ஞாயிறு, 1 அக்டோபர், 2017

முதியோர் நாள்

இன்று காலண்டர் கிழிக்கும் போது ’இன்று முதியோர் நாள்’ என்று போட்டு இருந்தது.


முதுமைக்கு அப்படி ஒரு மரியாதையா!என்ற வியப்பும் மகிழ்ச்சியும் ஏற்பட்டது.சரி அது என்ன விபரம் என்று தேடிய போது thats tamil பத்திரிக்கையில் //அக்டோபர் முதலாம் தேதிசர்வதேச முதியோர் தினமாகும்.மூத்த பிரஜைகள் என்று அழைக்கப்படும் முதியோர்களை ஒவ்வொரு சமூகமும் கண்ணியமாகவும் கெளரவமாகவும் நோக்கி அவர்களை மதிக்க வேண்டியதன் அவசியத்தை உணர்த்தும்முகமாக ஐக்கிய நாடுகள் பொதுச்சபை ஆண்டு தோறும் அக்டோபர் 1ம்தேதியை சர்வதேச முதியோர் தினமாக பிரகடனப்ப்டுத்தியுள்ளது.//

//1990ம் ஆண்டு டிசம்பர் 14ம் தேதி ஐக்கிய நாடுகள் பொது சபையினால் கொண்டு வரப்பட்ட பிரிவு45/106 தீர்மானத்திற்கமையவே இத்தினம் பிரகடனம் செய்யப்பட்டுள்ளது.இதன்படி முதன் முதலாக 1991ம் ஆண்டு சர்வதேச முதியோர்தினம் உலகெங்கும் கொண்டாப்பட்டது.
தொடர்ந்து ஒவ்வோர் ஆண்டும் கொண்டாடப்பட்டு வருகினறது.உலகெங்கும் வாழும் முதியோர்களின் நலன் மற்றும் அவர்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகள் குறித்து ஆராய்வதும் அவர்களுக்கென ஒரு சமூக கட்டமைப்பை உருவாக்குவதுமே இந்த நாளின் பிரதான நோக்கமாகும்.//

நம் நாட்டில் பெரியவர்களுக்கு முதியோர் நாள் என்று தனியாக கொண்டாட வேண்டிய அவசியம் இல்லாமல் எல்லா நாளும் முதியோர்களை பணியும் நாளாகவே உள்ளது.
எங்காவது வெளியூர் போனால்,பரீட்சை என்றால்,புதிதாக உடை அணிந்தால்எல்லாம் ’தாத்தா பாட்டியிடம் காலில் விழுந்து ஆசிர்வாதம் வாங்கி கொள்’என்று நாம் சொல்வதை குழந்தைகள் கேட்கிறார்கள்.கேட்டு நடந்தார்கள்.முன் ஏர் செல்லும் பாதையில் பின் ஏர் செல்லும் என்பார்கள்.நாம் பெரியவர்களுக்கு மரியாதை கொடுத்தால் நம் குழந்தைகளும் கொடுப்பார்கள்.இது தானாய் இயல்பாய் திணிக்கப் படாமல் நடக்கும்.

இந்த காலகட்டத்தில் கூட்டுக் குடும்பமாய் இருக்க முடியவில்லை.ஆனால் பண்டிகை,விழாக்காலங்களில் வீட்டுப் பெரியவர்களிடம் அவர்கள் ஆலோசனை கேட்டு அவர்களுக்கு முன்னுரிமை கொடுத்து நடக்கிறோம்.

எனக்கு வயதாகும் போதுதான் என் பெற்றோர்களின் தவிப்பும் ஏக்கமும் புரிகிறது.அம்மா,
’நாலு நாளுக்கு ஒரு முறை கடிதம் எழுது’ என்பார்கள்.(தொலைபேசி,அலைபேசி எல்லாம் வரும் முன்)பிறகு போன் வந்தபின் அவர்களுக்கு வயதாகி காது கொஞ்சம் கேடகாமல் போனபோது போனில் அவர்கள் பேசுவார்கள்,என் நலம் விசாரித்து.’ மற்றதை உன் தம்பியிடம் சொல் நான் கேட்டுக் கொள்கிறேன்’ என்பார்கள். கம்யூட்டர் அப்போது இல்லை இருந்திருந்தால் எங்களைப் பார்த்து மகிழ்ந்து இருப்பார்கள்.அம்மாவுக்குத் தனியாகக் கடிதம் எழுதியிருக்கலாம் என்றும் தம்பியிடம் போனிலும் அம்மாவிடம் கடிதத்திலும் உரையாடி இருக்கலாம் என்றும் இப்போது நினைக்கிறேன். விஜய் டீ.வீயில்’ காப்பி வித் அனுவில்’ நிகழ்ச்சி முடிவில் ’யாரிடம் மன்னிப்புக் கேட்க நினைக்கிறீர்கள்?’என்பார்கள். நான் என் அம்மாவிடம் மன்னிப்பு கேட்க நினைக்கிறேன்-கடிதம் எழுதாமல் இருந்த்தற்கு.’யாருக்கு நன்றி சொல்ல விரும்புகிறீர்கள்?’ என்றால்-என் மாமியாருக்கு.முதுமையை அழகாய் ரசித்து வாழ்வதற்குக் கற்றுக் கொடுத்ததற்கு. 

வார வாரம் என் வயதான மாமியாரிடம் தொலைபேசியில் பேசும் போது ,அவர்களின் உற்சாகம் எங்களையும் தொற்றிக் கொள்ளும்.மாமனார் பேசமாட்டார்கள் .அத்தையிடம் விசாரித்துக் கொள்வார்கள்.

நம் குழந்தைகளிடம் என்ன கேட்கிறோம்?அடிக்கடி பேசுங்கள் என்றுதான் . அது தான் எங்களைப் போன்ற முதியோரகளுக்கு ஊட்ட சத்து மாத்திரைகள்.மகனிடம் பேசும் போது பேரன் உடனே ஓடி வந்து மழலையில் ’தாத்தா’ என்று கூப்பிட்டு அவனது விளையாட்டு சாமான் மற்றும் அவன் பொருட்களை நம்மிடம் காட்டி என்னவோ பேசுகிறான்.கம்யூட்டரில் நுழைந்து நம்மைத் தொட முட்டி மோதும் போது நமக்கு நம்மை தேடுகிறானே என்ற மகிழ்ச்சியும்,அவனுடன் இருக்க முடியாத சூழ் நிலையை நினைத்து வருத்தமும் ஏற்படுகிறது.
மகள் வயிற்று பேரன் 18 நாள் விடுமுறைக்கு தாத்தா வீட்டுக்கு போகலாமா என்று மகளிடம் கேட்டதை கேட்கும் போது சந்தோஷமும் ஏற்படுகிறது.

இந்த காலகட்டத்தில் இவ்வளவுதான் முடியும். இதற்கு மேல் எதிர்பார்த்து வீணாய்க் கவலைப் பட்டுக் கொண்டு இருந்தால் நோய்க்கு இடம் கொடுத்து விடுவோம்.

குழந்தைகள் எங்கு இருந்தாலும் நலமாக வாழவேண்டும் என்ற பிரார்த்தனையைப் பெற்றோர்களும், பெற்றோர்கள் அங்கு நலமாய் இருக்க வேண்டும் என்ற பிரார்த்தனையைக் குழந்தைகளும் செய்வது தான் இந்த உலகத்தை வாழவைத்துக்கொண்டு இருக்கிறது.

முதியோர்கள் தங்களுக்கு என்று பயனுள்ள பொழுது போக்கை ஏற்படுத்திக் கொள்ள வேண்டும்.
வீட்டிலே முடங்கிக் கிடக்காமல், கோவில்,நண்பர்கள்,உறவினர்,என்று பார்ப்பதை வைத்துக் கொண்டு எப்போதும் தங்களைச் சுறுசுறுப்பாய் வைத்துக் கொண்டால் தேவை இல்லாத கவலைகள் அண்டாது.என் கணவர் ஒய்வு பெற்ற பின்னும் ஒரு கல்லூரியில் மாணவர்களுக்குப் பாடம் நடத்துகிறார்.அது அவர்களுக்கு மகிழ்ச்சியைத் தருகிறது.

நாளை காந்தியடிகளின் பிறந்தநாள். அவர் தன் வாழ்க்கையை நாட்டின் முன்னேற்றத்திற்கு அர்ப்பணித்தார்.காந்தியடிகள் நம் முன்னே அற்புதமான சுத்தம்,சுகாதாரம் நிறைந்த,மன நிறைவுள்ள வாழ்க்கை ஒன்றை வாழ்ந்து நமக்கு உதாரணமாக விட்டுச் சென்றார்.இயற்கையோடு இயைந்த எளிமையும்,அழகும் பொதிந்த வாழ்க்கை அவருடையது.இன்றைய உலகிற்கு கலங்கரை விளக்கம் காந்தியடிகளின் வாழ்க்கை.


முதியோர் தினத்தில் நமக்கு முன்னே வாழ்ந்து கொண்டு இருப்பவர்களின் வாழ்க்கை அனுபவத்தையும்,வாழ்ந்து முடிந்தவர்களின் வாழ்க்கை அனுபவத்தையும் நாம் பாடமாக எடுத்துக் கொண்டால் வாழ்க்கை இனிமையாக இருக்கும்.

முதுமைக் காலத்தை நடத்திச்செல்ல உடல் நலம் நன்றாக இருந்தால் தான் முடியும். அதற்கு,உடற்பயிற்சி,தியானம்,உணவுக் கட்டுப்பாடு,நல்ல உறக்கம், நல்ல பழக்க வழக்கம் நல்ல ஒய்வு அவசியம்.

தம்மிற் பெரியார் தமரா ஒழுகுதல்
வன்மையுள் எல்லாம் தலை.-குறள்

தம்மினும் அறிவில் மேம்பட்ட பெரியோரைச் சுற்றமாகக் கொண்டு அவர் வழியில் நடத்தல் ஒருவர்க்குரிய வலிமைகள் எல்லாவற்றுள்ளும் சிறந்த வலிமையாகும்.

முதியோர்கள் எல்லோரும் நோய் நொடி இல்லாமல் மகிழ்ச்சியாய் வாழ வாழ்த்துக்கள்.

வாழ்க வளமுடன்! வாழ்க நலமுடன்!


35 கருத்துகள்:

 1. மீள்பதிவாகத் தெரியவேயில்லை. வருடாவருடம் இந்தத் தேதியில் வெளியிடலாம்.

  முதியோர் தினம் என்று நினைவுபடுத்துவது தேவையா என்று ஒரு சர்ச்சை வருடா வருடம் நடை பெறுகிறது.  பதிலளிநீக்கு
 2. முதியோர் இல்லங்கள் பற்றிய ஒரு கட்டுரையில் சமீபத்தில் இதை நானும் படித்தேன். அவ்வப்போது பெற்றோரிடம் பேசிக் கொண்டிருக்க வேண்டும். அவர்களிடம் பேசி, காது கொடுத்தாலே போதும். அடுத்த வீட்டு முதியோரை மதிக்கும் நாம் நம் வீட்டு முதியோரை மதிப்பதில்லையோ என்று எனக்குத் தோன்றும். நானும் என் அப்பாவிடம் மன்னிப்பு கேட்க விரும்புகிறேன்.

  பதிலளிநீக்கு
 3. ஆழமான நேச உணர்வினை ஏற்படுத்திய பதிவு. நன்றி.

  பதிலளிநீக்கு
 4. அருமையாகச் சொல்லியிருக்கிறீர்கள்!

  பதிலளிநீக்கு
 5. வணக்கம் சகோ
  முதியோர்களின் இன்றைய நிலைப்பாட்டை அழகாக விளக்கியதோடு நாம் எந்தநிலையோடு ஆசையை வரைமுறைப்படுத்த வேண்டும் என்பதையும் அழகாக விளக்கினீர்கள்.

  பதிலளிநீக்கு
 6. அருமை அருமை அருமை!!! பல வரிகள் மனதைத் தொட்டது! இன்றைய நிலை உட்பட! அழகான விளக்கம். அருமை சகோதரி!

  கீதா: நம் குழந்தைகளிடம் என்ன கேட்கிறோம்?அடிக்கடி பேசுங்கள் என்றுதான் . அது தான் எங்களைப் போன்ற முதியோரகளுக்கு ஊட்ட சத்து மாத்திரைகள்.மகனிடம் பேசும் போது பேரன் உடனே ஓடி வந்து மழலையில் ’தாத்தா’ என்று கூப்பிட்டு அவனது விளையாட்டு சாமான் மற்றும் அவன் பொருட்களை நம்மிடம் காட்டி என்னவோ பேசுகிறான்.கம்யூட்டரில் நுழைந்து நம்மைத் தொட முட்டி மோதும் போது நமக்கு நம்மை தேடுகிறானே என்ற மகிழ்ச்சியும்,அவனுடன் இருக்க முடியாத சூழ் நிலையை நினைத்து வருத்தமும் ஏற்படுகிறது.
  மகள் வயிற்று பேரன் 18 நாள் விடுமுறைக்கு தாத்தா வீட்டுக்கு போகலாமா என்று மகளிடம் கேட்டதை கேட்கும் போது சந்தோஷமும் ஏற்படுகிறது.//

  இது இது இதைத்தான் எல்லா பெற்றோரும் விரும்புவது!!!

  அதே போன்று உங்கள் கருத்தான, பெற்றோர் பிள்ளைகளின் நலத்திற்கும் பிள்ளைகள் பெற்றோரின் நலத்திற்கும் பிரார்த்தனை செய்து அதே சமயம் இயன்ற உதவிகளையும் கருணையையும், ஆதரவையும் காட்டி வந்தால் அதுவே குடும்பத்தை மகிழ்வுடன் வைத்துக் கொள்ளூம். முதியவர்கள் எப்படி வைத்துக் கொள்ள வேண்டும் என்ற உங்கள் கருத்தையும் முழுவதும் ஆதரிக்கிறேன்.
  அருமையான கருத்துகள் கோமதிக்கா...எல்லா முதியோர்களும்

  பதிலளிநீக்கு
 7. அடுத்த வீட்டு முதியோரை மதிக்கும் நாம் நம் வீட்டு முதியோரை மதிப்பதில்லையோ என்று எனக்குத் தோன்றும். // ஸ்ரீராமின் இந்தக் கருத்தை அப்படியே டிட்டோ செய்கிறேன்....நல்ல கருத்து

  கீதா

  பதிலளிநீக்கு
 8. தெளிவா சொல்லியிருக்கீங்க கவனத்தில் வைத்து கொள்ள வேண்டிய விஷயம்

  பதிலளிநீக்கு
 9. பயனுள்ள பதிவு.. மீண்டும் அந்தக் காலம் போல மலருமா?..

  வாழ்க நலம்!..

  பதிலளிநீக்கு
 10. அழகான கட்டுரை... நாமும் நாளைய முதியோர்தானே... எனக்கு எப்பவும் வயதானோரோடும் குழந்தைகளோடுமே அதிகம் பேசப் பிடிக்கும்... இருவரும் எப்பவும் நம்மோடு பேசுவார்கள்.. நிறையப் பேசுவார்கள்.. நாம் பேசுவதால் மகிழ்வார்கள்...

  காசாபணமா.. ஒரு 5 நிமிடம் நின்று பேசிவிட்டால் போதும் அவர்களுக்கு அன்று முழுவதும் உற்சாகம் பிறந்துவிடும்...

  பதிலளிநீக்கு
 11. அருமையான பதிவு அக்கா ...முதியோர் பெரியவங்க வீட்டில் இருப்பதும் அவங்களோட பிள்ளைகள் வளருவதும் தொடர்பில் இருப்பதும் மிக அற்புதமான விஷயம் ..கணவரின் பெற்றோரும் எனது பெற்றோரும் உலகில் இல்லை அதனால் மகளுக்கு கொஞ்சம் ஏக்கமுண்டு வயதனோரை எங்கே பார்த்தாலும்பார்த்தா ஓடி சென்று உதவி செய்வா ....
  நம் நாட்டு முதியோர் வெளிநாட்டு முதியோர் என்று வகைப்படுத்தும்போது வெளிநாட்டு முதியோர் மனத்தால் தங்களை ஒவ்வொரு நொடியும் உற்சாகமாக வைத்திருக்காங்க ..எங்கு கண்டாலும் பேசுவாங்க நம்ம கூட ..எதோ நம்மால் ஆன உதவி அந்த நிமிட சந்தோசம் அதை அவர்களுடன் செலவிடுவேன்

  பதிலளிநீக்கு
 12. வணக்கம் துரை சார் வாழ்க வளமுடன்.
  இதற்கு முந்திய பதிவில் நீங்கள் சொன்னதை குறிபிட்டு இருந்தேன். படிக்கவில்லையா?

  முதியோர் தினம் வேண்டுமா? வேண்டாமா என்ற சர்ச்சை நடந்து கொண்டு தான் இருக்கும், என்ன செய்வது?

  உங்கள் கருத்துக்கு நன்றி.

  பதிலளிநீக்கு
 13. வணக்கம் ஶ்ரீராம் , வாழ்க வளமுடன்.
  என் அம்மா மேல் மதிப்பும் , மரியாதையும் உண்டு. நம் அம்மாதானே என்ற எண்ணம்.
  தொலைபேசி வந்த பின் கடிதம்
  எழுத சோம்பல் வந்து விட்டது எனக்கு. அம்மாவுக்கு காது கேட்கும் தன்மை குறைந்து விட்டதால் கடிதம் எழுத சொன்னார்கள்.

  தம்பியிடம் போன் செய்தியை கேட்டு தெரிந்து கொண்டார்கள்.

  அதனால் அம்மாவிடம் மன்னிப்பு கேட்பதாய் சொன்னேன்.

  பெற்றோர்களுக்கு குழந்தைகளின் அன்பான பேச்சுதான் ஊட்ட சத்து மாத்திரை.

  உங்கள் கருத்துக்கு நன்றி ஶ்ரீராம்.

  பதிலளிநீக்கு
 14. வணக்கம் ஜம்புலிங்கம் சார், வாழ்க வளமுடன்.
  உங்கள் கருத்துக்கு நன்றி சார்.

  பதிலளிநீக்கு
 15. வணக்கம் ராமலஷமி, வாழ்க வளமுடன்.
  உங்கள் கருத்துக்கு நன்றி.

  பதிலளிநீக்கு
 16. வணக்கம் !


  வல்லமை தந்து போகும்
  ..வயதிலும் வலியைப் போக்கும்
  நல்லதோர் கருத்தை இங்கே
  ..நயம்படத் தந்தீர் ! நீங்கள்
  சொல்லிய படியே வாழ்ந்தால்
  ..சுடர்விடும் வானம் போல
  எல்லையே இல்லா இன்பம்
  ..எம்முளம் கண்டு வாழும் !

  இனிய முதியோர் தின வாழ்த்துகள்
  வாழ்க நலம்

  வாழ்க்கை எவ்வளவு இனிமை என்பதை வாழ்ந்தவர்கள் சொல்வார்கள்
  நன்றி !

  பதிலளிநீக்கு
 17. வணக்கம் தேவகோட்டை ஜி , வாழ்க வளமுடன்.
  நம்மால் எது முடியுமோ அதை மட்டுமே சிந்திக்க வேண்டும், செயல்படுத்த வேண்டும் என்ற கருத்தை என் கணவர் அடிக்கடி கூறுவார்கள்.

  உங்கள் அழகான புரிதல் கருத்துக்கு நன்றி.

  பதிலளிநீக்கு
 18. நேசம் போற்றும் பதிவு
  முதியோர் போற்றுவோம்

  பதிலளிநீக்கு
 19. வணக்கம் துளசிதரன், கீதா வாழ்க வளமுடன்.
  உங்கள் கருத்துக்கு நன்றி சகோ துளசிதரன்.

  கீதா , எல்லோர் முதியோர்களும் விரும்புவது எல்லோரும் தம்மிடம் உரையாட வேண்டும் என்பதும் தான் சொல்வதை காது கொடுத்து கேட்க வேண்டும் என்பதும்தான்.
  அது போதும் வேறு எதையும் எதிர்ப்பார்ப்பது இல்லை.

  உங்கள் கருத்துக்கு நன்றி கீதா.

  பதிலளிநீக்கு
 20. வணக்கம் பூவிழி, வாழ்க வளமுடன்.
  உங்கள் வரவுக்கும், கருத்துக்கும் நன்றி.

  பதிலளிநீக்கு
 21. வணக்கம் சகோ துரைசெல்வராஜூ, வாழ்க வளமுடன்.
  நீங்கள் சொல்வது போல் மலரும்.
  உங்கள் கருத்துக்கும், வாழ்த்துக்களுக்கும் நன்றி.

  பதிலளிநீக்கு
 22. வணக்கம் அதிரா, வாழ்க வளமுடன்.

  //காசாபணமா.. ஒரு 5 நிமிடம் நின்று பேசிவிட்டால் போதும் அவர்களுக்கு அன்று முழுவதும் உற்சாகம் பிறந்துவிடும்...//

  நீங்கள் சொல்வது உண்மை. பேச நல்ல துணை கிடைத்தால் மனது பேசி விட்டால் அன்று முழுவதும் மகிழ்ச்சிதான்.

  பெரியவர்களும் எல்லோரிடமும் பேச வேண்டும்.

  உங்கள் கருத்துக்கு நன்றி அதிரா.

  பதிலளிநீக்கு
 23. வணக்கம் ஏஞ்சலின், வாழ்க வளமுடன்.
  குழந்தை பெரியவர்களுக்கு உதவி செய்கிறாள் என்பதை கேட்க ஆனந்தம்.
  தேவதையின் பெண் குட்டி தேவதையாக தான் இருப்பாள்.
  பிறருக்கு உதவி செய்வது என்பது எல்லோருக்கும் வராது. அது இறைவனின் வரம். குழந்தைக்கு வாழ்த்துக்கள், ஆசீர்வாதங்கள்.

  அயல் நாட்டில் வயதானவர்கள் கால்கடுக்க வேலை பார்க்கிறார்கள் கடைகளில். நம் நாட்டில் 50 வயது ஆனாலே வயதாகி விட்டது ஒய்வு வேண்டும் என்று நினைக்கும் முதியோர்.

  வயது உடல் நலத்தை தீர்மானிப்பது இல்லை.
  மனம் தான் தீர்மானிக்கிறது.
  பொருளாதார தன்னிறைவு, ஆரோக்கியமான உடல் ந்லம்,
  தம் மக்களின் அன்பான கவனிப்பு இருந்தால் அதிக பலத்தோடு நீண்ட நாள் வாழ்வார்கள் முதியோர்கள்.

  உங்கள் கருத்துக்கு நன்றி ஏஞ்சலின்.


  பதிலளிநீக்கு
 24. வணக்கம் சீராளன், வாழ்க வளமுடன்.
  உங்கள் அழகான அருமையான கவிதைக்கு நன்றி.
  கருத்துக்கும், வாழ்த்துக்களுக்கும் நன்றி.

  பதிலளிநீக்கு
 25. ரொம்பவும் மனதைத் தொட்ட பதிவு. நிறைய வரிகள் ரொம்ப நல்லா இருந்தது. வாழ்க்கைங்கற பயணத்தில், செய்த தவறுகள்தான் நிறைய, அதிலும் பல சரிசெய்யமுடியாதவை. என்ன செய்ய?

  பதிலளிநீக்கு
 26. எனக்கு ஒரு சந்தேகம் முதியோர்கள் எனப்படுபவர் யார் நம்மை விட வயதானவர்களா இல்லை ஏதாவது வய்துக்கு மேற்பட்டவர்களா

  பதிலளிநீக்கு
 27. வணக்கம் சகோ கரந்தை ஜெயக்குமார், வாழ்க வளமுடன்.
  உங்கள் கருத்துக்கு நன்றி.

  பதிலளிநீக்கு
 28. வணக்கம் நெல்லைத் தமிழன், வாழ்க வளமுடன்.

  நீங்கள் சொன்னது உண்மை.

  சென்றகாலங்கள் திரும்பா, நிறைய சரிசெய்ய முடியாதவை.
  அந்தகாலத்தில் பெற்றோர்களுக்கு நிறைய குழந்தைகள் அவர்கள் அடிக்கடி வந்து திருமணகுழந்தைகளுடன் இருக்க முடியாது. எனக்கு 16 வயது என் தம்பி தங்கைகள் சிறியவர்கள் அவர்களை வளர்க்க வேண்டும்.

  அதனால் கடிதங்கள் வாயிலாகதான் அன்பை வெளிபடுத்த முடியும்.
  சமையல் குறிப்பு, புதிதாக கற்றுக் கொண்ட கோலங்கள் என்று அம்மா எழுதி அனுப்புவார்கள். அம்மாவின் கடிதம் மிக அழகாய் இருக்கும்.

  அது போல் அப்பாவும் அழகாய் கடிதம் எழுதுவார்கள். நாகபட்டினத்திற்கு வேலை விஷயமாய் வரும் போது திருவெண்காடு வந்து பார்த்து செல்வார்கள் என்னை. கல்யாண்ம ஆகி 9 மாதம் தான் அதற்குள் தன் 50 வயதில் இறந்து விட்டார்கள் பேரன் பேத்திகளை பார்க்கவில்லை. நான் கொடுத்து வைத்தது அவ்வளவுதான்.
  அக்காவின் மகன், மகளை கொஞ்சி விட்டார்கள்.

  இப்போது உள்ள காலத்தில் ஒன்று இரண்டு வைத்து இருக்கிறார்கள் அடிக்கடி அயல்நாடாக இருந்தாலும் குழந்தைகளை சென்று பார்த்து விடுகிறார்கள்.

  விஞ்ஞான வசதியால் பார்க்கவும், பேசவும் முடிகிறது.

  உங்களுக்கு இந்த கட்டுரை பிடித்தது அறிந்து மகிழ்ச்சி.

  பதிலளிநீக்கு
 29. வணக்கம் பாலசுப்பிரமணியம் சார்.
  கவர்மெண்ட் 58 வயதை வயதானவர்கள் இனி வேலை செய்ய முடியாது என்று பணி ஓய்வு கொடுக்கிறது.

  மத்திய அரசாங்கம் 60 பணி ஓய்வு என்கிறது.

  பத்திரிக்கைகள் 50 வயது மூதாட்டி, 50 வயது வய்தானபெரியவர் என்று குறிப்பிடுகிறது.
  நான் வயதானவள்தான்.

  வயதுக்கும் மனதுக்கும் சம்பந்தம் இல்லை, உடலுக்கு வயதானலும் உள்ளம் இளைமையாக இருந்தால் என்றும் முதுமை இல்லை சார் உங்களை போல்.

  ஆண்களுக்கு மட்டுமே பணி ஓய்வு. பெண்களுக்கு ஓய்வு அவர்கள் விரும்பினால்தான் உண்டு. முதலில் தன் கண்வருக்கு உழைக்கிறாள், பின் தன் குழந்தைகளுக்கு உழைக்கிறாள், அடுத்து தன் பேரன் பேத்திகளுக்கு உழைக்கிறாள்.
  அவளை அன்பு என்ற நூல் கண்டு கட்டி இழுத்து சென்று கொண்டு இருக்கிறது.


  கருத்துக்கு நன்றி.

  பதிலளிநீக்கு
 30. பெண்களுக்கு ஓய்வு அவர்கள் விரும்பினால்தான் உண்டு. - உண்மைதான் கோமதி அரசு மேடம்... இதை நினைத்து நானும் எண்ணியிருக்கிறேன். முடியாத நிலைமை வரும்வரை, அன்பாலோ, அல்லது demanding சொற்களாலோ, அல்லது கடமை உணர்ச்சியால் உந்தப்பட்டோ, சமையலே தங்கள் உலகம் என்று அவர்கள் இருப்பதனால், வாழ்க்கை எனும் ஓடம் ஓடிக்கொண்டிருக்கிறது. மற்றவர்கள் என்ன செய்தாலும், அவர்களுக்கான 3 வேளை உணவு என்ற கடமை பெண்களிடம்தானே இருக்கிறது...

  பதிலளிநீக்கு
 31. அன்பு கோமதி, தாமதமாகப் படிக்கிறேன்.
  மன்னிக்கணும்.

  சென்ற காலங்கள் வரப் போவதில்லை.
  அம்மா,அப்பாவுக்குப் பதில் அவர்களது நிழல் படங்களும்,கடிதங்களும் எனக்கு ஆதரவு.
  அப்பா அடிக்கடி சொல்வார்.
  Affection always flows downwards like water
  என்று அப்பா அடிக்கடி சொல்வார். உண்மைதான். குழந்தைகளிடம் காட்டின அக்கறை, பெற்றோர்களிடம் காட்டவில்லை. மாமியார் வீட்டில்
  நிறைய செய்ய முடிந்தது. நானும் மன்னிப்புக் கேட்டுக் கொள்கிறேன் என் பெற்றோரிடம்.
  நன்றி கோமதி.

  பதிலளிநீக்கு
 32. வணக்கம் நெல்லைத்தமிழன், வாழ்க வளமுடன்.
  நீங்கள் சொல்வது சரிதான் நெல்லைத்தமிழன்.
  அன்பு, கடமை, கருணை, இவைகள்தான் அவர்களை ஓட செய்கிறது.
  உங்கள் அழகான கருத்துக்கும், மீள்வருகைக்கும் நன்றி.

  பதிலளிநீக்கு
 33. வணக்கம் அக்கா, வாழ்க வளமுடன்.

  மாமியார் வீட்டில்
  நிறைய செய்ய முடிந்தது.//

  நஹ்ம் வீட்டில் இருக்கும் வரை செல்லம் கொஞ்சினோம் அம்மாவிடம்.
  அம்மா நாம் புகுந்த வீட்டுக்கு போக்கும் போது சொல்லி அனுப்பியது மாமியார் வீட்டில் இங்கு செல்லம் கொஞ்சியது போல் இருக்க கூடாது. எல்லா வேலைக்ளிலும் மாமியாருக்கு உறுதுணையாக இருக்க வேண்டும், நல்ல பேர் வாங்கி தரனும் அம்மாவிற்கு என்று அம்மாசொன்ன புத்திமதி படி நடந்தோம்.

  நம் அம்மா, அப்பா நம்மை தவறாக ஒரு போது நினைக்க மாட்டார்கள். அவர்கள் தெய்வமாக இருந்து நம்மை வழி நடத்துவார்கள்.
  உங்கள் வரவுக்கும், கருத்துக்கும் நன்றி.

  பதிலளிநீக்கு
 34. முதியோர் தினம் பற்றிய தகவலோடு ஆரம்பித்து, திருக்குறளோடு முடித்திருக்கும் உங்க பதிவு அருமை.! இளமையில் நாமும் முதுமை அடைவோம் என்று உணருவதில்லை. சிறு வயதிலிருந்தே நான் முதியவர்களோடு நெருக்கமாக இருப்பேன். அவர்களுக்கும் என்னைப் பிடிக்கும்.

  பதிலளிநீக்கு
 35. வணக்கம் பானுமதி, வாழ்க வளமுடன்.
  எனக்கும் முதியவர்களை பிடிக்கும், முதியவர்களுக்கும் என்னை பிடிக்கும்.
  அம்மாவிற்கு கடிதம் எழுத சோம்பல் காரணமாய் தள்ளி போட்டதற்கு மன்னிப்பு கேட்டேன்.
  இப்போது அம்மா என்னிடம் கேட்பது போல் ஸ்கைப்பில் அடிக்கடி வாருங்கள் என்று குழந்தைகளிடம் கேட்பதை சொன்னேன்.

  உங்கள் வரவுக்கும், கருத்துக்கும் நான்றி.

  பதிலளிநீக்கு