ஞாயிறு, 16 மே, 2021

நீரோடையும் மான்களும்


மரக்கூடார நிழலில் மரப்பாலம்


  இந்த  நீரோடையில் நீர் அருந்த வந்த விலங்கு என்ன என்று யோசித்து வைத்து இருங்கள் என்றேன் போன பதிவில். 
     
சிவப்பு பாறை தேசீய பூங்கா முந்தின பதிவு படிக்கவில்லை என்றால் படிக்கலாம்.
 நல்ல காற்றை சுவாசிக்க இயற்கையை ரசிக்க ஏற்ற இடம் இந்த தேசிய பூங்கா. மகள்  ஊரிலிருந்து என்னைப்பார்க்க வந்து இருப்பதால் அவளையும் தன் ஊரில் சிறந்த இடத்திற்கு அழைத்து செல்ல எண்ணம் கொண்ட மகன், மருமகள் ஏற்பாடு செய்த பூங்கா அருமையாக இருந்தது. 

கூட்டம் இல்லாத இடம். அமைதி தவழும் இடம். பறவைகளின்  சத்தம் மட்டுமே கேட்கும் இடம். நாம் பேசுவதே மிக சத்தமாக கேட்கும்  அப்படி ஒரு அமைதியான இடம்.

செடோனாவில் இந்த மாதிரி இடங்கள் 100 இருக்கிறதாம்.இந்த மலைகளில் மக்கள் மலையேற்ற பயிற்சிசெய்கிறார்கள்  மலையேற்றத்தால் கிடைக்கும் நன்மைகளுக்காக  இந்த மாதிரி இடங்களுக்கு போக விரும்புகிறார்கள். , நல்ல காற்றை சுவாசிக்கவும் உடல் பலம் பெறவும் இந்த மாதிரி இடங்களுக்கு போக விரும்புகிறார்கள். 

நம் நாட்டில் மலைமேல் உள்ள கோவில்களுக்கு  படிகளில் ஏறியும், படி இல்லாமல் மலைபாதையில்  நடந்து சென்றும்  தரிசனம் செய்து வருவார்கள். மலைகளில் வளரும் மூலிகை தாவரங்களின் வாசமும், அங்கு கிடைக்கும் சுத்தமான காற்றும்   நமக்கு மனபலம், உடல்பலம் தரும் என்ற நம்பிக்கை உண்டு நம் மக்களுக்கு. மலைபகுதியில் உள்ளமக்கள் நிறைய தூரம் மலைபாதையில்  ஏறி, இறங்கி, நடந்தே பல இடங்களுக்கு போவதால் அவர்கள் ஆரோக்கியமாக இருக்கிறார்கள்.


மரப்பாலத்திலிருந்து  மான் நீர் அருந்த வந்ததை பார்த்தோம். 
நாணல் புற்கள் அழகாய்  சூழ்ந்து இருக்கும் இடம்
மான "இந்த தோற்றத்தில் கழுதை மாதிரி இருக்கே" என்றேன்   இதன் பேர் கழுதை மான் தான் ஆச்சி(Mule deer, )என்றான் பேரன்.
  காது கழுதை காது போல் இருப்பதால் இந்த பேராம். 

ஆழம் இல்லா நீரோடை, தெளிந்த நீரோடை

இந்த மான்கள் இளம் துளிர் இலைகள், பூக்கள், பழங்களை மட்டுமே உண்ணுமாம்.
ஐந்து மான்கள் நின்றன , இங்கு தெரிவது மூன்று மட்டுமே!
கொஞ்சம் தள்ளி நின்று இருந்தது இரண்டு மான்கள்
மரப்பாலத்தில் ஆள் நடமாட்டம் இருக்கே! என்று காதுகளை தூக்கி கூர்ந்து பார்க்கிறது.
நாணல் புதரில் மறைந்து கொண்டுப் பார்க்கிறது
சாய்ந்து கிடக்கும் மரத்தை பார்த்து கொண்டு இருக்கிறது
இந்த ஊர் அண்டம் காக்கா
இரண்டு மூன்று பறவைகள் தான் பார்த்தேன் எல்லாம் பறந்து கொண்டே இருந்தது எங்கும் அமரவில்லை. காகம் மட்டும் அமர்ந்தது.
போன பதிவில் சில மலைகள் படம் போட்டு இருந்தேன்.இந்த பதிவில் இன்னும் சில மலை படங்கள். சின்ன மலைக்கு  முன் பக்கம் இருக்கும் மலை  என் கண்களுக்கு நந்தி போல இருக்கிறது.   
எனக்கு எந்த மலையைப் பார்த்தாலும் கயிலைமலை போலவே தெரிகிறது.

அடுத்த பதிவில் அங்கு உள்ள மரங்களின் அழகும், எறும்புக் கூடும் எறும்பு தின்னும் பூச்சியும் பார்க்கலாம்.
வாழ்க வையகம்! வாழ்க வையகம்! வாழ்க வளமுடன்.

--------------------------------------------------------------------------------------------------

44 கருத்துகள்:

  1. படங்கள் மிக அழகாக இருக்கிறது.... இடங்கள் பற்றி சொல்லவேண்டாம் இயற்கையாக இருக்கும் இடங்கள் எப்போதும் மனதிற்கு சந்தோஷத்தை கொடுக்கின்றது

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வணக்கம் மதுரை தமிழன், வாழ்க வளமுடன்
      ஆமாம், நீங்கள் சொல்வது சரிதான். இயற்கையாக இருக்கும் இடங்கள் எல்லாம் எப்போது மனதுக்கு மகிழ்ச்சி கொடுக்கிறது.
      உங்கள் வரவுக்கும், கருத்துக்கும் நன்றி.

      நீக்கு
  2. மகளும் உங்களை பார்க்க அங்கு வந்திருந்தது  மகிழ்ச்சி.  மலைகளில் அடிக்கடி ஏறி இறங்குவதால் ஆரோக்கியம் கூடுகிறது.  என் மாமா ஊட்டியில் பல வருடங்கள் இருந்தவர்.  கடைசிவரை சுறுசுறுப்பகவே இருந்தார்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வணக்கம் ஸ்ரீராம், வாழ்க வளமுடன்
      போன பதிவிலும் சொல்லி இருந்தேன் . அவள் வந்து போனது மகிழ்ச்சியாக இருந்தது.
      ஊட்டியில் என் சித்தி இருந்தார், அப்படித்தான் மேலே வீடு இருக்கும். மேலே ஏறுவதும், இறங்குவதும் நமக்கு கஷ்டம் ஆனால் அவர்களுக்கு பழகி விட்டதால் வேகமாய் ஏறுவார்கள், இறங்குவார்கள். நல்ல ஆரோக்கியமாக இருந்தார்கள்.

      நீக்கு
  3. மான் க்ளோசப்பில் கழுதை மாதிரி இருக்குரியதே என்று யோசிக்கும்போதே நீங்களும் சொல்லி விட்டீர்கள்!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஆமாம், நானும் ஜூம் செய்து மானை பார்த்த போதுதான் சொன்னேன் .
      புள்ளி மான்களை, கலைமான்களை பார்த்த நமக்கு இது வித்தியாசமாக இருந்தது.
      ஆனால் மானுக்கே உரிய அந்த மருண்ட பார்வை இருக்கிறது.

      நீக்கு
  4. எந்த மலையைப் பாத்தாலும் கயிலை மலை போலவே...   ஹா ஹா ஹா மனம்போல் பார்வை.  இயற்கை எங்கும் ஆண்டவன் கண்ணுக்குத் தெரிகிறார்.  முதலில் இருக்கும் குட்டி மலை ஒரு மெகா கொள்கலன் போலவும், எரிமலை போலவும் தெரிகிறது!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. இங்கு மலைகள்தான் வித விதமாய் ஸ்ரீராம். மனதில் தோன்றும் கற்பனைவடிவத்தை அதில் காணலாம். நாலு பக்கம் ஏரி என்பது போல் நாலு பக்கம் மலைகள் சூழ இந்த ஊர் இருக்கிறது.
      //முதலில் இருக்கும் குட்டி மலை ஒரு மெகா கொள்கலன் போலவும், எரிமலை போலவும் தெரிகிறது!//
      நல்ல கற்பனை.
      உங்கள் கருத்துக்களுக்கு நன்றி.

      நீக்கு
    2. எனக்கு எப்போவுமே கொடைக்கானலை விட ஊட்டி தான் பிடிக்கும். அதன் அழகும், மலைத்தொடர்களின் பசுமையும் நடக்க நடக்கக் களைப்பே தெரியாத சூழலும் எப்போவுமே பிடித்த ஒன்று. அங்கேயே இருக்கணும்னு ஆசையும் இருந்தது. ஆனால் நம்மவருக்குத் தான் இஷ்டம் இல்லை. மழைக்காலங்களில் மண் சரிவு, நிலச்சரிவுகளால் அவசரத்துக்குக் கூடக் கீழே இறங்க முடியாது/ ஆபத்து என்பார்.

      நீக்கு
    3. வணக்கம் கீதா சாம்பசிவம், வாழ்க வளமுடன்
      கொடைக்கானலை விட ஊட்டி அழகுதான். மலைகளின் ராணி அல்லவா!
      நீலகிரி மலை அழகு. நடந்து கொண்டு இருக்கும் போதே மழை பெய்யும்.
      வேலைக்கு போய் வருபவர்களுக்கு கஷ்டம்.
      சார் சொல்வது போல் அடிக்கடி மலைச்சரிவு ஏற்படும் தான்
      நிலச்சரிவு.
      மரங்களை அழித்து கட்டிடங்கள், ஓட்டல்கள் கட்டுவதால்தான் நிலச்சரிவு ஏற்படுவதாக எங்கள் சித்தி புலப்புவார்கள்.

      நீக்கு
  5. அழகான இடம், அழகான மான்கள். படங்களும் அழகு. இப்படி எல்லாம் இயற்கையின் விசித்திரங்கள் கொட்டிக்கிடக்கும் இடங்கள் யாருக்கும் தெரியாமல் இருப்பதே நல்லது எனத் தோன்றும். மலைகள் எல்லாமே நீங்க சொல்றாப்போல் கயிலை மலைக்கூட்டத்தை நினைவூட்டுகின்றன.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அழகான இடம் கூட்டம் கூடினால் அழகு கெடும் என்று யாருக்கும் தெரியாமல் இருப்பதே நல்லது என்று சொல்கிறீர்கள் போலும். இங்கு வனத்துறை பணிபுரிபவர்கள் மிகவும் சுத்தமாக பராமரிக்கிறார்கள்.

      உங்களுக்கும் மலைகள் எல்லாம் கயிலை மலைக்கூட்டத்தை நினைவூட்டுவது மகிழ்ச்சி.

      நீக்கு
    2. அமைதியான சுத்தமான சுற்றுச் சூழலை மக்கள் தானே கெடுக்கிறோம். அதனால் தான் சொன்னேன். அதிக மக்கள் வந்தால் அழகே மறைய ஆரம்பித்துவிடும்.

      நீக்கு
    3. மனிதன் கால்தடம் பட்டு புல்லும் பட்டு போகிறதே! புல்வெளியில் நடக்காதீர்கள் என்று சில பூங்காவில் அறிவுப்பு பலகை வைத்து இருப்பார்களே!

      கண்டதை கொடுப்பதால், குப்பைகளை போடுவதால் அங்குள்ள பற்வைகள், விலங்குகளுக்கு கஷ்டம். நாங்கள் இட்லி எடுத்து போய் இருந்தோம் சாப்பிட்டு விட்டு தட்டுகளை கவரில் போட்டு எடுத்து வந்து விட்டோம். அங்கு குப்பை கூடைகள் வைக்கவில்லை.

      நீக்கு
  6. உங்கள் மகள் உங்களைப் பார்க்க வந்திருப்பது குறித்து ஏற்கெனவே சொல்லி இருக்கிறீர்கள். ஆனால் போன பதிவை நான் பார்க்கலைனு நினைக்கிறேன். ஓய்வாக இருக்கவும் மனம் அமைதி பெறவும் கண்டு மகிழவும் நல்லதொரு இடம். உங்கள் மகன்/மருமகள் தேர்வு அருமை.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. போன பதிவில் நிறைய மலைகள் படம் இருக்கிறது முடிந்த போது பாருங்கள்.
      போனபதிவில் அன்னையர் தினத்தில் பிள்ளைகள் இருவரும் அருகில் இருந்தார்கள் என்று எழுதி இருக்கிறேன்.

      மனம் அமைதி அடையவில்லை கீதா. பிள்ளைகள் இருவரும் அருகில் இருக்கும் போது அவர்களும் இருந்தால் எவ்வளவு நன்றாக இருக்கும் என்ற எண்ணம் வந்து போனது.
      அவர்களுக்கு இந்த மாதிரி இடம் பிடிக்கும்.

      உங்கள் கருத்துக்களுக்கு நன்றி.

      நீக்கு
    2. எத்தனை காலம் ஆனாலும் மனம் அமைதி அடையாது கோமதி. இது நாங்கல்லாம் சொல்வதினாலும் அமைதியுறாது. ஓர் தவிப்பு இருந்து கொண்டே இருக்கும். ரேவதி இன்னமும் தவிக்கிறாங்க பாருங்க! யார் என்ன சொன்னாலும் ஓர் வெற்றிடம் நிரந்தரமாக ஏற்பட்டு விடும்.

      நீக்கு
    3. நீங்கல் சொல்வது சரிதான். அவர்கள் இல்லா வெற்றிடம் ஏற்பட்டு இருப்பது உண்மை. நினைவுகள் நான் மறையும் வரை இருக்கும்.
      சுற்றம், நட்புகள் கொடுக்கும் அன்பில்தான் வாழ்ந்து கொண்டு இருக்கிறேன்.
      உங்கள் ஆறுதல் வார்த்தைக்கு நன்றி.

      நீக்கு
  7. அழகான இடங்கள்... அருமையான விளக்கங்கள்...

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வணக்கம் திண்டுக்கல் தனபாலன், வாழ்க வளமுடன்
      உங்கள் கருத்துக்கு நன்றி.

      நீக்கு
  8. மான் படங்கள், இடம் மலைகள் நீரோடை எல்லாமே மிக அழகாக இருக்கின்றன. நல்லதொரு புத்துணர்ச்சி தரும் இடமாகத் தெரிகிறது.

    உங்கள் மூலம் இம்மாதிரியான இடங்களைப் பார்க்க முடிகிறது. தெரிந்துகொள்ள முடிகிறது.

    பதிவு அருமை

    துளசிதரன்

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வணக்கம் சகோ துளசிதரன், வாழ்க வளமுடன்
      நல்லதொரு புத்துணர்ச்சி தரும் இடம்தான்.
      உங்கள் கருத்துக்கு நன்றி.

      நீக்கு
  9. கோமதிக்கா ஹையோ என்ன அழகான இடம் அக்கா..எனக்கும் கயிலை போலவே இருந்தது நேரில் கயிலை பார்த்தது இல்லை ஆனால் படங்களில் பார்த்திருந்ததை வைத்துச் சொல்கிறேன்.

    ஆமாம் அக்கா நந்தி போல இருக்கு. எனக்கும் தெரிந்தது நீங்களும் சொல்லியிருக்கீங்க.

    மான் செம அழகு கழுதை மான்...பார்த்ததும் தெரிகிறது கழுதை மான் என்று. காது நீளமாக முகமும் கொஞ்சம்...நீரோடையில் தண்ணீர் அருந்தும் படம் எல்லாமே அழகு.

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வணக்கம் கீதா ரெங்கன், வாழ்க வளமுடன்
      ஆமாம் கீதா, கயிலை மலை
      , நம் இமயமலை போலதான் இருக்கிறது.
      உங்களுக்கும் நந்தி தெரிந்தது மகிழ்ச்சி.

      மான் படங்கள் உங்களுக்கு பிடித்து இருப்பது மகிழ்ச்சி.


      நீக்கு
  10. நீரோடை என்ன தெளிவாக இருக்கிறது!

    உங்களுக்கும் எல்லோருக்குமே நல்ல ப்ரேக். மிகுந்த அழகான இடம். புத்துணர்ச்சி தரும் இடம் தான். மனதிற்கு இதம். படங்களை மிகவும் ரசித்தேன் கோமதிக்கா.

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நீரோடையில் விழும் இலை குப்பைகளை வனத்துறை பணியாளர்கள் வலை வைத்து எடுத்து விடுகிறார்கள். மிகவும் சுத்தமாக பார்த்துக் கொள்கிறார்கள். நீரீடையில் இறங்க தடை உள்ளது.
      புத்துணர்ச்சி தரும் இடம் தான். வீட்டிலேயே இருந்ததற்கு நல்ல மாறுதலான ஆறுதாலன இடம்.

      நீக்கு
  11. இயற்கை இயற்கைதான் கோமதிக்கா என்னதான் சொல்லுங்க! அதற்கு நிகர் எதுவுமில்லை.

    எல்லாமும் ரசித்தேன் அடுத்த பதிவுக்கு வெயிட்டிங்க் கோமதிக்கா எறும்பு தின்னி, மரங்கள் எல்ல்லாம் பார்க்க

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. இயற்கை எங்கும் ஆட்சி செய்கிறது. அதுக்கு நிகர் ஏது?

      அடுத்த பதிவுக்கு வெயிட் செய்வது மகிழ்ச்சி.
      உங்கள் கருத்துக்களுக்கு நன்றி.

      நீக்கு
  12. அழகான படங்கள். கழுதை மான்கள் அழகு. புள்ளி மான்களைப் பார்த்த நமக்கு இப்படியான மான்களைப் பார்ப்பது வித்தியாசம் தான்.

    குடும்பத்தினர் அனைவரும் ஒன்றாக இப்படியான இடங்களுக்குச் சென்று வருவது மகிழ்ச்சியான விஷயம்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வணக்கம் வெங்கட் நாகராஜ், வாழ்க வளமுடன்
      இந்த மான வித்தியாசமாக இருந்தது உண்மைதான்.

      குடும்பத்தினர்களுடன் உணவு கொண்டு போய் சாப்பிட்டு மகிழ்வது இனிமைதான்.
      உங்கள் கருத்துக்களுக்கு நன்றி.

      நீக்கு
  13. படங்கள் அழகு. இயற்கையின் மடியில் தவழ்ந்துவிட்டது போன்ற உணர்வு உங்களுக்குக் கிடைத்திருக்கும்.

    கட்டுச்சாதம் கொண்டு சென்றிருந்தீர்களா?

    இந்த மானைக் கொன்று தின்னும் விலங்கு, அங்கு என்னவாயிருக்கும்? எந்த விலங்கையும் அழிக்க ஒரு விலங்கு இருக்குமே

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வணக்கம் நெல்லைத் தமிழன், வாழ்க வளமுடன்
      இயற்கைதாயின் மடியில் தவழ்ந்து மன ஆறுதல் அடைந்தது உண்மை.

      கட்டுச்சாதம் கொண்டு போனோம். இங்கு வரும் முன் ஒரு இடத்தில் காலை டிபன் இடலி, மிள்காய் பொடி, தக்காளி சட்னி சாப்பிட்டோம்.
      மதியம் இந்த இடத்தில் வெஜிடபிள் பிரியாணி உருளை சிப்ஸ், தயிர் வெங்காயம் சாப்பிட்டோம். படங்கள் போடுகிறேன். இந்த மாதிரி சமயம் வெளியில் சாப்பிட முடியாது இல்லையா?

      இந்த மானை கொன்று தின்னும் விலங்கு மலை சிங்கம் இருக்கிறது. மலைசிங்கம் முன்பு மனிதனை துரத்தி அடித்ததாம்.

      உங்கள் கருத்துக்கு நன்றி.

      மற்றும் கரடி, காட்டுபன்றி, ஓநாய் இருக்கிறது.

      நீக்கு
  14. அன்பின் கோமதிமா,
    வாழ்க வளமுடன் மா.
    தாமதமாக வருகிறேன். ப்ளாகர் தொந்தரவில் இரண்டு தினங்கள் சென்று விட்டன.
    இன்று பரவாயில்லை.

    மலைகளும், ஓடைகளும், மான் களும் அருமையான காட்சிகள்.
    மானைப் போல ஒரு மென்மையான, சட்டென்று மிரளும்
    மிருகம் காண முடியாது.
    அதையும் விரட்ட ஒரு மௌண்ட்டன் லயன் வருகிறதா.
    அது தான் இயற்கையின் நியதி அல்லவா.
    இருக்கும் வரை உணவு கிடைத்துக் கொண்டு
    நிம்மதியாக இருக்கட்டும்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வணக்கம் வல்லி அக்கா, வாழ்க வளமுடன்
      ப்ளாகர் தொந்தரவு சரியானது மகிழ்ச்சி.

      மலைகளும் ,ஓடைகளும், மானகளும் எப்போதும் மகிழ்ச்சி தருபவை தான் அக்கா.
      இறைவன் ஒவ்வொன்றும் ஒவ்வொன்றை உணவாக படைத்து இருக்கிறான் . அதில் ஒன்று பாதித்தாலும் வேறு தீங்குகள் வந்து சேரும்.

      எங்கோ மான் வகை பெருகி விட்டதாம், பயிர்களை நாசம் செய்வதாக படித்தேன்.

      நீக்கு
  15. சார் இல்லாமல் வாழ்வு கடினம்தான் உங்களுக்கு.
    அதுவும் நல்ல இடங்களைப் பார்க்கும் போதோ,
    நல்ல உணவைச் சாப்பிட நேர்ந்தாலோ
    ,பிள்ளைகளிடம் பேசும்போது மனம்
    எங்கெங்கியோ போய் வரும்.

    என்ன செய்யலாம் கோமதி .சகித்துக் கொண்டுதான்
    செல்ல வேண்டும்.
    ஊரை விட்டு வந்த நிலையில் இன்னும்
    வருத்தம் தான். குழந்தை முகத்தைக்
    கண்டு மனம் ஆறவேண்டும்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அதிகாலையில் காப்பி கொடுக்க வேண்டும், இந்த நேரம் அவர்கள் உணவு உண்ணும் நேரம். 11 மணிக்கு காப்பி குடிக்கும் நேரம் என்று நேரங்கள் அவர்களை உணர்த்தி கொண்டே இருக்கிறது. நீங்கள் சொன்னது போல் அவர்களுக்கு பிடித்த உணவுகளை மருமகள் செய்தால் உன் மாமாவுக்கு பிடித்த உணவு என்று சொல்கிறேன் மருமகளிடம்.

      நினைவுகள் வந்து வந்து போகிறது.

      குழந்தைகள் தான் ஆறுதல்.

      முகம் வாடினால் ஏன் இப்படி முகத்தை வைத்து கொண்டு இருக்கிறீர்கள் என்று பேரன் கேட்கிறான். எப்போதும் மலர்ந்த முகமே அவனுக்கு பிடித்து இருக்கிறது.

      உங்கள் அன்பான கருத்துக்களுக்கு நன்றி அக்கா.

      நீக்கு
  16. மிக அழகான படங்கள். அதுவும் அந்த மரப்பாலமும், தெளிந்த நீரோடையும்.. கொள்ளை அழகு.
    கழுதை மான்.. இப்போதுதான் கேள்விப்படுகிறேன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வணக்கம் பானுமதி வெங்கடேஷ்வரன், வாழ்க வளமுடன்
      நானும் பேரன் சொல்லித்தான் கேள்வி பட்டேன்.
      அப்புறம் கூகுளில் பார்த்தால் கோவேறு கழுதை மான் என்று நிறைய விஷயங்கள் படித்தேன்.
      நீரோடை எனக்கும் பிடித்து இருந்தது.

      நீக்கு
  17. உங்கள் மன நிலை புரிகிறது. என் கணவருக்கு மிகவும் பிடித்த போளியை என்னால் சாப்பிடவே முடியாது. வீட்டில் ஏதாவது செய்யத் துவங்கும் பொழுது, அப்பா இருந்தால் இப்படி சொல்வார், இப்படி செய்வார் என்னும் பேச்சு வராமல் இருக்காது.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நீங்கள் சொல்வது சரிதான், கணவருக்கு பிடித்த உணவுகளை இப்போது சாப்பிட பிடிக்கவில்லைதான்.

      குழந்தைகள் மற்றும் உறவினர்கள் பேசும் போது கணவரைபற்றி பேசுகிறார்கள்.
      நினைவுகள் நெஞ்சைவிட்டு நீங்காது.
      உங்கள் கருத்துக்களுக்கு நன்றி.

      நீக்கு
  18. படங்களம் பகிர்வும் அழகு
    நேரில் பார்த்த உணர்வு
    நன்றி சகோதரி

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வணக்கம் சகோ கரந்தை ஜெயக்குமார், வாழ்க வளமுடன்
      உங்கள் கருத்துக்கு நன்றி.

      நீக்கு
  19. இயற்கை எழில் கொஞ்சும் அமைதியான ரம்மியமான சூழல். Mule Deer பற்றி அறிந்து கொள்ள முடிந்தது.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வணக்கம் ராமலக்ஷ்மி, வாழ்க வளமுடன்
      உங்கள் கருத்துக்கு நன்றி ராமலக்ஷ்மி.

      நீக்கு