சனி, 9 மார்ச், 2024

பறவைகள் பார்த்தல் , காகங்களின் பறத்தலும் இருத்தலும் விளையாட்டு





போன மாதம் நான்கு தினங்கள் மொட்டைமாடியில் நடைபயிற்சி செய்த போது பறவைகளை படம் எடுத்தேன்.  பறவைகள்பார்த்தல் என்ற போன பதிவின் நிறைவு பகுதியில்  நிறைய காகங்கள் இருப்பதும் பறப்பதுமாய் இருந்தது , அதை  இன்னொரு பதிவில்  பார்ப்போம், சொல்லி இருந்தேன்.  அன்று பார்த்த காகங்கள் படங்கள் இந்த பதிவில் இடம்பெறுகிறது.


மாலை நேரம் இந்த மரத்தில் அமரும் , அப்புறம் பறந்து வந்து எங்கள் வளாகத்தில் உள்ள மேல் நிலை தொட்டியில் அமரும்.
மரத்தில்  காகங்கள் எல்லாம் ஒன்றாக அமரும், ஒன்றாக பறக்கும்.

இந்த மரம் எங்கள் வளாகத்திற்கு வெளியே இருக்கிறது, மொட்டை மாடியிலிருந்து பார்த்து எடுத்த படம்

அங்கும் இங்கும் கூச்சலிட்டுக் கொண்டு பறப்பதும் அமர்வதுமாக நீண்ட நேரம் பொழுது சாயும் வரை விளையாடும்.


கூட்டுக்கு போகும் முன் ஒரு குளியல் போட்டு விட்டுதான் போகுமாம்.



 மாலை நேரம் தினம் நடக்கும்  காக்கங்களின் இந்த பறத்தலும் , இருத்தலும் விளையாட்டு.  எதிர் பக்க நீர் நிலை தொட்டி மேலும் அதற்கு எதிர் திசையில் இருக்கும் மரத்திலும் அமர்வதும், பறப்பதுமாக விளையாடும். 

  ஒரு கால் உள்ள காகம் நிற்பது   காணொளியில் தெரியும் பாருங்கள். அந்த காகமும் தன் குறையை பொருட்படுத்தாமல் உற்சாகமாய் பறக்கும் அமரும்.

எங்கள் பக்கத்து  தண்ணீர் தொட்டியிலிருந்து  தண்ணீர் விழும் சத்தமும் கேட்கும் காணொளியில்.




 கால் ஒடிந்த   காகம் . இந்த காகத்தைப்பார்க்கும் போது எல்லாம் எப்படி கால் ஒடிந்தது? பிறவியிலேயே இப்படியா என்று எண்ணம் மனதில் ஓடும்.


மேல் நிலை தொட்டியில் இருந்து வழியும் நீரை பருகும் காகம்




ஒரு அண்டம் காக்கை தனக்கு கிடைத்த ஒரு பண்டத்தை கொத்தி தின்கிறது, இன்னொரு அண்டம் காக்கை அதை பார்த்து கொண்டு தன் அலகை சுவற்றில்  தேய்த்து கூர்மை படுத்தி விட்டு பாவமாய் உணவு பண்டத்தை தின்னும் காகத்தைப்பார்க்கிறது. காற்றின் ஒலியும் பறவையின் இறகுகள் காற்றில் பறப்பதும் பார்க்க அழகாய் இருக்கும் பார்த்து விட்டு சொல்லுங்கள், சிறிய காணொளிதான்.

கருப்பு நிற நாரைகள் இந்த வகை நாரைகள் அழிந்து வருவதாக சொல்கிறார்கள்  எங்கள் வீட்டுப்பக்கம் காலை 7 மணிக்கு பறந்து வரும், மாலை 4.30க்கு  இருப்பிடத்திற்கு திரும்பும் இது நாள் தோறும் காலம் தவறாமல் நடைபெறுகிறது.
வெகு தூரத்தில் பறந்து போகும் போதுதான் பார்த்தேன். 


கருப்பு நாரைகள்

பட உதவி தினமலர் பத்திரிக்கை நன்றி.

பறவைகள் பார்த்தீர்களா? எப்படி இருக்கிறது சொல்லுங்கள். 

வாழ்க வையகம்! வாழ்க வையகம்! வாழ்க வளமுடன்!
---------------------------------------------------------------------------------------------------





48 கருத்துகள்:

  1. வித்தியாசமாக வீட்டு மாடியில் வரும் காக்கைகளைப் படமெடுத்துப் போட்டிருக்கிறீர்கள். தற்போது 30 மாடி டவராக உருவெடுத்துள்ள இடத்தில் முன்பு செம்மண் பூமியாகவும் அங்கு ஓர் பெரும் பள்ளமாகவும் காட்சியளித்தது. அந்தப் பள்ளம் நீருடன் இருக்கும். அதில் காக்கை கூட்டம் வந்து குளித்துவிட்டுச் செல்லும். அவை தினமும் குளிப்பதாகத் தோன்றவில்லை. கூட்டத்தில் ஒருவர் இறந்தால் குளிப்பதாகத்தான் எங்கோ படித்தேன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வணக்கம் நெல்லைத் தமிழன், வாழ்க வளமுடன்

      //வித்தியாசமாக வீட்டு மாடியில் வரும் காக்கைகளைப் படமெடுத்துப் போட்டிருக்கிறீர்கள்.//

      ஆமாம், காகங்கள் , புறாக்கள்தான் இப்போது நிறைய வருகிறது. மற்ற பறவைகள் வரத்து குறைந்து விட்டது.

      //தற்போது 30 மாடி டவராக உருவெடுத்துள்ள இடத்தில் முன்பு செம்மண் பூமியாகவும் அங்கு ஓர் பெரும் பள்ளமாகவும் காட்சியளித்தது. அந்தப் பள்ளம் நீருடன் இருக்கும். அதில் காக்கை கூட்டம் வந்து குளித்துவிட்டுச் செல்லும். அவை தினமும் குளிப்பதாகத் தோன்றவில்லை. கூட்டத்தில் ஒருவர் இறந்தால் குளிப்பதாகத்தான் எங்கோ படித்தேன்.//

      காகம் ஒன்று இறந்தால் அதை எடுத்து சென்று மண்ணில் புதைத்து விடுமாம். அதை பார்த்து தான் மனிதன் கற்றுக் கொண்டான் மனிதர்கள் இறந்தவுடன் மண்ணில் அடக்கம் செய்ய என்று.
      காகங்கள் அறிவு அதிகம் என்று ஆராய்ச்சியாளர்கள் சொல்கிறார்கள்.

      இறந்த காகத்தைப்பார்த்து கூட்டமாய் வந்து அதற்கு அழுது பின் புதைத்து குளிக்கும் போலும்.

      தந்திரம், ஏமாற்றும் வித்தை தெரிந்தது என்று சில குணங்களை சொன்னாலும் நிறைய நல்ல பழக்கங்கள் அதினிடம் இருக்கிறது.

      தன் சுத்தம் சுற்றுப்புறத்தை சுத்தம் செய்வது, தங்கள் இணையுடன் யாரும் அறியாமல் இணைவது, இணையுடன் தான் வாழும் காலம் வரை பிரியாது இருப்பது என்ற நல்ல பழக்கங்கள் இருக்கிறது. கூடு செல்லும் முன் குளித்தபின் தான் போகும் என்று நான் படித்தேன்.

      நீக்கு
    2. சனிக்கிழமை , அடுத்து அமாவாசை அதனால் காகங்களை படம் எடுத்து வைத்து இருந்ததை பதிவு செய்து விடுவோம் என்று போட்டு விட்டேன் நெல்லை.

      நீக்கு
  2. காக்கைகளின் அழகிய கூட்டமும் இரு காணொளிகளும் நன்று.

    நீர்காக்கை பறப்பதும் அழகாக இருக்கிறது.

    அது சரி.. தினமும் எவ்வளவு நேரம் நடைப்பயிற்சி செய்கிறீர்கள்?

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. //காக்கைகளின் அழகிய கூட்டமும் இரு காணொளிகளும் நன்று.//

      நன்றி.

      //நீர்காக்கை பறப்பதும் அழகாக இருக்கிறது.//

      இது நீர் காக்கை இல்லை நாரை போலவே இருக்கும். நீர் காக்கை வேறு மாதிரி இருக்கும்.

      //அது சரி.. தினமும் எவ்வளவு நேரம் நடைப்பயிற்சி செய்கிறீர்கள்?//

      நடைபயிற்சி இப்போது இரண்டு மாதமாக சரியாக செய்யவில்லை, முன்பு 30 நிமிடம், அப்புறம் 20 நிமிடம், இப்போது 15 , அல்லது 10 நிமிடம் தான்.

      வீட்டுக்குள்தான் நடைபயிற்சி இப்போது.

      மருத்துவரிடம் போய் இப்போது பரவாயில்லை. மொட்டை மாடிக்கு கொஞ்சம் படிகள் (15 படி) ஏற வேண்டும். பறவைகள் என்னை நடக்க விடுவதில்லை அவற்றை பார்ப்பதில் கவனம் செல்கிறது. நின்று நின்று நடைபயிற்சி அதனால் நான்கு தினத்திற்கு அப்புறம் போகவில்லை. இனி காலவலி குறைந்த பின் மீண்டும் நடை பயிற்சி தொடர எண்ணம்.
      மொட்டை மாடியில் எடுத்த படங்களை சேமிப்பாக பதிவு செய்து விட்டேன்.

      உங்கள் கருத்துக்களுக்கு நன்றி.

      நீக்கு
    2. கருப்பு நாரை படம் போட்டு இருக்கிறேன் பாருங்கள், நீர் காகம் படம் வேறு மாதிரி இருக்கும். இணையத்தில் பார்க்கலாம். அதுவும் நான் போட்டு இருக்கிறேன் முன்பு நெல்லை.

      நீக்கு
    3. ஓ கருப்பு நாரையா? அழகு.

      நடைப் பயிற்சி அரைமணி நேரம் மற்றும் கை,கால், விரல்கள் மூவ்மென்ட் பயிற்சியும் போதும். எம்சிஆர் செப்பல் உபயோகியுங்கள்.

      நீக்கு
    4. //ஓ கருப்பு நாரையா? அழகு.//

      ஆமாம் அழகாய் இருக்கும். முன்பு காலை 7மணிக்கு நடைபயிற்சி செய்தேன் கீழே வளாகத்தை சுற்றி அப்போது அலைபேசியில் எடுத்து இருக்கிறேன்.

      //நடைப் பயிற்சி அரைமணி நேரம் மற்றும் கை,கால், விரல்கள் மூவ்மென்ட் பயிற்சியும் போதும். எம்சிஆர் செப்பல் உபயோகியுங்கள்.//

      ஆமாம், கை , கால் , விரல்கள் பயிற்சி, முத்திரைகள், கால் முட்டியை (தசைகளை) இறுக்குதல், தளர்த்துதல் செய்கிறேன்.
      செருப்பு கடைக்கு போக வேண்டும் . நாளைக்கு போக வேண்டும் என்று நினைப்பேன். நாளை நாளை என்று நிறைய நாளைகள் போய் விட்டது. இன்று விடுமுறை நாள். நாளை கண்டிப்பாய் போய் வாங்க வேண்டும்.
      மீண்டும் வந்து கருத்து சொன்னதற்கு நன்றி.



      நீக்கு
  3. இந்த காகங்களுக்கு இவையெல்லாம் பொது குணங்கள் போலும்.  இப்படியே எனது வீட்டு மொட்டை மாடியிலும் நடைபெறும்.  படம் எடுத்து வைத்திருக்கிறேன்.  குனிந்து வழியும் தண்ணீரை குடிப்பது உட்பட, வழிந்து ஓடும் தண்ணீரில் குப்புறக்கவிழ்ந்து சிறுகுளியல் போடுவது, சாப்பிடக் கொடுப்பதில் சிலவற்றை தண்ணீரில் போட்டு புரட்டி சாப்பிடுவது...

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வணக்கம் ஸ்ரீராம், வாழ்க வளமுடன்

      //இந்த காகங்களுக்கு இவையெல்லாம் பொது குணங்கள் போலும். இப்படியே எனது வீட்டு மொட்டை மாடியிலும் நடைபெறும்.//

      ஆமாம்.

      //படம் எடுத்து வைத்திருக்கிறேன். குனிந்து வழியும் தண்ணீரை குடிப்பது உட்பட, வழிந்து ஓடும் தண்ணீரில் குப்புறக்கவிழ்ந்து சிறுகுளியல் போடுவது, சாப்பிடக் கொடுப்பதில் சிலவற்றை தண்ணீரில் போட்டு புரட்டி சாப்பிடுவது...//

      தண்ணீரை குனிந்து குடிக்கும், விழுங்குவது தலை மேல் தூக்கி விழுங்கும். மண்ணில் எடுத்த உணவை கழுவி சாப்பிடும்.
      நீங்கள் எடுத்த படங்களை போடுங்கள் பதிவில்.

      நீக்கு
  4. கால் ஒடிந்த காகம் பாவமாக இருக்கிறது.  அவை நம் அனுதாபத்தை எதிர்பார்ப்பதில்லை.  தங்கள் வாழ்க்கையை நடத்தக் கற்றுக்கொண்டு விடுகின்றன தங்கள் வழியில்.  

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. //கால் ஒடிந்த காகம் பாவமாக இருக்கிறது. அவை நம் அனுதாபத்தை எதிர்பார்ப்பதில்லை. தங்கள் வாழ்க்கையை நடத்தக் கற்றுக்கொண்டு விடுகின்றன தங்கள் வழியில். //

      ஆமாம். மாயவரத்தில் ஒரு கால் உள்ள மைனா வரும்.
      அவைகளிடம் கற்றுக் கொள்ள நமக்கு நிறைய நல்ல விஷயங்கள் இருக்கிறது.

      நீக்கு
  5. கருப்பு நாரைக்க கூட்டம் ஆச்சர்யம்.  எங்கே அரசு அமைத்து குடியிருக்கின்றனவோ

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. //கருப்பு நாரைக்க கூட்டம் ஆச்சர்யம். எங்கே அரசு அமைத்து குடியிருக்கின்றனவோ//

      வயல்கள் நிறைய இருக்கும் பகுதியில் உள்ள மரங்களில் குடியிருக்கும்.

      இப்போது வயல்கள், மரங்கள் குறைந்து வருகிறது, வயல்களை அழிக்கிறது என்று விவசாயிகள் மீன் உணவில் விஷம் கலந்து வயலில் போடுகிறார்களாம் அதனால் கருப்பு நாரைகள் குறைந்து வருகிறதாம்.

      திருபரங்க் குன்றம் அருகே இருக்கிறது போலும் அந்த பக்கம் தான் போகிறது.

      உங்கள் கருத்துக்களுக்கு நன்றி.

      நீக்கு
  6. இரண்டு காணொளிகளும் பார்த்தேன்.  இரண்டாவது காணொளி முடிந்ததும் ஜிந்தகி பியார் கா கீத் ஹை  ஏன்னு கிஷோர்குமார் (ராஜேஷ் கன்னா)பாடல் தெரிகிறது..  அந்தப் பாடலைக் கேட்க வேண்டும் என்று தோன்றிவிட்டது.  நீண்ட நாட்களாகி விட்டது கேட்டு!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. //இரண்டு காணொளிகளும் பார்த்தேன். இரண்டாவது காணொளி முடிந்ததும் ஜிந்தகி பியார் கா கீத் ஹை ஏன்னு கிஷோர்குமார் (ராஜேஷ் கன்னா)பாடல் தெரிகிறது.. அந்தப் பாடலைக் கேட்க வேண்டும் என்று தோன்றிவிட்டது. நீண்ட நாட்களாகி விட்டது கேட்டு!//

      காணொளி பார்த்தவுடன் பாட்டு பிரியருக்கு பாடல் கிடைத்து விட்டதா! மகிழ்ச்சி . ரசித்து கேளுங்கள். அலுவலகம் செல்ல வேண்டுமே! வந்து கேட்பீர்கள் என்று நினைக்கிறேன்.
      உங்கள் கருத்துக்களுக்கு நன்றி.

      நீக்கு
    2. இன்று ஞாயிற்றுக்கிழமை! மேலும் நான் பதினைந்து நாட்கள் விடுப்பில் இருக்கிறேன். சில வேலைகள்...!

      நீக்கு
    3. //இன்று ஞாயிற்றுக்கிழமை! மேலும் நான் பதினைந்து நாட்கள் விடுப்பில் இருக்கிறேன். சில வேலைகள்...!//

      ஆமாம், சனிக்கிழமை பதிவு போட்டதால் சனிக்கிழமை நினைவில் அலுவலகம் போக வேண்டுமே என்று போட்டு விட்டேன். பாட்டு கேட்டு விட்டீர்களா?
      வேலைகள் நல்லபடியாக நடக்கட்டும்.
      மீண்டும் வந்து கருத்து சொன்னதற்கு நன்றி.

      நீக்கு
  7. கோமதி அக்கா, அண்டங்கா காகா வீடியோ பார்த்தேன்....பதிவுக்கு வாசித்து கருத்திட வருகிறேன்...அக்கா...நேற்று மதியம் மேல்...இன்று காலை மதியம் வாய் பணிகள்...கடைக்குப் போகனும்...

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வணக்கம் கீதா ரெங்கன், வாழ்க வளமுடன்
      //கோமதி அக்கா, அண்டங்கா காகா வீடியோ பார்த்தேன்....பதிவுக்கு வாசித்து கருத்திட வருகிறேன்...அக்கா...நேற்று மதியம் மேல்...இன்று காலை மதியம் வாய் பணிகள்...கடைக்குப் போகனும்..//

      உங்கள் வேலைகளை முடித்த பின்னர் நிதானமாக வரலாம் பதிவு படிக்க கீதா.

      காணொளி பார்த்து விட்டது அறிந்து மகிழ்ச்சி.

      நீக்கு
  8. கருப்பு நாரைகளும் நீர்க்காக்கை- cormorants போன்று ஒரு வடிவத்தில் பறக்கும். ....படம் அருமை தூரத்தில் எடுத்தவையும் நன்றாக வந்திருக்கு

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. //கருப்பு நாரைகளும் நீர்க்காக்கை- cormorants போன்று ஒரு வடிவத்தில் பறக்கும். //

      ஆமாம்

      //....படம் அருமை தூரத்தில் எடுத்தவையும் நன்றாக வந்திருக்கு//
      நன்றி கீதா.

      நீக்கு
  9. காகத்தை பொறுமையாக புகைப்படமும், காணொளிகளும் எடுத்து இருக்கிறீர்கள்.

    பகிர்வுக்கு நன்றி.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வணக்கம் சகோ தேவகோட்டை ஜி, வாழ்க வளமுடன்

      //காகத்தை பொறுமையாக புகைப்படமும், காணொளிகளும் எடுத்து இருக்கிறீர்கள்.

      பகிர்வுக்கு நன்றி.//

      உங்கள் கருத்துக்கு நன்றி.

      நீக்கு
  10. காகங்கள் வரிசையா உட்கார்ந்திருப்பதும், பறக்கும் படமும் செமையா இருக்கு கோமதிக்கா. பறக்கும் படம் அட்டகாசமா வந்திருக்கு முதல் படம்.

    கருப்பு நாரைகள் மிக அழகு. பறக்கும் போது மூக்கை வைத்துதான் நாரையா, நீர்க்காகமா என்று கண்டு பிடிக்கலாம்.

    படங்கள் அனைத்தும் ரசித்தேன் கோமதிக்கா

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. //காகங்கள் வரிசையா உட்கார்ந்திருப்பதும், பறக்கும் படமும் செமையா இருக்கு கோமதிக்கா. பறக்கும் படம் அட்டகாசமா வந்திருக்கு முதல் படம்.//

      நன்றி கீதா.

      //கருப்பு நாரைகள் மிக அழகு. பறக்கும் போது மூக்கை வைத்துதான் நாரையா, நீர்க்காகமா என்று கண்டு பிடிக்கலாம்.//

      ஆமாம் கீதா

      //படங்கள் அனைத்தும் ரசித்தேன் கோமதிக்கா//

      உங்கள் ரசிப்புக்கு நன்றி

      நீக்கு
  11. இப்படிப் பறவைகள், மாடுகள் எல்லாம் பைப்பிலிருந்தும் கூட நீர் அருந்துவதைப் பார்க்கலாம்...அழகாக இருக்கும். மாடுகள் குரங்குகள் எல்லாம் பைபை திறந்து குடிக்கும் ஆனால் மூடத் தெரியாது பாவம்.

    சில காக்கைகள் வெயிலில் தாக்கம் தாங்காமல் இப்பை பைப்பில் நீர் சொட்டினாலோ அல்லது டேங்க் ஓவர் ஃப்ளோ ஆனாலோ அதில் தங்கள் உடலை நனைத்துக் கொள்ளும். குரங்குகள் செய்வதையும் பார்த்திருக்கிறேன். வெயிலில் செய்வதை, சென்னையில் இருந்தப்ப பார்த்திருக்கிறேன்.

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. //இப்படிப் பறவைகள், மாடுகள் எல்லாம் பைப்பிலிருந்தும் கூட நீர் அருந்துவதைப் பார்க்கலாம்...அழகாக இருக்கும். மாடுகள் குரங்குகள் எல்லாம் பைபை திறந்து குடிக்கும் ஆனால் மூடத் தெரியாது பாவம்.//

      ஆமாம், நானும் பார்த்து இருக்கிறேன். குரங்குகள் நீர் அருந்துவதை படம் எடுத்து பதிவு போட்டு இருக்கிறேன் .

      //சில காக்கைகள் வெயிலில் தாக்கம் தாங்காமல் இப்பை பைப்பில் நீர் சொட்டினாலோ அல்லது டேங்க் ஓவர் ஃப்ளோ ஆனாலோ அதில் தங்கள் உடலை நனைத்துக் கொள்ளும்//

      பெரியவர்கள் "காக்கை குளியலா செய்தாய்" என்று கேட்பார்கள் வேகமாக தலை நனைக்காம்ல குளித்து விட்டு வந்தால்
      காகம் கொஞ்ச தண்ணீர் இருந்தாலும் தலையை நனைக்காமல் வேகமாக உடம்பை மட்டும் நனைத்து எழும்.

      . //குரங்குகள் செய்வதையும் பார்த்திருக்கிறேன். வெயிலில் செய்வதை, சென்னையில் இருந்தப்ப பார்த்திருக்கிறேன்.//

      ஓ ! நல்லா இருக்கும் அவை செய்வது.
      உங்கள் கருத்துக்களுக்கு நன்றி கீதா.

      நீக்கு
  12. காக்கை கரவா கரைந்துண்ணும் ...

    பறவை அவதானிப்பில்
    ஐயன் வள்ளுவர் மிகச் சிறந்தவர்...

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வணக்கம் சகோ துரை செல்வாராஜூ, வாழ்க வளமுடன்

      //காக்கை கரவா கரைந்துண்ணும் ...

      பறவை அவதானிப்பில்
      ஐயன் வள்ளுவர் மிகச் சிறந்தவர்...//

      வள்ளுவர் போல் யாரால் சொல்லமுடியும் வள்ளுவர் மிகச்சிறந்தவர் தான்.
      உங்கள் கருத்துக்கு நன்றி.

      நீக்கு


  13. தங்களுக்கே அமைகின்ற அழகான படங்கள்..
    சிறப்பான பதிவு..

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. //தங்களுக்கே அமைகின்ற அழகான படங்கள்..
      சிறப்பான பதிவு..//

      உங்கள் கருத்துக்கு நன்றி.

      நீக்கு
  14. படங்களும் காணொளியும் அருமை. சிறிதுசிறிதாக உணவு உண்ணும் அண்டங்காக்கையும் பொறுமையாக எடுத்திருக்கிறீர்கள்.

    கூட்டமாக இருப்பவை கருப்பு கொக்கோ? பறப்பவையும் அவைதானோ?

    ஒவ்வொன்றையும் மிகவும் பொறுமையாக எடுத்திருக்கிறீர்கள். பாராட்டுகள்!

    துளசிதரன்

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வணக்கம் சகோ துளசிதரன், வாழ்க வளமுடன்

      படங்களும் காணொளியும் அருமை. சிறிதுசிறிதாக உணவு உண்ணும் அண்டங்காக்கையும் பொறுமையாக எடுத்திருக்கிறீர்கள்.//

      நன்றி.

      //கூட்டமாக இருப்பவை கருப்பு கொக்கோ? பறப்பவையும் அவைதானோ?//

      ஆமாம். பறப்பவை தூரத்தில் இருக்கிறது இல்லையா? அதனால் நன்றாக தெரியும் கருப்பு நாரையை இணையத்தில் இருந்து எடுத்து போட்டு இருக்கிறேன்.


      //ஒவ்வொன்றையும் மிகவும் பொறுமையாக எடுத்திருக்கிறீர்கள். பாராட்டுகள்!//

      உங்கள் கருத்துக்கு நன்றி சகோ

      நீக்கு
  15. வணக்கம் சகோதரி

    பதிவு அருமை. படங்கள் அனைத்தும் அழகாக வந்திருக்கின்றன. காகங்கள் பறப்பதும், அமர்ந்த இடம் விட்டு பெயர்ந்தெழுந்து மீண்டும் வந்து அமர்வதுமாக ஒன்றாக கூடி களித்திருக்கும் படங்கள், காணொளிகள் எல்லாமே நன்றாக உள்ளது. ஒற்றைக்கால் காகத்தைப் பற்றி நான் ஒரு கதை எழுதி பதிவாக வெளியிட்டிருந்தேன் . அந்த நினைவு வந்தது.

    காகம் தண்ணீர் அருந்துவதும் , குளிப்பதும் ஆகியவை அனைத்தும் நாம் பார்க்கும் போது மிக அழகுதான் இல்லையா? நானும் இப்படித்தான் அவைகளைப் பார்த்து ரசிப்பேன். இரு காணொளியையும் கண்டு ரசித்தேன். ஒரு காகம் சாப்பிடுவதை மற்றொன்று பாவமாக பார்ப்தை நன்றாக பொறுமையாக எடுத்துள்ளீர்கள். தங்களுக்கு மனமார்ந்த பாராட்டுக்கள். சில சமயம் அதை விரட்டி விட்டு இது வந்து அதன் உணவை கொத்த வரும். சமயங்களில் அதை ஏமாற்றி விட்டு கொத்திக் கொண்டே போய் விடும்.

    தாங்கள் காகங்களைப்பற்றி சொல்வதும் உண்மைதான்.. அதனிடமிருந்து நாம் கற்றுக் கொள்ள வேண்டியது நிறைய உள்ளது.

    தன் இணைப்பறவை தன்னை மதிக்காமல் நடந்து கொண்டாலும், தன்னை விட்டு பிரிந்து விட்டாலும் இது மனம் பொறுக்காமல் தன்னுயிரை மாய்த்துக் கொள்ளும் என எங்கோ படித்துள்ளேன். பாவந்தான்..!

    கருப்பு நாரைகள் படங்கள் அழகாக இருக்கிறது. அதன் இனத்தை அழிப்பது வேதனையாக உள்ளது. என்னசெய்வது? அதுவும் அதன் வினைப்பயனோ என்னவோ?

    பறவைகளை கண்டு நீங்கள் ஆர்வத்துடன் ரசிப்பதுடன் எங்களுக்கும் அதன் விபரங்களை குறித்துச் சொல்லி அருமையான பதிவாக்கி, எங்களையும் ரசிக்க வைத்து விடுகிறீர்கள். அவைகளைப் பற்றி தெரியாத பல விஷயங்களை உங்கள் பதிவின் மூலம் நாங்களும் கற்றுக் கொள்கிறோம். அனைத்திற்கும் மிக்க நன்றி சகோதரி.

    நன்றியுடன்
    கமலா ஹரிஹரன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வணக்கம் கமலா ஹரிஹரன், வாழ்க வளமுடன்

      //பதிவு அருமை. படங்கள் அனைத்தும் அழகாக வந்திருக்கின்றன. காகங்கள் பறப்பதும், அமர்ந்த இடம் விட்டு பெயர்ந்தெழுந்து மீண்டும் வந்து அமர்வதுமாக ஒன்றாக கூடி களித்திருக்கும் படங்கள், காணொளிகள் எல்லாமே நன்றாக உள்ளது. ஒற்றைக்கால் காகத்தைப் பற்றி நான் ஒரு கதை எழுதி பதிவாக வெளியிட்டிருந்தேன் . அந்த நினைவு வந்தது.//

      நானும் காகம் பற்றி கதை எழுதி இருக்கிறேன் "குண்டு காக்கா கதை"
      என் கணவர் குழந்தைகளுக்கு சொல்லும் கதை.

      //காகம் தண்ணீர் அருந்துவதும் , குளிப்பதும் ஆகியவை அனைத்தும் நாம் பார்க்கும் போது மிக அழகுதான் இல்லையா? //

      ஆமாம்.

      //நானும் இப்படித்தான் அவைகளைப் பார்த்து ரசிப்பேன். இரு காணொளியையும் கண்டு ரசித்தேன்.//
      நன்றி.


      //ஒரு காகம் சாப்பிடுவதை மற்றொன்று பாவமாக பார்ப்தை நன்றாக பொறுமையாக எடுத்துள்ளீர்கள். தங்களுக்கு மனமார்ந்த பாராட்டுக்கள்.//
      உங்கள் பாராட்டுக்கு நன்றி.

      //சில சமயம் அதை விரட்டி விட்டு இது வந்து அதன் உணவை கொத்த வரும். சமயங்களில் அதை ஏமாற்றி விட்டு கொத்திக் கொண்டே போய் விடும்.//

      எத்தித் திருடும் அந்த காக்காய் – அதற்கு

      இரக்கப்பட வேணும் பாப்பா!

      என்று பாரதியாரும் பாடி இருக்கிறார்.

      //தன் இணைப்பறவை தன்னை மதிக்காமல் நடந்து கொண்டாலும், தன்னை விட்டு பிரிந்து விட்டாலும் இது மனம் பொறுக்காமல் தன்னுயிரை மாய்த்துக் கொள்ளும் என எங்கோ படித்துள்ளேன். பாவந்தான்..!//

      காகம் பற்றிய செய்திக்கு நன்றி.

      //பறவைகளை கண்டு நீங்கள் ஆர்வத்துடன் ரசிப்பதுடன் எங்களுக்கும் அதன் விபரங்களை குறித்துச் சொல்லி அருமையான பதிவாக்கி, எங்களையும் ரசிக்க வைத்து விடுகிறீர்கள். அவைகளைப் பற்றி தெரியாத பல விஷயங்களை உங்கள் பதிவின் மூலம் நாங்களும் கற்றுக் கொள்கிறோம். அனைத்திற்கும் மிக்க நன்றி சகோதரி.//
      நீங்களும் பல விஷயங்கள் பகிர்ந்து கொண்டீர்கள் உங்களுக்கும் நன்றி.

      அனைத்தையும் ரசித்து விரிவான கருத்து தந்தமைக்கு நன்றி.

      நீக்கு
  16. சிறு வயதில் காக்கைகள் இவ்வாறு அமர்ந்திருப்பதை காக்கை பள்ளிக்கூடம் என்று கூறுவோம், பள்ளியில் அசெம்பிளி போல் இருப்பதால். இவ்வாறு கூடுவதற்கு காரணமும் இருக்கும். அது நமக்கு தெரியாது.
    படங்கள் நன்றாக உள்ளன. இப்படங்களைப் பார்க்கும்போது R K லட்சுமண் காக்கைப் படங்கள் நினைவில் வந்தன.

    இதையும் பாருங்கள்.

    https://www.youtube.com/shorts/v6DkENBJWe4
    Jayakumar

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வணக்கம் ஜெயக்குமார் சார், வாழ்க வளமுடன்

      //சிறு வயதில் காக்கைகள் இவ்வாறு அமர்ந்திருப்பதை காக்கை பள்ளிக்கூடம் என்று கூறுவோம், பள்ளியில் அசெம்பிளி போல் இருப்பதால். இவ்வாறு கூடுவதற்கு காரணமும் இருக்கும். அது நமக்கு தெரியாது.//

      நீங்கள் சொல்வது சரிதான். தினம் மாலை கூடுகிறது. என்ன முடிவு எடுக்குமோ தெரியவில்லை.

      //படங்கள் நன்றாக உள்ளன. இப்படங்களைப் பார்க்கும்போது R K லட்சுமண் காக்கைப் படங்கள் நினைவில் வந்தன.//

      அவர் அப்படியே அழகாய் வரைபவர் . சிறந்த ஓவியர் அருகாட்சியில் இருக்கும் காகம், மரக்கிளையில் உட்கார்ந்து இருக்கும் காகம் இறக்கைகள் காற்றில் பறப்பதை எல்லாம் அழகாய் வரைவார். பார்த்து இருக்கிறேன்.
      நீங்கள் கொடுத்த சுட்டியில் போய் பார்த்தேன், மிக அழகாய் மதில் சுவற்றில் நடக்கிறது. பகிர்வுக்கு நன்றி.

      உங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.


      நீக்கு
  17. படங்கள், காணொளிகள் என அனைத்தும் சிறப்பு. அனைத்தையும் ரசித்தேன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வணக்கம் வெங்கட் நாகராஜ், வாழ்க வளமுடன்

      //படங்கள், காணொளிகள் என அனைத்தும் சிறப்பு. அனைத்தையும் ரசித்தேன்.///

      உங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.

      நீக்கு
  18. காகங்களை இப்படிக் கூட்டமாகப் பார்த்து வருடங்கள் ஆகின்றன. நாங்கள் இப்போது இருக்கும் பகுதியில் காகம் வருவதே அபூர்வமாக உள்ளது.

    கருப்பு நாரைகளை நான் பார்த்ததில்லை. படங்களுக்கும் தகவலுக்கும் நன்றி. அனைத்துப் படங்களும் அருமை.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வணக்கம் ராமலக்ஷ்மி, வாழ்க வளமுடன்

      //காகங்களை இப்படிக் கூட்டமாகப் பார்த்து வருடங்கள் ஆகின்றன. நாங்கள் இப்போது இருக்கும் பகுதியில் காகம் வருவதே அபூர்வமாக உள்ளது.//

      முன்பு "குண்டு காக்கை "கதைக்கு உங்களிடமிருந்து தான் காகம் படம் வாங்கி போட்டேன். அப்போது மாயவரத்தில் மொட்டை மாடியை உபயோகத்திற்கு கொடுக்கவில்லை. பின் கொடுத்தபின் தான் பறவைகளை படம் எடுக்க ஆரம்பித்தேன்.

      இங்கு காகம், புறா நிறைய இருக்கிறது. புறாவின் வரத்து குறைந்து வருகிறது. மற்ற பறவைகள் வரவும் குறைந்து வருகிறது. வரும் போது படம் எடுக்கிறேன்.

      //கருப்பு நாரைகளை நான் பார்த்ததில்லை. படங்களுக்கும் தகவலுக்கும் நன்றி. அனைத்துப் படங்களும் அருமை.//

      கருப்பு நாரைகளுக்கு நாற்று நட்டு இருக்கும் வயல்கள் தேவை படுகிறது. அதற்கு வேண்டிய உணவு அப்போதுதான் கிடைக்கிறது.

      உங்கள் கருத்துக்கு நன்றி ராமலக்ஷ்மி.

      நீக்கு
  19. கோமதி அக்கா, நலமாக இருக்கிறீங்கள் என்பது தெரியுது...
    எவ்ளோ காக்கைகள்... இப்படி எனில் ஏனைய பறவைகளைக் காட்டிலும் காகம் அதிகமாக எச்சம் போட்டு இடத்தை எல்லாம் அசுத்தப் படுத்தி விட்டிடுமெல்லோ...
    இங்கு இப்படிக் கூட்டமாக புறாக்களைத்தான் காண முடியுது. காகமும் உண்டு .. ஒன்று இரண்டு பறக்கும் ஆனால் கரையாது, காகம் கரையும் சத்தம் இங்கு கேட்டதே இல்லை.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வணக்கம் அதிரா, வாழ்க வளமுடன்

      //கோமதி அக்கா, நலமாக இருக்கிறீங்கள் என்பது தெரியுது...//

      நலமாக இருந்தேன். இப்போது கொஞ்சம் உடல், மன நலக்குறைவு இப்போது ஏற்பட்டு இருக்கிறது.

      //எவ்ளோ காக்கைகள்... இப்படி எனில் ஏனைய பறவைகளைக் காட்டிலும் காகம் அதிகமாக எச்சம் போட்டு இடத்தை எல்லாம் அசுத்தப் படுத்தி விட்டிடுமெல்லோ...//

      புறா போல எச்சம் போட்டு இடத்தை அசுத்தப் படுத்துவது இல்லை காக்கைகள்.

      //இங்கு இப்படிக் கூட்டமாக புறாக்களைத்தான் காண முடியுது. காகமும் உண்டு .. ஒன்று இரண்டு பறக்கும் ஆனால் கரையாது, காகம் கரையும் சத்தம் இங்கு கேட்டதே இல்லை.//

      ஆமாம், மகன் ஊரிலும் ஒன்று இரண்டு காகம் பார்க்க முடியும்.
      கரையும் சத்தம் கேட்காது.

      உங்கள் வரவுக்கும், கருத்துக்கும் நன்றி.

      நீக்கு
  20. காகங்கள் அவற்றின் குளியல்,,,செயல்கள் நன்றாக இருக்கின்றன. புத்திக் கூர்மையுடைய காக்கையார்கள் .

    காணொளிகள் நன்றாக இருந்தன.

    ஒற்றைக்கால் காக்கையார் கவலை கொள்ள வைக்கிறது.

    எங்கள் சிறுவயதில் எங்கள் வீட்டுக்கு ஒரு ஒற்றைக்கால் காக்கை வரும் நாங்கள் உணவு கொடுப்பது நினைவில் வருகிறது.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வணக்கம் மாதேவி, வாழ்க வளமுடன்

      //காகங்கள் அவற்றின் குளியல்,,,செயல்கள் நன்றாக இருக்கின்றன. புத்திக் கூர்மையுடைய காக்கையார்கள் .//

      ஆமாம். புத்திக் கூர்மையுடைய காக்கையார்கள் தான்.

      //காணொளிகள் நன்றாக இருந்தன.//

      நன்றி.

      //ஒற்றைக்கால் காக்கையார் கவலை கொள்ள வைக்கிறது.

      எங்கள் சிறுவயதில் எங்கள் வீட்டுக்கு ஒரு ஒற்றைக்கால் காக்கை வரும் நாங்கள் உணவு கொடுப்பது நினைவில் வருகிறது.//

      ஆமாம். கவலை கொள்ள வைக்கிறது.
      சிறு வயது நினைவுகள் வந்து விட்டதா?

      உங்கள் கணவரின் தங்கையின் இழப்பு கேள்வி பட்டேன்.
      உங்கள் குடும்பத்தினர்களுக்கு ஆறுதலை இறைவன் தர வேண்டும்.
      என் தங்கையின் கணவர் 16ம் தேதி இறைவனடி சேர்ந்து விட்டார்கள்.
      அதனால் தான் நானும் வலை பக்கம் வரவில்லை.

      உங்கள் கருத்துக்கு நன்றி மாதேவி.




      நீக்கு
    2. உங்கள் தங்கையின் கணவர் இறைவனடி சேர்ந்தது அறிந்தோம்.அவரின் ஆத்ம சாந்திக்கு பிரார்த்திக்கிறோம்.

      பிரிவால் வாடும் குடும்பத்தினருக்கும் உங்களுக்கும் ஆறுதல் கிடைக்க வேண்டுகிறோம்.

      நீக்கு
    3. வணக்கம் மாதேவி, வாழ்க வளமுடன்

      //உங்கள் தங்கையின் கணவர் இறைவனடி சேர்ந்தது அறிந்தோம்.அவரின் ஆத்ம சாந்திக்கு பிரார்த்திக்கிறோம்.

      பிரிவால் வாடும் குடும்பத்தினருக்கும் உங்களுக்கும் ஆறுதல் கிடைக்க வேண்டுகிறோம்.//

      மாதேவி உங்கள் பிரார்த்தனைக்கும், உங்கள் ஆறுதல் வார்த்தைகளுக்கும் நன்றி

      நீக்கு