வியாழன், 25 ஜூன், 2020

பாலமலை அரங்கநாதர் திருக்கோயில்

                                                    பாலமலை அரங்க நாதர் கோவில்
இப்போது பெளர்ணமிக்கு 'சத்ய நாராயணா பூஜை' நடைபெறும் போலும்! படம் இருக்கிறது 

நாங்கள்  கோவைக்குப் போயிருந்தபோது பெரியநாயக்கன் பாளையத்தில் இருந்து 12.கி.மீ  தூரத்தில் உள்ள  பாலமலை ரங்கநாதர் கோவிலுக்கு  
18. 02. 2012ல் போனோம். நாங்கள் போன அன்று வைஷ்ணவ ஏகாதசி. சனிக்கிழமை. என் கணவரின்  தம்பி குடும்பத்தினருடன்  டாக்ஸி வைத்துக் கொண்டு போனோம். டிரைவர் பேர் வாசுதேவன் மிகவும் பொருத்தமாய் அமைந்து விட்டது.

இந்த கோவிலைப் பதிவில் போடலாம் என்று நான் எடுத்த படத்தைத் தேடினால் கிடைக்கவில்லை.  ஒரு படமும் இல்லை. பாலமலை குறிப்பு எழுதி சேமித்து வைத்தது மட்டும் இருந்தது.


போகவர எவ்வளவு  தூரம்  கோவில் வரலாறு பற்றிச் சிறுகுறிப்பு எழுதி வைத்தது எல்லாம் இருக்கிறது, படங்களை மட்டும் காணோம்.

அக்குறிப்பு;-
 

//பாலமலை ரங்கநாதர் திருக்கோயில்

18.02.2012

வைஷ்ணவ ஏகாதசி, சனிக்கிழமை
காலை 9 மணிக்கு வீட்டைவிட்டுப் புறப்பாடு- போகவர 55கி.மீ 
'திருமால் ட்ராவல்ஸ்' டாக்சியில் போய்வர கி.மீக்கு 15 ரூ
வாசுதேவன் டிரைவர்.

வழி--: பெரியநாயக்கன் பாளையம்--->நாயக்கன்பாளையம்--->
கூ.கவுண்டம்பாளையம்-->கோவனூர்.
போக்குவரத்து அபூர்வமான பாதை-

வெளிச்சம் அதிகமான நேரங்களில் வழியில் யானைகள் வராதாம்.
எச்சரிக்கையாகச் செல்ல வேண்டும்.
கோவில் சார்பில் ஜீப் வசதி அடிவாரத்திலிருந்து உண்டு
பெரியநாயக்கன்பாளையத்தில் இருந்து காலை 6.45,8.45,மாலை5.30 ஆகிய
நேரங்களில் அடிவாரத்திற்குப் பேருந்து வசதி இருப்பதாகச் சொன்னார்கள்
பயணிகள் போதுமான அளவில் வந்தால்தான் கிளம்பும். அதுவரை
காத்திருக்க வேண்டும்
ஊட்டியில் இருந்து ஒரு பேருந்து வருவதைப் பார்த்தோம்.
ஒடுக்கமான பாதை-தார்ச்சாலை- தற்போது நன்றாக உள்ளது
ஒருகாலத்தில் மிக மோசமான சாலையாக இருந்ததாம்
அதற்குமுன்பு நடந்து செல்லும் பாதைதானாம்-
படிகள் கட்டப்படாத ஒருவகை வழி-
சித்திராபவுர்ணமியின்போது நிறைய பேர் வருவார்களாம்
அப்போது தேர் சுற்றி வருமாம்
எங்கள் டிரைவர் ரொம்ப வருஷத்திற்கு முன்பு -சிறுவனாயிருந்தபோது
தன் தாத்தாவுடன் நடந்தே கோவிலுக்கு வந்ததை நினைவு கூர்ந்தார்.
அதற்குப்பின்னர் இப்போதுதான் அங்கு வருகிறாராம்.

மலைப்பாதை 5.கி.மீ தூரம்
ஹேர்ப்பின் பெண்ட்ஸ் உள்ளன.
கோவில் சமதளத்தில்- கிழக்கு நோக்கி-
சுற்றிலும் ரதவீதி-
வீடுகள் கட்டிடங்கள் -ஒன்றிரண்டு(கடை)
தேர்-சிறியது-கிழக்கில்-பக்கத்தில் பெரிய ஆலமரம்
உயரமான மதில் சுவர்-
கிழக்கு மதில் சுவரில் தசாவதாரச் சிற்பங்கள்-சுதை
கோபுரம்-கருட மண்டபம்+விளக்குத்தூண்

உள் பிரகாரம் - கிழக்கே அஸ்பெஸ்டாஸ் கூரை
வலதுபுறம் உள் மதில் சுவரில் குடமுழுக்குக் கல்வெட்டுகள்
இடதுபுறம்-குழாயடி ,பாகசாலை

கொடிமரத்தருகில் பந்தல்- அதன்மேல் காய்ந்த மலைச்செடிகொடிகள்-
கதிர்காமத்தில் உள்ளது போல்

தூண்மண்டபம்.செவ்வக வடிவம். பெரியது_
மஹாமண்டபம்- அதில் நேரே காணக்கூடியது:
ஊஞ்சலில் உற்சவப்பெருமாள்,தாயார்களுடன்-

அதற்குப்பின்னால் சன்னிதி நுழைவாயில்-
கீழ்க்கோடியில் ஆழ்வார்கள் சன்னிதி-
சக்கரத்தாழ்வார்.யோகநரசிம்மர்

பிரகாரம் -கன்னிமூலையில் தும்பிக்கையாழ்வார்;

பெருமாள்,செங்கோதைதாயார், பூங்கோதைதாயார்-தனித்தனிச் சந்நிதிகள்-
அழகிய பெரிய வெள்ளை விமானங்கள்

பெருமாள் சந்நிதிக்கு நேர் பின்னே காளிதாசர் சந்நிதி-
காளிதாசர்: சித்தர்-இக்கோயில் தோன்றக்காரணமானவர்-

சித்தர் என்ன கூறியிருந்தாரோ அவையெல்லாம் நடந்து வருகிறதாம்.
வடமேற்கு பிரகாரமூலையில் ராமானுஜர் சந்நிதி
வடக்கு பிரகாரத்தில் வாகன அறை -சித்தர் படங்கள் -சமாதிநிலையிலுள்ள
சித்தரின் புகைப்படம்
பாரஸ்ட் ஆபீசர் முனியப்பபிள்ளையின் படம்-தேர்த்திருவிழாவைத் தொடங்கி
வைத்தவர்.
திருநெல்வேலியில் இருக்கும் அவரது சந்ததியினர் இப்போதும் 
இங்கு வந்து தேர்த்திருவிழாவில் கலந்து கொள்கின்றனர்.

ஆஞ்சநேயர்,தன்வந்திரி சந்நிதிகள், மண்டபங்கள்

உள்ளே கருவறைமுன்னே அர்த்தமண்டபம்.
கருவறை நுழைவாயில் ஒடுக்கமாக- 2 அடி அகலம்.உயரம் வழக்கம்போல்
உள்ளே கீழே சுயம்புப் பெருமாள்-உயரம் 1 அடிக்கும் குறைவு.
லிங்கம் போல்= மலை போல் கூம்பு வடிவில்-  பெரியநாமம் வரைந்து
இருக்கிறார்கள். அதற்கு வெள்ளி கிரீடம். இருபுறமும் தேவிகளுக்கு
சிறியகிரீடம் -ஆஞ்சநேயருக்கு மிகச்சிறிய சிலை -அவருக்குப் பக்கத்தில்
சஞ்சீவி மலைபோல் காட்சி அளிக்கிறது.

எல்லாவற்றுக்கும் பின்னால் உயரமான பெருமாள் சிலை

பஞ்சலோகச்சிலை-அலங்காரத்துடன்-கிழக்கு நோக்கி-

வலதுபுறம் செங்கோதை நாயகி சந்நிதி
இடது புறம் பூங்கோதைநாயகி சந்நிதி

சேவித்தபின் வெளியே வந்தோம்
.
பரம்பரை தர்மகர்த்தா திரு ஜெகதீசன் அவரது போன் 9443348564
அவர் தலத்தின் புராணங்கள் பற்றிக்கூறினார்.
பசு பால் சொரிந்து வழிபட்ட தலம்.
.
மதிய நேரத்தில் அன்னதானம் நடைபெறுகிறது.

தாயார்களின் விக்கிரகங்கள் ஒருமுறை களவாடப்பட்டு மீண்ட வரலாறு
கூறினார்

கோயிலின் வடபுறத்தில் தெப்பக்குளம் செல்லும் பாதை உள்ளது-
வழியில் சில கிராம தேவதைச் சந்நிதிகள் உள்ளன.
காட்டுப்பசுக்களுக்குத் தண்ணீர்த்தொட்டி

சுக்குக் காபி, ராகி வடை இங்கு கிடைக்கும் என்று ஒரு வலைஅன்பர்
குறிப்பிட்டு இருந்தார்.,கிடைக்குமா என்று பார்த்தோம். இவை கிடைக்கும்
என்று ஒருகடையில் எழுதி இருந்தது..ஆனால் கடை காலியாக இருந்தது.
திருவிழாக்காலங்களில் தான் கிடைக்குமாம்//


மேலே கண்டவை,முன்பு எழுதி வைத்து இருந்த குறிப்புகள்..


படங்கள் மட்டும் இல்லை என்று கவலைப்பட்டு என் கணவரிடம் சொல்லிக் கொண்டு இருந்தேன்.

அன்று மாலை புதுயுகம் தொலைக்காட்சியில் ஆலயதரிசனம்  வைப்பார்கள் தினம் மாலை 6 மணிக்கு. புதன்கிழமை என்றால் பெருமாள்  கோவில்கள் காட்டுவார்கள். அதில் பாலமலை அரங்கநாதர் கோவில் காட்டினார்கள்.

இரண்டு புதன் கிழமை  தொடர்ந்தது  பாலமலை அரங்கநாதர் கோவில் .

அரங்க நாதருக்கு அபிஷேகம் அலங்காரம் பூஜைகள் எல்லாம். காட்டி அவர் தன்னைப் பற்றி எழுதப் படங்கள் கொடுத்தார்.

ஸ்ரீராமானுஜர் மேல்கோட்டைக்குப் போகும்போது  வருகை புரிந்த சிறப்பு மிக்க தலம். புரட்டாசி, மார்கழி , சித்ராபெளர்ணமி , கிருஷ்ணஜெயந்தி, ராமநவமி ஆகிய  விழாக்கள் சிறப்பாகக் கொண்டாடப்படுகிறது இத்தலத்தில்.


                                                          உற்சவர்கள்.
பசு பால் சொரிந்து காட்டிய இடத்தில் கிடைத்த பெருமாள்,  தேவிகள்.
செங்கோதைத் தாயார்

பூங்கோதைத் தாயார் 



பால் அபிஷேகம் ஆகிறது.
அலங்காரம்

இந்த மூலவர்களுக்குப் பின்னால் பஞ்சலோகத்தில் பெருமாள் சிலை வைத்து இருக்கிறார்கள்.  




தும்பிக்கை ஆழ்வார்  சந்நதி

காளிதாசர் சித்தருக்கு உள்ள சந்நதி
சக்கர தீர்த்தம், பத்ம தீர்த்தம் என்று அழைக்கப்படுகிறது.

தீர்த்தம் அமைந்த வனப்பகுதியில்  காலவ மகரிஷி தவம் செய்து வந்தபோது துர்தமன்  என்ற ராட்சசன் துன்பறுத்தி வந்தான், மகரிஷி ஸ்ரீ லட்சுமி நாராயணனை அழைத்தார் தன்னை காப்பாற்றும்படி நாராயணன் தன் திருசக்கரத்தை அனுப்பி  துர்தமனை கொன்றார்.  அதனால் இந்த குளம் பத்ம தீர்த்தம், சக்கரத்தீர்த்தம் என்று அழைக்கப்படுகிறது.

பருவமழைக்காலத்தில் பெய்யும் மழைநீர் தெப்பக்குளத்தில் தேங்குமாம். திருவிழாவின்போது  பக்தர்கள்  தெப்பக்குளத்தைச் சுற்றியுள்ள மண்டபத்தில் இளைப்பாறுவார்களாம்.

தெப்பக்குளம் கோவிலில்  இருந்து ஒரு கி.மீ தூரத்தில் இருக்கிறது.  சித்ரா பெளர்ணமிக்கு தேர்த்திருவிழாவும், தெப்போற்சவமும் நடக்குமாம்.

பாபங்களைத் தீர்க்கும் திருக்குளத்தில் தண்ணீர் இல்லை . அங்கே வாழும் ஆதிவாசிகள் விவசாயம் செய்ய இந்த திருக்குளத்தைச் செபபனிடக் கேட்டுக் கொண்டு இருக்கிறார்கள்.


கெளதன்ய வம்சத்தில் பிறந்த காளிதாஸ்  அவர்கள் சிறிய பர்ண்சாலை அமைத்து பூஜை செய்து வந்தார். அவர் வழி வந்தவர்கள் கோவில் கட்ட அற்புங்கள் நடந்து இருக்கிறது, மலை தானாக வெடித்து கற்களை தந்து இருக்கிறதாம்,  மணல் இருக்கும் இடத்தை கனவில் வந்து காட்டிக் கொடுத்து கோவில் அமைக்கப்பட்டதாம்.


இக் கோவிலை மலை பாதை வழியாக நடந்து வந்து பார்க்கும் காணொளி பாருங்கள் இயற்கை  அழகு அருமையாக இருக்கிறது. ஒற்றையடிப் பாதை போல் வளைந்து நெளிந்து போகிறது போகும் வழி எல்லாம் கீழே கல் பதிக்கப்பட்டு இருக்கிறது . (படி இல்லை- நடந்து போகும் பாதையில் கற்கள் பதிக்கப்பட்டு இருக்கிறது)

 1 மணி  நேரம்  அல்லது ஒன்றரை மணி நேரத்தில் ஏறி இறங்கலாம் என்று சொல்கிறார். வழி எங்கும் வெயிலே தெரியவில்லை பச்சைப் பசேல் என்று செடிகளும் மரங்களும் இருக்கிறது. பூக்களில்  வண்ணத்துப் பூச்சிகள்  நிறைய இருக்கிறது. முடிந்தால் பாருங்கள்.

நாங்கள் பார்த்த போது பழமையாக இருந்தது கோவில்
 இந்த காணொளி 2019 டிசம்பர் மாதம் 20ம் தேதி  எடுக்கப்பட்டு இருக்கிறது. தை மாதம் கும்பாபிஷேகம் ஆகி புதுப் பொலிவுடன்  இருக்கிறது.

Balakumar Somu   என்பவர் கோவில் உள்ளே ஒவ்வொரு சந்நிதி பற்றியும் கோவில் தெப்பக்குளம் வரலாறு பற்றியும் சொல்கிறார். மிக அழகாய்  இருக்கிறது தெப்பக்குளம் இருக்கும் பகுதி. நேரம் இருக்கும்போது பாருங்கள்.

சாவித்திரி என்பவர்  இவர்  இருசக்கர வாகனத்தில் தார்ச்சாலையில் பயணித்துக் கோவிலுக்கு வந்ததையும், கொண்டைஊசி வளைவுகளில் கவனமாய் செல்ல வேண்டும் என்பதையும் இருட்டுவதற்குள்  கோவிலுக்கு  சென்று வந்துவிட வேண்டிய காரணத்தையும் அழகாய்ச் சொல்கிறார்.

சித்தர் சமாதிக்குச் சென்றதைக் காட்டுகிறார். நாங்கள் போனபோது  சித்தர் படம் மட்டும்தான் இருந்தது இப்போது   சித்தர் தியானம் செய்யும் சிலை குகை போன்ற அமைப்பு செய்து வைத்து இருக்கிறார்கள்.

மலைத்தொடரை அழகாய்ப் படம் எடுத்து இருக்கிறார்.

நான் எடுத்த படங்கள் எல்லாம் போச்சு! என்ன காரணம் என்று தெரியவில்லை. முதன் முதலில் தொலைக்காட்சிப் படங்களை வைத்துப் பதிவு போட்டு இருக்கிறேன்..

உலக சுற்றுலா தினத்தில் போடுவதற்கு  இயற்கை அழகு சூழ்ந்த ரம்மியமான கோவில் என்று பாலமலையை தேர்ந்து எடுத்தேன்.



வாழக் வையகம் வாழ்க வளமுடன்.

58 கருத்துகள்:

  1. கோவிலுக்குச் செல்லும் பாதை பற்றிய வர்ணனைகள் அங்கு செல்லும் ஆவலை ஏற்படுத்துகின்றன.  சித்தர் என்ன சொல்லி இருந்தார் என்றும் சொல்லி இருக்கலாம்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வணக்கம் ஸ்ரீராம், வாழ்க வளமுடன்
      கோவிலுக்கு செல்லும் பாதையின் காணொளி பார்த்தால் இன்னும் ஆவல் அதிகமாகும். இயற்கையை ரசித்துக் கொண்டு அந்த பாதையில் பயணிப்பது மிகவும் சுகமானது.
      சித்தர் கோவில் கட்ட ஆரம்பித்தால் அது தானக நடக்கும் என்று சொல்லி இருக்கிறார். அது போல பாறை தானக வெடித்து கற்கள் தந்து இருக்கிறது, மணல் இல்லையே என்று கவலை பட்ட போது மண் இருக்கும் இடத்தை கனவில் சொல்லி இருக்கிறார் அரங்கன்.
      இதை பதிவில் இணைத்து விட்டேன் ஸ்ரீராம்.

      விட்டு போனதை உங்களை விட்டு கேட்க சொல்லி விட்டார் அரங்கன்.

      நீக்கு
  2. படங்கள் இல்லை என்று என்னும்போது பதிவு போட வசதியாக தொலைக்காட்சியில் வந்ததோடு, அதை உங்கள் கண்ணிலும் படவைத்தாரே...     ஆச்சர்யமான நிகழ்வு.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. //அதை உங்கள் கண்ணிலும் படவைத்தாரே...//

      ஆமாம், அதுதான் பாலமலை அரங்கநாதர் கருணை.
      நான் தினம் மாலை புதுயுகம் ஆலயதரிசனம் பார்ப்பேன் ஸ்ரீராம்.

      நீக்கு
  3. காணொளிகள் இப்போது பார்க்கவில்லை.  பின்னர்தான் பார்க்கவேண்டும்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. கோவை போகும் வாய்ப்பு கிடைத்தால் காணொளிகள் உதவியாக இருக்கும் ஸ்ரீராம்.
      நேரம் கிடைக்கும் போது பாருங்கள்.
      உங்கள் கருத்துக்களுக்கு நன்றி.

      நீக்கு
  4. பாலமலை ஸ்ரீ ரங்க நாதர் கோயிலைப் பற்றிய செய்திகள் புதியவை..

    பதிவும் படங்களும் அழகு...

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வணக்கம் சகோ துரை செல்வராஜூ, வாழ்க வளமுடன்
      உங்கள் கருத்துக்கு நன்றி.

      நீக்கு
  5. சிறப்பான கோவில் பற்றிய தகவல்களுக்கு நன்றிம்மா... காணொளிகளை இனிமேல் தான் பார்க்க வேண்டும்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வணக்கம் வெங்கட், வாழ்க வளமுடன்.
      காணொளி பாருங்கள் உங்களுக்கு மிகவும் பிடிக்கும். அதுவும் மலைபாதை வழியாக நடந்து போவதை விரும்புவீர்கள். திருக்குளம் அமைந்த இடம் அழகான வனப்பகுதி அதுவும் மிகவும் பிடிக்கும் உங்களுக்கு.
      உங்கள் கருத்துக்கு நன்றி.

      நீக்கு
  6. சிறப்பான கோயில்கள். நாங்க செல்லாத ஊர் கோவை. இத்தனைக்கும் கோவையில் என் பெரியப்பா பெண் (அக்கா) வீட்டில் நாலைந்து நாட்கள் தங்கி இருந்தேன். ஊட்டிக்குப் போகும்போதும் வரும்போதும் கோவை வழியாகப் போயிருக்கோம். ஆனாலும் கோவையில் இன்னமும் மருதமலை கூடப் பார்க்கவில்லை. இனி சமயமும், நாட்களும் வாய்க்க அந்த ஆண்டவன் தான் அருள் புரிய வேண்டும்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வணக்கம் கீதா சாம்பசிவம், வாழ்க வளமுடன்
      ஆண்டவன் நல்ல வழி காட்ட வேண்டும். பூம்பாறை முருகன் கோவில் போகும் வழி போல் மிக அருமையான இயற்கை அழகாய் அமைந்து இருக்கும் கோயில். மலையும், மரங்களும் மிக அழகாய் இருக்கும்.
      மருதமலை முன்பு ஒவ்வொரு கார்த்திகைக்கும் போவோம். அப்போது படிவழியே ஏறி போவோம் (பள்ளி பருவத்தில் ) இப்போது வாகனம் மேலே போக் ஆரம்பித்தபின் வாகனம் மேலே நிற்க நிறைய மலையை அழித்து விட்டார்கள்.கோவில் பழைய மாதிரி இல்லை. இப்போது புதிதாக படிகள் அமைத்து பெரிய ராஜ கோபுரம் கட்டி இருக்கிறார்கள், அதை இன்னும் நானும் பார்க்கவில்லை.

      நீக்கு
  7. தொலைக்காட்சிப் படங்கள் ஆனாலும் சிறப்பான படங்கள். உங்கள் ஆர்வத்தையும் நுணுக்கமான தொழில் நுட்ப ஆர்வத்தையும் காட்டுகிறது. படங்கள் தெளிவாகவும் வண்ணங்கள் கலங்காமலும் வந்திருக்கின்றன. கோயில் பற்றிய தகவல்களுக்கும் மற்ற விபரங்களுக்கும் நன்றி. காணொளியை முடிந்தால் மத்தியானம் பார்க்கிறேன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. படங்களை பற்றி கருத்து சொன்னதற்கு நன்றி.தொழில் நுடபம் எல்லாம் ஒன்றும் இல்லை, அலைபேசியில் படம் எடுத்தேன்.
      காணொளிகள் உங்களுக்கு பிடிக்கும் நேரம் கிடைக்கும் போது பாருங்கள்.
      உங்கள் கருத்துக்களுக்கு நன்றி.

      நீக்கு
  8. கோயம்புத்தூரில் 1980களின் ஆரம்பத்தில் பணியாற்றியபோது அருகிலுள்ள இடங்களுக்குச் சென்றுள்ளேன். இக்கோயிலைப் பற்றி இதுவரை அறியவில்லை. வாய்ப்பு கிடைக்கும்போது அவசியம் செல்வேன். அறிந்திராத கோயிலுக்கு அழைத்துச் சென்றமைக்கு நன்றி.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வணக்கம் முனைவர் ஐயா, வாழ்க வளமுடன்
      கோவையில் நிறைய மலைக்கோவில்கள் இருக்கிறது. நான் போன கோவில்கள் நிறைய பகிர வேண்டியது இருக்கிறது. எடுத்த படங்கள் எல்லாம் இருக்கிறதா என்று பார்க்க வேண்டும் போல் உள்ளது இப்போது.

      கோவில் இருக்கும் இடம் அழகானது முடிந்த போது அரங்கனை சேவித்து வாருங்கள்.
      விரைவில் நிலைமை சீராக பாலமலை அரங்கன் அருள வேண்டும்.

      உங்கள் கருத்துக்கு நன்றி .

      நீக்கு
  9. அன்பு கோமதிமா,
    வேலைகள் முடிந்து வர நேரமாகிவிட்டது.
    மீண்டும் காலை வந்து அரங்கன் கிருபையில் படிக்கிறேன்.
    நன்றி மா.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வணக்கம் வல்லி அக்கா, வாழ்க வளமுடன்
      மெதுவா வாங்க ,அரங்கன் கிருபை செய்வான்.
      உங்கள் வரவுக்கு நன்றி அக்கா.

      நீக்கு
  10. படங்கள் அழகு செல்லும் வழிமுறைகள் சொல்லிய விதம் அருமை சகோ.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வணக்கம் தேவகோட்டை ஜி, வாழ்க வளமுடன்
      உங்கள் கருத்துக்கு நன்றி ஜி.

      நீக்கு
  11. கோவில் பற்றிய சிறப்பான விளக்கங்கள்... செல்லும் வழிக்கான குறிப்புகள் என அனைத்தும் அருமை அம்மா...

    எப்போதுமே படங்களை கணினியிலும் pen drive-விலும் வைத்துக் கொள்வது வழக்கம்... அதே சமயம் நம் google drive-வில் தரவேற்றம் செய்து விட வேண்டும்... ஒரு மின்னஞ்சலுக்கு 15gb வரை இலவசம் தான்... தேவைப்படும் நேரத்தில் தரவிறக்கம் செய்து கொள்ளலாம்... Android TV இருக்குமானால், படங்களை அங்கும் காணலாம்...

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வணக்கம் திண்டுக்கல் தன்பாலன், வாழ்க வளமுடன்
      பதிவையும், படத்தையும் பாராட்டியதற்கு நன்றி.

      google drive-வில் கொஞ்ச படங்கள் இருக்கிறது தன்பாலன். பாஸ்போர்ட்டிலில் சேமித்து வைத்து இருக்கிறேன் அதிலும் தேடினேன் இல்லை.

      உங்கள் தகவலுக்கு நன்றி .pen drive-விலும் எடுத்து வைத்துக் கொள்கிறேன்.

      உங்கள் கருத்துக்கு நன்றி.

      நீக்கு
  12. ஆஆஆ கோமதி அக்கா... எனக்கு முன்பே போஸ்ட் போட்டிருக்கிறீங்க ஆனா என் கண்ணுக்கு நேற்று தெரியவே இல்லை கர்ர்ர்ர்ர் இப்போதான் பார்க்கிறேன்...
    பின்பு கொம்பியூட்டர் ஊடாக வருகிறேன்..💐💐💐💐

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வணக்கம் அதிரா, வாழ்க வளமுடன்
      ஆமாம், தங்கைக்கு முன்பே அக்கா போட்டுவிட்டாள்.
      வாங்க வாங்க மெதுவா.

      நீக்கு
  13. கோயில் அழகாக உள்ளது கோமதிக்கா. நாங்க கோயம்புத்தூரில் இருந்தப்ப போகவில்லை. அப்போது தெரிந்திருக்கவில்லை.

    இப்போ என் தம்பி அங்கிருக்கிறான். சொல்ல வேண்டும்.

    அழகா குறிப்புகள் எழுதி வைச்சுருக்கீங்க.

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வணக்கம் கீதா, வாழ்க வளமுடன்.
      உங்களுக்கு மிகவும் பிடிக்கும் கீதா மலைவழியாக நடந்து போவது.

      அந்த காணொளிகள் பாருங்கள் (முதல்)
      இப்படித்தான் நானும் என் கணவரும் குறிப்பு எழுதி வைத்துக் கொள்வோம். அப்புறம் யாரிடமாவது சொல்ல என்று பதிவு போடுவதற்கு முன்பே அப்படித்தான்.
      பார்த்த கோவில் மீண்டும் பார்க்க வேண்டாம் என்பதும் ஒரு காரணம். பாடல் பெற்ற தலங்கள், திவய தேசங்கள், இவைகளை நோட் போட்டு எழுதி வைத்து இருந்தோம்.

      நீக்கு
  14. காட்டுப்பசுக்களுக்குத் தண்ணீர்த்தொட்டி//

    ஆஹா நல்ல விஷயம்

    சுக்குக் காபி, ராகி வடை இங்கு கிடைக்கும் என்று ஒரு வலைஅன்பர்
    குறிப்பிட்டு இருந்தார்.,கிடைக்குமா என்று பார்த்தோம். இவை கிடைக்கும்
    என்று ஒருகடையில் எழுதி இருந்தது..ஆனால் கடை காலியாக இருந்தது.
    திருவிழாக்காலங்களில் தான் கிடைக்குமாம்////

    ஆ ஆ ஆ வடை போச்சே!! ஹா ஹா ஹா ஹா

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. மலை பாதையில் நடக்கும் இடங்களில் விலங்குகளுக்கு பெரிய தண்ணீர் தொட்டிகள் உள்ளன.

      ஆமாம், வடை கிடைக்கவில்லைதான். கோவிலில் வெண் பொங்கல் கிடைத்தது.

      நீக்கு
  15. படங்கள் மட்டும் இல்லை என்று கவலைப்பட்டு என் கணவரிடம் சொல்லிக் கொண்டு இருந்தேன்.

    அன்று மாலை புதுயுகம் தொலைக்காட்சியில் ஆலயதரிசனம் வைப்பார்கள் தினம் மாலை 6 மணிக்கு. புதன்கிழமை என்றால் பெருமாள் கோவில்கள் காட்டுவார்கள். அதில் பாலமலை அரங்கநாதர் கோவில் காட்டினார்கள்.//

    அட!! ஆச்சரியம் இல்லையா கோமதிக்கா. ஆனால் சிலப்போ இப்படி நாம் நினைத்துக் கொண்டிருப்பது நாம் எதிர்பார்க்காமலேயே ந்டப்பதுண்டு. பாருங்க அதான் எடுத்து போட்டுட்டீங்களோ?!!!

    படங்கள் நல்லாருக்கு கோமதிக்கா. எப்படி எடுத்தீங்க டக் டக்குனு மாத்திட மாட்டாங்களா? பரவாயில்லை கோமதிக்கா உங்கள் கேமரா ஒரு படம் எடுத்ததும் அதை சேவ் செய்ய எடுக்கும் சேவின் டைம் கம்மியோ? பொறுமையாக எடுத்துருக்கீங்க அதுவும் எல்லாமும் நல்லாவும் இருக்கு....கோமதிக்கா கோமதிக்காதான்!!! நல்லா தகவல்களும் படங்களும்!!

    கீதா

    பதிலளிநீக்கு
  16. கோமதிக்கா நிஜம்மா நீங்க டிவிலருந்து எடுத்தாப்ல இல்லவே இல்லை அந்த புதுயுகம்னு வர லோகோ இல்லைனா சொல்லவே முடியாதுக்கா.

    சக்கரதீர்த்தம் படத்துல லோகோ இல்லையே

    கோவிலுக்குச் செல்ல்லும் பாதை செமையா இருக்கும் போல உங்கள் தகவல்கள் சொல்லுகிறதே..

    காணொளி செமையா இருக்கு சுற்றிலும் மலை ஆஹா ஆஹா அடுத்த முறை தம்பி வீட்டுக்குச் சென்றால் கண்டிப்பாகப் போக வேண்டும்...இயற்கையை ரசிக்க வேண்டும்!!

    நல்லாருக்கு கோமதிக்கா இத்தனை தகவல்களும் திரட்டிக் கொடுத்துருக்கீங்க வாழ்த்துகள் பாராட்டுகள்

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. சக்கர தீர்த்தம் படம் தினமலர் செய்தியில் கிடைத்தது தினமலருக்கு நன்றி சொல்ல மறந்து விட்டேன். புதுயுகத்தில் சக்கர தீர்த்தம் காட்டவில்லை. தண்ணீர் இல்லை என்று போகவில்லை போலும்.

      இரண்டாவது காணொளியில் தீர்த்த வரலாறு,சிங்கம், கரடி, இளவரசன் கதை இருக்கு
      மனிதன் விலங்கைவிட மோசமானவன் என்பதை சொல்லும் கதை. கேட்டுப்பாருங்கள் கீதா. மனிதனின் பாபவிமோசன கதை.
      காணொளி பார்த்து விட்டீர்களா? அடுத்தமுறை போகும் போது கண்டிப்பாய் போய் வாருங்கள் மரம் செடி. கொடிகள் இருக்கும் போதே பார்த்துவிட வேண்டும் இயற்கையை.

      உங்கள் கருத்துக்களுக்கும் பாராட்டுக்களுக்கும் நன்றி கீதா

      நீக்கு
  17. உங்கள் குறிப்புகளும், தகவல்களும் படங்களும் அருமை. இறைவன் நாம் நினைப்பதை அதுவும் நல்ல விஷயமாக இருக்கும் போது கண்டிப்பாக அருள்வார் என்பதுதான் உங்களுக்கு டிவியில் இக்காட்சி காணக்கிடைத்ததும் அதை எடுத்து இங்கு பகிரவும். ஆச்சரியமான விஷயம்.

    காணொளி மிக அழகாக இருக்கிறது. அதையும் இங்கு தங்கமைக்கு மிக்க நன்றி.

    துளசிதரன்

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வணக்கம் சகோ துளசிதரன், வாழ்க வளமுடன்

      ஆமாம், அரங்கன் இந்த பதிவை பூர்த்தி செய்ய கருணை புரிந்தார்.

      காணொளி கண்டது மகிழ்ச்சி.
      உங்கள் அன்பான பின்னூட்டத்திற்கு மகிழ்ச்சி, நன்றி.

      நீக்கு
  18. பசுமையா எங்க இடம் போல இருக்கு. அழகான கோவில் அக்கா. காணொளி பார்த்தேன். அழகா எடுத்திருக்கிறாங்க. தீபாராதனையும் பார்த்தாச்சு. உங்களுக்கு அரங்கனின் அருள் இருந்தமையால் புதுயுகம் மூலம் படங்கள் கிடைத்திருக்கு. கீதா அவங்க சொன்னதுபோல டிவியில் வந்ததை எடுத்தது போல இல்லை. நானும் இந்த நிகழ்ச்சியையும்,வேந்தர் டிவியில் காலை,மாலை 6 மணிக்கு ஒளிப்பரப்பாகும் உள்ளம் உருகுதய்யா வும் பார்ப்பேன்.சில நேரம் மிஸ் பண்ணிடுவேன்.

    படங்கள் அழகா எடுத்திருக்கிறீங்க. அரங்கநாதரை நாங்களும் தரிசிக்க வைத்த புண்ணியம் உங்களுக்கு கிடைக்கட்டும் அக்கா.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வணக்கம் பிரியசகி, வாழ்க வளமுடன்

      பசுமையாக உங்கள் ஊர் மாதிரிதான் மலை வழி பாதை.

      //கொடிமரத்தருகில் பந்தல்- அதன்மேல் காய்ந்த மலைச்செடிகொடிகள்-
      கதிர்காமத்தில் உள்ளது போல்//

      படித்தீர்களா கதிர்காம கோவிலில் உள்ளது போல் என்று போட்டு இருந்தனே.

      வேந்தர் டிவி இப்போது வர மாட்டேன் எங்கிறது தனியாக பணம் கட்ட வேண்டும். அதிலும் கோவில் , பக்தி பாடல்கள் எல்லாம் போடுவார்கள் நன்றாக இருக்கும் அம்மு.
      போய் வந்து எவ்வளவு வருஷம் ஆச்சு இவ்வளவு காலம் ஆச்சு.

      காணொளிகளில் மிக நன்றாக இருக்கிறது கோவில்.நாங்கள் போன போது பழைய கோவிலாக பார்த்தோம்.

      அரங்கநாதர் எல்லோருக்கும் நன்மை செய்யட்டும் அம்மு.
      உங்கள் கருத்துக்கு நன்றி.

      நீக்கு
  19. அழகு, ரிவியில் எடுத்தாலும் அழகாக தெளிவாக வந்திருக்கின்றன படங்கள்.
    அரங்கநாதர் என்றால், சிவனின் ஒரு வடிவமோ கோமதி அக்கா... எத்தனை பெயர்கள் எத்தனை கோயில்கள்... மனிதர்களைப்போல கடவுள்களும் பெயர்களும் அதிகமோ அதிகம், அனைத்தையும் மனதில் நிறுத்த முடிவதில்லை:)..

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அதிரா திருமால்தான் அவர். லிங்க வடிவமாக இருக்கிரது என்றதால் சிவனின் வடிவமோ என்று கேட்டு இருக்கிறீர்கள் என்று நினைக்கிறேன். சுயம்பாய் தோன்றிய திருமாலின் வடிவம். இருபக்கத்தில் ஸ்ரீதேவி, பூதேவி.

      எத்தனை பேர் வைத்து அழைத்தாலும் இறைவன் ஒருவனே! (ஆயிரம் நாமங்கள் இறைவனுக்கு என்பார்கள். )

      சங்கு, சக்கரத்துடன் இருக்கிறார் பாருங்கள் படத்தில். அந்த அந்த பகுதியில் இருக்கும் மக்களின் நம்பிக்கைக்கு கோவில்கள்.

      நீக்கு
  20. //வெளிச்சம் அதிகமான நேரங்களில் வழியில் யானைகள் வராதாம்.//

    உண்மைதான், யானை அதிகமுள்ள பகுதிகளில் விவசாயம் செய்வோர், இரவில் பெரிதாக நெருப்புக் கொழுத்தி எரிய விடுவார்களாம் இரவில் தம்மைப் பாதுகாக்க என அறிஞ்சிருக்கிறேன்... பெரிய சத்தத்துக்கும் பயப்பிடுவினம் என நினைக்கிறேன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அதிரா நீங்கள் சொல்வது சரிதான்.
      காட்டிலிருந்து விவசாய பகுதிக்கு வரும் யானைகளை பயங்கரமாய் ஒலி எழுப்பியும் , நெருப்பைக்காட்டியும் காட்டு பக்கம் துரத்துவார்கள் அதிரா.

      நீக்கு
  21. கோயில்பற்றி நிறைய விளக்கங்கள் குடுத்திருக்கிறீங்கள்...
    அபிசேகம் அலங்காரம் அனைத்தும் அழகு..

    தீர்த்தக்குளம் அழகாககவும் சுத்தமாகவும் இருக்கு.

    அழகிய பதிவு.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. கோவில் மிக சுத்தமாக பராமரிக்க படுகிறது.
      மிகவும் அழகாய் அலங்காரம் செய்வார்கள்.
      காணொளியில் சுவாமிக்கு அலங்காரம் இன்னும் அழகாய் இருக்கிறது.

      தீர்த்தக்குளம் அழகாய் இருக்கிறது குளத்தை சுற்றி மரங்கள் நிறைந்து அழகிய வனமாக காட்சி அளிக்கும் அதிரா.
      உங்கள் கருத்துக்களுக்கு நன்றி.

      நீக்கு
  22. படங்கள் இல்லாது போனாலும் இடுகை வெளியிடுவதற்காகவே புதுயுகத்தில் தொடர் வந்ததுபோலத் தெரிகிறது.

    கோவில் படங்கள் நன்று.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வணக்கம் நெல்லைத் தமிழன், வாழ்க வளமுடன்

      //படங்கள் இல்லாது போனாலும் இடுகை வெளியிடுவதற்காகவே புதுயுகத்தில் தொடர் வந்ததுபோலத் தெரிகிறது//

      இருக்கலாம் நெல்லை அவன் உள்ளத்தை யார் அறிவார்!

      வெகு நாட்கள் ஆகி விட்டது பதிவு போட்டு என்று போடலாம் உலகசுற்றுலா தினத்திற்கு என்று பார்க்கும் போதுதான் படம் கிடைக்கவில்லை.
      காணொளி பாருங்கள் அதில் நாங்கள் பார்த்த கோவிலுக்கும் இப்போது உள்ள கோவிலுக்கும் மாற்றங்கள் இருக்கிறது. கோவில் புது பொலிவுடன் இருக்கிறது.

      நீக்கு
  23. உங்கள் படம் எப்போதாவது கிடைக்கும். அப்போது வெளியிடுங்கள். அப்போது இருந்ததற்கும் இப்போது ஏதேனும் மாறுதல் வந்திருக்கா என்று தெரியும்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நீங்கள் சொன்னது போல் படங்கள் கிடைத்தால் நல்லது, மகிழ்ச்சி.
      கோவில் முழுவதும் மாற்றம் தெரிகிறது. சித்தர் இருந்த இடமும் புதுமையாக இருக்கிறது.
      கோவிலின் முன்புற தோற்றமே மாறி இருக்கிறது.

      உங்கள் கருத்துக்களுக்கு நன்றி.

      நீக்கு
  24. அந்த குறிப்புகள் என்னைக் கவர்ந்தன. மிக மிகத் தெளிவான குறிப்புகள். எவ்வளவு அருமையாக எல்லாவற்றையும் குறித்துக் கொண்டு முன்னேற்பாடுகளுடன் தரிசனத்திற்கு கிளம்புகிறீர்கள் என்று வியப்பாக இருந்தது. படங்கள் இல்லையே என்ற உங்கள் ஏக்கத்தைத் தீர்க்க அன்று மாலையே புதுயுகம் தொலைக்காட்சியில் அரங்கனின் தரிசனமும் படங்களும் கிடைத்தது இப்பொழுது நினைத்தாலும் ஆச்சரியமாக இருக்கிறது. எல்லாம் இறைவனின் அருள்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வணக்கம் ஜீவி சார், வாழ்க வளமுடன்
      கோவிலில் பார்த்தவைகளைதான் குறித்து வைத்து இருக்கிறேன் சார்.
      எப்போதும் கொஞ்சம் கோவிலைபற்றியும் போகும் பாதைகளைப் பற்றியும் தெரிந்து வைத்துக் கொள்வார்கள் என் கண்வர்.. இந்து அறநிலையை சேர்ந்த கோவில் என் கணவரின் அண்ணன் இங்கு பணியாற்றி இருக்கிறார்கள் அவர்களும் சில குறிப்புகள் சொன்னார்கள்.

      பரம்பரை தர்மகர்த்தா திரு ஜெகதீசன் அவர்கள் நிறைய தகவல் சொன்னார்கள்.புதுயுகம் தொலைக்காட்சியில் அரங்கனின் தரிசனமும் படங்களும் கிடைத்தது மனதுக்கு ஆறுதல்.

      இறைவனின் அருள் .
      உங்கள் அன்பான கருத்துக்கு நன்றி சார்.

      நீக்கு
  25. அன்பு கோமதி மிக அழகான விவரணை. அதிலும் அருமையான படங்கள்.
    புதுயுகம் டிவி இந்த ஸேவை செய்வது எத்தகைய நற்பலனைக் கொடுக்கிறது பாருங்கள்.
    அதுவும் கைகள் ஆடாமல் படம் எடுத்திருக்கிறீர்கள்.
    மனம் நிறைந்த பாராட்டுகள்.
    வெள்ளிக்கிழமை அரங்கனாதர், தாயார்கள் தரிசனம் அமிர்தம்.
    குன்றுகளில் முருகனும், கோவிந்தனும் தான் இருப்பார்கள்.
    இங்கே அரங்கனே வந்து விட்டாரே.
    இந்த நிலமை மாறாமல் பாதுகாக்கப் படவேண்டும். மலைகள் தங்கள் எழிலை எல்லாம் மனிதனுக்குப்
    பலி கொடுத்து விட்டன.

    மிக மிக நன்றி கோமதிமா. மிகச் சிறப்பான பதிவு.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வணக்கம் வல்லி அக்கா, வாழ்க வளமுடன்
      இப்போது தொலைக்காட்சிகள் போட்டி போட்டுக் கொண்டு கோவில்களை ஒவ்வொரு நேரத்தில் காட்டிக் கொண்டு இருக்கிறார்கள் அவர்கள் சேவை நமக்கு மகிழ்ச்சி. கோவிலுக்கு போகமுடியாத இந்த காலத்தில் நமக்கு வசதியாக வீட்டிலிருந்து இறைவனை சேவிக்கிறோம்.

      குன்று இருக்கும் இடம்மெல்லாம் கோவிந்தனும், குமரனும் தான் இருப்பார்கள்.
      நதியின் மையத்தில் இருக்கும் தீவுக்கு பேர்தான் அரங்கம் என்று சொல்லுவார்கள் இங்கு ஏதாவது நதி இருந்து இருக்குமோ என்னவோ !

      மலைகள் எல்லாம் நீங்கள் சொல்வது போல் மனிதனின் தேவைகளுக்கு பலி கொடுக்கப்பட்டு விட்டதுதான். இருக்கும் மலைகள், மரங்கள் பாதுகாக்க பட்டால் நல்லதுதான்.
      உங்கள் பாராட்டுக்கும், அன்பான கருத்துக்கும் நன்றி அக்கா.

      நீக்கு
  26. மூன்று காணொளிகளையும் சற்று முன்னர் தான் பார்த்தேன்... ம்ஹிம்... ரசித்தேன்...

    அதிலும் முதல் காணொளி (மலை பாதை) மிகவும் ரசித்தேன்... இயற்கை தான் எவ்வளவு அழகு...!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வாங்க தனபாலன், மூன்று காணொளிகளையும் பார்த்து விட்டீர்களா மகிழ்ச்சி.
      முதல் காணொளி மலை பாதை மிக அருமையாக இருப்பதை நீங்களும் ரசித்து இருக்கிறீர்கள். அப்படியே அந்த இயற்கையை அழிக்காமல் இருக்கவேண்டும் என்று மனது ஆசைப்படுகிறது.
      மீண்டும் வந்து கருத்து சொன்னதற்கு நன்றி தன்பாலன்.

      நீக்கு
  27. வணக்கம் சகோதரி

    அருமையான பதிவு. பாலமலை அரங்கநாதர் கோவிலைப்பற்றி அழகான, விளக்கங்கள் நிறைந்த மிக அருமையான பதிவொன்றை தந்திருக்கிறீர்கள். ரசித்துப் படித்தேன். கோவிலுக்கு செல்லும் வழி,காணும் இடங்கள், கோவிலைப்பற்றிய விபரங்கள் என நீங்கள் தந்த குறிப்பு மிகப் பிரமாதமாக உள்ளது. அனைவருக்கும் மிகவும் பயனுள்ளதாகவும் இருக்கும்

    திருமால் டிராவல்ஸ், டிரைவர் பெயர் வாசுதேவன் என அரங்கன் உங்களுடனேயே இருந்து பத்திரமாக அழைத்துச் சென்று தன் கோவிலை சுற்றிக் காண்பித்திருக்கிறார். பின்பு நீங்கள் படங்கள் இல்லையே என வருந்தியதால், படங்களுக்கும், இந்த யுகத்திலேயே வழி காட்டி எங்களுக்கும் உங்கள் மூலமாக நல்ல பதிவுக்குள் காட்சி தந்து அருள் பாலித்திருக்கிறார். தங்கள் பதிவின் வாயிலாக அரங்கனின் சேவடியை மனதாற வணங்கி பிரார்த்தித்துக் கொள்டேன்.

    டி. வி மூலமாக நீங்கள் எடுத்த படங்கள் அருமை. மலைப்பகுதி காணொளியை கண்டேன். கோவில் மிக அழகாக உள்ளது. மலை ஏறிப்போகும் போது அங்குள்ள பசுமை மனதை நிறைக்கிறது. பிறகு மற்ற இரண்டையும் காண்கிறேன். இறைவன் அருளிருந்தால், கோவைச் செல்லும் சமயம் இந்தக் கோவிலுக்கும் சென்று வரும் ஆசையை விதைத்துள்ளது தங்கள் பதிவு. பகிர்வுக்கு மிக்க நன்றி சகோதரி.

    நன்றியுடன்
    கமலா ஹரிஹரன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வணக்கம் கமலா ஹரிஹரன், வாழ்க வளமுடன்

      போய் வந்தபின் அந்த கோவில்பற்றிய குறிப்புகள் அனைவருக்கும் பயன்படும் என்று தான் நினைப்பேன்.

      //திருமால் டிராவல்ஸ், டிரைவர் பெயர் வாசுதேவன் என அரங்கன் உங்களுடனேயே இருந்து பத்திரமாக அழைத்துச் சென்று தன் கோவிலை சுற்றிக் காண்பித்திருக்கிறார்.//

      திருமால் ட்ராவல்ஸ்' கவனித்தேன் கமலா, நீங்கள் சொன்னது உண்மை. படங்கள் இல்லை வருத்தப்பட்டபோதும், இணையத்தில் தேடியபோதும் எவ்வளவு செய்திகள் பாலமலை அரங்கன் கிடைக்க செய்தார்!

      பாலமலை அரங்கன் இந்த தொற்றிலிருந்து எல்லோரையும் மீட்க வேண்டும் என்று வேண்டிக் கொள்வோம் அதையும் நிறைவேற்றுவார் விரைவில் என்று நம்புவோம்.

      இறைவன் அருளால் மீண்டும் அந்த கோவிலை தரிசிக்கும் நாளை நானும் எதிர்ப்பார்க்கிறேன் கமலா.
      உங்கள் அன்பான கருத்துக்கு மிகவும் நன்றி.

      நீக்கு
  28. சிறப்பானத் தகவல்கள்
    நன்றி சகோதரி

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வணக்கம் சகோ கரந்தை ஜெயக்குமார், வாழ்க வளமுடன்
      உங்கள் கருத்துக்கு நன்றி.

      நீக்கு
  29. நீங்கள் எடுத்தப் படங்கள் கிடைக்காமல் போனாலும் இறையருள், தொலைக்காட்சி நிகழ்ச்சி மூலமாகத் தங்கள் அனுபவத்தை பகிர வழிவகுத்து விட்டது.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வணக்கம் ராமலக்ஷ்மி, வாழ்க வளமுடன்
      உங்களை இன்று நினைத்துக் கொண்டேன். பதிவு ஆரம்பித்து இருக்கிறேன் கிளிக்கோலம் போட்டு என்று உங்களிடம் சொன்னேன்.
      என் பதிவை கண்டு கொண்டேன் என்று கருத்து சொல்லி இருந்தீர்கள்.
      இன்று 500வது பதிவு போட்டு இருக்கிறேன். எப்போதும் என்னை உற்சாகப்படுத்தி எழுத வைப்பீர்கள் உங்களுக்கு நன்றி.

      இறையருள் எழுத வைத்தார் என்பது உண்மை ராமலக்ஷ்மி.

      உங்கள் அன்பான கருத்துக்கு நன்றி.


      நீக்கு
  30. பாலமலை அரங்கநாதர் திருக்கோயில் தரிசனம் கண்டு ...
    தகவல்களையும் அறிந்துக் கொண்டேன் மா ..

    தகவல்கள் எல்லாம் மிக சிறப்பு ..

    பதிலளிநீக்கு