ஞாயிறு, 18 ஆகஸ்ட், 2019

லாடன் கோயில் - ஆனைமலை

யானை மலை மேல் பார்த்து விட்டு மலை அடிவாரத்தில்   நரசிம்மர் கோவில் அருகில் உள்ள 'லாடன் கோவில்' என்று அழைக்கப்படும் குடைவரை முருகன் கோவில் போனோம். அது அடுத்த பதிவில். என்று சொல்லி இருந்தேன்.



  //படங்களும் அருமையா இருக்கு. சிற்பங்களை இன்னும் பக்கத்திலிருந்து போட்டோ எடுத்திருக்கலாம்.// இப்படிக் கேட்டு இருந்தார்,நெல்லைத் தமிழன்,போன பதிவில்.  அதற்காகப்  பக்கத்தில் எடுத்த சில படங்களை  இங்கே போட்டிருக்கிறேன். பக்கத்தில் எடுத்தாலும் இவ்வளவுதான் தெரிந்தது. 






லாடன் கோவில் நோக்கிப் பயணம்
ஆனமலை நரசிம்மர் கோவில்

தாயார் சன்னதியின் தங்க விமானம்
நரசிம்மர் கோவில்  வலது பக்கம் போனால்  லாடன் கோவில் வரும்

கி.பி எட்டாம் நூற்றாண்டில்  முருகனுக்காக அமைக்கப்பட்ட குடவரைக்கோவில்
குடைவரைக் கோவில்
இருபக்கமும் துவாரபாலகர்கள் போல. மேலே உள்ள சிலைக்கு ஆடை அமைப்பு முடிவடையவில்லை
கீழே உள்ள சிலைக்கு  ஆடை முடிவடைந்து இருக்கிறது
இந்தச் சிலை போலவே எதிர்ப்பக்கத்தில் வடிக்க முற்பட்டு இருக்கிறார்கள்; முடிவடைய இல்லை

முருகன் தெய்வானை சந்நிதிக்கு வெளியே ஒரு பக்கம் மயில்  , இன்னொரு பக்கம் சேவல்
முருகன் தெய்வானை -இந்த சிலைகளும் முடிவடையாத மாதிரிதான் இருக்கிறது. ஒரு கால் மடித்து மற்றொரு கால் தொங்கவிட்ட அமைப்பு
தொல்லியல் துறை கதவு எல்லாம் போட்டுப் பாதுகாக்கிறார்கள்.

இந்தக் கோவில் பற்றி விவரங்கள்  'மதுர வரலாறு'  புத்தகத்திலிருந்து :-

//இந்த கோவில் முற்பாண்டியர் கலைப்பாணியில் மலையைக் குடைந்து வெட்டப்பட்டுள்ளது. சிறிய கருவறையில்  முருகன் தெய்வானையுடன்  அமர்ந்து இருக்கிறார். முன் சுவற்றில் "புல்லாரி வட்டக்குறிச்சி நம்பிரான் பட்ட சோமாஜி பரிவிராஜகர் புதுக்கு" என்ற வட்டெழுத்துக் கல்வெட்டு காணப்படுகிறது.  தெளிவில்லாமல் உள்ள இக் கல்வெட்டின் எழுத்தமைதியைக் கொண்டு கி.பி ஒன்பதாம் நூற்றாண்டின் தொடக்கத்தைச் சேர்ந்தது எனலாம்.  ஏற்கனவே தொடங்கப்பட்ட பணியை வட்டக்குறிச்சி நம்பிரான் நிறைவு செய்து இருக்கிறார் என கொள்ளலாம்.


நரசிங்க பெருமாள் குடவரைக் கோவில் ஒரு சிறிய கருவறையும் ஒரு முன் மண்டபமும்  மட்டும் கொண்டுள்ளது. பிற்பாண்டியர் விஜயநகர காலத்தில்  இக்கோயில் விரிவுபடுத்தப்பட்டுள்ளது. இக்கருவறை வெளிச்சுவற்றில் யாரால் இக்குடவரை கட்டப்பட்டது, காலம் ஆகியவை தமிழிலும் வடமொழியிலும் குறிப்பிடப்பட்டுள்ளது. கலியுக ஆண்டு 3871 என குறிப்பிடப்பட்டுள்ளது இதற்கு நிகரான கிறிஸ்தவ ஆண்டு கி.பி 770 ஆகும். தமிழகத்தில் ஆண்டு குறிப்புடன் எழுதப்பட்ட முதல் கல்வெட்டு என்று இதைச் சொல்லலாம்.

"கோமாறஞ் சடையற்கு உத்தரமந்திரி களக்குடி வைத்யன்மூவேந்த மங்கலப்
பேரரையனாகிய மாறங்காரி இக்கற்றளி செய்து நீர்த்தெளியாதேய்  சுவர்க்காரோஹணம் செய்தபின்னை அவனுக்கு அனுஜன் உத்திர மந்த்ர பதமெய்தின  பாண்டி மங்கல  விசை அரையன் ஆகிய மாறன்னெ இனன் முகமண்டபஞ் செய்து நீர்த்தளித்தான்"

இதன் மூலம் மாறஞ்சடையன் பராந்தக நெடுஞ்சடைய  வரகுணன் காலத்தில் அவனது அமைச்சன் மாறங்காரியால் இக்கோயில் பணி தொடங்கப்பட்டது என்பதும் பணி முடியும் முன்பே அவன் இறந்து பட்டதால் அவனது இளைய சகோதரன் அமைச்சனாகி இக் கோயிற் பணியை முடித்து குடமுழுக்குச் செய்வித்தான்  என்றும் அறிகிறோம்.

பாண்டியர்களுக்குப் பின் மதுரையை வெற்றி  கண்ட முதலாம் பராந்தக சோழன் இப்பகுதிதியில் நிலைப்படை ஒன்றை  நீண்ட காலம் நிறுத்தி வைத்திருந்தான்.

அவனது 33ம் ஆட்சியாண்டைச் சேர்ந்த கி.பி 940 தமிழ்வட்டெழுத்துக் கல்வெட்டு ஒன்று நரசிங்கப் பெருமாள் கோயிலின் முகப்புப் பாறையில்  வெட்டப்பட்டுள்ளது. இதில் சோழன் பராந்தகனின் அதிகாரி அருள்நிதிகலியன் என்பவன் அவன் பெயரால் கலியனேரி  என்ற ஏரி வெட்டினான். கோயில் திருவமுதுக்கும் , பிராமணர் உண்ணவும் காசுகள் தானம் அளித்தான் என்று கூறப்படுகிறது.

இவ்வூர் நரசிங்கமங்கலம் என்றும்  இது இரணிய முட்டத்துள் அடங்கிய  ஒரு பிரமதேயம் என்றும் கூறப்பட்டுள்ளது.

முற்சோழ காலத்திற்குப்பின் வந்த பிற்பாண்டியர்களும் நாயக்கமன்னர்களும் இக் கோயிலை விரிவு படுத்தி கட்டியுள்ளதை அவர்கள் கால கலைப்பாணியால்  அறிய முடிகிறது.//

நன்றி - பசுமை நடை.

கோவிலுக்கு எதிர்புறம் மலையடிவாரத்தில் சில வீடுகள் இருக்கிறது.


இந்தக் கோவிலைப் பற்றியும் மலைகளின் பயன்கள் பற்றிப் பேசுகிறார் திரு. கண்ணன் அவர்கள்.

Image may contain: 1 person, crowd and outdoor
பிராசாந் ஜெயராம் என்பவர் போட்டோ எடுத்துக் கொண்டு இருந்தார் .அவரை எடுத்துத் தரச் சொன்னேன். நாங்கள் பேசுபவர்களுக்குப் பின்புறம் குடைவரைக் கோயில் வாசலில் அமர்ந்து இருந்தோம், மேலே இருக்கும் படத்தை என் காமிராவில் எடுத்துத் தந்தார். கீழே இருக்கும் இந்தப் படம் அவர் முகநூலில் பகிர்ந்த படம்.  நாங்கள் லாடன் கோவில் வாசலில் அமர்ந்து இருக்கிறோம்.
Image may contain: 9 people, people smiling, people standing and outdoor
பசுமை நடை 100 வது விழாவில் இந்த பனியன்கள்  அறிமுகப்படுத்தப்பட்டது.
இந்த முறை விற்பனைக்கு  ஆங்கிலத்திலும், தமிழிலும்  "என் மதுரை "என்று போட்டு இருக்கிறது. நான் என் மகனுக்கு வாங்கினேன்.
எங்கள் இருவருக்கும் அடையாள வில்லை வாங்கினோம்,   பசுமைநடை பயணத்தில் எல்லோரும் அணிந்து கொண்டால் நல்லது என்றார்.
முருகனைத் தொட்டு வணங்கி வந்த குழந்தை
முதாலாவது பசுமைநடை படங்கள் - காட்சிக்கு
வீட்டுக்குப் போய் டிபன் செய்து சிரமப்படாமல் இருக்க, அவர்களே இட்லி, தேங்காய்ச் சட்னி , தக்காளிச் சட்னி, சாம்பார் கொடுத்து விட்டார்கள்.
உணவு கொடுத்தவரை வாழ்த்தி உண்டு வந்தோம்.மருத்துவர் ஆலோசனைப்படி ஞாயிறு விரதம் கைவிடப் பட்டதால்  காலை ஆகாரம் அவர்கள் கொடுத்ததைச் சாப்பிட முடிந்தது.

முருகனும், தெய்வானையும் எல்லோருக்கும் மன மகிழ்ச்சி, உடல் ஆரோக்கியம் தரும்படி வேண்டி வந்தோம்.

நேற்று (17.8.2019)என் கணவரின் தம்பி குடும்பத்தார் ஊரிலிருந்து வந்தவர்களுடன் போய் மறுபடியும் லாடன் கோயில் பார்த்து வந்தோம்.

நரசிம்மரைத்  தரிசனம் செய்து வந்தோம்.  நரசிம்மர் இருக்கும் கருவறை  வெளிப்பக்கத்தின்  இருபுறமும் உள்ள கல்வெட்டைப் பட்டரிடம் கேட்டுப் பார்த்து வந்தோம்.  மழையோடு அங்கு போய் தரிசனம் செய்த கோவில்கள் பற்றிய செய்திகளும்   படங்களும் அடுத்த பதிவில்.
                                                                   வாழ்க வளமுடன்.
---------------------------------------------------------------------------------------------------------------------------

67 கருத்துகள்:

  1. அழகிய படங்களும், செய்திகளும் நன்று.

    பலமுறை நரசிங்கம் போயிருக்கிறேன் அங்கு எவர்சில்வர் கம்பெனிகள் அதிகம்.டொக், டொக் என்று எல்லா பக்கமும் சத்தம் கேட்டுக்கொண்டே இருக்கும்.

    மலையடிவாரத்தில் இவ்வளவு விசயங்கள் தங்களால் அறிந்தேன் சகோ.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வணக்கம் தேவகோட்டை ஜி, வாழ்க வளமுடன்
      உங்களை போன பதிவில் பார்க்கவில்லை,(வரலெட்சுமி வருவாய் அம்மா) ஊருக்கு போய் இருக்கிறீர்கள் என்று நினைத்தேன்.

      யானை மலை முதல் பகுதியில் சொல்லி இருந்தீர்கள். விசாரிக்க வேண்டும் என்று நினைத்தேன் சனிக்கிழமை போன போது மறந்து விட்டது.

      சனிக்கிழமை போன போது முருகன் கோவில் பூட்டி இருந்தது விளக்கு இல்லை.
      நரசிம்மர் கோவில் வந்தவர்கள் யாரும் இந்த கோவிலை பார்க்க வரவில்லை. நாங்கள் மட்டுமே போய் பார்த்தோம். எங்களுக்கும் பசுமை நடையின் மூலமே தெரிந்தது.

      உங்கள் கருத்துக்கு நன்றி.

      நீக்கு
  2. தொன்மையான இடத்தை நானும் உங்களுடன் கண்டேன்.. மகிழ்ச்சி..

    வாய்ப்பு கிடைக்கும்போது அவசியம் செல்லவேண்டும்...

    வாழ்க நலம்...

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வணக்கம் சகோ துரை செல்வராஜூ , வாழ்க வளமுடன்
      வாய்ப்பு கிடைக்கும் போது பார்த்து வரலாம்.
      உங்கள் கருத்துக்கும், வாழ்த்துக்கும் நன்றி.

      நீக்கு
  3. குட்மார்னிங்.

    லாடன் கோவில் சிற்பங்கள் அழகு. அருகில் எடுத்தாலும், தூரத்தில் எடுத்தாலும் இருப்பதுதானே தெரியும்?!! அழகாய் இருக்கிறது.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. காலை வணக்கம் ஸ்ரீராம், வாழ்க வளமுடன்
      நீங்கள் சொல்வது சரிதான்.
      லாடன் கோவில் சிற்பங்கள் முடிவடையா நிலையில் தான் இருக்கிறது. இருப்பதை ரசித்தமைக்கு நன்றி.

      நீக்கு
  4. நரசிம்மர் கோவிலுக்கு ஒட்டியபடியே வலதுபுறம் பிரத்யங்கரா தேவி கோவில் கட்டப்பட்டுக் கொண்டிருப்பதாய்ச் சொன்னார்கள். இப்போது இருக்கிறதா?

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நரசிம்மர் கோவிலுக்கு எதிர்புறம் ஒரு கோவில் (பாலமுருகன் கோவில்) அருகில் போன பதிவில் வாகனங்களை நிறுத்தி விட்டு போனோம் என்று குறிப்பிட்டு இருந்தேன் அல்லவா? அந்த கோவிலுக்கு பின் புறம் பிரத்யங்கரா தேவி கோவில் இருக்கிறது. அஷ்ட பைரவரும் இருக்கிறார். சனிக்கிழமை மழையோடு இந்த கோவிலை தரிசனம் செய்தோம்.

      நரசிம்மர் கோவில் அருகில் பாபா கோவில் ஒன்றும் புதிதாக வந்து இருக்கிறது.

      நீக்கு
  5. ஒன்பதாம் நூற்றாண்டில் கட்டப்பட்டதா? பழமை வாய்ந்த கோவில். இவை எல்லாம் பொக்கிஷங்கள். சுவாரஸ்யமான விவரங்கள்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஒன்பதாம் நூற்றாண்டில் கட்டப்பட்டது என்று செய்திகள் சொல்கிறது.
      பொக்கிஷங்களை தவறவிடாமல் பாதுகாக்க முயற்சி செய்து வருகிறார்கள் தொல்லியல்துறை.(பசுமை நடையை சேர்ந்தவர்களும்)

      நீக்கு
  6. அந்தப் படத்தில் உங்களைத் தேடித்தேடிப் பார்த்தேன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அந்த படத்தில் தேடி பார்த்தீர்களா? நன்றி.
      உங்கள் கருத்துக்கு நன்றி.
      நேற்று 102 வது பயணமாய் திருபரங்க்குன்றம் மலைக்கு சென்றார்கள். நாங்கள் கலந்து கொள்ள முடியவில்லை.

      உங்கள் கருத்துக்களுக்கு நன்றி.

      நீக்கு
  7. திரு கண்ணன் பேசும் படத்தில் நீங்கள் வலப்பக்கம் ஓரமாய் உட்கார்ந்திருப்பதை உங்கள் கண்ணாடி காட்டிக் கொடுத்து விட்டது. மிகப் பழமை வாய்ந்த இந்த லாடன் கோயில் பற்றித் தெரியாமல் போய்விட்டது. பசுமை நடைக் குழுவின் விபரங்களை இங்கே பகிர்ந்தமைக்கு நன்றி. படங்கள் எல்லாமும் நன்றாக வந்திருக்கின்றன. இம்மாதிரிக் குடவரைக் கோயில் சிற்பங்களை அருகிருந்து எடுத்தாலும் இப்படித் தான் வரும் என நினைக்கிறேன். நிபுணர்கள் தான் சொல்ல வேண்டும். அடுத்த பதிவுக்கும் காத்திருக்கேன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வணக்கம் கீதா சாம்பசிவம், வாழ்க வளமுடன்
      என்னை பார்த்து விட்டீர்களா!
      நாங்களும் இரண்டு மூன்று தடவை நரசிம்மர் கோவில் போய் இருக்கிறோம் , இந்த லாடன் கோவில் போனது இல்லை. பசுமை நடையால் பார்த்தோம்.
      குடவரை கோவில் சிற்பங்களை ரசித்து அடுத்த பதிவுக்கு காத்திருக்கிறேன் என்று சொன்னதற்கும் மகிழ்ச்சி.

      நீக்கு
  8. விழித்திருந்து நடு இரவில் பதிவை வெளியிட்டிருக்கிறீர்களா அல்லது ஷெட்யூல் பண்ணி வைத்ததா?

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. பதிவை 10 மணிக்கு விழித்திருந்து போட்டேன். நள்ளிரவு காட்டுகிறதா? மணியை சரி செய்ய வேண்டும். 9.30க்கு எல்லாம் தூங்க போய் விடுவேன் கூடுதலாக விழித்திருந்து பதிவு செய்தேன் நேற்று. கொஞ்சம் கொஞ்சமாக எழுதி வைத்து இருந்தேன்.
      உங்கள் கருத்துக்கு நன்றி.

      நீக்கு
  9. அன்பு கோமதி மா, இனிய காலை வணக்கம். லாடன் கோவில் என்று பெயர் வரக் காரணம் என்ன ஆக இருக்கும்.

    பாண்டிய மன்னர்கள் நரசிம்மர் கோவிலை இத்தனை
    கச்சிதமாகக் கட்டி இருக்கிறார்களே.
    முருகன் கோவிலைப் பாதி முடித்து வைத்திருக்கிறார்களே.,

    முருகனும் தெய்வ யானையும் அழகு. வணங்கி வரும்
    அந்தக் குட்டிக் குழந்தையும் மிக அருமை.

    இவ்வளவு விவரங்களையும் கல்லில் பொறித்திருக்கும் அழகை
    எத்தனை பாராட்டினாலும் தகும்.
    அதை இவ்வளவு பாதுகாத்து வரும் பசுமை நடை குழுவினருக்கு மனம்
    நிறை வாழ்த்துகள். எதிர்கால சந்ததியினருக்கு
    வெளிச்சம் கொடுக்கும்.
    மழையில் சென்று வந்திருக்கிறீர்களே.பாராட்டுகள்.

    பதிலளிநீக்கு
  10. வணக்கம் வல்லி அக்கா, வாழ்க வளமுடன்
    லாடன் கோவில் பெயர் காரணம் தெரியவில்லையே!
    யாரிடமாவது கேட்டு சொல்கிறேன்.

    நரசிம்மர் கோவிலை அழகாய் கட்டி இருக்கிறார்கள்.
    இப்போது முன்பை விட மேலும் மண்டபங்கள் கட்டி அழகு படுத்தி உள்ளார்கள்.

    முருகன் கோவில் பாதியில் நின்றதற்கு காரணம் படையெடுப்பாக இருக்கலாம்.

    குழந்தை தொட்டு வணங்குவதை எடுபதற்குள் திரும்பி விட்டாள்.

    நரசிம்மர் கோவில் உள் சுவற்றில் உள்ள கல்வெட்டில் மக்கள் சந்தனத்தால் நாமம் போட்டு இருக்கிறார்கள். எழுத்தே தெரியவில்லை. அவர்களும் அறிவுப்பு பலகை வைத்து இருக்கிறார்கள் சந்தனம் தடவ வேண்டாம் என்று.

    மூலவர் சன்னதியில் கொடுக்கும் சந்தன பிரசாதத்தை அதில் நாமமாக போட்டு அமர்ந்து தியானம் செய்கிறார்கள். யார் ஆரம்பித்து வைத்தார்களோ இந்த பழக்கத்தை!

    இவைகளை பாதுகாத்து வரும், தொல்லியல் துறை, மக்களுக்கு முன் எடுத்து செல்லும்பசுமை நடை இவர்களை பாராட்டத்தான் வேண்டும்.

    சிறு தூறலாய் சாரல் மழை நன்றாக இருந்தது. வீட்டுக்கு வந்த பிறகுதான் நல்ல மழை.

    உங்கள் கருத்துக்கும், பாராட்டுக்களுக்கும் நன்றி.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அன்பு கோமதிமா,
      நம் கோவில்களில் இந்தக் குங்குமம் தீற்றுவது,
      சந்தனம் என்று மழுக்கடித்து விடுகிறார்கள்.
      பல ஆண்டுப் பழக்கமாகிவிட்டது.
      திருந்துவார்கள் என்று நம்புவோம்.

      நீக்கு
    2. ஆமாம் அக்கா.
      குழந்தைகள் பரீட்சை சமயத்தில் தங்கள் நம்பர்களை எழுதி வைப்பார்கள்.

      நீக்கு
  11. நைட் வந்து ரசிக்கிறேன் கோமதி அக்கா....

    பதிலளிநீக்கு
  12. பழமை வாய்ந்த லாடன் கோவில் பற்றிய விபரங்களும் புகைப்படங்களும் மிக அருமை! நிறைந்த அனுபவம் என்பதை உங்களின் ஒவ்வொரு வரியும் சொல்லியது.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வணக்கம் மனோ சாமிநாதன், வாழ்க வளமுடன்
      உங்கள் கால்வலி குணமா?
      உங்கள் கருத்துக்கு நன்றி.

      நீக்கு
  13. சென்ற பதிவிலேயே நரசிம்மர் கோயிலினுள் சமணச் சிற்பக் கலையின் சுவடுகள் தென்பட்டனவா?ன் என்று கேட்ட நினைவு.

    மதுரை என்ற அழகன பெயரை மதுர என்று வலிந்து அழைப்பதற்கு காரணம் என்ன?

    சிலைகளை அருகில் படம் பிடிக்கும் பொழுது பல தெளிவுகள் புலப்படுவது உண்மை தான்.

    லாடன் என்ற பெயருக்கு அர்த்தத்தை அடுத்த பதிவில் சொல்லுங்கள்.

    பொதுவாக இந்தப் பகுதி சுற்றுலா முயற்சிகள் கோயில் தரிசனங்கள் என்ற வழக்கமான பாட்டையைத் தாண்டி சில ஆராய்ச்சி முடிவுகளுக்கு வழிவகுப்பதாக எனக்குத் தோன்றுகிறது.
    சில குழப்பங்களும் உண்டு. அதனாலேயே அது மாதிரி விஷயங்களில் குறியாக இருக்கிறேன். நேரடியான கேள்விகளுக்கும் அது தான் காரணம். புரிந்து கொள்வீர்கள் என்ற நம்பிக்கை உண்டு. நன்றி.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஜீவி சார்.....

      லாடன் தேசம் என்பது பழைய குஜராத் (கட்ச்?) பகுதி. அங்கிருந்து வந்த சித்தர் என்பதால் லாடன் சித்தர். அவர் வழிபட்ட முருகன் கோயில் என்பதை 'லாடன் சித்தர் முருகன் கோயில்' என்று குறிப்பிடப்பட்டு, காலப்போக்கில் லாடன் கோவில் என்று மாறிவிட்டது. இதைப் பற்றி முன்பு எங்கோ படித்திருக்கிறேன்.

      நீக்கு
    2. வணக்கம் நெல்லைத் தமிழன், வாழ்க வளமுடன்

      வல்லி அக்காவும் பெயர் காரணம் கேட்டு இருந்தார்கள்.

      உங்கள் தகவலுக்கு நன்றி.

      நீக்கு
  14. வணக்கம் ஜீவி சார், வாழ்க வளமுடன்
    நரசிம்மர் கோவிலில் சமணச்சிற்பக் கலையின் சுவடுகள் தெரியவில்லை.

    //மதுரை என்ற அழகன பெயரை மதுர என்று வலிந்து அழைப்பதற்கு காரணம் என்ன?//

    எனக்கு காரணம் தெரியவில்லை.

    படங்களை முடித்தவரை பக்கத்தில் எடுப்பேன்.

    லாடன் என்ற பெயருக்கு அர்த்தம் தெரியவில்லை. யாராவது படிக்கும் போது தெரிந்தால் சொல்லுவார்கள் என்று நம்புகிறேன்.

    இந்த சுற்றுலா தொல்லியல் தொடர்பான இடங்களை பார்வையிடும் சுற்றுலா.

    உங்கள் கருத்துக்கு நன்றி.

    பதிலளிநீக்கு
  15. //இந்த சுற்றுலா தொல்லியல் தொடர்பான இடங்களை பார்வையிடும் சுற்றுலா. //

    தொல்லியல் தொடர்பான இடங்களைப் பார்க்கும் பொழுது தான் கிடைக்கும் தடயங்களை வைத்துக் கொண்டு அது பற்றிய ஆய்வுகளை மனம் எண்ணிப் பார்க்கிறது, இல்லையா?
    யாராவது தவறான விளக்கங்கள் கொடுப்பதை உணரும் பொழுது அதற்கான மறுப்பு நம்மில் எழுகிறது இல்லையா?..

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஜீவி சார், தொல்லியல் துறை சேர்ந்தவர்கள் கூட வருவதால் அவர்கள் தரும் தகவலே இங்கு கொடுக்கிறேன்.

      நீக்கு
  16. அழகிய படங்கள்.

    ரொம்ப இண்டெரெஸ்டிங் தகவல்கள். அதிலும் 7ம் நூற்றாண்டைச் சேர்ந்தது இந்த குடவரைக் கோவில் என்ற தகவல்.

    கல்வெட்டுகளும் பாதுகாக்கப்படவேண்டும்

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வணக்கம் நெல்லைத்தமிழன், வாழ்க வளமுடன்
      படங்கள், பதிவு உங்களுக்கு பிடித்து இருப்பது மகிழ்ச்சி.
      கல்வெட்டுகள் நரசிம்மர் இருக்கும் கருவறை வெளிப்பக்கம் இருப்பதால் அது காக்கப்படும்.
      கீழே இருக்கும் கல்வெட்டில்தான் மக்கள் நாமம் போட்டு மறைத்து இருக்கிறார்கள்.

      உங்கள் கருத்துக்கும் லாடன் கோவில் பெயர் காரணம் தகவலுக்கும் நன்றி.

      நீக்கு
  17. சிற்பங்களில் தெரிவது புத்தரின் சிலை வடிவம் போல இருக்கு.

    நரசிம்மர் கோயில் அமைந்திருக்கும் இடம் மிக அழகு.. கோயில் கோபுரமும் அழகு.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வணக்கம் அதிரா, வாழ்க வளமுடன்
      மஹாவீரர் சிலை அதிரா
      நரசிம்மர் கோவில் இருக்கும் இடம் மிக அழகாக மலையடிவாரத்தில் கட்டப்பட்ட
      குடைவரை கோவில் .

      நீக்கு
  18. தங்க விமானம் என அழைக்கப்படுவது.. உண்மையிலேயே தங்கத்தால் ஆனதோ கோமதி அக்கா?.

    அந்தக் காலத்தில் கட்டிய சிலைகள் எவ்ளோ ஸ்ரோங்காக இருக்கு.. தனிக்கருங்கல்லால் செதுக்கப்பட்டிருக்குது.

    பசுமை நடை குரூப்பில் ஒவ்வொரு தடவையும் ஆட்களின் எண்ணிக்கை அதிகரித்துக் கொண்டே வருவது தெரியுது...

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. விமானம் மேல் தங்கதகடுகள் பொருத்தப்பட்டது அதிரா.(உண்மையில் தங்கதகடுதான்.)

      மலையை குடைந்து செய்யப்பட்டது தானே அதிரா.
      பசுமை நடை குரூப்பில் ஒவ்வொரு தடவையும் ஆட்களின் எண்ணிக்கை அதிகமாகி கொண்டுதான் வருகிறது. இது போன்ற இடங்களுக்கு பார்க்க ஆவல் உள்ளவர்களாக இருக்கிறார்கள்.

      நீக்கு
  19. இட்லித்தட்டு அழகு.. கோமதி அக்காவை நினைச்சே.. நியூயோர்க் ராஜராஜேஸ்வரி கோயிலில் சாப்பிடும்போது சாப்பாட்டைப் படமெடுத்து வந்தேன்.. தேடி எடுத்து எல்லாம் போட வேண்டும்..

    அருமையான பசுமைநடை சுற்றுலா.. இன்னும் தொடர வாழ்த்துக்கள். தனியே எனில், இப்படி இடங்களுக்குப் போவதென்பது சாத்தியமில்லை.. பயமாக இருக்கும்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அதிரா,போன இடத்திலும் என்னை நினைத்துக் கொண்டது மகிழ்ச்சி.
      நீங்களும் தேடி எடுத்து போடுங்கள் அதிரா.

      இந்த மாதிரி இடங்களுக்கு இவர்களுடன் சென்றால்தான் பார்க்க முடியும் என்பது உண்மை அதிரா. லாடன் கோவில், ஆனைமலை எல்லாம் பாதுகாப்பவர்கள் வசம் சாவிகள் இருக்கிறது அதை வாங்கி திறந்து காட்டினார்கள்.

      எங்கள் கொழுந்த்னார் குடும்பத்தை அழைத்துக் கொண்டு லாடன் கோவில் போன போது கோவில் பூட்டி இருக்கிறது, இருண்டு கிடக்கிறது விளக்கு கூட இல்லாமல்.
      நீங்கள் சொல்வது போல் பயமாகவும் இருக்கும்.

      பசுமை நடைக்கு வாழ்த்துக்கள் சொல்ல வேண்டும்.
      ஊருக்கு வந்தவுடன் வேலைகள் இருக்கும் அப்படியும் பதிவை படிக்க வந்தது மகிழ்ச்சி.
      உங்கள் கருத்துக்களுக்கு நன்றி அதிரா.


      நீக்கு
  20. எங்கள் பயணத்தின்போது லாடன் கோயில் மட்டும் விடுபட்டுவிட்டது. இப்பதிவின்மூலம் அக்குறை நிறையாயிற்று. அங்கு செல்லும் நாளுக்காகக் காத்திருக்கிறேன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வணக்கம் முனைவர் ஐயா, வாழ்க வளமுடன்
      இந்த முறை மலைக்கு அடுத்து இருக்கும் தாமரை குளம் பார்த்தோம், அதன் பக்கத்தில் கோவில் இருக்கிறது அதையும் பார்த்தோம். லாடன் கோவில் தெப்பக்குள பக்கவாட்டில் உள்ள கொவில் எல்லாம் புதிதாக பார்த்தோம்.
      குட்டி பசங்கள் பிள்ளையார் சதுர்த்திக்கு வசூல் செய்தார்கள் எந்த பிள்ளையார் என்று கேட்ட போது பக்கவாட்டு கோயிலை காட்டினார்கள். அவர்களால் அந்த கோவில் பார்த்தோம். மீனாட்சி, முருகன் பிள்ளையார், ஐயப்பன், சொக்கநாதர் ஒரே வரிசையில் இருக்கிறார்கள். சுற்று பகுதியில் அனுமன், துர்க்கை தட்சிணாமூர்த்தி எல்லாம் இருக்கிறது.
      உங்கள் கருத்துக்கு நன்றி.

      நீக்கு
  21. பதில்கள்
    1. வணக்கம் குமார், வாழ்க வளமுடன்
      உங்கள் கருத்துக்கு நன்றி

      நீக்கு
  22. லாடன் கோவில் அழகாக இருக்கிறது.

    படங்கள் அனைத்தும் அழகும்மா... தகவல்களும் சிறப்பு. பசுமை நடை நண்பர்களுக்கும் வாழ்த்துகள்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வணக்கம் வெங்கட், வாழ்க வளமுடன்
      உங்கள் கருத்துக்கும், வாழ்த்துக்களுக்கும் நன்றி.

      நீக்கு
  23. // தமிழகத்தில் ஆண்டு குறிப்புடன் எழுதப்பட்ட முதல் கல்வெட்டு // அருமை...

    படங்கள் அனைத்தும் துல்லியம்... எதில் எடுப்பீர்கள் அம்மா...?

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வணக்கம் திண்டுக்கல் தனபாலன். வாழ்க வளமுடன்
      படங்களை அலைபேசி மற்றும் காமிரா (சின்ன காமிரா)
      உங்கள் கருத்துக்கு நன்றி.

      நீக்கு
  24. அகத்தியர்...! வசியம்...!! மந்திரம்...!

    இணைப்பு

    நம்ம 'கில்லர்'ஜி பதிவில் வரும் சிவமணியை காப்பாற்றுவது நம் அனைவரின் கடமை...!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. இணைப்பை படித்தேன்.

      ஆஹா! லாடமுனியை வசியம் செய்ய அகத்தியர் அருளிய மந்திரமா?
      அதைச்சொல்லி தேவகோட்டையார் பதிவில் வரும் சிவமணியை காப்பாற்ற வேண்டியது தான்.

      நீக்கு
    2. ஹா.. ஹா.. நானும் முனியை கண்டு வந்தேன் ஜி

      சிவமணியை காப்பாற்றி விடலாம்.

      நீக்கு
  25. வணக்கம் தேவகோட்டை ஜி, வாழ்க வளமுடன்
    நீங்களும் லாடன் முனியை கண்டு வந்து விட்டீர்களா?
    சிவமணியை காப்பாற்றி விடுங்கள்.
    நல்லது.

    பதிலளிநீக்கு
  26. புதிய தகவல்கலுக்கு நன்றி. பயணங்களின்போது சரியாகப் படம் எடுப்பதற்கு உரிய இடமும் சந்தர்ப்பமும் சூரிய ஒளியும் கிடைத்தாலும், நம்மை மற்றவ்ர்கள்தானே படம் எடுத்துத் தந்தாக வேண்டும்! அந்த வாய்ப்பு அபூர்வமாகவே கிடைக்கும். அப்ப்டி எடுக்கச் சொன்னாலும் மனிதர்களை மையப்படுத்தியும் சிற்பங்களை சரியான கோணம் இல்லாமலும் எடுத்துவிடுவார்கள். உங்களுக்குக் கிடைத்தவர்கள் பரவாயில்லை. நன்றாகவே எடுத்திருக்கிறார்கள்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வணக்கம் இராய செல்லப்பா சார், வாழ்க வளமுடன்

      இரண்டு படம் தான் வேறு ஒருவர் எடுத்தது, மற்ற படங்கள் நான் எடுத்தது. அவரும் பசுமை நடையில் கலந்து கொண்டவர்களை, பேசியவரை, லாடன் முருகன் கோவில் எல்லாவற்றையும் நன்றாக தெரிவது போல் அழகாய் எடுத்து தந்து விட்டார்.

      எங்களை எடுக்க சொல்லவில்லை, சொல்லி இருந்தால் அதையும் அழகாய் எடுத்து தந்து இருப்பார். அவர் எடுத்த படத்தில் நாங்களும் இருக்கிறோம்.

      நான் பின்புறம் அமர்ந்து இருந்தேன். முன்பக்கம் இருந்து எடுத்தால் படம் நன்றாக இருக்கும் என்பதால் அவரை போட்டோ எடுக்க கேட்டுக் கொண்டேன். அவரும் மறுக்காமல் எடுத்து தந்தார்.

      உங்கள் தொடர் வருகைக்கும், கருத்துக்கும் நன்றி.

      நீக்கு
  27. கோமதிக்கா இனிய காலை வணக்கம். தாமதமாக வருகைக்கு மன்னிக்கவும்..

    இம்முறை படங்கள் எல்லாம் அதுவும் அந்த சிற்பங்கள் படங்கள் எல்லாம் செமையா க்ளோஸப்பில் தெரிகின்றன...அருமையா இருக்கு அக்கா

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அதனால் பரவாயில்லை நேரம் கிடைக்கும் போது படித்து கருத்து சொல்லுங்கள்.
      நானும் கும்பகோணம் போய் விட்டு மாலை தான் வந்தேன்.
      படங்களை ரசித்தமைக்கு நன்றி.

      நீக்கு
  28. குடவைக் கோயில் மிக அழகாக இருக்கிறது. நன்றாகப்பாதுகாக்கவும் செய்கிறார்கள் என்று தெரிகிறது. படங்களும் விவரங்களும் அருமை கோமதிக்கா...

    சில சிற்பங்கள் ஏன் முடிவு பெறாமல் இருக்கின்றனவோ? மன்னர் ஆட்சிகள் மாறியிருக்குமோ? இப்போதும் கூட ஒரு ஆட்சியில் கட்ட முடிவெடுக்கப்படுவது கட்டப்படுவது அடுத்த ஆட்சி வந்துவிட்டால் அது அப்படியே பாதியில் நிற்க வைத்துவிடுவார்களே அப்படியாக இருக்குமோ? ஏனென்றால் ஒவ்வொருமன்னரின் தெய்வ நம்பிக்கையின் காரணமாக..

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வணக்கம் கீதா, வாழ்க வளமுடன்

      அந்த ஊர் மக்கள் உறுதி எடுத்து இருக்கிறார்கள், சமணச்சின்னம், மற்றும் குடவரை கோவிலை காப்பதாய்.
      மதநல்லிணக்கம் கொண்ட மக்கள், சைவம், வைணவம், சமணம் , மற்றும் அனைத்து மதங்களும் போற்றப் படக்கூடிய இடமாய் நரசிங்கமங்கல ஊர் திகழ்கிறது.
      பாதியில் நிற்பதற்கு காரணங்களை நீங்களே சொல்லி விட்டீர்கள்.

      நீக்கு
  29. இப்படியான இடங்கள் எல்லாம் உங்கள் பதிவின் மூலம் தான் அறிகிறேன் சகோதரி. இத்தனைக்கும் மதுரையில் மூன்று வருடங்கள் அதற்கு முன் தேனி அருகில் கிராமம் என்று இருந்த எனக்கு இப்போதுதான் தெரிகிறது முக்கியத்துவம் எல்லாமே. படங்களும் விவரங்களும் மிகவும் சிறப்பு.

    துளசிதரன்

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வணக்கம் துளசிதரன், வாழ்க வளமுடன்.
      இப்படியான இடங்களை நாங்களும் இப்போது தான் பார்க்க முடிகிறது.
      ஒவ்வொன்றுக்கும், நேரமும், வாய்ப்பும் கிடைக்கும் போது பார்க்க வேண்டியதுதான்.
      உங்கள் கருத்துக்கு நன்றி.

      நீக்கு
  30. வணக்கம் சகோதரி

    தாங்கள் பசுமை நடையுடன் சென்ற குடைவரை முருகன் கோவில் பதிவு அருமையாய் உள்ளது. ஆனைமலையில் இவ்வளவு சிறப்பம்சங்கள் உள்ளது பற்றி இப்போதுதான் அறிகிறேன். சிற்பங்கள் படங்கள் அனைத்தும் நன்றாக இருக்கின்றன.நரசிம்மர் கோவிலும், தாயாரின் தங்க விமானம் பற்றியும், விபரமாக சென்றவிடங்களைப் பற்றியும், கோவில்களின் அமைப்பு, மற்றும் கோவில்கள் தோன்றிய விபரங்கள் அனைத்தும் படித்ததும் தங்களுடன் நாங்களும் வந்த உணர்வு வரப் பெற்றேன். தங்களை போட்டோ எடுத்தவர் மிகவும் அழகாக எடுத்துள்ளார். அனைத்து படங்களும் நன்றாக தெளிவாக வந்துள்ளன. முருகனை தொட்டு வணங்கி வந்த குழந்தையும் அழகு. அடுத்தப்பதிவையும் ஆவலுடன் எதிர்பார்க்கிறேன். இந்த பதிவுக்கு நான் தாமதமாக வந்து விட்டமைக்கு வருந்துகிறேன். பகிர்வுக்கு மிக்க நன்றி சகோதரி.

    நன்றியுடன்
    கமலா ஹரிஹரன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வணக்கம் கமலா ஹரிஹரன், வாழ்க வளமுடன்
      உடல் நலம் தேவலையா?
      பதிவில் அனைத்தையும் ரசித்து படித்து ஒவ்வொன்றுக்கும் அருமையாக கருத்துக்கள் கொடுக்கும் உங்களுக்கு நன்றி.
      தாமத வருகைக்கு வருந்த வேண்டாம். முடிந்த போது இப்படி மகிழ்வூட்டும் வண்ணம் கருத்து போடுகிறீர்கள் படித்து அது போதும்.
      அன்புடன்
      கோமதி அரசு

      நீக்கு
  31. அஹா மதுரையில்தானே இருக்கு இவ்விரு கோவில்களும் . இரண்டையும் பார்த்த நினைவு. அப்போதெல்லாம் ப்லாக் எழுதாததால் பதிவு செய்யவில்லை. 2008 இல் சென்றோம். மிக அருமையாக எழுதி இருக்கீங்க. :)

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வணக்கம் தேனம்மை, நலமா? வாழ்க வளமுடன்.

      மதுரையில் இருப்பதால் நீங்கள் கண்டிப்பாய் பார்த்து இருப்பீர்கள்.
      உங்கள் வரவுக்கும், கருத்துக்கும் நன்றி.

      நீக்கு
  32. ஆனை மலை நரசிம்மர் கோயில், பழமை வாய்ந்த லாடன் கோயில்களைப் பற்றிய தகவல்களுக்கும் படங்களுக்கும் நன்றி. சுவாரஸ்யம் மிக்க பசுமை நடை அனுபவங்கள் அருமை.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வணக்கம் ராமலக்ஷ்மி, வாழ்க வளமுடன்
      உங்கள் கருத்துக்கு நன்றி.

      நீக்கு
  33. அருமையான படைப்பு
    தொடருங்கள்

    பதிலளிநீக்கு
  34. வணக்கம் Yarlpavanan, வாழ்க வளமுடன்
    உங்கள் வருகைக்கும், கருத்துக்கும் நன்றி.

    பதிலளிநீக்கு
  35. வைத்யன் மூவேந்த மங்கலப் பேரரையனாகிய மாறங்காரி கல்வெட்டு படத்தை இடமுடியுமா

    பதிலளிநீக்கு