திங்கள், 3 ஜூன், 2019

பன்னிரு விழிகளிலே பரிவுடன் ஒரு விழியால்!

நேற்று(2/6/19) பழமுதிர்சோலைக்குப் போய் இருந்தோம் கிருத்திகை என்பதால்.  விடுமுறை தினம் என்பதால்  நல்ல கூட்டம் கோவிலில்.  அழகர் மொட்டை, காது குத்து விழா என்று   அழகர் கோவில் வளாகம் முழுவதும்  கூட்டம். 


உற்சவர் வள்ளி தெய்வானையுடன்." பன்னிரு விழிகளிலே பரிவுடன் ஒரு விழியால் என்னை நீ பார்த்தாலே போதும் "

நேற்று இவ்வளவு கூட்டம் எதிர்பார்க்கவில்லை. வழக்கம் போல் 100ரூ டிக்கட் வாங்கிப் பக்கத்தில் அமர்ந்து நன்கு தரிசனம் செய்து விட்டோம்.  தங்க கவசம், அணிந்து விபூதி அலங்காரத்தில் மிகவும் அழகாய், கனிவாய் சிரித்தார்.
பின்னால் உள்ள கண்ணாடியில் பின் புறம் உள்ள முகமும் தெரிகிறது. காது வளர்த்து அதில் அழகான  மகர குண்டலம் அணிந்து இருக்கிறார்.   
கண்ணாடியில் விபூதியோ அபிஷேகப் பாலோ புள்ளி புள்ளியாகத் தெரிகிறது.
சூரபதுமன் மரமாக மாறுவான், மரத்தை இரண்டு பிளவாய் முருகனின் வேல் பிளக்கும். அது சேவலாக, மயிலாக மாறும்.

 அதற்கு முன் போர் நடக்கும்போது சூரனை வாளால் வெட்டினாலும் மீண்டும் உயிர் பெற்று மாயவித்தைகள் புரிவான் சூரபதுமன்.  முருகன் சூரனின் தலையை  வெட்டிய காட்சி.  சேவலும், மயிலும் அருகில் இருக்கிறது. சித்தரித்த காட்சி. குரங்குகள்  சிலைகளின் மேல் ஏறி விளையாடுவதால்  முருகனின் கை   உடைந்து இருக்கிறது.

முருகன் ஒளவையிடம் மாடு மேய்க்கும் சிறுவனாக வந்து விளையாடி "சுட்டபழம் வேண்டுமா? சுடாத பழம் வேண்டுமா " என்று கேட்டகாட்சி.
சுடாத நாவல் பழம் இதுவும்- ஒளவை பாட்டி மாதிரி ஒருவர் விற்ற பழம். 
மலைமேல் நூபுர கங்கைத்  தீர்த்தம் இருந்தாலும் தண்ணீர் கிடைக்கவில்லை குரங்குகளுக்கு. அவை தண்ணீர்த் தொட்டியில் தலையை நுழைத்து குடிக்கிறது. மூடிமேல் கல் வைத்தாலும் தள்ளிவிட்டுக் குடிக்கிறதாம்.
நிழலாக இருப்பாதல் நிறைய குரங்குகள் அமர்ந்து இருக்கிறது மேலே!
தண்ணீர் குடித்த குரங்கு கீழே இறங்கப் போகிறது.
அழகர் கோவில் சாலையில் கொடிக்குளம் என்ற ஊரில் இந்த ஆலயம் உள்ளது . பழமுதிர் சோலை  போகும் போதும் வரும் போதும்  பார்க்க வேண்டும் என்று நினைப்பேன். முடியாமலே இருந்தது. நேற்றுதான் அழைத்தார் அமிர்தகடேஸ்வரர்.
காலை மணி 10. 30 தான் இருக்கும். அதற்குள் கோவில் நடை சாற்றப் போகிறோம் சீக்கீரம் தரிசனம் செய்யுங்கள் என்று ஒருவர் சொன்னார். குருக்கள்  வெளியில் இருக்கும் பொருட்களைகளை ஒரு அறையில் எடுத்து வைத்துக் கொண்டு இருந்தார். கோவில் சுத்தமாக  இருந்தது.  சுவாமி, அம்பாள், மற்றும் பிள்ளையார், முருகன்    அலங்காரமாக இருந்தார்கள். முருகனுக்கு 9மணிக்கு அபிஷேகம் ஆராதனை நடந்ததாம்.

இருபுறமும்  நிறைய தெய்வங்கள் இருந்தார்கள், குபேர லிங்கம், நந்தி, அம்மன், லட்சுமி,  இருந்தார்கள். பிரகாரத்தில் துர்க்கை அழகாய் இருந்தார்.
நவக்கிரகம் இருந்தது, கண்ணாடிக் கூண்டுக்குள். நம் மக்கள் விளக்கை உள்ளே நவக்கிரகங்களின் காலடியில் வைத்துச் சூடம் ஏற்றி வழிபடுவார்கள். காற்றில் துணியில் பற்றிக் கொள்ளும் அபாயம் உள்ளதால் கண்ணாடிக் கூண்டு.

இன்னொரு முறை போனால் அனுமதி பெற்றுப் படங்கள் எடுக்க வேண்டும் நடை சாற்றும் நேரம் போய் அவரைத் தொந்திரவு செய்யக்கூடாது என்று கேட்கவில்லை. அதுபோல் இன்னொரு கேள்வியும் அவரிடம் கேட்க வேண்டும் அமிர்தகடேஸ்வரருக்கு அபிராமி  என்று இல்லாமல், அங்காளபரமேஸ்வரி என்று இருக்கே!  என்றும் இன்னொரு கேள்வி. இந்த ஊர் பேரைப் போல் இன்னொரு கொடிக்குளம் இருக்கே !  மேலூர் சாலையில் என்று கேட்க வேண்டும். எஸ். கொடிக்குளம் என்று போட்டு இருக்கு இந்தக் கோவில் வாசலில்.

குருக்கள் ஆரத்தி காட்டி, மல்லிகை சிவப்பு ரோஜாக்கள் கொடுத்தார். அமாவாசை சிறப்பு பூஜை அன்னதானம் உண்டு என்று பலகையில் எழுதி இருந்தது. அன்னதானத்திற்குச் சிறு தொகை கொடுத்து விட்டு விடைபெற்றோம்.
கோவிலைச் சேர்ந்த கடை போல் இருந்தது  அதில் இருந்த பெயர்ப் பலகையில்  இந்த கோவிலின் அம்மனும், சுவாமியும்.
கொடிக்குளம் அருகில் மினி லாரியில் மாடும், ரேக்ளா வண்டியும் சிறுவயது பயமில்லாமல் பிடிக்காமல் அமர்ந்து வரும் ஒருவர்,  இன்னொருவர்  கீழே படுத்துத் தூங்கி கொண்டு வருகிறார்.

வைகை ஆற்றுப்  பாலத்தில் ரயில் வரும் காட்சி,   பாலத்துக்கு அடியில் வைகை ஆற்றில் கொஞ்சம் தண்ணீர் இருக்கிறது. அதில் மாடுகள் நீர் அருந்துகிறது. காரில் போகும் போது அலைபேசி மூலம் எடுத்த படம். காமிரா எடுத்துச் செல்லவில்லை. 11 மணிக்கு எந்த ஊர் ரயில் என்று தெரியவில்லை.

அழகர் கோவில் போகும் பாதையில் நிறைய  நிழல் தரும் மரங்கள் இருக்கும் இருபுறமும் . இப்போது பாதை அகலப்படுத்தப் படுகிறது, மரங்கள் வேருடன் சாய்க்கப்பட்டு இருக்கிறது.  இன்னும் வெட்ட வேண்டிய மரங்களின் கிளைகள் கழிக்கப்பட்டு  இருக்கு, அப்புறம் அதுவும் வெட்டப்படும்.

பழமுதிர்சோலை முருகன் கோவில் அருகிலும் மலை மீது உள்ள மரங்கள் வெட்டப்பட்டு வாகனங்கள் நிறுத்த வசதி செய்து இருக்கிறார்கள். 

முருகன், அமிர்தகடேஸ்வரர் இருவரிடமும் மழையை கொடுங்க, மக்கள், மற்றும் சகல ஜீவராசிகளின்  துயர் தீருங்கள் ஐயா  என்று வேண்டி வந்து இருக்கிறேன்.

                                                            வாழ்க வளமுடன்.

80 கருத்துகள்:

 1. பழமுதிர் சோலை தரிசனம் பழைய நினைவுகளை மீட்டியது.

  கொடிக்குளம் அமிர்தகடேசுவர்--அம்பாள் தரிசனமும் ஆச்சா?

  வைகை ஆற்றுப் பால ரயில் காட்சி-- கொடுமை! நாளைக்கு மழைத் தேங்கல் மாதிரியான நீரை காட்டி இது தான் வைகை ஆறு என்பார்களோ?..

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வணக்கம் ஜீவி சார், வாழ்க வளமுடன்.
   பழமுதிர் சோலை முருகன் உங்கள் மலரும் நினைவுகளில் வருவாரா?
   கொடிக்குளம் அமிர்தகடேஸ்வரர் , அங்காளபரமேஸ்வரி தரிசனம் ஆச்சு நல்லவிதமாக.
   அழகர் ஆற்றில் இறங்கிய போது வகை ஆற்றில் தண்ணீர் திறந்து விட்டார்கள்.
   அதுதான் இப்போது ஆங்காங்கே தேங்கி நிற்கிறது. இல்லையென்றால் மணல்தான் தெரியும்.
   உங்கள் கருத்துக்கு நன்றி சார்.

   நீக்கு
 2. மிக மகிழ்ச்சி மா...

  இந்த வாரம் மதுரை பயணம் ஒரு திருமணத்திற்காக ....அப்பொழுது இங்கு எல்லாம் சென்று காண வேண்டும் என்று அவா...பார்ப்போம் அவன் அருள் எப்படி என்று ...

  ஆனாலும் மனதில் நினைக்கும் போது அவன் தரிசனம் என்ன சொல்ல ...மிக மிக மகிழ்ச்சி

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வணக்கம் அனுபிரேம், வாழ்க வளமுடன்.
   குழந்தைகளுக்கு பள்ளி திறக்கவில்லையா? அவர்களையும் அழைத்து வருவீர்களா? அவன் நினைத்தவுடன் தரிசனம் தந்து விட்டான், காணவேண்டும் என்ற ஆசையை நிறைவேற்றுவான்.

   நீக்கு
  2. இன்று தான் பள்ளி திறப்பு மா..ஆனாலும் விடுமுறை எடுத்துக் கொண்டு பசங்களுடன் தான் இந்த பயணம் ..

   நீக்கு
  3. குழந்தைகளுக்கு பிடித்த இடம் பழமுதிர்சோலை.
   அவர்களுடன் வருவது மகிழ்ச்சி.

   நீக்கு
 3. படங்கள் ஒவ்வொன்றும் அவ்வளவு துல்லியம்...

  சிறப்பான தரிசனம்...

  நன்றி அம்மா...

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வணக்கம் திண்டுக்கல் தனபாலன், வாழ்க வளமுடன்.
   குரங்குகள் உள்ளே போய் முருகனுக்கு வைத்து இருக்கும் பால், பழம் எல்லாம் எடுத்து சென்று விடுகிறது அதனால் உற்சவர் நெருக்கமான கம்பி கதவு போட்ட அறையில் இருக்கிறார், கம்பி இடுக்குவழியாக எடுத்த படங்கள்.
   உங்கள் கருத்துக்கு நன்றி.

   நீக்கு
 4. அழகன் முருகன் ....

  காது வளர்த்து அதில் அழகான மகர குண்டலம் அணிந்து இருக்கிறார். ...அட என்ன அழகு

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. அழகன் முருகன் காதுகளில் ஒவ்வொரு முறை போகும் போது வெவ்வேறு காதணி அணிந்து இருப்பார்கள். நீண்ட காது அழகாய் இருக்கும்.

   நீக்கு
 5. மலைமேல் நூபுர கங்கைத் தீர்த்தம்...மீண்டும் ஒரு தரிசனம்

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. மலைமேல் நூபுர கங்கைத் தீர்த்தம் இருக்கும் இடம் போகவில்லை.
   கிருத்திகை சமயம் முருகன் தரிசனம் மட்டும் தான்.
   மேலே ராக்காயி அம்மன் கோவில் போனால் தான் நூபுர கங்கையில் குளிக்கலாம்.
   ஒரு ஆளுக்கு 20 ரூபாய் என்று நினைக்கிறேன். முன்பு அப்படியே விழும் குளிக்கலாம் இப்போது பம்பு செட் போட்டு ஒருவர் பெரிய குழாயை கையில் பிடித்து எல்லோர் தலையில் ஊற்றுகிறார், 'போங்கள் போங்கள்' என்று சொல்லிக் கொண்டு அடுத்தவர்களுக்கு ஊற்றுவார். எல்லோரும் அந்த தண்ணீரை கேனில் பிடித்து போவார்கள். வீட்டில் வைத்தால் நல்லது என்று.

   நீக்கு
 6. அமிர்தகடேஸ்வரர் படங்களையும் புராணமும் அறிய ஆவல் மா...விரைவில் மீண்டும் அங்கு சென்று வந்து எங்களுக்கும் கூறுங்கள் ...

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. கோவில் ரொம்ப காலமாய் இருக்கிறது. எங்களுக்கு தான் நேரம் வாய்க்கவில்லை. இப்போது போகும் போது பார்ப்பது எளிது. அழகர் கோவில் சென்று விட்டு வரும் போது என்றால் வீதியை கடப்பது மிகவும் கடினமாய் இருக்கிறது வாகனங்கள் வந்து கொண்டே இருக்கும்.

   நீங்கள் காரில் பழமுதிர்சோலை போனால் போகும் போது பார்த்து விடுங்கள்.
   உங்கள் கருத்துக்களுக்கு நன்றி.

   நீக்கு
 7. படங்கள் தெளிவாக இருக்கிறது நானும் தரிசித்தேன் விளக்கங்களும் நன்று.

  நாவல் பழம் புகைப்படம் அருமை.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வணக்கம் தேவகோட்டை ஜி, வாழ்க வளமுடன்.
   படங்களை ரசித்து கருத்து சொன்னதற்கு நன்றி.

   நீக்கு
 8. நல்ல பாடலைத் தலைப்பாக வைத்து என்னை இழுத்துவிட்டீர்கள். இஷ்ட தெய்வம் முருகனின் இந்தப் பாடல் எனக்கு ரொம்பவும் பிடித்த பாடல்.

  நாவல் பழம் - இங்க கால் கிலோ 50 ரூபாய்னு சொல்றாங்க (அதுல பெரியது 80 ரூபாய்). இன்னும் வாங்கும் மனம் வரலை (பெங்களூரில்).

  முருகன் தரிசனம் சிறப்பாக அமைந்தது. நானும் இரு வாரங்களுக்கு முன்பு திருச்செந்தூர் முருகனை தரிசனம் செய்தேன்(தோம்--மனைவியுடன்)

  படங்கள் மிகத் தெளிவு. என்ன பிரசாதம் கிடைத்தது ?

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வணக்கம் நெல்லைத்தமிழன், வாழ்க வளமுடன்
   உங்களுக்கும் பிடித்த பாடலா? மகிழ்ச்சி.
   முருகபக்தர்கள் எல்லோருக்கும் பிடித்த பாடல்.

   நாவல்பழம் கால்கிலோ 60 ரூபாய்.

   திருச்செந்தூர் செந்தில் ஆண்டவன் தரிசனம் மிகவும் மனதுக்கு அமைதி தரும். கடல் அலைகளும், ஆண்டவன் கோவிலும் நினைத்தாலே மகிழ்ச்சி. போய் வந்தது அறிந்து மகிழ்ச்சி.

   படங்களைப்பற்றி சொன்னது மகிழ்ச்சி. விபூதி, பூ பிரசாதம் மட்டுமே கிடைத்தது.
   காலை அபிஷேகம் முடிந்தவுடன் என்றால் பால் கிடைத்து இருக்கும்.
   பூஜை முடிந்தவுடன் என்றால் தேங்காய் சாதம், தயிர் சாதம் கிடைத்து இருக்கும்.
   பூஜையை வாசல்படியில் நின்று கும்பிட்டோம். அப்புறம் கூட்டம் குறைந்தவுடன் டிக்கட் வாங்கி போனதால் பிரசாதம் கிடைக்கவில்லை.

   உங்கள் கருத்துக்கு நன்றி.

   நீக்கு
 9. உங்க பதிவால் நானும் முருகனை தரிசித்தாயிற்று. அழகன் முருகன் என்று சும்மாவா சொன்னார்கள். எங்க வீட்டருகில் (ஊரில்) முருகன் கோவில்தான். நான் அவரை நினைத்துக்கொண்டேன். பழமுதிர்சோலை நான் போக விரும்பிய கோவில். போகமுடியவில்லை.
  ஆ.. நாவல்பழம். எனக்கு பிடித்தமானதொன்று. சாப்பிட்டுவிட்டு நாக்கு நாவல்கலரா மாறியிருக்கா என கண்னாடியில் பார்த்துக்கொள்வோம் சிறிவயதில்...
  மினிலாரியில் பயணம் செய்பவரை பார்க்க பயமா இருக்கு.. எப்படித்தான் இப்படி போவார்களோ..
  அழகாக படங்கள் எடுத்திருக்கிறீங்க அக்கா. தகவல்களும் அருமை.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வணக்கம் பிரியசகி அம்மு, வாழ்க வளமுடன்.
   முருகன் என்றால் அழகு. அழகு என்றால் முருகன்தான்.
   பழமுதிர்சோலை முருகன் உங்கள் ஆசையை நிறைவேற்ற வேண்டும் வேண்டிக் கொள்கிறேன்.

   ஆமாம் அம்மு , நாங்களும் பள்ளி காலத்தில் நாவல் பழம் சாப்பிட்டு விட்டு நாக்கு கலர் மாறி இருப்பதை பார்த்துக் கொள்வோம். சிறுவயது நினைவுகள் வருகிறது அல்லவா! மகிழ்ச்சி.

   இளங்கன்று பயமறியாது இல்லையா? பயமில்லாமல் போகிறார்.
   உங்கள் வரவுக்கும், கருத்துக்கும் நன்றி பிரியசகி.

   நீக்கு
 10. >>> குரங்குகள் சிலைகளின் மேல் ஏறி விளையாடுவதால்..<<<

  அந்த அளவுக்கு லட்சணமாகக் கட்டியிருக்கிறார்கள்...

  சென்ற மகாமகத்தின் போது கும்பகோணத்தில் நாகேஸ்வரன் கோயில் திருப்பணியின் போது Sand Blast வைத்து அடித்து புராதனமான சிலைகள் பலவற்றைச் சேதப்படுத்தி விட்டார்கள்...

  பழைய பேருந்து நிலையத்துக்கு அருகிலுள்ள காட்சி அம்மன் கோயிலில் புதிதாக செய்து வைத்த கோபுரத்து சுதை சிற்பங்கள் பலவற்றை விழா முடிவதற்குள்ளேயே பந்தல் போடுகிறேன் பேர்வழி என்று உடைத்துப் போட்டார்கள்..

  இதெல்லாம் யார் அப்பன் வீட்டுப் பணம்?...

  இன்னும் பல கோயில்களில் சுதை சிற்பங்களை ஸ்தபதிகளை வைத்துச் செய்யாமல் டூப்ளிகேட் கொத்தனார்களை வைத்து சிமெண்ட்டைக் குழைத்துப் பூசி பாழ்படுத்தி இருக்கிறார்கள்...

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வணக்கம் சகோ துரைசெலவராஜூ, வாழ்க வளமுடன்.
   நிறைய கோவில்கள் அப்படித்தான் மாற்றி அமைக்கபட்டு தன் பழமையை இழந்து காட்சி அளிக்கிறது.
   புராதன சிற்பங்களை மாற்றக் கூடாது அது பாதுகாக்கபட வேண்டும். அதன் மதிப்பு தெரியாதவர்களால் வேறு என்ன செய்ய முடியும்.

   தரங்கம் பாடி மாசிலாமணி கோவில் குமபாபிஷேகம் நடக்கும் முன்னே துவாரபாலகர் கைகள் உடைக்கப்பட்டு விட்டது.

   நீக்கு
 11. >>> பழமுதிர்சோலை முருகன் கோவில் அருகிலும் மலை மீது உள்ள மரங்கள் வெட்டப்பட்டு வாகனங்கள் நிறுத்த வசதி செய்து இருக்கிறார்கள்... <<<

  அடப்பாவிகளே!...

  சோலை மலை என்பதை மொட்டை மலை என்று மாற்றி வைக்காமல் ஓயமாட்டீர்கள் போலிருக்கிறது...

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. அழகர் கோவில் போய் விட்டு அங்கிருந்து பழமுதிர்சோலை முருகனை நடந்து போய் பார்ப்போம். நடந்துபோகும் போது இயற்கை காட்சிகள் அழகாய் இருக்கும். அடர்ந்த காடு போல் பசுமையான மரங்கள் அதில் தேன் கூடுகள் நிறைந்து காணப்படும்.

   சரக்கொன்றை பூக்கள் தன் பூவை உதிர்த்து எங்கும் மஞ்சள் நடைபாதை விரித்து இருக்கும் அழகாய். அப்புறம் வாகனம் போக வசதி செய்த போதே காடுகள், மலைகள் அளிப்பட்டது. இப்போது மேலும் கூட்டம் வருகிறது வாகனம் நிறுத்த இடம் இல்லை. மலை சிறிது சிறிதாக உடைக்கபடுகிறது, அதில் உள்ள மரங்களும் அழிக்கபடுகிறது.

   நீக்கு
 12. >>> இன்னும் வெட்ட வேண்டிய மரங்களின் கிளைகள் கழிக்கப்பட்டு இருக்கு, அப்புறம் அதுவும் வெட்டப்படும்...<<<

  இறைவனின் பிள்ளைகளை / இயற்கையின் செல்வங்களை
  இப்படி வெட்டிச் சாய்த்து விட்டு
  இறைவனிடமே / இயற்கையிடமே
  யாக வேள்வி என்ற பேரில் மழைக்காகப் பிச்சை எடுக்கப்படும்!...

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. இயற்கை செல்வங்கள்தான். மிக பழைய மரங்கள், எவ்வளவு காலமாய் இருக்கும் ஆலமரங்கள் வெட்டப்பட்டு விட்டது. மனிதனின் தேவைக்கு எல்லாம் அழிக்கபடுகிறது.

   "மரம் வளர்ப்போம் மழை பெறுவோம்" என்ற மந்திரச்சொல் மறந்து விட்டது.
   மரங்கள் வெட்டி சாய்த்து இருப்பதை வருத்தம் காரணமாய் படம் எடுக்கவில்லை.
   எத்தனை பறவைகளின் கூடு இருந்தது!
   உங்கள் கருத்துக்களுக்கு நன்றி.

   நீக்கு
 13. காலையில் அழகிய முருகன் தரிசனம். பன்னிரு விழிகளிலே... ஆம்... அதற்காகத்தான் நானும் காத்திருக்கிறேன். முருகன் அழகாக இருக்கிறார். நல்ல தரிசனம்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வணக்கம் ஸ்ரீராம், வாழ்க வளமுடன்.
   முருகன் கடைகண் பார்வையே போதும் ,
   காத்து இருப்போம்.நல்ல நேரத்தில் பார்ப்பார் ஸ்ரீராம்.
   நம்பிக்கைதான் தான் வாழ்க்கை.

   நீக்கு
 14. பாவம் குரங்குகள். அவை வசிக்க வேண்டிய இடத்தில மக்கள் நடமாட்டம். தண்ணீர் கூடாக கிடைக்காமல் கஷ்டப்படும் நிலை. நூபுர கங்கையிலேயே தண்ணீர் இல்லையா? என்ன கொடுமை!

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. ஆமாம் ஸ்ரீராம், அவை வசிக்கும், மலைகள், மரங்கள் என்று நாம் சொந்தம் கொண்டாடி அவைகளுக்கு உணவு, நீர் எல்லாம் நாம் எடுத்துக் கொண்டோம். நூபுரகங்கையை சுற்றி கம்பி தடுப்பு வீணாகி போகும் தண்ணீரைகூட குரங்குகள் குடிக்கமுடியாது.

   அந்த தண்ணீரை வீட்டில் வைத்துக் கொண்டால் பல ந்ன்மைகள் என்று சொல்லபடுகிறது, குளித்து அதை கேன்களில் அடைத்து எடுத்து போகிறார்கள்.

   விடுமுறைதினம் என்றால் மக்கள் கூட்டம் நிறைய நூபுரகங்கையில் குளிக்க.
   ஈர ஆடைகளுடன் மக்கள் கோவில் தரிசனம் . கோவில் முழுவதும் தண்ணீர்தான்.
   எங்கிருந்து வருகிறது, எப்படி வருகிறது என்று தெரியாமல் கங்கை நீர் வரும் இப்போது பெரிய குழாயில் மக்கள் தலையில் கொட்டுகிறார்கள் .

   நீக்கு
 15. ஓ... எஸ். கொடிக்குளம் கேள்விப்பட்ட பெயர். அங்கொரு அமிர்தகடேஸ்வரர் கோவில் இருக்கிறதா? எப்படி கண்ணில் பட்டது? அழகர் கோவில் போகும் வழியில் பிரம்மாண்ட ஆஞ்சநேயர், சீதா, ராமன் போன்ற சிலைகள் இருக்கும் இடம் வருமே...

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. எஸ். கொடிக்குளம் அழகர் கோவில் போகும் பாதைதான். புதிதாக கட்டப்பட்டு இருக்கும் போல. மதுரை வந்து மூன்று வருடமாய் பார்த்துக் கொண்டு இருக்கிறேன் . இப்போதுதான் பார்க்க அழைத்தார்.

   வலது பக்கம் பஞ்சமுக அனுமன் கோவில் இருக்கிறது அதுவும் சின்னதாக இருக்கும்.

   //பிரம்மாண்ட ஆஞ்சநேயர், சீதா, ராமன் போன்ற சிலைகள் இருக்கும் இடம் வருமே...//


   நீங்கள் சொல்லும் கோவில் பார்த்தது இல்லை, கேள்வி பட்டதும் இல்லையே!

   நீக்கு
 16. வைகைக்கரையில் ரயில் வரும் காட்சி அழகு. பாவம் மாடுகள்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. ரயில் வரும் காட்சி வேகமாய் எடுத்தபடம்.
   தண்ணீருக்கு தவிக்கும் காலம் மனிதர்கள், ஆவினங்கள் எல்லாம்.
   உங்கள் கருத்துக்களுக்கு நன்றி.

   நீக்கு
 17. படங்களும் புதிய கோயில் அறிமுகமும் நன்று. இந்தக் கோயில் நான் இன்று வரை கேள்விப் படவில்லை. அடுத்தமுறை வரலாற்றுடன் பதிவீர்கள் என எதிர்பார்க்கிறேன். அழகர் கோயில் கடைசியாக நாங்கள் 2009 ஆம் வருஷம் போனது. அப்போதைக்கு இப்போது காடு அழிந்திருக்கிறது. இன்னமும் அழிப்பதாகச் சொல்கிறீர்கள்! என்னவோ! :( இந்த மாதிரியெல்லாம் முன்னேற்றம் தேவையா எனத் தோன்றுகிறது.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வணக்கம் கீதா சாம்பசிவம், வாழ்க வளமுடன்.

   இந்த கோவில் அழகர் கோவில் போறபாதையிலேயே ரோட்டோரத்தில் இருக்கிறது.
   இன்னொரு முறை பார்க்க சந்தர்ப்பம் கிடைத்தால் வரலாறு கேட்க வேண்டும்.

   அழகர் கோவிலில் நிறைய மரங்கள் வளர்க்கிறார்கள். வாகனம் போகும் பாதை ஓரம் இரண்டு பக்கமும் வேப்பமரம் வைத்து இருக்கிறார்கள், வளர்ந்து வருகிறது. மலைமேல் தான் நிறைய மரங்கள் இல்லை.

   //:( இந்த மாதிரியெல்லாம் முன்னேற்றம் தேவையா எனத் தோன்றுகிறது.//

   இந்த எண்ணம் தான் எங்களுக்கும் தோன்றியது.
   நம்மால் என்ன செய்யமுடியும்? புலம்பி கொள்ள வேண்டியதுதான்.
   நடக்க முடியாதவர்களுக்கு வாகனம் போக வசதி என்று மகிழ்ந்தோம், ஆனால் அது எத்தனை மரங்களை அழித்து மலையை குடைந்து பாதை அமைக்கப்பட்டது என்று இப்போது கஷ்டபடும் போது தெரிகிறது. என்ன செய்வது! காலத்தின் மாற்றத்தால் நிகழும் விஷயம்.

   உங்கள் கருத்துக்கு நன்றி.

   நீக்கு
 18. >>> பழைய பேருந்து நிலையத்துக்கு அருகிலுள்ள காமாட்சி அம்மன் கோயிலில் ... <<<
  என்று திருத்திக் கொள்ளவும்...

  காட்சி அம்மன் கோயில் என்று எழுத்துப் பிழை பதிவானதற்கு யாரும் ஸ்தல புராணம்/ பெயர்க் காரணம் எழுதிவிடப் போகிறார்கள்...

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. காமாட்சி அம்மன் கோயில் என்று படித்து கொண்டேன்.காட்சி அம்மன் அதுவும் நன்றாக இருக்கிறது.காமாட்சி அம்மன் எல்லோருக்கும் காட்சி அளித்து நல்லது செய்யட்டும்.

   நீக்கு
 19. அருமையான கோயில் உலா. உடன் வந்ததுபோன்ற உணர்வு. அன்றாடக்காட்சிகளைப் புகைப்படங்களாகத் தந்த விதம் பாராட்டத்தக்கது.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வணக்கம் முனைவர் ஐயா, வாழ்க வளமுடன்.
   உங்கள் கருத்துக்கும், பாராட்டுக்கும் நன்றி.

   நீக்கு
 20. >>> >>> பழமுதிர்சோலை முருகன் கோவில் அருகிலும் மலை மீது உள்ள மரங்கள் வெட்டப்பட்டு வாகனங்கள் நிறுத்த வசதி செய்து இருக்கிறார்கள்... <<<

  பசுமையான மரங்களை வெட்டித் தள்ளிய பாவம் -
  வாகனங்களில் வசதியாக வருகின்றார்களே அவர்களைச் சேருமா?...

  வாகன வசதி - கட்டண வசூலுக்காக இப்படிச் செய்திருக்கிற -
  வனத்துறை/அற நிலையத்துறையைச் சேருமா?...

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. முன் செய்த தீவினைகளின் பயனாக மனிதன் பிறந்து இருக்கிறான்.
   வினைகள் தீரும் மட்டும் மீண்டும், மீண்டும் பிறப்பு உண்டு.

   நம் வசதிக்காகதான் சாலைகள் விரிவாக்கம், என்று எல்லா துறையைசார்ந்தவர்களும் சொல்வார்கள்.
   அதனால் அதை நுகர்வோருக்கும் பங்கு உண்டு நீங்கள் சொல்வது போல்.
   வேறு என்ன சொல்வது.

   நீக்கு
 21. பன்னிரு விழிகளிலே பரிவுடன் ஒருவிழியால்
  என்னை நீ பார்த்தாலும் போதும்!...

  பக்தர்களைப் பரிவுடன் ஒருவிழியால் பார்த்தருளும்
  பன்னிருகைப் பரமன் - இயற்கையின் பகைவர்களை
  எத்தனை விழிகளால் பார்க்க இருக்கின்றானோ!...

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. முருகனை முன்பு பார்க்க போக பயமாய் இருக்கும். குறிப்பிட்ட நேரம் தான் அனுமதி உண்டு. முருகன் முன்பு ஒரு சின்ன கம்பி தடுப்புக்குள் இருப்பார்.
   இப்போது அவரும் நல்ல வசதியுடன் அழகாய் இருக்கிறார், மக்கள் கூட்டத்தைப்பார்த்து மகிழ்ந்து இருக்கிறார்.

   தவிர்க்க முடியாத இயற்கை அழைவு என்பார்கள் கேட்டால். இதற்கு மேலும் அழியாமல் பார்த்துக் கொள்ளலாம். மேலே உள்ளவர்கள் இறங்கிய பின் , மீண்டும் மேலே அனுப்பலாம். இப்படி ஏதாவது ஒழுங்கு செய்ய வேண்டும்.

   நீக்கு
 22. பதிவில் - பசுமை அழிக்கப்படுகின்றது என்பதைப் படித்ததால்
  பதைபதைத்து பல கருத்துகளைச் சொல்லி விட்டேன்...

  இருப்பினும் -

  சோலைமலை அழகனின் சுந்தரத் தோற்றம் கண்டு சொக்கிப் போனது மனம்...
  சோம சுந்தர சொக்கலிங்கப் பெருமானின் திருமகனல்லவா அவன்!...

  தாங்கள் அளித்த படங்களால் புண்ணியம் தேடிக் கொண்டீர்கள்...

  வாழ்க நலம்...

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. //பதிவில் - பசுமை அழிக்கப்படுகின்றது என்பதைப் படித்ததால்
   பதைபதைத்து பல கருத்துகளைச் சொல்லி விட்டேன்...//

   என்ன செய்வது! மனம் பதைபதைத்து போகத்தான் செய்கிறது.

   //சோலைமலை அழகனின் சுந்தரத் தோற்றம் கண்டு சொக்கிப் போனது மனம்...
   சோம சுந்தர சொக்கலிங்கப் பெருமானின் திருமகனல்லவா அவன்!...//

   ஆமாம், நீங்கள் சொல்வது போல் சொக்கன் மகன் சொக்க வைக்கிறார், அதனால் அவரை தேடி மக்கள் கூட்டம் வருது.

   உங்கள் கருத்துக்களுக்கு நன்றி.

   நீக்கு
 23. படங்களும் பகிர்வும் அருமை
  நன்றி சகோதரியாரே

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வணக்கம் சகோ கரந்தை ஜெயக்குமார், வாழ்க வளமுடன்.
   உங்கள் கருத்துக்கு நன்றி.

   நீக்கு
 24. இனிய காலை வணக்கம் கோமதிக்கா...

  பன்னிருவிழியான் தரிசனம் அருமை கோமதிக்கா..

  என்ன அழகு முருகன்!

  படங்கள் எல்லாமே சூப்பர். விவரணங்களும்,

  கீதா

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. காலை வணக்கம் கீதா, வாழ்க வளமுடன்.
   படங்களை ரசித்து முருகனை தரிசனம் செய்து கருத்து சொன்னதற்கு நன்றி.

   நீக்கு
 25. அக்கா ரயில் வரும் காட்சி அழகு. ஆனால் அது வைகை ஆறா?!!!!!!!!!!!மனம் ரொம்பவே வேதனையுற்றது. மாடுகள் பாவம். குரங்குகள் பாவம்...அவர்களுக்கான இடங்கள் எல்லாம் அழிக்கப்பட்டு வருகின்றனவே. அதுதான் கோயில் இருக்கிறதே முன்பும் இருந்ததே அப்படியே விட்டுவிட வேண்டியதுதானே எதற்காக இப்போ சாலை அகலப்படுத்தல் மரம் வெட்டல் என்று? முன்பும் மக்கள் போகலையா என்ன? அப்படியே இப்பவும் போய்க் கொள்ளட்டுமெ. வேண்டுமானால் இருக்கும் வசதியில் போய் தரிசனம் செய்யட்டும் இல்லையானால் போகட்டும் என்று இருக்கலாமே ஏன் இப்படி இயற்கையை அழிக்க வேண்டும்? என்னவோ போங்க கோமதிக்கா....எனக்கு வருத்தம் மேலிடுகிறது...இயற்கையை அழிப்பதும் தெய்வத்தை நாம் நிந்தனை செய்வது போலத்தானே அப்புற்ம் எதுக்கு...வேண்டாம் இதுக்கு மேலும்..

  கீதா

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. என்ன செய்வது கீதா! உங்கள் ஆதங்கம் புரிகிறது.
   மக்கள் பெருக்கம், வசதி, வாய்ப்புகள் எல்லோருக்கும் என்ற காரணங்களால் இப்படி நடந்து கொண்டுதான் இருக்கும். புதுமைக்கு வேண்டி பழையதை அளிக்கும் போது மீண்டும் உருவாக்க வேண்டும்.
   காடுகள் வளர எவ்வளவு காலம் ஆகி இருக்கும்? மீண்டும் அதை வளர்க்க பாடு பட வேண்டும் வேறு வழியில்லை.

   நீக்கு
 26. பழமுதிர்ச் சோலை போனதில்லை கோமதிக்கா. அழகர் கோயில் நூபுர கங்கை மேலேயே இயற்கையாக வருவதைச் சென்றும் பார்த்ததுண்டு அதெல்லாம் 30 வருடத்து கதை அதன் பின் ஒரே ஒரு முறை,...அப்போது னூபுர கங்கைக்கு ஏதோ கட்டிடம் எல்லாம் கட்டிருந்தார்கள். நாங்கள் அதற்குமே மேலேதான் சென்றது 30 வருடங்களுக்கு மும்பு காட்டு ரோடில் நடந்தே சென்று. இரண்டாவது முறை போனப்போ போகலை...இயற்கையாக வருவதைக் காண....கட்ட்டிடம் கட்டியதை சும்மா பார்த்துவிட்டு வந்துவிட்டோம் அது அவ்வளவாக ரசிக்கவில்லை...

  அக்கா பழமுதிர்ச்சோலை, அழகர் கோயில் அருகே அருகேவா...

  கீதா

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. ராக்காயி அம்மன் கோவில், கங்கை கோவில் அப்படியே பழமையானதுதான் கீதா . நூபுரகங்கை தீர்த்தம் வரும் இடத்தில் மட்டும் கம்பி வேலி போட்டு இருக்கிறார்கள்.
   படிகள் அமியத்து கைபிடி வைத்து இருக்கிறார்கள். வயதானவர்கள் ஏற இறங்க வசதியாக.

   முருகன் கோவில் தாண்டிதான் ராக்காயி அம்மன் கோவில் போக வேண்டும்!
   நீங்கள் காட்டு பாதையில் போனீர்களா? நாங்கள் அடிக்கடி போவதாலும், வீட்டில் குளித்து விட்டு போய்விடுவதால் மேலே போவது இல்லை. சுற்றுலா பஸ்ஸில் வருபவர்கள் எல்லாம் முதலில் அங்கு போய் குளித்துவிட்டு பின் தான் முருகனை தரிசிக்க வருவார்கள்.
   உங்கள் கருத்துக்களுக்கு நன்றி.

   நீக்கு
 27. பழமுதிர் சோலை உங்களுக்குக் கிட்டவோ கோமதி அக்கா?.. சிற்பங்கள் மிக மிக அழகு...
  உங்களாலதான் எனக்குப் பிசிச்ச திருச்செந்தூரும் இன்று பழமுதிர்ச்சோலையும் நேரில் பார்க்கிறேன்:)...

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வணக்கம் அதிரா, வாழ்க வளமுடன்.
   பழமுதிர் சோலை 15 கி.மீ இருக்கும்.
   சிற்பங்கள் அழகாய் இருக்கும்.
   உங்களுக்கு பிடித்தவர் இல்லையா முருகன்!

   நீக்கு
  2. ஓஓ நான் இப்போ படிப்பிக்கும் ஸ்கூல் 16 கிலோ மீட்டர்.. காரில்.. போய்வர 32 . அது ஒரு தூரமாகவே இங்கு இல்லை:).. நினைத்தவுடன் ஆசை வந்தால் சூப்பர்மார்கட் ஓடுவோம்... 10,15 கிலோ மீட்டர் தூரங்களுக்குக் கூட...

   நீக்கு
  3. உங்கள் ஊரில் 32 கி.மீ என்பது பக்கம்.
   இங்கு 45 நிமிடம் ஆகும். மால், சூப்பர்மார்கட் எல்லாம் எங்களுக்கு தூரம் ஆனல் நீங்கள் பக்கம் என்பீர்கள். இங்கு போல் போக்குவரத்து இடைஞ்சல் இல்லை. ரோடு மிக நன்றாக இருக்கும்.

   நீக்கு
 28. பழமுதிர்ச்சோலையில் முருகன் ஆறு முகத்தோடு நிக்கிறாரே. அவ்வ்வ்வ்வ்வ் அப்போதான் அருகிலுள்ள இருவரையும் சமாளிக்க முடியுமாக்கும் ஹா ஹா ஹா.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. இன்னொரு உற்சவர் இருக்கிறார் ஒரு முகத்தோடு நேற்று அவரை எடுக்கவில்லை.முன்பு போட்டு இருக்கிறேன். பிள்ளையார், வேல் ஒரு பக்கம், அப்புறம் வள்ளி, தெய்வானையுடன் முருகன் ஒரு முகத்தோடு காட்சி அளிப்பார், அப்புறம் நான் பதிவில் பகிர்ந்த முருகன். மூலவரை தரிசனம் செய்து விட்டு உற்சவர்கள் இருக்கும் மண்டபத்தில் அமர்ந்து சஷ்டி கவசம், வேல் கவசம் பாடி விட்டு வருவோம்.
   இவர் அழகை பார்த்துக் கொண்டே இருக்கலாம்.

   நீக்கு
 29. இப்போ நாவற்பழ சீஸனோ... குழந்தையில் சாப்பிட்டதுக்குப் பின் காணவே கிடைக்குதில்லை. பழம் சுடவில்லையோ?:)..

  என் கிரேட் குரு பாவம்:) தண்ணி இல்லை எனில் என்ன பண்ணுவார்கள்... ஏன் கோமதி அக்கா அங்கெல்லாம் குழாய்க் கிணறு வெட்ட முடியாதோ?

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. நாவற்பழ சீஸ்ன் தான். பழம் சுடவில்லை. கீழே விழுந்து அடிபட்டால் மண் ஒட்டி இருக்கும்.

   இது மேலே ஏறி பறித்த பழம். ஒன்றும் அடிபடாமல் மிக நன்றாக இருந்தது.
   முருகன் மேலே இருந்து மரத்தை உலுக்கி போட்டார் ஒளவைக்கு அதில் மண் ஒட்டியதால் மண் போக ஊதினார் அதனால் முருகன் சுடுகிறதா பாட்டி என்று கேட்டார்.

   முன்பு பள்ளி நாளில் மிக சின்ன சின்னதாக கிடைக்கும். மிகவும் கனிந்து இருக்கும் வாங்கி டிபன் பாக்ஸில் போட்டு கழுவி சாப்பிடுவோம். கல்கத்தாவில் தான் இது போல அழகான நாவற்பழம் கிடைத்து சாப்பிட்டு இருக்கிறேன் இப்போது இந்த பழம் எல்லா இடத்திலும் கிடைக்கிறது.
   இப்போதும் பள்ளிக்கூட வாசலில் சுடும் நாவற்பழம் கிடைக்கும் அதிரா.

   குழாய்க் கிணறு வெட்டலாம், விலங்குகளுக்கு தொட்டி அமைத்து தண்ணீர் விடலாம்.
   செலவு செய்வதை யார் பார்க்கிறார்கள், வரவு இருக்கும் காரியத்திற்கு வேலை செய்வார்கள்.

   ரேடியோசிட்டிக்காரர்கள் மக்களுக்கு தண்ணீர் தருகிறார்கள் அவர்களும் விலைக்கு வாங்கி தருகிறார்கள்.

   நீக்கு
  2. ஊரில் ரோட்டோரமெல்லாம் நாவல்மரம்... ரோட்டுக்கரை எல்லாம் சொரிந்து போயிருக்கும்... ஏறிப்பிடுங்க முடியாது... பெரிய உயர்ந்த விருட்சமாக இருக்கும்...

   நீக்கு
  3. குழாய்க்கிணறு வெட்டும் வசதி இருந்தும் வெட்டாமல் இருக்கினமோ என்ன கொடுமை.. முருகன் இதை எப்படி அனுமதிக்கிறார்... யாழ்ப்பாணத்தில் ஒவ்வொரு காணிக்கிம் குழாய்க்கிணறு வெட்டியிருக்கிறார்கள்... கிணறும் இருக்கு அது 4,5 பேருக்கு பொதுவில் ஒரு கிணறு எனும் அடிப்படையில் பங்கிருக்கும்...

   நீக்கு
  4. நாவல் மரம் உயரம் தான் அந்த பாட்டி சொன்னது மேலே ஏறி பறித்த பழம் என்று.
   ரோட்டுகரையோரம் எல்லாம் சொரிந்து கிடந்தால் எடுத்து சாப்பிட அனுமதி உண்டா?

   நீக்கு
  5. மலைமேல் ஆழ்துளை கிணறு போட்டுதான் தண்ணீர் வசதி செய்து இருக்கிறார்கள்.
   அதில் கொஞ்சம் தொட்டிக் கட்டி குரங்க்குகளுக்கு கொடுக்கலாம் என்று சொல்கிறேன்.

   உங்கள் ஊரில் கடல்மட்டத்திலிருந்து உயரம் குறைச்சல் . நன்றாக கிடைக்கும் தண்ணீர்.
   இங்கு ஊருக்குள் அடிக்குஅடி கிணறு தோண்ட முடியாது. எல்லா இடத்திலும் நீர்வரத்து இருக்காது.
   இங்கும் குழாய் மூலம் தண்ணீர் ஏற்பாடு செய்து இருக்கிறார்கள். அதில் எல்லா நேரத்திலும் தண்ணீர் வராது. மேல்நிலை தொட்டியில் தண்ணீர் ஏற்றி குறிப்பிட்ட நேரத்தில் மட்டுமே வரும். அதுவும் சிலர் மோட்டார் வைத்து தண்ணீரை எடுத்து விட்டால் மற்றவர்களுக்கு வராது.

   நீக்கு
 30. தண்ணி இல்லாட்டிலும் பச்சைப்பசேலெனச் சோலையாக இருக்கு...

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. மரங்களுக்கு தினம் தண்ணீர் தேவை படாது, மழை பெய்தால் அதை வேர்களில் சேமித்து வைத்துக் கொள்ளும். மலை இடுக்களில் உள்ள தண்ணீரை உறிஞ்சிக் கொள்ளும்.
   முன்பு இன்னும் சோலையாக இருந்த இடம்.
   உங்கள் கருத்துகளுக்கு நன்றி அதிரா.

   நீக்கு
 31. கொடிக்குளம்... பெயரே நல்லாகிருக்கு...
  அந்த லொறியில் இருவர் ஹா ஹா ஹா அவர்களுக்கு அது பழகிவிட்டது போலும்...

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. பேர் நல்லா இருப்பதால் இன்னொரு இடத்திற்கும் இந்த பெர் இருக்கிறது.
   லாரியில் வருபவர்களுக்கு பழகி விட்டது.
   நமக்கு தான் அதைப் பார்க்க பயம்.

   நீக்கு
 32. ரெயின் வருவது அழகு... உங்களோடு நாமும் கோயிலுக்கு வந்த பீலிங்காக இருக்கு... அழகிய போஸ்ட் கோமதி அக்கா... பழமுதிர்ச்சோலை முருகன் அனைவரையும் காக்கட்டும்... அதிராவையும்தேன்ன்ன்... வாழ்க வளமுடன்!

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. கோவிலுக்கு வந்த உணர்வு கிடைத்து விட்டதா மகிழ்ச்சி.
   பழமுதிர்சோலை முருகன் அனைவரையும் காப்பார். அவருக்கு பிடித்த
   தினை மாவில் மாவிளக்கு போட்டு கும்பிடும் அதிராவையும் காப்பார்.
   வாழ்க வளமுடன் அதிரா. அனைத்து பின்னூட்டங்களுக்கும்.

   நீக்கு
 33. பழமுதிர்சோலை தரிசனம் கிடைத்தது.

  மரங்களை அழிப்பது வருத்தமே. ஒருமரத்தை உண்டாக்க எவ்வளவு காலம் பிடிக்கும்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வணக்கம் மாதேவி, வாழ்க வளமுடன்.
   ஒரு மரத்தை வளர்க்க வெகு காலம் தான் ஆகிறது நீங்கள் சொல்வது போல்.
   வேரோடு சாய்க்க இயந்திரங்கள் வந்தபின் அஞ்சுவதே இல்லை மனிதன்.
   உங்கள் கருத்துக்கு நன்றி மாதேவி.

   நீக்கு
 34. வணக்கம் சகோதரி

  பழமுதிர்சோலை முருகனின் தரிசனம் அருமையாக இருந்தது. படங்களும், விளக்கங்களும் பதிவு நன்றாக உள்ளது. எல்லா படங்களுமே மிக நன்றாக எடுத்துள்ளீர்கள். எந்நாளும் இயற்கை வனப்புடன் கோவில் நன்றாக உள்ளது. பழமுதிர்சோலை அருகிலேயே பல கோவில்களும் உள்ளது போலும்.! அவற்றையும் கண்டு, அமிர்தகடேஸ்வரர் அருளை எங்களுக்கும் அள்ளி தந்திருக்கின்றீர்கள். பகிர்வுக்கு மிக்க நன்றி.

  நன்றியுடன்
  கமலா ஹரிஹரன்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வணக்கம் கமலா ஹரிஹரன், வாழ்க வளமுடன்.
   பழமுதிர்சோலை போகும் வழி எல்லாம் நிறைய கோவில் இருக்கிறது.
   பத்ரிநாத கோவில் இருக்கிறது முன்பு பதிவு செய்து இருக்கிறேன்.
   அமிர்தகடேஸ்வரர் , முருகன் எல்லோருக்கும் எல்லா நலங்களையும் தர வேண்டும்.
   மழை வேண்டி வணங்கி வந்தேன். இன்று எல்லோர் பிரார்த்தனையால் நல்ல மழை பெய்தது.

   உங்கள் விரிவான பின்னூட்டத்திற்கு நன்றி.

   நீக்கு
 35. பழமுதிர் சோலை முருகன் உடனே அருள் செய்துவிட்டான். உங்கள்
  வீடியோவில் பார்த்தேன்.
  எத்தனை வேகமாக ப் பெய்கிறது. முருகன் பன்னிரு விழியாலயே பார்த்துவிட்டான்.

  2003 இல் போனது.
  அப்பொழுதுகூட மரங்கள் இருந்தனவே .
  திருமலை ஏறும்போது இவ்வளவு மரங்களை வெட்டி விட்டார்களே என்று வருத்தப்பட்டேன்.
  அங்கேயே மறுபக்கம் மரங்கள் வளர்க்கிறார்களாம்.

  முருகன் வடிவு, குரங்குகள் ஆட்டம், லாரியில் ஏறிப் போகும் ரேக்ளா வண்டியும் இளைஞர்களும்,
  அங்காள பரமேஸ்வரி அமிர்த கடேஸ்வரர் என்று லிஸ்ட் நீண்டு கொண்டே போகிறது.
  அத்தனை படங்களும் சோலையை வீட்டுக்குக் கொண்டு வந்துவிட்டதுமா.
  மிக நன்றி கோமதி மா.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வணக்கம் அக்கா, வாழ்க வளமுடன்.
   மழை வீடியோ மகிழ்ச்சியில் பகிர்வு.
   முருகன் இப்படி அருள் செய்தால் மக்களுக்கு தன்ணீர் பஞ்சம் இருக்காது.
   மழை அமிர்தத்தை அமிர்தகடஸ்வரர் அருளி விட்டால் வேறு என்ன வேண்டும்!
   படங்கள் அனைத்தையும் ரசித்து கருத்து சொன்னதற்கு நன்றி அக்கா.

   நீக்கு
 36. தங்களுடன் வந்து முருகரை தரிசனம் செய்து திரும்பிய உணர்வைத் தந்தது பகிர்வு.

  சாலை விரிவாக்கம் போன்ற காரணங்களுக்காக மரங்கள் தொடர்ந்து சாய்க்கப்பட்டு வருவது வேதனை. இதனால் பருவ மழை பாதிப்பதை கருத்தில் கொள்வதில்லை அரசாங்கம்.

  கர்நாடகா தர்மசாலா கோவிலில் கடும் தண்ணீர் பற்றாக்குறை. அதனால் பக்தர்களை சில காலம் வரவேண்டாம் எனக் கேட்டுக் கொண்டுள்ளது கோவில். சுற்றிவர இருக்கும் காட்டுப் பகுதிகளில் பல மரங்கள் தேசிய நெடுஞ்சாலைக்காக அழிக்கப்பட்டதும் அதனால் பருவ மழை தப்பியதுமே இதற்குக் காரணம் என்கிறார்கள்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வணக்கம் ராமலக்ஷ்க்ஷ்மி, வாழ்க வளமுடன்
   சாலை விரிவாக்கம் செய்யும் திட்டத்தால் மரங்கள் வெட்டபடுவது நடந்து கொண்டே இருக்கிறது.

   தர்மசாலாவில் தண்ணீர் பற்றாகுறை என்று கேட்கும் போது மனது வேதனைப்படுகிறது.

   தற்போதைய வசதியை மட்டும் பார்க்கிறார்கள். தொலைநோக்குப் பார்வை இல்லை.திட்டமிடல் இல்லை. இப்படியே போய் கொண்டு இருந்தால் என்ன செய்வது !
   உடனடியாக ஏதாவது தீர்வு கிடைத்தால் நல்லது.

   ஒரு மரம் வெட்டினால் 10 மரம் வேறு எங்காவது நட வேண்டும்.
   இன்று பள்ளி மாணவ மாணவிகள் ஆற்று ஓரங்களில் பனை விதைகளை விதைத்து இருக்கிறார்கள். இது போல் தொடர வேண்டும்.
   காடு வளர்ப்போம், மழை பெறுவோம்.

   உங்கள் தகவலுக்கும், கருத்துக்கும் நன்றி.

   நீக்கு