன் என்று கமலா எங்கள் ப்ளாக்கில்  கேட்டு இருந்தார்கள். அடுத்த பதிவு   கொலு பதிவு . இப்போது என்னை காணவில்லையே என்று தேடியவர்களுக்கு இந்த பதிவு,  நன்றி.  

 முகநூலில் பகிர்ந்த படங்கள் இவை,  இங்கு சேமிப்பாய்.

வாழ்க வையகம்! வாழ்க வையகம்! வாழ்க வளமுடன்!
------------------------------------------------------------------------------------------------

11 கருத்துகள்:

  1. ஆம்..  பதிவின் ஆரம்ப வரிகளுக்கு புத்தம்புது காலை பொன்னிற வேலை பாடல் பொருத்தம்.  அதிகாலைச் சூரியன் அகிலத்தை ஆக்கும் அழகு கண்கொள்ளாக் காட்சி...

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. //வணக்கம் ஸ்ரீராம், வாழ்க வளமுடன்

      ஆம்.. பதிவின் ஆரம்ப வரிகளுக்கு புத்தம்புது காலை பொன்னிற வேலை பாடல் பொருத்தம். அதிகாலைச் சூரியன் அகிலத்தை ஆக்கும் அழகு கண்கொள்ளாக் காட்சி...//

      ஆரம்ப வரிகளையும், தலைப்பையும் ரசித்தமைக்கு நன்றி.
      அகிலத்தை அதிகாலை சூரியன் அழகு படுத்துகிறார் என்பது உண்மைதான்.





      நீக்கு
  2. அடுத்த பாராவுக்கு 'வெள்ளிக்கிழமை..  விடியும் வேலை.. வாசலில் கோலமிட்டேன்' என்றோ, ' அதிகாலை எல்லாமே...  இனிதான ராகம்' ' என்றோ 'அதிகாலையில்..சுப வேளையில் என்றோ பாடலாம்!.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. //அடுத்த பாராவுக்கு 'வெள்ளிக்கிழமை.. விடியும் வேலை.. வாசலில் கோலமிட்டேன்' என்றோ, ' அதிகாலை எல்லாமே... இனிதான ராகம்' ' என்றோ 'அதிகாலையில்..சுப வேளையில் என்றோ பாடலாம்!.//

      உங்கள் நினைவுக்கு வந்த பாடல்கள் அருமை.

      நீக்கு
  3. பேரன் சூரியன் உதிக்கும் நேரம் பள்ளி செல்வது சூரியன் சற்று தாமதமாக உதிப்பான் என்று பொருளா, அலலது பேரன் அதி அதிகாலையில் பள்ளி செல்வது வழக்கமா?

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. //பேரன் சூரியன் உதிக்கும் நேரம் பள்ளி செல்வது சூரியன் சற்று தாமதமாக உதிப்பான் என்று பொருளா, அலலது பேரன் அதி அதிகாலையில் பள்ளி செல்வது வழக்கமா?//

      குளிர் காலம் என்றால் கொஞ்சம் நேரம் கழித்து, வெயில் காலம் என்றால் விரைவில் உதிப்பார் சூரியன்.

      அவன் பள்ளிக்கு காலை 6.30க்கு போக வேண்டும். பேரனை கொண்டு வந்து விட்டு வந்தபின் மருமகள் எட்டுமணிக்கு ஆபீஸ் .

      நீக்கு
  4. பொன்வானத்தைப் படம் எடுத்து போட்டிருக்கிறீர்கள்.  அழகு.  பல பாடல்கள் மனதுக்குள் ஓடி வருகின்றன.  பொன்வானப்பூங்காவில் தேரோடுது...   தங்க நிற மேகங்கள் அழகு.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. //பொன்வானத்தைப் படம் எடுத்து போட்டிருக்கிறீர்கள். அழகு. பல பாடல்கள் மனதுக்குள் ஓடி வருகின்றன. பொன்வானப்பூங்காவில் தேரோடுது... தங்க நிற மேகங்கள் அழகு.//

      பல பாடல்கள் மனதுக்குள் ஓடி வருவதை பகிர வேண்டியது தானே!
      பொன்வானப்பூங்காவில் தேரோடுது பாடலா?
      தங்கநிற குட்டி குட்டி மேகங்கள் அழகுதான்.

      நீக்கு
  5. வானம் எங்கும் பரிதியின் சோதி....   

    மறுபடியும் SPB யை நினைவுபடுத்தி விட்டீர்கள்.  இந்துமதியின் 'தரையில் இறங்கும் விமானங்கள்' சீரியலில் அவர் ஏகப்பட்ட பாரதியால் பாடல் வரிகளை பாடி  இருப்பார்.

    பதிலளிநீக்கு
  6. பொன்னையொத்த காலைச் சூரிய ஒளி - அழகுப்  
    பெண்ணொருத்தி நடந்து வருவது போல 
    எட்டுமணிச் சூரியன் பார்க்கையில் - மணமான 
    பத்தினிப்பெண் பாசம் போல 
    பட்டப்பகல் சூரியன் பார்க்கையில் - தலையைப் 
    போட்டுடைக்கும் அலுவலக அதிகாரி போல 
    நான்குமணிச் சூரியன் பார்க்கையில்  - தோள்சாய்த்து 
    தாங்கி ஆறுதல் சொல்லும் நண்பன் போல 
    அந்திச் சூரியன் பார்க்கையில் - வீட்டுக்கு 
    முந்திச் சென்று மனையாள் முகம் பார்க்கும் 
    எண்ணம் தோன்றும்.

    !!! :)))

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. உங்கள் கவிதையா? அருமை.
      அந்திச் சூரியன் மனையாள் முகம் பார்க்கும் எண்ணம் தோன்றுமா?
      புதிதாக திருமணம் ஆனபோது அப்ப்டியும், குழந்தைகள் வரவுக்கு பின் அப்பாவை பார்க்க வாசல் கேட்டில் காத்து இருக்கும் குழந்தைகள் நினைவும் வரும் தானே!

      உங்கள் கருத்துக்கள், கவிதைக்கு நன்றி.

      நீக்கு