செவ்வாய், 25 பிப்ரவரி, 2020

நினைவில் நிறைந்தவர்கள்

இந்த பிப்ரவரி மாதம் மனவேதனை தரும் மாதமாக  ஆகி விட்டது.

போன பதிவில்  பின்னூட்டம் அளித்தவர்களுக்குப்  பதில் அளிக்க முடியாமல் திடீர்ப் பயணம் வந்து விட்டது, வந்து மறுமொழி தருகிறேன் பொறுத்தருள்க என்று கேட்டுக் கொண்டு இருந்தேன்.

அன்பர்கள் தினத்தில் 14 ம் தேதி. (14.02.2020) எங்கள் குடும்ப நண்பரின் இழப்பு நிகழ்ந்துவிட்டது.அவர் என் மாமியாரின் பக்கத்து வீடு.

எங்கள் குடும்ப நட்பில் இருந்த நல்ல மனிதரின் மறைவுக்குப் போய் இருந்தோம் கோவைக்கு.


அவர் எங்கள் குழந்தைகளால் 'தொட்டப்பா' என்று அன்புடன் அழைக்கப்பட்டவர். என் கணவர் வீட்டுக்குப் பின்னால் அவர்கள் வீடு. அவர்கள் வீட்டுச் சமையலறை ஜன்னல் எங்கள் வீட்டு பின் வாசலில்  நின்றால் தெரியும். அவர்கள் வீட்டுப்பின் வாசலும் எங்கள் பின் வாசலும்  பக்கம் பக்கம்; இடையில் சுவர் எழுப்பவில்லை.

அவர்கள் ஒரு நாளில் நிறைய தடவை அத்தையைத் தேடி வருவார்கள். பேச நிறைய விஷயம் இருக்கும் இருவருக்கும்.

அவர்கள் பிள்ளைகள், அவர்கள் உறவினர்கள் எல்லாம் அத்தையைத் தேடி வந்து  பார்த்து உரையாடிப் போவார்கள். நாங்கள் ஊரிலிருந்து வந்தால் உடனே வந்து நலம் விசாரித்துப் போவார்கள்.

அவர்களுக்குக் கர்நாடகா சொந்த ஊர். கன்னடம் மட்டுமே தெரியுமாம் முதன் முதலில் கோவை வந்த போது.

அப்புறம் அக்கம், பக்கம் பேசிப் பழகி,  குழந்தைகள் பிறந்து அவர்கள் படிக்கும் போது தாங்களும் தமிழ் படிக்க, பேச , எழுதத் தெரிந்து கொண்டார்கள்.

 என் அத்தை அவர்கள் முன்பு  தொட்டப்பாவின், தொட்டம்மாவின் பெயரைச் சொல்லி  அழைப்பார்கள். அப்புறம் எங்கள் குடும்பத்துக் குழந்தைகள் அவர்களை தொட்டப்பா என்றும் அவர் மனைவியை தொட்டம்மா என்றும் அன்புடன் அழைக்க ஆரம்பித்தார்கள். அத்தையும் நம்மிடம் பேசும் போது அப்படியே கூப்பிட ஆரம்பித்தார்கள்.

இப்போது எங்களின் பேரக்குழந்தைகளுக்கும் அவர்கள் தொட்டப்பா, தொட்டம்மாவாக ஆகிப் போனார்கள்.

அவர்களும் அவர்கள் குழந்தைகளும்  எங்கள் மாமியாரை  அத்தை என்றும், மாமனாரை தாத்தா என்றும் அழைப்பார்கள்.அவர்களது பிள்ளைகள் என் கணவரின் உடன் பிறந்தவர்களை எல்லாம் மாமா என்றும் அழைப்பார்கள் அவர்கள் மனைவி அக்கா. எங்களையும் அக்கா, மாமா என்று அழைப்பார்கள்.

எங்கள் வீட்டு விழாக்கள் எல்லாவற்றிலும் கலந்து கொள்வார்கள்.


அன்னையர் தினத்திற்கு என் மகன் அனுப்பிய கேக் , மற்றும் பழங்கள்-
கேக் வெட்டும் நிகழ்ச்சிக்கு  வந்த தொட்டம்மாவும், தொட்டப்பாவும்  .

பக்கத்து வீட்டில் உள்ளவர்கள் மூன்று தலைமுறை தாண்டியும் நட்பு தொடர்வது இறைவன் கொடுத்த வரம். என் மாமாவின் இறப்புக்குப் பின் என் மாமியாரை நன்கு பார்த்து கொண்டார்கள். தினம் காலை, மாலை வந்து பேசிக் கொண்டு இருப்பார்கள் அந்த அக்கா.  மாலை இருவரும் பக்கத்தில் இருக்கும் பிள்ளையார் கோவிலுக்குப் போய்வருவார்கள். கையைப் பிடித்து அழைத்துச் செல்வார்கள் அக்கா.

தொட்டப்பா கடைக்குப் போகும் போது ஏதாவது வேண்டுமா என்று கேட்டு போவார்கள். அத்தை ஏதாவது சொன்னால் வாங்கிக் கொடுப்பார்கள்.
அத்தை மேல் மிகவும் பாசமும், நேசமும் வைத்து இருந்தார்கள். அவர்கள் வீட்டுத் திருமணத்திற்கு  எங்கள் குடும்பத்தினர் அனைவருக்கும் புது உடைகள் உண்டு. அது போல் நம் வீட்டுத்திருமணங்களுக்கும் அவர்களுக்கும்.

இப்படி அன்பைக் கொடுத்து அன்பைப் பெற்று மகிழ்ந்து இருந்தோம்.

அவர்கள் நினைவு என்றும் நீங்கா நினைவுகளாய் நெஞ்சில்  இருக்கும்.

========================================================================
பழகிப்  பிரிவது மிகவும் கொடுமை.


மாயவரத்தில் எனக்கு உடற்பயிற்சி, தியானம் கற்றுக் கொடுத்த ஆசிரியர், பின் எங்களின் குடும்ப நண்பராக ஆகி விட்டார். அவர் பிப்ரவரி 11.2. 2020 அன்று இறைவனடி சேர்ந்துவிட்டார்கள்

மாயவரம் மனவளக்கலை மன்றத்தின்  பொறுப்பு ஆசிரியர் ஆக இருந்து எனக்கு ஊக்கமும், உற்சாகமும் கொடுத்து என்னையும்  ஆழியார் ஆசிரியப்பயிற்சி எடுக்கவைத்து   மன்றத்தில் தொண்டுகள் செய்ய வைத்தவர்.

வீட்டின் அருகில் மன்றம் இருந்ததால் காலை மன்றத்தைத் திறந்து வரும் அன்பர்களுக்கு உடற்பயிற்சி சொல்லிக் கொடுப்பேன்.  அதைப் பாராட்டி அடிக்கடி அவர்கள் நல்ல புத்தகங்களைப் பரிசாகக் கொடுத்து ஊக்கப்படுத்துவார்கள். மன்றத்தில் சிறப்பு நிகழ்ச்சிகள் நடக்கும்போது இறைவணக்கம் பாடவைத்தும் அனுபவ உரை பேச வைத்தும் மகிழ்வார்.


வியாழன், செவ்வாய், ஞாயிறுகளில் சுற்று முறையில் எங்களுக்குத் தவம் நடத்தவும், சிந்தனை விருந்து அளிக்கவும் வாய்ப்புக் கொடுப்பார்கள்.  அதற்கு அட்டவணை போட்டு வைத்து இருப்பார்கள் இந்த வாரம் நீங்கள் அடுத்தவாரம் வேறு ஒருவர் என்று.

உள்ளுர்ப்  பள்ளி, கல்லூரி, மகளிர்மன்றங்களுக்கு அழைத்துச் சென்று அங்கு எல்லோருக்கும்  உடற்பயிற்சி, காயகல்பப் பயிற்சி கற்றுக்கொடுக்க வைத்தவர்கள்.

புதிதாக மன்றம் மாயவரத்தில் திறந்தால் அங்கு ஏதாவது ஒரு நாள், தவம் நடத்த சிந்தனை விருந்து அளிக்கப் போகச் சொல்வார்கள். மறக்காமல் உங்கள் அனுபவத்தைச் சொல்லுங்கள் கோமதி! மற்றவர்களுக்குப் பயன்உள்ளதாக இருக்கும்  என்பார்கள்.

நான் அடுக்குத் தும்மலில் (ஒவ்வாமை) எந்த ஒரு வாசமும் நல்ல வாசம், கெட்ட வாசம் எல்லாவற்றிற்கும் தும்முவேன். பிராணாயாமம் பழக நினைத்து இருந்தேன் .

 என் உறவினர் ஒருவர்  உலகசமுதாய சேவா சங்கம் என்று ஒன்று இருக்கிறது, மனவளக்கலை கற்றுத் தரப்படுகிறது, அதில் உடற்பயிற்சி, தியானம், அகத்தாய்வு  எல்லாம் சொல்லித் தருகிறார்கள். நீ அதில் சொல்லித்தரப்படும் கபாலபதி கற்றுக் கொண்டால்  இந்த தும்மல் தொந்திரவு இருக்காது.
முற்றிலும் குண்மாகி விடும். நீ கற்றுக் கொள்ள விரும்பும் மூச்சுப் பயிற்சி மாதிரிதான்  என்றார்கள்.  என்னை மன்றத்திற்கு அழைத்துப் போனார்கள்.
கபாலபதிப் பயிற்சியால் தும்மல் தொந்திரவு முற்றிலும் நீங்கியது, ஒற்றைத்தலைவலியும் இல்லை. இப்படி உடற்பயிற்சியால் பெற்ற நன்மைகளை அனுபவ உரையாகச் சொல்வேன்.

வியாழன், செவ்வாய் ஆகிய நாட்களில் மகளிருக்கும், ஞாயிறு ஆண்கள், மற்றும் பெண்களுக்கும் நடைபெறும் .


பொறுப்பாசிரியர் பயிற்சிக்கு என்னுடன் ஆழியார் வந்தார். அப்படியே கோவையில் என் மாமியார் வீட்டுக்கு அழைத்துச் சென்றேன். அப்படியே என் ஓர்ப்படி, என் அத்தையிடம் நன்றாகப் பழகி விட்டார்கள். அத்தை மாயவரம் வந்தால் அவர்களைப் பார்க்க வந்து விடுவார்கள்.

திருமணமே செய்து கொள்ளாமல் தவ வாழ்க்கை வாழ்ந்தவர். அர்ப்பணிப்பு உணர்வுடன் மன்றத்தில் தொண்டுகள் செய்தவர்.

 என் வீட்டு விழாக்கள் , நல்லது, கெட்டதுக்கு அவர் வருகை  உண்டு. வேறு எங்கும் போக மாட்டார் . "கோமதி! வாழ்க வளமுடன்!" என்று அவர் போனில் அழைப்பது இன்னும் காதில் ஒலிக்குது.

 மாயவரத்திலிருந்து மதுரை ஆஸ்பத்திரிக்கு வந்து அவர் நோய்க்கு மருத்துவம் பார்த்துக் கொண்டார். நான் போன மாதம் அவரைப் பார்த்து வந்தேன். இந்த மாதம் 11ம் தேதி இறைவன் அழைத்துக் கொண்டார். அவ்வளவு நன்மைகள் செய்த அவருக்கு இப்படி ஒரு கொடுமையான(புற்று நோய் தொண்டையில்) வலியைக் கொடுக்கும் நோய் வரும் என்று யாரும் எதிர்பார்க்கவில்லை. நான் போய்ப் பார்த்த போது அவர்கள் சொன்னது இந்த வலியிலிருந்து எனக்கு விடுதலை கிடைக்க வேண்டும் என்பது.

இறைவன் அவர்களுக்கு வலியிலிருந்து விடுதலை கொடுத்து விட்டார்.

அவர்கள் பெயர் சுசீலா. சுசீலாவுடன் பள்ளிகள், கல்லூரிகளுக்குப்  போய்த் தியானம், உடற்பயிற்சி சொல்லிக் கொடுத்த காலங்களை மறக்கமுடியவில்லை.

கடைசியாக சந்திக்கும் போது  அவர்கள் சொன்னது , கேட்டது :-


"'சார் மிகவும் மெலிந்து இருக்கிறார்கள் , சாரை நன்றாகக் கவனித்து கொள்ளுங்கள். நீங்கள் விடாது செய்கிறீர்களா? தியானம், உடற்பயிற்சிகளை. மதுரையில் மன்றத்துக்குப் போகிறீர்களா?'' என்று.
 சில பல காரணங்களால் உடற்பயிற்சி, தியானத்தை விட்டு இருந்தேன் , மீண்டும் அவர்கள் நினைவாய்  செய்ய ஆரம்பித்து இருக்கிறேன்.

குரு இல்லையா! குருவின் வார்த்தைக்கு மதிப்புக் கொடுக்க வேண்டும்.
அவரிடம் கற்று கொண்டு மன்றத்துக்கு வரும் அன்பர்கள் எல்லாம்  அலைபேசியில் பேசிக்கொண்டோம் அவர் நினைவுகளை. அவர் எங்கள் எல்லோர் நினைவுகளிலும் இருப்பார்.
------------------------------------------------------------------------------------------------------------------------

எனது பெரியப்பா பையன் 7ம் தேதி, இறைவனடி சேர்ந்தான் அவனும் அனைவரிடமும் மிகவும் பிரியமாக இருப்பான். பெரியப்பா, அத்தை, சித்தப்பா பிள்ளைகளிடம் பிரியமாக இருப்பான். எல்லோர் வீட்டு  நல்லது, கெட்டதற்கு வருவான்.  (சகோதர, சகோதரிகளை இணைக்கும் பாலமாக இருந்தான்.)

எந்த நோயும் இல்லாமல் ஆரோக்கியமாய் இருந்தவன்.  மண்டையில் எப்போதோ அடிப்பட்டதனால் இரத்தம் உறைந்து இருந்து இருக்கிறது.
அதுவே இப்போது எமனாக ஆகி விட்டது.

அவனின் திடீர் மரணம்  மனதைக் கஷ்டபடுத்திக்கொண்டு இருக்கிறது. 'அக்கா! காரமடைக்கு வாங்க வாங்க!" என்று அழைத்துக் கொண்டு இருந்தான் . அவன் இருக்கும்போது போக முடியாமல் அவன் இறைவன் கிட்டே சென்றபின் அவன் வீட்டுக்குப் போகும்படி ஆகிவிட்டது. அவன் இருக்கும் போது போகச் சந்தர்ப்பம் அமையவில்லை அது வேதனை தருகிறது.

உறவுகள் எல்லாம் திருமணம்  , மற்றும் இழப்புகளில் தான்  சந்தித்து கொள்ள முடியும் காலமாக மாறி வருகிறது. ஆளுக்கு ஒரு பக்கம் இருக்கிறோம்.

உறவு வரும் பிரிவு வரும் உலகம் ஒன்றுதான்  என்ற  தத்துவப்பாடலை நினைக்கச் சொல்லுது மனது.


இறை நிழலில் ஒய்வு கொள்கிறார்கள் அவர்கள்.

========================================================================

40 கருத்துகள்:

 1. மனம் வருத்தமாக இருக்கிறது சகோ
  எத்தனை உறவுகளை இந்த வருடத்தின் தொடக்கத்திலேயே இழந்து இருக்கின்றீர்கள்.

  அனைவரது ஆன்மாவும் இறைவனிடத்தில் அமைதி பெறட்டும்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வணக்கம் தேவகோட்டை ஜி, வாழ்க வளமுடன்
   அன்பான உறவுகளை ஒரே சமயத்தில் இழந்தது மிகவும் வருத்தம் தான்.
   உங்கள் பிரார்த்தனைக்கு நன்றி.

   நீக்கு
 2. தங்களது மனம் எவ்வளவு துன்பம் அடைந்திருக்கிறது என்பதனைப் பதிவின் வழி உணரமுடிகின்றது...

  இந்த விஷயத்தில் நம்மால் ஆவதென்பதேது...

  இறைநிழலில் அந்த ஆத்மாக்கள் இன்புற்றிருக்கட்டும்...

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வணக்கம் சகோ துரை செல்வராஜூ , வாழ்க வளமுடன்
   நீங்கள் சொல்வது சரிதான்,நம்மால் ஆவதென்பது ஒன்றும் இல்லைதான்.
   இறைவனின் விருப்பபடிதான் எல்லாம் நடக்கிறது.

   உங்கள் பிரார்த்தனைக்கு நன்றி.

   நீக்கு
 3. வணக்கம் சகோதரி

  தங்கள் பதிவு மனதில் வலிகளை ஏற்படுத்தியது. பழகியவர்களை தாங்கள் நினைவு கூர்ந்து அவர்களின் நிரந்தர பிரிவுக்கு வருத்தப்படுவது என் மனதை நெகிழச் செய்கிறது.

  மரணம் ஒவ்வொரு மனிதருக்கும் நிழல் போன்றது.எப்போது அது நிஜத்துடன் ஒன்று சேரும் என்பதை யாரறிவார்? இருந்தும் என் மனகாயங்களும் இன்னமும் ஆறிய பாடில்லை. இப்படி வலைதளங்களுக்கு வந்து போவது சற்று மன மாற்றங்களை தருகிறது. உங்களுக்கும் இத்தகைய பதிவுகள் இடுவது ஒருவித வேதனைகளை போக்கும் என நினைக்கிறேன். அவ்விதமே தங்களின் மன கவலைகள் நீங்க வேண்டுமெனவும் இறைவனை பிரார்த்திக்கிறேன்

  சென்ற வருடத்தில் எங்கள் உறவுகளும், ஒவ்வொருவராக இப்படி பிரிந்தது எங்கள் மன நிம்மதியை சோதித்து பாரங்களை மேலும்,மேலும் ஏற்றியபடி இருந்து வந்தது. என்ன செய்வது? கடவுள் இந்த விஷயத்தில், புதிருக்கு விடை காணாத மாயையை அல்லவா தான் படைத்த மக்களுக்குள் தோற்றுவித்திருக்கிறார்..!

  தங்கள் குடும்ப நண்பர்கள். உறவில் (ஒன்று விட்ட சகோதரர்) பிரிந்தது மிகவும் வருத்தமான விஷயம். அவர்களுக்கு ஆழ்ந்த இரங்கல்கள். அவர்களை இழந்து வாடும் அவர்களது குடும்பத்து உறவுகளுக்கும், பாசமுடன் அவர்களுடன் பழகிய உங்களுக்கும், அவர்களது இழப்பை தாங்கும் மன வலிமையை இறைவன் தர வேண்டுமென பிரார்த்தித்துக் கொள்கிறேன்.

  அன்புடன்
  கமலா ஹரிஹரன்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வணக்கம் கமலா ஹரிஹரன், வாழ்க வளமுடன்
   உங்கள் மனகாயங்கள்ஆற காலங்கள் ஆகலாம். பெரிய இழப்பு அல்லவா?
   உறவினர்களும் அடுத்து அடுத்து பிரிந்தது வேதனைதான்.
   இறைவனின் கணக்கு என்னவென்று யாருக்கு தெரியும்.

   நீங்கள் சொல்வது போல் நம் வருத்தங்கள், மகிழ்ச்சிகள் எல்லாவற்றையும் பகிர்ந்து கொள்கிறோம் இங்கு. மனதில் நிறைந்தவர்கள் தற்காலிக பிரிவே வேதனை அளிக்கும், நிரந்தரபிரிவு மேலும் வேதனை அளிக்கும்.


   உங்களின் பிரார்த்தனைகளுக்கு நன்றி.மனவலிமையை இறைவன் தர வேண்டும் என்பதே என் பிரார்த்தனையும்.

   அவர் ஆட்டி வைக்கிறார் நாம் ஆடுகிறோம் உண்டு பண்ணி வைக்கிறார், கொண்டு கொண்டு போகிறார். இந்த மூவருக்கும் அவர்கள் வலிகள், வேதனையிலிருந்து இறைவன் விடுதலை அளித்தார் என்றுதான் சொல்லவேண்டும்.
   உங்கள் ஆறுதலான வார்த்தைகளுக்கும், பிரார்த்தனைகளுக்கும் நன்றி கமலா.

   நீக்கு
 4. உலகை விட்டுச் சென்ற ஆத்மாக்கள் சாந்தி அடையட்டும். அடுத்தடுத்த இழப்புகளைத் தாங்குவது கடினமே. இழப்புகளைத் தாங்கும் வல்லமையை ஆண்டவன்தான் அளிக்க வேண்டும்.

  தமிழ்மணத்துக்கு மாற்றாக வலைத்திரட்டியை உருவாக்கும் புதிய முயற்சி. உருவாகியது புதிய இணையத்தளம்: வலை ஓலை .
  இதேநேரம் நமது, வலை ஓலை இணையத்தளத்தில் பரீட்சார்த்தமாக ஏழு வலைத்தளங்கள் இணைக்கப்பட்டுள்ளன. அத்துடன் தங்களது நினைவில் நிறைந்தவர்கள் பதிவும் எமது தளத்தில் இணைக்கப்பட்டுள்ளது. அத்துடன், அடுத்த மாதம் முதல் தமிழ்மணம் போல தனிப்பதிவுகளாக அனைத்து வலைத்தளங்களையும் இணைக்கவும் நடவடிக்கை எடுத்துள்ளோம். உங்கள் மேலான ஆதரவை வழங்க கேட்டுக் கொள்கிறேன்.

  உங்கள் வலைப்பதிவை அறிமுகப்படுத்த ஒரு சந்தர்ப்பம். விபரம் இங்கே: நீங்களும் எழுதலாம்

  எமது வலைப் பட்டியலில் இணைக்கப்பட்டுள்ள வலைத்தளங்களின் வலைப்பட்டியலைக் காண: வலைப் பட்டியல்

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வணக்கம் சிகரம் பாரதி, வாழ்க வளமுடன்

   உங்கள் ஆறுதல் வார்த்தைகள் மனதுக்கு அமைதியை தருகிறது.
   உங்கள் கருத்துக்கும், பிரார்த்தனைக்கும் நன்றி.

   நீக்கு
 5. மனதை வருத்தப்படுத்தும் மாதமாக இந்த பிப்ரவரி அமைந்துவிட்டது போல...   அடுத்தடுத்தஇழப்புகளைக் கேட்டு மிகவும் வருத்தமாக இருக்கிறது. மனதைத் தேற்றிக்கொள்ளுங்கள்.  நீங்கள் சொல்லி இருக்கும் இரவும் பகலும் பாடலின் பொருத்தமான வரிகளையே நானும் சொல்கிறேன்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வணக்கம் ஸ்ரீராம், வாழ்க வளமுடன்
   இந்த மாதம் மகிழ்வுகள் வந்தாலும் இந்த இழப்பின் வருத்தங்கள் அதை அடித்து சென்றன.
   கவலை ஒழித்தல் படித்தாலும் சில கவலைகள் வந்து சூழ்ந்து கொள்கிறது. மீண்டு வர பார்க்கிறேன். இரவு வரும், பகலும் வரும் என்பது இயற்கையின் நியதியை அறிந்து அமைதி அடைய வேண்டும் தான்.

   நீக்கு
 6. அவர் இருக்கும்வரை அவர் அழைத்தும் அவர் இல்லத்துக்குப் போகமுடியாமல் இருந்து, அவர் மறைந்த பின் அங்கு செல்லும் வேதனை... 

  இவளவு நல்ல ஆத்மாவுக்கு இவ்வளவுகோடிய நோயை வழங்கிய ஆண்டவனை என்னவென்று சொல்ல...

  ஊரில் பின்வீட்டுக்காரர் மறைவு...    தஞ்சையில் என்னுடைய பள்ளித் தோழனாயிருந்தவனுக்கு நேற்று நான் வீடுமாறிய விவரம் சொன்னபோது அவன் அப்பா அம்மாவுக்கு என் நமஸ்காரத்தைச் சொன்னேன்.  அப்போதுதான் அவன் தன் தந்தை மறைந்த செய்தியைச் சொன்னான்.  என்னிடமெல்லாம் மிக அன்பாய்ப் பேசுவார்.  அவர் மறைவு எனக்கு வருத்தத்தைத் தந்தது. அவரும் கன்னடம் பேசும் குடும்பத்தைச் சேர்ந்தவர்.  அப்போது அவர்கள் தஞ்சை ஹவுசிங் யூனிட்டில் எங்கள் வீட்டுக்குப் பின்னால் குடியிருந்தார்கள்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. கோவை பக்கம் காரமடை அதனால் எங்கள் வீட்டு நல்லது, கெட்டதுகளுக்கு தம்பி உடனே வந்து விடுவான். வரும் சமயங்களில் எல்லாம் அவன் வீட்டுக்கு அழைப்பான். உன்னைதான் இங்கு பார்த்து விட்டோமே இன்னொரு சமயம் வருகிறோம் என்று சொல்வோம். அதுதான் வருத்தமாய் இருக்கிறது. (முன்பு, மதுரை, கோவில்பட்டி என்று வேறு ஊர்களில் இருந்தான்.)

   யாருக்கு இந்த கொடிய நோய் வரக்கூடாது ஸ்ரீராம். அவர்கள் சீக்கிரம் வலியிலிருந்து விடைபெற்று விட்டார்கள். அவர்கள் செய்த தவங்களால் , தொண்டால் என்று நினைக்கிறேன். நோய் கண்டுபிடிக்கப்பட்டு சிகிட்சை ஆரம்பித்து ஒரு வருடம் இருக்கும்.

   அந்தக்கால நட்புகள் மிகவும் ஆழமானதுதான். மதம், மொழி எல்லாம் பொருட்படுத்தாமல் நேசம் காட்டியவர்கள் நிறைய இருக்கிறார்கள்.
   உங்கள் நண்பரின் தந்தை இறந்தது வருத்தம் தரும் தான். பழைய நினைவுகள் வந்து சென்று இருக்கும்.

   உங்கள் ஆறுதலான சொற்கள் மனதை அமைதி படுத்துகிறது.
   நன்றி ஸ்ரீராம்.
   நீக்கு
 7. பதில்கள்
  1. வணக்கம் சகோ கரந்தை ஜெயக்குமார், வாழ்க வளமுடன்
   என்ன செய்வது பிரிவு மிகவும் வேதனைதான்.
   ஆறுதல் வார்த்தைக்கு நன்றி.

   நீக்கு
 8. வருத்தமாக உள்ளது... மனதை சாந்தப்படுத்திக் கொள்ளுங்கள் அம்மா...

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வணக்கம் திண்டுக்கல் தனபாலன், வாழ்க வளமுடன்
   மனதை சாந்தப்படுத்திக் கொண்டு இருக்கிறேன்.
   நினைவுகள் மனதை சங்கடப்படுத்திக் கொண்டே இருக்கிறது. புலம்பி விட்டால் கொஞ்சம் சாந்தம் அடையும்.
   ஆறுதலுக்கு நன்றி.

   நீக்கு
 9. வாசிக்க வருத்தமாக இருக்கு அக்கா.பிரிவென்பது மிகவும் தாங்கமுடியாததொன்று. அதுவும் அடுத்தடுத்து இழப்பு என்றால் மிகவும் கஷ்டம். நன்றாக நட்புடன் பழகியவர்கள, உறவுகள் எனும்போது மனக்கஷ்டம் அதிகம். என்னசெய்வது அக்கா மனதைதேற்றிக்கொள்ளுங்கள். உங்கள் உடம்பையும் பார்த்துக்கொள்ளுங்கள். நாட்கள் செல்ல மனக்கஷ்டம் மாறும். மனதை தேற்றிக்கொள்ளுங்கள்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வணக்கம் பிரியசகி, வாழ்க வளமுடன்
   அத்தை இறந்தபின் அத்தை வீட்டில் யாரும் இல்லை. அதுவே அத்தை பின் வீட்டில் உள்ளவர்களுக்கு வருத்தம் அதிகமாகிவிட்டது. சொந்த ஊருக்கு போக திட்டமிட்டு இருந்தார்கள். அதற்குள் தொட்டப்பா இறந்து விட்டதால் அக்காமட்டும் தனியாக ஊருக்கு போக வேண்டும் என்று அழுத போது மனது மிகவும் வேதனை அடைந்து விட்டது.

   என் ஆசிரியர், மற்றும் தம்பியும் அன்பை, பாசத்தை எல்லோருக்கும் வாரி வழங்கியவர்கள்.

   காலம் அவர்கள் பிரிவை சரி செய்யும்.
   தூக்கம் வரவே இல்லை நேற்று இந்த பதிவு போட்டதும் அவர்கள் நினைவுகள் சுற்றி சுற்றி வந்தது.

   இன்று காலை கவினோடு விளையாடி மனக்கஷ்டத்தை மறந்தேன்.
   உடம்பைப் பார்த்துக் கொள்கிறேன்.

   உங்கள் அன்பான ஆறுதலுக்கு நன்றி அம்மு.

   நீக்கு
 10. அன்புடன் நெருங்கிப் பழகியவர்களின் பிரிவு நம்மால் தாங்கவே முடியாததுதான். அதனை அருமையாகச் சொல்கிறது, இந்தத்தங்களின் பதிவு. பகிர்வுக்கு நன்றிகள்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வணக்கம் வை. கோபாலகிருஷ்ணன் சார், வாழ்க வளமுடன்

   ஆமாம் சார், நீங்கள் சொல்வது சரி.
   அன்புடன் நெருங்கிப் பழகியவர்களின் பிரிவு மனதுக்கு மிகவும் வேதனை தரும் .

   உங்கள் ஆறுதலான கருத்துக்கு நன்றி.

   நீக்கு
 11. அடுத்தடுத்து பிரியாமனவர்களின் இழப்புக்களைத்தாங்கி துயரமுற்றிருக்கும் உங்களுக்கு எப்படி ஆறுதலைச்சொல்வதென்று தெரியவில்லை. வலிக்கத்தான் செய்யும். அந்த துயரங்களிலிருந்து மீண்டு வாருங்கள் கோமதி! புத்தகங்கள், பிரியமானவர்களுடன் சந்திப்புகள் என்று மனத்துயரத்தை மாற்ற முயற்சி செய்யுங்கள்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வணக்கம் மனோ சாமிநாதன், வாழ்க வளமுடன்
   நீங்கள் சொல்வது சரிதான், துயரத்தை போக்க இறை நாமங்கள், வலைத்தளத்தில் அன்பர்கள் தளங்களுக்கு சென்று படித்தல் என்று இருக்கிறேன்.

   உங்கள் ஆறுதலான வார்த்தைகள் சாந்தியை தருகிறது நன்றி.
   இன்று இந்த ஊரில் இருக்கும் என் தம்பி வந்தான், அவனிடம் பேசியதில் மனது ஆறுதல் அடைந்தது.

   நீக்கு
 12. அடுத்தடுத்த இழப்புக்களைத் தாங்கும் மனவலிமை உங்கள் இருவருக்கும் அந்த ஆண்டவன் அருளப் பிரார்த்திக்கிறேன். வார்த்தைகளில் ஆறுதல் சொல்ல முடியாது. காலம் உங்கள் மனப்புண்ணை ஆற்றட்டும்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வணக்கம் கீதா சாம்பசிவம், வாழ்க வளமுடன்
   உங்கள் பிரார்த்தனைக்கும், ஆறுதலான வார்த்தைகளுக்கும் நன்றி.

   நீக்கு
 13. அடுத்தடுத்து இழப்புகள். பிறந்தவர்கள் ஒரு நாள் இறக்கத்தான் வேண்டும் என்று சொன்னாலும் இந்த இழப்புகளை நம்மால் தாங்க முடிவதில்லை.

  காலம் உங்களுக்கு நல்ல மருந்தினைத் தரட்டும்.

  எனது பிரார்த்தனைகள்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வணக்கம் வெங்கட் நாகராஜ், வாழ்க வளமுடன்
   ஆமாம் வெங்கட், பிறந்தவர்கள் ஒரு நாள் இறக்கத்தான் வேண்டும்.
   ஒரே சமயத்தில் அவர்கள் போனது வருத்தம்.
   காலம் மன வருத்தங்களை ஆற்றும் மருந்துதான்.
   உங்கள் பிரார்த்தனைகளுக்கு நன்றி.

   நீக்கு
 14. அன்பு கோமதி,
  ஒரு மாதத்தில் இத்தனை பிரிவுகளா.
  எல்லோருமே அருமையான உறவுகளும்,நட்புகளும்.
  அதுவும் குரு, நட்பு,உறவு என்று இழந்திருக்கிறீர்கள்.
  மிக மிக வருத்தமாக இருக்கிறது அம்மா.
  மகனும்,குடும்பமும் வந்திருக்கிறார்களா.
  நல்ல வேளையில் தான் வந்திருக்கிறார்கள்.

  என் பிரார்த்தனைகளில் உங்களைச் சேர்த்துக் கொள்கிறேன்.
  மனம அமைதி கொஞ்சம் கொஞ்சமாக
  அடையட்டும். மறக்க முடியாத துன்பம் தான். என்னதான் செய்வது.
  வாழ்க வளமுடன் மா.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வணக்கம் வல்லி அக்கா, வாழ்க வளமுடன்
   ஒரு மாதத்தில் இத்த்னை பிரிவு என்றாதால்தான் மிகுந்த வேதனை.
   எல்லோரும் மிக அருமையான உறவுகள்., நட்புகள்தான் அக்கா.
   மகன் வரவில்லை அக்கா.
   ஸ்கைப்பில் பேரனுடன் நேற்று பேசி விளையாடினேன் , அது ஆறுதல் அளித்தது.

   உங்கள் பிரார்த்தனைகளில் எனக்கும் சேர்த்து கொள்வது மிகுந்த மகிழ்ச்சியை தருகிறது.

   மனம் அமைதி அடைந்து வருகிறது. தியானம், இறைவழிபாடு என்று அமைதி அடைந்து வருகிறது மனம்.

   உங்கள் ஆறுதலான அன்பான வார்த்தைகளுக்கும், பிரார்த்தனைகளுக்கும் நன்றி அக்கா.

   நீக்கு
 15. ஓ கோமதி அக்கா, படிக்க மனம் கனக்கிறது... இதைத் தொடர்ந்து எத்தனையோ நினைவலைகள் என்னுள் வந்து முட்டி மோதுகின்றன.
  இப்போ இந்தக்கிழமை, எங்கள் ஒன்றுவிட்ட பெரியம்மாவின் மகளின் கணவர், ரக்ஸி யில் தட்டுப்பட்டுப் போய் விட்டார்:(...

  கேள்விப்படுவதெல்லாம் மனதுக்கு வேதனையாவே இருக்குது. இந்த வருடம் பிறந்ததிலிருந்து... இப்படியான செய்திகளே அதிகம் வருகின்றன....

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வணக்கம் அதிரா, வாழ்க வளமுடன்
   உங்களுக்கும் உறவின் பிரிவா? அவர்கள் குடும்பத்திற்கு மனசாந்தியை இறைவன் அருள வேண்டும்.
   நினைவலைகள் வந்து தான் கஷ்டபடுத்துகிறது. அவர்களுடன் பழகிய காலங்கள் மறக்கமுடியாத காலங்கள்.

   கேள்விப்படுவதெல்லாம் மனதுக்கு வேதனையாக தான் இருக்கிறது. எங்கும் அமைதியும்
   நிம்மதியும் ஏற்பட பிரார்த்தனை செய்வோம். வேறு என்ன செய்வது அது மட்டுமே நம்மால் முடியும்.

   உங்கள் ஆறுதல் மொழிகளுக்கு நன்றி.

   நீக்கு
 16. மூன்று தலைமுறை நட்பு... ஆச்சர்யம்.

  இந்த மாதம் மூன்று இறப்புகளா? உங்கள் வருத்தத்தில் பங்கேற்கிறேன்

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வணக்கம் நெல்லைத்தமிழன், வாழ்க வளமுடன்.
   ஆமாம், மூன்று தலைமுறை நட்புதான். எங்கள் மாமனார், நாங்கள், எங்கள் குழந்தைகள் என்று தொடரும் நட்பு.
   உண்மையான எந்த எதிர்ப்பார்ப்பும் இல்லாமல் பழகிய நட்பு.

   எங்கள் வருத்தத்தில் நீங்களும் பங்கேற்பதற்கு நன்றி.

   கண்ணன் விளையாடிய, வாழ்ந்த இடங்களை கண்டு களித்து கொண்டு இருப்பீர்கள்.
   எல்லோருக்கும் மன அமைதியும், மகிழ்ச்சியும் கிடைக்க வேண்டிக் கொள்ளுங்கள்.

   பயணத்தில் இருக்கும் போதும் வந்து எனக்கு ஆறுதல் சொன்னதற்கு நன்றி .

   நீக்கு
 17. ஒரே மாதத்தில் அடுத்தடுத்து உறவிலும், நட்பிலும் இழப்புகளை சந்தித்திருக்கிறீர்கள். இவைகளை தாங்கிக் கொள்ளும் சக்தியை இறைவன் உங்களுக்குத் தரட்டும். 

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வணக்கம் பானுமதி வெங்கடேஷ்வரன், வாழ்க வளமுடன்
   ஆமாம் பானு. ஒரே மாதத்தில் , இவர்களின் இழப்பு மிகவும் பாதித்து விட்டது.
   உங்கள் பிரார்த்தனைக்கு நன்றி.

   நீக்கு
 18. //குரு இல்லையா! குருவின் வார்த்தைக்கு மதிப்புக் கொடுக்க வேண்டும்.// இதே உறுதியோடு தொடர்ந்து செய்யுங்கள். 

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. இதே உறுதி தொடர்ந்து இருக்க வேண்டும் என்று அவர்களைத்தான் வேண்டிக் கொண்டு இருக்கிறேன். இரவு தூக்கம் இல்லாமல் காலை எழுந்து செய்ய கஷ்டமாக இருந்தது ஆனாலும் மன உறுதியுடன் செய்து விட்டேன். இறையருளால் இப்படியே தொடர்ந்து செய்ய மன உறுதி வேண்டும்.
   உங்கள் அன்பான வேன்டுகோளுக்கு நன்றி.

   நீக்கு
 19. அடுக்கடுக்காக உறவுகளையும் நண்பர்களையும் இழப்பது மிகுந்த கவலைகொள்ள வைக்கும்.என்ன செய்வது இதுவும் கடந்து செல்லும் என ஆறுதல் கொள்வோம்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வணக்கம் மாதேவி, வாழ்க வளமுடன்
   ஆமாம், இதுவும் கடந்து போகும்தான்.
   ஆறுதல் அடைந்து கொள்ள வேண்டியதுதான்.
   உங்கள் ஆறுதலான கருத்துக்கு நன்றி.

   நீக்கு
 20. வருத்தம் அளிக்கும் செய்திகள். மூன்று தலைமுறை தாண்டி தொடரும் நட்பு அபூர்வமே. மீண்டும் உடற்பயிற்சி - தியானத்தை ஆரம்பித்தது குருவுக்கு நீங்கள் செலுத்தும் அஞ்சலியாகவே அமையும். நேசித்துக்குரியவர்களின் நிரந்தரப் பிரிவு தரும் வேதனையை காலம்தான் ஆற்ற வேண்டும். அவர்களது ஆன்ம சாந்திக்குப் பிரார்த்தனைகள்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வணக்கம் ராமலக்ஷ்மி, வாழ்க வளமுடன்
   மூன்று தலைமுறை தாண்டிய நட்பு அவர்களின் நினைவுகள் எப்போதும் நெஞ்சில்.
   உடற்பயிற்சியை -தியானத்தை ஆரம்பித்து விட்டேன், ஆனால் மன்றம் போக முடியவில்லை. எங்கள் வீட்டிலிருந்து மன்றம் வெகு தூரம், பக்கத்தில் ஏதாவது இருக்குமா என்று பார்க்க வேண்டும்.
   உங்கள் கருத்துக்கும், பிரார்த்தனைகளுக்கும் நன்றி.

   நீக்கு