வியாழன், 20 மே, 2021

இயற்கையின் அதிசயங்கள்




நீரோடையும் மான்களும் முந்தின பதிவுகள் படிக்கவில்லை என்றால் படிக்கலாம்.


நீரோடையும் மான்களும் பதிவின் கடைசியில் அங்கு உள்ள மரங்களின் அழகும், எறும்புக் கூடும் மற்றும் எறும்புதின்னும் பூச்சிப்பற்றி பார்க்கலாம் என்றேன்.  அவைகளை இந்த பதிவில் பார்க்கலாம்.

நீரோடையில் இறங்க அனுமதி இல்லை. விலங்குகளுக்கு, பறவைகளுக்கும் தண்ணீர் தாகத்தை தீர்க்கும் நீரோடை.
நீரோடை காணொளி சின்ன காணொளி தான் பாருங்கள்.

                         
நீண்ட  அழகிய பாதை


ஆவாரம் பூ போலவே இருக்கிறது, இலையும் அப்படித்தான் இருக்கிறது 
 ஆவாரம் பூ மஞ்சளாக இருக்கும்,   இது அவரைக்காய் பூ கலரில்  இருக்கிறது.

இந்த மரத்தின் அடிபாகம் நல்ல அகலமாக இருக்கிறது
இந்த மரத்தை நான்கு பேர் சேர்ந்தால் தான் கட்டி பிடிக்க முடியும்  இரண்டு பிரிவாக தெரியும் ஒரே மரம்

எத்தனை காலமாய் நின்று கொண்டு இருந்ததோ இந்த மரம் ! இப்போது வேருடன் சாய்ந்து கிடக்கிறது.

மழை காலங்களில் தண்ணீர் வரும் பாதைகள்

எறும்பு தன் முட்டைகளை காக்க வலை பின்னி இருக்கிறது. இரண்டு புற்களை தூணாக வைத்து வீடு கட்டி உள்ளது.
பாதையின் இரு பக்க ஓரங்களிலும் இந்த எறும்புக் கூடுகள் இருக்கிறது.
இது போல் பாதையின்  இரு ஓரங்களிலும் இருக்கிறது.

 ''எறும்பு முட்டை கொண்டு திட்டை ஏறினால் மழை வரும் '' என்று சொல்வார்கள். மழை வருவது  அதற்கு தெரியுமாம். அப்போது அவை வெளியிலிருந்து நம் வீடுகளுக்கு படை எடுத்து வரும்.

வெயில் காலத்தில் நம் வீடுகளில் உள்ள அம்மி, ஆட்டுக்கலுக்கு அடியில் பிள்ளையார் எறும்பு முட்டைகளை வைத்து இருக்கும். அம்மி அரைக்க தணணீர் விட்டு கழுவும் போது எல்லாம் கலைந்து முட்டைகளை தூக்கி கொண்டு ஓடும், பார்க்க மனது கஷ்டமாய் இருக்கும். அதற்காக சில வீடுகளில் அம்மி, ஆட்டுக்கல்லை கீழே வைத்து பூசி விடுவார்கள் இடைவெளி இல்லாமல். இடைவெளி இருந்தால் அதில் பூரான் வேறு வந்து அமர்ந்து கொள்ளும். வீட்டில் பிள்ளையார் எறும்பு வீட்டில் நிறைய இருந்தால் பிள்ளையாருக்கு வேண்டுதல் இருக்கா? என்று கேட்பார்கள் பாட்டிகள், " பிள்ளையார் கோவில் போய் ஒரு தேங்காய் விடலை போட்டு வா" என்பார்கள். (சிதறு காய்)

இந்த குழி பக்கத்தில் எறும்பு வந்தால் உள்ளே இருந்து  ஒரு கருப்பு நிற பூச்சி வந்து உள்ளே இழுத்து போய் விடுகிறது.
அதை  வியந்து வேடிக்கை பார்த்து கொண்டு இருந்ததில் காணொளி  எடுக்க மறந்து விட்டேன்.  கொஞ்சமாக தெரியும் அதன் தலைபகுதி மட்டும்.
கூடு அமைத்த எறும்புகளை மகன் காணொளி  எடுத்து இருந்தான். சிவப்பு மண்ணில் சிவப்பு எறும்பு. சின்ன காணொளிதான் பாருங்க. எறும்பின் வாயில் வெள்ளையாக முட்டை இருக்கிறது.
 .
இந்த செடியில் உள்ள பழங்கள் கீழே உதிர்ந்து கிடப்பதை இந்த எறும்புகள் எடுத்து செல்கிறது .

அந்த பழங்களை கூட்டோடு சேர்த்து வலை பின்னி இருக்கிறது.  தூரத்திலிருந்து எடுத்த படம்.

எறும்பு பழங்களை தூக்கி போவதை படம் எடுக்க போனேன்  வனத்துறை பணியாளர் பாதைக்கு அந்த புறம் உள்ளே போக கூடாது என்று சொல்லி விட்டார்.

இறைவனின் படைப்பில் அதியசங்கள் முன்பு கோவையில் எங்கள் வீட்டில் உல்ள புங்கமரத்தில் எறும்பு கட்டி இருந்த கூடு பற்றிய பதிவு . அதுவும் சிவப்பு எறும்புதான். அதுதான் இந்த பதிவுக்கு "இயற்கையின் அதிசயங்கள்" என்று தலைப்பு கொடுத்து இருக்கிறேன். இயற்கையும் தெய்வம்தான்.

கிறிஸ்மஸ் மரம்  அழகாய்
மரக்கூடாரங்கள் வழி எங்கும் இடைவெளியில் தெரியும் வானம் அழகு
இப்படி சில இடங்களில் பறவைகளுக்கு உணவும் தண்ணீரும் வைத்து இருக்கிறார்கள்.  பறவைகள்உணவை கொத்தும் போது  சிதறும் தானியங்கள் கீழே விழாமல் இருக்க வலைத்தட்டு அழகாய் இணைத்து இருக்கிறார்கள்.
இந்த மரத்தின் இடைவெளியில் ஒரு பறவை வசிக்கிறது
மரத்தில் உள்ள டிசைன் அழகாய் இருக்கிறது



 நெல்லைத்தமிழன் அவர்களும், கீதா சாம்பசிவம் அவர்களும் கையில் உணவு எடுத்து போனீர்களா?  என்று கேட்டு இருந்தார்கள். எடுத்து போய் இருந்தோம், அடுத்த பதிவில் போடுகிறேன் படங்களை என்றேன். காலை உணவு இட்லி  தக்காளி சட்னி, மிளகாய் பொடி, மதியம் வெஜிடபிள் பிரியாணி,உருளை சிப்ஸ்,  தயிர் வெங்காயம்.

நாங்கள் சாப்பிட்டு கொண்டு இருந்த மேஜை ,பெஞ்ச் அருகில் உள்ள நடைபாதை பக்கத்தில் முளைத்து இருக்கும் புற்களை எல்லாம் வனத்துறை பெண் பணியாளர்  அகற்றி கொண்டு இருந்தார். அம்மாவுடன்  சுற்றிப்பார்க்க வந்த சிறுவனிடம்  "என்ன பார்த்தாய் இங்கு" நன்றாக இருக்கிறதா இந்த இடம்? என்று கேட்டுக் கொண்டு இருக்கிறார். வெட்கத்துடன் தலையை திரும்பி கொண்டு பதில் அளிக்கிறான் சிறுவன்,  நாய் பொம்மை அவன் தோளில்.

 இங்கு வளர்ப்பு செல்லங்களுடன் வர அனுமதி இல்லை. சிறுவன் நாய் பொம்மையுடன் வந்து விட்டான். 

அடுத்து அமைதியான புத்த ஸ்தூபி அமைந்து இருக்கும் இடம் பார்க்கலாம்.

             வாழ்க வையகம் !  வாழ்க வையகம்  ! வாழ்க வளமுடன்.

--------------------------------------------------------------------------------------------------

38 கருத்துகள்:

  1. நீரோடை மிகவும் சிறிதாகத்தான் இருக்கிறது..

    அது அமெரிக்காவாரம்பூவோ!!

    இரண்டு மரங்கள் ஒன்றோடொன்று இணைந்து வளர்ந்திருக்கும் போல...கவின் கையில் கேமிராவா?

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வணக்கம் ஸ்ரீராம், வாழ்க வலமுடன்
      நீரோடை காணொளி பார்க்கவில்லையா?இரண்டு பக்கமும் நீண்டு போகிறது. நான் சிறிது நேரம் தான் எடுத்தேன்.
      இங்கிருந்து போன பதிவில் வந்த மான்கள் தண்ணீர் அருந்தும் இடத்தையும் தாண்டி நீண்டு போகிறது.அகலம் குறைவு.

      அமெரிக்க ஆவாரம் பூ நல்லா இருக்கிறது!

      ஈரண்டு மரங்கள் சேர்ந்து வளர்ந்து இருக்கலாம்.
      கவின் கையில் சின்ன காமிராதான்.

      நீக்கு
    2. காணொளி காலையே பார்த்துவிட்டேன்.  ஆனாலும் என்னவோ நீரோடை குட்டியாக இருப்பது போலவே தோன்றியது!

      நீக்கு
    3. அகலம் குறுகிய நீரோடை அதுதான் அப்படி தெரிகிறது. நீண்டு போகிறது வெகு தூரம்.
      மீண்டும் வந்து கருத்து சொன்னதற்கு நன்றி ஸ்ரீராம்.

      நீக்கு
  2. சாய்ந்த மரம் துளிர்க்கவும் வாய்ப்புண்டு..  வேர் மண்ணில் பட்டுக்கொண்டிருக்கிறதே...
    டிசைன் அழகாக இருக்கிறது.

    எல்லாப் படங்களுமே அழகு.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. சாய்ந்த மரம் வேருடன் இருப்பதை நட்டு வைத்தால் வளர வாய்ப்பு இருக்கிறது. முன்பு இப்படி புயலில் விழுந்த மரங்களை அப்புறப்படுத்தி வேறு இடங்களில் நம் நாட்டில் நட்டு சாதனை செய்து இருக்கிறார்கள். செலவு அதிகம் ஆவதால் நிறுத்தி விட்டார்கள்.இல்லையென்றால் நிறைய மரங்கள் பிழைத்து இருக்கும்.

      உங்கள் கருத்துக்களுக்கு நன்றி.

      நீக்கு
  3. எறும்பைப் பற்றிய விபரங்கள் அருமை. வெகு அரிய தகவல்கள். காணொளிகளும் நன்றாக இருக்கின்றன. ஆவாரம்பூப் போல் இல்லையே, அவரை மாதிரி இருக்கேனு நினைச்சேன், நீங்களும் சொல்லி இருக்கீங்க. நல்ல சுற்றுலாத் தலம். பார்க்கக் கிடைத்ததுக்கு வாழ்த்துகள். உணவு கொண்டு போன படங்களையும் பார்த்துக் கொண்டேன். அடுத்து புத்த ஸ்தூபிக்குக் காத்திருக்கேன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வணக்கம் கீதா சாம்பசிவம், வாழ்க வளமுடன்
      காணொளிகள் , எறும்பைபற்றிய தகவல்கள் பிடித்து இருப்பது மகிழ்ச்சி.பதிவை ரசித்து படித்து கருத்தும் வாழ்த்துக்கள் சொன்னதற்கும் நன்றி.

      //அடுத்து புத்த ஸ்தூபிக்குக் காத்திருக்கேன்.//
      நன்றி.

      நீக்கு
  4. பிள்ளையார் எறும்பு கூட்டமாக வந்தால் நாங்கல்லாம் கொஞ்சம் அரிசியை அந்த இடத்தில் போடுவோம். கலைந்து விடும். சுள்ளெறும்பு, சிற்றெறும்பு ஆகியவை தொந்திரவு தான் தாங்க முடியாது. பிள்ளையார் எறும்பு காதுகளில் புகுந்து கொண்டாலும் கஷ்டம்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. பிள்ளையார் எறும்பு கூட்டமாக வந்தால் அரிசி போடும் செய்தி புதுசு எனக்கு.
      பிள்ளையார் எறும்பு என்று இல்லை காதில் எந்த பூச்சி போனாலும் கஷ்டம் தான்.
      சுள்ளெறும்பு கடித்தால் அந்த இடத்தில் அமிர்தாஞ்சன், சுண்ணாம்பு வைப்பார்கள் சரியாகி விடும். சிற்றேறும்பு கடித்தால் விபூதி தடவி கொள்வேன் அரிப்பு நிற்கும்.

      வெயில் காலம் வந்தால் நிழலைதேடி வீடுகளுக்கு படையெடுக்கும் எறும்புகள் வரும் முன் தடுப்பு செய்து விட வேண்டும். இல்லையென்றால் வந்த பின் விரட்டுவது மனதுக்கு கஷ்டம்.

      உங்கள் கருத்துகளுக்கு நன்றி.

      நீக்கு
  5. அழகான படங்கள்... இரு காணொளிகளும் அருமை... அந்த மர வடிவமும் நேர்த்தி...

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வணக்கம் திண்டுக்கல் தனபாலன், வாழ்க வளமுடன்
      படங்கள், காணொளிகள் மரவடிவம் அனைத்தையும் ரசித்து கருத்து சொன்னதற்கு நன்றி தனபாலன்.

      நீக்கு
  6. படங்கள் எல்லாம் பிரமாதம். அதைப் பற்றிய தகவல்களும் அருமை. அங்கு எல்லாமே சுத்தமாக இருக்கின்றன. அங்கு நீரின் அருகில் அனுமதிக்காதது சிறப்புதான்.

    துளசிதரன்

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வணக்கம் சகோ துளசிதரன், வாழ்க வளமுடன்
      ஆமாம் , சுத்தமாக பராமரிக்கிறார்கள்.
      நீர் நிலையில் அசுத்தம் சேராமல் இருக்கத்தான் இந்தக்கட்டுபாடு.
      உங்கள் வரவுக்கும் கருத்துக்கும் நன்றி துளசிதரன்.

      நீக்கு
  7. கோமதிக்கா ஹையோ என்ன அழகான படங்கள். இடமும் தான். நீரோடை செம அழகு. அதுக்குக் கிட்ட விடாததும் நல்லதுதான் காட்டு விலங்குகளுக்குச் சுத்தமான நீர் வேண்டுமே...அங்கு எப்படி அழகா இயற்கையைப் பாதுகாக்கறாங்க. பார்க்கப் போனா நம்மூரிலும் இயற்கை அன்னை வாரி வாரிக் கொடுத்திருக்கிறாள்...தெற்கிலும் மேற்கிலும், கிழக்கிலும், வடக்கிலும் நடுவிலும் என்று. ஆனால் நாம் தான் அதன்மதிப்பு தெரியாமல் அழித்து வருகிறோம்.

    ஒவ்வொன்றாக வருகிறேன்

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வணக்கம் கீதா ரெங்கன், வாழ்க வளமுடன்.

      //நீரோடை செம அழகு. அதுக்குக் கிட்ட விடாததும் நல்லதுதான் காட்டு விலங்குகளுக்குச் சுத்தமான நீர் வேண்டுமே...அங்கு எப்படி அழகா இயற்கையைப் பாதுகாக்கறாங்க//

      ஆமாம், விலங்குகளுக்காகத்தான் பாதுகாக்கறாங்க.


      //நம்மூரிலும் இயற்கை அன்னை வாரி வாரிக் கொடுத்திருக்கிறாள்...தெற்கிலும் மேற்கிலும், கிழக்கிலும், வடக்கிலும் நடுவிலும் என்று.//
      நம்மூரில் சில சரித்திர புகழ் வாய்ந்த இடங்களை பாதுகாக்க கட்டுப்பாடு விதித்து இருப்பதால் அவை சுத்தமாக இருக்கிறது.

      கட்டுப்பாடு விதித்தால்தான் சுத்தமாக வைத்து இருப்பேன் என்று இல்லாமல் இருந்தால்
      எல்லாம் பாதுகாக்கப்படும்.

      நீக்கு
  8. மரப் பொந்தில் பறவை இருக்கு என்பதும், மர டிசைன் எல்லாம் செம அழகு.

    எறும்புகள் பற்றிய தகவல்கள் அருமை அக்கா. இங்கு பங்களூரில் ஐ ஐ எஸ் ஸி யில் படித்த மாணவர்கள் என்று நினைவு அவர்கள் எறும்பு பற்றி ஆராய்ச்சி செய்து கட்டுரை போட்டிருந்தாங்க நான் சொல்வது 6 வருடங்கள் மேல் எனலாம். ஒவ்வொரு எறும்பு வகை பற்றியும் அவற்றின் வாழ்வியல் பற்றியும் காட்டில் போய் தங்கி செஞ்சிருந்தாங்க.

    சிவப்பு எறும்புகள் என்ன பெரிசா இருக்கு இல்லையா. ஆமாம் எறும்பு முட்டை வெள்ளையா இருக்கும் அதுங்க தூக்கிக் கொண்டு போவதே அழகு..

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. //பங்களூரில் ஐ ஐ எஸ் ஸி யில் படித்த மாணவர்கள் என்று நினைவு அவர்கள் எறும்பு பற்றி ஆராய்ச்சி செய்து கட்டுரை போட்டிருந்தாங்க நான் சொல்வது 6 வருடங்கள் மேல் எனலாம். ஒவ்வொரு எறும்பு வகை பற்றியும் அவற்றின் வாழ்வியல் பற்றியும் காட்டில் போய் தங்கி செஞ்சிருந்தாங்க.//

      அவைகளின் வாழ்வியல் நன்றாக இருக்கும் பார்க்க.
      சிறு வயதில் கோவையில் இமானுவேல் ஆலயத்தில் இப்படி விலங்குகள், எறும்புகள், வண்ணத்து பூச்சிகள் இவைகளின் வாழ்வியலை காட்டுவார்கள். மாதம் ஒரு தடவை போய் பார்த்து வருவோம். இயற்கையின் விந்தையான காட்சிகள் ஒவ்வொரு உயிரும் தங்களை பாதுகாத்துக் கொள்ள படும் பாடுகள் எல்லாம் பார்த்து இருக்கிறேன்.

      காணொளி பார்த்தது மகிழ்ச்சி.

      நீக்கு
  9. பிள்ளையார் எறும்பு வந்தா ஆமாம் எங்க வீட்டிலும் சொல்லுவாங்க பிள்ளையாருக்கு வேண்டியது பெண்டிங்க்ல இருக்கு போல என்று. மிக மிக மென்மையான எறும்பு. அது வந்தால் அதைக் கலைக்க மனசு வராது. என் மகன் சிறு வயதில் எறும்புடன் நிறைய விளையாடுவான். எறும்பிற்கு தினமும் சர்க்கரை போட்டு அவற்றை அவை தன் வீட்டிற்குக் கொண்டு சென்று வைத்து மீண்டும் வெளியே வருவதை எல்லாம் எனக்கும் சொல்லி விளக்கிவிட்டுத்தான் பள்ளிக்குக் கிளம்புவான் அவ்னை கிளப்புவதற்குள் போதும் போதுமென்றாகிவிடும் ஹா ஹா...

    ஆம் அக்கா அம்மியின் இடைவெளியில் பூரான், எறும்புகள் எல்லாம் ஊரில் கிராமத்தில் இருந்தப்ப அனுபவம் உண்டு..

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. பிள்ளையார் எறும்பு வந்தால் உங்கள் வீட்டிலும் அப்படித்தான் சொல்வார்களா !

      என் மகனும் எறும்பு ஆராய்ச்சி செய்வான் சிறு வயதில். உங்கள் மகனின் சிறு வயது நினைவுகளை பகிர்ந்து கொண்டது மகிழ்ச்சி.

      வீட்டுக்கு வெளியே போட்டு இருப்பார்கள் அம்மி, ஆட்டுக்கல்லை சில வீடுகளில் அவர்கள் பாடு மிகவும் கஷ்டமாக இருக்கும். இப்போது உள்ள குழந்தைகளுக்கு இந்த அம்மி, ஆட்டுக்கல்லுக்கு கீழே ஜீவராசிகள் அடைக்கலம் ஆவது தெரியாது.

      நீக்கு
  10. பறவைகளுக்காக உணவும் நீரும் வைத்திருப்பது அழகாக இருக்கிறது. என்னமா பராமரிக்கிறார்கள்!!!!

    இட்லி சட்னி, வெஜிட்டபிள் புலாவ் எல்லாம் நாவூறுது கோமதிக்கா அதுக்காகவே இப்படி ஒரு சுற்றுலா போலாம்னு தோணுது!!!!

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. //பறவைகளுக்காக உணவும் நீரும் வைத்திருப்பது அழகாக இருக்கிறது. என்னமா பராமரிக்கிறார்கள்!!!!//

      ஆமாம், நன்றாக பராமரிக்கிறார்கள்.

      ஆமாம், முன்பு கட்டுசாதம் கூடை இல்லாமல் எங்கு போய் இருக்கிறோம் கூஜாவில் நீர், வித விதமான தூக்குகளில் புளியம் சாதம், தயிர் சாதம், இட்லி மிலகாய் பொடி தடவிய இட்லி, பொடி தடவாத இட்லி குழந்தைகளுக்கு என்று உணவு மூட்டையை மாற்றி மாற்றி தூக்கி கொண்டு பயணம் செய்து இருக்கிறோம். தூக்கி வந்த கஷ்டம் எல்லாம் எல்லோரும் அமர்ந்து சாப்பிடும் போது பறந்து விடும்.

      மகனும் மருமகளும் காரில் நிறைய எடுத்து வருவார்கள், உணவு தங்கும் விடுதியில் சமைத்து சாப்பிட்டு விடுவோம்.

      நீக்கு
  11. எறும்பின் வலைப்பின்னல், காணொளிகள் இரண்டும் எல்லாமே அழகு கோமதிக்கா..

    கிறிஸ்துமஸ் ட்ரீ இதைத்தான் கிறிஸ்துமஸின் போது வைக்கிறார்களோ?

    பதிவை ரசித்தேன் கோமதிக்கா...அடுத்த பதிவிற்கு ஆவலுடன்

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. எறும்பின் வலை பின்னல் வியக்க வைத்தது கீதா அதுதான் இந்த பகிர்வு.
      உங்களுக்கு பிடித்து இருப்பது மகிழ்ச்சி.
      கிறிஸ்துமஸ் மரம் இதன் வடிவில் செயற்கையாக செய்து விற்கிறார்கள்.
      பதிவை ரசித்து நிறைய கருத்துரைகள் தந்தமைக்கு நன்றிகள் கீதா.

      நீக்கு
  12. படங்கள் தகவல்கள் என அனைத்துமே சிறப்பு. அதிலும் மரத்தில் டிசைன் படம் அட்டகாசம்.

    எறும்பு குறித்த தகவல்கள் சிறப்பு. சிறு வயதில் நெய்வேலியில் பார்த்த் சிவப்பு எறும்புகளின் கூடுகள் நினைவில் இன்னமும் பசுமையாய்.

    தொடரட்டும் பயணமும் பதிவுகளும்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வணக்கம் வெங்கட் நாகராஜ், வாழ்க வளமுடன்
      //படங்கள் தகவல்கள் என அனைத்துமே சிறப்பு. அதிலும் மரத்தில் டிசைன் படம் அட்டகாசம்.//

      நன்றி.


      //எறும்பு குறித்த தகவல்கள் சிறப்பு. சிறு வயதில் நெய்வேலியில் பார்த்த் சிவப்பு எறும்புகளின் கூடுகள் நினைவில் இன்னமும் பசுமையாய்.//

      அங்கு உங்கள் நினைவுகளை வேறு எறும்பு பதிவில் பகிர்ந்து கொண்டீர்கள் மாங்காய் பறிக்கும் போது விபூதியை பூசி கொண்டு பறிப்பீர்கள் என்று சொல்லி இருந்தீர்கள்.
      உங்கள் கருத்துக்கும் தொடர வாழ்த்தியதற்கு நன்றிகள்.

      நீக்கு
  13. அன்பின் கோமதி,
    வாழ்க வளமுடன் மா.
    எத்தனை விரிவான அழகான பதிவு.
    செம்மண் பூமியின் அழகும், எறும்புகள், அதைப்
    படமெடுத்த அழகு எல்லாமே மிக அழகு.
    இரண்டு காணொளியும் சுவை. எறும்பு இதைப் போல
    வலை பின்னைப் பார்த்தது இல்லை அம்மா.
    எத்தனை கவனம்!!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வணக்கம் வல்லி அக்கா, வாழ்க வளமுடன்
      செம்மண் பூமி அழகுதான்.
      எறும்புகளும் மண் நிறமே!

      //படமெடுத்த அழகு எல்லாமே மிக அழகு.
      இரண்டு காணொளியும் சுவை.//

      நன்றி அக்கா.

      //வலை பின்னைப் பார்த்தது இல்லை அம்மா.
      எத்தனை கவனம்!!//

      நானும் இங்குதான் பார்த்தேன் அக்கா.


      நீக்கு
  14. எறும்புகளில் சிவப்பு எறும்பைக் கண்டாலே நடுக்கமாக இருக்கும்.
    நீங்கள் வீடியோவே எடுத்து விட்டீர்கள்.!!!!

    அம்மியைப் பற்றி சொல்லி இருப்பது அத்தனையும் நிஜம்.
    ஜாக்கிரதையாகக் கையாள வேண்டும் .
    எத்தனை ஜாக்கிரதையாக இருந்தாலும் பூரானும் வந்துவிடும்.

    இங்கே ஒன்றையும் பார்க்காமல் இருப்பது நிம்மதி.
    எறும்பு நடமாட்டம் இருக்கிறது.

    பல்லி கரப்பான் பூச்சி இல்லை.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. சிவப்பு எறும்புகள் கோவையில் அத்தை வீட்டில் மரத்தில் இருக்கும் கடித்தால் வலி வெகு நேரம் இருக்கும்.
      இது கறும்பு கட்றெம்பு போலவே இருக்கிறது குண்டாக.

      ஆமாம், வெயில் காலம் மிகவும் ஜாக்கிரதையாக இருக்க வேண்டும்.
      அரிசோனாவில் வெளி பக்கம் எதையும் நகர்த்தாமல் இருந்து விட்டால் தேள் வந்து விடும். நகர்த்தி கூட்டி சுத்தமாக வைத்து கொள்ள வேண்டும்.
      இந்த ஊரில் உண்டு கரப்பான்பூச்சி, பல்லி எல்லாம் என்றான், வீட்டில் பார்க்கவில்லை.
      வெயில் காலம் மருந்து அடிக்க வருகிறார்கள்.

      உங்கள் கருத்துக்களுக்கு நன்றி அக்கா.

      நீக்கு
  15. எல்லோர் பதிவுகளிலும் நீங்கள் படித்த விஷயங்களை இவ்வளவு நினைவில் வைத்திருக்கிறீர்களே. மிக அதிசய நினைவாற்றல்!!!
    மாமரங்களில் கட்டெறும்புகள் ஓடிக் கொண்டே இருக்கும்.
    தென்னை மரத்திலும் தான்.
    எறும்புக்கு யார் யார் எல்லாம் எதிரிகள்
    என்று யோசிக்கிறேன்.ஓணான், மற்ற ஊர்வன,
    பட்சிகள் எல்லாமே தொல்லை கொடுக்கலாம்.
    இறைவன் அனைத்து ஜீவராசிகளுக்கும் ஏதோ
    பாதுகாப்பு
    கொடுக்கிறான். அருமையான பதிவுமா.
    காலைப் பலகாரம், மதிய உணவு எல்லாப் படங்களும்
    சிறப்பு.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வெங்கட் நெய்வேலி நினைவுகளை அடிக்கடி பதிவு செய்வார்.
      முன்பு போட்ட எறும்பு பதிவின் சுட்டி கொடுத்து இருக்கிறேன். நேரம் இருந்தால் பாருங்கள், அதில் வெங்கட் மாமரத்தில் ஏறும் போது வீபூதி பூசி கொண்டு ஏறுவேன் என்று போட்டு இருப்பார்.
      பாலசுப்பிரமணியன் சாரும் அவர் வீட்டு மாமரத்தில் கறுப்பு கட்டெறும்பு இருக்கும் அது கடிக்கும் என்று போட்டு இருப்பார்.

      //இறைவன் அனைத்து ஜீவராசிகளுக்கும் ஏதோ
      பாதுகாப்பு
      கொடுக்கிறான். //

      ஆமாம் அக்கா, இறைவன் ஓவ்வொருவருக்கும் ஓவ்வொரு மாதிரி தங்களை பாதுகாத்துக் கொள்ளும் தன்மையை கொடுத்து இருக்கிறார்.

      //காலைப் பலகாரம், மதிய உணவு எல்லாப் படங்களும்
      சிறப்பு.//

      மருமகளுக்கு தான் அத்தனை சிறப்பும் அவள் செய்தாள்.
      உங்கள் கருத்துக்களுக்கு நன்றி அக்கா.



      நீக்கு
  16. அழகான படங்களும் விவரங்களுமாக பதிவு அருமை...

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வணக்கம் சகோ துரை செல்வராஜூ, வாழ்க வளமுடன்
      உங்கள் கருத்துக்கு நன்றி.

      நீக்கு
  17. தாம் இட்ட முட்டைகளிடம் எறும்புகளும் தாய்மை கொண்டாடுகின்றன..

    இறைவன் / இயற்கை நமக்களிக்கும் பாடம்...

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. எல்லா உயிர்களுக்கும் தாய்மை உண்டுதானே!
      இறைவன், இயற்கை நமக்கு அளித்து கொண்டு இருக்கும் பாடம் நிறைய .நாம அதிலிருந்து கற்றுக் கொள்ள வேண்டும்.

      நீக்கு
  18. எறும்புகளிடமும் இரங்கி அருளும் இறைவன் நம்மிடமும் இன்னருள் புரிவான்..

    கொடுந்தொற்று தொலைந்து அழிவதற்கு
    மனதார வேண்டிக் கொள்வோம்...

    ஓம் நம சிவாய..

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. //எறும்புகளிடமும் இரங்கி அருளும் இறைவன் நம்மிடமும் இன்னருள் புரிவான்.//

      அருள்வான் கண்டிப்பாய்.

      எல்லா உயிர்களிடத்திலும் தாயின் கருணையுடன் இரங்கி அருள்கிறான் இறைவன்.

      //கொடுந்தொற்று தொலைந்து அழிவதற்கு
      மனதார வேண்டிக் கொள்வோம்...//

      நாள்தோறும் வேண்டிக் கொண்டு இருப்போம்.
      ஓம் நம சிவாய.

      கூட்டுப் பிரார்த்தனைக்கு ஒவ்வொருவரும் அழைத்து வருகிறார்கள், செய்து வருகிறார்கள். விரைவில் நலம் தருவாள் அன்னை.

      நீக்கு