புதன், 19 ஜூன், 2019

கீழடி

பசுமை நடை 95 வது நடையில் கீழடிக்கு அழைத்துச் சென்றார்கள்.(23.9.2018) அங்கு போய் வந்ததைப் பதிவு போட இவ்வளவு நாளாகி விட்டது. அவர்கள் 100 வது பசுமை நடை விழாவும் கொண்டாடி விட்டார்கள். 100வது பசுமை நடையில் கலந்து கொண்டதை உங்களிடம் பகிர்ந்து கொண்டு விட்டேன்.

இந்த கீழடிக்கு அழைத்துச் செல்லும்போது முதல் நாள் மழை பெய்து இருந்தது அதனால் அந்த இடம் எப்படி இருக்கிறது, போகும் பாதை எப்படி இருக்கிறது என்பதை அங்கு போய் பார்வையிட்டு வந்து பின் நம்மை அழைத்துச் சென்றார்கள். மழையால் அகழாய்வு செய்யும் இடங்களை த் தார்ப்பாய் கொண்டு மூடி வைத்து இருந்தார்கள்.  நாங்கள் அங்கு போனதும் திறந்து காட்டினார்கள்.

மிகவும் அழகான அமைதியான இடம்.

அங்கு கீழடி பற்றிக் கொடுக்கப்பட்ட கையேடு- படித்துப் பாருங்கள்.

அகழாய்வு செய்து இருக்கும் இடத்திற்குப் போகும் பாதை  -தென்னம் தோப்பு என்பதை விட, பாட்டில் வருவது போல் தென்னம் சோலைதான்.

தண்ணீரில் ஊறிக் கொண்டு இருக்கும் தென்னம் ஓலைகள்
                                                       கீத்து முடையும் அம்மா
தென்னம் தோப்புக்குக்   கிணறுகள்

மோட்டார் போட்டு தொட்டிகளில் விழுந்து பின் கால்வாய் வழியாக சிறு ஓடை போல் தண்ணீர் மரங்களுக்குப் போகிறது.

எல்லோரையும் அமர வைத்து அங்கு மழை பெய்து இருப்பதால் மண் ஊறிப் போய் இருக்கும் அகழாய்விடத்தில் எச்சரிக்கையாய் நடக்க வேண்டும் மண் சரிந்து விடக் கூடாது.  என்று உதயகுமார் சொல்கிறார். 
முத்துக்கிருஷ்ணன் அவர்கள் விடுமுறை தினமாக இருந்தாலும் நமக்காக அகழ்வாராய்ச்சி அதிகாரி  இங்கு வந்து  இருப்பதை நன்றியுடன் பாராட்ட வேண்டும் என்றார். சிறிது ஒய்வு கிடைத்தாலும் படுத்துத் தூங்கச் சொல்லும் , அதை உதறி நமக்காக அதிகாலை இங்கு வந்து இருக்கிறார். நமக்கு கீழடி ஆய்வைப்பற்றி சொல்ல வந்த அவரைப்  பாராட்டி, வாழ்த்திப் பேசினார். அந்த இடத்தில் ஆராய்ச்சிக்கு எந்த விதப் பாதிப்பும் ஏற்படுத்தாமல் கவனமாக நடந்து அனைத்தையும் பார்வையிடச் சொன்னார்.
பசுமை நடையில் கலந்து கொண்ட அன்பர்கள்.
திரு .சுந்தர் காளி அவர்கள் பேசியது :-  இங்கு மணிகள் நிறைய கிடைத்து இருக்கிறது. 50 வகையான கற்கள் செதுக்கிப் பட்டை தீட்டப்பட்டுத் துளை செய்து  ஆபரணங்கள் செய்து இருக்கிறார்கள்.  கொங்கு நாட்டில்  மணிகள் உற்பத்தி லாபகாரமான தொழிலாக இருந்தது.  எல்லோரும் தனித் தனித் தொழிலில் தேர்ச்சி பெற்றவர்களாக இருந்து இருக்கிறார்கள்.  அரிய வகைக் கற்களை இறக்குமதி செய்து இருக்கிறார்கள். கிரேக்க , ரோமானியர்கள் வாங்கி அணிந்து இருக்கிறார்கள்.
தொல்லியல் ஆய்வாளர் பெயர் திரு. ஆசைதம்பி அவர்கள்.  

பொன்னை உரசிப்பார்க்கும் தாய்லாந்து உரைகல் கிடைத்து இருக்கிறது. அதில் 'பெரும் பத்தன்' என்ற எழுத்து  அடித்து இருக்கிறது
தமிழ் எழுத்து குறிக்கப்பட்ட பானைகள் கிடைத்து இருக்கிறது

கீழடி அகழாய்வில் கிடைத்த மண்பாண்ட ஓடுகளில் , ஆதன், இயனன், டிசன், சேந்தன் , அவதி  என்ற பெயர்கள் கிடைத்து இருக்கிறது.
ஏழரை கிலோ பிடிக்கும் மிளகு ஜாடி கிடைத்து இருக்கிறது, அந்தக்கால விதைநெல் கிடைத்து இருக்கிறது
எலும்புக் கூடுகள்.
உறை கிணறுகள்

தங்க  அணிகலன்கள் கிடைத்து இருக்கிறது
வீட்டில் மண் பானைகள்
இந்த இருவரும் விவசாயிகள் இவர்களது நிலத்தைத் தான் அகழாய்வுக்குக் கொடுத்து இருக்கிறார்கள். அவர்களைப் பாராட்டினார்கள்.
தொல்லியல் ஆய்வாளர் தன்னுடன் பணியாற்றியவர்களையும், இந்த இடத்தைக் கொடுத்து உதவியர்களையும் நமக்கு அறிமுகப் படுத்தினார்.

5000க்கு அதிகமான் பொருட்கள் கிடைத்து இருக்கிறது  .  பானைகள் வாய்ப் பகுதி கறுப்பு உள்புறம் சிவப்பு.   சிவப்பு கறுப்பு வண்ணம் கிடைக்க உள்புறம் மென்மையான புற்களைப் போட்டு  வெப்பப் படுத்தி உப்பு நீரைத் தெளித்துக் கைகளால் தேய்த்து வண்ணங்களை உண்டாக்கி இருக்கிறார்கள் என்றார்.

சுடுமண் அச்சு முத்திரை, கை அச்சு  கிடைத்து இருப்பதை தொட்டுப் பார்க்கும் போது உடல் புல்லரிக்கிறது என்றார். மீன் இலச்சினை, 360 வகையான  முத்துக்கள் கிடைத்து இருப்பதாகச் சொன்னார்.


அடுப்பு  அழகான வேலைப்பாட்டுடன்   காணப்படுகிறது 

கூடவே வந்து கட்டிட அமைப்பைப் பற்றிச் சொன்னார்.நாணயங்கள்

சுடு மண் டாலரின் பாதி   

கீழே உள்ள படங்கள்  100 வது பசுமை நடை விழா  பிப்ரவரி மாதம் 10 தேதி 2019  ஞாயிறு மாலை உலகத் தமிழ்ச் சங்கக்கலை அரங்கத்தில் நடந்தது.    விழாவில் கீழடி புகைப்படக் கண்காட்சியில் இடம் பெற்ற படங்கள். நிறைய வைத்து இருந்தார்கள் நான்  சில படங்கள் மட்டும் எடுத்தேன்.
தமிழ்ச்சங்கத்தில் நடந்த  மாலை விழா பற்றி இன்னும் எழுத வில்லை கூடிய விரைவில் எழுத முயற்சிக்கிறேன்.
                                                               வாழ்க வளமுடன்.

56 கருத்துகள்:

 1. குட் மார்னிங். சங்க காலத்தில் கட்டிடங்களே இல்லாமலிருந்திருக்கும் என்று யாராவது சொல்லி இருப்பார்களா என்று தெரியவில்லை. இல்லாமல் இருந்திருக்கும் என்று கற்பனையும் செய்ய முடியவில்லை!

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வணக்கம் ஸ்ரீராம், வாழ்க வளமுடன்.
   சங்க காலத்தில் சகல வசதிகளுடன் , தொழில் நுட்பத்துடன் மிக அழகாய் கட்டி இருப்பதை சொல்கிறார்கள். கழிவு நீர் வசதிகள், செங்கலால் மூடபட்ட கால்வாயும்,
   சுடுமண் குழாயும் உள்ளது. சகல வசதிகளும் செய்துதான் அந்த காலத்தில் வாழ்ந்து இருக்கிறார்கள்.

   நீக்கு
 2. தங்கள் பொருள்களில் பெயர் பொறித்து வைத்துக்கொள்ளும் வழக்கம் இருந்திருக்கிறது போலும். அங்கு இருந்தவை நாம் (பாமர மக்கள்) இன்றும் படிக்கக் கூடிய எழுத்துகளா?

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. பிரமி எழுத்துக்கள். அதை படிக்க தெரிந்தவர்கள் படித்து சொன்னவை.
   எழுத்து குறியீடுகள் கிடைத்து இருக்கிறது. நாம் படிக்க முடியாது.
   நகைகளில் செய்தவர் பெயர் பொறித்து இருக்கிறது.
   ஓவியங்களில் பெயர் பொறித்து இருக்கிறது.
   அப்போதே தங்கள் பொருள்களில் பெயர் பொறிக்கும் பழக்கம் இருந்தது தெரிகிறது.

   நீக்கு
 3. அந்தக்கால விதைநெல்... அடேங்கப்பா... அதை இப்போது விதைத்துப் பயிராக்க முடியுமா? வீரியம் போயிருக்கும் இல்லை?

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. அந்தக்கால விதை நெல் ஜாடி நிறைய மிளகு எல்லாம் கிடைத்து இருக்கிறது.
   பயிராக்க முடியுமா என்று தெரியவில்லை.

   நீக்கு
 4. மண்பானைக்குள் சுத்தம் செய்ய புற்களை போட்டு உப்பைப்போட்டு...

  எப்படி இவ்வளவு நுண்ணிய விவரங்களைசேகரிக்கிறார்கள்? அந்த அடுப்பில் இரண்டாயிரம் ஆண்டுகள் முன்பு எங்கள் மதுரைப்பெண்மணி ஒருவர் சமைத்துப் புழங்கியிருக்கிறார்......

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. நுண்ணிய விவரங்கள் சேகரிக்கதானே ஆராய்ச்சியாளர்கள் படிக்கிறார்கள் ஆர்வமாக.

   நீங்கள் சொன்னது போல் நம் மதுரை பெண்மணி சமைத்து இருக்கிறார் .விளையாட்டு பொருட்கள் நிறைய கிடைத்து இருக்கிறது. குழந்தைகள் விளையாடிதை கற்பனை செய்தால் நன்றாக இருக்கிறது.

   நீக்கு
 5. ரொம்ப சுவாரஸ்யமான பதிவு. ஒருமுறை சென்று பார்க்க ஆவல் வருகிறது. அழகிய புகைபபடங்கள். சுவாரஸ்யமான விவரங்கள்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. பசுமை நடையுடன் போனதால் படங்கள், வீடியோக்கள் எடுக்க முடிந்தது.
   நிறைய விஷயங்கள் தொல்லியல் ஆய்வாளர் சொன்னதை கேட்க முடிந்தது.
   தனியாக போனால் இப்படி பார்க்க முடியுமோ என்னவோ தெரியவில்லை.

   நிறைய படங்கள் எடுத்தேன் பதிவு பெரிதாகி விடும் என்று போடவில்லை.
   உங்கள் கருத்துக்களுக்கு நன்றி.

   நீக்கு
 6. அடுத்த விடுமுறையில் செல்ல வேண்டும் என ஏற்கனவே குறித்து வைத்து இருக்கிறேன்....

  அழகான தென்னந்தோப்பும் அகழ்ந்து எடுக்கப்பட்ட பொருள்களும் கண்களுக்கு விருந்து...

  மகிழ்ச்சி.. நன்றி...
  வாழ்க நலம்....

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வணக்கம் சகோ துரைசெல்வராஜூ, வாழ்க வளமுடன்
   அடுத்த விடுமுறையில் பார்த்து விடுங்கள்.
   அகழ்ந்து எடுக்கப்பட்ட பொருட்கள் மனதுக்கு மகிழ்ச்சி தரக் கூடியது.
   தென்னந்தோப்பு கண்களுக்கு குளிர்ச்சி , கண்களுக்கு விருந்துதான்.
   அந்த விவசாயிகள் நிறைய கஷ்டங்களுக்கும் இடையே அவற்றை பாதுகாத்து வருகிறார்கள். அவர்களை பாராட்டி வாழ்த்த வேண்டும்.
   உங்கள் கருத்துக்கும், வாழ்த்துக்களுக்கும் நன்றி.

   நீக்கு
 7. நல்லதொரு காட்சிகளையும், விசயங்களையும் எங்களுக்கு தெரியப்படுத்தியமைக்கு நன்றி சகோ.

  படங்கள் எடுத்த விதங்கள் அழகு.

  பதிலளிநீக்கு
 8. அழகான தென்னந்தோப்பு! அழகிய ஊர்! கீழடி குறித்த பல தகவல்கள் ஏற்கெனவே தெரிந்திருந்தாலும் நீங்கள் நேரில் போய்ப் பார்த்துவிட்டு வந்து பகிர்ந்து கொண்டது மிகவும் சிறப்பு! நல்ல அதிர்ஷ்டம் தான்! இத்தகைய இடங்களுக்குச் சென்று பார்க்கையில் தேர்ந்த வழிகாட்டிகளும் கிடைத்திருப்பது இன்னமும் அதிர்ஷ்டம்! கிணற்றுப் பாசனமும் வெகு நேர்த்தியாகச் செயல்படுகிறது.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வணக்கம் கீதா சாம்பசிவம், வாழ்க வளமுடன்.

   உங்கள் உடல் நிலை இப்போது தேவலையா?
   தென்னந்தோப்பு பார்க்கவே அழகு.
   அவர்கள் நிறைய தடவை அழைத்து சென்று இருக்கிறார்கள்.
   திரு. அமர்நாத்ராமகிருஷ்ணன் கீழடி ஆய்வாளராக இருந்த போது அழைத்து சென்று இருக்கிறார்கள். நாங்கள் ஒரு முறைதான் 95 வது பசுமை நடையில் கலந்து கொண்டோம். பதிவு போடவே முடியாமல் இருந்தது. நேற்று போட்டு விட்டேன்.நீங்கள் சொல்வது போல்கிணற்றுப் பாசனம் நன்றாக இருக்கிறது.

   நீக்கு
 9. கீழடியில் கிடைத்த ஆபரணங்கள், அணிகலன்கள், சமையல் செய்த அடுப்பு எல்லாமும் பிரமிக்க வைக்கிறது. அங்கே நம் இனத்தைச் சேர்ந்த ஓர் பெண்மணி சமைத்துப் போட்டிருக்கிறார். என்ன சமைத்திருப்பார் என்றெல்லாம் தோன்றுகிறது. எல்லாவற்றையும் விட அதிசயம் விதை நெல்லும், மிளகும் கிடைத்தது தான்! மிளகு இன்னமும் காரம் குறையாமல் இருக்கும் என நம்புகிறேன்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. கீழடியில் தங்கத்தில் டாலர், தோடு, காது வளையம், பட்டன்கள், யானைதந்தம் ஓரத்தில் தங்கம் கட்டியது, விலங்கின் முழுமையான எலும்பு கூடு 360 வது விதமான முத்துக்கள் எல்லாம் கிடைத்து இருக்கிறது. நீங்கள் சொல்வது போல் வியப்பளிக்க செய்வது மிளகு ஜாடி, விதை நெல்தான். மிளகு காரம் குறையாது என்று தான் நானும் நினைக்கிறேன்.

   நீக்கு
 10. நம் முன்னோர்கள் வாழ்ந்த இத்தகைய இடங்களை மிதிக்கும்போதே மெய் சிலிர்க்கும்! நல்லதொரு அனுபவம்!

  பதிலளிநீக்கு
  பதில்கள்

  1. நீங்கள் சொல்வது போல் நம் முன்னோர்கள் வாழ்ந்த இத்தகைய இடங்களைபார்க்கும் போது பெருமிதமும் மெய்சிலிர்ப்பும் ஏற்படத்தான் செய்கிறது.
   உங்கள் அருமையான கருத்துக்கு நன்றி.

   நீக்கு
 11. கீழடி என்றாலே அதை வைத்து ஏதோ பிரச்சாரம் நடக்கிற மாதிரியான உணர்வை இப்பொழுதெல்லாம் தவிர்க்கவே முடிவதில்லை. ஆதிச்ச நல்லூர் அகழ்வாராய்ச்சி காலத்தில் இப்படியெல்லம் இல்லை.

  சங்க காலத்தில் கீழடி கட்டிடக் கலையின் காலம் எத்தனையாவது நூற்றாண்டு என்று ஏதாவது வரையரை செய்திருக்கிறார்களா?.. தெரிந்து கொள்ள ஆவல்.

  'கொங்கு நாட்டில் மணிகள் உற்பத்தி ....'

  சங்க காலத்தில் ஏது கொங்கு நாடு?..

  அதே மாதிரி தாய்லாந்து.. தாய்லாந்து அப்பொழுது எப்படி அழைக்கப்பட்டது?

  பதிலளிநீக்கு
 12. வணக்கம் சார், வாழ்க வளமுடன்.
  பசுமை நடையினர் அழைத்து சென்றதை பார்க்க போய் வந்தோம்.
  நிறைய இடங்களில் அகழ்வாராய்ச்சி நடத்து இருக்கிறதுதான்.

  https://www.facebook.com/aravindan.aravindan.75685/videos/503694783440485/
  தொல்லியல் ஆய்வாளர் சொன்னது இருக்கிறது சார். படித்து பாருங்கள்.
  நான் கேட்டதை பதிவு செய்து இருக்கிறேன்.
  உங்கள் கருத்துக்கு நன்றி.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. 13 ம் நூற்றாண்டு என்று சொல்கிறார்.
   கேட்டு பாருங்கள்.11,12, 13 ம் நூற்றாண்டு காலத்தில் மூன்று கோவில்களில் கல்வெட்டு சான்றுகள் கிடைத்து இருக்கிறதாம் அதை வைத்து தான் சொல்கிறார்.
   குந்திதேவி சதிர்வேதி மங்கலம் என்று இந்த இடத்தை சொல்கிறார்.பாண்டியர் காலத்துக்கு முன்பே இங்கு மக்கள் வாழ்ந்து இருக்கிறார்கள் என்கிறார்.
   இது நான் போய் வந்ததை பதிவு செய்யும் எண்ணம் தான் எனக்கு.

   நீக்கு
 13. உலகத் தமிழ்ச் சங்க கலை அரங்கத்தில் நடந்த தொல்லியல் திருவிழா வாக நடந்த பசுமை நடை 100 பற்றிய செய்தியும் சமூக ஆர்வலர்கள், தொல்லியல் அறிஞர்கள், கீழடி ஆய்வாளார் திரு அமர்நாத் ராமகிரிஷ்ணன் அவர்கள், மற்றும் திரு. ஆர் பாலகிருஷ்ணன், இ.ஆ.ப. சிந்துவெளி பண்பாட்டு ஆய்வாளர் பேசிய தொகுப்பு இதில்

  https://www.vikatan.com/news/coverstory/149400-100th-green-walk-event-at-madurai-a-coverage.html
  இருக்கு பாருங்கள் சார் மேலும் விவரங்கள் வேண்டும் என்றால்.

  பதிலளிநீக்கு
 14. தாய்லாந்து முன்பு சயாம் என்று அழைக்கப்பட்டது.
  கடல் வணிகம் செய்து இருக்கிறார்கள் என்று சொல்லும் போது சயாமுக்கும் போய் இருக்கலாம் தானே சார்.பழைய பேர் தெரியாத காரணத்தால் தற்கால பெயரை குறிப்பிட்டு இருக்கலாம் அவர்.சங்க இலக்கியத்தில் கொங்கு நாடு இடம்பெற்று இருப்பதை விக்கிபீடியா சொல்கிறது சார்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. விடியோ பார்த்தேன்.

   வடக்கு நந்திகிரி வராககிரி தெற்கு
   குடக்கு பொறுப்பு வெள்ளிக்குன்று
   களித்தன்டலை மேவு காவிரிசூழ்
   நாடு-குளித்தன்டலை அளவு கொங்கு.
   -கொங்கு மண்டல சதகம்

   -- கொங்கு நாடு பற்றிய தகவலகள்.

   கி.பி. 3-ம் நூற்றாண்டிலிருந்து கி.பி. 9 நூற்றாண்டு வரை பல்லவர் காலம் என்று வரையறுக்கிறார்கள். அது பற்றிய விவரங்களைப் படித்துக் கொண்டே வந்த பொழுது ---

   தமிழி என்றழைக்கப்பட்ட மொழியில் கிளைத்தது தான் தமிழ் என்றொரு விளக்கம்
   கண்டு இங்கு பகிர்ந்து கொண்டிருக்கிறேன்.

   பிராமி எழுத்து வட இந்தியாவின் மொழிச் சூழலுக்கேற்ப சில கூடுதல் எழுத்துகளைக் கொண்டிருக்கும். இவை வர்க்க எழுத்துகள் எனப்பெறும். தென்னகத்தில் தமிழி என்று குறிப்பிடப்பெறும் பிராமி எழுத்தில் வடமொழிச் சொற்களை ஒலிப்பதற்கான தனி எழுத்துகள் (வர்க்க எழுத்துகள்) இல்லை. ஆனால் வட இந்தியப்பகுதிகளில் வழங்கிய பிராமியில் இவை உண்டு. தமிழி என்பதைத் தொன்மைத் தமிழ் எழுத்து என்பார்

   தமிழ் எழுத்துக்களை உருவாக்கியவர்கள் பல்லவர்கள் என்ற கருதுகோளும் உண்டு.

   பல்லவர் ஆந்திரப்பகுதியின் ஆட்சியாளர்களான சாதவாகனருடன் வட இந்தியச் சூழலில் இருந்த காரணத்தால், பிராகிருதம், சமற்கிருதம் ஆகிய மொழிகளோடு மட்டுமே தொடர்பு கொண்டவராயிருந்துள்ளனர். தமிழ் நிலத்தில் ஆட்சி கிடைத்துத் தமிழ் மொழிக்கான தமிழ் எழுத்துக்குப் புது வடிவம் கொடுக்க முனைந்தபோது, தமக்கு நன்கு பழக்கமான வடவெழுத்துகளின் துணை கொண்டே அதைச் செயல்படுத்தினர் எனலாம் என்றும் கூற்ப்படுகிறது.

   கொங்கு கல்வெட்டு ஆய்வு என்ற தளத்தில் வாசித்த செய்திகள் நல்லதொரு ஆய்வைக் கொண்டிருப்பதாகவே தெரிகிறது.

   நீக்கு
  2. கி.பி. 13-ம் நூற்றாண்டில் சயாமில் கெமர் என்ற பெயரில் பேரரசு இருந்திருக்கிறது.

   நீக்கு
  3. //தமிழ் எழுத்துக்களை உருவாக்கியவர்கள் பல்லவர்கள் என்ற கருதுகோளும் உண்டு.//

   இதற்காக கருத்து வேண்டி தான் அந்த ஆய்வைப் பற்றிக் குறிப்பிட்டிருந்தேன்.


   நீக்கு
  4. //கொங்கு கல்வெட்டு ஆய்வு என்ற தளத்தில் வாசித்த செய்திகள் நல்லதொரு ஆய்வைக் கொண்டிருப்பதாகவே தெரிகிறது.//

   //தமிழ் எழுத்துக்களை உருவாக்கியவர்கள் பல்லவர்கள் என்ற கருதுகோளும் உண்டு.//

   நீங்கள் விரிவாக நிறைய செய்திகள் சொல்லி இருக்கிறீர்கள். நான் இன்னும் நிறைய படிக்க வேண்டும் சார்.
   உங்கள் கருத்துக்கு நன்றி.

   நீக்கு
 15. கீழடி அகழ்வாராய்ச்சிக்காக தமிழக அரசு ஒரு கோடி ரூபாய் ஒதுக்கி இருக்கிறதாமே

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வணக்கம் பாலசுப்பிரமணியம் சார், வாழ்க வளமுடன்
   கீழடி அகழ்வாராய்ச்சிக்கு தமிழக அரசு நிதி ஒதுக்கி இருப்பதை நானும் அறிந்தேன்,
   மகிழ்ச்சி.
   உங்கள் கருத்துக்கு நன்றி.

   நீக்கு
 16. வணக்கம் சகோதரி

  அழகான படங்கள்.. அருமையான செய்திகள். தங்கள் பதிவில் நிறைய விஷயங்களை தெரிந்து கொண்டேன். தென்னந்தோப்பு மிக அழகாக பசுமை நிறைந்ததாக, கண்ணுக்கு குளிர்ச்சியாக உள்ளது. கிணறுகள் மிக நேர்த்தியாக கட்டப்பட்டு பராமரித்து வருகிறார்கள். அந்த ஊரின் மண்வளமும், மிகச்செழிப்பாக இருந்ததினால்தான் இந்த பசுமை நிரந்தரமாக தங்கியுள்ளது.

  கீழடி அகழ்வாராய்ச்சியில் கிடைத்த பொருட்கள் வியப்பை தருகிறது. தங்கள் மூலமாக இத்தகைய செய்திகளை தெரிந்து கொள்ள முடிகிறது. படங்கள் அனைத்தையும் மிக நன்றாக எடுத்து மிக அழகாக அதன் அர்த்தங்களை உணர வைத்த தங்களுக்கு மிக்க நன்றி.

  நன்றியுடன்
  கமலா ஹரிஹரன்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வணக்கம் கமலா ஹரிஹரன், வாழ்க வளமுடன்

   தென்னந்தோப்பை ஒற்றையடி பாதையில் கடந்து வந்ததே மனதுக்கு மகிழ்ச்சி அளித்தது.
   கிணறுகளில், ஓடைகளில் தண்ணீர் இருந்தது அப்போது இப்போது எப்படி இருக்கிறது என்று தெரியவில்லை.
   அந்த இடத்தை அகழ்வாராய்ச்சிக்கு கொடுத்த விவசாயிகளை பாராட்ட வேண்டும்.
   அந்த இடத்தை அழகாய் வைத்து இருக்கிறார்கள் சுத்தமாக. அங்கு கிடைத்தப் பொருட்களை அருங்காட்சியகம் அமைத்து வைக்க ஆசை இருக்கிறது. பார்ப்போம் நேரம் வரும் போது நடக்கும் என்று நினைக்கிறேன்.
   உங்கள் விரிவான பின்னூட்டத்திற்கு நன்றி.

   நீக்கு
 17. இப்பதிவு மூலமாக மறுபடியும் கீழடி சென்றுவந்தோம். உரிய முறையில் முயற்சி எடுத்து அதனைத் தொடர்ந்தால் பலவற்றை நிறைவேற்றலாம். பொறுத்திருந்து பார்ப்போம்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வணக்கம் முனைவர் ஐயா, வாழ்க வளமுடன்.
   கீழடி பதிவை நீங்களும், கரந்தை ஜெயக்குமார் அவர்களும் முன்பு போட்டு இருந்தீர்கள் பதிவு நினைவுக்கு வருது.

   மீண்டும் தொடரும் என்று தான் நினைக்கிறேன்.
   உங்கள் கருத்துக்கு நன்றி.

   நீக்கு
 18. அன்பு கோமதி மா,
  ///எப்படி இவ்வளவு நுண்ணிய விவரங்களைசேகரிக்கிறார்கள்? அந்த அடுப்பில் இரண்டாயிரம் ஆண்டுகள் முன்பு எங்கள் மதுரைப்பெண்மணி ஒருவர் சமைத்துப் புழங்கியிருக்கிறார்......///
  ஸ்ரீராம் சொன்ன உணர்ச்சிதான் எனக்கும். எத்தனை மேன்மையான நாட்கள். அதுவும் நம் மதுரையில்.
  நீங்கள் சென்றதால் இவ்வளவு செய்திகள் கிடைத்தன.
  அந்தத் தென்னஞ்சோலையும்,பழமை சோஓழ் இடமும்
  மெய்சிலிர்க்க வைத்தன.
  விதை நெல், மிளகு ஜாடி அப்பப்பா. என்ன ஒரு அதிசயம்.
  கிடைக்க வேண்டும் என்று விதி இருந்தால் கிடைக்காமல் போகாது
  என்பது எவ்வளவு உண்மையான வார்த்தை.
  இத்தனை உண்மை உழைப்பும்,,நிலம் கொடுத்த விவசாயிகளும் என்றும் பாராட்டப் பட வேண்டியவர்கள்.
  மிக மிக நன்றி கோமதி மா.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வணக்கம் அக்கா, வாழ்க வளமுடன்
   //ஸ்ரீராம் சொன்ன உணர்ச்சிதான் எனக்கும். எத்தனை மேன்மையான நாட்கள். அதுவும் நம் மதுரையில்.//
   ஆமாம் அக்கா, மதுரை வரலாறு படிக்க படிக்க நிறைய அற்புதங்களையும், அதிசயங்களையும் தருகிறது. தொல்லியல் ஆய்வாளர்கள் சொல்லுவதை கேட்க கேட்க வியப்பாக இருக்கிறது.
   நாங்கள் கீழடி சென்றது பசுமை நடை இயக்கத்தால் தான், இல்லையென்றால் எங்கே தனியாக போக போகிறோம். அவர்களுக்கு தான் நன்றி சொல்லிக் கொண்டு இருக்கிறேன்.

   அங்கு கிடைத்தவை எல்லாம் வேறு இடத்தில் பத்திர படுத்தி வைத்து இருக்கிறார்கள்.
   அத்தனையும் காட்சி படுத்தினால் நன்றாக இருக்கும்.
   விவசாயிகளை பாராட்டிக் கொண்டே இருக்க வேண்டும்.
   நம் மக்கள் இங்கு வாழ்ந்து இருக்கிறார்கள். சகல வசதிகளுடன் வாழ்ந்து இருக்கிறார்கள்.
   தொழில்கள் செய்து, தொழில்நுட்பம் அறிந்தவர்களாக, படித்தவர்களாக கடல் கடந்து வியாபரம், ஏற்றுமதி, இறக்குமதி செய்து பல மொழிகளில் வல்லவர்களாக இருந்து இருப்பதை கேட்கும் போது மனது மகிழ்ச்சியில் திளைக்கிறது.

   உங்கள் கருத்துக்கு நன்றி அக்கா.
   நீக்கு
 19. கீழடி குறித்த பல தகவல்கள் வியப்பளிக்கின்றன. பசுமை நடை மூலமாக நீங்கள் அறிந்தவற்றை எழுத்துநடை மூலமாக நாங்களும் அறியத் தந்தமைக்கு நன்றி கோமதி மேடம். அக்கால மக்களின் வாழ்வியலை அறிந்துகொள்ளும்போது மலைப்பேற்படுவது உண்மை.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வணக்கம் கீதமஞ்சரி , வாழ்க வளமுடன்
   நீங்கள் சொல்வது சரிதான். வியப்பளிக்கும் செய்திகள் தான் கீழடி செய்திகள்.
   அக்கால மக்களின் வாழ்வியலை அறிந்து கொள்ள முடிகிறது என்று அருமையாக கருத்து சொன்னதற்கு நன்றி கீதமஞ்சரி.

   நீக்கு
 20. அரிய தகவல்கள். சுவாரஸ்யமாகவும் ஆச்சரியமாகவும் உள்ளது. படங்களுக்கும் பகிர்வுக்கும் நன்றி.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வணக்கம் ராமலக்ஷ்மி, வாழ்க வளமுடன்
   உங்கள் கருத்துக்கு நன்றி.

   நீக்கு
 21. மிக தாமதமான வருகை ....

  நல்ல வேலை தவற விடவில்லை ...

  மிக அருமையான பதிவு மா ...நேரில் கண்டு ரசித்து நம் முன்னோர்களின் பெருமைகளை அறிய வேண்டிய இடம் ...  ஆபரணங்கள், அணிகலன்கள், சமையல் செய்த அடுப்பு ,விதை நெல் ஜாடி , மிளகு எல்லாமும் பிரமிக்க வைக்கிறது....


  படங்களும் , தகவல்களும் வழக்கம் போல வெகு அருமை ...
  வாய்ப்பு கிடைக்கும் போது கண்டிப்பாக நேரில் சென்று காண வேண்டும் என்னும் ஆவல் மிகுகிறது மா ..

  பதிலளிநீக்கு
 22. வணக்கம் அனுபிரேம், வாழ்க வளமுடன்

  //நேரில் கண்டு ரசித்து நம் முன்னோர்களின் பெருமைகளை அறிய வேண்டிய இடம் ...//

  நீங்கள் சொல்வது சரி அனு.

  //ஆபரணங்கள், அணிகலன்கள், சமையல் செய்த அடுப்பு ,விதை நெல் ஜாடி , மிளகு எல்லாமும் பிரமிக்க வைக்கிறது....//

  ஆமாம் அனு, அவர்கள் வாழ்க்கை நமக்கு பிரமிக்கதான் வைக்கிறது.

  பதிவை ரசித்து அருமையான கருத்து சொன்ன உங்களுக்கு நன்றி அனு.  பதிலளிநீக்கு
 23. பதில்கள்
  1. வணக்கம் திண்டுக்கல் தனபாலன், வாழ்க வளமுடன்.

   உங்களை காணோமே என்று நினைத்துக் கொண்டு இருந்தேன்.
   வந்து கருத்துக்கு சொன்னதற்கு நன்றி தனபாலன்.

   நீக்கு
 24. இடமே மிக மிக அழகாக இருக்கிறதே. கேரளா போன்று இருக்கிறது. தென்னந்தோப்பும் பசுமையுமாக. மிக மிக ஸ்வாரஸியமாகவும் இருக்கிறது தகவல்கள். மதுரையில் என்றதும் மனம் பழைய நினைவுகளை மீட்டெடுக்கிறது. பண்டைய மக்கள் நன்றாகவே வாழ்க்கையை வாழ்ந்திருக்கிறார்கள் என்றும் தோன்றுகிறது. முத்துக்கள், மிளகு என்று நல்ல வியாபாராமும் நடந்திருக்கிறது என்று தோன்றுகிறது.

  அழகான இடம் முடிந்தால் வாய்ப்பு கிடைத்தால் சென்று பார்க்க வேண்டும்.

  துளசிதரன்

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வணக்கம் துளசிதரன் வாழ்க வளமுடன்.
   இடமே மிக அழகாய் இருக்கிறது .
   பண்டைய மக்கள் நல்ல வளமாக சகல வசதிகளுடன் அறிவு மேம்பட்டவர்களாய் வாழ்ந்து இருக்கிறார்கள்.
   ஏற்றுமதி, இறக்குமதி எல்லாம் செய்து வளமாக வாழ்ந்து இருக்கிறார்கள்.
   வாய்ப்பு கிடைத்தால் பாருங்கள்.
   நன்றி உங்கள் கருத்துக்கு.

   நீக்கு
 25. கோமதிக்கா செம பதிவு. கீழடி கிட்டத்தட்ட கேரளா போலவே இருக்கிறது இல்லையா. குறிப்பாகத் தென்னந்தோப்பு நிழல் என்று.

  பச்சையாக இருக்கிறது. வியக்க வைக்கும் தகவல்கள்.

  மிளகு, அப்போதைய நெல்மணிகள் முத்து என்று அதுவும் வெளிநாட்டு ரகங்கள் எனும் போது அப்போதைய ரோமானியர்களுடன் ஆன வர்த்தகம் நினைவுக்கு வருகிறது. கடல் வழி வருமாமே. அருமையாக இருக்கிறது இடமும்

  கீதா

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வணக்கம் கீதா, வாழ்க வளமுடன்

   கேரளா போல் தான் இருந்தது தென்னந்தோப்பை பார்க்கும் போது.
   நிறைய தென்னைமரம் மொட்டையாகவும் இருந்தது அதை இங்கு போடவில்லை.
   ரோமானியர்களுடன் வர்த்தகம் செய்து இருக்கிறார்கள்.

   நீக்கு
 26. அட! பானைகள் கறுப்பும் சிவப்புமாக இருக்க உள்ளே புல் போட்டு எப்படி எல்லாம் யோசித்திருக்கிறார்கள். நிறைய டெக்னாலஜியும் இருந்திருக்கிறது போலத்தான் தெரிகிறது. அப்போதைய தொழில்நுட்பம் மாசு மருவற்ற தொழில்நுட்பம் என்றும் தெரிகிறது. மண் பானைகள். அப்ப சமையல் எல்லாம் அதில்தான் செய்திருப்பார்கள். நல்ல விஷயம்தான் இடம் மாறும் போது பாத்திரம் பாத்திரமாகக் கட்டிச் சுமக்க வேண்டியதில்லை இப்போதைய நம்மைப் போல்.

  அடுப்பும் கூட அழகாகத்தான் இருக்கிறது. நாணயங்கள், தங்கம் எல்லாம் கூடக் கிடைத்திருக்கின்றன பாருங்க.

  எப்படிக் கண்டு பிடிக்கிறார்கள் இப்படி இந்த இடத்தில் பண்டைய வாழ்வியல் அடங்கியிருக்கிறது என்று.

  நாம் இருக்கும் இடத்தை நோண்டினாலும் இப்படி ஏதேனும் சிக்குமோ?!!!!! நிறைய தெரிந்து கொள்ளலாமே என்று எத்தனை ஸ்வாரஸ்யம் இல்லையா? சிந்து சமவெளி நாகரிகம் பற்றிப் படிக்கையில் மிக மிக ஸ்வாரஸ்யமாக இருந்தது அது போன்று.

  நேரில் காண வேண்டும் என்ற ஆசை இருக்கிறது. இடம் எவ்வளவு அழகாக இருக்கிறது இல்லையா? வீட்டின் அமைப்பு எப்படி இருந்தது என்று தெரிந்ததோ?

  நல்ல பதிவு கோமதிக்கா

  கீதா

  பதிலளிநீக்கு
 27. அகழ்வாராட்சியில் கிடைத்த பொருட்கள் பலகதைகள் சொல்கின்றன.
  நிறைந்த பசுமை மனதை நிறைக்கிறது.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வணக்கம் மாதேவி, வாழ்க வளமுடன்.
   பசுமை மனதுக்கு மகிழ்ச்சி அளிப்பது உண்மை.
   பலகதைகளை சொல்லும் அகழ்வாராட்சிதான்.
   உங்கள் கருத்துக்கு நன்றி மாதேவி.

   நீக்கு
 28. கறுப்பு, சிவப்பு வண்ணம் கொண்டு வர அவர்கள் கண்டுபிடித்த உத்தியே அவர்கள் அறிவை பறைசாற்றுது.
  அணி, மணிகள் அவர்கள் வசதி, வளங்களை சொல்லுது.
  இன்னும் அடுத்த கட்ட தோண்டுதலில் இரண்டு அடுக்கு வீடு அமைப்பு கிடைத்ததாக தொலைக்காட்சி செய்தி சொல்லுது.

  வைகைகரை நாகரீகம் மிக ஸ்வாரஸ்மாக இருக்கிறது. நேரில் பார்த்தால் நீங்கள் இன்னும் அழகாய் எடுத்து சொல்வீர்கள்.

  கழிவு நீர் வசதி, உலர் கழிப்பரை எல்லாம் வீடுகளில் இருந்து இருக்கிறது கீதா. உரை கிணறுகள் , தானிய சேமிப்பு குதிர்கள், அனைத்தும் வீடுகளில் இருந்து இருக்கிறது.

  உங்கள் கருத்துக்கு நன்றி கீதா.

  பதிலளிநீக்கு
 29. By ப.காளிமுத்து....மிகுந்த ஆச்சரியம் கொண்டேன் தமிழனின் தொன்மையைப் பறைசாற்றுகின்றன.மேலும் மேலும் கொண்டு செல்ல தமிழ் மொழிப் பற்றுள்ள உள்ளங்களின் தயவு வேண்டும்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வணக்கம் ப.காளிமுத்து, வாழ்க வளமுடன்

   உங்கள் கருத்துக்கு நன்றி.

   நீக்கு