செவ்வாய், 9 ஏப்ரல், 2019

மீனாட்சி சொக்கர் திருவிழா! 2019


நேற்று 8/4/2019 காலையில் மீனாட்சி சுந்தரேஸ்வரர் கோவிலில் சித்திரைத் திருவிழா கொடியேறியது .
இரவு 7மணிக்கு  வீதி உலாக் காட்சிகளைக் கண்டோம். அவை இந்தப் பதிவில் இடம் பெறுகிறது.




பக்தர்களை வரவேற்கும் வண்டி முதலில் வருகிறது. அன்னை வரும் பாதையை சரி செய்து கொண்டே வரும்.



இப்போது இரண்டு வருடமாய் யானை மட்டும் சாமி முன் வருகிறது. முன்பு, காளை இரண்டு முரசுகளுடன் வரும், அப்புறம் ஒட்டகம் இரண்டு வரும், அப்புறம் யானை வரும். அதன் பின் தான் பஞ்சமூர்த்திகள் பவனி வருவார்கள்.
சித்திரைப்பெருவிழா முதல் நாள் காட்சிகள்:-


அம்மன்  சன்னதி கோபுரம்



அம்மன் சன்னதி மண்டபம்  வாசல் முன் ஒரு புறம் பிள்ளையார், மறுபுறம் முருகன்.
 மக்கள் கூட்டம் மீனாட்சி, சொக்கரை எதிர்பார்த்துக் காத்து இருக்கும் கூட்டம்.


பஞ்சமூர்த்திகள் வீதி உலாக் காட்சியில் அலங்காரப் பந்தலின் கீழ் முதலில் பிள்ளையார்  -பிறகு எல்லா சாமிகளும் சிறிது நேரம் நின்று போவார்கள். அதனால் அங்கே நின்றே சாமிகளைப் பார்த்தோம். சன்னதி முன் நாகப்பட்டினம் மிட்டாய்க் கடை என்ற பிரபலமான மிட்டாய்க் கடை இருக்கிறது,  அதற்கு அடுத்த கடை அலங்கார கைப் பைகள் விற்கும் கடை  வாசலில் நின்று  தரிசனம் செய்தோம்.

யானை முன்னே வர, சிவ பக்தர்கள் இசைக்கருவிகளை வாசிக்க , நாதஸ்வரம் முழங்க,
.பொய்கால் குதிரை, காளைகள், மயில், உயர்ந்த கட்டைகளின் மீது நடப்பவர்கள் முன்னே போக,  கோலாட்டக் குழந்தைகள் , கண்ணன் போல் உடை அணிந்த குழந்தைகள் பவனிவருகிறார்கள்.


சாம்பிராணிப்புகையின் பின் மீனாட்சியம்மன் சொக்கநாதர் வருவது அழகு



கற்பக விருட்ச வாகனத்தில் சுந்தரேஸ்வரர்-பிரியாவிடை,

 மீனாட்சி - சிம்ம வாகனத்தில்.


சாமி வரும் நேரம் அவசர அவசரமாய் உடை அணிந்து கொண்டார்கள்.
நான் நின்று கொண்டு இருந்த இடத்திற்கு நேர் புறம் அவர்கள் நின்று கொண்டு இருந்தார்கள். ஜூம் செய்து  என் அலைபேசியில் எடுத்த படம் சுமாராக தான் இருக்கும் மன்னித்துக் கொள்ளுங்கள்.
காமிரா எடுத்துப் போகவில்லை.

கட்டைக் கால் மேல் நின்று கொண்டு  நடனம்




இந்த வெயிலில் உடல் முழுவதும் மூடிக் கொண்ட காளை வாகனம்  ஆடுபவர்கள் பாவம்.

 இடை இடையே காளை முகத்தை வைத்து  எல்லோரையும் பார்த்துச் சிரித்துக் குழந்தைகளை முட்ட வருவது போல் விளையாடி தங்களை ஆசுவாசப் படுத்திக் கொண்டார்கள்.


மயில் நடனம் ஆடுபவருக்கு அலங்காரம் செய்கிறார். மஞ்சள் உடை அணிந்தவர்.

 மயில் நடனம் புரிபவர் தன் தலையை திருப்பி பேசுவது  மயில் சண்டையிடுவது போல இருக்கிறது.

 மயிலும்  முகத்தை மூடிக் கொள்வதால்  அந்த வேடம் அணிந்தவருக்கும் கஷ்டம் தான். தாத்தா, பாட்டி முகமூடி அணிந்தவர்களும்  தங்கள் கஷ்டத்தை பொருட்படுத்தாமல் மற்றவர்களை மகிழ்வித்தார்கள்.

ஆடிக் கொண்டு போன மயில்கள்

'சாமி வருது! ஓடுங்க1 ஓடுங்க!' என்கிறார் அலங்காரம் செய்தவர்



கோலாட்டக் குழந்தைகள் சாமிகள் வரவை எதிர் நோக்கி- "எப்போ வருவாரோ!"



கண்ணன் போல் உடை அணிந்த குழந்தைகள் பவனிவருகிறார்கள்.
அவர்கள் அம்மாவிடம் அனுமதி பெற்று குழந்தைகளைப் படம் எடுத்துக் கொண்டேன்.


ஜவ் மிட்டாய் இல்லாத திருவிழாவா?
அதுவும் உண்டு , ஜவ் மிட்டாய் பிடித்தவர்கள் இருக்கிறார்களே!
ஜவ்மிட்டாய் விற்பவர், வாங்காமல் இப்படிப் படம் மட்டும் எடுத்துக் கொள்கிறார்களே என்று நினைத்து இருப்பார்.


திருவிழாப் பார்க்க வந்தவர்கள் பொங்கல் பானை வாங்கிப் போகிறவர் சாமி வரும் போது சாமியைப் பார்க்க விடாமல் தலைமேல் வைத்து கொண்டு திட்டு வாங்கினார்கள்.
சாமி பார்த்து விட்டு " பங்குனி போயி சித்திரை வந்தால் கல்யாணம் வருமே! மகளுக்கு அப்படியே பொங்கல் பானை   வாங்கி விடலாம்" என்று வாங்கிப் போகிறார்.
முதல் நாள் என்பதால் கருப்பசாமி வேஷம், மீனாட்சி வேஷம் போட்ட குழந்தைகளைப் பார்க்க முடியவில்லை.

தினம் பார்க்க ஆசைதான், அடுத்து   எப்போது போவேன் என்று தெரியாது. போன ஆண்டு' பூம் பல்லாக்கு' திருவிழா பதிவு போட்டேன்.

இந்த ஆண்டு முதல் நாள் திருவிழா கற்பக விருட்ச வாகனம். கற்பக விருட்சம் கேட்பதை எல்லாம் கொடுக்கும். கற்பகவிருட்சம் போல்  அன்னையும் அப்பனும் அனைவருக்கும் கேட்பதைக் கொடுக்க வேண்டும். வந்த மக்கள் எல்லோரும் கேட்டதைத் தர வேண்டும்.

இந்தக் கோடை காலத்தில் அன்னை நல்ல மழையை தரத் வேண்டும்.  தண்ணீர்ப்

பஞ்சம் தீர வேண்டும்.  அனைத்து உயிர்களும் நலமாக இருக்க வேண்டும் மீனாட்சி கருணையில்.
                                                                 வாழ்க வளமுடன்.

======================================

44 கருத்துகள்:

  1. படங்களும், தொகுப்பாய் சொல்லி வந்த விபரங்களும் அருமை சகோ.

    அனைத்து உயிர்களும் இன்புற்று வாழட்டும்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வணக்கம் சகோ தேவகோட்டை ஜி, வாழ்க வளமுடன்.
      உங்கள் கருத்துக்கும் வாழ்த்துக்கும் நன்றி.

      நீக்கு
  2. நேற்று முதல்நாள் மீனாட்சி பவனி சிம்ம வாகனத்தில் அம்மா! செவ்வாய்க்கிழமை இரவுதான் பூத வாகனம்!

    பதிலளிநீக்கு
  3. வணக்கம் கிருஷ்ண மூர்த்தி S , வாழ்க வளமுடன்.
    நேற்று மீனாட்சி பவனி சிம்ம வாகனம் திருத்தி விடுகிறேன். நன்றி.
    உங்கள் வரவுக்கும் தகவலுக்கு நன்றி.

    பதிலளிநீக்கு
  4. படங்கள், நிகழ்ச்சியை என் மனக்கண்ணுக்குக் கொண்டுவந்துவிட்டது. வேறு என்ன வேணும்.

    குழந்தைகளைக் காண மனதில் மகிழ்ச்சி பொங்குகிறது. வெள்ளந்தியான கள்ளமில்லாத முகம் குழந்தைகளுக்கு.

    சவ்வு மிட்டாய்... பார்க்கவே அழகா இருக்கே... சாப்பிட்டுப்பார்த்ததில்லையே..

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வணக்கம் நெல்லைத்தமிழன், வாழ்க வளமுடன்.
      நிகழச்சியை மனக்கண்ணில் பார்த்தீர்களா? மகிழ்ச்சி.
      குழந்தைகளை போன வருடம் நிறைய பார்த்தேன், ஆட்டம் பாட்டம் கொண்டாட்டம் நிறைய இருந்தது. இந்த முறை குழந்தைகள் நிறைய பார்க்கவில்லை.
      நீங்கள் சொல்வது சரிதான் கள்ளலில்லாத குழந்தைகளை பார்க்கும் போது மனம் மகிழ்ச்சி அடைவது உண்மை.

      சவ்வு மிட்டாய் சாப்பிடக் கூடாது என்பார்கள் சின்ன வயதில் தெரியாமல் சாப்பிட்டு விட்டு (ரோஸ் கலர் மிட்டாய்) வாயெல்லாம் ரோஸ் கலராக ஆகி வீட்டில் மாட்டிக் கொள்வோம். போன வருடம் தங்கை குழந்தைகளுடன் சவ்வு மிட்டாய் சாப்பிட்டேன் ஆனல் கலர் இல்லா மிட்டாய் சாப்பிட்டேன். அம்மாவை நினைத்துக் கொண்டேன்.
      பழைய மாதிரி இல்லை. இப்போது மிட்டாய்.
      உங்கள் வரவுக்கும், கருத்துக்கும் நன்றி.

      நீக்கு
  5. கற்பக விருட்சக வாகனத்தில் பவனி வந்த சுந்தரேஸ்வரரை தங்களால் தரிசிக்க முடிந்தது. விழா குறித்த விவரிப்பும் படங்களும் அருமை. நடனக் கலைஞர்கள் சிரமங்களைப் பொருட்படுத்தாது மக்களை மகிழ்விக்கிறார்கள்.

    பதிலளிநீக்கு
  6. வணக்கம் ராமலக்ஷ்மி வாழ்க வளமுடன்.
    எப்போதும் அம்மன் சன்னதிக்கு நேரே கடைகள் வாசலில் இருந்து பார்ப்போம்.
    இந்த முறை கோவிலுக்குள் போய் பார்க்கலாம் என்று நினைத்தேன், செல், காமிரா எதுவும் கொண்டு செல்ல அனுமதி இல்லை.

    சீக்கீரம் உள்ளே பார்த்து விட்டு வெளியில் வந்து விடலாம் என்று நினைத்த போது ஒருவர் சொன்னார் சாமி உள்ளே புறபட்டு விட்டது, இப்போது உள்ளே போனால் பார்க்க முடியாது வந்து விடும் வெளியில் என்றார் .

    அவர் சொன்னதை கேட்டதால் அருமையான தரிசனம் கிடைத்தது.

    நடனக் கலைஞர்களை பாராட்ட வேண்டும் அவர்கள் சிரமங்களை பொருட்படுத்தது மக்களை மகிழ்விப்பதற்கு .

    உங்கள் கருத்துக்கு நன்றி ராமலக்ஷ்மி.


    பதிலளிநீக்கு
  7. மிக அருமை மா..

    சுட சுட திருவிழா காட்சிகள் ...அழகு ரசித்தேன்..

    முக நூலில் திரு . ஸ்டாலின் என்பவரின் படங்கள் மிக துல்லியமாக , அருமையாக இருக்கும் அங்கும் ரசித்தேன் ...

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வணக்கம் அனுபிரேம், வாழ்க வளமுடன்.
      நிறைய பேர் உயர்ரக காமிரக்களுடன் படம் எடுத்துக் கொண்டு இருந்தார்கள் அனு.
      உங்கள் கருத்துக்கு நன்றி.

      நீக்கு
  8. வாழ்க...
    அருமையாக நேர்முக வர்ணனையுடன்
    அழகான படங்கள்...

    வழக்கம் போல நடனக் கலைஞர்களை ரசித்து விட்டுக் கடந்து செல்லாமல்

    அவர்களது சிரமங்களைப் பற்றித் தாங்கள் எழுதியிருப்பது சிறப்பு....

    அன்னை அனைவரையும் காத்து ரக்ஷிப்பாளாக!...

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வணக்கம் சகோ துரை செல்வராஜூ, வாழ்க வளமுடன்
      சாமி பார்க்க நின்ற இடத்தில் தான் கலைஞர்கள் உடை அணிந்து கொண்டார்கள்.
      காற்று மிதமாக வீசிக் கொண்டு இருந்தது. மக்கள் கூட்டம் விசிறிகளால் விசிறி கொண்டு வெயிலை குறைகூறிக் கொண்டு இருந்தார்கள் அப்போது தான் அவர்களின் கஷ்டம் தெரிந்தது.
      இறைவனின் வீதிஉலா முழுவதும் அவர்கள் செல்ல வேண்டும்.

      அன்னை அனைவரையும் காக்க வேண்டும்.
      உங்கள் கருத்துக்கும் வாழ்த்துக்களுக்கும் நன்றி.

      நீக்கு
  9. அன்னை மீனாட்சியின் விழாக் கோலம் அருமை. மீனாட்சி சொக்க நாதர்
    சேர்ந்து வருவது மகிமையிலும் மகிமை.
    கோலாட்டக் குழந்தைகள் என்ன அழகு.
    \சின்னக் கண்ணன்களும் தான்.

    மதுரையில் ஒரு சிறு மழை வருமே. வந்திருந்தால்
    இந்தப் பொம்மை வேடம் தரித்தவர்களும் மகிழ்ந்திருப்பார்கள்.
    உங்கள் பதிவால் அன்னையையும் அப்பனையும் காண முடிந்தது.
    வாழ்க வளமுடன்.

    பதிலளிநீக்கு
  10. அழகான காட்சிகள்.... ஒரு முறையேனும் திருவிழா சமயத்தில் மதுரையில் இருக்க வேண்டும் என ஆசை.....

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வணக்கம் வெங்கட் நாகராஜ், வாழ்க வளமுடன்.
      குழந்தையின் விடுமுறை சமயம் தானே வருகிறது திருவிழா .
      நீங்கள் மூவரும் நேரம் ஒதுக்கி ஒரு முறை வாருங்கள் திருவிழாவிற்கு.
      ரயில் வசதியும் உள்ளது பக்கம் தான்.

      உங்கள் கருத்துக்கு நன்றி.

      நீக்கு
  11. பதில்கள்
    1. வணக்கம் திண்டுக்கல் தனபாலன், வாழ்க வளமுடன்.
      உங்கள் கருத்துக்கு நன்றி.

      நீக்கு
  12. படங்கள் எல்லாம் மிக நன்றாக இருக்கின்றன.

    விவரங்களும்.

    துளசிதரன்

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வணக்கம் துளசிதரன், வாழ்க வளமுடன்.
      உங்கள் வரவுக்கும், கருத்துக்கும் நன்றி.

      நீக்கு
  13. இப்போது இரண்டு வருடமாய் யானை மட்டும் சாமி முன் வருகிறது. முன்பு, காளை இரண்டு முரசுகளுடன் வரும், அப்புறம் ஒட்டகம் இரண்டு வரும், அப்புறம் யானை வரும். அதன் பின் தான் பஞ்சமூர்த்திகள் பவனி வருவார்கள்.//

    ஓ அப்ப ஒட்டகம் எல்லாம் வருமா அட!

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வணக்கம் கீதா, வாழ்க வளமுடன்.
      ஆமாம் கீதா, இரண்டு பெரிய ஓட்டகம் வரும் அலங்கார போர்வை போர்த்திக் கொண்டு.
      காளை இரண்டு பக்கம் முரசுகளுடன் அம்மன் வருவதை கட்டியம் கூறிக் கொண்டு.
      இப்போது கோவிலுக்குள் மட்டும் காளை நிற்கிறது.

      நீக்கு
  14. பயங்கரக் கூட்டமா இருக்கும் போல!!! எப்படி இதிலும் சென்று படம் எடுத்தீங்க அக்கா?!! பாராட்டுகள் அக்கா!

    பொய்கால் குதிரை, காளைகள், மயில், உயர்ந்த கட்டைகளின் மீது நடப்பவர்கள் முன்னே போக, கோலாட்டக் குழந்தைகள் , கண்ணன் போல் உடை அணிந்த குழந்தைகள் பவனிவருகிறார்கள்.//

    பார்த்து ரொம்ப நாளாச்சு. இப்ப உங்கள் படங்கள் மூலம் பார்க்கிறேன்...

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நாங்கள் கூட்டத்திற்குள் போகவில்லை. கடை வாசலில் நின்று கொண்டோம் பாதுகாப்பாய். இடிபடாமல். இருந்த இடத்தில் இருந்து ஜூம் செய்து எடுத்த படங்கள்.
      குழந்தைகள் படம் மட்டும் தான் பக்கத்தில் எடுத்தேன் , கூட்டம் வரும் முன்.

      இந்த கலைகள் அழியாமல் பாதுகாக்கபடுவது திருவிழா காலங்களில் நமக்கு தெரியும்.

      நீக்கு
  15. கலைஞர்கள் பாவம் தான் அக்கா. அவர்களுக்கு இது போன நிகழ்வுகளில் தானே கஞ்சி கிடைக்கும்! இல்லைனா ஏது வ்ருமானம் என்றும் தோன்றும். குழந்தைகளை முட்ட வருவ்து போல் நடனம் ஆடி களிப்பது எல்லாம் சூப்பர். இது கஷ்டமானது இல்லையா இப்படி கட்டையைக் கட்டிக் கொண்டு ஆடுவது எல்லாம்.

    மயில் நடனம் ஆடுபவர் தலையைத்திருப்பி பார்ப்பது அழகாக இருக்கு. இப்படி முழுவதும் அலங்காரம் செய்து கொள்வது கூட இந்த வேனலுக்குக் கஷ்டமாக இருக்கும் இல்லையா...

    கீதா

    பதிலளிநீக்கு
  16. கீதா, கலைஞர்கள் திருவிழா காலங்களில் தான் பிழைப்பு. குழந்தைகளை முட்டவருவது சும்மா விளையாட்டு.

    சாமி முன் போகும் போது அவர்கள் ஆட்டம் வேறு மாதிரி இருக்க்கும்.
    கட்டையை கட்டிக் கொண்டு நடப்பது ஆடுவது எல்லாம் நீண்ட கால பயிற்சி எடுத்துக் கொண்டால் மட்டுமே சாத்தியம்.

    மயில் நடனம் ஆடுபவர் கட்டை கால் வைத்து இருப்பவர் உடன் உரையாடும் போது எடுத்த படம். வெயில் காலம் இப்படி உடை அணிந்து ஆடுவது கஷ்டம் தான்.
    உங்கள் கருத்துக்களுக்கு நன்றி கீதா.

    பதிலளிநீக்கு
  17. குழந்தைகள் அழகு!! அந்தக் கள்ளம் இல்லா உள்ளம். எல்லாப் படங்களும் அருமை கோமதிக்கா.

    இது அப்பவே அடிச்சுப் போகாம நின்னுட்டே இருந்துச்ஹ்கு அதான் இப்ப கொடுக்கறேன்...

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. கீதா, குழந்தைகள் படங்கள், மற்றும் எல்லா படங்களையும் ரசித்து கருத்து சொன்னதற்கு நன்றி .

      நீக்கு
  18. ஆஹா.. நீங்கள் இப்போ மதுரையிலா?..

    //முன்பு, காளை இரண்டு முரசுகளுடன் வரும், அப்புறம் ஒட்டகம் இரண்டு வரும், அப்புறம் யானை வரும். அதன் பின் தான் பஞ்சமூர்த்திகள் பவனி வருவார்கள்.//

    பழைய நினைவுகளைக் கிளறி விட்டீர்கள்.. வரிசை தப்பாமல் அழகாக நல்ல ஞாபகத்துடன் சொல்லியிருக்கிறீர்கள்.

    நாகப்பட்டினம் மிட்டாய் கடை பற்றி என் பதிவில் குறிப்பிட வேண்டும் என்று நினைத்திருந்தேன். இன்னும் அக்கடை இருப்பதில் மகிழ்ச்சி. நிச்சயம் காலத்திற்கேற்ப மாற்றங்களையும் கொண்டிருக்கும்.

    படங்கள் அழகு. நாமும் அங்கிருப்பது போன்ற உணர்வை தோற்றுவித்தன. தரிசித்தோம்.
    நன்றி.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வணக்கம் ஜீவி சார், வாழ்க வளமுடன்.
      இப்போது மதுரைதான் சார். மாயவரத்தை விட்டு இங்கு வந்து விட்டோம்.
      விடுமுறைக்கு சித்திரை திருவிழா வருவோம். தேர் மட்டுமாவது மீனாட்சி திருவிழாவில் பார்த்து விடுவேன்.

      அழகர் ஆற்றில் இறங்கும் காட்சியும், எதிர் சேவையும் பார்த்து விடுவோம்.

      அப்புறம் சித்திரைப் பொருட்காட்சி போவோம்.

      இப்போது பொருட்காட்சி பார்த்தே பல வருடம் ஆச்சு.

      நாகப்பட்டினம் மிட்டாய் கடை அப்படியே இருக்கிறது , மாலை சூடாய் 10 ரூபாய்க்கு கொடுத்த அல்வா தொன்னையில் 20 ரூபாய்க்கு கொடுக்கிறார்கள்.

      உங்கள் வரவுக்கும், கருத்துக்கும் நன்றி.

      நீக்கு
  19. படங்களும் விபரங்களும் மிக அருமை!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வணக்கம் மனோ சாமிநாதன், வாழ்க வளமுடன்
      உங்கள் வரவுக்கும், கருத்துக்கும் நன்றி.

      நீக்கு
  20. வணக்கம் சகோதரி

    அழகாக மதுரை சித்திரைத் திருவிழாவின் முதல் நாள் காட்சிகளை கண்ணெதிரே கண்டு ரசித்தேன். நடன கலைஞர்கள் படங்கள் மிகவும் அழகாக உள்ளது. ஸ்வாமி தரிசனங்கள் மிகவும் மனநிறைவை தந்தது. எல்லா படங்களையும் மிகவும் அழகாக எடுத்துள்ளீர்கள். தங்கள் பதிவை படிக்கும் போது நானும் திருவிழாவில் கலந்து கொண்ட திருப்தி வந்தது.

    ஜவ்வு மிட்டாய் படங்கள் பழைய சிறுவயது நினைவுகளை மீட்டது. ஒரு பெரிய கொம்பில், மிட்டாயை பந்து மாதிரி சுற்றி கையில் வாட்ச் மாதிரி கட்டி சுவைப்போமே அதுவும் நினைவு வந்தது. ஆனால் எங்கள் அம்மாவும் இதையெல்லாம் சாப்பிட விட மாட்டார்கள். ஏதோ எப்போதோ ஒரிரு தடவை சாப்பிட்ட நினைவு.

    அடுத்து சித்திரை தேரோட்ட படங்களையும், அழகான தங்கள் நடையில் பதிவாக படித்திட ஆவலாக உள்ளேன். பகிர்வுக்கு மிக்க நன்றி சகோதரி

    நன்றியுடன்
    கமலா ஹரிஹரன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வணக்கம் கமலா, ஹரிஹரன், வாழ்க வளமுடன்.
      போன திருவிழாவில் நீங்கள் சொன்ன ஜவ்மிட்டாய் செய்பவர் படம் போட்டு இருந்தேன்.
      வாட்ச், நெக்லெஸ் , பூ எல்லாம் அழகாய் செய்து தருவார். அவர் குச்சியின் உச்சியில் இருக்கும் பொம்மை கையில் தாளம் இருக்கும் அது தட்டி தட்டி நம்மை அழைக்கும்.

      தேரோட்டம் பார்க்க ஆவல் அன்று தான் ஓட்டு போடும் நாள் எப்படி போவது என்று தெரியவில்லை. இறைவன் சித்தம் இருந்தால் கைகூடும்.

      உங்கள் அன்பான கருத்துக்கு நன்றி கமலா.

      நீக்கு
  21. நம்மூர் கோயில் விழாக்களின் அழகுக்கு நிகரேது? விழாவில் கலந்துகொண்ட உணர்வினை ஏற்படுத்திய பதிவு.

    பதிலளிநீக்கு
  22. வணக்கம் முனைவர் ஐயா, வாழ்க வளமுடன்.
    விழாக்கள் எல்லாம் அழகுதான்.
    உங்கள் கருத்துக்கு நன்றி.

    பதிலளிநீக்கு
  23. விவரங்கள் சிறப்பு! எப்போதும் உங்கள் படங்களில் இருக்கும் துல்லியம் சற்று குறைவாக இருக்கிறதே ஏன்?
    ஜவ்வு மிட்டாயைப் பார்த்ததும்,நாவில் நீர் ஊறுகிறது. பள்ளி நாட்களில் சாப்பிட்டது.
    தன்னை வருத்திக் கொண்டு மக்களை மகிழ்விக்கும் கலைஞர்களை நினைத்தால் வருத்தமாக இருக்கிறது.

    பதிலளிநீக்கு
  24. வணக்கம் பானுமதி வெங்கடேஷ்வரன், வாழ்க வளமுடன்.

    கூட்டத்தில் இடிபடாமல் தூரத்தில் கடை வாசலில் நின்று கொண்டு
    ஜூம் செய்து என் அலைபேசியில் எடுத்த படம் சுமாராக தான் இருக்கும் மன்னித்துக் கொள்ளுங்கள். என்று பதிவில் குறிப்பிட்டு இருக்கிறேன் பார்க்க வில்லையா?
    காமிரா கொண்டு போகவில்லை.

    பள்ளி பருவம் நினைவு வரும் எல்லோருக்கும் ஜவ்வு மிட்டாயைப் பார்க்கும் போது.
    கலைஞர்களை நினைத்தால் கஷ்டம் தான் அவர்களுக்கும் கடமைகள் இருக்கே!

    உங்கள் கருத்துக்கு நன்றி.

    பதிலளிநீக்கு
  25. அன்பின் வணக்கங்களுடன்...

    இதோ தாங்கள் கேட்டிருந்தபடிக்கு களக்கோடி ஸ்ரீ சாஸ்தா பாமாலை...

    பணிக்கோடி இரைக்கோடி பரிதவிக்கும் இவ்வுலகில்
    துணைதேடி ஓடிவந்தோம் ஸ்வாமியே...1

    உனைத்தேடி உனைத்தேடி இவ்வுயிரும் தவிக்கையிலே
    எனைத்தேடி எழுந்துவந்த ஸ்வாமியே!...2

    களக்கோடி நாயகனே.. கவலையெல்லாம் தீர்ப்பவனே..
    புகழ்க்கோடி பேர் சொல்லிப் போற்றினேன்....3

    வளங்கோடி தந்தருளி நலங்கோடி காத்தருள
    பூக்கோடி தூவி தீபம் ஏற்றினேன்!...4

    நீரோடி நிலம் செழிக்க காற்றோடி கதிர் கொழிக்க
    நாகோடி தமிழ் உரைக்க வேணுமே...5

    உனைத்தேடி வருவோர்க்கு தருங்கோடி நலமெல்லாம்
    ஊர்கோடி கண்டு உணர வேணுமே...6

    வரங்கோடி தந்தருளும் வடிவுடையாள் திருமகனே
    களக்கோடி கண்மணியே சரணமே!...7

    மனைதேடி வருபவனே.. மனந்தேடி அமர்பவனே..
    களக்கோடி காவலனே சரணமே...8

    கடைக்கோடி மனிதருக்கும் கதிகாட்டும் கோமகனே
    களக்கோடி காவலனே சரணமே...9

    விடைதேடி நிற்போர்க்கு வழிகாட்டும் நாயகனே
    களக்கோடி கண்மணியே சரணமே...10

    திருக்கோடிக் காஉறையும் சிவநாதன் திருமகனே
    களக்கோடி தானமர்ந்த தூயனே...11

    வினைகோடி என்றாலும் பகைகோடி என்றாலும்
    விரைந்தோடி நலஞ்சேர்க்கும் நாதனே...12

    களக்கோடி என்னுங்கால் களிறேறி வரவேணும்
    கண்கோடி காணும்படி ஸ்வாமியே...13

    விழிகோடி தமிழ்கொடுக்க வில்லேந்தி வரவேணும்
    பண்கோடி பாடும்படி ஸ்வாமியே...14

    பொன்கோடி குவிந்தாலும் புகழ்கோடி விரிந்தாலும்
    களக்கோடிக் காவலனே காரணன்..15

    பூச்சூடிப் பொற்கலையும் பூங்கலையும் அருகிருக்க
    கதிர்கோடி எனக்காட்டும் பூரணன்...16

    வழிந்தோடி விழிநீரும் திருவடியில் மலராகும்
    களக்கோடி கண்மணியே சரணமே...17

    நெகிழ்ந்தோடி நெஞ்சகத்தில் நின்பெயரே நின்றாடும்
    களக்கோடி காவலனே சரணமே...18
    ***

    இதிலிருந்து நீங்கள் எடுத்து தனியாக சேமித்துக் கொண்டு இதனை நீக்கி விடலாம்..

    மேலும் ஒரு வேண்டுகோள்...

    ஐயனின் திருக்கோயில் திருப்பணிக்கான வங்கிக் கணக்கு எண் இருப்பின் எனக்குத் தெரிவிக்கவும்..
    நெஞ்சார்ந்த நன்றியுடன்...

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வணக்கம் சகோ துரைசெல்வராஜூ, வாழ்க வளமுடன்.
      உங்கள் பாடல் தொடர்ச்சி கிடைத்தது மகிழ்ச்சி.
      நன்றி.
      குலதெய்வம் போஸ்டில் சேர்த்து விடுகிறேன்.
      உங்கள் அன்புக்கு நன்றி.களக்கோடி சாஸ்தா உங்களுக்கு சகல நன்மைகளையும் தருவார்.

      நாகர்கோவிலில் வங்கிக் கணக்கு இருப்பதாய் சொன்னார்கள் நிர்வாக குழுவை சேர்ந்தவர் .நான் கேட்டுச் சொல்கிறேன்.

      நீக்கு
    2. தங்கள் அன்பினுக்கு மகிழ்ச்சி.. நன்றி...

      நீக்கு
  26. படங்கள் எல்லாமே மிக அருமையாக வந்திருக்கின்றன. முன்னெல்லாம் முதலில் அதிர்வேட்டுக்காரர்கள் ஸ்வாமி புறப்பாடு ஆகிவிட்டதையும் வீதி உலா வரப்போவதையும் அறிவித்துக் கொண்டு வருவார்கள். அதன் பின்னர் நகரா முழங்க பெரிய காளைமாடு வரும். அதன் பின்னர் த.பி.சொக்கலால் ராம்ஸேட் காரர்கள் அன்பளிப்பாகக் கொடுத்த ஒட்டகங்கள் வரும். அவற்றுக்கு வயதாகி இருக்கும். இருக்கோ இல்லையோ! அதனால் கூட வராமல் இருந்திருக்கலாம். யானையார் பின்னர் வருவார். அதன் பின்னர் கோலாட்டக் குழந்தைகள் வருவார்கள். சில சமயங்களில் கோலாட்டக் குழந்தைகளைப் பின்னால் தள்ளி விடுவார்கள். எனினும் திருவிழா உற்சாகம் இன்னமும் குறையாமல் இருக்கிறது. நன்றாக விபரங்களையும் சொல்லி இருக்கிறீர்கள்.

    பதிலளிநீக்கு
  27. வணக்கம் கீதா சாம்பசிவம், வாழ்க வளமுடன்.
    நானும் நீங்கள் சொன்னதை எல்லாம் குறிப்பிட்டு இருக்கிறேன்.
    போன வருடம் அஷ்டமி சப்பரத்தில் ஓட்டகம் பார்த்தேன் பதிவு போட்டேன் படங்களுடன்.
    இறந்து விட்டது என்று கேள்வி , தெரியாமல் சொல்லக் கூடாது கோவிலில் விசாரித்து விட்டு சொல்லலாம் என்று சொல்லவில்லை. முன்னாலும், பின்னாலும் கோலாட்டக் குழந்தைகள் வருகிறார்கள்.

    நாளுக்கு நாள் திருவிழா உற்சாகமும், பக்தர்கள் கூட்டமும் பெருகி கொண்டுதான் போகிறது.
    தொடர்ந்து போக முடியவில்லை, வீடும் கோவிலும் தூரத்தில் இருப்பதால். சங்கார தொலைக்காட்சியில் இன்று பட்டாபிஷேக காட்சி பார்த்தேன்.

    உங்கள் கருத்துக்கு நன்றி.

    பதிலளிநீக்கு
  28. நல்ல வேண்டுதல்கள். நானும் வேண்டிக்கொள்கிறேன். மழையும் நீரும் வேண்டும். திருவிழாவில் உலாப்போனது போல் இருக்கிறது. அந்த ஜவ்வுமிட்டாய் எனக்கு வேணுமே. சின்ன்னப் புள்ளையில் சாப்பிட்டது :)

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வணக்கம் Thenammai Lakshmanan, வாழ்க வளமுடன்.
      உங்கள் வேண்டுதலை அன்னை கேட்டு மழை தரட்டும். எங்கள் குடியிருப்புக்கு தண்ணீர் விலைக்கு வாங்கி தான் தண்ணீர் தருகிறார்கள். திருவிழாக்களால் மனம் குளிர்ந்து அன்னை மழையை கொடுத்தால் போதும்.

      வாங்க திருவிழாவிற்கு சாப்பிடலாம் ஜவ்வுமிட்டாய்.
      உங்கள் வரவுக்கும், கருத்துக்கும் நன்றி.

      நீக்கு