கர்நாடகாவின் சிக்மகளூர் மாவட்டத்தில் அமைந்து இருக்கிறது அன்னபூரணி கோவில்; மேற்கு தொடர்ச்சி மலை அருகில் பத்ரா நதிக்கரையில் இருப்பதால் இயற்கை எழிலோடு அமைந்து இருக்கும் கோவில்.
நிறைய கொண்டை ஊசி வளைவுகளை கொண்ட மலைப்பாதை. வரும் வழி எல்லாம் இயற்கை எழில் நம்மை மெய் மறக்கச் செய்யும்.
மழைக்காலத்தில் விடாது மழை பெய்யும்போது முன்பெல்லாம் பயணம் செய்வது மிகவும் கஷ்டமாம் . இப்போது பாதை நன்றாக இருக்கிறது.
அழகான தோரணவாயில் நம்மை வரவேற்கிறது.
சுமார் 25 படிகள் இருக்கும் ஏறிச் செல்வது கடினமல்ல. படியில் வயதானவர்கள் பிடித்துக் கொண்டு ஏறிச்செல்ல வசதியாக கைப்பிடி உள்ளது
அன்னபூரணி கோவிலைக் காலையில் பார்த்தோம். சிருங்கேரி சாரதாம்பாள் கோவிலை மதியத்தில் பார்த்தோம் அந்தக் கோவிலை முன்னே பதிவு போட்டு விட்டேன்.
இறங்கும் வழி
அலங்கார வளைவுக்குள் அழகான மணியுடன் கூடிய தொங்கும் விளக்குகள்
விளக்கில் அமர்ந்து வருபவரை பார்க்கும் சிட்டுக்குருவி. அதற்கு உணவுக்குப் பஞ்சமில்லை, அன்னையின் வாசலில்.
படிகளின் ஏறியவுடன் வரும் முன்பகுதி, கோவில் கேரள பாணியில் இருக்கிறது
அம்மன் சன்னதி செல்லும் இடம். சன்னதி வாசலில் துளசி மாடம் -யாரும் இலைகளைப் பறிக்காமல் இருக்க வேலி போடப்பட்டு இருக்கிறது.
அன்னை இப்படித்தான் தங்கக் கவசத்தில் காட்சி அளிப்பாள் . உள்ளே படங்கள் எடுக்க அநுமதி இல்லை, வெளியில் மட்டும் எடுக்கலாம். .
எங்கு பார்த்தாலும் சிட்டுக்குருவிகள். தூணில் உள்ள ஸ்பீக்கரின் பின்புறத்தில் கூடு கட்டி இருக்கிறது
தூண் வளைவில் சிறிய ஆணி -குருவி பிடித்துக் கொண்டு நிற்க வசதியாக
தூணில் உள்ள வளைவும் அதற்கு வசதியே
கோவிலை நிர்வகிக்கும் ஜோஷிகள் குடும்பத்தினர் போலும்
கலையரங்கம் போல் உள்ளதில் அரிசி மூட்டைகளும் தானியங்களும் இருக்கிறது. இங்கு விவசாயம் செய்யும் மக்கள் காணிக்கையாகக் கோவிலுக்கு கொடுப்பார்களாம். குழந்தைகளுக்குப் பசும்பால கொடுக்கிறார்கள். பெரிய நவீன மாடல் உணவுக் கூடம் இருக்கிறது.
மதியம் உச்சிக்கால பூஜை முடிந்தவுடன் கோவிலுக்கு வந்தவர்கள் அனைவருக்கும் உணவு உண்டு. கோவிலுக்குப் போன உடன் சுக்குக் கஷாயம் கொடுத்தார்கள். அதை அம்மனின் மருந்து என்று சொன்னார்கள். எல்லாப் பிணிகளையும் போக்கும் மருந்து என்றார்கள். சுக்கு, மிளகு, ஏலம் கலந்து கொஞ்சம் காரமாக இருந்தது.
அப்புறம் வளையல் , ரவிக்கைத் துணி, புடவை எல்லாம் வாங்கி வந்து அம்மனுக்குக் கொடுத்ததில் வளையல்களைப் பெரிய தட்டில் அம்மன் சன்னதி அருகே பிரகாரத்தில் வைத்து இருந்தார்கள். நம்மையே எவ்வளவு வேண்டுமென்றலும் எடுத்துக்கொள்ளுங்கள் என்றார்கள். நானும் கொஞ்சம் அன்னையின் வளையல்களை எடுத்துக்கொண்டேன்.
பிரகாரத்தில் உட்காரச் சொன்னார்கள்; உட்கார்ந்து இருந்தோம். அம்மனுக்கு அர்ச்சனை செய்பவர்கள் அர்ச்சனை சீட்டை வாங்கிக்கொண்டு உள்ளே அனுப்பினார்கள். அர்ச்சனை செய்பவர்களை அம்மனின் மிக அருகில் அமர வைத்து அர்ச்சனை செய்தார்கள்.
அன்னைக்கு நேரே சிம்மம் -இரண்டு கால்களில் நின்று கொண்டு இரண்டு கால்களில் அட்சய பாத்திரத்தை கையில் ஏந்திய தோற்றத்தில் இருக்கும்.
வெள்ளியில் செய்த ஏழுதலை நாகம், பின் புறம் அம்மன் இரு கைகளில் சங்கு , சக்கரம், ஆகியவற்றை கையில் ஏந்தி இருக்கிறார். ஒரு கை நமக்கு வரம் அளிப்பது போல் வரத முத்திரை, இன்னொரு கை என்னை சரண் அடை என்று அவர் பாதங்களை நோக்கி இருக்கிறது. அன்னையின் முகத்தைப்பார்த்துக் கொண்டே இருக்கலாம் போல இருக்கும்.
குங்கும அர்ச்சனை செய்கிறார்கள், அது முடிந்தவுடன் தீபாராதனை . நம்மை எழுந்து கொள்ளச் சொல்லி நம்மை வெளியே அனுப்பிய பின் அடுத்தவர்களை அமர வைக்கிறார்கள்.
அர்ச்சனை செய்யாதவர்கள் கொஞ்சம் தள்ளி பூஜை ஆகும் வரை நின்று கொண்டு பார்க்கலாம். அதுபோல் அவர்களைப் போகச் சொல்லி அடுத்தவர்கள் நிற்பார்கள். அதை மிக அமைதியாக வழி நடத்துகிறார்கள்.நாங்கள் போனபோது கூட்டமில்லை.
வெளியே வந்த பின் அர்ச்சனை செய்த பிரசாதப் பை கொடுப்பார்கள் . அதில் வெல்லமாவு கலந்த (மாவிளக்கு போல ஆனால் வெள்ளையாக இருக்கும்) சின்ன உருண்டை, கல்கண்டு, கொஞ்சம் அரிசி, தேங்காய் இவ்வளவும் இருக்கும். அந்த அரிசிப் பிரசாதத்தை நம் வீட்டு அரிசிப் பானையில் போட்டுக் கொண்டால் அரிசி பஞ்சமே இருக்காது என்றார்கள்.
மதியம் உணவு வேளை என்றதால் அனைவரையும் உணவருந்திச் செல்லச் சொன்னார்கள். அருமையான சாப்பாடு . ஆனால் நான் தயிர்சாதம் மட்டும் சாப்பிட்டேன்.
முதலில் ரசம், அப்புறம் நிறைய காய்கள், பச்சைப்பூசணி போட்ட சாம்பார், பாயசம், மோர் வந்தது. எல்லோருக்கும் மோர் கொண்டுவரும் முறை வரும் வரை காத்து இருந்து நான் மோர்சாதம் சாப்பிட்டேன்.
காலை பில்டர் காப்பியுடன் உணவு உண்டாம், நாங்கள் வெளியே ஸ்ரீ கிருஷ்ணா என்ற ஓட்டலில் காலை டிபன் முடித்து விட்டுத்தான் கோவிலுக்கு வந்தோம்.
மதியம் உச்சிகாலம் முடிந்து உணவு கொடுக்க ஆரம்பித்தால் மதியம் முன்று மணி வரையாம். அப்புறம் இரவு உணவு 9 மணி வரையாம்.
அங்கேயே தங்கினால் உணவுக்குக் கஷ்டமே இல்லை மூன்று வேளையும். மலைப்பிரதேசம் என்பதால் நினைத்தால் மழை பெய்யும். இரவுப் பயணம் வேண்டாம் என்று எங்கள் பயண அமைப்பாளர் மதியமே அங்கிருந்து அழைத்து வந்துவிட்டார்.
அன்னதானக்கூடம்
படம் எடுக்கலாமா வேண்டாமா என்று யோசித்து அவசரமாய் செல்லில் எடுத்த படம் நன்றாக இல்லை. இருந்தாலும் 'நாங்கள் சாப்பிட்டோம் அன்னபூரணியின் பிரசாதம்' எனக் காட்ட இந்தப் படம்.
கோவிலுக்கு மேலேயே கடைகள் இருக்கிறது. எங்கள் குழு எங்கும் போகவில்லை. அடுத்த கோவில் சிருங்கேரி(இங்கிருந்து இரண்டரை மணி நேரத்தில் சிருங்கேரியை அடையலாம்.) என்பதால் அன்னபூரணியைத் தரிசனம் செய்து கீழே இறங்கிவிட்டோம். ஊருக்கு வந்த பின் எல்லோரும் கேட்டார்கள், 'அங்கு காப்பித்தூள், ஏலக்காய், கொட்டை பாக்கு ,மிளகு எல்லாம் குறைந்த விலையில் கிடைக்குமே! வாங்கவில்லையா?' என்று.
மலை அமைப்பு -வெண் மணலால் மூடப் பட்டது போல் இருக்கிறது,(விபூதி மலை போல்) வெண்மேகம் மூடி இருப்பதால் அப்படிக் காட்சி அளிக்கிறது என்று நினைக்கிறேன்.
பாக்கு மரங்களும், தென்னை மரங்களும் சூழ்ந்து மிக அழகாய்க் காட்சி அளிக்கிறது. கோவிலைச் சுற்றித் தங்கும் விடுதிகள் இருக்கிறது, குறைந்த கட்டணம் என்றார்கள். இலவச தங்கும் விடுதிகளும் இருக்கிறதாம்.
"இயற்கையை விரும்பு- அது உன்னை எப்போதும் விரும்பும்" என்ற அருமையான வாசகம் கோவில் சுவரில் இருக்கிறது. கோவில் தூய்மையாக இருக்கிறது.
இயற்கையை நேசிப்பதும் இறைவனை நேசிப்பது போல்தான்.
அன்னையின் புதுப் பெயர் ஸ்ரீ ஆதிஷக்தியாத்மக அன்னபூர்ணேஸ்வரி.
ஹொரநாடு அன்னபூரணி எல்லோருக்கும் பசித்துன்பத்தைப் போக்க வேண்டும். எல்லோருக்கும் எல்லாம் கிடைக்க அன்னபூரணி வரம் அருள வேண்டும்.
இப்போது உடல் நலமும் கிடைக்க அன்னையை வேண்டிக் கொள்வோம்.
வாழ்க வையகம்! வாழ்க வளமுடன்!
-----------------------------------------------------------------------------------------------------
நீங்கள் சொல்லி இருப்பது போல இயற்கையின் அணைப்பில் அந்த இடமே அழகாக இருக்கிறது. ரசனையான இடம், கோவில். படங்கள் எல்லாமே அழகு.
பதிலளிநீக்குவணக்கம் ஸ்ரீராம், வாழ்க வளமுடன்
நீக்குஆமாம் ஸ்ரீராம், இயற்கையின் அணைப்பில் அந்த இடமே அழகுதான். கோவில் உட்புறமும் மிக அழகு. ஆனால் படம் எடுக்க அனுமதி இல்லை.
முதலில் ரசம், பின்னர்தான் சாம்பாரா? அந்த ஊர் வழக்கம் போல... மருந்தை ப்ரசாதமாகக் கொடுக்கும் வழக்கம் எவ்வளவு கோவில்களில் இருக்கிறது? இப்போது கூட நான் இருமலுக்கு சித்தரத்தை வாயில் அடக்கிக் கொண்டிருக்கிறேன்!
பதிலளிநீக்குஆமாம் ஸ்ரீராம், முதலில் ரசம் தான். நிறைய கோவில்களில் மருந்து ப்ரசாதமாக கொடுக்கும் வழக்கம் இருக்கிறது. இங்கு அரிசிதான் பிரசாதம்.
நீக்குஇது நம் உடலில் மேல் அன்னைக்கு இருக்கும் அக்கறை. மலைபிரதேசம் மழை எப்போதும் பெய்து கொண்டு இருக்கும் நமக்கு உடல் நிலை பாதிக்க கூடாது என்று கொடுக்கபடுகிறது முதலில் . அப்புறம்தான் அம்மன் தரிசனம் .
இருமலுக்கு சித்தரத்தை நல்லதுதான். உடல்நலத்தை கவனித்துக் கொள்ளுங்கள்.
சிட்டுக்குருவிகள் ஏராளமாக இருபிப்பது பார்க்கவே அழகாய் இருந்திருக்கும். அவ்வப்போது அதன் கீச்சுக்குரல்களும் கேட்டவண்ணமே இருந்திருக்கும். ஒருமுறை செல்ல ஆசை. இந்த அடைபட்ட காலத்தில் பழைய நினைவுகளுடன் படங்களிப் பார்ப்பது சுகம் + ஏக்கம்!
பதிலளிநீக்குஆமாம், சிட்டுக்குருவிகள் ஒலி எழுப்பிக் கொண்டு கோவில் முழுவது பறந்து திரிந்தது மனதுக்கு மகிழ்ச்சி தந்தது உண்மை.
நீக்குநிலைமை சீராகும் , விரைவில் அன்னபூரணியை தரிசிக்கும் காலம் வரட்டும்.
பழைய நினைவுகளை மீட்டு மகிழ்ச்சியாக இருக்க படங்கள் உதவுகிறது என்பது உண்மை உண்மை. இறை அருளால் முடிந்த வரை பகிர எண்ணம்.
உங்கள் கருத்துக்களுக்கு நன்றி.
இதுவரை நாங்கள் பார்த்திராத கோயிலுக்கு அழைத்துச்சென்றமைக்கு நன்றி.
பதிலளிநீக்குவணக்கம் முனைவர் ஐயா, வாழ்க வளமுடன்
பதிலளிநீக்குஉங்கள் கருத்துக்கு நன்றி.
அன்னபூரணியின் தரிசனம் கிடைத்தது நன்றி. அழகான புகைப்படங்கள்.
பதிலளிநீக்கு//இயற்கையை விரும்பு- அது உன்னை எப்போதும் விரும்பும்//
அற்புதமான உண்மை வாசகம்.
வணக்கம் தேவகோட்டை ஜி, வாழ்க வளமுடன்
நீக்குஅற்புதமான உனமையான வாசகம்தான் ஜி.
இயற்கையை பாதுகாக்க இயற்கையை விரும்புவது இப்போது மிக மிக அவசியம்.
உங்கள் கருத்துக்கு நன்றி.
இயற்கை எழில் கொஞ்சும் சூழலில் அழகான கோவில். படங்கள் கண்டு ரசித்தேன்.
பதிலளிநீக்குவணக்கம் வெங்கட் நாகராஜ், வாழ்க வளமுடன்
நீக்குஉங்கள் கருத்துக்கு நன்றி வெங்கட்.
வணக்கம் சகோதரி
பதிலளிநீக்குநல்ல பதிவு. ஹொரநாடு அன்னபூரணேஷ்வரி கோவிலின் படங்கள் அனைத்தும் நன்றாக வந்துள்ளது. எவ்வளவு ரம்மியமான இடங்கள்.அங்கிருக்கும் இயற்கை காட்சிகளை பார்த்துக் கொண்டேயிருந்தால், அங்கிருந்து கிளம்பி வரவே மனம் வராது. அவ்வளவு அழகான இடங்கள். அன்னையை மனதாற தரிசித்துக் கொண்டேன். சிட்டுக் குருவிகளுடன் கோவிலின் படங்கள் அத்தனையும் அழகாக எடுத்துள்ளீர்கள். விபரமாக சென்று வந்த பயணத்தைப் பற்றி கூறியுள்ளீர்கள். அனைத்திற்கும் பாராட்டுக்கள்.
நாங்கள் செல்லும் போது பனிக்காலம், காலையில் காரிலிருந்து இறங்கியவுடன், அருகிலிருப்பவரை கூட மறைக்கும் பனியில் அவதி பட்டோம். ஆனால் அதுவும் நல்லதொரு நினைவாக மனதுக்குள் இருக்கிறது. அந்தப்பனியில் எனக்கு அன்று முழுவதும் கடுமையான தலை நோவே வந்து விட்டது.
அன்னையை தரிசித்துக் கொண்டேயிருக்கலாம். அந்த அழகான, கனிவான முகம் அன்னையின் கோவிலை விட்டு வர மனதே வராது. இன்னுமொரு முறை தரிசிக்கும் ஆவலை தங்கள் பதிவு உண்டாக்கித் தருகிறது. பார்க்கலாம்..! அன்னை அழைத்தால் கண்டிப்பாக செல்ல முடியும். பகிர்வுக்கு மிக்க நன்றி சகோதரி.
நன்றியுடன்
கமலா ஹரிஹரன்.
வணக்கம் கமலா ஹரிஹரன், வாழ்க வளமுடன்
நீக்குநீங்கள் சொன்னது போல் மிக அருமையான இடம் தான் . கோவில் அமைந்து இருக்கும் இடம் மிக அருமையான இடம் தான்.
நாங்கள் ஜனவரி மாதம் போனோம். குளிர் கொஞ்சம் இருந்தது, மழை இல்லை.
பனி தலைபாரத்தை கொண்டு வரும் தான்.
அன்னை அழைப்பாள் மீண்டும் சென்று வாருங்கள்.
உங்கள் பாராட்டுக்கும், கருத்துக்கும் நன்றி கமலா.
//பனி தலைபாரத்தை கொண்டு வரும் தான்.// - எனக்கு இது தெரியாமல் இரு வாரங்கள் பால்கனியில் இருந்து, தலை மிகவும் பாரமாகிவிட்டது. இப்போ உள்ள நிலைமையில் எந்த மருத்துவரிடமும் போக முடியாது. போனால், முதல்ல கோவிட் டெஸ்ட் எடுத்துவிட்டு வாங்க என்று சொல்லிடறாங்க. ரொம்பவே கஷ்டப்பட்டுவிட்டேன்.
நீக்குநெல்லை, எனக்கு குளிரில் , பனியில் போய் வந்தால் தலைபாரம் வந்து விடும்.
நீக்குநெற்றி பொட்டில், காதுக்கு பின்னாடி எல்லாம் குளித்து வந்ததும் விக்ஸ் அல்லது அமிர்தாஞ்சன் தடவிக் கொள்வேன்.
உடல்நிலையை கவனித்துக் கொள்ளுங்கள்.
//ரொம்பவே கஷ்டப்பட்டுவிட்டேன்.//
கேட்கவே வருத்தமாய் இருக்கிறது.
இறைவன் அருளால் எதும் இல்லாமல் இருப்பது மகிழ்ச்சி.
சுக்கு, மல்லி காப்பி குடிங்க சரியாகி விடும் தலை பாரம்.
இயற்கை இடத்தில் கோவில்... அருமையான படங்கள்...
பதிலளிநீக்குசிட்டுக்குருவி படங்கள் மிகவும் கவர்ந்தன...
வணக்கம் திண்டுக்கல் தனபாலன், வாழ்க வளமுடன்
நீக்குசிட்டுக்குருவிகளை பார்த்தால் மனதில் ஆனந்தம்தான் இல்லையா!
உங்கள் கருத்துக்கு நன்றி தனபாலன்.
படங்களும் பகிர்வும் அருமை
பதிலளிநீக்குநன்றி சகோதரி
வணக்கம் சகோ கரந்தை ஜெயக்குமார் , வாழ்க வளமுடன்
நீக்குஉங்கள் கருத்துக்கு நன்றி.
படங்கள் மிகத் தெளிவு.
பதிலளிநீக்குவீபூதி மலை அழகிய கற்பனை.
கேரள கோயில் போல என்பது மிகச் சரியே.
காற்றுக்கென்ன வேலியா என்று தான் கேள்விப்பட்டிருக்கிறோம்.
கோயில் என்பதினால் துளசியையும் கிள்ளி எடுத்துக் கொண்டு போவார்கள் என்பதினால் வேலி போலும்.
முழுமையான கட்டுரை. வாசிக்க திருப்தியாக இருந்தது. நன்றி, கோமதிம்மா.
வணக்கம் ஜீவி சார், வாழ்க வளமுடன்
நீக்குசேலம் பக்கம் ஒரு கோவில் போனோம், அங்கு விபூதி மலை இருக்கிறது.
அங்கு இருந்து கொண்டு வந்து வைத்துக் கொள்ளும் விபூதியால் வீட்டில் எல்லா நலங்களும் கிடைக்கும் என்று சொல்வார்கள். பேர் நினைவு வந்ததும் சொல்கிறேன்.
கோவில் என்று இல்லை துளசியை எங்குப் பார்த்தாலும் மக்கள் ஒரு இலையை கிள்ளாமல் இருக்கமாட்டார்கள். வடநாட்டு கோவில், ஆந்திரா, கர்நாடகா எல்லாம் துளசி மாடத்திற்கு வேலி போட்டு வைத்து இருந்தார்கள்.
எங்கள் வீட்டுக்கு அருகில் உள்ள ஐயனார் கோவிலில் அனுமனுக்கு பக்கத்தில் துளசி மாடம் இருக்கிறது அதற்கும் வேலி அமைத்து இருக்கிறார்கள்.
உங்கள் பாராட்டுக்கும், கருத்துக்கும் நன்றி சார்.
வாழப்பாடி பக்கம் இருக்கு வேளூர் என்ற கோவிலின் பின் புறம் இந்த விபூதி மலை இருக்கிறது.கோவிலுக்கு தேவையான விபூதியை எடுத்து வருவார்கள் நாள் தோறும்.
நீக்குஹொரநாடு அன்னபூரணி பற்றிய இடுகை, நானே கோவிலுக்குச் சென்றுவந்துவிட்டதைப்போல விளக்கமாம அமைந்திருக்கிறது.
பதிலளிநீக்குஅங்கு உணவுக்கும் பஞ்சமில்லை என்றுவேறு சொல்லிவிட்டீர்கள். சாராவது முழு உணவும் சாப்பிட்டார்களா?
வணக்கம் நெல்லைத் தமிழன், வாழ்க வளமுடன்
நீக்கு//நானே கோவிலுக்குச் சென்றுவந்துவிட்டதைப்போல விளக்கமாம அமைந்திருக்கிறது.//
நன்றி.
தங்கும் இடமும் வசதியாக இருக்கிறதாம். கோவிலில் மூன்று வேளையும் வயிற்றை கெடுக்காத உணவு கிடைக்கிறது அப்புறம் வேறு என்ன வேண்டும்.
சார் நன்றாக சாப்பிட்டார்கள் அதிகம் காரம் இல்லாமல், வயிற்றை கெடுக்கவில்லை என்றார்கள்.
அன்னபூரணியின் உணவு இல்லையா !
எனக்கு பயணம் ஆரம்பிக்கும் முன்னாலேயே உடல் நிலை சரியில்லை இறைவன் மேல் பாரத்தைப் போட்டு தான் கிளம்பினேன். பயணம் முடியும் வரை எந்த தொந்திரவும் இல்லாமல் நல்லபடியாக காப்பாற்றி இல்லம் சேர்த்தார்கள்.
வயிற்று தொந்திரவு பக்கத்து வீட்டு டீச்சர் எனக்கு மாத்திரை கொடுத்து "இதை சாப்பிட்டு விட்டு கிளம்புங்கள் சரியாகி விடும் தொந்திரவு இருக்காது" என்று தைரியம் கொடுத்து அனுப்பினார்கள்.
பயணம் முழுவதும் அவர்களை வாழ்த்திக் கொண்டு இருந்தேன்.
அவர்களும், இறைவனும் நல்லபடியாக போய்வர காரணம்.
நம்ம ஊர் சாப்பாடு சாப்பிட எப்போ வாய்ப்பு வரும்னு இருக்கு. (இங்கயும் வெளியில் எங்கும் சாப்பிடமுடியாது இந்தச் சமயத்தில் என்றபோதும்).
பதிலளிநீக்குஉங்களுக்கு கர்னாடகா உணவு பிடித்திருந்ததா? இல்லை டூர் ஆப்பரேடர்கள் உணவு ஏற்பாடு செய்தார்களா?
நம்ம ஊர் சாப்பாடு சாப்பிட ஆசையா? உங்களுக்கு நெல்லை என்பதால் கார சாரமாய் உணவு தேவை படுகிறதா? என் கணவருக்கு காரம் பிடிக்கும் எனக்கு உணவு காரமில்லாமல் இருக்க வேண்டும். அதனால் அந்த ஊர் உணவு கவலை அளிக்கவில்லை.
நீக்கு//டூர் ஆப்பரேடர்கள் உணவு ஏற்பாடு செய்தார்களா?//
இல்லை நல்ல சுத்தமான சைவ ஓட்டலில் கொண்டு போய் வண்டியை நிறுத்துவார் .
அவ்வளவுதான்.
உங்கள் கருத்துக்களுக்கு நன்றி.
அழகான சூழலைக்கொண்டிருக்கு கோவில் கடைசிபடம் அத்தனை அழகு. நீங்களும் சாரும் எடுத்துக்கொண்டபடமும் அழகா இருக்கு. படங்கள் எல்லாமே சூப்பரா இர்க்கு.
பதிலளிநீக்குவிளக்கு வைத்து அழகாக மேலே கட்டியிருக்கிறாங்க.
ஆஹா நீங்கள் எங்கு சென்றாலும் பறவை நண்பர்கள் வந்துவிடுவார்கள் உங்கள் கண்ணில்.
மலை அமைப்பு படத்தில் உண்மையில் விபூதி கொட்டியதை போலவே இருக்கு. நீங்கள் தரிசித்த அன்னபூர்ணேஸ்வரியை பதிவின் மூலம் நாங்களும் தரிசித்தோம். விரிவாக எழுதியிருக்கிறீங்க. மகிழ்ச்சி. மிகவும் அருமையான பதிவு அக்கா.
வணக்கம் பிரியசகி, வாழ்க வளமுடன்
நீக்குபடங்களை ரசித்தமைக்கு நன்றி அம்மு.
பறவைகளில் சிட்டுக்குருவி மிகவும் பிடிக்கும், இன்று எங்கள் எதிர்வீட்டில் எப்போதும் கூடு கட்டி குஞ்சு பொரிக்க வரும் இரண்டு குருவிகள் வந்து விட்டது .எங்கள் வீட்டில் இனி அதன் கீறீச் கீறீச் சத்தம் கேட்டுக் கொண்டே இருக்கும் .இன்று பாலகனி கம்பியில் வந்து உட்கார்ந்தது . உணவு வைத்து இருக்கும் ஜாடியில் வைத்து இருக்கும் கம்பு தானியத்தை சுவைத்து போனது.
விபூதி மலையை ரசித்தமைக்கு நன்றி.
பதிவை ரசித்து படித்து உற்சாகமான பின்னூட்டம் அளித்தமைக்கு நன்றி பிரியசகி அம்மு.
வழக்கம் போல அழகான படங்கள்..
பதிலளிநீக்குஇதுவரைக்கும் இக்கோயிலைப் பற்றி கேள்விப் பட்டதில்லை..
அன்னபூர்ணேஸ்வரி அனைவரையும்
அன்புடன் காத்தருள் புரிவாளாக!...
வணக்கம் சகோ துரை செல்வராஜூ, வாழ்க வளமுடன்
நீக்குசங்கரா தொலைக்காட்சியில் மாலை சந்தியா ஆரத்தி என்பதில் இந்த அம்மனை காட்டுவார்கள்.
லலிதா சகஸ்ரநாமம் பாடலில் இந்த அம்மனை காட்டுவார்கள்.
//அன்னபூர்ணேஸ்வரி அனைவரையும்
அன்புடன் காத்தருள் புரிவாளாக!...//
அன்னை காத்தருள்வாள் !
உங்கள் கருத்துக்கு நன்றி.
ஹொரநாடு அன்ன பூர்ணேசுவரி கோவிலுக்குச் சென்றிருக்கிறோம்கோவிலில் உணவும் உண்டிருக்கிறோம்
பதிலளிநீக்குவணக்கம் பாலசுப்பிரமணியம் சார், வாழ்க வளமுடன்
நீக்குநீங்கள் அன்ன பூர்ணேஸ்வரி பதிவு போட்டு இருக்கிறீர்கள் என்று நினைக்கிறேன்.
உங்கள் நினைவுகளை பகிர்ந்து கொண்டதற்கு நன்றி.
வயிறு நிறைய நல் உணவு உண்டது போல இந்தப் பதிவு.
பதிலளிநீக்குமாதா அன்னபூர்ணேஸ்வரி ,இத்தனை அன்பாக எல்லோரையும்
கவனித்துக் கொண்டிருக்கிறார்.
கோவில் நிர்வாகமும், கருணையும் மந்த்தில் கொள்ள வேண்டியது.
வரம் இருந்தால் இந்தக் கோவிலுக்கும் செல்ல வேண்டும்.
குருவிகள் சுதந்திரமாக இருக்கும் இடம் எத்தனை அழகாய் இருக்கும்.!அவற்றின் குரல்களே சங்கீதம்.
அன்பு கோமதி நீங்கள் எழுதிய கட்டுரையாலும்,
படங்களாலாலும்
அகம் நிறைந்தது.
உணவும் கிடைக்கிறது. தங்கும் இடம் ,மழை எல்லாமே அமைதி
தாயை அருகில் சென்று தரிசிக்க முடிந்தது என்றால்
அதுவே பெரிய பாக்கியம். நீங்களும் சாரும் இருக்கும் படம்
மிக அருமை. என் அன்புத் தங்கச்சியின் எழுத்தில் அன்னை தரிசனம் நடக்கிறது.
நன்றி மா
வணக்கம் வல்லி அக்கா, வாழ்க வளமுடன்
நீக்குஅன்னையை பற்றி படித்தவுடன் அம்மா பரிந்து தரும் உணவால் வயிறும் மனதும் நிறைந்து விட்டதோ! அக்காவிற்கு.
கோவில் நிர்வாகம் நிறைய சமூகசேவைகள் செய்கிறது.
வரம் அருள்வாள் போகலாம் கோவிலுக்கு.
குருவிகளின் குரலே சங்கீதம்தான்.
முன்பு காடு மாதிரி இருந்ததால் மக்கள் வர முடியாதாம், இப்போது 1973 க்கு பிறகு கோவில் மிக பிரசித்து பெற்று மக்கள் கூட்டம் வருகிறதாம்.
படங்களையும், பதிவையும் ரசித்து படித்து, பார்த்து அன்பான கருத்து சொன்னதற்கு நன்றி அக்கா.
அனுபவப்பகிர்வு அருமையாக இருக்கிறது! படங்கள் எல்லாம் அழகு. அதுவும் சிட்டுக்குருவிகளுடன் படங்கள் யாவும் மிக அழகு! மூன்று வேளையும் கோவிலில் உணவளிப்பது ஆச்சரியமாக உள்ளது. நம் தமிழ்நாட்டில் இந்த வழக்கம் எங்கேனும் உள்ளதா?
பதிலளிநீக்குவணக்கம் மனோ சாமிநாதன் ,வாழ்க வளமுடன்
நீக்குநம் தமிழ்நாட்டில் இந்த வழக்கம் இருக்கா என்று தெரியவில்லை. இருக்காது என்று நினைக்கிறேன், அன்னதான திட்டத்தினால் மதியம் 100 பேருக்கு கோவில்களில் உணவு வழங்கப்படுகிறது.
படங்களை, பதிவை ரசித்து கருத்து சொன்னதற்கு நன்றி மனோ.
அருமையான படங்களுடன் கூடிய பதிவுக்கு நன்றி, பொதுவாகக் கர்நாடகக் கோயில்களில் பெரும்பாலானவை கேரளப் பாணியிலேயே இருக்கின்றன. நாங்களும் ஹொரநாடு போனோம். ஆனால் அப்போதெல்லாம் காமிரா இல்லை என்பதால் படங்கள் இல்லை. அங்கே காலைக் காஃபி முதல் கொடுப்பார்கள் எனவும் சொன்னார்கள். நாங்கள் காலை ஆகாரத்தை சிருங்கேரியிலேயே முடித்துக்கொண்டு கிளம்பியதால் அங்கே மத்தியானச் சாப்பாடு தான் சாப்பிட்டோம். கஷாயம் கொடுக்கும் வேளை முடிந்துவிட்டதோ என்னமோ! எங்களுக்குக் கொடுக்கவில்லை. கர்நாடகாவில் பெரும்பாலும் விருந்தினருக்குச் சாப்பாடு என்றாலே முதலில் ரசம், அதன் பின்னரே சாம்பார் வரும். நாங்கள் ஒரு சில கல்யாணங்களிலும் பார்த்திருக்கோம். மேல்கோட்டையிலும் அப்படித் தான் கொடுத்தார்கள்.
பதிலளிநீக்குவணக்கம் கீதா சாம்பசிவம், வாழ்க வளமுடன்
நீக்குகர்நாடகவில் காலநிலை கேரளா போலவே இருப்பதால் பசுமையும், நீர்நிலைகளும் கட்டிட அமைப்புகளும் ஒத்து இருக்கிறது.
//அங்கே காலைக் காஃபி முதல் கொடுப்பார்கள் எனவும் சொன்னார்கள். //
அதுவும் பில்டர் காப்பியாம்.
//கஷாயம் கொடுக்கும் வேளை முடிந்துவிட்டதோ என்னமோ! எங்களுக்குக் கொடுக்கவில்லை.//
நாங்கள் காலை நேரம் போனோம் கொடுத்தார்கள்.
கர்நாடகாவில் பெரும்பாலும் ரசம்தான் முதலில். இப்போது முதலில் சூப் சாப்பிட்டு விட்டு அப்புறம் உணவை உண்ண ஆரம்பிப்பது போல் முதலில் ரசம்.
சிட்டுக்குருவிகள் அனைத்தும் சுதந்திரமாக நடமாடுகின்றன. எங்க குலதெய்வம் கோயிலிலும் நிறையக் காணலாம். அதுவும் அறுவடைக்கு முன்னர் அறுக்கும் முதல் கதிரைக் கோயிலில் கொண்டு வந்து கட்டி இருப்பார்கள். பலரும் வந்து கட்டிச் செல்வதால் அதைச் சுற்றிலும் குருவிக்கூட்டங்களைப் பார்க்க முடியும். தை மாதம் கோயிலுக்குப் போகும்போது இந்தக் காட்சியைக் காண முடியும்.
பதிலளிநீக்குசிட்டுக்குருவிகளுக்கு என்ன கட்டுப்பாடு சுதந்திரமாக திரிரியட்டும்.
நீக்குஉங்கள் குலதெய்வம் கோவிலில் குருவிகளை கண்டது மகிழ்ச்சி.
அன்னபூர்ணேஸ்வரி கோவிலும் அறுவடை நேரத்தில் கதிரை அன்னையின் கையில் கொடுக்கிறார்கள்.எங்கள் வீடுகளில் அறுவடை சமயம் கதிரை கும்பிட்டு வீடுகளில் கட்டி வைப்பார்கள். குருவிகள் வந்து கொத்தி போகும்.
நீங்களும், சாரும் இருக்கும் படங்கள் நன்றாக வந்திருக்கின்றன. நாங்கள் அங்கே காஃபிப் பொடி, தேயிலைத்தூள், ஏலக்காய், கிராம்பு, மிளகு போன்றவை வாங்கினோம். நாங்கள் பெரும்பாலும் தனியாகவே செல்வதால் நேரம் ஆகிவிட்டதுனு கூப்பிடுபவர் யாரும் இல்லை. அதோடு எல்லோரும் அங்கே வாங்கச் சொல்லியும் சொல்லி அனுப்பி இருந்தனர். நாங்கள் போனது குளிர்காலம் இல்லை என்றாலும் பருவ மழை பெய்யும் பருவம் என்பதால் தூற்றலும், மழையுமாக வருவதும் போவதுமாக இருந்தது.
பதிலளிநீக்குநீங்கள் காஃபிப் பொடி, தேயிலைத்தூள், ஏலக்காய், கிராம்பு, மிளகு போன்றவை வாங்கினது மகிழ்ச்சி.
நீக்குநாங்கள் சில கோவில்கள் தனியாகவும் , இப்படி மனோகர் டிராவல்ஸ் மூலமும் போனோம்.
மலை பிரதேஷம் என்பதால் அடிக்கடி நினைத்தால் மழை பொழியும்.
we went there in 2006 April or March.
பதிலளிநீக்குஓ ! சரி நல்லது.
நீக்குஉங்கள் கருத்துக்களுக்கு நன்றி.
சிருங்கேரி நிறைவு பகுதிக்கு வரவில்லையே!
அப்படியா? கவனிக்கலைனு நினைக்கிறேன். சிருங்கேரி பெயரைப் பார்த்துட்டுப் படிச்ச பதிவுனு நினைச்சிருப்பேன். வரேன், அப்புறமா!
நீக்கு2006 ஆகஸ்டில் தான் திருக்கயிலைப் பயணம். அதுக்கு முன்னர் ஆசாரியரின் அனுமதி வேண்டி சிருங்கேரி சென்று அவரை நமஸ்கரித்து அனுமதி பெற்றுக்கொண்டோம். ஆகவே ஏப்ரலில் போயிருக்கோம்னு நினைக்கிறேன். பதிவுகள் ஏப்ரல் மேயில் வந்திருக்கின்றன.
நீக்குவாங்க மெதுவா நேரம் கிடைக்கும் போது. நீங்கள் பார்த்த இடங்கள் தானே!
நீக்குமுன்பு போட்ட பதிவில் சொன்னீர்கள், சிருங்கேரி குருவை சந்தித்து திருக்கயிலைப் பயணம் சொல்லி ஆசி வாங்கி கொண்டதை.
அழகான, தெளிவான படங்கள், சுருக்கமான, ஸ்வாரஸ்யமான விளக்கங்கள். ஹொரனாடு அன்னபூர்னேஸ்வரி கோவில் தரிசிக்க விரும்பும் தலங்களுள் ஒன்று. நீங்கள் புகைப்பட உலாவாக அழைத்துச் சென்றிருக்கிறீர்கள், விரைவில் நேரில் தரிசிப்பேன் என்று நம்புகிறேன்.
பதிலளிநீக்குவணக்கம் பானுமதி வெங்கடேஷ்வரன், வாழ்க வளமுடன்
நீக்கு//ஹொரனாடு அன்னபூர்னேஸ்வரி கோவில் தரிசிக்க விரும்பும் தலங்களுள் ஒன்று.//
பார்க்க வேண்டிய இடம் தான், தரிசிக்க வேண்டிய அன்னை .
உங்கள் நம்பிக்கை உங்களை அழைத்து செல்லும்.
உங்கள் கருத்துக்கு நன்றி.
படங்களுக்கும் விரிவான தகவல்களுக்கும் நன்றி. கர்நாடகாவில் பல கோயில்களில் இதுபோல 3 வேளை சாப்பாடு இருக்கும். இதுவோ அன்னப்பூரணி கோயில் அல்லவா? ‘விபூதி மலை’ அருமையான சொல்லாடல்.
பதிலளிநீக்குவணக்கம் ராமலக்ஷ்மி, வாழ்க வளமுடன்
நீக்கு//கர்நாடகாவில் பல கோயில்களில் இதுபோல 3 வேளை சாப்பாடு இருக்கும். இதுவோ அன்னப்பூரணி கோயில் அல்லவா?//.
ஆமாம், ராமலக்ஷ்மி அங்கு எல்லா கோவில்களிலும் சாப்பாடு உண்டு. நாங்கள் உடுப்பி கோவில் போன போது அங்கும் சாப்பிட்டோம். மற்ற இடங்களில் நேரம், காத்து இருக்க வேண்டி வந்ததால் ஓட்டலில் சாப்பிட்டு விட்டோம்.
அன்னபூரணி என்றால் நம் வயிரை வடவிடுவாளா? எல்லா உயிர்களின் பசி துன்பத்தை போக்க வேண்டும் அன்னை.
உங்கள் கருத்துக்கு நன்றி ராமலக்ஷ்மி.
அழகிய மலை பிரதேசத்தில் அமர்ந்திருக்கும் அன்னபூர்னேஸ்வரி கண்டு தரிசித்தோம்.. அவளருளை வேண்டுகிறோம்.
பதிலளிநீக்குவணக்கம் மாதேவி, வாழ்க வளமுடன்
நீக்குஅன்னபூர்ணி எல்லோருக்கும் வரம் அருள்வாள்.
உங்கள் கருத்துக்கு நன்றி.
அருமையான கோவில் தரிசனம். நன்றி :)
பதிலளிநீக்குவணக்கம் தேனம்மை , வாழ்க வளமுடன்
நீக்குஉங்கள் கருத்துக்கு நன்றி.
கோயிலும் விவரணங்களும் அருமை. கோயில் சென்றதில்லை. இயற்கை சூழ உலகைக் காக்கும் அம்மா!
பதிலளிநீக்குவறுமை நீங்கிட எல்லோரும் பசியின்றி இருந்திட அன்னை அருள் புரிய வேண்டும். இப்போதைய சூழலுக்கும் சேர்த்து வேண்டுவோம்.
துளசிதரன்
வணக்கம் துளசிதரன், வாழ்க வளமுடன்
நீக்குஆமாம் சகோ, இப்போதைய சூழலுக்கு சேர்த்து வேண்டுவோம்.
உங்கள் கருத்துக்கு நன்றி.
படிகளின் ஏறியவுடன் வரும் முன்பகுதி, கோவில் கேரள பாணியில் இருக்கிறது//
பதிலளிநீக்குஅக்கா நானே கேட்க வேண்டும் என்று நினைத்தேன் நீங்களே சொல்லியிருக்கீங்க. கேரளத்துக் கோயில் போலவே இருக்கு முன்பகுதி..டக்கென்று பார்த்தால் கேரளம் போல இருக்கு.
//சுக்கு கஷாயம்// ஆஹா…இதே கஷாயம் இப்ப நாம குடிக்கறதும் அதுதான்…அம்மனை நினைத்துக் கொண்டே குடிப்பதுண்டு இந்த த் தகவலை அறியாமலேயே..!!!! இனி அன்னபூரணியை நினைத்துக் கொண்டுவிடலாம்...
மதியம் சாப்பாடு கோயில் சாப்பாடு என்றாலே அலாதிதான்..இல்லையாக்கா...ச்சே ஃபுல் சாப்பாடு மிஸ் பண்ணிட்டீங்களே. ஹா ஹா ஹா ஹா
கீதா
வணக்கம் கீதா ரெங்கன், வாழ்க வளமுடன்
நீக்குஇயற்கை, கால நிலை, மலை, மரம் எல்லாம் கேரளா போல் தான்.
கோவிலும் கேரளா போல்தான்.
சுக்கு காப்பி என்று க்ய்டிப்போம், காய்ச்சல் சமயம் மட்டும் அது சுக்கு கஷாயம் ஆகிவிடும்.
அனனையை நினைத்து குடித்தால் நல்லதுதான்.
கோவில் சாப்பாடு தயிர் சாதம் மட்டும் சாப்பிட கிடைத்ததை நினைத்து மகிழ்ந்து கொள்ள வேண்டும் கீதா.
'அங்கு காப்பித்தூள், ஏலக்காய், கொட்டை பாக்கு ,மிளகு எல்லாம் குறைந்த விலையில் கிடைக்குமே! வாங்கவில்லையா?' என்று.//
பதிலளிநீக்குஅதானே ஏன் அக்கா வாங்க நேரம் இல்லையோ? பயண ஏற்பாட்டாளர்கள் மூலமா போனதால்/
இப்போது உடல் நலமும் கிடைக்க அன்னையை வேண்டிக் கொள்வோம்.//
ஆமாம் உலகம் இயல்பு நிலைக்குத் திரும்ப வேண்டும். பிரார்த்திப்போம்
கோயில் படங்கள் எல்லாம் ரொம்பவே ஈர்க்குது. அதுவும் இயற்கை!!!
சிட்டுக் குருவி கீச் கீச் அந்த ஒலியே காதிற்கு இனிமையா இருந்திருக்குமே. சிட்டுக் குருவி படம் ரொம்ப அழகு. கொஞ்சம் வேண்டும் போல இருக்கு..
விவரம் எல்லாம் அறிந்து கொண்டோம் அக்கா
கீதா
எங்கு போனாலும் கடைத்தெரு செல்வது குறைச்சல்தான். குழுவாக போகும் போது நாம் காலதாமதம் செய்ய கூடாது என்று நினைப்போம்.
பதிலளிநீக்கு//இப்போது உடல் நலமும் கிடைக்க அன்னையை வேண்டிக் கொள்வோம்.//
ஆமாம் கீதா, வேண்டிக் கொண்டு இருக்கிறேன். எனக்கு இப்போது வலது கைவலி அதிகமாய் இருக்கிறது , எனக்காக , எல்லோருக்காவும் வேண்டிக் கொள்கிறேன்.
சிட்டுக்குருவிகள் மகிழ்ச்சி அலையை பரப்பி வருகிறது இங்கு, மீண்டும் குஞ்சு பொரிக்க போகிறது.
உங்கள் கருத்துக்களுக்கு நன்றி.